தாழையாம் பூமுடித்து🌺5
தாழையாம் பூமுடித்து🌺5
5
“ம்மா… எதுக்குமா இப்ப இந்த ஏற்பாடு எல்லாம். திடுதிப்புனு கல்யாணம் முடிச்சு வந்திருக்கோம். உடனே இத எல்லாம் ஏற்பாடு பண்ணனுமா?” அடுப்படியில் இருந்த அன்னையிடம் ஈஸ்வரன் சடைத்துக் கொள்ள,
“டேய்… இதப்போய் உங்க அப்பத்தா கிட்ட கேளு. அவங்க தான் நல்லநேரம் பாத்து ஏற்பாடு பண்ண சொன்னது. எதனாலும் அங்க பேசிக்கோ.” என பதில் கூறிவிட்டு சிவகாமி சென்றுவிட,
“எதுக்கு… அப்பாவே இன்னும் எதுத்து பேசுனது இல்ல. என்னையப் போயி பேசச் சொல்றீங்க. இந்த வம்பே வேண்டாம்.” என முனங்கிக் கொண்டே, எதுவும் பேச முடியாமல் மாடியேறி சென்றான்.
“எல்லாம் நம்மகிட்ட தான் வாய்கிழிய பேசுதுக. அப்பத்தானா அப்பன்ல இருந்து அத்தனையும் வாலச் சுருட்டிக்கிட்டு அடங்கிப் போகுதுக.” என சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார் சிவகாமி.
சிவகாமிக்கு அப்பா கூடப் பிறந்த தங்கை தான் பேச்சியம்மா. பெரியவர், சின்னவருக்கு அடுத்து பிறந்த ஒற்றை பெண்வாரிசு.
இத்தனை வயதிற்குப் பிறகும் தவசி தாய்சொல் தட்டாத தனயன் தான். பேச்சியம்மா பேச்சே இறுதிமுடிவு குடும்பத்தில்.
சின்ன அண்ணன் மகள் சிவகாமியை மகன் தவசிக்கு பெண் கேட்டார் பேச்சியம்மா.
அது என்னவோ என்ன மாயமோ தெரியலங்க… வெளிநாட்டில் செட்டில் ஆனவர்களுக்கு தாய் நாட்டுப்பற்றும், வேறுவீட்டிற்கு வாக்குப்பட்டுப் போன பெண்களுக்கு தாய்வீட்டுப் பற்றும் கொஞ்சம் அதிகம் தான். மீண்டும் பிறந்த வீட்டொடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள ஏதாவதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பார்கள். அதற்கு வழி செய்வது தான் பிறந்த வீட்டோடு சம்பந்தம்.
சின்னவரும் மறுக்கவில்லை. தங்கையை கொடுத்த வீடொன்றும் லேசுப்பட்ட இடமுமில்லை. அதுவும் பெருங்கொண்ட குடும்பம் தான். நாட்டாமைக்காரர் குடும்பம். மறுப்பதற்கு காரணம் என்று எதுவும் இல்லை. தேடிப் போனாலும் தவசி மாதிரி மாப்பிள்ளை கிடைப்பது அரிது. ஆனால் ஒரு நிபந்தனை வைத்தார் தங்கை பேச்சியிடம்.
அந்நிய சம்பந்தம் எனில் தன்னால் உரிமையாகக் கேட்க முடியாது. தனக்குப் பின்னால் தனது சொத்துக்களை சிதறவிடாமல் கொண்டு செலுத்தும் திறமை தவசிக்கு உண்டு. தங்கை மகனே மருமகனாக வரும் பட்சத்தில் அடுத்த பெண்களுக்கும் பிறந்து வீட்டு ஆதரவும் கிடைக்கும் என யோசித்தார்.
ஆண்வாரிசு இல்லாத தனக்கு மகனை வீட்டோடு மாப்பிள்ளையாக அனுப்பி வைக்குமாறு சின்னவர் கேட்க, மறுக்க முடியாமல் சம்மதித்தார் பேச்சியம்மா. எப்படியோ பிறந்த வீட்டு சொந்தம் அற்றுப் போகக் கூடாது என நினைத்தார் அவரும்.
தவசியை வீட்டோட மாப்பிள்ளையாக அனுப்பி வைக்க பேச்சியம்மா சம்மதித்த போதும் சரி… அதே அம்மா தான், எம்பிள்ளைக்கு கௌரவம் தான் முக்கியம் என மீண்டும் அழைத்த போதும் சரி… மானம், ரோஷம் என கொடிபிடிக்கும் ஊரில் பிறந்த தவசியோ, அம்மாவிற்காக மறுக்காமல் ஒத்துக் கொண்டார்.
