ராகம் 5
ராகம் 5
ராகம் 5
ருத்ரா மித்ராவின் கரம் கோர்த்த தினம்:
பசுஞ்சோலை கிராமம்:
நாதஸ்வர மேளம் இசையமைக்க, சுற்றத்தார் சொந்தங்கள் அர்ச்சனை தூவ, தேவர்கள் ஆசிர்வதிக்க, தன் நீலாம்பரியின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து, தன் சரி பாதியாக ஆக்கிக் கொண்டான், நீலாம்பரியின் கட்டவண்டி.
தான் உயிரோடு இல்லை என நினைத்த தன் காதல் பெண், நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் உயிர்பெற்று தன் கண்ணெதிரே தோன்றி, சில மாத போராட்டத்திற்கு பின், இன்று தனக்கே தனக்கான சொந்தமாக மாறி, அழகின் மொத்த உருவமாக ஜொலிக்கும் அந்த உயிரோவியத்தை அருகிலிருந்து ரசித்தான் ருத்ரேஸ்வரன்.
பல போராட்டங்களை எதிர்கொண்டு; பல சதிராட்டங்களை முறியடித்து; பல இன்னல்களை கடந்து; நம்பிக்கை துரோகத்தை சந்தித்து; கண்ணீர் கரைகளை துடைத்து; விதியின் வழி பயணித்து; அந்த விதியையும் வென்று; இன்று கைகோர்த்திருக்கும் இந்த காதல் ஜோடிகளுக்கு தெரியவில்லை:
இத்தனை நாள் போராடிய போராட்டம் ஒன்றுமே இல்லை என்று; அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்று; விதியாட போகும் சதிராட்டம் இன்னும் முடியவில்லை என்று; இது தெரியாத மணமக்கள் இருவரும் அதீத மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ரிஷி வர்மாவுக்கும் அவனது பி ஏ கிரிதரனுக்கும் என்ன கட்டுப்படுத்தியும் முடியாமல், கண்களில் நீர் நிறைந்து விட்டது. அவள் கூடவே இருந்து அவளது போராட்டத்தையும் தவிப்பையும் பார்த்தவர்கள் அல்லவா?
கார்த்திக்கும் (ருத்ராவின் பெரியம்மா மகன்) அவன் மனைவி ரேகாவும் (ருத்ராவின் மாமா பெண், அம்மு, பிருந்தாவின் தோழி) அளவற்ற மகிழ்ச்சி கொண்டனர்.
ரிஷியும் கிரியும் அவளுடன் இருந்து, அவளது துயரத்தில் இருந்து மீட்டெடுக்க போராடினார்கள் என்றால், ரேகாவும் கார்த்திக்கும் தள்ளி நின்று அவர்களுக்கு உதவினார்கள்.
பிருந்தாவை பற்றி சொல்லவே வேண்டாம், பட்டு போய்விட்டதாக நினைத்த, அவளது சகோதரியின் வாழ்வு, இப்போது மீண்டும் துளிர் விட தொடங்கிவிட்டது, அவளது மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்லிவிட முடியுமா என்ன? “ஆண்டவா! இன்று போல் இனிவரும் எல்லா நாளும், அம்மு சந்தோஷமா, எந்த கவலையுமின்றி வாழனும். அதுக்கு நீ தான் துணை புரியணும்.” என உலகில் உள்ள அனைத்து தெய்வத்தையும், தன் சகோதரியின் நல்வாழ்வுக்காக வேண்டினாள். அவள் வேண்டுதலை கேட்ட தெய்வத்தின் முகத்தில் மர்ம புன்னகை.
பிருந்தாவை ஆதரவாக தோள் சாய்த்தான் ரிஷிவர்மா. அவள் ஆனந்த கண்ணீரோடு மணமக்களை கண்டிருந்தாள். பாவம் அவளுக்குத் தெரியவில்லை தானே தன் சகோதரிக்கு மனவருத்தத்தை கொடுத்து, அவளது மகிழ்ச்சியை குலைத்து, அவளது அமைதியான வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்த போகிறோம் என்று.
தங்கள் உணர்வோடும், உணர்ச்சியோடும், விதி ஆடப் போகும் சதிராட்டத்தை, எதிர்கொள்ள போகும் இந்த நால்வரும், விதியை எதிர்த்து நட்பிலும் காதலிலும் வெல்வார்களா?
