kv-4

kv-4

4

ஜானவி அழகின் பெட்டகம், அறிவின் உறைவிடம், ஒரு ராஜாவின் குணநலன்கள் அவளுக்குத் தப்பாமல் இருந்தது. எதிலும் முதலில் வரவேண்டும் வெற்றி பெறவேண்டும் என நினைத்து அவள் நினைத்ததில்லை. ஆனால் அனைத்தும் அவளைத் தேடி வந்தது.

வகுப்பில் முதல் மாணவியாக வந்தாலும் அதைப் பெரிதாகவே அவள் நினைக்க மாட்டாள். படித்தது புரிகிறது, புரிந்ததை தேர்வில் எழுதினேன் என்று அலட்டிக் கொள்ளாமல் கூறிவிடுவாள். கல்லூரியின் இறுதி ஆண்டை இரண்டு மாதம் முன்பு தான் முடித்தாள். ஆனால் அவளது வயதிற்கும் அறிவிற்கும் சம்மந்தமே இல்லை.

அரண்மனையின் பல முடிவுகளை அவள் தான் எடுப்பாள். சொல்லப் போனால் தந்தைக்கே பல சமயங்களில் மந்திரியாக இருந்து ஆலோசனை சொல்பவள்.

அவளது தந்தைக்கு பத்து வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை அவள். அறிவார்ந்த குழந்தை பிறக்க வேண்டும் என்று ஹோமங்கள் செய்த பிறகு பிறந்தவள் அவள். ஆனால் அறிவு அதிகமாக இருந்தாலும் அது ஆபத்தில் கூட முடியலாம் என்று அப்போது அவர்கள் உணரவில்லை.

அவளுக்கு இதிகாசங்களும் தெரியும், இந்தக் கால அறிவியலும் தெரியும். எப்போதும் இரண்டுக்கும் உள்ள தொடர்புகளைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டிருப்பாள்.

பத்மநாப ஸ்வாமியை வேண்டிக் கொண்டவள் தான் நினைத்தை வெகு சீக்கிரம் அடைய வேண்டும் என்று தீவிரமாக இருந்தாள்.

விஜய் அடுத்து வந்த மூன்று நாட்களுக்குள் தன் தந்தையின் காரியத்தை முடித்துவிட்டு வரும் வரை வேறு யாரையும் தொடர்புகொள்ளவில்லை.. ஆனால் அவன் மூளைக்குள் பல விஷயங்களை குறித்து வைத்துக் கொண்டிருந்தான். சிறு வயது முதல் தந்தைக்கு இருக்கும் தொடர்புகள், அவரைப் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என பட்டியல் போட்டுக் கொண்டிருந்தான்.

வெங்கடேசன் ஒரு சாது. யாரிடமும் தேவையின்றி வம்பு வைத்துக் கொள்ள மாட்டார். அவருடைய நெருங்கிய நண்பர் என்றால், அது அனந்து மட்டுமே. ஆனால் விஜய் காலேஜ் சேரும் பொழுது யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டதாக அவன் தந்தை கூறி இருந்தார். அதன் பிறகு அவருடன் இப்போது தான் விஜய் பேசினான்.

திடீரென நினைவு வந்தவனாக, அவருடைய செல்ஃபோனை எடுத்துப் பார்த்தான். நல்லவேளையாக அவர் லாக் கோட் எதுவும் வைத்திருக்கவில்லை.

அதில் இருக்கும் எண்களை வரிசையாகப் பார்த்தவன், அதில் அனந்து என நம்பர் இருப்பதைக் கவனித்தான். அவருக்கு அழைக்க வேண்டுமென அவன நினைத்துக் கொண்டு தான் இருந்தான். மற்றொரு எண் ஜானவி என்று இருக்க அதையும் குறித்துக் கொண்டான். மற்ற அனைத்தும் அவனுக்கும் தெரிந்த நபர்களாகத் தான் இருந்தது.

 

அவரது படங்கள் அடங்கிய கேலரியை ஓபன் செய்தான். அதில் இருட்டில் எடுத்தது போன்ற படங்கள் இரண்டு மூன்று இருக்க அதை ஜூம் செய்து பார்த்தான்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க, எழுந்து சென்று திறந்தான்.