சின்னமாமன் எவ்வளவோ மன்றாடி மன்னிப்பு கேட்டும், “அம்மா சொல்லுச்சேனு தான், மறுக்க முடியாம வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதிச்சே மாமா. அம்மாவுக்கு விருப்பம் இல்லாத எடத்துல நான் இருக்க விரும்பல.” என கூறிவிட்டு குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்தவர்.
தந்தையே மறுத்துப் பேச முடியாத, அப்பத்தாவின் முடிவிற்கு, பேரன் மட்டும் மறுத்துப் பேசிவிடுவானா என்ன?
அவசர கல்யாணம் என கேள்விப்பட்டு வந்த சொந்த பந்தங்கள் கிளம்பி இருக்க, சித்திகளும், அவசரத்தில் வந்ததால் வேலை இருப்பதாகவும், பிள்ளைகளை மட்டும் விட்டுவிட்டு, மூன்றாம் நாள் விருந்திற்கு வருவதாகவும் கிளம்பி இருந்தனர். சில சொந்தங்கள் மட்டும் தங்கி இருந்தனர்.
மருமகளை அழைத்த பேச்சியம்மா, சாந்திமுகூர்த்தத்திற்கு, நேரம் பார்க்குமாறு கூற,
“அவங்கிட்டயும் கேட்டுக்கலாம் த்தே. ஈஸ்வரன் என்ன சொல்றானோ?” எனத் தயங்க,
“இதுல அவனக் கேக்குறதுக்கு என்ன இருக்கு. சின்னப்பிள்ளைக வெள்ளாம வீடுவந்து சேராது. பெரியவங்க என்ன பண்ணனுமோ அத நம்ம பண்ணனும். இப்ப இருக்கறதுக காலாகாலத்துல புள்ளைய பெத்து வளக்காம காலம்போன கடைசில பெத்துக்குதுக. பருவம் தப்பி பெய்யுற மழை வெள்ளாமைக்கு உதவாது. அதது காலாகாலத்துல நடக்கணும்.” என முடிவாகக் கூறிவிட, நல்ல நேரம் பார்த்து, அதற்கான ஏற்பாட்டை செய்தார் சிவகாமி.
இன்று எதிர்கால முன்னேற்றம், குறிக்கோள் என திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள், திருமணத்திற்குப் பிறகும், குழந்தை பிறப்பையும் தள்ளிப் போடுகின்றனர். இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று, இன்று ப்ளானிங்கில் தொடங்கி ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் முடிகிறது.
ஃபேமிலி ப்ளானிங் அந்தக்காலம். ஃப்யூச்சர் ப்ளானிங் இந்தக் காலம். அன்று குடும்பக்கட்டுப்பாடு. இன்று வெறும் கட்டுப்பாடு. ஆமாங்க… ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் இருக்கும் இடத்தில் குடும்பம் எங்கிருக்கிறது.
ஈஸ்வரன் யோசித்தது எல்லாம் சங்கரிக்காக. புது இடம். திடீர் திருமணம். சட்டென உறவுகளை விட்டு வந்திருக்கிறாள். உடனே அடுத்தகட்டம் என்றால், அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என யோசித்தான்.
“ஷ்ஷ்ஷ்… ஷ்ஷ்ஷ்…” என மாடிப்படி அருகில் சத்தம் கேட்க, என்னவென்று எட்டிப் பார்த்தான்.
யோசனையோடு மாடிப்படியேறி சென்றவனை, படிமறைவில் இருந்து, சௌந்தரபாண்டி ரகசியமாக அழைக்க,
“என்னடா மாப்ள? ரகசியமா யாரையோ கூப்பிட்ட மாதிரி கூப்புர்ற?” எனக் கேட்டுக் கொண்டே கீழே இறங்கி வந்தான்.
“மச்சா… இதப்பத்தி ஏதாவது தெரியுமாடா?” என கிசுகிசுப்பாக கேட்க,
“ஏன்டா மாப்ள கேக்க மாட்டே… எனக்கு பின்னால பொறந்துட்டு எனக்கு முன்னால அப்பனாகிட்டேங்குற மிதப்புல பேசுறியா?”
