எங்கே எனது கவிதை – 9

எங்கே எனது கவிதை – 9
9
அங்கிருந்த தெய்வாவின் குரலை மதியும் சித்தார்த்தும் கவனிக்காமல், இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.
இருவரின் பார்வையையும் கண்டுக்கொண்ட தெய்வா, “என்ன ஆச்சு? ஏதாவது க்ளூ கிடைச்சதா? இல்ல யாருன்னு தெரிஞ்சிடுச்சா?” என்று படப்படப்பாகக் கேட்க,
“இல்ல தெய்வா.. ஆதிராவோட அட்ரஸ் இருக்கற லொகேஷனுக்கு போக இந்த ஆபீஸ கிராஸ் பண்ணித் தான் போகணும்.. ஆனா.. கார் ஏன் ரிவர்ஸ் போகுது? அப்போ ஆதிரா அப்போஸ் பண்ணலையா? அதுவும் யூ டர்ன் எடுத்தா ஆபீஸ் சிசிடிவில விழுந்திரும்ன்னு அப்படியே ரிவர்ஸ் எடுத்திருக்காங்களா? அப்போ ஒண்ணு இந்த ஏரியா நல்லா தெரிஞ்சவங்களா இருக்கணும்.. இல்ல இந்த ஆபிஸ்ல வர்க் பண்றவங்களா இருக்கணும்.. இல்ல.. ரொம்ப நாளா இங்க நோட்டம் விட்டு இருக்கணும்.. யாரு அப்படி அவளை ப்ளான் பண்ணி தூக்கினது? எதுக்காக கடத்தனும்? இல்ல வேற ஏதாவது புது கேங், பொண்ணுங்களைக் கடத்தறதுல இறங்கி இருக்காங்களா?” குழப்பமாக சித்தார்த் கேட்டுக் கொண்டே போக,
“அதுவும் ஆதிரா தெரிஞ்சவங்கன்னு சொல்லிட்டு கார்ல ஏறி இருக்கா.. யாரு அந்த தெரிஞ்சவங்க? தெரிஞ்சவங்கன்னா வீட்டுல தானே கொண்டு விடணும்? அப்படி இல்லையே.. அப்போ அவங்க அவளுக்கு எந்த அளவுக்கு தெரிஞ்சவங்க?” என்று அவன் கேட்கவும், தெய்வா குழப்பமாகப் பார்த்தாள்..
“இங்க வர்க் பண்றவங்க எல்லாரையுமே பேக்ரவுண்ட் வெரிஃபை பண்ணித் தான் சேர்ப்பாங்க.. கண்டிப்பா இங்க யாரும் அப்படி இருக்க சான்ஸ் இல்ல..” மறுப்பாக தலையசைத்துக் கொண்டே அவள் சொல்லவும், இருவரும் யோசனையுடன் அமர்ந்தனர்..
அப்பொழுது மதியின் செல்போன் இசைக்கவும், எடுத்துப் பார்த்தவன், “இவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க போல இருக்கு..” என்றபடி போனை எடுத்து, தாங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லி அங்கு வர கூறினான்..
கார்த்திக்கும், அதியமானும் அவர்கள் இருக்கும் அந்த இடத்திற்கு வர, சித்தார்த் அப்பொழுது அந்த சிசிடிவி காட்சிகளை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்..