அண்ணா காரியம் எல்லாம் முடிஞ்சுது. நீங்க ஊருக்கு போகப் போறீங்களா?” அரவிந்த் அவன் முன்னால் வந்து நின்றான்.

வா டா. ரெண்டு வாரம் லீவ் இருக்கு அரவிந்த். அப்பாவ அப்படி பாத்தா நிலைல உங்கிட்ட சரியா எதுவும் பேச முடியல. நீ இப்ப எங்க வேலை செய்யற?”அவனிடம் அவன் பேசியே பல ஆண்டுகள் ஆகி இருந்தது.

இங்க தான் ஒரு நாட்டு மருந்து கடை வெச்சிருக்கேன்.” பெருமையாகக் கூறினான்.

ஆங்… உங்க மாமா இப்ப எங்க இருக்காரு?” விஷயத்தை ஆரம்பித்தான்.

எந்த மாமாவ கேட்கறீங்க?” கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்.

உனக்கு எத்தனை மாமா?” சந்தேகமாகப் பார்த்தான்.

இல்ல.. இங்க நெறைய பேர அப்படி கூப்டறேன் இல்ல.. அதுனால அப்படி கேட்டுட்டேன்.” திரு திருவென விழிக்க , விஜயின் சந்தேகம் அங்கேயே துவங்கி விட்டது.

உங்க மாமா அனந்தாச்சாரி பத்தி தான் கேட்டேன். அப்பா இறந்தப்ப எனக்குப் பேசினார். ஆனா எங்க இருக்காரு என்ன னு அப்ப கேட்க முடியல. அப்பறமா ஃபோன் பண்ணனும். ஆனா நீ தான் சொல்லேன்.. அவர் இப்ப எங்க இருக்காருன்னு. அவர் ரொம்ப நாள் முன்னாடி ஊரை விட்டு போன பிறகு அவரை பத்தி யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சேன். ஆனா என்னோட நம்பர் எல்லாம் தெரிஞ்சு வச்சு போன் பன்னிருகாரே, அப்ப கண்டிப்பா அப்பா கூட காண்டக்ட்ல இருந்திருக்காரு. அதான் கேக்கறேன்.” விஜயின் கேள்விகள் ஆரம்பித்து இருந்ததை அரவிந்தும் உணர்ந்தான்.

மாமாக்கு இந்த ஊர்ல இருக்கப் பிடிக்கல போல. என்ன காரணம்னு தெரியல. ஆனா எனக்கு அப்பப்ப பேசுவாரு. இப்ப வள்ளிக்காடுன்னு ஒரு ஊருல இருக்காரு. இங்க இருந்து ஒரு ஆறு மணி நேரம் ஆகும் அங்க போக. அது ஒரு பக்கா கிராமம். அங்க வைத்தியரா இருக்காரு.”

.. கண்டிப்பா நான் அவர பாக்கணும். நீயும் என்கூட வா. நாளைக்குப் போகலாமா?” உடனே முடிவெடுத்தான்.

நானுமா? நீங்க போயிட்டு வாங்க. எனக்கு இங்க வேலை இருக்கு.” அவசரமாக மறுத்தான்.

எதுவும் விஜயின் கண்களில் இருந்து தப்பவில்லை. அவன் திணறுவது, யோசித்துத் தெளிவாகப் பேசுவது என்று அவனை ஆராந்துகொண்டிருந்தான்.

ஏன் வரமாட்ட?.. எனக்கு வழி தெரியாது. நீயும் கூட வா. பேசிட்டே போலாம்.” புன்னகைத்த படியே கூற,

பேசிகிட்டே போறதா? இவன் கிட்ட பத்து நிமிஷம் பேசுனால ஒளறிடுவேன். பேசிக்கிட்டே போனா என் பாடு அவ்ளோ தான்.’ பயந்தான் அரவிந்த்.

இல்ல ணா… நீங்க மட்டும்..” என மறுக்க வந்தவனை

நீ வர, அவ்ளோ தான். சரி நீ போய் ஒரு கார் வாடகைக்கு எடுத்துக்கோ. நாம கார்லயே போகலாம்அத்தோடு முடித்தான்.