“இல்ல… அத்தை கிட்ட, இதெல்லாம் எதுக்குமானு கேட்டியா? ஸ்கூலுக்கு போற பையன் சினுங்குற மாதிரியே இருந்துச்சா… அதான், மச்சானுக்கு எதுவும் வெவரம் தெரியுமோ தெரியாதோன்னு டவுட் வந்துருச்சுடா.” என உதட்டை மடித்து சிரிக்க,
“டேய்… உனக்கெல்லாம் குசும்பு கூடிப்போச்சுடா.” என கழுத்தோடு சேர்த்து இழுத்து இறுக்கிப் பிடிக்க,
“அடேய் மச்சா, நான் புள்ளகுட்டிக்காரன் டா. என்னைய நம்பி உன் தங்கச்சி இருக்காடா.” எனக் கத்த,
“ஏன்டா கத்தி மானத்த வாங்குற. வந்தவங்க எல்லாம் ஹால்ல தான்டா தூங்குறாங்க.” என வாயையும் சேர்த்து பொத்தினான்.
“அது இல்லடா மச்சா. எட்டாவது படிக்கும் போதே… அந்த வைக்கப்படப்பு (வைக்கோல் போர்) சம்பவம் ஞாபகம் இருக்கா?” என கையைப் பிடுங்கி விட்டு கேட்க,
“டேய்… வேணான்டா… உன்னய கும்மப்போறே பாரு.”
“அதேதான்டா… அப்ப எதுக்கு உன்னைய கும்முனாங்கனே, தெரியாம அடி வாங்கினியே!!” எனக் கேட்டு சிரிக்க,
“வேண்டா…” என மச்சானின் கழுத்துப் பிடியை மேலும் இறுக்கினான்.
இன்று நினைத்தாலும் அந்த சம்பவம் எந்த அளவிற்கு அவமானமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு ஈஸ்வரனுக்கு சிரிப்பையும் வரவழைக்கும். புகைந்து கொண்டிருந்த குடும்பப் பிரச்சினை பெரிதாகி பிரிவதற்கும், வீட்டோடு மாப்பிள்ளையாக சென்ற தவசி மீண்டும் தனது குடும்பத்தோடு சொந்த ஊருக்கு திரும்புவதற்கும் வழி வகுத்த சம்பவமாயிற்றே.
“எதுக்கு அடிவாங்குறோம்னு புரியாமயே, அந்த வயசுல அடிவாங்கின ஆளாச்சே. அதான் இன்னும் மச்சான் வயசுக்கு வரலபோலன்னு நெனச்சேன்டா.” என சிரித்துக் கொண்டே கழுத்துப்பிடியை விலக்க போராட,
“டேய்… வேணா… கொன்றுவே ராஸ்க்கல்.” என மீண்டும் பிடியை இறுக்க,
“இல்லடா… தெரியலைனா… ஏதாவது சொல்லிக்கொடுத்து அனுப்பலாமேனு தான்…”
என இவர்கள் கலாட்டா செய்து கொண்டிருக்க, சத்தம் கேட்டு அருகில் இருந்த அறையை விட்டு வெளியே வந்தாள் தீபிகா. அவள் வருவதைப் பார்த்து, மச்சான்கள் விலகிக் கொள்ள,
“இன்னும் ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க?” என்க,
“சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் மா.” என்றான் சௌந்தரபாண்டி.
“நீங்க வாங்க! நேரங்காலம் தெரியாம வம்பளந்துட்டு இருப்பீங்க.” என கணவனை கடிந்து கொண்டு அழைத்து சென்றாள்.
“உங்களுக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா. அண்ணன, இப்ப எதுக்கு நிப்பாட்டிவச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க? ஒரு புள்ளைக்கி அப்பா ஆகப்போறீங்க. இன்னும் கொஞ்சங்கூட கூறுவாறு இல்ல.” என அறைக்குள் சென்று கணவனுக்கு தனி ஆவர்த்தனம் வாசிக்க,
“கூறுவாற எங்கடி முழுசா காமிக்க விட்ட. அதான் உங்க அண்ணனுக்கும் வெவரம் சொல்லி அனுப்புச்சே. என்னய மாதிரி அவசரப்பட்டுறாத மாப்ள. அப்புறம் இடுப்புல ஈரத்துணிய கட்டிக்கிட்டு தான் படுக்கணும்னு சொன்னே.”
“இப்ப, எதுல நீங்க அவசரப்பட்டீங்க.”
“ஏன்டீ, கல்யாணம் முடிஞ்ச அடுத்த மாசமே வாந்தி எடுத்துட்டே. ஆசை அறுபதுநாளும் முடியல. மோகம் முப்பது நாளும் தீரல. பக்கத்துல பிரியாணிய வச்சுக்கிட்டு பாத்துட்டே இருக்குறது எம்புட்டு கஷ்டம்னு எனக்குத்தான தெரியும்.”