அதில் இருந்த ஆதிராவின் பிம்பத்தைப் பார்த்த கார்த்திக், அவசரமாக சித்தார்த்தின் அருகே வந்து, “ஆதிரா யாரு கார்ல போனான்னு தெரிஞ்சதா சார்? ஏதாவது க்ளூ கிடைச்சதா? எங்க அந்த காரை ஜூம் பண்ணிக் காட்டுங்க.. எனக்குத் தெரிஞ்சவங்க யாருதாவதான்னு பார்க்கறேன்..” என்று படபடப்பாகக் கேட்க,
அவன் கேட்டது போலவே அந்த காட்சியை ஜூம் செய்துக் காட்டிக் கொண்டே, “இல்ல கார்த்திக்.. அவங்க ரொம்ப பிளான் பண்ணி தான் செஞ்சிருக்காங்க போல.. பாருங்க ஆதிரா வீட்டுக்கு எப்படி போகனும்? ஆனா.. அவங்க எப்படி போயிருக்காங்க பாருங்க? ஆதிரா, கண்டிப்பா அவங்க தப்பான ரூட்ல போறாங்கன்னா கத்தி இருக்கணும் இல்ல.. ஏன் செய்யல? அப்போ ரொம்ப தெரிஞ்சவங்க கூட தான் போயிருக்கணும் இல்ல கார்த்திக்.. அவங்க சொன்னதை கேட்டு ஆதிரா அமைதியா இருக்கற அளவுக்கு.. இல்ல.. ஏறின உடனே மயக்கப்படுத்திட்டாங்களா?” யோசனையுடன் இழுத்த சித்தார்த்,
“உங்களுக்கு யாராவது எதிரிங்க.. ஆதிராவைப் பத்தி தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா? ஏதாவது கேஸ்ல நீங்க அவங்களுக்கு தண்டனை வாங்கித் தந்தவங்க.. அப்படி.. இல்ல.. ஆதிராவை சீண்டறாங்கன்னு நீங்க ஏதாவது கேஸ்சை எடுக்காம அவங்க தண்டை கிடைச்சிடுச ஆளுங்க? இல்ல நீங்க சண்டை அப்படின்னு போட்ட யாராவது ஆளுங்க?” யோசனையுடன் சித்தார்த் இழுக்க, கார்த்திக் தனது மூளையைத் தட்டி அலசி ஆராயத் துவங்கினான்.. அங்கிருந்த இருக்கையில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவன், யோசனையில் ஆழ்ந்தான்..
“இல்ல.. நான் ஆதிராவைப் பத்தி யாருகிட்டயும் சொன்னது இல்ல.. அதியமான் சாருக்கு மட்டும் தான் தெரியும்.. அதுவும் எங்களை பீச்ல ஒரு தடவ பார்த்ததுனால தான் அவருக்குமே தெரியும்.. மத்தப்படி நேத்து அவ போன் செய்யும்போது கூட இருந்தவங்க கேட்ட போது தான் அவளைப் பத்திச் சொன்னேன்.. அதுவே அவ விடாம அடிச்சதுனால, அவங்க சந்தேகம் வந்து ரொம்ப கேட்டதுனால தான் சொல்ல வேண்டியதாகிடுச்சு… அவங்க அப்போ என் கூட தானே இருந்தாங்க.. ஆனாலும் அவ போட்டோவைப் பார்த்ததும், இவ்வளவு அழகான பொண்ணா.. அதுவா.. இதுவான்னு கேலி பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. எனக்கு ரொம்ப கோபம் வந்து.. எதுவும் சொல்ல முடியாம இன்னும் ரெண்டு பெக் ஊத்திட்டேன்.. அவளைப் பத்தி யாரு சொன்னாலும் எனக்கு பிடிக்காது..” முதலில் சாதாரணமாக துவங்கியவன், இறுதியில் கோபமாக முடிக்க, மதி அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்..
நண்பர்கள் வேறு என்ன கேலி செய்திருப்பார்கள் என்று ஒரு ஆண்மகனாக அவனுக்கும் தெரியும் தானே.. அவனைப் பார்த்த சித்தார்த், “இருந்தாலும் அவ போன் செய்யும் போது போன எடுத்திருக்கலாம்.. இப்போ இப்படி புலம்பி இருக்க வேண்டாமே..” என்றுவிட்டு, அந்த சிசிடிவி காட்சிகளில் தனது பார்வையைப் பதித்தான்..
கார்த்திக் அந்தக் காரை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க, “உங்களுக்கு ஏதாவது தெரியுதா?” மீண்டும் சித்தார்த் அவனிடம் கேட்க,
“இல்ல.. இந்தக் கார் எஸ்யூவி மாடல்ல இருக்கு. இது மாருதி ப்ரேசா.. எனக்குத் தெரிஞ்சவங்கல்ல யாருக்கிட்டயும் இந்த மாடல் கார் இருக்கறது போல இல்ல.. நம்பரும் கார் கலரும் சரியா தெரியக் கூடாதுன்னே, கண்டுப்பிடிக்க கூடாதுன்னே சேறு போட்டு வந்தா போல இருக்கு..” யோசனையுடன் கார்த்திக் சொல்லிக் கொண்டே வர, அவனது செல்போன் குரல் கொடுத்தது..
நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அந்தப் பாடலைக் கேட்டதும், கார்த்திக் பரபரக்கத் துவங்கினான்.. “பேபி டால்.. ஆதிரா.. ஆதிரா கால் பண்றா..” என்றவனுக்கு, பதட்டத்தில் அவனது பேன்ட் பேக்கட்டில் கூட கைகள் நுழைய முடியாமல் தடுமாறினான்..
அவனது பதட்டத்தைப் பார்த்த சித்தார்த், அவனது பாக்கெட்டில் கையை விட்டு பட்டென்று போனை எடுத்து, காதிருக்கு கொடுத்தான்..
“ஹலோ..” சித்தார்த் அவசரமாக அட்டென்ட் செய்து பேசவும், அந்தப் பக்கம் இருந்து எந்த வித பதிலும் இல்லாமல் இருந்தது..
“யாரு.. யாரு சார்? ஆதிரா பேசறாளா?” அவனிடம் கேட்டுக் கொண்டே போனை வாங்கியவன்,
“ம்மா.. ஆதிராம்மா.. எங்க இருக்க? ஏன் எதுவுமே பேச மாட்டேங்கிற? நான் இனிமே ஒழுங்கா போனை எடுக்கறேன்.. என்கிட்டே பேசுடா. எனக்கு இப்படி எல்லாம் தண்டனை தராதே.. என்னால தாங்க முடியல..” கண்ணீருடன் அவன் பேசப் பேச, அந்தப் பக்கம் அமைதியே நிலவியது..
“பேபி டால்.. ஏன் பேச மாட்டேங்கிற? ஏதாவது பேசு.. இப்படி அமைதியா இருக்காதே.. நான் போன் எடுக்காதது தப்புத் தான். ஐம் சாரி.” அவன் கெஞ்சவும், பட்டென்று அந்த இணைப்பு துண்டிக்கப்பட, கார்த்திக் கண்களில் கண்ணீருடன் போனையே வெறித்துக் கொண்டிருந்தான்..
“கார்த்திக்.. கார்த்திக்.. ஆதிரா பேசினாங்களா?” மதி அவனைப் பிடித்து உலுக்க,
“இல்ல சார்.. அவ எதுவுமே பேசவே இல்ல.. அந்தப் பக்கம் அவ்வளவு அமைதியா இருந்தது சார்..” என்றவன், பரிதாபமாக மதியையும், சித்தார்த்தையும் பார்த்தான்..
“அந்தப் பக்கம் எந்த சத்தமும் இல்லையா?” மதி மீண்டும் கேட்கவும், இல்லை என்று கார்த்திக் மறுப்பாக தலையசைக்க,
“சித்தார்த்.. இது யாரோ விளையாடறாங்க.. கண்டிப்பா ஆதிரா இல்லன்னு எனக்குத் தோணுது.. நான் மறுபடியும் கால் பண்றேன்.. நீ அந்த நம்பர் எங்க இருக்குன்னு ட்ராக் பண்ணு..” என்ற மதி, கார்த்திக்கின் கையில் இருந்து போனை பிடுங்கி, மீண்டும் ஆதிராவின் நம்பருக்கு முயல, அந்த நம்பர் அனைத்து வைக்கப்பட்டிருந்தது..
“போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு.. நீ எதுக்கும் கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி நம்பர ட்ரேஸ் பண்ணு.. நான் திரும்பவும் ட்ரை பண்றேன்..” என்றவன், மீண்டும் அந்த நம்பருக்கு முயலத் துவங்கினான்..
“ஹலோ கண்ட்ரோல் ரூம்..” என்ற சித்தார்த்தின் குரல் கேட்க, கார்த்திக் மதியைப் பார்த்தான்..