நட்பா? காதலா? விதியா?
★★★
தன் மார்பில் தொங்கும் மாங்கல்யத்தை பார்த்த அம்முவின் நினைவுகள், தானாக ஐந்து வருடங்களுக்கு முன், தன் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறிய நாளுக்கு சென்றது.
ஆம்! அன்று அவள் கழுத்தில் ஏறியது வெறும் கயிறு. இரு உள்ளமும் தங்களுக்குள் பொதிந்திருக்கும் காதலை உணராமல், பெண் மனம் நிறைந்த வெறுப்போடும், ஆண் அளவு கடந்த கோபத்தோடும் கட்டிய வெறும் மஞ்சள் கயிறு, அவ்வளவு தான் அன்று அதற்கு உண்டான மதிப்பு. அதுவும் கழுத்தில் ஏறிய சில மணி நேரங்களில், ஒரு கையவனின் கைகளால் அவளது பெண்மையுடன் அதுவும் பறிக்கப்பட்டு, அவளது வாழ்வையே தலைகீழாக மாற்றியது.
ஆனால் இன்று அப்படி இல்லை. இரு மனமும் தன் காதலை மனப்பூர்வமாக உணர்ந்து, திருமண பந்தத்தில் நுழைந்துள்ளனர். இனி வரும் காலம் அனைத்திலும், இன்பம் துன்பம் எது வந்தாலும் ஒன்றாக இருந்து, உலகை எதிர்கொள்ள போகும் அழகான பந்தம். அதை நினைத்ததும் அம்முவின் கண்கள் நீரால் நிறைந்தது.
மாங்கல்யத்தில் நிலைத்திருந்த அவள் பார்வை, அதை அணிவித்தவனின் முகத்தை கண்டது. அங்கு உலகில் உள்ள அனைத்து சந்தோஷத்தையும் முகத்தில் கொட்டி, கரை காணாத காதலை கண்களில் காட்டி, அவளது விழிகளை நேர்கொண்டு சந்தித்தான் ருத்ரேஷ்வரன்.
இதோ அதோ என காத்திருந்த பெண்ணின் விழி முத்து, கண்களை விட்டு வெளியே வந்தது. அது பூமியை தொடும் முன் தன் கரத்தில் தாங்கியிருந்த ருத்ரா, “இனி உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது. அப்படி வந்ததுனா நான் செத்ததுக்கு சமம்.” என கோபத்தில் கடும் வார்த்தைகளை பிரயோகித்தான்.
“ருத்ரா! என்ன பேசுற?” என யார் கவனத்தையும் கவராமல் அடிக்குரலில் சீறினாள்.
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? எதுக்கு கண்ணீர் சிந்தின?” அவன் அதை விட கோபத்தில் முறைத்தான்.
பிறகே அவன் தன் கண்ணீரை காண முடியாமல் அவ்வாறு சொல்கிறான் என புரிந்து, தன் முகத்தை மகிழ்ச்சிக்கு மாற்றி, “இது ஆனந்த கண்ணீர் கட்டவண்டி.”
“ஆனந்த கண்ணீரோ? சோக கண்ணீரோ? எதுவாயிருந்தாலும் இனி உன் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது.” இப்போது கோபம் குறைந்து, மென்மையாக வார்த்தைகள் வந்தது.
“அப்போ வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வந்தால் என்ன பண்றது?”
“உன்னை யாரு வெங்காயம் வெட்ட சொல்றா? அதுக்கு நிறைய வேலைக்காரங்க இருக்காங்க.”
“அது நம்ம வீட்ல ஓகே. நம்ம மட்டும் தனியா இருக்கும்போது என்ன பண்றது?” என்றாள் ஒன்றும் தெரியாத அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.
“நம்ம மட்டும் எதுக்..” என ஆரம்பித்தவனுக்கு, அவள் சொல்வதின் சாராம்சம் புரிந்தது. உல்லாச மனநிலைக்கு சென்றவன், “அப்ப பார்க்கிறதுக்கும் செய்யறதுக்கும் நிறைய வேலை இருக்கு நீலாம்பரி.” என அவளது தலை முதல் பாதம் வரை, பார்வையால் களவாடி அவளது முகம் சிவக்க வைத்தான்.
