தாழையாம் பூமுடித்து🌺6
தாழையாம் பூமுடித்து🌺6
6
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா
குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்…
ஊர்ச்சாவடியில் கட்டிய ரேடியோ குழாயில் பாட்டு காதுசவ்வு கிழிய கத்திக் கொண்டிருக்க,
ஊரே… சீவி சிங்காரித்து திருவிழாவிற்கான அரிதாரம் பூசிக்கொண்டிருந்தது.
இளந்தாரிப் பையலுகள் எல்லாம் திடீரென கொம்பு சீவிய காளைகளாக துள்ளிக்கொண்டு உலா வந்தனர். இளஞ்சிட்டுப் பெண்கள் எல்லாம், தன்சோட்டுப் பெண்டுகளோடு சேர்ந்து சேலையா, தாவணியா, சுடிதாரா என மூன்று நாட்களுக்கான, ஆடை ஆபரணத் தேர்வில் இறங்கினர்.
வெளியூர் பிழைக்க சென்றவர்களும், வாக்குப்பட்டுப் போன பெண்களும், அழைப்பு விடுக்கப்பட்ட சொந்த பந்தங்களும் குடும்பம் குடும்பமாக வரத் துவங்கி இருக்க…
“வாடீ!!! இப்பத்தா வர்றீகளா? நல்லாயிருக்கியா?” எனத் தெரிந்த முகங்களின் வரவேற்பையும், விசாரிப்பையும் ஒருசேர வீதியிலேயே நடத்திவிடும் ஊர் மக்கள். இது பஸ்ஸைவிட்டு இறங்கியது முதல் வழிநெடுக வீட்டிற்குள் நுழையும் வரை தொடரும்.
ஊர் மத்தியில் இருந்த கோயில் முன் அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் நஞ்சாங்குஞ்சான்கள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்க, விழாக் கமிட்டி உறுப்பினர்கள் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பதினைந்து நாள் சாற்று (அறிவிப்பு). அதாவது திருவிழா பதினைந்து நாட்களுக்கு முன்னமே தலையாரியால் பறைசாற்றி அறிவிக்கப்படும். அன்றிலிருந்து ஊரில் அனைவரும் சுத்தபத்தமாக இருந்து கொள்ளவேண்டும். சில ஊர்களில் எட்டு நாள் சாற்றுதல் இருக்கும். முன்பெல்லாம் இருபத்தியொரு நாள் சாற்று. இருபத்தியொரு நாட்கள் விரதம் கடைபிடிக்க முடியாது என அவசரயுகத்திற்கு தகுந்தவாறு எட்டு நாட்களாக குறைந்துள்ளது.
மூன்று நாள் திருவிழா. செவ்வாய்கிழமை தொடங்கி வியாழக்கிழமை அம்மன் பூஞ்சோலை சென்று விடும்.
குலசாமி கும்பிடு என்பது இரத்த உறவு கொண்ட, ஒரு குறிப்பிட்ட பங்காளி வகையாறாக்களுக்குள் தனித்தனியாக நடப்பது. ஊர்த்திருவிழா என்பது ஊரில் உள்ள அத்தனை இனத்தினருக்கும் பொதுவானது. ஊரில் ஒரு குடும்பம் சாமிக்கு வரிக் கொடுத்துவிட்டாலே அவர் அந்த ஊர்க்காரர் ஆகிவிடுவார்.
காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன், மற்றும் முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் ஊர்ப்பொது தெய்வங்களாக இருக்கும்.
பங்குனி, சித்திரை, வைகாசி இந்த மூன்று மாதங்களில் ஏதாவது ஒருமாதம் எல்லா ஊர்களிலும் திருவிழா கண்டிப்பாக நடைபெறும்.
முத்தாலம்மன் திருவிழா மட்டும் புரட்டாசி மாதம். சாமி பூஞ்சோலை செல்லும்பொழுது எப்படியும் மழை பெய்யும். சாஸ்த்திரத்துக்காவது ரெண்டு தூறல் கட்டாயம் போடும்ங்க. மற்ற அம்மன் சிலைகள் எல்லாம் கிணற்றிலோ, குளத்திலோ கரைக்கப்படும். ஆனால் முத்தாலம்மன் சிலை மட்டும் மழை பெய்து தான் கரையும்.
டிய்ங்ங்ங்ங்… என பித்தளை அண்டாவை கம்பியால் தட்டியது போல் ஒரு சத்தம் காற்றில் திடீரென ஓங்கி ஒலிக்க, அதைத்தொடர்ந்து,
“ஹலோ… ஹலோ… ஹலோ… மைக்டெஸ்ட்டிங், மைக்டெஸ்ட்டிங்… எனும் சத்தம் காற்றில் கலந்து எதிரொலித்தது.