“ஐயோ!!! கடவுளே!!! இந்த வெவரத்த தான் எங்க அண்ணனுக்கு சொல்ல நெனச்சீங்களா? கர்மம்... கர்மம்…” என தலையில் அடித்துக் கொண்டவள்,
“என்னமோ… இப்பவும் சும்மா இருக்குற மாதிரி தான்.” என புருஷனை நொடித்துக் கொள்ள,
“என்ன இருந்தாலும் பயந்து பயந்து பச்சப்புள்ளைக்கு முத்தம் கொடுத்த மாதிரில கொடுக்க வேண்டியிருக்கு. கார்த்திகை மாச ஐயப்பன் சாமியாட்டம், நான்வெஜ்க்கு வழியில்லையே. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா ஒரு வருஷமாவது குழந்தைய தள்ளிப் போட்டுருக்கலாம்.” என புலம்பியவனைப் பார்த்து, வயிற்றை தாங்கிப்பிடித்து, வாய்விட்டு சிரித்தவள்,
“அப்டி அப்டி பண்ணுனா… இப்டி இப்டி ஆகும்னு தெரியாதா பாண்டியா!!” என நமட்டுச் சிரிப்போடு கேட்க,
“ம்ம்ம்… நமக்கு வெவரம் பத்தலடி.” என சலித்துக் கொண்டவனிடம்,
“இந்த லட்சணத்துல எங்க அண்ணனுக்கு நீங்க வெவரம் சொல்லி அனுப்பறீங்களாக்கும். பேசாம வந்து படுங்க.” என கட்டிலில் ஏறி மெதுவாக சாய்ந்து படுத்தவள், கணவனை அழைக்க,
“வேற வழி. பேசாம தான் படுக்க வேண்டி இருக்கு.” என அலுத்துக் கொண்டவன், அருகில் படுத்துக்கொண்டான்.
மனைவியின் வயிற்றைத் தடவி பிள்ளையோடு பேச ஆரம்பிக்க, அது உதைத்து பதில் கூற, குடும்பஸ்த்தன் லட்சணத்தோடு உறங்கிப் போனான் சௌந்தரபாண்டி.
***********************
“இப்படியே எவ்வளவு நேரம் உக்காந்துட்டே இருக்கப் போற?” என ஷோபாவில் அமர்ந்து இருந்தவளைப் பார்த்து கட்டிலில் படுத்துக்கொண்டே கேட்டான்.
கீழே மச்சானின் கேலிப் பேச்சில் புன்னகையோடு உள்ளே வந்தவனுக்கு, அவனது அறை திடீரென திருமணக் கோலம் பூண்டு நிற்க, அங்கிருந்த அலங்காரங்களை பார்த்தவனுக்கு,
பாலிருக்கும்
பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில்
காற்று வரும் தூக்கம்
வராது
நாலு வகை
குணமிருக்கும்
ஆசை விடாது… என்ற பாடல் நினைவிற்கு வர தனக்குள் சிரித்துக் கொண்டான்.
‘டேய் அங்க அவ சந்திரமுகியா மாறி இருப்பா. உனக்கு பாலும் பழமும் கேக்குதா. லகலகலக… கேக்க வேண்டிய காதுக்குள்ள உனக்கு லாலி… லாலி… கேட்குதா?’ என மனசாட்சி மானாவாரியாகத் திட்டியது.
சிவசங்கரியோ கைகளைக் கட்டிக் கொண்டு ஷோபாவில் அமர்ந்திருக்க… சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டியவன், கைலிக்கு மாறினான்.
தட்டில் வைக்கப்பட்டிருந்த பழங்களைப் பார்த்தான். வாழைப்பழம் ஒன்றை எடுத்து உரித்து தின்றவன், பாலையும் எடுத்து குடித்து விட்டு, குளியலறை சென்று வந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி.
“என்ன பாக்குற? நாளைக்கு நம்ம சரித்திரத்த புரட்டிப் பாக்கும் போது, ஃபர்ஸ்ட் நைட்ல ஒரு பால் பழம் கூட சாப்புடலைனு எழுதியிருக்கக் கூடாது பாரு. அதுக்கு தான்.” என படுத்துக் கொண்டான்.
சங்கரி இன்னும் இடத்தைவிட்டு நகராமல் இருக்க, கையை தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்தவன்,
“வா!! வந்து படு!!” என அருகில் படுக்கையை தட்டி காமிக்க, முறைத்துப் பார்த்தவள் கண்களில் ஓராயிரம் கண்ணகி ஒட்டுமொத்தமாகத் தெரிந்தாள்.