அவன் பார்வையை காண முடியாமல் நாணம் தடுக்க, தலை தாழ்த்தி, “அப்படி என்ன வேலை?” என்றாள் காற்றாகி விட்ட குரலில்.
“உனக்கு ஒண்ணுமே… தெரியாதுன்னு, உன் முக சிவப்பே தெளிவா காட்டுது.” என்றான் ரகசியமாக.
அதில் மேலும் முகம் சிவக்க, “ம்ஹும். எனக்கு ஒண்ணுமே தெரியாது.” என தலை அசைத்தவளின் இதழ்களில் ரகசிய சிரிப்பு.
அவளது தலையசைப்புக்கு ஏற்ப ஆடும் ஜிமிக்கியை ரசித்தவன், “சரி தெரியாட்டி விடு. அதுவும் ரொம்ப நல்லது. உனக்கு எல்லாத்தையும் நானே சொல்லி தரேன்.”
அவன் பேச்சைக் கேட்டு பாவையின் உணர்வுகள் கிளர்த்தெழுந்தது. மேனி சிவக்க, தன் பார்வையை அங்கும் இங்கும் அலைபாயவிட்டாள். அவளது அலைபாயுதலை ரசித்தவன் அவளை நன்றாக நெருங்கி, “உனக்கு எல்லாத்தையும் சொல்லித் தரப் போற, இந்த வாத்தியாருக்கு என்ன பீஸ் தருவ?”
“பீஸா?” முழித்தாள்.
“ஆமா பீஸ்”
“கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. எனக்கு சொல்லித் தர வேண்டியது உன்னோட கடமை கட்டவண்டி.” இப்போது சற்று இலகுவாகியவள் அவனுடன் வார்த்தையாடினாள்.
“கஞ்ச பிசினாரி ஸ்டூடண்ட். நீ என் வைஃப்ங்கிறதுக்காக ஃப்ரீயா சொல்லித் தர முடியுமா?”
“சொல்லித் தராட்டி போ நஷ்டம் உனக்குத்தான்.”
“நான் பக்கா பிசினஸ் மேன். எனக்கு எப்பவும் எல்லாத்துலயும் லாபம் எடுக்கத் தெரியும். உன்கிட்ட இருந்து என்னோட பீஸை வட்டியோட எப்படி வசூல் பண்றேன்னு பார். அப்ப சாப்பிடறதுக்கே நேரம் இருக்காது. அதுல எங்க இருந்து சமைக்க? வெங்காயத்தை வெட்ட.” என ஆரம்பித்த இடத்திற்கு வந்தான்.
“அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமா?”
“சாப்பிட தான் போறேன்.” என்றவனின் பார்வை சொன்னது அவன் எதை சாப்பிட போகிறான் என்று.
அவன் சொன்னது புரிந்தாலும் புரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டவள், “அப்ப சமைச்சாகணும். அதுக்கு வெங்காயம் வேண்டாமா?”
“வேண்டாம். என் பொண்டாட்டி கண்ணுல இருந்து தண்ணி வர வைக்கற எதுவும் எனக்கு வேண்டாம்.” குரல் கடினமுற்றது. அதில் அவன் காதலின் தீவிரம் தெரிந்தது.
மனம் நெகிழ்ந்தவள், அவனை மீண்டும் இலகுவாக்க, “வெங்காயம் இல்லாமல் எனக்கு சமைக்கத் தெரியாதே.” உதடு பிதுக்கினாள்.
முயற்சி பலன் கொடுக்க, சுழித்த இதழை தாபத்தோடு பார்த்தவன், “இதுலையும் உனக்கு குருவா இருந்து, வெங்காயமே இல்லாம சமைக்க சொல்லித் தரேன். ஆனா அதுக்கு டபுள் பீஸ்.” அவன் சொல்லி முடிக்கவில்லை
வெங்காயத்தை வெட்டும் போதும் கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுத்திடுவேன்
காஞ்சிப்பட்டு சேலை கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா
சரியாக ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இந்த பாடலை பாடினார்கள். அப்போது ருத்ராவின் முகம் போன போக்கை என்னவென்று நான் சொல்ல???
அம்மு வந்த சிரிப்பை அடக்கி தலையை குனிந்து கொண்டவள், “சுச்சுவேஷன் சாங் எவ்வளவு அருமையா மேட்ச் ஆகுது பார் கட்டவண்டி.”