அர்விந்த் சரி என தலையை மட்டும் ஆட்டினான்.

அப்பறம் அப்பாவ அரச குடும்பத்துக் காரங்க மிரட்டுனாங்கன்னு சொன்னல..யார் மிரட்டுனா? அத நீ பாத்தியா?”

இந்தா ஆரம்பிச்சுடாருல… இது எங்க போய் முடியுமோ..’ மனதில் சலித்துக் கொண்டவன்,

அப்பாவ ஒரு நாள் நான் கோவில்ல பாத்தேன். அப்ப அவரு அந்த நாகபந்தக் கதவை பாத்துட்டு வந்ததா சொன்னாரு. அதுக்கப்றம் அரச குடும்பம் இதுல ஏதோ மறைக்கறாங்கன்னு சொன்னாரு. உண்மைய சொல்லாம பொய் சொல்ல என்னால முடியாது..மிரட்டுனா நான் பயந்துடுவேனாஅப்படீன்னு சொல்லிட்டு வேகமா கிளம்பி போயிட்டாரு.” அதுக்கு அப்பறம் தான் ….” முடிக்கும் முன்னரே,

அப்ப அவர யார் மிரட்டுனான்னு தெரியாது?” சந்தேகமாக அவன் கேட்க,

சத்தியமா எனக்குத் தெரியாது அண்ணா…” தன் கை மேலேயே கை வைத்துக் கூறினான்.

டேய்..டேய்.. இதுக்கு ஏன் சத்தியம் எல்லாம் பண்ற.. ஜஸ்ட் தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன். சரி நீ கெளம்பு, காலைல சீக்கிரமே வந்துடு கிளம்பலாம்விஜய் அரவிந்தை அனுப்ப , தப்பித்தால் போதும் என ஓடியேவிட்டான் அரவிந்த்.

அரவிந்த் சென்றதும் தன்னுடைய செல்போனை எடுத்தான். அதில் அனந்துவின் நம்பரை தேடி எடுத்து அவருக்கு அழைத்தான்.

எப்படியும் விஜயிடம் இருந்து ஃபோன் வரும் என எதிர்ப்பார்த்துக் கொண்டு தான் இருந்தார் அனந்து. உடனே எடுத்துப் பேசினார்.

சொல்லு ப்பா விஜய். அப்பா காரியம் எல்லாம் நல்ல படியா ஆச்சா?” எடுத்ததும் கரிசனமாக விசாரித்தார் அனந்து.

ஆங்… ஆச்சு. அங்கிள் நீங்க அப்பா கூட காண்டாக்ட்ல இருந்திருக்கீங்கன்னு இப்ப தான் எனக்குத் தெரியும். அப்பாக்கு என்ன ஆச்சு சொல்லுங்க. அரவிந்த் யாரோ அவர மிரட்டுனாங்கன்னு சொல்றான், உங்களுக்குக் கண்டிப்பா எதாவது தெரிஞ்சிருக்கும். சொல்லுங்க அங்கிள்” பட்டெனக் கேட்டுவிட, நேரடிக் கேள்விகளை எதிர்ப்பாராத அனந்து சற்று தடுமாறினார்.

எனக்கு அங்க நடந்தது எப்படித் தெரியும் பா . நானும் நியூஸ் பாத்து தான் விஷயம் தெரிஞ்சுகிட்டேன்.” எதையோ மறைப்பது அவரது பேச்சில் இருந்து தெரிந்தது.

இல்ல அங்கிள்.. என்கிட்ட மறைக்காதீங்க.. இத்தனை நாள் நீங்க இங்க இல்லாம ஏன் வேற ஒரு ஊர்ல இருக்கீங்க.. ஒரு நாள் நீங்களும் அப்பாவும் ரொம்ப தீவிரமா பேசிட்டு இருந்தீங்க. அதுக்கு அப்பறம் நீங்க ஊர விட்டு போய்டீங்க. என்ன நடக்குது இங்க. நான் இங்க நம்புறதுக்கு ஒருத்தர் கூட இல்ல அங்கிள். நீங்க அப்பாவோட ப்ரென்ட். உங்களையும் நான் அவர் ஸ்தானத்துல தான் பாக்கறேன். சொல்லுங்க ப்ளீஸ். எங்க அப்பாவ யாரவது வேணும்னே கொலை செஞ்சிருந்தா கண்டிப்பா நான் அவங்கள சும்மா விடமாட்டேன்.” கர்ஜித்தான்.