“போன் ஆன் ஆகலையா? இப்படி எல்லாம் அவளால கோவிச்சுக்க முடியாது.. அதுவும் இவ்வளவு நேரம் அவளால கோபத்தை இழுத்து வச்சுக்கத் தெரியாது.. நாங்க சண்டைப் போட்டாலும், என் மேல கோபம்னாலும் ஒரு மணி நேரம் தான் பேசாம இருப்பா.. அதுக்கு மேல அவளே ஏதாவது ஸ்மைலி போட்டு பேசிடுவா.. இப்படி எல்லாம் ஒளிஞ்சு எங்களை கஷ்டப்படுத்த மாட்டா.. வேற யாரோ தான் வேணும்னே செய்யற போல இருக்கு.. அவ செல் டவர் எங்க இருந்து வந்திருக்கு பாருங்க சார்..” என்று படபடக்க,
“பார்க்கறோம் கார்த்திக்.. எப்படியும் அவங்களை பத்திரமா மீட்டுடலம்.. பயப்படாதீங்க..” என்ற மதி, மீண்டும் ஆதிராவின் செல்லுக்கு அழைக்கத் துவங்கினான்..
அவன் முயன்றுக் கொண்டிருக்கும் பொழுதே, மீண்டும் ஆதிராவின் செல்லில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.. அவசரமாக அதை எடுத்து காதிருக்குக் கொடுத்த மதி, “ஹலோ.. ஹலோ.. ஆதிரா.. நான் மதி பேசறேன்.. உங்க அண்ணன்.. பேசும்மா..” என்று பேசவும், சித்தார்த் அவனைப் பார்த்துவிட்டு,
“நீ பேசிட்டே இரு.. நான் டவர் கண்டுப்பிடிக்கறேன்..” என்று சைகைக் காட்டிவிட்டு, கார்த்திக்கிடம்,
“ஆதிராவோட நம்பர என் கையில எழுதுங்க..” என்ற சித்தார்த், கார்த்திக் தனது நம்பரை எழுதவும், தான் அழைத்திருந்த கண்ட்ரோல் ரூம்மில் ஆதிராவின் நம்பர் எங்கிருக்கிறது என்று கண்டுப்பிடிக்க கூறினான்..
“ஆதிரா.. அண்ணாக்கிட்ட பேசும்மா.. ஏன்ம்மா பேச மாட்டேன்கிற? நாங்க உன்னைத் தேடிக்கிட்டு இருக்கோம்..” மதி அன்பாக பேசிக்கொண்டிருக்க, அந்தப் பக்கம் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது..
“ஆதிரா..” மீண்டும் மதி அழைக்கவும், அந்த இணைப்பு துண்டிக்கப்பட, மதி சித்தார்த்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான்..
அந்த நேரம் சுனந்தா வரவும், கார்த்திக் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தான்.. “வாங்க சுனந்தா..” என்ற தெய்வா,
“மதி.. இவங்க தான் சுனந்தா.. ஆதிரா கூட கடைசியா நின்னுட்டு இருந்த பொண்ணு..” தெய்வா மதியிடம் அறிமுகப்படுத்தவும்,
“மேடம்.. என்ன சொல்றீங்க? கடைசியா நின்னுட்டு இருந்த பொண்ணுன்னு சொல்றீங்க.. என்ன ஆச்சு? எதுக்கு என்னை வரச் சொல்லிருக்கீங்க?” படபடப்புடன் புரியாமல் கேட்க,
“ஆதிராவை நேத்து இருந்து காணும்.. அதுதான் உங்களை வரச் சொல்லி இருக்கோம்..” தெய்வா சொல்லவுமே சுனந்தா அதிர்ந்து போனாள்..