“உனக்கு வரவர வாய் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. அதை என் ஸ்டைலில் அடக்குறேன்.” என்று கண் சிமிட்டியவனின் பார்வையில் மீண்டும் பெண் செங்கொழுந்தாகினாள்.
அவள் வெட்கத்தை ரசித்தவன், திடீரென்று ஏதோ தோன்ற, “ஏண்டி நீலாம்பரி? நம்ம பேசுறது கேட்கற மாதிரி மைக் எதுவும் செட் பண்ணி வச்சிருக்கானா உன் வரு”
அவர்களை சாப்பிட அழைக்க வந்த, ரிஷிக்கு மைக் என்ற வார்த்தை மட்டும் தெளிவாக புரிந்தது. “மைக் எதுக்கு ருத்ரா? பாடப் போறீங்களா?” என அப்பாவியாக கேட்டு வைத்தான்.
இப்போது கட்டுப்படுத்த முடியாமல் அம்மு வெடித்து சிரித்தாள். ருத்ரா அவளை முறைத்தான். “எல்லாம் உன்னோட வேலையா மிரு.” அவளது தலையில் செல்லமாக கொட்டிய ரிஷி, “இரு வரேன்” என்றவன், மைக்குடன் திரும்பினான்.
‘எங்கே தன்னை பாட சொல்லி விடுவானோ?’ என அரண்டு விட்டான் ருத்ரா.
“ஹாய் பிரண்ட்ஸ். இவ்வளவு நேரம் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாடி நாம கேட்டோம். இப்போ நமக்காக, உங்கள் கனவுக்கன்னி மித்ராலினியாகிய அம்மு ஒரு பாட்டு பாட போறாங்க” என அறிவித்தான் ரிஷி வர்மா. ருத்ரேஷ்வரன் நிம்மதி மூச்சு விடுத்தான்.
அனைவரின் பார்வையும் ஆவலுடன் மித்ராலினியிடம் திரும்பியது. அவளோ பிடித்தமின்மையை முகத்தில் காட்டி நின்றாள்.
“சூப்பர் அம்மு பாடு. இன்னைக்காவது உன்னோட பாட்டை அனுபவிச்சு கேட்கனும். அஞ்சு வருஷம் முன்னாடி திருவிழால நீ பாடுனதை பாதி கேட்டேன். அப்போ முழுசா கேட்க முடியல.” என்று ஆர்வமாக சொன்ன ருத்ராவுக்கு எங்கே தெரிய போகிறது? அம்மு கடைசியாக பாடியதும் அன்றுதான் என்று.
ஆம்! ஐந்து வருடங்களுக்கு முன் வந்த அந்த திருவிழாவின்போது கோவிலில் வைத்து அம்மு பாடியதே கடைசி. அதன் பிறகு சகோதரியின் நிச்சயம், காம பித்தனால் கடத்தப்பட்டது என அவள் வாழ்வு முற்றிலும் வேறு திசைக்கு பயணித்தது. கொன்று புதைத்த அமிர்தாவின் நினைவுகளுடன், பாடும் ஆசையும் புதைந்து விட்டது.
கார்த்திக்கும் ரேகாவும் சொல்லி, அவளின் பாடும் திறமை பற்றி ரிஷிக்கு தெரியும். ஆனால் இதுவரை அவளிடம் பாடச் சொல்லி கேட்டதில்லை. ஏனோ இன்று அவள் பாடலை கேட்க மனதில் ஒரு ஆர்வம். அறிவித்துவிட்டான்.
“பாடு அம்மு.” என அனைவரும் அவளிடம் கேட்க, பெண்ணின் முகத்தில் மறுப்பின் சாயல்.
‘எல்லாம் உன்னால்.’ என ரிஷியை முறைத்தாள். அவள் பாடலை கேட்க ஆசையோடு காத்திருந்த ரிஷிக்கு ஏமாற்றமானது. அவன் முகம் சுருங்கி போனது.
வருவின் வருத்தத்தைக் காண மிருவால் முடியுமா? தானாக அவளது கரம் நீண்டது மைக்கிற்காக. இப்போது ரிஷியின் முகத்தில் நூறு சூரிய பிரகாசம். பாவையின் முகமும் மலர்ந்தது.
