தாரகை – 6

தாரகை – 6

ஆயாசமாக இருந்தது லட்சுமிக்கு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மகன்களின் பாரா முகமும் மருமகள்களின் வாடிய முகமும் கண்டு.

தாலிக் கயிறு மேஜிக் மகன்களின் வாழ்க்கையிலும் திடீர் உற்சாகத்தைக் கொண்டு வரும் என  நினைத்து இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

எஸ்டேட்டுக்கு எல்லைசாமி போல அங்கிருந்து சிறிதும் நகராமல் நிற்கும் தன் மூத்த மகனை எண்ணி ஒரு பக்கம் கவலை என்றால், நீலாம்பரி போல தன்னறையிலேயே அடைந்து கிடக்கும் தன் சின்ன மகனை எண்ணி இன்னொரு புறம் வருத்தம்.

அந்த வருத்தத்தை மேலும் அதிகரிக்கும்படி பெட்டி படுக்கையோடு கிளம்பி நின்றான் முகில் நந்தன், “அம்மா நான் ஆஸ்திரேலியா போறேன்” என்ற உபரி தகவலோடு.

அதைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த லட்சுமி, “ஏன்யா அந்த வேலையை விட்டுட்டு இங்கேயே ஏதாவது வேலை பார்க்கக்கூடாதா? நம்ம மருமகளுக்கு ஆஸ்திரேலியா பத்தி தெரியாதுலே… சிரமப்படுவாலே” என்றார் கண்ணில் கெஞ்சலை தேக்கிக் கொண்டு.

“யார் உங்க மருமகளையும் இப்போ ஆஸ்திரேலியா கூட்டிட்டு போறேனு சொன்னது… நான் மட்டும் தான் கிளம்புறேன்” என்றான் அசட்டையாக.

அந்த பதிலில் லட்சுமி மேலும் பதற… பதற வேண்டியவளோ தேமே என முகில் நந்தனைப் பார்த்து வைத்தாள்.

அதைக் கண்டு முகில் நந்தனுக்கு மேலும் கோபம் கூடியது.

கணவன் கிளம்புகிறேன் என்று சொன்னால் முகத்தில் நவசரத்தையும் பிழிந்து அவனை செல்ல விடாமல் தடுக்க வேண்டாமா?

இவளோ யாருக்கு வந்த விதியோ என நின்று கொண்டிருக்கிறாளே என பல்லைக் கடித்தான்.

“ஓய் மேகா நான் சொன்னது காதுலே விழுந்துதா… நான் ஆஸ்திரேலியா போறேன்” அவளுக்கு கேட்கவில்லையோ என மீண்டும் அழுத்தி சொன்னான்.

அப்போதாவது அவள் ஏதாவது ரியாக்ஷன் கொடுக்கிறாளா என்று அவளையே கூர்ந்து பார்க்க, அவளோ “சரிங்க. பார்த்து  பத்திரமா போயிட்டு வாங்க” என்று உணர்ச்சியின்றி கையசைத்து வழியனுப்பி வைக்க முயன்றாள்.

அதைக் கண்டு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது முகிலுக்கு. மனைவி என்ற உரிமையோடு தன்னை தடுப்பாள் என்று எண்ணியிருந்தவனின் நினைப்பில் பெரும் அடி.

கோபத்தில் அவளைத் தள்ளிக் கொண்டு தன்னறைக்குள் வந்தவன் கதவை வேகமாய் தாழ்ப்பாள் போட்டு.விட்டு அவளையே வெறித்து பார்த்தபடி அருகில் நெருங்கி வந்தான்.

இந்த இரண்டு வாரங்களாக அறைக்குள் அடைந்து கிடந்தவன் இறுதியில் எடுத்த முடிவு வாழ்க்கை கொடுத்த திருப்பத்தில் திரும்பி கொள்வது என்பது தான்.

நடந்து முடிந்த திருமணத்தை அவனால் மாற்ற முடியாது. அதனால் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அவளோடு வாழ முயற்சி செய்யலாம் என்பது அவன் எண்ணம்.

அவனுக்கு ஏனோ அவள் வேறொருத்தியாக தோன்றவே இல்லை. சிறுபிள்ளை போல சுருண்டு கொள்ளும் அவளை இனி கூட்டிலிருந்து வெளி கொணர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.

அன்று தான் சொன்னதற்காக பால்கனியில் ஏறி குதிக்க போனதை  இப்போது நினைத்தால் கூட அவனுக்கு உடம்பு, பதற்றத்தில் உதறும்.

