Thithikkum theechudare – 5

தித்திக்கும் தீச்சுடரே – 5

முகிலன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். தன் தாடையை தடவினான். “என்ன யோசனை?” மீரா பட்டென்று கேட்டாள்.  

“உன்னைய பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா? எப்படி இருந்தாலும் இட் இஸ் அ மேனுஃபக்சரிங் டீஃபெக்ட் (Manufacturing defect)” என்றான் மெல்லிய புன்னகையோடு.  

“அது என் பிரச்சனை” அவள் விலகல் தன்மையோடு கூற, “அப்படி எல்லாம் ஒரு பெண்ணை என்னோட கூட்டிகிட்டு போக முடியாது. என்ன யாருன்னு பேச்சு வரும். என் பெயர் கெட்டு போய்டும். அதோட உன் பெயரும் கெட்டு போய்டும்” அவன் கூற, அவள் சிரித்து கொண்டாள்.

“என்ன சிரிக்குற? உனக்கு அதில் எல்லாம் கூட அக்கறை இல்லையா?” அவன் கேட்க, “ஹீரோ, அதை இங்க நீங்க என்னை கூட்டிகிட்டு வாரத்துக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்” அவள் பளிச்சென்று கூற, “நீ இங்க வந்ததால் உனக்கு ஒரு தீங்கு கூட வராது. அதுக்கு நான் உத்திரவாதம் தருவேன்.” அவன் கூற, அவள் மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், தன் அலைபேசியில் மணியைப் பார்த்தாள்.

“நான் உங்களை பத்தி ஒரு கவர் ஸ்டோரி பன்றேன்னு சொல்லிடுறேன்” அவள் சட்டென்று அவன் கூறிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிக்க, “இதுக்கு உங்க தேவசேனா மீடியா ஒதுக்குமா?” அவன் நக்கலாக கேட்க, “தேவசேனா ஒதுக்கலைனா, மீரா அங்க இருக்க மாட்டான்னு சொல்லுவேன் . மீரா வெளிய போறதை தேவசேனா ஒருநாளும் விரும்பாது. அதெல்லாம் என் பிரச்சனை” அவள் பதிலில் உறுதி இருந்தது.

அவனிடம் அமைதி. ‘மீராவுக்கும் ஜெயசாரதிக்கும் ஆகாது. ஜெயசாரதிக்கு என்னை கண்டால் ஆகாது. இந்த மீராவிடம் கைகோர்த்தால், எனக்கு ஏதாவது லாபம் இருக்குமா?’ அவன் சிந்தித்தான்.  

‘அரசியல் வேண்டாமுன்னு ஒதுங்கனுமுனு நான் நினைக்குறேன். ஆனால், அப்பாவும் பெண்ணும் விடமாட்டாங்க போலவே. இறங்கி விட வேண்டியது தான் ஆடு புலி ஆட்டத்தில்’ அவன் தலையசைத்துக் கொண்டான்.

“நீங்க யோசிச்சி சொல்லுங்க. எனக்கு நேரமில்லை. நீங்க என்னை கூட்டிட்டு வந்த வேலை உங்களுக்கும் முடிச்சிருக்குமுன்னு நினைக்குறேன். நான் வந்த வேலையும் முடிஞ்சிருச்சு” அவள் கிளம்ப, “எனக்கு ஓகே. ஆனால், ஒரு கேள்வி” அவன் முகத்தில் சிந்தனை பரவ,  

‘என்ன’ என்பது போல், அவள் புருவத்தை உயர்த்தினாள். “நீ நினைச்சிருந்தா, இங்க வராமல் இருந்திருக்கலாம். என் கூட பயணிக்க நீ விரும்ப காரணம்” அவன் சந்தேகமாக கேள்வி கேட்க, “என்ன ஹீரோ இப்படி சொல்லிடீங்க? ஒரு ஹேண்ட்ஸம் ஹீரோ கூட ஒர்க் பண்ண ஒரு இளம் பெண் விருப்பப்படுறதுக்கெல்லாம் காரணம் கேட்பீங்களா?” அவள் குறும்பு புன்னகையோடு கேட்டாள்.

“இளம் பெண்ணா? நான் அப்படி யாரையும் இங்க பார்க்கவே இல்லையே. சிங்கம், புலி , சிறுத்தைன்னு பல முகங்களை மட்டும் தான் பார்த்தேன்” அவன் தன் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கி கூறினான்.

‘மட்டம் தட்டல். ஆனால், மிக நாகரிகமாக தகாத சொற்களை உபயோகிக்காமல், ஒரு மட்டம் தட்டல்.’ அவள் மனம் அவனை மெச்சி கொண்டது.