விழி மூடிய அம்முவின் நினைவில் எண்ணற்ற காட்சிகள் வலம் வர, அவளது இதழ்கள் தன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து பாடலை தொடங்கியது.
அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்
விளக்கேற்றுதே.. கவிராத்திரி..
மனம் ஓடுதே நதி மாதிரி..
சுகசந்தம் அள்ளித்தந்த இந்த பூங்கொடி.. (அந்த வானம்…)
சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்..
நான் போகும் பாதை
யாவும் ஆகும் பிருந்தாவனம் ..
வாழும் தனிமை காலம் விலகிப் போகும்..
இனி ஆசைக்கிளிகள் கூடும்
இன்ப சரணாலயம்..
வார்த்தைகள்.. கொடி ஏற்றுமே ..
வான்நிலா.. முடிசூட்டுமே..
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே… (அந்த வானம்…)
அனைவரும் தன்னை மறந்து அவள் பாடலில் மூழ்கி இருந்தனர். ருத்ராவையும் ரிஷியையும் பற்றி சொல்லவே வேண்டாம். பாடல் ஆரம்பிக்கும் போது அவள் மேல் பதித்த பார்வையை விலக்கவே இல்லை.
கண்கள் மூடி பாடியவளின் விழி திறக்கும்போது, நேரே அவள் கண்டது அருகருகில் நின்ற ரிஷியையும் ருத்ராவையும். ‘எப்படி இருந்தது?’ அவளது பார்வை கேள்வி கேட்டது.
“ரொம்ப நல்லா இருந்தது நீலாம்பரி.” என்ற ருத்ரா அவள் நெற்றியில் உதடு பதித்தான்.
“யூ ஆர் பெஸ்ட் இன் எவ்ரிதிங்.” என அவளை தன் தோள் சாய்த்தான் ரிஷி வர்மா. அதை கண்ட ஒரு மனதில் சுருக்கின்ற வழி உண்டானது.
“வரு! இனி நம்ப வாழ்க்கையில் சந்தோஷம் பூக்குமா?” பெண்ணின் குரல் தழுதழுத்தது.
நெகிழ்ந்த வருவும் பதில் சொல்ல திணறினான். இருவரின் நிலை புரிந்த ருத்ரேஸ்வரன், அம்முவை தன் மார்புக்கு இடம் மாற்றி, “இனி எப்பவும் உன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே பூக்கும். இது ருத்ரேஷ்வரன் உனக்கு தர வாக்கு.”
வாக்கு கொடுத்த ருத்ரவால் அதை காப்பாற்ற முடியுமா? அதற்கு அவன் பல சோதனைகளை கடந்து வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
நெகிழ்ச்சியான இந்த தருணத்தில் திடீரென, “ரொம்ப சென்டிமென்டா போகுதே சோட்டு.” என்ற கிட்டுவின் குரல் அங்கிருந்த அமைதியை கலைத்தது.
“ஆமாண்டா கிட்டு.”
“அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்?” என்ற பப்புவின் குரல் தொடர்ந்தது.
“அம்முவை இன்னொரு பாட்டு பாடச் சொல்லலாமா?” இது பிங்கி.
“அதுவும் சரி” கிட்டு.
“அம்மு நமக்கு தகுந்த மாதிரி ஒரு துள்ளல் பாட்டு பாடு.” பப்பு.
அம்முவுக்கு இனி தன் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்தது. தயக்கம் விலகி உடனடியாக பாடினாள்.
அன்பே தெய்வமே
கண்டேன் பூமி மேலே
ஒளி ஏற்றுவோம்
பிறர் வாழ்வில் நாமே
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
மலரே உன் வாசம் அழகே
மழையே உன் சாரல் அழகே
நதியே உன் வேகம் அழகே
கடலே உன் நீலம் அழகே
★★★
அன்றைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க, அவர்கள் இணைந்து நடித்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மகிழ்ச்சி அடைந்த ருத்ரேஸ்வரனின் பாட்டி அவர்களுக்கு நெட்டி முறித்தார்.
தாத்தா “இதே போல் உங்கள் வாழ்க்கையிலும் வெற்றி கிட்டட்டும்” என மனதார ஆசீர்வதித்தார்.