“காலையில் காடு சென்று, மாலையில் வீடு திரும்பும் விவசாய குடிப்பெருமக்களே!!!
பெண்களுக்கு குங்குமப்பொட்டு!!
சீர்வரிசைக்கு தாம்பூலத்தட்டு!!
இன்னிசைக்கு கிராமஃபோன் இசைத்தட்டு!!
ஒலிஒளி அமைப்பிற்கு உங்கள் அங்காளம்மன் மைக் செட்டு!!!” என தனக்குத் தெரிந்த எதுகை மோனையைப் போட்டு ஒலிஒளி அமைப்பினர் தங்களை விளம்பரப் படுத்திக் கொண்டு,
“சீரும்சிறப்பும் மிக்க நமது ஊரில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற இருப்பதால் ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் திருவிழாவை சிறப்பித்துத் தருமாறு திருவிழா குழுவினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என அறிவித்து முடிக்க, விழா கமிட்டி உறுப்பினர் ஒருவர் மைக்கை வாங்கினார். விரலால் ரெண்டு தட்டுதட்டி மைக்கை சோதித்தவர், ஊஃப்ப் என ஊதியும் கேட்குதா என சோதனை செய்ய,
“இப்பதான மாமா பேசிட்டுக் கொடுத்தே. அதெல்லாம் நல்லா கேக்கும் பேசுய்யா.” என மைக்செட்காரர் கூற,
“ஏம்ப்பா!!! வரி கொடுக்காதவங்க எல்லாம் வரிய கொண்டு வந்து கொடுங்கப்பா. எத்தனதடவ நடக்க வைக்கிறீங்க. கொடுக்கலைனா, கொடுக்காதவங்க பேர எல்லாம் மைக்ல அறிவிக்க சொல்லிட்டாங்கப்பா. அப்புறம் வர்ற சொந்த பந்தம் முன்னால அசிங்கமாப் போயிரும். கொண்டுவந்து வரியக் கொடுங்கப்பா. ஏலேய்… செவனாண்டி உனக்கெல்லாம் என்ன கொறச்சேனு, இன்னும் நீ கூட வரி கொடுக்காம இருக்க?” என ஒரு பெயரையும் அறிவித்து சாம்பிள் காட்டப்பட்டது.
“ஏய்யா… இன்னும் வரி குடுக்கலியா? கொடுத்த காச என்ன பண்ணுன. வச்சு சீட்டாடிட்டியா?” என செவனாண்டி வீட்டில் கச்சேரி ஆரம்பித்தது.
“நாளைக்கி நூறுநாள் வேலைக்கி போகையில எல்லா பொம்பளைகளும் இதத்தான் சொல்லிக் காட்டுவாளுக. ஒழுங்கு மரியாதையா கொண்டுபோயி வரியக் கொடுக்கல, வீட்டுக்குள்ளயே நுழையக்கூடாது சொல்லிட்டே. சாமிகும்பிடு முடியட்டும். அந்த மாமன பேசிக்கிறே. ஊருக்கு எளச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டிங்கற மாதிரி உம்பேருதான் முதல்ல தெரிஞ்சுதா? மத்தவங்க பேரு தெரியலியா?” என செவனாண்டி மனைவி வேப்பிலை இல்லாமலே புருஷனையும், அறிவிப்பாளரையும் சேர்த்து மந்திரித்துக் கொண்டிருந்தார். சிறப்பான சம்பவம் திருவிழா முடியவும் நடைபெறும் போல.
இப்பொழுதெல்லாம் ஊர்ப்புறணி அரங்கேறும் இடம் தண்ணிக்கெணறோ, மந்தைக்காடோ இல்லைங்க. நூறுநாள் வேலை நடக்கும் வாய்க்கால் வரப்பும், கண்மாய் கரையும் தான்.
கற்பூர நாயகியே கனகவள்ளி
கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா
கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா…
என, எது மாறினாலும் மாறாத எல்.ஆர்.ஈஸ்வரியின் கணீர் குரலோடு திருவிழா ஆரம்பம் ஆகியது.
“ப்பா… காதே அடைக்குது. வேண்டாம்னும் மறுத்து சொல்ல முடியல. வீட்டு முன்னாடி இருக்குற போஸ்ட்டு கம்பத்துல வந்து கொழாய கட்டிட்டுப் போய்ட்டாங்க.” என, தான் பேசுவது மற்றவர்களுக்கு கேக்காமலும் மற்றவர்கள் பேசுவது தனக்கு கேக்காமலும் அலுத்துக் கொண்டிருந்தார் திலகவதி.
