Mathu…Mathi-18

Mathu…Mathi-18
மது…மதி! – 18
சரண்யாவின் மூளை பலவாறாக கணக்கிட்டுக் கொண்டிருந்தது. ‘இப்ப கௌதமை கூப்பிட்டா, இவங்களுக்கு தெரியும். தெரிந்தால் என்ன? தெரிஞ்சிட்டு போகட்டும். விஷயத்தைச் சொல்லணும். அது தானே முக்கியம்’ அவள் கௌதமிற்கு அழைத்தாள். ஆனால், அவனோ மதுமதிக்கு உதவி செய்துகொண்டிருக்க, அவன் அழைப்பை எடுப்பதற்குள் அது நின்றுவிட்டது.
சரண்யா, குறுஞ்செய்தி அனுப்புமுன் தேவராஜ் அவள் அலைபேசியை வாங்கி, அவளை பார்த்து ஏளனமாக சிரித்து தன் சட்டை பைக்குள் அவள் கைப்பேசியையும் போட்டுக்கொண்டு வெளியே சென்றான்.
சில நிமிடங்கள் கழித்தே, கெளதம் சரண்யாவின் அழைப்பை கவனித்தான்.
“சரண்யா கூப்பிட்டிருக்கா. நான் மிஸ் பண்ணிட்டேன்” கெளதம் மதுமதியிடம் கூற, “திரும்ப கூபிடுங்களேன்” மதுமதி கூற, அவன் மறுப்பாக தலையசைத்தான். “சரண்யா தான் கூப்பிடனும். அவ, என்ன நிலைமையில் இருப்பான்னு நமக்கு தெரியாது.” அவன் கண்களை சுருக்கி, தீவிரமான முகபாவனையை காட்டினான்.
“நீங்க சரண்யாவை இங்க வர சொல்லிருக்க கூடாது. நம்மளால சரண்யாவும் சிக்கலில் மாட்டிக்கிட்டாங்களோன்னு தோணுது.” மதுமதி அவர்கள் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்த படி கூற, அவன் சிரித்தான். “என்ன சிரிப்பு?” அவள் சந்தேகமாக கேட்க, ‘சரண்யா தான் நமக்கு துருப்பு சீட்டு. இனி என் விளையாட்டை காட்டிட வேண்டியது தான்’ என்று எண்ணிக்கொண்டான் மர்மமாக.
“ஒண்ணுமில்லை” என்று கூறி சரண்யாவின் விஷயத்தை விடுத்து, “நமக்கு பிரச்சனை கொடுக்கறவங்க, என் வகை எதிரி இல்லைன்னு தோணுது மதும்மா. உனக்கு யார் மேல சந்தேகம் இருக்கு?” என்று அவளிடம் கேட்டான். “கார்மேகம்” என்றாள் பட்டென்று. தன் மனைவியின் அறிவில் அவன் முகத்தில் பெருமிதம். “உங்களுக்கும் அவர் மேல தான் சந்தேகம் அப்படின்னு எனக்கு தெரியும். சொன்னால், நான் வருத்தப்படுவேன்னு நீங்க சொல்லாம என் கிட்ட கேட்கறீங்க” அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.
அவள் அருகே அமர்ந்து அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவன் கண்களில் காதல்… காதல்… காதல்… மட்டுமே. அவன் கண்கள் காட்டிய காதலில் மயங்கிவிடாமலிருக்க, அவள் தன் விழிகளில் படபடப்பை ஏந்தி இறுக மூடிக்கொண்டாள். “மதும்மா” அவன் அவள் முகத்தை வரிவடிவாக தீண்டினான்.