எதுவும் தெரியாமல் நிற்கும் மனைவிக்கு எல்லாமாய் தான் ஆக வேண்டும் என அவனுக்குள் பேரவா.

ஆனால் தன்னை கண்டாலே அலாவூதீன் பூதம் போல அட்டென்ஷனில் நின்று சொல்லுங்க ஆலம்பனா என தன் கட்டளைக்காக காத்திருக்கும்  மனைவியை கண்டு ஆற்ற மாட்டாமல் தலையில் அடித்து கொள்வான்.

ஆனால் அவன் வாழ்க்கையில் இப்படியொரு அப்பாவி அசட்டு பெண்ணை இதுவரை பார்த்ததில்லை. இப்போது தான் முதன் முறையாய் நேரில் பார்க்கின்றான்.

எல்லாவற்றிலும் தேடலை விரும்புவன் தன் புது மனைவிடமும் தேடலை தொடங்க விரும்பினான்.

அவனுக்கு எப்போதும் புது பரிமாணங்கள் பிடிக்கும். அதே போல கணவன் என்ற புது பரிமாணமும் பிடிக்க துவங்கி இருந்தது. இந்த கணவன் மனைவி பந்தத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று அறிந்து கொள்ள விழைந்தான். ஆனால் அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டுமே!

எதிரில் கோழிக் குஞ்சு போல  வெடவெடத்து நின்றிருந்த தன் மனைவியையே விழியகலாமல் பார்த்தான்.

அவள் மிரட்சி அவனுக்கு பிடித்திருந்தது. அவனை கண்டதும் அவள் இதழ்களில் தானாக ஏற்படும் வறட்சியும் பிடித்திருந்தது.

ஆனால் அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை தான் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவனைப் பார்த்தாலே கணக்கு டீச்சரிடம் வாய்ப்பாடு தெரியாத மாணவி போல முழிக்கிறாளே!

தன்னைக் கண்டாலே காத தூரம் ஓடும் மனைவியை அருகில் கொண்டு வர தான் பெட்டி படுக்கையோடு கிளம்பி நின்று ஆஸ்திரேலியாவிற்கு செல்வதாக ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க முயற்சி செய்தான்.

ஆனால் அவளோ ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் பதிலுக்கு பாய் காட்ட, அவனுக்கு தான் படா ஷாக் ஆகி போய்விட்டது.

அவள் முகத்தை தன் கைகளில் தாங்கிப் பிடித்தவன், “நான் போறேனு சொன்னா அப்படியே என்னை விட்டுட்டுவியா டி?” என்றான் அதட்டலாக.

“அச்சோ என்னை மன்னிச்சுடுங்க தெய்வமே… நான் அப்படியே விட்டு இருக்கக் கூடாது.தேவையான பொருள் எல்லாம் எடுத்து இருக்கீங்களானு கேட்டு உங்களுக்கு கூட மாட உதவி பண்ணி இருக்கணும்” என்றவளின் பதிலைக் கேட்டு அவனுக்கு பிபி பல மடங்கு எகிறியது.

“ஆமாம் டி எல்லாத்தையும் எடுத்து கொடுத்து எனக்கு டாடா காமிச்சுட்டு இங்கே ஜாலியா இருக்கலாம்னு நினைச்சியா… அப்படிலாம் உன்னை நிம்மதியா இருக்கவிட மாட்டேன். இங்கே தான் இருப்பேன்” என்று சொல்லி விட்டு அவள் முகத்தை ஊன்றிப் பார்த்தான்.

இப்போதும் அதே ரியாக்ஷன் காட்டாத முகம் தான்.

போறேன் என்றாலும் அதே முக பாவனை தான். போகவில்லை என்றாலும் அதே முக பாவனை தான்.

என் இன்மை உன்னை பாதிக்காதா டி என கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு அமைதியாய் அவள் முகத்தைப் பார்த்தான்.

“எனக்கு ஆஸ்திரேலியாவுலே ஒரு லவ்வர் இருக்கா… இன்னும் ஒரு வருஷத்துலே உன் கிட்டே டிவோர்ஸ் வாங்கிட்டு அவளை கல்யாணம் பண்ணிப்பேன். அது வரை நீ எனக்கு ஒரு வருஷ பொண்டாட்டி. சோ சூடா பால் கொண்டு வா. ஆனால் அடுத்த வருஷம் இதே நாள் எனக்கு அனாமிகா பால் கொண்டு வருவா…” என்று பெரிய குண்டை தூக்கிப் போட்டுவிட்டு அவள் முகத்தை கூர்ந்துப் பார்த்தான்.