இந்த வருடம் பேரன் பேத்திகளோடு திருவிழாவிற்கு வந்திருக்கிறார். பெரியவர் இருந்தவரைக்கும் திருவிழா என்றதும் அனைவரும் குடும்பத்துடன் வந்துவிடுவர். அவருக்கு ஊர்ப்பற்றும், இனப்பற்றும் அதிகம். அதனால் தான் வசதி முன்னபின்ன இருந்தாலும் பரவாயில்லை என மூத்த மகன் சக்திவேலிற்கு கயல்விழியை மணம் முடித்தார். தன் இனத்தின் உள்பிரிவுகளில் கூட பெண் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். எனக்கு காசு பணம் முக்கியம் இல்லை, சாதிசனம் தான் முக்கியம் என்ற பெருந்தன்மை கொண்ட மனிதர். யாரைப்பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களது தாத்தாவின் பெயரை விசாரித்துத் தெரிந்து கொள்வார். ஏனெனில் மூன்றாம் தலைமுறை ஆட்களின் பெயர்களின் பின்னால் கண்டிப்பாக இனத்தின் பெயர் இருக்கும். அவ்வளவு இனப்பற்று அவருக்கு
அவருக்குப் பிறகு, மகன்கள் சக்திவேலும், முத்துவேலும் திருவிழா எனில் வரியை கொடுத்துவிட்டு மூன்றாம் நாள் மட்டும், பெயருக்கு திருவிழாவிற்கு வந்து சென்று விடுவர்.
இந்த வருடம் வந்தது, சிவசங்கரியின் பிடிவாதத்தில்.
இத்தனை வருடங்களாக படிப்பை காரணம் காட்டி பிள்ளைகளை அழைத்து வந்ததில்லை. இந்த வருடம் படிப்பை முடித்து விட்டாள்.
அடுத்து என்ன… திருமண ஏற்பாடு தான். சங்கரியின் பெரிய மாமன் தங்கராசு சில சம்பந்தங்களை கொண்டு வந்தார்.
திருமணப் பேச்சு என்றதும் மனதில், ஏனென்று புரியாமல் இனம்புரியாதொரு அழுத்தம், சிவசங்கரிக்கு. இத்தனை நாட்களாக இல்லாத ஏதோ ஒன்று மனதை முனுமுனுவென அரித்துக் கொண்டிருப்பது போல் உணர்வு. சரியாகப் புரியவில்லை. அப்பொழுதுதான் ஊர்த்திருவிழாவிற்கு, திருவிழா கமிட்டியிலிருந்து வரிக்கேட்டு ஃபோன் செய்தனர். வருடாவருடம் நடப்பது தான்.
“அப்பத்தா! இந்த வருஷம் ஊர்த்திருவிழாவுக்கு எல்லாரும் போகலாம். எப்படியாவது பேசி அப்பாகிட்ட சம்மதம் வாங்குங்க.” என திலகவதியிடம் வந்து நின்றாள். அது ஏனோ நேரிடையாக அப்பாவிடம் பேசிப் பழக்கமில்லை.
“உங்க அப்பங்கிட்ட என்னைய பேசச் சொல்றியா? நாம்புடுச்ச முயலுக்கு மூனே காலுன்னு நிக்கிற ஆளு. அவனா முடிவு பண்ணினாத்தான் உண்டு. நாமலா கேட்டோம்னா வேண்டாம்னு தான் சொல்லுவான்.” என சடைத்துக் கொள்ள
“போங்க அப்பத்தா… உங்ககிட்ட சொன்னத, அம்மாச்சி கிட்ட சொல்லியிருந்தா சம்மதம் கெடச்சிருக்கும். அவங்க இல்லாம நம்ம மட்டும் போகலாம்னு தான் உங்கள பேசச் சொன்னது.” என சலுகையாக அப்பத்தாவிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.
“என்ன பண்றது? உங்க தாத்தா போனதுக்கு பின்னால, தலைக்கு மேல வளந்த பிள்ளைக பேச்ச தட்டிப் பேசக் கூடாதுனு மரியாதை கொடுத்து ஒதுங்கிப் போனது, மத்தவங்களுக்கு சாதகமாப் போச்சு. இருக்க கொஞ்சம் எடத்தக் கொடுத்தா, மடத்தையே புடுச்சுட்டாங்க.” என மகன்கள் தனது எல்லைவிட்டு விலகிப் போனதை நினைத்து அங்கலாய்த்துக் கொண்டார்.