இதற்கு மேல் அவனிடம் மறைத்துப் பலனில்லை என்று முடிவு செய்தவராக, “அதான் நாளைக்கு என்னைப் பார்க்க வர்றதா முடிவு செஞ்சிருக்கியே.. வா.. ஒரு வழி கிடைக்கும். நானும் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லி ஆகணும். ஆனா ரெண்டு வாரம் லீவ் பத்தாது, போன் செஞ்சு ஒரு மாசம் ஆக்கு. அதுக்கு பிறகு பாத்துக்கலாம். வரும்போது உன் அப்பாவோட உடமைகள் எதாவது ரெண்டு கொண்டு வா. அவரோட சட்டை, அவர் உபயோகப் படுத்துன சில வஸ்துக்கள். சரியா?” கண்ணை மூடி அவனைச் சுற்றி நடப்பவைகளை க்ரஹித்துக் கூறினார்.

சரி அங்கிள்” . விஜய் க்கு அவர் சொன்னது எதுவும் ஆச்சரியத்தைத் தரவில்லை. இது போன்ற அவரது சித்து வேலைகளை அவன் சிறு வயதிலேயே கண்டிருக்கிறான். அவரிடம் ஒரு தெய்வ சக்தி உள்ளதை அவன் அறிந்திருக்கிறான்.

மீண்டும் அவன் வெங்கடேசனின் போனை எடுத்து அந்த போட்டோக்களைப் பார்க்க , வெறும் இருட்டில் எதையோ கிளிக் செய்திருப்பது தெரிந்தது. அது என்னவென்று உற்று நோக்க , எதுவும் அவனால் பார்க்க முடியவில்லை. அதையும் தன் பையில் வைத்துக் கொண்டான். அவருடைய சட்டை பின் அவர் பேனா என கண்ணில் பட்ட சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டான்.

அவர் எதாவது குறிப்பாவது வைத்திருக்கிறாரா அந்த அரச குடும்பத்தின் ரகசியம் பற்றி என வீடு முழுவதும் தேடியும் அவன் கண்ணில் எதுவும் படவில்லை. அந்தக் கோவிலுக்கே சென்று பார்க்கலாமா என்று யோசிக்க , பத்து நாட்களுக்கு அவன் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று கூறிவிட்டனர்.

வேறு வழியின்றி வீட்டிலேயே இருக்க, அரவிந்தின் கடைக்குச் சென்று பார்க்கலாம் என்று கிளம்பினான். அவன் கடை கோவில் உள்ள வீதியில் தான் இருந்தது. கால் நடையாக நந்து சென்றவனை வழியில் கண்டவர்கள் விசாரிக்க ஒரு தலையசைப்பையே பதிலாகத் தந்துவிட்டு சென்றான்.

அரவிந்தின் கடை வாசலில் விஜய் வந்து நிற்க , அவனை வரவேற்றான்.

என்ன ணா.. எதாவது வேணுமா. போன் செஞ்சிருந்தா வந்திருப்பேனே..” அவன் எதற்கு இங்கு வந்தான் எண்பது போல இருந்தது அவன் பேச்சு.

சும்மா தான் வந்தேன். நாளைக்கு ஊருக்கு போக கார் ரெடி பண்ணிட்டியா?”விஜய் கேட்க

அக்கம் பக்கம் பார்த்து அவனும் , “ம்ம் சொல்லிட்டேன்என பொதுவாகக் கூறி வைத்தான். அங்கே சுவருக்குக் கூட காது இருக்கும் என்பதை அறிந்தவன் அரவிந்த்.