“என்ன தெய்வா சொல்றீங்க? ஆதிராவைக் காணுமா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டவள்,
“பாவம் அவளும் நேத்து அவ்வளவு கேப்க்கு ட்ரை பண்ணினா.. எல்லாமே கேன்சல் ஆகிட்டே இருந்துச்சு.. அப்பறம் அவங்க ஃபியன்சிக்கு கூட கால் பண்ணினா.. அவரு பிசி போல போனை எடுக்கல.. என்னோட பாய் ஃப்ரெண்ட் வந்துட்டான்.. அதுனால என்னை அவ கிளம்பச் சொல்லிட்டா.. சரி.. ஆபீஸ் வாட்ச்மேன் இருக்காரேன்னு நானும் கிளம்பிட்டேன்..” சுனந்தா விஷயத்தைச் சொல்ல, சித்தார்த் கார்த்திக்கைப் பார்க்க,
“ஆதிரா உங்க கூட நிக்கும்போது ஏதாவது வண்டி நின்னுட்டு இருந்துச்சா? நீங்க பார்தீங்களா?” என்று கார்த்திக் அவசரமாகக் கேட்க,
அவனைப் பார்த்தவள், போட்டோவில் பார்த்ததை வைத்து நினைவு கூர்ந்து, “சார்.. நேத்து கேப் கிடைக்கலைன்ன உடனே உங்களுக்கு அவ ரொம்ப ட்ரை பண்ணிட்டே இருந்தா சார்.. நீங்க ஏன் போனை எடுக்கல? மழை வேற வரா மாதிரி அப்படி இருந்தது..” என்று கேட்க, கார்த்திக் குற்ற உணர்வில் தனது தலையை அழுந்தக் கோதிக் கொள்ள,
அவனது முகத்தைப் பார்த்தவள், “கவலைப்படாதீங்க சார்.. அவ கிடைச்சிடுவா..” அவளே பதில் சொல்ல, கார்த்திக் பெருமூச்சுடன் மண்டையை அசைத்தான்..
மதி அந்தப் பெண்ணிடம் விசாரித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த சித்தார்த், “மதி.. அந்த செல்போன் டவர் முதல்ல பூந்தமல்லி பக்கம் இருந்திருக்கு.. அப்பறம் அது அப்படியே வேலூர் போற வழியில போகுது.. செல்போன் டவர் ஸ்விட்ச் ஆகிட்டு இருக்கு.. ஒருவேளை பெங்களூர் இல்ல ஹோசூர் பக்கம் போறாங்களோ?” என்று சித்தார்த் யோசனையுடன் இழுக்க,
“நிஜமாவே ஆதிரா தான் கார்த்திக்குக்கு அந்த கடத்தினவங்களுக்குத் தெரியாம கால் பண்றாங்களா? இல்ல அந்த கடத்தினவன் நமக்கு கால் பண்ணி போக்கு காட்டறாங்களா?” என்று யோசனையுடன் அதியமான் கேட்க, கார்த்திக் புரியாமல் குழம்பிப் போனான்..
“இல்ல.. இது ஆதிரா கால் பண்ணல.. அவ கால் பண்ணிட்டு இவ்வளவு நேரம் அமைதியா இருக்க மாட்டா.. அதுக்கு அவ மெசேஜ் பண்ணிடுவா.. அவளுக்கு மெசேஜ் பண்ற ஸ்பீட் அதிகம்.. அவ டைப் பண்ற ஸ்பீடுக்கு எனக்கு டைப் பண்ண முடியாதுன்னு நான் கால் பண்ணியே பேசிடுவேன். முதல் தடவ வேணா அவ அப்படி கால் பண்ணி இருக்கலாம்.. இப்படி ரெண்டு மூணு தடவன்னா டவுட்டா இருக்கு.. முதல் தடவ என் குரல் கேட்டும் அவ பேசல.. அப்போ கண்டிப்பா இத்தனை நேரம் மெசேஜ் வந்திருக்கும்.. வரலைங்க போது எனக்கு ரொம்ப டவுட்டா இருக்கு.. கண்டிப்பா அவக்கிட்ட போன் இல்ல.. யாரு இப்படிப் பண்றா?” மதியையும் சித்தார்த்தையும் பார்த்துக் கூறியவன்,
“இந்த செல் டவர் எங்க இருக்குன்னு பாருங்க சார்.. இல்ல எங்கயாவது ஒரு இடத்துல எப்போவாவது ஸ்டேஷனரியா இருக்கான்னு பார்க்கச் சொல்லுங்க.. நாம போகலாம்..” கார்த்திக் சொல்லவும், அவனது தோளைத் தட்டிய சித்தார்த்,
“சொல்லி இருக்கேன் கார்த்திக்.. இருந்தாலும் நீங்க நேத்து போனை எடுத்திருக்கலாம்..” என்று விட்டு, அந்த சிசிடிவி காட்சிகளை எடுத்துக் கொண்டு,
“வா மதி.. நாம அந்த சைட்ல ஏதாவது கடையில அந்த கார் சிசிடிவில ரெகார்ட் ஆகி இருக்கான்னு பார்க்கலாம்..” என்று கூறவும், மதியும் அவனுடம் கிளம்பிக் கொண்டே,
“நீங்களும் வாங்க கார்த்திக்.. வேற ஏதாவது சிசிடிவி பூட்டேஜ் கிடைச்சா அடையாளம் காண ஈசியா இருக்கும்..” என்று அழைத்து,
“டேய் அண்ணா.. நீ தெய்வாவ கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ.. நாங்க பார்த்துக்கறோம்.. உன்னோட ஜூனியர நாங்க ஒண்ணும் பண்ணிற மாட்டோம்..” அதியமானைக் கிண்டலடித்த மதி,
“வாங்க கார்த்திக்..” என்று கார்த்திக்கை அழைத்துச் சென்றான்..