“அம்மாடியோவ்.” என வாய்க்குள் முனங்கியவன்,
“இப்படியே விடியவிடிய உக்காந்துக்கிட்டே இருக்கப் போறீயா? என்னமோ எம்பக்கத்துலயே படுக்காத மாதிரியே பாக்குற?” எனக் கேட்க, சங்கரிக்கு வந்ததே கோபம். பத்ரகாளி அவதாரம் எடுத்தாள்.
“என்னாது!!! உம் பக்கத்துலயா? எங்க? எப்போ? என்ன… குடிச்சிருக்கியா? கண்டமேனிக்கி உளறிக்கிட்டு இருக்க? இல்ல… கனவுகினவு கண்டியா?” என தகரக் கொட்டகையில் விழுந்த திடீர் மழையாய் சடசடக்க,
“இரு… இரு… கூல்… இப்ப நான் என்ன சொல்லிட்டே. எதுக்கு இவ்வளவு ஆத்திரம்? கனவு காங்குற பழக்கமெல்லாம் இல்ல. சின்னப்பிள்ளையில லீவுக்கு வரும்போது தாத்தா வீட்ல எல்லாரும் ஒரே ரூம்ல, ஒன்னாத் தான படுத்து கெடப்போம். விடிஞ்சு பாத்தா யார்… யார் மேல கெடப்போம்னே தெரியாது.”
“அதுவும் இதுவும் ஒன்னா?” என எகிறிக் கொண்டு வர,
“இல்லையா? இப்ப என்ன பெருசா மாறிறுச்சு. அதான் ஐத்த மகனப் பாத்தா ஆசையும் வரல, வெட்கமும் வரலேனு சொல்லிட்டியே. அப்ப பக்கத்துல வந்து படுக்கறதுல உனக்கென்ன பிரச்சினை.”
“அத நீ சொல்றியா. நீ மட்டும் என்ன, ஆசப்பட்டா கல்யாணம் பண்ணின. அம்மாவோட ஆசைக்குனு கல்யாணம் பண்ணின நீயெல்லாம் அத சொல்லக் கூடாது. இந்தா… அடுத்து புள்ளகுட்டினு வந்தா தான் குடும்பம் சீக்கிரம் ஒன்னு சேரும்னு சொல்லி விட்டுருப்பாங்க. அதுக்கு தான இந்த ஏற்பாடெல்லாம்.”
“கரெக்டா பாய்ன்ட்ட புடிச்சுட்டியே. ஆனா ஒருவிஷயத்த மனசுல வச்சுக்கோ. சொந்தம் ஒன்னு சேரட்டும்னு கல்யாணம் பண்ணினேன் தான். அதுக்காக என்னால கடமையேனு எல்லாம் காதல் பண்ண முடியாது. அதனால தைரியமா வந்து பக்கத்துல படுக்கலாம். என்னால ஷோஃபால படுக்க முடியாது. நீயும் தான். எத்தன நாளைக்கு படுக்க முடியும் சொல்லு.”
“ஆமா, அது என்ன… போனாப்போகுதுன்னு விட்டுக் கொடுத்த மாதிரி சொல்றா?” என இவ்வளவு நேரமாக உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த மனக்குமுறலை வெளிப்படுத்த,
“யாரு?” என தெரியாத மாதிரி இவனும் கேட்க,
“நடிக்காத! உன் ஐத்த மகதான்.” என்றாள்.
“நெனச்சே… மலர் பேசும்போது உன் மூஞ்சிபோன போக்கதான் பாத்தேனே. அப்பவே எப்படியும் பஞ்சாயத்து வைப்பேனு தோணுச்சு.” என்றவன் எழுந்து, தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.
“இங்க பாரு… நமக்கு சொந்த பந்தம் அதிகம். அதுல முறைப்பொண்ணு, முறைப்பையனுக எல்லாம் இந்த மாதிரி கேலிகிண்டல்னு பேசிக்கறது சகஜம்.”