அவன் பயந்தது போல, அவன் கடைக்கு வந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் ஓடிச் சென்று கிரிஷ்ணமாச்சாரியிடம் ஒருவன் சொல்ல,

ஊருக்கு போறானா? எந்த ஊருக்கு? அவன் இனிமே தோண்ட ஆரம்பிச்சுடுவான்னு நினச்சேன்.” துச்சமாக நினைத்து சிரித்தார்.

உடனே ஜானவிக்கு அழைத்து அவர் சொல்ல,

என்னமோ அவன் தான் உலகத்தையே தல கீழா மாத்தப்போறதா சொன்னீங்க. அதுக்குள்ள ஊருக்கு போறானா.. நம்ப முடியலையே.. ஒழுங்கா கேட்டீங்களா?” நம்பாமல் கேட்டாள் ஜானவி.

என் ஆளு தான் அர்விந்த் கடைக்கு அவன் வந்ததையும் ஊருக்கு போக கார் கேட்டதையும் சொன்னான். ஆனா எனக்கும் சந்தேகமா தான் இருக்கு. எதுக்கும் நான் சரியா விசாரிக்க சொல்றேன்.” என்றவர் மீண்டும் அந்த ஆளை அனுப்ப,

அதற்குள் விஜய் அங்கிருந்து சென்றிருந்தான். அவன் வேலைக்கு ஆக மாட்டான் என்று அவரே இறங்கினார்.

கிருஷ்ணமாச்சாரி அவன் மூன்று நாள் காரியம் முடிக்கும் வரை பொறுமை காத்தார். இன்று அவர் வேலையைத் துவங்கினார். மீண்டும் அரூபமாக அவனைச் சுற்ற , அவன் யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் அவனுடைய மேல் அதிகாரியிடம் பேசினான்.

இன்னும் எனக்கு ஒரு மாசம் லீவ் வேணும் சார். இது தவிர்க்க முடியாத ஒன்று.” என அவன் கூற,

மறுபக்கம் பதில் வந்ததற்கு , “ரொம்ப தேங்க்ஸ் சார். நான் என்னோட லேப்டாப்பில் பார்த்து கூட டீடைல்ஸ் அனுப்பறேன். நான் போற இடம் வள்ளிக்காடுன்னு ஒரு கிராமம் அங்க நெட் கிடைக்கறது கஷ்டம். நான் வந்ததும் உங்களுக்கு மெயில் பண்றேன். நன்றி.” என இணைப்பைத் துண்டித்தான்.

கிருஷ்ணமாச்சாரி அவன் ஒரு மாதம் லீவ் கேட்டதை நினைத்து அதிர, அவன் இப்போது செல்லவிருக்கும் இடத்தையும் அறிந்துகொண்டதில் இது எங்கு போய் முடியும் என்பதையும் உணர்ந்தார்.

உடனே ஜானவிக்கு அழைத்து விஷயத்தைக் கூற, அவள்

அவன் அங்க போகாம இருக்க என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுங்க. உங்க தம்பி நிச்சயம் அவன் பக்கம் தான் இருப்பாரு. அவர பாத்து அவன் விஷயத்தை தெரிஞ்சுகிட்டா நேரா என்கிட்ட தான் அவனோட அடுத்த மூவ் இருக்கும். அது நடக்கக் கூடாது.” விஜயை தடுக்க முயற்சி செய்தாள்.

ஆனால் விதி அவள் பக்கம் நிற்க மறுத்தது. விஜயின் செயல்கள் மட்டும் அல்ல, அவனுடன் உண்டாகப் போகும் பந்தமும் அவளால் தடுக்க முடியாத ஒன்று என்பதை அவள் உணர வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் கிருஷ்ணமாச்சாரி வேறு நினைத்தார்.

அவன் ஊருக்கு போறத மட்டுமில்ல, உங்க விதிய மாத்த தான் நான் போறாடறேன்,’ என தனி திட்டம் ஒன்றை வகுத்தார்.

அனந்தாச்சாரி விட்டுப் போன அவரது சக்திகளை மீண்டும் பெற, யாரும் செல்ல அஞ்சும் அந்தக் காட்டுக்கு ஊரடங்கிய பின்னர் சென்று கொண்டிருந்தார்.

error: Content is protected !!