UYS 23

1662455813139-02838d68

அத்தியாயம் 23

 

காலையில் வழக்கத்திற்கும் முன்னவே விழித்து, ஸ்கூலில் கொடுத்த லேப்டாப்பில் அப்பா போனில் டவுன்லோட் செய்த, ஈஸியாக சாரீ கட்டும் டூட்டோரியல் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள் மகா.

இன்றுதான் ப்ரெஷ்ஷர்ஸ் டே செலிப்ரேஷன். கிளாஸில் அனைவரும் ஒரே போல சாரீ கட்ட செய்த முடிவின் படி இன்று புடவை கட்டி செல்லவே இந்தப் பாடு.

பலமுறை பார்த்தப் பின்னே, ‘எப்படியும் கட்டிருவோம்.’ என நம்பிக்கை வந்தது அவளுக்கு.

அதன்பின் டீயை தந்தையுடன் அருந்திவிட்டு, தலைக்கு குளித்து ரெடியானவள்… ப்ளீட் ப்ளீட்டாக ஐயர்ன் செய்து வைத்திருந்த ப்ளூ நிற காட்டன் புடவையை எடுத்தாள்.

புடவையின் பார்டரில் தங்க நிற டிசைன் இருந்தது. எளிமையான அழகான புடவை.

ஏற்கனவே ஐயர்ன் செய்திருந்த படியால் மேலே போட்டு பின் குத்தவும், அழகாகவே இருந்தது. இடையில் கொசவத்தை கலையாமல் மடிப்பு எடுக்கதான் நேரம் ஆகிப்போனது.

மடிப்பு எடுக்க நழுவும் போதும், மீண்டும் மீண்டும் மடித்ததில் சாரீ கொஞ்சம் கசங்கிவிடவும் வந்த கடுப்பில் சுடியே போட்டு சென்றுவிடலாமா எனக்கூட தோன்றியது.

ஆனாலும் அனைவரும் சாரீயில் வர,  தான் மட்டும் சுடிதாரில் சென்றால் நன்றாக இருக்காதென்று பல்லைக் கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ஒருவழியாக புடவையை கட்டிய பின் கிளிப் போட்டு கூந்தலை பின்னாமல் பிரீயாக விட்டவள், மேட்ச்சான அணிகலன்களை அணிந்து கொண்டு ரெடியாகி டைமை பார்க்க பகீறென்றானது.

இன்னும் பத்து நிமிடத்தில் பஸ் ஸ்டாப்பில் இல்லையென்றால் பேருந்தை மிஸ் செய்து விடுவாள்.

வேகவேகமாக மதியத்துக்கு உணவை கப்பில் போட்டவள், தந்தையை உணவுண்ண அழைக்க, அவரோ மகள், “பஸ்ஸுக்கு லேட்டாகிடும் ப்பா. நான் கேன்டீன்ல சாப்டுக்கறேன்.” என்று கெஞ்சி மறுத்து செல்வதால், ‘பிறகு சாப்பிட்டு கொள்கிறேன்.’ என்றுவிட்டார்.

பொதுவாக சுடிதாரிலேயே மகளை பார்த்து பழக்கப்பட்டவருக்கு, இன்று மகா வித்தியாசமாக தெரிந்தாள்.

அதேசமயம்… மனைவி இருந்திருந்தால் அவளுக்கு இது போலவெல்லாம் கட்ட சொல்லி அழகு பார்த்திருப்பார் என்ற எண்ணம் வர முகம் சுணங்கிப் போனது.

மனைவி இழப்பை இன்றும் கணவனாக அவரால் தாங்க இயலவில்லைதான். ஆனாலும் காலம் அவரை தேற்றியிருந்தது. பெருமூச்சோடு உள்ளே சென்றுவிட்டார்.

ஆயிரத்தெட்டு சேஃப்டி பின் குத்தியும் அவள் சாரீ நழுவியது. முந்தானையை கையில் பிடித்து இடையில் சொருகாமல் கிட்டத்தட்ட போத்திக் கொள்ளாத குறையாக சுற்றி பிடித்துக் கொண்டாள்.

வேகமாகவும் நடக்க இயலாமல் முடிந்தளவு எட்டி நடை போட்டாள்.

‘வீடியோல ஈஸியா இருக்க மாதிரி இருந்துச்சு. சீலை கட்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. வேகமா நடக்க கூட முடில. ச்சே… ரொம்பவே கஷ்டமா இருக்கு. இதுல யூனிபார்ம் வேற சாரீ! வாரவாரம் காட்டுணுமா? யாருடா புடவையலாம் இதுலாம் கண்டுபுடிச்சா?’ என உள்ளே பொறிந்து கொண்டே சென்றாள்.