“அதுக்குனு, அடுத்து வாரம் வர்ற அவ நிச்சயித்துக்கும் வர்றேனு சொல்லுவியா? அசிங்கமா இல்ல.” என முகம் சுழிக்க,
“ஏன்… நீங்க சிட்டில எல்லாம், பாய்ஃப்ரெண்டுக்கு மேல, லவ்வருக்கு கீழன்னு பெஸ்ட்டினு ஒரு ரிலேஷன்ஷிப் சொல்றது இல்ல. இங்க மொறப்பையன் மொறப்பொண்ணு உறவுங்கறது, அதவிட ஒசத்தி. இன்னாரோட மொறப்பொண்ணுனு தெரிஞ்சாலே எவனும் அந்தப் பொண்ணு கிட்ட வாலாட்ட மாட்டான். அத்தை பொண்ணு, மாமன் பொண்ணுகளுக்கு கிராமத்துல அதுதான் பாதுகாப்பு. அதே பொண்ணுக்கு நிச்சயம் ஆகிட்டாலே போடிவாடின்னு கிண்டலா கூப்புட்ட மொறப்பையன் போம்மா, வாம்மானு மரியாதை கொடுக்க ஆரம்பிச்சுருவான். இந்த உறவுல, அக்கா தங்கச்சிகளுக்கும், அவங்களுக்கும் இடையில ஒரு நூலிழை தான் வித்தியாசம். விரசமில்லாதது. நீயும் வரப்போக இருந்திருந்தா இது புரிஞ்சிருக்கும். சிட்டில வளந்ததால உனக்கு தப்பா தெரியுது.”
“அப்ப திருவிழால உன்னைய உரசிட்டே திரிஞ்சாளே. அவ மனசுல ஆசை இல்லாமலா இருந்திருக்கும்?” எனக் கேட்டவளை கூர்ந்து பார்த்தான். அவளது கோபம் கண்டு, சிரிப்புதான் வந்தது ஈஸ்வரனுக்கு. இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமும் கூடவே வந்தது. அடுத்தவள் தன்னிடம் உரிமையோடு பேசுவது இவளுக்கு கோபத்தை வரவைக்கிறது எனத் தெரிய, அவனோ சிரிக்க, அவளோ முறைக்க,
“முறைப்பொண்ணுங்கறத மொறச்சுப் பாத்தே நிரூபிக்கிற. அப்ப… திருவிழால எங்கள நோட்டம் விட்டுட்டு தான் இருந்திருக்க?” என்க,
“நோட்டம் விடுற அளவுக்கு ஒழிவுமறைவாவா நடந்துச்சு. பப்ளிக்கா தானே உரசிட்டே திரிஞ்சா?”
“இப்பவும் சொல்றே… இந்த உறவு முறைகளெல்லாம் விரசமில்லாதது. சிட்டில வளந்த உனக்குப் புரியாது. அடுத்த வாரம் மலருக்கு நிச்சயம். பாத்து பேசு. ஆனாலும் உன்னோட பொசசிவ்னஸ் பாத்து சந்தோஷமா இருக்கு.”
“யாருக்கு பொசசிவ். எனக்கா… எனக்கா… அதுவும் உம்மேலயா… எனக் கேட்டுக் கொண்டே சந்திரமுகியாக மாறி, கட்டிலில் ஏறி அருகே வந்திருந்தாள்.
“ஆசையும், வெக்கமும் வரத்தேவையில்ல. கோபம் வந்தாலே ஐத்த மகன் பக்கத்துல வந்துருவ போலயே.” எனக் கேட்க, அப்பொழுதுதான் பேசிக்கொண்டே கட்டிலில் ஏறியிருப்பது புரிந்தது.
“இங்க பாரு, ரெண்டு பேருக்குமே திடீர் கல்யாணம் தான். ஆனா கட்டாயக் கல்யாணம் இல்ல. உன் சம்மதம் கேட்டு தான் நடந்துச்சு. அதனால மனசு ஒத்துப் போற வரைக்கும் தனித்தனியா இருப்போம்னு ஒருத்தர் தரையில, ஒருத்தர் கட்டில்லனு, ஆன்டிஹீரோ சீன்லாம் இங்க இல்ல. அடிச்சாலும், அணச்சுக்கிட்டாலும் நம்ம ரெண்டு பேரும் இந்த ரூமுக்குள்ள தான். புரியும்னு நெனக்கிறே. பேசாம படுத்து தூங்கு. டயர்டா தெரியற.” எனக் கூறிவிட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான். அவனையே பார்த்திருந்தவளும், இதையே தானும் யோசித்துக் கொண்டே, அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். எனினும் மனது ஆறவில்லை.