சித்தார்த் தனது வண்டியை எடுக்க, மதி கார்த்திக்கின் வண்டியில் ஏறிக் கொண்டான்.. அந்தக் கார் ரிவர்ஸ் எடுத்துச் சென்ற திசையில், மூவரும் மெல்ல இரு புறங்களும் நோட்டம் விட்டுக் கொண்டே ஊர்ந்துச் செல்ல, “ஆமா.. நீங்க வக்கீல்.. ஆதிரா சாப்ட்வேர்.. எப்படி ரெண்டு பேருக்கும் பழக்கம்?” தீவிரமாக கண்களை இருபுறமும் ஓட்டிக்கொண்டே அமைதியாக வந்த கார்த்திக்கிடம் மதி பேச்சுக் கொடுக்க,
“ஒருநாள் அதியமான் சார் கூட ஒரு டான்ஸ் ஷோவுக்கு போயிருந்தேன்.. அங்கப் பார்த்தேன்.. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சது.. அப்பறம் ஒருநாள் அவ ஆபீஸ் பஸ்ல எதர்ச்சையா பார்த்தேன்.. விடாம ஃபாலோ பண்ணிப் போய் பேசி.. போன் நம்பர் வாங்கி பேசத் தொடங்கினோம்…” கார்த்திக் சொல்லிக் கொண்டே வர,
“பேசிப் பேசியே அவங்களை கரக்ட் பண்ணி இருக்கீங்க..” என்று கேலி செய்ய,
“எனக்கு பிடிச்சதுனால தான்.. அவளை முதல் முறை பார்த்ததுல இருந்தே எனக்குள்ள பாதிப்பு.. ஆனா.. எப்படி பேசறதுன்னு தெரியாம இருந்தேன்.. பஸ்ல பார்த்ததும். போய் பேசிட்டேன்.. அப்படியே ஒரு நாள் அவங்க வீட்லயும் போய் பொண்ணு கேட்டுட்டேன்..” என்றவன்,
“அவளை எப்படியாவது கண்டுப்பிடிச்சிடலாம் இல்ல சார்.. எனக்காக இல்லைன்னாலும் அவ அப்பா அம்மாவுக்காக.. அவளுக்கு ஏதாவதுன்னா அவங்க தானகவே மாட்டாங்க..” என்று சொன்னவன், அமைதியாக கண்களை கடைகளில் பதிக்க, அங்கிருந்த ஒரு கடைகளில் அவனது கவனம் சென்றது..
“சார்.. அதோ அந்தக் கடையில பாருங்க. வெளியவே கேமரா இருக்கு.. அங்க போய் கேட்டுப் பார்க்கலாம்..” என்றபடியே வண்டியை அந்தக் கடையை நோக்கி செலுத்த, மதியும் சித்தார்த்தும், அந்தக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கத் துவங்கினர்..