அவள் இப்பொழுது பெரிதும் புன்னகைத்தாள். “அது நீங்க பார்க்குற பார்வையில் தான் இருக்கு. என்னை உங்கள் ரசிகையா பார்த்தா நான் ரசிகை தான். ஆனால், நீங்க யோசிச்சீங்களே ஆடு புலி ஆட்டம்ன்னு…” அவள் அவனை கண்டுகொண்டதை வெற்றி சிரிப்போடு கூறி, மேலும் தொடர்ந்தாள்.

“அந்த ஆட்டத்தில் நானும் உண்டு. அது ஆடா? இல்லை புலியா? இல்லை உங்க ஆட்டத்தை கலைக்கும் நரியான்னு? நீங்க தான் முடிவு பண்ணனும். நான் கிளம்புறேன். சீக்கிரம் நாள் நேரம் எல்லாம் சொல்லுங்க. உங்க படப்பிடிப்புக்கு நான் வரேன்.” அவள் கிளம்ப, அவன் தலையசைத்து விடை கொடுத்தான்.

வழமையாக எல்லா இடத்திற்கும் தனியாக செல்பவள் தான். ஆனால், இன்று இது சற்று ஊருக்கு வெளியே அது மட்டுமின்றி நேரமுமாகிவிட்டது. அவள் கிளம்புவதில் பரபரப்பு காட்டினாள். அவள் கிளம்பவும், அவன் தன் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அவள் இடத்திற்கு செல்லும் வரை பின்னே சென்றுவிட்டு திரும்பினர்.

அவர்கள் வருவதை கண்ணாடி வழியாக பார்த்து கொண்ட மீராவின் முகத்தில் மென்னகை பரவியது. முகிலனிடம் அவளுக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவன் தன்னை சந்திக்க விரும்புவதை அறிந்து கொண்டாள். தனக்கு தேவையான காரியம் முகிலன் வழியாக நடக்க வாய்ப்பிருக்கிறது என்று அவள் உள் மனம் சொல்ல, தனக்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்பினாள்.

தன் வண்டியை நிறுத்திவிட்டு அவள் உள்ளே செல்ல, ஜெயசாரதி ஹாலில் சோபாவில் அமர்த்திருந்தார். தன் மனைவி வள்ளியம்மையின் முகத்தை பார்த்தார். அவரோ மணியை பார்த்து விட்டு தன் கணவனை பார்த்தார். ஜெயசாரதி தன் மகளைப் பார்த்தார்.  

“எங்க போயிட்டு வர மீரா?” அவர் கேட்க, “வெளிய போயிட்டு வரேன்” என்றாள் மீரா.

“அது தான் எங்கன்னு கேட்குறேன்” அவர் அழுத்தமாக கேட்க, “எனக்கு உங்க கிட்ட பேச பிடிக்கலை.” அவள் படியேற எத்தனிக்க, “முகிலனை பார்த்துட்டு வரியா?” அவர் கேட்க, அவள் சலிப்பாக அவர் முன்னே வந்து நின்றாள்.

“இந்த வேவு பாக்குற வேலை எல்லாம் வேண்டாம்முனு சொல்லிருக்கேனில்லை?” அவள் கேட்க, “இனி நீ அவனை பார்க்க கூடாது” அவர் கண்டிப்போடு கூற, “அதை சொல்ல நீங்க யாரு?” என்று கேட்டாள் மீரா. அவர் அருகே அமர்ந்திருந்த, வள்ளியம்மை அங்கு நடக்கும் காட்சியை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“உன் அப்பா” என்றார் அவர் கோபமாக.  “வாவ்” என்றாள் மீரா ஆச்சரியமாக.

“தீபா அக்கா” என்று சத்தம் கொடுத்தாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் நடுத்தர வயதில் ஒரு பெண் ஓடி வர, “அக்கா டின்னெர் என்ன?” என்று கேட்டாள். “சப்பாத்தி குருமா” அவர் கூற, “தட்டில் எடுத்துட்டு வரமுடியுமா அக்கா. நான் கை கழுவிட்டு வரேன். இங்க எதோ சுவாரசியமா பேசுறாங்க. நான் பேசிக்கிட்டே சாப்பிடறேன்” அவள் கூற, அவரும் உணவு கொண்டு வந்தார். மீராவும் முகம் கை கால் கழுவிட்டு ஜெயசாரதிக்கு எதிரே சோபாவில் அமர்ந்து சப்பாத்தி வில்லையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

“ம்… இப்ப சொல்லுங்க. என்னவோ சொன்னீங்களே” யோசனையாக கேட்க, ஜெயசாரதி மௌனமாக அமர்ந்திருந்தார். “ஒன்னும் இல்லைனா, நான் அங்க போய் சாப்பிடுறேன்” மீரா கூற, “நீ முகிலனை சந்திக்க கூடாதுன்னு சொன்னேன்.” அவர் பற்களை நறநறக்க, “அதுக்கு அப்புறம்?” மீரா புருவங்களை உயர்த்த,

“உன் அப்பான்னு சொன்னேன்” அவர் மீண்டும் அதே அழுத்தத்தோடு கூற, “வாவ்… வாவ்… நைஸ்” அவள் கூறி, “குருமா நல்லாருக்கு அக்கா” அது தான் முக்கியம் என்பது போல் உரக்க கூறிவிட்டு, “சரி எப்பலேர்ந்து எனக்கு அப்பா? புது பதவியா?” என்று அவள் கேட்க, “ஏய்” என்றார் வள்ளியம்மை.