“நான் உன்னை முதன்முதலில் எப்ப பார்த்தேன் தெரியுமா?” அவன் கேள்வியை கேட்டுவிட்டு அவள் பதில் கொடுக்க நேரம் கொடுக்காமல் தன் பேச்சை தொடர்ந்தான். அவன் அருகாமை, அவன் ஸ்பரிசம், அவன் குரல் என அனைத்திலும் கட்டுண்டு அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
“அந்த கார் விபத்து நடந்த அன்னைக்கு தான். அந்த விபத்தால் என் கால்கள் கொஞ்ச நாட்கள் செயலிழந்து இருந்தாலும் எனக்கு அந்த விபத்தில் வருத்தமே இல்லை. அந்த விபத்தில் கிடைத்த வரம் நீ. நீ அந்த வழியா போயிட்டு இருந்தப்ப என்னை வந்து காப்பாத்தின. பலர் அப்படியே போகும் பொழுது, நீ மட்டும் தான் என் பக்கத்துல வந்து என்னை காப்பாத்த முயற்சி பண்ணின” அவன் கூற, “இப்ப…” அவள் பேச ஆரம்பிக்க, அவன் அவள் இதழை ஆள்காட்டி விரலால் மூடி மறுப்பாக தலையசைத்தான்.
“பாதி மயக்கத்திலிருந்தப்ப நீ எனக்கு தேவதையா தெரிஞ்ச. அப்புறம் நான் என்னை சமாதானம் செஞ்சிகிட்டேன். சாக போற நிலையில் தன்னை ஒரு பெண் காப்பாற்ற வந்தா, அவங்களுக்கு அவ தேவதையா தான் தெரிவான்னு யோசிச்சேன்” அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.
“அப்புறம், உன்னை பார்க்கனுமுனு தோணும் பொழுது, நன்றி உணர்ச்சின்னு நினைத்தேன்” அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை. “அப்புறம் தான், நான் உன்னை தொடர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். நீ நிறைய பேருக்கு உதவி பண்ணின. அதில் நானும் ஒருத்தன் அவ்வளவு தான். பல குடிகாரங்களை மறுவாழ்வு மையத்திற்கு கூட்டிகிட்டு போறேன்னு தெரிஞ்சிகிட்டேன். எனக்கு உன்னை மட்டுமில்லை. உன் செயலையும் ரொம்ப பிடிச்சிருந்தது” அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை.
“பணம்… பணம்… பணம்… இப்படி பலர் என்னை சுற்றி வர, என்னை காப்பாத்திட்டு நீ என்னை வந்து கூட பார்க்கலை. சுயநலமில்லாத உன் மனசை எனக்கு அப்பவும் பிடிச்சிருந்தது. இப்பவும் பிடிச்சிருக்கு. எப்பவும் பிடிக்கும் மதும்மா. உன் உறவினர்கள் வீட்டிலிருந்தாலும் நீயே சுயமா படித்து உன்னை வளர்த்துக்கிட்ட விதம். உன் தைரியம். நம்பிக்கை. உன் சமூக அக்கறை. இப்படி எல்லாமே எனக்கு பிடிக்கும்.” அவன் கூற, “இப்ப எதுக்கு இந்த பேச்சு?” என்றாள் நறுக்கு தெறித்தாற்போல்.
“நான் நல்லவ எல்லாம் இல்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு. என் அப்பாவின் குடிப்பழக்கம், என் அம்மாவை கொன்னுடுச்சு. அம்மா, ஓடாய் உழைத்து, உடல் நலம் சரியில்லாம போனாங்க. அவங்களுக்கு உடம்பு சரி இல்லாதப்ப கூட்டிகிட்டு போக அப்பாவுமில்லை. காசுமில்லை.” அவள் தன் மூச்சை ஆழ உள்ளிழுத்தாள்.
“அம்மா, உடல் நோவுன்னு கதறும் பொழுது, அப்பா குடிச்சகிட்டு கீழ கிடந்தார். ஹாஸ்பத்திற்கு கூட்டிகிட்டு போனும்னு நான் அல்லாடும் பொழுது வீட்டில் காசுமில்லை. வீட்டிலிருந்த எல்லா காசையும் அப்பா எடுத்துட்டு போய் குடிச்சிட்டார். நான் ஓர் அநாதை. ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும், நான் அநாதை தான்” அவள் முகத்தில் அடித்துக்கொண்டு கதற, அவன் அவள் கைகளை பற்றினான்.