‘அதெப்படி கேட்டதும் சம்மதம் சொன்னோம். ஊர் ஆளுகள பேச்சுல மயக்குன மாதிரி நம்மையும் ஏதோ பண்ணிட்டான். அவன் சொல்வதும் சரிதான். எதுவாக இருந்தாலும் இங்கு தான் வாழவேண்டும். இதில் முரண்டு பண்ணி யாருக்கு லாபம்? இதில் முரண்டு பண்ண என்ன இருக்கு? அந்த திருமணமாவது அப்பா முடிவு செய்தது. விறுப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. ஆனால் இந்த திருமணம் அவள் சம்மதத்தோடு தானே நடந்தது.
பிறகு என்னை தடுப்பது எது? ஊர்முன் வைத்து மறுக்க முடியாமல் செய்த திருமணமா? என யோசனை ஓட, மனதிற்குள் சட்டென ஒரு சந்தேக எண்ணம் தோன்றியது. வேகமாகத் திரும்ப, திரும்பியவளுக்கோ பக்கென்றானது.
ஏனெனில் முதுகு காட்டி படுத்திருந்தவன், திரும்பி படுத்து இவளைத் தான் பார்த்திருந்தான்.
“இப்ப என்ன சந்தேகம்?” என, தன்னை வெறித்துப் பார்த்தவளை கேட்க, பட்டென சுதாரித்தவள்,
“எனக்கு சந்தேகம்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.
“அதுதான் நீ நகம் கடிக்கறது, எலி நெல்ல கொறிக்கிற மாதிரி நல்லா கேக்குதே. இன்னும் இந்த பழக்கத்தை விடலியா? கேக்க வந்தத கேளு.” என்க, எழுந்து அவனுக்கு கால்பக்கமாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்நு கொண்டாள்.
“உங்க அம்மா தான்…” என ஆரம்பித்தாள். இவன் உற்றுப் பார்க்க,
“சரீஈஈஈ…” என அடிக்குரலில், அரற்றியவள்,
“அத்தை தான் மருமகளுக்குனு நகை கொடுத்து விட்டாங்க. நீ என்ன தைரியத்துல தாலி வாங்கிட்டு வந்த. ஏன்னா, தாலிய கல்யாணம் முடிவாகாம செய்ய மாட்டாங்கள்ல. நான் சம்மதிக்கலைனா என்ன பண்ணியிருப்ப?” என ஆகப் பெரிய சந்தேகத்தை கிளப்பினாள்.
ஏனெனில் கல்யாணத்திற்கு என்று எத்தனை நகை எடுத்து வைத்தாலும் தாலி என்பது மட்டும் திருமணம் முடிவானபிறகு தான் செய்வார்கள். அது குறித்து சங்கரியும் கேட்க, அவளையே வலக்கையை தலைக்குக் கொடுத்து, படுத்தவாறு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் ஒன்னு சொல்லவா?” என்க,
“ம்ம்ம்.” என்றாள்.
“என்னைத்தவிர, வேறொரு அத்தை மகனோ, மாமன் மகனோ வந்து, இதே மாதிரி பொண்ணு கேட்டிருந்தா நீ நிச்சயமா சம்மதம் சொல்லியிருக்க மாட்ட.” என ஆணித்தரமாக கூறியவனை வியப்பாகப் பார்த்தாள்.
அவளும் அதைத்தானே யோசித்தாள். இவனுக்கு மட்டும் எப்படி சம்மதித்தோம் என்ற யோசனை தானே அவளுக்குள்ளும் ஓடிற்று. இருந்தாலும் ஒத்துக் கொள்ளத்தான் மனம் வரவில்லை.
“ரொம்ப தான் கான்ஃபிடன்ட் உனக்கு. சின்னப் பிள்ளைல ரெண்டு பேத்துக்குமே ஆகாது. நீ எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?”
“இன்னைக்கி மலர் உன்னைய கிண்டல் பண்ணப்ப நீ கோபப்பட்டத பாத்தா, எனக்கு சின்ன வயசு சிவா தான் ஞாபகம் வந்தா. ஏன்னா, அவளுக்கும் எங்கிட்ட யாரு வந்து பேசினாலும் பிடிக்காது. அவங்கள விட்டுருவா. எங்கிட்ட தான் சண்டை போடுவா.” என்றவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள்.