பெரும்பாலும் பெண்பிள்ளைகளிடம் வரும் ஒட்டுதல் திருமணத்திற்கு பிறகு ஆண்பிள்ளைகளிடம் தாய்மார்களுக்கு வருவதில்லை. குடும்பத்தலைவனாக பார்த்து ஒதுங்கிப் போய்விடுவதாலா என்றும் புரியவில்லை. ஆனால் அதுவே பெண்குழந்தைகள் என்றால் எப்பொழுதும் போல, “அவளுக்கு என்ன தெரியும்? சின்னப்பிள்ளை.” என்ற டயலாக் தான் வரும் அம்மாக்களிடம் இருந்து.
திலகவதியும் அதுபோல் பெரிய மகனிடம் இருந்து சற்று ஒதுங்கி விட்டார். எதுவாக இருந்தாலும் சின்ன மகனிடம் பேசிக்கொள்வதொடு சரி.
இப்பொழுதும் சின்னமகன் முத்துவேலிடமே ஆலோசனை கேட்க,
“போயே ஆகணுமா?” என்க,
“சங்கரி ஆசப்படுறா. நம்ம வீட்ல இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போறா?” என சின்னமகனின் பலவீனம் தெரிந்து கொக்கி போட, அவரும் பார்த்துக் கொள்வதாக கூறிச் சென்றார். சின்னமகனின் செல்லப் பெண் ஆயிற்றே. மகள் ஆசைப்பட்டால் மறுப்பாரா என்ன?
காலை உணவு வேளையின் போது அனைவரும் டைனிங் ஹாலில் கூடியிருக்க,
“அண்ணே! இந்த வருஷம் பிள்ளைகளோட திருவிழாவுக்கு போகலாம்னு இருக்கே!” சம்மதம் கேட்காமல் முடிவாக, தகவல் கூறினார். அவர் எப்பொழுதுமே அப்படித்தான். முடிகவாகத்தான் கூறுவார். அண்ணனிடம் எதிரில் நின்று பேசும் ஒரே ஆளும் அவர்தான். அண்ணன் மறுத்தும் பேசமாட்டார் என்றால் அது தம்பியின் பேச்சிற்கு மட்டும் தான்.
மனைவி கயல்விழியின் பேச்சிற்கும் மறுப்பு இருக்காது என்பது வேறு விஷயம். தன் இனத்திலேயே, அவரது வகையறாக்கள் பெண்ணெடுத்த வகையில், கயல்விழி கொஞ்சம் கூடுதல் அழகு. ஆஸ்த்தியும் அந்தஸ்த்தும் இவர்களிடம் இருக்க, அழகோடு மனைவியும் கிடைக்க, முதலில் ஒற்றை, அடுத்து இரட்டை என பிள்ளைச்செல்வமும் கிடைக்க, எதிலும் எனக்கு குறைவில்லை என்ற கர்வம் எப்பொழுதுமே சக்திவேலிற்கு உண்டு.
“இது என்ன குலசாமி கும்பிடா. குடும்பத்தோட போறதுக்கு. ஊர்த்திருவிழா தான, மூனா நாள் யாரோ ஒருத்தர் போயி அர்ச்சனை பண்ணிட்டு வந்தா பத்தாதா?” என சக்திவேலும் விளக்கம் கேட்க,
“சிவாவுக்காக அம்மா ஏதோ வேண்டுதல் வச்சுருக்காங்களாம். கல்யாணம் முடிவாகறதுக்கு முன்னால அத முடிக்கணும்னு சொல்றாங்க. எல்லாருமே போகலாம்.” என அண்ணனையும் ஊருக்கு அழைக்க,
“எனக்கு வேல இருக்கு முத்து. நீ வேணும்னா எல்லாரையும் கூட்டிட்டு போ. நான் வேல முடிஞ்சுட்டா மூனா நாள் வர்றே. இல்லைனா நீங்களே பாத்துட்டு வந்துருங்க.” என்க,
“சித்தப்பு.” என மெதுவாக சித்தப்பாவின் காதைக் கடித்தாள்.
என்னவென்று சைகையால் கேட்க, “நம்ம மட்டும் தான் போகணும். அம்மாச்சி குடும்பம் எல்லாம் வரக்கூடாது.” என கிசுகிசுத்தாள்.
இவர்கள் எங்கு சென்றாலும் ஒட்டுப்புல்லாக அவர்களும் தொற்றிக் கொள்வார்கள் எனத் தெரியும்.
பிள்ளைகள் பெரிய பெண்கள் ஆகும் வரைக்கும் பெரிய மாமன் குடும்பம் இவர்களோடு இதேவீட்டில் தான் இருந்தார்கள். சங்கரிக்கும் இரண்டு தாய் மாமன்கள். பெரியமாமன் தங்கராசு. சின்னமாமன் தண்டபாணி. சின்னமாமன் தானுண்டு தன் குடும்பம் உண்டு என ஒதுங்கிக் கொண்டார்.