அவள் அவனிடமிருந்து தன் கைகளை வேகமாக உருவினாள். “அனாதை மட்டுமில்லை கொடூரமானவ. அன்னைக்கு உங்களை நான் காப்பற்றினேன். ஆனால், நீங்க அன்னைக்கு குடிச்சிருதீங்கன்னு தெரிந்ததும், நான் உங்களை காப்பாற்றினதுக்கே வருத்தப்பட்டேன். நீங்க அன்னைக்கு குடிச்சிருந்த போய் தான், அன்னைக்கே உங்களுக்கு ஆபரேஷன் பண்ண முடியலை. இல்லைனா, உங்க கால்கள் அன்னிக்கே சரியாகிருக்கும்” அவள் கூற, “அது ஏதோ விபத்து மதும்மா” அவன் விளக்க முற்பட அவள் மறுப்பாக தலையசைத்தாள்.
“நான் உங்களை எதுமே கேட்கலை. நீங்க பேசின எல்லா விஷயமும் நாம ஏற்கனவே பேசினது தான். சொல்ல உங்களுக்கும் அலுப்பு தட்டியதில்லை. கேட்குற எனக்கும் அலுப்பு தட்டியதில்லை” அவள் கூற, “ஏன்னா, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உனக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்” அவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடி கூறினான்.
அவன் செய்கையை விடுத்து, “ஆனால், நான் நீங்க சொல்லுற அளவுக்கு நல்லவ இல்லை. நல்லவளா இருந்திருந்தா, என் அப்பா இரத்த வெள்ளத்தில் இருக்கும் பொழுது, எனக்கென்னன்னு வந்திருப்பேனா?” அவள் விம்மியபடியே கேட்டாள்.
“உனக்கென்னன்னு வந்திருந்தா, நீ இப்ப அதை நினைத்து அழ மாட்ட மதும்மா” அவன் கூற, அவள் முகம் அசூயை காட்டியது. “உனக்கு உன் அப்பா மேல பயங்கர கோபம். ஆனால், அன்னைக்கு யாருமில்லைன்னா நீ அவரை காப்பாத்திருப்ப. நான் எல்லாரையும் காப்பற்றும் பொழுது அவரை காப்பாற்றிருப்பேன்னு உனக்கு நம்பிக்கை” அவன் கூற, அவள் கண்களில் ஒரு மெல்லிய ஆர்வம். தன் தந்தையை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம். ‘தவறே செய்தாலும் தந்தையன்றோ?’ என்று அவள் தசையாடியது,
ஆனால், அவள் கோபம் அவளை மௌனிக்க செய்ய, தன் மனைவியின் குணமறிந்து அவன், “உங்க அப்பா நல்லாருக்காங்க. உன்னை பார்க்க ஆசைப்படுறாங்க. உன்கிட்ட பேச பிரியப்படுறாங்க. உன்னை பற்றிய செய்தியில் மனமுடைந்து என்னை பார்க்க வந்தாங்க. உன்னை காப்பாத்தணுமுன்னு கெஞ்சினாங்க. நீ போற இடத்திற்கெல்லாம் வந்து உன்னை காப்பதினாங்க” அவன் கூறிக்கொண்டே போக,
“அன்னைக்கு எங்க அம்மாவை காப்பாத்திருந்தா, எனக்கு இப்படி எல்லாம் கஷ்டமே வந்திருக்காதே. இன்னைக்கு அம்மான்னு யாருமே இல்லாம, போக அம்மா வீடுன்னு ஒன்னு இல்லாம நான் அனாதையா சுத்த காரணமே அவர் தானே?” அவள் நிறுத்த, “பழசை எல்லாம் மறந்து அவரை மன்னிக்க கூடாதா?” என்று கேட்டான் கெளதம்.
“அவரையும் மன்னிக்க முடியாது. உங்களையும் மன்னிக்க முடியாது.” அவள் கறாராக கூற, “உங்க அப்பா இப்ப குடிக்கறதில்லை. குடிச்சதில கிட்னி ஃபெயிலியர் ஆகிடுச்சு. மறுவாழ்வு மையத்தில் தங்கி பல ட்ரீட்மெண்ட் எடுத்திட்டு வந்திருக்காங்க. உன்னை பார்க்கணும். உன் கிட்ட பேசணும்னு தான் வந்திருக்கிறாங்க” என்று அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை.
“நாம அரசியல்வாதி கார்மேகம் பத்தி பேசிட்டு இருந்தோம்” என்றாள் அவன் பேசுவதற்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல். அவனும் அவளை வற்புறுத்தவில்லை.