இந்த வாரம் காலேஜ் யூனிஃபார்ம் அணிந்து வராமல் டிமிக்கு கொடுத்திருந்தனர். சில நாட்களே ஆகியதால் கண்டித்தாலும் ஆசிரியர்கள் அடுத்த வராத்திலிருந்து கட்டி வர சொல்லியிருந்தனர்.

எப்படியோ கல்லூரி பேருந்து காலை வராமல் அவள் வந்த பின்னே வந்தது. அமர இடமும் கிடைத்தது.

காலேஜுக்குள் வந்ததிலிருந்து ஒரு சங்கடம். வீட்டிலிருந்து நடந்து வரும்போதே ஒரு கூச்சம் இருந்தது. இப்போது இன்னுமே ஒரு போல இருக்க, சிலரின் குறுகுறு பார்வையிலிருந்து நழுவ, கிளாஸை நோக்கி வேகமாகச் சென்றாள்.

ஒவ்வொருவராக தோழிகள் கிளாஸினுள் வர, கொஞ்சம் இயல்பானாள்.

“மகா அழகா இருக்க.” என்ற கவியின் பாராட்டில் வெட்க புன்னகையை சிந்தியவள்,

“நீயும் கவி… சாரீல ரொம்ப அழகா இருக்க. நல்லா புடவை கட்டிருக்க.” என்று சொன்னாள்.

‘அழகா இருக்க…’ என்ற கம்ப்ளீமெண்ட்டை பொறாமையின்றி அனைவருமே அடுத்தவரிடம் கூறினர்.

அதன்பின் பெல் அடிக்க, மாணவர்களை ரொம்ப படுத்தாமல் ஆசிரியர்களும் கொஞ்சம் விட்டுவிட்டனர்.

ஆனாலும் இவர்களுக்கு எப்போதடா மதியம் வரும், கொண்டாட்டம் தொடங்கும் என்று இருந்தது.

நெட்டித்தள்ளி காலை வகுப்புகள் முடிந்துவிட, லன்ச் பிரேக் வரவும் ஒரே ஜாலிதான் இளையவர்களுக்கு.

அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு அறையில்தான் உணவு வைக்கப்பட்டிருந்தது.

வெஜிட்டபிள் ரைஸ், தயிர் பச்சடி என உணவு. இனிப்புக்கு கேசரி. முட்டை மற்றும் காய்கறி பஃப்ஸ், ஐஸ் கிரீம் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவின் சுவையும் நன்றாக இருக்க, வாயடித்துக் கொண்டு வயிறு நம்ப உண்டனர்.

அதன்பின் ரெஸ்ட் ரூம் செல்ல, மகாவிற்கு புடவை கொஞ்சம் கலைந்து போய்விடவும், அவள் சரி செய்ய பார்க்க, இன்னுமின்னும் கலைந்து அவள் பிபியை ஏற்றியது.

ஒருவழியாக சாரீயை ஒழுங்கு படுத்தியவள் வெளியே வர, அவளுடன் வந்தவர்கள் யாரும் இல்லை.

அவர்கள் இருக்குமிடம் விடுத்து தனித்து சற்று தொலைவிலிருந்த ரெஸ்ட் ரூம் சென்றதற்கு தன்னையே கடிந்து கொண்டாலும், தோழிகள் கவனிக்காததில் கோபமும் வர, வேக வேகமாக மூன்றாம் தளம் நோக்கி நடந்தாள்.

அவள் தோழிகள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து மேலே சென்றதால், மகா முன்னவே கிளம்பியிருப்பாள் என்று நினைத்து அவளை விடுத்து சென்றிருந்தனர்.

புடவை கட்டியிறாத பழக்கம், தனியாக இருக்கிறோமே என்ற பதட்டம் என்று வேக வேகமாக படிக்கட்டில் ஏறியவள் கவனிக்காது புடவையின் கொசவத்தை மிதித்திருக்க, கிட்டதட்ட வெளியே வந்துவிட்டது.

‘உடுக்கை இழந்தவன் கைப்போல’ என்ற குறலுக்கேற்ப நொடியில் புடவையை பிடித்துக் கொண்டவளுக்கு, கண்களே கலங்கி போயின.

என்ன செய்யவென்று அறியாது பேந்த பேந்த விழித்தவள், யாரும் வருகிறார்களா என பதற்றமாக கண்களை சுழற்றிக் கொண்டு அழுகையை அடக்கிக் கொண்டு நின்றாள்.