பெரிய மாமன் தான் இவர்களுடனே ஒட்டிக் கொண்டது.
சிலருக்கு தனது வலது கையாக, தான் எது சொன்னாலும் சரி என ஜால்ரா தட்ட, சிலரை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அந்த வகையில் மச்சானுக்கு காவடி தூக்குவதில் பெரிய மாமன் தங்கராசு கில்லாடி. எனவே பெரிய மச்சினனை பிடித்துப் போயிற்று சக்திவேலிற்கும்.
சங்கரி பிறந்த மறுவருடமே, கயல்விழிக்கு இரண்டாவது கரு தங்கிவிட, அதுவும் இரட்டை குழந்தைகள் எனத் தெரிந்ததும், மகளுக்கு உதவி என முதலில் அம்மா வந்தார்.
மகன்களுக்கு தொழில் எதுவும் கைகொடுக்கவில்லை எனக்கூறி, மகன்களையும் உடன் அழைத்துக் கொண்டார். சின்ன மகனும், மருமகளும் இவர்களது ஸ்கூலிலேயே வேலை பார்க்க, தனியாக ஒதுங்கிக் கொண்டனர். அவர்களுக்கும் ஆண் ஒன்று. பெண் ஒன்று என இரண்டு பிள்ளைகள். ஆனால் பெரிய மாமன் குடும்பம் மட்டும் மச்சினனுக்கு கூஜா தூக்கிக் கொண்டு இவர்கள் வீட்டிலேயே குடும்பத்தோடு தங்கி கொண்டனர். சக்திவேலிற்கும் அந்த நேரத்தில் அல்லக்கை தேவைப்பட உடன் வைத்துக்கொண்டார். அவர்களுக்கும் சந்துரு என ஒரு மகன். பிள்ளைகள் பெரிதாகவும் தான் தனியாக வீடு பார்த்து வைத்தனர். அதுவும் முத்துவேலின் கட்டாயத்தில் தான்.
ரெங்கநாயகி பெயருக்கு தான் மகன் வீடு என்று சென்று வருவார். ஆனால் எப்பொழுதும் இருப்பது மகள் வீட்டில் தான். மருமகளுக்கும் இவருக்கும் ஆகாது.
தன் பேச்சிற்கு மறுத்துப் பேசாமல், தான் சொல்வது தான் சரி எனத் தலையாட்டும் மாமியாரும், பெரிய மச்சினனும் சக்திவேலிற்கு உசத்தியாகத் தெரிந்தனர்.
தன்னைச் சுற்றி நாலுபேர் நம்மை பெருமையாகப் பேசிப் புகழ்ந்து கொண்டிருந்தால் குளுகுளுனு தானே இருக்கும். அதுவும் ஒரு வகை போதை மாதிரிதான். அரசர்கள் எல்லாம் புகழ்ந்து பாட புலவர்களை வைத்திருப்பது போலத்தான். அதனால் எங்கு இவர்கள் குடும்பம் கிளம்பினாலும் அவர்கள் குடும்பமும் சேர்ந்தே கிளம்பும்.
“சரி ண்ணே! அப்படினா ரெண்டு நாள் முன்னாடியே போகணும். வீடு பூட்டியே கெடக்கு. சுத்தம் பண்ணனும். திருவிழா நேரத்துல அவங்கவங்க வீட்ல வேல இருக்கும். ஆளு கெடைக்கிறது கஷ்ட்டம்.” என்க,
“நாங்க வரல. நீங்க மட்டும் போயிட்டு வாங்க.” என ரெங்கநாயகி கழன்று கொண்டார். அவருக்கு உடம்பு வளையாது. அதனால் தான் ஒவ்வொரு வேலைக்கும் என தனித்தனியாக வேலையாட்கள் இருக்கும் மகள் வீட்டிலேயே, இரட்டை பேரன் பேத்திகளை காரணம் காட்டி டேரா போட்டுவிட்டார்.
“நீங்க எங்கிட்டோ போங்க. என்னைய தொல்லை பண்ணாம இருந்தா சரி.” என பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்ட தந்தையாக மனைவி மக்களை தண்ணீர் தெளித்து விட்டார் ரெங்கநாயகியின் கணவர். ஏனென்றால் அவரது கட்டுப்பாட்டிற்கு பெரிய மகனும் மனைவியும் அடங்கவில்லை. பொண்ணு கொடுத்த வீட்ல போயி தங்குவது சரியில்லை என பலமுறை சொல்லிப் பார்த்துவிட்டார். கேட்டபாடில்லை. தண்டபாணி மட்டுமே அப்பாவின் சொல்லுக்கு சற்று செவிமடுப்பார்.