கார்த்திக் காட்டிய கடையில் இருந்த சிசிடிவியைப் பார்த்த மதியும் கார்த்திக்கும் அதிர்ந்து போயினர்.. இவர்களது நேரமோ என்னவோ.. அந்த இடத்தில் சரியாக ட்ராபிக்கில் மாட்டி கார் ஒரு சில வினாடிகள் நிற்க, ஓரளவு நன்றாக அந்தக் காரைப் பார்க்க முடிந்தது..
நன்றாக சேறடிக்கப்பட்டு, சொல்லப் போனால் சேற்றில் முக்கி எடுத்தது போல இருந்த அந்தக் காரில், மற்ற அனைவருமே முகம் தெரியாத அளவிற்கு மாஸ்க் அணிந்திருந்தனர்.. அந்தக் காட்சியை பலமுறை ஓட்டிப் பார்த்த பின்பு, உடையை வைத்து, அந்த வண்டியை செலுத்தியது ஒரு பெண் என்று தெரிய, இருவருமே அதிர்ந்து போயினர்..
அதைச் சற்றும் எதிர்பார்க்காத இருவரும், “யாரோ ஒரு பொண்ணு தான் வண்டி ஓட்டி இருக்கா.. முன்னால கூட இருக்கறதும் ஒரு பொண்ணு போல தான் இருக்கு.. ஆனா.. பின்னால யாரோ ஜென்ட்ஸ் சட்டை போல தெரியுது இல்ல..” என்று கேட்டுக் கொண்டே அடுத்த நொடியை ப்ரீஸ் செய்துப் பார்க்க, பின் சீட்டில் இருந்த அந்த ஆண் மீது சாய்ந்தபடி ஆதிராவின் முகம் தெரிய, மதி அதிர்ச்சியுடன் கார்த்திக்கைப் பார்த்தான்..
கார்த்திக்கோ அதிர்ச்சியைக் காட்டாமல், யோசனையுடன், “இல்ல சார்.. இதுல ஏதோ ஒண்ணு இருக்கு.. இப்போ அவ ஆபீஸ்ல இருந்து இந்த கடை வரதுக்கு ஒரு மூணு நாலு நிமிஷம் கூட இல்ல.. அதுக்குள்ள அவ தூங்க மாட்டா.. அவ கார்ல ஏறினதே, அந்தப் பொண்ணுங்களல்ல யாரோ ஒரு பொண்ணு தெரிஞ்சவங்களா இருக்கறதுனால தான்.. அதுவும் இப்படி ஏறின உடனே அவ தூங்க எல்லாம் சான்சே இல்ல சார்.. எனக்கு ரொம்ப நெருடலா இருக்கு..” கார்த்திக் ஆணித்தரமாகச் சொல்ல,
“எப்படி?” சித்தார்த் கேட்டான்..
“முதல்முறை என் கூட கார்ல வரும்போதே அவ ரொம்ப அன் ஈசியா ஃபீல் பண்ணினா.. இத்தனைக்கும் நான் அவங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கின அப்பறம் தான், நாங்க முதன்முதலா வெளிய போனோம்.. அப்படி இருக்க.. சும்மா தெரிஞ்சவங்க வண்டியில ஏறிட்டு கண்டிப்பா அவ தூங்கி இருக்க மாட்டா.. அதுவும் கார்ல ஒரு ஆளு இருக்கும் போது.. கண்டிப்பா இப்படி தூங்கி இருக்க மாட்டா.. அவ ஏறினதே எனக்கு இன்னமும் நம்ப முடியல..” என்றவன்,
“நான் போனை எடுத்திருக்கணும்..” நொந்தக் குரலில் கூறி தலையில் அடித்துக் கொண்டவன்,
“அந்தப் பொண்ணு சொன்னது போல கேப் எல்லாம் கேன்சல் ஆகவும் வேற வழி இல்லாம தான் ஏறி இருப்பாளா இருக்கும்.. அப்போ ஓரளவு தெரிஞ்சவங்க தான்.. ஆனா.. என்கிட்டே அவங்களைப் பத்தி ஷேர் பண்ணிக்கிற அளவு க்ளோஸ் இல்ல.. அப்படி யாரு அவங்க? வித்யாவுக்கும் யாருன்னு தெரியல..” தனது மனதின் சந்தேகங்களைச் சொல்லிக் கொண்டே வந்தவன், மதியும் சித்தார்த்தும் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
“எனக்கு ஒரு டவுட் இருக்கு.. ஒருவேளை அவ கார்ல ஏறின உடனே மயக்க மருந்து கொடுத்திருப்பாங்களோ? அதுனால தான் அவ வேற வழியில போகும்போது கூட சத்தம் போடலையோ? இல்லன்னா கத்தி கார்க் கதவைத் திறக்க அவ முயற்சி பண்ணி இருப்பா இல்ல..” என்று கார்த்திக் கேட்க, மதி உதட்டைப் பிதுக்கினான்..