ஈஸ்வரமூர்த்தியை கையில் பிடிக்க முடியவில்லை. இருக்காதா பின்னே? திரையுலகுக்கே வரமாட்டேன் என்று ஒதுங்கி நின்ற மகன், இப்போது தன் முதல் படத்திலே நல்ல இடத்தை பிடித்ததை நினைத்து அவருக்கு கர்வம் உண்டானது.
“புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” என மீசையை முறுக்கி, மனைவியிடம் பெருமையடித்தார்.
“அவன் எனக்கும் மகன். அதை ஞாபகம் வச்சுக்கோங்க.” என நொடித்துக் கொண்டார் அவரது மனைவி அம்பிகா தேவி.
“அதனாலதான் இத்தனை நாள் பூனையா இருந்தான்.” என அவர் இருந்த உற்சாகத்தில் மனைவியை சீண்டினார்.
அவரிடம் இது போல் விளையாட்டை கண்டறியாத அம்பிகா, அந்த மாற்றத்தை ரசித்து, “அவன் பூனையா? புலியா? அவன் கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.”
அவர் சொன்னதை கேட்டு ஜெர்கான ஈஸ்வரமூர்த்தி, ருத்ரேஷ்வரன் தன் நெற்றிக்கண்ணை திறந்தால், தன் நிலை என்ன என்பதை உணர்ந்தவர், “என்ன அம்பி? நான் விளையாட்டுக்கு சொன்னதை நீ சீரியஸா எடுத்துக்கிட்டு, அவன்ட்ட என்னை மாட்டி விட பாக்குற? நம்ம புள்ள எப்பவுமே, எல்லாத்துலையுமே புலி.” என வெற்றிகரமாக ஜகா வாங்கினார்.
“அஃது! அந்த பயம் இருக்கட்டும்.” என்றவர், கெத்தாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
‘எல்லாம் என் நேரம். புள்ள பூச்சிக்கலாம் பயப்பட வேண்டியிருக்கு.’ என மானசிகமாக தலையில் அடித்துக் கொண்டார்.
அதே நேரம் அவரை நெருங்கிய அம்பிகாவின் சகோதரன், “என்ன மாமா? பையன் அங்க ரொமான்ஸ் பண்றான். அப்பா இங்க பண்ணிட்டிருக்கீறு.” என்றார் நக்கலாக.
“ஏன் மாப்பிள்ளை? ஏன்? என்னை பார்த்தா ரொமான்ஸ் பண்ற மாதிரியா தெரியுது?” என்றார் நொந்து போன குரலில்.
“கூல் மாமா கூல். ஆல் டீடெயில்ஸ் ஐ நோ. புண்ணான மனசை புகை விட்டு ஆத்தலாம் வாங்க.”
அவர் சொன்னதை கேட்டு பதறியவர், அருகில் அம்பிகா தென்படுகிறாரா என சுற்றும் மற்றும் பார்த்து, அவர் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டு, நிம்மதி மூச்சுடன், “மாப்பிள உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்? ஏன் இந்த கொலவெறி? என் மேல எந்த கோபம் இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். அதுக்காக என் பொண்டாட்டி கையால அடி வாங்கிக் கொடுக்க பிளான் பண்ணாத.”
“என்ன மாமா சிங்கம் மாதிரி கெத்தா இருக்க வேண்டாம்?”
“ஐயோ மாப்பிள அவ காதுல விழுற மாதிரி சொல்லிடாத. அப்புறம் என்ன வச்சு நல்லா செய்வா.”
“ரூம்ல போட்டு அடி பின்னிடுவாளா?
“அட அந்த கொடுமையை ஏன் கேக்குற மாப்பிள்ளை? ரூமுக்குள்ளேயே விடமாட்டா.” என்றார் சோகமாக.
அதைக் கேட்டவர் சத்தம் போட்டு சிரிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்ற அம்பிகாவின் குரல் சற்று தள்ளி கேட்டது. “சும்மா பேசிகிட்டு இருக்கோமா.” என அரண்டு போன ஈஸ்வரமூர்த்தி பதிலளித்தார்.
“பார்த்தியா என் நிலைமையை?” என்ற புலம்பலோடு அந்த இடத்தை நீங்கினார்.
ஸ்ருதி சேருமா? ராகம் இசைக்குமா?
தெரிந்து கொள்வோம் அடுத்த பதிவுகளில்.