தாயைப்போலவே மகள் கயல்விழியும். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள அம்மாவும், அண்ணன் குடும்பமும் வர, அவரும் சொகுசு கண்டுகொண்டார். தங்கராசின் மனைவி சுந்தரிக்கு தான் அவ்வப்பொழுது தன்மானம் தலை தூக்கும். வேறுவழியின்றி பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போவார். தன்வீட்டில் இருக்கும் குடும்பம் என்று அண்ணியையும் மதிக்காமல் கயல்விழி, அதிகாரம் தான் செய்தார்.
அவர்களைப் பற்றி தெரிந்தே, அங்கே போய் வேலை பார்க்க வேண்டும் என முத்துவேல் கூற, ரெங்கநாயகி மறுத்துவிட, கயல்விழியும் மூன்றாம் நாள் சக்திவேலுடன் வருவதாக கழன்று கொண்டார்.
பேரன் பேத்திகளோடு, திலகவதி மட்டும் சின்னமகனோடு சென்னையில் இருந்து திருவிழாவிற்கு கிளம்பி வந்துவிட்டனர். இரவுப் பயணம் வேண்டாமென பகலில் கிளம்பினர். சித்தப்பனும், மகனும் மாற்றி மாற்றி காரை ஓட்டிக்கொண்டு வர, கார் டோல்கேட்டில் நின்றதை விட அதிகமாக, நெடுஞ்சாலையில் இருந்த உணவகங்களில் தான் நின்றது ஸ்ரீப்ரியாவால்.
“உனக்கு பிரியானு பேரு வச்சதுக்குப் பதிலா சாப்பாட்டுராமின்னு வச்சுருக்கணும்டி. ஒரு கடைய தாண்ட விடமாட்டேங்குற.” என்க,
“ப்ரோ… அப்ப உம்பேரையும் ட்வின் பிரதர்ங்கறதால சாப்பாட்டு ராமன்னுதான் வச்சிருப்பாங்க. பரவாயில்லையா?”
“எனக்கு உன்தொல்லை வயித்துல இருக்கும்போதிருந்தே கூடவே வந்திருக்குடி.” என அலுத்துக் கொண்டே காரை ஓட்டினான்.
இரட்டைவீட்டின் முன் காரை நிறுத்த, அனைவரும் இறங்கினர். பிரியாவும், ஸ்ரீயும் பேக்குகளை எடுக்க, திலகவதியின் கண்கள் பக்கத்து வீட்டில் பதிந்தது.
அங்காளம்மன் பங்காளி உறவு முறைகளுக்குப் பாத்தியப்பட்ட தெய்வத்திரு சுப்ரமணி அன்னபூரணி இல்லம் எனும் எழுத்துக்கள் கண்களில் பட கண்கள் பணித்தது திலகவதிக்கு.
திருவிழா என ஊருக்கு வந்தால் பேருக்கு தான் பெரியவர் வீட்டில் இருப்பார்கள். ஆனால் உணவு ஏற்பாடெல்லாம் சின்னவர் வீட்டில் தான் நடக்கும்.
அண்ணன் குடும்பம் வருவதற்குள் ஆள்விட்டு வீட்டை சுத்தம் செய்து வைத்திருப்பார் சின்னவர்.
குறுக்கு சுவர் தாண்டி குதித்து பிள்ளைகள் இங்கும் அங்கும் சென்று கொண்டிருப்பார்கள். இன்று உயர்ந்து நின்ற குறுக்கு சுவர் போல பிரிவினையும் உயர்ந்து நின்றது.
இன்று ஊருக்குப் பொதுவீடாகப் போய்விட்ட சின்னவர் வீட்டை ஏக்கப்பார்வை பார்த்தது திலகவதியின் கண்கள்.
திருவிழா என்றால் பற்றவைத்த அடுப்பு அணையாமல் எரிந்த வீடு. பந்தி நடந்த மயமாகவும், இலை எடுத்த மயமாகவும் தான் இருக்கும். பெயருக்கேற்றார் போல சின்னவர் மனைவியும் சளைக்காமல் வடித்துக் கொட்டிக் கொண்டிருப்பார். திலகவதி பிள்ளைகள் பொறுப்பு மேல் வேலை என பார்த்துக் கொள்வார்.