“இருக்கலாம்.. இல்ல அவங்க ஏதாவது சமாதானம் சொல்லி அந்த வழியில போயிருக்கலாம்..” யோசனையோடு அவன் சொல்லிக் கொண்டே வர,
“சரி.. இங்க பக்கத்துல டோல் இருக்கு.. நாம அங்க போய் அதை தாண்டி இருக்காங்களான்னு பார்க்கலாம்..” என்று மூவரும் அந்த இடத்தை நோக்கிச் சொல்ல, மீண்டும் கார்த்திக்கின் செல்போன் இசைக்கத் துவங்கியது..
நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
கார்த்திக்கின் செல்போன் இசைக்க, அந்த மொபைலையே கார்த்திக் வெறித்துக் கொண்டிருந்தான்.. அதன் முடிவில், ‘ஆதிரா காலிங்’ என்று அது கூறி நிறுத்திவிட்டு, மீண்டும் அது இசைக்கத் துவங்கியது..
தன்னையே நொந்துக் கொண்டு, அதை இயக்கி அவன் காதுக்கு கொடுக்க, அவனது காது கிழியும் அளவிற்கு ஒரு லாரியின் ஹார்ன் சத்தம் அதில் கேட்க, கார்த்திக் முகச் சுளிப்புடன் காதில் இருந்து தனது மொபைலை நகர்த்தினான்.
“என்னாச்சு? என்ன சத்தம்?” என்று கேட்டுக் கொண்டே, அவனிடம் இருந்து போனைப் பிடுங்கிய சித்தார்த்,
“ஹலோ.. யாருங்க அது? இந்த செல்போன் உங்களுக்கு எங்க கிடைச்சது? இது எந்த ஏரியா?” என்று கேட்க, அந்தப் பக்கம் அந்த ஹார்ன் சத்தத்தை தவிர எதுவும் கேட்காமல் போக, உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்த சித்தார்த், கார்த்திக்கின் கையில் போனைத் திணித்து,
“நீங்க பேசிட்டே இருங்க.. நான் ஏற்கனவே ட்ராக் பண்ணச் சொல்லி இருக்கேன்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனது செல்போன் இசைக்க, அவசரமாக காது கொடுத்து கேட்டவன், கார்த்திக்கைத் திரும்பிப் பார்க்க, அவனோ “ஹலோ.. ஹலோ..” என்று அழைத்துக் கொண்டே இருந்தான்..
இந்தமுறை அவளது இணைப்பு துண்டிக்கப்படாமல், ஆனால் யாரும் பேசாமலும் அமைதியாக இருக்க, வண்டிகளின் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது..
“கார்த்திக்.. எங்க கூட கார்ல வாங்க.. மொபைல் இன்னும் ஆன்ல தானே இருக்கு.. அவங்க அதோட லொகேஷன் சொல்லிக்கிட்டு இருக்காங்க.. மொபைல் மூவிங்ல இருக்கு. நாம அதை ஃபாலோ பண்ணிப் போகலாம்.. இந்த வண்டி இங்கயே இருக்கட்டும்.. நாம அப்பறம் எடுத்துக்கலாம்..” என்ற சித்தார்த், அந்தக் கடைக்காரனிடம் சொல்லி கார்த்திக்கின் வண்டியை வைத்து விட்டு, அவனையும் அழைத்துக் கொண்டு, அந்த செல்போன் காட்டும் இடத்திற்குச் சென்றனர்..