“அரசியல்வாதி கார்மேகம் ஒரு யூகம் தான். என் தரப்பில் வர கூடிய எதிர்ப்புகளை எல்லாம் நான் கண்காணிச்சிட்டேன். ஆல் கிளியர். கார்மேகத்துக்கும், தேவ்ராஜ்க்கும் சம்பந்தம் இருக்கு. அது மட்டுமில்ல, உங்க என்.ஜி.ஓ உன் தலைமையில் ஸ்கூல் பக்கத்துல இருக்கிற அவருக்கு வருமானம் கொடுக்குற நாலு ஒயின் ஷாப்பை மூடிருக்கீங்க. இன்னும் சில இழுபறி கேஸ்ல இருக்கு” அவன் கூற, அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“அதுக்கு தான் உன்னை குடிகாரியாக்க அவர் திட்டம் போட்டிருக்கலாம்” என்றான் யோசனையாக. “அவர் பெரிய புள்ளி. எப்படி நிரூபிக்கிறது?” அவள் கேட்க, “அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” அவன் கூற, வெளியில் மழை பெய்ய ஜன்னல் வழியாக சாரல் அவர்கள் அறைக்குள் வர அவன் எழுந்து ஜன்னல் அருகே சென்றான்.
அங்கு எறும்பு கூட்டம் சிந்திய பால் கரையில் மொய்த்துக் கொண்டிருந்தது. அவை எதுவும் சாகவில்லை. அவன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தான். ‘மதுமதி, தப்பா சொல்லமாட்டா.’ அவன் சிந்தனையும் மனமும் ஒரு சேர அவளை நம்பியது.
“நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்” அவன் கூற, “மழையில் எங்க போறீங்க?” அவள் அக்கறையோடு கேட்டாள். “இங்க தான் மதும்மா. இப்ப வந்திடுறேன்” அவன் மடமடவென்று படியிறங்கி சென்றான்.
அவன் கீழே பால் சிந்திய இடத்திற்கு சென்றான். அங்கும் பல எறும்புகள் இருந்தன. ‘பாலில் விஷம் இல்லை’ அவன் எண்ண, “அப்ப பூனை செத்தது நிஜமா?” அவன் அவர்கள் தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தான்.
பூனை விழுந்ததாக சொன்ன இடத்திலிருந்து சில அடிகளில் மழை அடித்த வேகத்தில் மண் கரைய ஆரம்பிக்க, அப்பொழுது தான் தோண்டிமூடிய குழி என்பதை அந்த இடம் அப்பட்டமாக காட்ட, அவன் மண்ணை தோண்ட துர்நாற்றம் பிரட்டிக் கொண்டு வந்தது.
‘பூனை இறந்தது நிஜம். ஆனால், பாலில் விஷமில்லை. ஆக, நபர் தோட்டத்தில் தான் இருக்க வேண்டும். மதுமதியை கொல்வது நோக்கமல்ல. கொலை செய்வதாக மிரட்டுவது தான் நோக்கம்.’ அவன் மூளை கடகடவென்று வேலை செய்தது. தோண்டிய மண்ணை படபடவென்று மூடினான். சந்தேகம் வராதபடி அங்கிருந்து அமைதியாக நழுவினான்.
“எதற்காக?” அவன் இதழ்கள் முணுமுணுத்தன. ‘மதுமதி இங்க இருக்க கூடாதுனு பண்ணற வேலை. நம் வீட்டாளுங்க செய்யற வேலை’ அவன் சிந்தை எடுத்துக்கூறினாலும், அவன் மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது. அவன் வீட்டு வாசலில் கண்களில் கண்ணீர் மல்க குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அவன் கண்ணீர் மழை நீரோடு கலந்தது.
“ஏண்டா மழையில் நனையுற? உள்ள வா” அவன் தந்தை கண்டிக்க, “வா டா. என்ன பொண்டாட்டியோ? இவனை மழையில் லூசு மாதிரி நடக்க விட்டுடறா” லலிதா தன் மருமகளை திட்டியபடி மகனை நொந்துக்கொண்டார்.
அதே நேரம், தொலைக்காட்சியில் “காவல்துறை அதிகாரி தேவராஜை காணவில்லை” என்ற தலைப்புச் செய்தி ஓடியது.
மது… மதி! வருவாள்…