பழைய நினைவுகளோடு, ‘யானைகட்டி போரடித்தாலும், போகும் பொழுது என்னத்த கொண்டு போகப்போறோம்.’ என்கிற உலக நிலையாமை எனும் ஞானம் நொடியில் உதித்தது திலகவதிக்கு. கண்கலங்க வீட்டினுள் செல்ல,
அதே வீட்டை ஆசையாகப் பார்த்தது சிவசங்கரியின் கண்கள்.
ஆசையாகப் பார்த்தவளை ஆவலாகப் பார்த்தது கமிட்டி குழுவிலிருந்த இரண்டு கண்கள்.
அப்பொழுதுதான் ஒவ்வொரு போஸ்ட் கம்பமாக ரேடியோ குழாயும், ட்யூப் லைட்டும் கட்டிக் கொண்டு வந்தனர், சவுண்டு சர்வீஸ் ஆட்கள்.
“டேய்!!! பெரிய வீட்டு முன்னாடியும் ஒரு கொழாயக் கட்டுங்கடா!!” என கமிட்டியினர் கூற, இவர்களால் மறுக்க முடியாமல் வீட்டினுள் சென்றுவிட்டனர்.
வீடு சுத்தமாக இருந்தது.
“என்ன சித்தப்பு. வீடு சுத்தமா இருக்கு.” என சங்கரி கேட்க,
“அது உங்க அம்மாச்சி குடும்பத்த கட்பண்றதுக்காக சொன்னது. நம்ம ஊர்ல நமக்கு இல்லாத ஆளுகளா?” என்றார். முன்னமே வீட்டை சுத்தம் செய்ய சொல்லியிருந்தார்.
“சித்தப்பு மூளை வரவர டபுள் டூட்டி பாக்குது க்கா.” என பிரியா கேலி பேச,
“உம்மூள வேலையே செய்ய மாட்டேங்குதுல்ல. அதுக்கும் சேத்து சித்தப்பா மூளை வேல செய்யுது போல.” என பேக்குகளை எடுத்து வந்த ஸ்ரீப்ரியன் உடன்பிறப்பை கேலி செய்ய,
“அதத்தான் உனக்கு கடனா கொடுத்துட்டேனே. எனக்கு எப்படிடா வேலை செய்யும்?” என பதில் கொடுத்தாள்.
“இன்னைக்கு சாமி அழைப்பு இருக்கு. எப்படியும் நைட்டு பன்னெண்டு மணிக்கு மேல ஆயிரும். கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நைட்டு தூங்க முடியாது. சாப்பாடு வேணும்னா ஸ்ரீ வத்தலகுண்டு போய் வாங்கிட்டு வரட்டும்.” என முத்துவேல் கூறிவிட்டு, விழாக்கமிட்டியினரை சந்திக்க கிளம்பினார்.
“முத்து…” என திலகவதி தயங்கி அழைக்க,
‘என்ன?’ என்பது போல் திரும்பி நின்றார்.
“திருவிழா நேரம்… கொஞ்சம் பாத்து அளவா வச்சுக்கோப்பா…” என தயங்கித் தயங்கி கூற,
‘எனக்குத் தெரியும்!’ என்பது போல் நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார். வெளியே சென்ற மகனை ஒரு பெருமூச்சோடு பாத்துவிட்டுத் திரும்ப,
“வா திலகா!!! இப்ப தான் வர்றீங்களா? நல்லாயிருக்கீங்களா? வாசல்ல கார பாத்தே.” என கேட்டுக் கொண்டே பக்கத்துவீட்டு உறவுக்காரப் பெண் ஒருவர் வந்து நலம் விசிரித்தார்.
“வாங்க அத்தாச்சி!!! எப்படி இருக்கீங்க?”
“ம்ம்ம்… நல்லா இருக்கே திலகா. பேரம்பேத்திகளா? நல்லா வளத்துட்டாங்க. படிப்பு முடிஞ்ச்சா? எப்ப கல்யாணம்?” என வழக்கமான கேள்விகளைத் தொடுக்க,
“பாக்கணும் அத்தாச்சி.” என முடித்துக் கொண்டார்.