ஒரு கையை தலைக்குத் கொடுத்து பள்ளிகொண்டு படுத்திருக்க, மீன் டாலர் வைத்த கழுத்துச் சங்கிலி, மடக்கிய கையின் திரண்ட புஜங்கள் மீது சரிந்து கிடக்க, பனியனால் மறைக்க முடியாத வெற்று மார்பில், முடிகள் சுருட்டி நிற்க, அவனது கால்பக்கமாக அமர்ந்திருந்தவள், படுத்திருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ம்ம்க்க்கும்ம்ம்.” என தொண்டையைச் செறும, சட்டென பார்வையை மாற்றிக் கொண்டவள்…
“டீசர்ட் எல்லாம் போட மாட்டியா? இப்படி வெறும் பனியனோட படுத்துட்ட.” என முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு கேட்க,
“நீ இருக்கேங்குறதுனால தான் இதையாவது போட்டிருக்கே. இல்லைனா ஐயா ஃப்ரீயாத்தா படுப்பே.” என்றான் அவளது தடுமாற்றத்தை ரசித்தவாறு.
“ஐயே… ச்ச்சீ.” என முகம் சுழிக்க,
“என்ன ச்ச்சீ. பனியன் இல்லாம படுப்பேன்னு சொல்ல வந்தே. நீ ஓவரா எல்லாம் கற்பனை பண்ணாத.” என சிரித்துக் கொண்டே கூற, வேகமாகத் திரும்பி படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழிந்தது. பக்கத்தில் அவள் புரண்டு புரண்டு படுப்பது தெரிந்தது. அவனும் கண்களை இறுகமூடி படுத்தும் பார்த்தான். அதற்கு மேல் முடியாமல் எழுந்தவன், அவளைத் தட்டி அழைக்க, என்னவென்று திரும்பிப் பார்த்தாள்.
“என்னாச்சு… ஏன் பொறண்டுக்கிட்டே இருக்கே? இந்த வளையல், கொலுசு சத்தத்துல என்னால தூங்க முடியல.” என்க, (உண்மையைத்தாங்க சொன்னான்)
அவளும் எழுந்து கொண்டாள்.
“எனக்கு சேலையோட படுத்து பழக்கம் இல்லை. அதான் தூக்கம் வரமாட்டேங்குது.”
“நீயும் என்னமாதிரித்தானா?”
“உன்ன மாதிரினா?
“ஃப்ரீயா படுப்பியான்னு கேட்டே?”
“என்னாது..” என்று குரலை உயர்த்த,
“அம்மா தாயே!!! சாமியாடிறாத. ஸ்லீவ்லெஸ் மாதிரி ஃப்ரீ ட்ரெஸ்ல படுப்பியானு கேக்க வந்தே.”
“ஸ்லீவ்லெஸ்ஸெல்லாம போட விடமாட்டாங்க. நைட் ட்ரெஸ்ல படுத்தே பழகிருச்சா. அதான் சேலையோட தூக்கம் வரல. எங்க அவுந்துருமோன்னு பயமா இருக்கு.” என்றவளை பார்த்து வாய்விட்டு சிரித்தான்.
“ஃபர்ஸ்ட் நைட்ல சேல அவுந்துருமோனு பயப்பட்ட ஆளு நீயாத்தான் இருப்பே. அதான் சேலையே அவமானப்பட்டு உன்னய தூங்க விடமாட்டேங்குது போல.” என எழுந்தவன், தனது கபோர்டைத் திறந்தான். அதிலிருந்த தங்கையின் நைட்டி ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
“இந்தா… தீபியோடது. கல்யாணத்தப்ப நெறைய ட்ரெஸ் எடுக்கவும், எடம் பத்தாம கொஞ்ச ட்ரெஸ்ஸ அம்மா இங்க வச்சிட்டாங்க. போட்டுட்டுப் படு. நாளைக்கி கடைக்கிப் போயி உனக்கு தேவையானதெல்லாம் வாங்கிக்கலாம்.” என்று கொடுத்தான்.
வாங்கியவள் அப்படியே நிற்க,
“இப்ப என்ன?” என்றான்.
“மாத்த வேண்டாமா? இங்கேயே நின்னா எப்படி? இல்ல… எம்முன்னாடி சின்னபுள்ளையில ட்ரெஸ் மாத்தினது இல்லையா? ஆத்துல ஒன்னா குளிச்சது இல்லியானு கேக்கப்போறீயா?” என்றவளை ஒரு கணம் புன்னகையோடு ஆழப்பார்வை பார்த்தவன்,
“ம்ம்கூம்ம். நா… அப்படி கேக்கணும்னு நெனைக்கல. ஆனா, நீ எதையும் மறக்கலைனு மட்டும் நல்லா தெரியுது.” என அமைதியாக கூறிவிட்டு பால்கனி பக்கமாக சென்றுவிட்டான்.
நைட்டியை மாற்றிவிட்டு படுத்தவளுக்கு, இந்த வருட திருவிழா ஞாபகங்கள் கண்ணுக்குள் களைகட்டியது.