எப்போது இங்கே இவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட சொன்னார்களோ அப்போதே அவன் அனாமிகாவிற்கு அலைப்பேசியில் அழைப்பெடுத்து இங்கு நடப்பவற்றை நேரலையில் அவளை கேட்க வைத்தான்.

மண மேடையில் இரண்டு மனதாக அமர்ந்து இருந்தவன் அலைப்பேசியில், “உன்னை மிஸ் பண்றது நினைச்சு கஷ்டமா இருக்கு முகில். உனக்கு ஒரு நாள் லவ்வரா நான் இருந்தாலும் பல வருஷம் ப்ரெண்டா இருந்து இருக்கேன். என் ப்ரெண்ட் இக்கட்டான சூழ்நிலையிலே நிற்கும் போது நான் சுயநலமா முடிவெடுக்க மாட்டேன். உன் குடும்பத்துக்காக என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்” என அவள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைப் படித்த பின்பு தான் அவன் ஆசுவாசமானான்.

அனாமிகா நட்பை இழக்க விரும்பாமல் தான் அவள்  காதலை சொல்லும் போது தயங்கி தயங்கி இறுதியில் ஏற்று கொண்டான். ஆனால் காதலை விட தங்களுக்குள் வேர் விட்டு நின்று இருந்த அந்த ஆழமான நட்பை எண்ணி அவன் இதழ்களில் கர்வப் புன்னகை.

அனாமிகாவிற்கும் அவனுக்கும் இப்போது நட்பை தவிர எவ்வித உறவும் இல்லையென்றாலும் தன் மனைவியை சீண்டி உணர்வுகளை கொந்தளிக்க வைப்பதற்காக அவள் பெயரை பயன்படுத்திப் பார்த்தான்.

‘இதுக்கு நீ ரியாக்ஷன் கொடுத்து தானே டி ஆகணும். ஒரு வருஷ பொண்டாட்டினு சொன்னா எவளா இருந்தாலும் துடைப்பக்கட்டை எடுத்துட்டு வருவா. அட்லீஸ்ட் நீ ஒரு  துடைப்பக்குச்சு கூட எடுத்து என்னைய அடிக்க மாட்டியா” என்ற ஆவலோடு அவள் முகத்தைப் பார்த்தான்.

ஆனால் அவளோ “ஓ” என்ற ஒரு வார்த்தையை பதிலாக உதிர்த்துவிட்டு எவ்வித சலனமில்லாமல் நடந்துப் போக முகில் நந்தனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

இவள் பைத்தியமா இல்லை நான் பைத்தியமா நான் என்ற அளவிற்கு தலையை பிய்த்து கொள்ள வைத்தாள்.

தான் சொன்னது அவள் காதில் விழுந்ததா? தமிழில் தானே சொன்னேன்? தான் சொன்ன விவாகரத்து என்ற வார்த்தை அவளை பாதிக்கவில்லையா? என அவன் இதயத்திற்குள் ஏகப்பட்ட கேள்வி பின்னல்கள்.

புரியாத புதிராக சென்ற தன் மனைவியையே வெறித்துப் பார்த்து நிற்க மேகா ஶ்ரீயோ அவன் கேட்ட பாலை அடுப்பில் காய்ச்ச துவங்கினாள்.

அவளைப் பொறுத்தவரை புருஷன் சொல்வது வேதம். அதை மறுக்காமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் நடுமண்டையில் ஆழமாய் பதிந்து இருந்தது.

இப்போது கூட தன் தலையில் எடுத்து கல்லைப் போடு என்று அவன் சொன்னால் கூட மறுக்காமல் புருஷன் சொன்னதை  செய்து பரலோகத்திற்கு அனுப்பி வைக்கும் அப்பாவி அபலை அவள்.  அந்த அபலையிடம் சிக்கிய அப்பாவி கணவன் இவன்.

உணர்வுகளை வெளிப்படுத்தாத தன் மனைவியை எப்படி சரி செய்வது என ஆழ்ந்த ஆராய்ச்சியில் இந்த சைண்டிஸ்ட் மூழ்கிவிட இங்கோ எழில் மதி எஸ்டேட்டில் இரண்டு வாரமாய் தியானத்தில் வீற்றிருக்கும் அந்த முனியின் தவத்தை கலைக்க புயலாக கிளம்பி கொண்டு இருந்தாள்.

அவளிடம் வீழ்வானா காவ்ய நந்தன்!

 

Leave a Reply

error: Content is protected !!