“திருவிழான்னா கலகலன்னு இருந்த வீடு. இப்ப அமைதியா இருக்கு. நீங்க ஒத்துமையா இருந்திருந்தா ஏன் அந்தப்பிள்ளைக கோயிலுக்கு எழுதி வைக்கப் போகுதுக.” என அலுத்துக் கொள்ள, இவரை பேசவிட்டால் பழசை எல்லாம் பேசிக் கிளறுவார் என நினைத்த திலகவதி,
“அத்தாச்சி, மாவிளக்குக்கு மாவு ரெடி பண்ணனும். பாக்கெட் மாவு வாங்கிக்கலாமா? மெஷின்ல கொடுத்து அரச்சுக்கலாமா?” என பேச்சை மாற்றி யோசனை கேட்க,
“பாக்கெட் மாவு வேண்டாம். அரிசிய ஊரப்போட்டு வை. எம்பேரன் பொண்டாட்டியும் ஊரப்போட்டுருக்கா. எம்பேரன் அரைக்கப்போகையில, சேத்து கொடுத்து விட்டுறலாம். அந்தக்காலமா இருந்தா இந்நேரம் உரலுச்சத்தமும் உலக்கை சத்தமும் தான் கேக்கும். ஒருத்தர் இடிக்க ஒருத்தர் பொடைக்கனு, இந்நேரம் தெருவே கலகலன்னு இருக்கும்.” என பழங்கதை பேசியவர், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினார். அவர் செல்லும் பொழுது, “மாவிளக்கு போகும்போது சொல்லுங்க அத்தாச்சி. உங்க பேரன் பொண்டாட்டியோட சங்கரிய அனுப்பி வைக்கிறேன். அவளுக்கு தெரியாது.” என திலகவதி கூற,
“சரி திலகா. அதுதான் மைக்ல கத்துவானுகளே. நானும் கூப்புடுறே.” என கூறிவிட்டு சென்றார்.
சங்கரிக்கு ஓய்வெடுக்கும் எண்ணம் இல்லை. இங்கு வந்ததும் ஏதோ ஒரு குதூகலம் வந்து தொற்றிக் கொள்ள சுறுசுறுப்பாக இருந்தாள். தம்பியும் தங்கையும், பேக்குகளை வைக்க சென்றுவிட, திலகவதியோ அடுக்களை செல்ல, கூடவே சங்கரியும் சென்றாள். காய்கறி முதற்கொண்டு அனைத்து சாமான்களும் புதிதாக வாங்கி வைக்கப்பட்டு இருந்தது.
“சித்தப்பு எல்லாம் பெர்ஃபெக்டா ரெடிபண்ணி வச்சுருக்காரே. என்ன அப்பத்தா சமைக்கலாம்?” என கேட்டாள். தங்கள் கூடவே வந்த சித்தப்பா எப்படி வாங்கியிருக்க முடியும் என யோசிக்கவில்லை. ஆட்களிடம் சொல்லி வாங்கி வைத்திருப்பார் என நினைத்தனர். அதில் பச்சரிசியும் இருக்க, பொங்கலுக்குத் தேவையான அளவு எடுத்து வைத்துவிட்டு, மாவிளக்கிற்காக அரிசியை ஊரப்போட்டார் திலகவதி.
ஹோட்டல் வேண்டாம் என முடிவு செய்தனர். இருவரும் சமையல் வேலையை பார்க்க தயாராகினர். இன்று முழுவதும் ஹோட்டலிலேயே சாப்பிட்டிருக்க, இரவு சமையலை வீட்டில் செய்ய முடிவெடுத்தனர்.
“வெறும் ரசமும் பொறியலும் கூட போதும் அப்பத்தா. பசியில்ல.” என சங்கரி கூற,
“நீ போதும்னுட்டே. ரெட்ட நாயனம் ரெண்டும் என்ன கேக்குதுகளோ தெரியலியே?” என்க,
“நாங்க என்ன பீட்ஸாவும் பர்கருமா கேட்கபோறோம். இங்க இருக்குறவரைக்கும் நீங்க போடுறதத்தானே திங்கணும்.” என கேட்டுக் கொண்டு பிரியா வர,
“இந்தா வந்துட்டா பாரு. இன்னைக்கி வெரும் ரசம் தான்.” என, அவள் கேட்டதற்காகவே வீம்பாக கூற..
“இந்நேரம் சின்ன அப்பத்தா இருந்திருந்தா விருந்தே போட்டுருப்பாங்க.” என்றாள்.
“ஹேய்!!! பிரியா!! உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா?” என சங்கரி விழி விரிக்க,
“எனக்கு அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் ஞாபகம் இருக்கு. ஆனா நம்ம சித்தப்பு தான், சுதி ஏத்திட்டா நாங்க எல்லாம் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம்னு, குடும்ப பெருமைய பாட்டா பாடுவாரே. அத வச்சு சொன்னேன்.” என்றாள்.
“அது என்னமோ உண்மை தான்.” என்று முனங்கிவிட்டு திலகவதி வேலையில் கவனமாக, சங்கரிக்கு தான் எதிலும் கவனம் போகவில்லை.
“விழாக்கமிட்டி உறுப்பினர் தவசி மகன் நித்தீஷ்வரன் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வரவும்.” என்ற மைக்செட்டின் அழைப்பல்லவா அவள் காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.