அப்போதுதான் எதற்கோ அந்த பக்கம் வந்த சூர்யா அவள் முகத்தை வைத்தே என்னவோ பிரச்சனையென புரிந்து கொண்டான்.

நொடியில் திரும்பிச் சென்று அவனுடம் படிக்கும் பெண்ணிடம், “அனு அங்க படிக்கட்டுல பர்ஸ்ட் இயர் பொண்ணு நின்னுட்டு இருக்காங்க. நீ அங்க போ.” என சொல்ல, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அந்த பொண்ணு படிக்கட்டுல நின்னா, நான் ஏன் சூர்யா போகணும்?” என வினவ,

“உன் ஹெல்ப் தேவைப்படலாம். போயேன்தான்.” அவன் விஷயத்தை நேரடியாக சொல்லாமல் கெஞ்சலாகக் கூற, மேலும் கேள்வி கேட்காது அங்கு விரைந்தாள்.

மகா கண்ணீரோடு புடவையை பிடித்துக் கொண்டு நிற்க, விஷயம் புரிந்தது. அவளை அருகேயிருந்த ஒரு காலி அறைக்குள் அழைத்து புடவையை சரி செய்துவிட்டாள்.

“க்கா… ரொம்ப தேங்க்ஸ். எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுனே தெரில… தெரியுமா?” என மகா பல நன்றிகளோடு படபடவென பேச,

“தேங்க்ஸ்லாம் ஒன்னும் வேணாம் மகா. எதுக்கு பயந்துக்கற? இங்கதான இருக்க. துணிய கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு எடுத்து சொருக வேண்டியதுதான. சீலையே கட்ட தெரியாம செட் சாரீ வேற!” என அவள் இலகுவாக கேலி பேசவும், கொஞ்சம் சிரித்தவள்,

“சாதாரணமா சொல்றீங்க. எனக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் தெரியுமா?” என அவள் மீண்டும் ஆரம்பிக்கவும்,

“அச்சோ போதும் மகா. இனி கவனமா நல்லா கட்ட பழகு. பாத்து நட.” என்றவள்,

“வா…” என அவளுடன் கிளாஸை நோக்கி நடக்க, அவள் தோழிகள் குழு வரவும் அனு அவள் பிரண்ட்ஸிடம் சென்றுவிட்டாள்.

அவர்கள் அனைவரும் மகாவைத் தேடிதான் வந்தனர்.

“சாரிடி… விட்டுட்டு வந்துட்டோம். ” என்று அவர்கள் மன்னிப்பு கேட்க, அவர்கள் அனைவரும் அவளைத் தேடி வந்ததிலேயே உள்ளே தோன்றியிருந்த கோபத்தை விடுத்தவள், அவர்களுடன் செலிப்ரேஷன் நடக்கும் அறைக்கு சென்ற சற்று நேரத்தில் இயல்பானாள்.

அந்த அறையை கொஞ்சமாக அலங்கரித்திருந்தனர். உட்கார வரிசையாக பெஞ்ச் போடப்பட்டிருந்தது. ஸ்பீக்கர் கூட இருந்தது.

ரொம்ப சத்தமில்லாமல் பாட்டு போடப்பட, மாணவர்கள் பேச்சும் கூச்சலும் என சத்தம் ரொம்ப அதிகரித்தால் திட்டிய ஆசிரியர்கள், அவர்களை அமைதியாக  இருக்க வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர்.

மகா தோழிகளோடு சிரித்து பேசுவதை அந்த அறையின் சுவற்றில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.

முன்பு அவள் அங்கு அழுவது போல நின்றிருந்தது ஏனென்றே தெரியாமல் அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அதனால்தான் உடனே அனுவை உதவிக்கு அனுப்பினான்.

‘இப்போது எப்படி இருக்கிறாள்? இன்னுமா அழுகிறாள்?’ என்று பார்க்கவே மகாவைத் தேடியவன், அவள் சிரித்த முகத்தைக் கண்டு, ‘அழாமதான் இருக்கு பொண்ணு.’ என திரும்ப பார்த்தால்,

சிரிப்போடிருந்த அவள் முகத்தை கண்டுவிட்டு வேறு எங்கும் செல்லமாட்டேன் என்று அடம் பிடித்தது அவன் கண்கள்.

தலையை ஆட்டியவாறு ஓயாது அவள் பேச, கூடவே காதிலிருந்த ஜமிக்கியும் அவளின் தலையசைவுக்கு ஏற்ப நடனமாடியது.