“ஷட் அப்” ஒற்றை விரல் உயர்த்தி வள்ளியம்மையை மிரட்டினாள். “சத்தம் வர கூடாது. உங்க ஏய், ஒய் எல்லாம் உங்க புருஷன் கிட்ட மட்டும் தான் இருக்கணும். ஏதாவது என் கிட்ட காட்டினீங்க, இருக்கிற இடம் தெரியாமல் போயிடுவீங்க” அவள் மெதுவாக மிக மெதுவாக ஆனால், அழுத்தமாக கூற, வள்ளியம்மை படக்கென்று எழுந்து உள்ளே சென்றார்.  

“நீ முகிலனை இனி பார்க்க போகாத. அவனால், நமக்கு எப்ப வேணும்ன்னாலும் எந்த பிரச்சனை வேணும்ன்னாலும் வரலாம்” ஜெயசாரதி இப்பொழுது கெஞ்சுதலாக கூற, “நமக்குன்னு ஏன் என்னை உங்க கூட சேர்த்துக்கறீங்க. உங்களுக்கு எந்த பிரச்சனை வேணும்ன்னாலும் வரலாமுன்னு சொல்லுங்க. அது உங்க பிரச்சனை. என்னோடதில்லை. நான் என் விருப்பப்படி தான் இருப்பேன்.” என்று கூறிவிட்டு,

“அக்கா, கூட இரண்டு சப்பாத்தி வைங்க. எனக்காக சூடா போட்டீங்களா அக்கா. தேங்க்ஸ் அக்கா. ரொம்ப நல்லாருக்கு” என்று கூறி சப்பாத்தி உண்பதே வாழ்நாள் லட்சியம் என்பது போல் சாப்பிட்டாள்.  

ஜெயசாரதி தன் மகளை கூர்மையாக பார்த்தார். வெளியே இருக்கும் பல பிரச்சனைகளை தவிடு பிடியாக்கிய அவரால் மீராவை எதுவும் செய்ய முடியவில்லை. பாசம் அவரை தடுப்பது ஒரு பக்கம் என்றால், மீராவின் அழுத்தம் பிடிவாதம் அவளை சுற்றி அவள் அமைத்துக் கொண்ட வேலி என எல்லாம் அவருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.  

உணவை முடித்து கொண்ட மீரா தன் அறைக்கு சென்று உடையை மாற்றி கொண்டு மெத்தையில் படுத்துக் கொள்ள, ஜெயசாரதி சிந்ததையோடு சோபாவில் அமர்ந்திருந்தார்.

*** **** ***

‘மீரா வீட்டிற்கு சென்றுவிட்டாள்’ என்ற குறுஞ்செய்தியை பார்த்த பின்னரே அங்கிருந்து கிளம்பினான் முகிலன். முகிலன் வீட்டிற்கு செல்ல, அங்கு அவன் தாயும் தந்தையும் காத்திருந்தனர். “என்ன தலையில் அடி?” அவன் உள்ளே நுழைந்ததும், அமிர்தவல்லி கேட்க, “எதோ பதட்டத்தில் வரும் பொழுது இடிச்சிகிட்டேன் அம்மா” அவன் தரையை பார்த்தபடி கூற,  

“உனக்கு பொய் சொல்ல வராது முகிலன்” அவர் கூற, “அம்மா” அவன் தன் தாயை பதட்டமாக பார்த்தான். “இல்லை அம்மா. அது…” அவன் தடுமாற, “விடுப்பா… அம்மா கிட்ட சொல்ல வேண்டாமுன்னா சொல்ல வேண்டாம். ஏன் பொய் சொல்லி கஷ்டப்படுற?” அவர் சமாதானம் போல் கூற, “அம்மா, டிரஸ் மாத்திட்டு சாப்பிட வரேன்” அவன் சில நிமிடங்களில் சாப்பிட அமர்ந்தான்.

“முகிலா, சீக்கிரம் கல்யாணாம் பணிக்கோயேன்” அமிர்தவல்லி கூற, “ஆமாடா, உங்க அம்மாவால் தினமும் ராத்திரி உனக்கு சாப்பாடு எடுத்து வைக்க முடியலை” கோவிந்தராஜன் கேலி போல கூறினார்.

“உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான். முகிலனுக்கு வயசு ஏறிட்டே போகுது” அவர் தன் கணவனை கண்டிக்க, “அம்மா, எனக்கு எண்பத்தி ரெண்டு வயசு இருக்குமா?” அவன் அப்பாவியாக கேட்க, அருகே இருந்த கரண்டியால் அவனை நங்கென்று அடித்தார்.

‘இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை போல. எல்லார் கிட்டயும் அடி வாங்குறேன்.’ எண்ணியபடி சாப்பிட்டான். “முகிலா, நீ வேண்டாமுன்னு சொன்னாலும் நான் பொண்ணு தேடிகிட்டு தான் இருக்கேன். எல்லாரும் உனக்கு பொண்ணு கொடுக்க பயப்படுறாங்க. சினிமாவில் நடிக்கிற பையன் எல்லாம் வேண்டாமுன்னு சொல்லறாங்க. அதுல அரசியல் பேச்சு வேறன்னு ரொம்ப பயப்படுறாங்க.” அமிர்தவல்லி வருத்தமாக கூறினார்.

“நாங்களும் உன் சம்மதம் இல்லாம அழுத்தமாவும் தேடலை. நீ சரின்னு சொல்லுப்பா. சொன்னால்…” தன் தாயின் பேச்சை இடைமறித்தான் முகிலன். “சரிம்மா, பொண்ணு பாருங்க.” அவன் கூற, அமிர்தவள்ளியின் முகத்தில் சந்தோசம்.

“பாருன்னு சொல்லிட்டான் உன் மகன். பொண்ணு எப்படி இருக்கனுமுனு கேட்டுக்கோ. அவன் படத்தில் நடிக்கிற மாதிரி அழகி எல்லாம் நிஜத்தில் வரமாட்டாங்க” அவர் மீண்டும் கேலி கோதாவில் இறங்க, “ஆமா முகிலா அதையும் சொல்லு” அக்கறையோடு கேட்டார் அமிர்தவல்லி.

“அம்மா, என்னை ஹீரோன்னு நினைக்காம என் கிட்ட இயல்பா இருக்கனும்.” அவன் தன் தாயிடம் கூற, அவன் கண் முன் மீரா தோன்றினாள். எந்தவித ஆர்பாட்டமுமின்றி அவனை அசட்டையாக பார்த்த மீராவின் கண்கள் அவனை அந்த நொடி ஈர்த்தது.

“தைரியமான பொண்ணா இருக்கனும் அம்மா. என் துறையில் ஆயிரம் பிரச்சனை வரும். என்னை நம்புற பொண்ணா இருக்கணும் அம்மா. என்னை பத்தி எப்பவேணுமினாலும் ஏதாவது பேசுவாங்க. அதை அந்த பொண்ணு நம்ப கூடாது. என் மேல நம்பிக்கை இருக்கிற பொண்ணா இருக்கணும்.” அவன் அடுக்கி கொண்டே போக, ‘ஹீரோ சார் இப்படி பண்ண மாட்டாங்க’ என்ற பொருளில் மீரா சொன்னது நினைவு வர முகிலன் சிரித்துக் கொண்டான்.

“பெண்ணை பார்த்துட்டியா முகிலன்” கோவிந்தராஜன் அவன் முன்னே வந்து கேட்க, “அப்பா…” அவன் பதறினான். “இல்லை, நீ சொல்றதை பார்த்தா அப்படி தோணுது” அவர் ராகமாக இழுக்க, “அதெல்லாம் இல்லை அப்பா” என்றான் தன் உணவில் கவனமாக இருப்பது போல் பாவனை காட்டி.

“உன் தலையில் அடித்ததும் ஒரு பொண்ணு தானோ? பார்த்து முகிலா பல ராஜ்ஜியங்கள் விழுந்து போன சரித்திரத்திற்கு பின்னாடி அழகும் அறிவும் நிறைந்த ஒரு பெண் தான் இருப்பா” என்று கோவிந்தராஜன் கேலி போல் கூறி சிரிக்க, “அப்பா, உங்க தலை இப்ப உடைய போறது நிஜம்” என்று அவன் சிரித்தான். அவர்கள் இருவரையும் அமிர்தவல்லி கோபமாக முறைக்க பாவனை செய்து தோற்று போக, “அம்மா, அப்படியே கோபம் வராத பொண்ணா பாருங்க அம்மா” என்று தனக்கு இன்று அடிபட்ட இடத்தை தடவி கொடுத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு அவன் அறைக்கு சென்றான். அப்பொழுது அவனுக்கு ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. அழைக்கும் நபரின் பெயரை பார்த்து அவன் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.

தித்திப்புகள் தொடரும்…