முட்டைக் கண்களை உருட்டி உருட்டி அவள் பேசுவது அவனுக்கு அத்தனை ரசனையாக இருந்தது.

இதற்குமுன் யாரையும் சூர்யா சைட்டே அடித்ததில்லை என்றால் அது பொய்.

நண்பர்கள் போல வெளிப்படையாக அதற்கென்று சேட்டை செய்துகொண்டு சுற்றாவிட்டாலும், வயதுக்கே உண்டான ஆர்வம் இருக்க சைட்டடிப்பான்தான்.

ஆனால் அதற்குமேல் காதல் என்றெல்லாம் ஆழமாக யோசித்ததில்லை. அதைதான் அன்று நண்பர்களிடம் கூறினான்.

அதை மாற்றி அமைக்கவே அவளை மனம் ரசிக்கிறதோ?

நண்பன் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன், தலையை உதறிக்கொண்டு அங்குச் சென்றான்.

அதன்பிறகு… ராபிட்டாக யாரையும் அழைத்து வேகமாக பலூன் ஊதுதல், கொடுத்த டைமுக்குள் அதிகமாக பலூனை வெடிக்க செய்தல், யூஸ் அண்ட் த்ரோ டம்ளரை வேகமாக கட்டிடம் போல அடுக்கி அதை மீண்டும் சேர்த்தல் என விளையாட்டு நடக்க, அனைவரும் சிரித்தவாறு பங்கு பெற்றனர்.

விளையாட்டு முடிந்ததும், ஜீவா, இந்த டிபார்ட்மென்ட் எப்படி, ஸ்டாஃப்ஸ் எப்படி, கோர்ஸ் எப்படி… என்றெல்லாம் கொஞ்சம் கிண்டலாக பேச,

ஹெச்.ஒ.டி மேம், “ஜீவா… ரெகார்ட் சைன் வாங்க எங்கிட்டதான் வரணும். ஞாபகம் இருக்கட்டும்.” என மிரட்ட, கப்பென்று அவன் வாய் மூடிக்கொள்ளவும், சிரிப்பு சத்தம் அறையை நிறைத்தது.

என்னதான் திட்டு, மிரட்டல் என்று வந்தாலும் அன்று மாணவர்களை என்ஜோய் செய்ய ஃப்ரீயாகவே விட்டனர்.

அதற்குமேல் பாட்டு போடப்பட சூர்யா பரத், ஜீவா, நந்து நால்வரும் இன்னும் சிலரோடு நன்றாக ஆட்டம் போட்டனர்.

ஓரமாக நின்று விசிலடித்துக் கை தட்டிக் கொண்டிருந்தவர்களையும், “வாங்கடா…” என்று இழுத்தவர்கள் உடன் சேர்த்துக் கொண்டனர்.

 

‘ஏத்தி ஏத்தி ஏத்தி

என் நெஞ்சில் தீயை ஏத்தி’

 

என்ற பாடலுக்கு சூர்யா போட்ட ஸ்டெப்ஸிற்கு விசிலும் கைத்தட்டலும் பறந்தது.

உற்சாகமாக நடனமாடும் அந்த வாலிபனை மகாவுமே தன்னையறியாது ஒருக்கணம் ரசித்துப் பார்த்தாள்.

ஏனோ அத்தனை பேர் அங்கு ஆட்டம் போட்டாலும், அவள் கண்களுக்கு சூர்யா மட்டும் ஃபோக்கஸ் வைத்தது போல தனியாக தெரிந்தான்.

கல்லூரி முதல்நாள் புன்சிரிப்போடு தன்னை கடந்து சென்றவனைப் பற்றி இடைப்பட்ட நாட்களில் சில விஷயங்கள் அறிந்திருந்தாள்.

அவன் பெயர், நன்றாக படிக்கும் மாணவன் மற்றும் அவர்களின் சீனியர் என்று இப்படியான தகவல்கள்.

ஜோவியலாக பேசும் அவனை பலருக்கும் பிடிக்கும். அனுவுமே சிலமுறை அவனை பற்றி எதேச்சையாக கூறியிருக்கிறாள்.

பாட்டு முடியவும் திரும்பியவன் கண்கள் அவனறியாமலே மகா இருந்த இடம் வர, பதறியவள் வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.

கல்லூரி முடியும் நேரமும் வந்துவிட ஆர்ப்பாட்டம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது. ஆனால் மனதில் உற்சாகம் நிறைந்திருந்தது.

அன்றைய கல்லூரி நாள் அழகாக நிறைவடைய மகிழ்ச்சியாக வீட்டிற்கு கிளம்பினர்.

 

தொடரும்…