தொலைந்தேன் 31💜

தொலைந்தேன் 31💜
கையிலிருந்த ஹிப் ஃப்ளாஸ்க்கில் ஒவ்வொரு மிடறு ரம் அருந்தியவாறு தன் அறை பால்கனியிலிருந்து ரிஷி வானத்தை வெறித்துக்கொண்டு நின்றிருக்க, சரியாக அவனுக்கொரு அழைப்பு. அதுவும் மேக்னாவிடமிருந்து.
திரையைப் பார்த்தவன், அழைப்பையேற்று காதில் வைத்து அமைதியாக இருக்க, “ரிஷ், அப்பா சொன்னாரு…” என்று மேக்னா தயக்கமாக இழுத்து, “அது ட்ரூதானா?” என்று கேட்டு அவன் பதிலுக்காகக் காத்திருக்க, ரிஷியிடத்திலோ பலத்த அமைதி.
“ரிஷ்…” என்று அவள் மீண்டும் அழைக்க, “ம்ம்…” என்று தன்னிருப்பை உணர்த்தியவன், “இட்ஸ் ட்ரூ. பட், ஐ லவ் சனா.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, “வாட்எவர்!” என்று அலட்சியமாகத் தோளை குலுக்கிக்கொண்டவள், ‘எல்லாம் சரியாகும்’ என்று நினைத்தவாறு கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டாள்.
அடுத்த சில நிமிடங்களிலேயே ரிஷியின் அறைத் தொலைப்பேசி ஒலிக்கப்பட, அதையேற்றவனுக்கு விழிகள் சற்று அதிர்ச்சியில் விரிந்து சுருங்கின.
அன்று மாலை, புகைப்பட போட்டிக்காக ரிஷி எடுத்த புகைப்படத்தை கொரியரில் அனுப்பி வைத்துவிட்டு மன ஆறுதலுக்காக கடற்கரை மணலில் உலாவிக்கொண்டிருந்தாள் சன.
அலைகள் வேகமாக வந்து அவள் பாதத்தை தொட முயற்சி முடியாது வெறும் தூறல்களை அவள்மேல் சிந்திவிட்டுச் செல்ல, அவளின் மனக்கண் முன் ஒரு சம்பவம் படமாக ஓடியது.
ரிஷி சனாவை ஒருதலையாகக் காதலித்துக்கொண்டிருந்த சமயம்,
அப்போதுதான் திருமண விழாவொன்றில் படம்பிடித்துவிட்டு இந்தருடன் பேசியவாறு தன் வீட்டை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள் அவள்.
“ஏய் சனா, ஒரு பெரிய ஃபோட்டோங்ராஃபி கான்டெஸ்ட் வருது. நீ வேணா கலந்துக்குவே!” என்று இந்தர் சொல்ல, “அட போடா! நான் கலந்துக்கிட்டா மட்டும் என்னடா ஆக போகுது, எவன்கிட்ட காசு இருக்கோ அவனுக்குதான் கொடுக்க போறாங்க.” என்றாள் சனா தன் விழிகளை உருட்டியவாறு.
“பேச்சு மட்டும்தான் செயல்ல எதுவுமில்ல.” என்று முறைத்தவன், “மொதல்ல முயற்சி பண்ணு, அப்றம் பார்த்துக்கலாம்” என்று அவளுக்கு அறிவுரை சொல்லி முடிக்கவில்லை,
அவனை சலிப்பாகப் பார்த்தவள், “போடாங்கு…” என்று அவனின் முதுகில் ஒரு அடி போட, பரபரவென “ஆ…” என்ற அலறலோடு முதுகை தேய்த்துக்கொண்டான் இந்தர்.
சனாவோ அவனின் அடுத்த தாக்குவதை புரிந்தே ஓடுவதற்கு தயாராக, அவளைப் பாய்ந்துப் பிடித்து பாதி அணைத்தவாறு தன் கை வளைவுக்குள் வைத்துக்கொண்டவன், “என்னையா அடிக்குற, உன்னை…” என்றுக் கத்தியவாறு அவளுக்கு பிடிக்காதென்று தெரிந்தே அவளின் மூக்கை இறுகப் பிடித்திழுக்க,
“அடிங்க, பிடிக்காதுன்னு தெரிஞ்சும் செய்றல்ல…” என்றுக்கொண்டே அவன் கை வளைவுக்குள்ளேயிருந்து அவளோ அவன் கையை நன்றாக கிள்ளியெடுத்தாள்.
இப்படியே இருவரும் மாறிமாறி வீதியோரத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்க, அவர்களுக்கு எதிர்திசையிலிருந்து இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ரிஷிக்கு அத்தனை ஆத்திரம்.
உடனே தன்னவளுக்கு அவன் அழைத்ததும், அழைப்பின் ஒலிக் கேட்டு இந்தரிடமிருந்து விலகி திரையைப் பார்த்தவளின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.
எதுவோ புரிந்தது போல் விழிகளைச் சுழலவிட்டு அவள் தேட, அவள் கண்களுக்குப் பட்டது ரிஷியின் கார்.
உதட்டைச் சுழித்துக்கொண்டவள், “நமக்கே தெரியாம நமக்கு ஆப்ரேஷன் பண்ணி நம்ம உடம்புக்குள்ள ஜீபிஎஸ் பொருத்தியிருப்பானோ, எங்க போனாலும் பின்னாடியே வந்துடுறானே!” வாய்விட்டுச் சொன்னவாறு, “இந்து, நீ போ! நான் வர்றேன்.” என்றவள், அவன் தன்னை புரியாது பார்ப்பதைக் கூட கண்டுக்கொள்ளாது காரை நோக்கி நடந்தாள்.
வழக்கம் போல் அவள் காரை நெருங்கும் போது கார்கதவு தானாக திறக்கப்பட, உள்ளே அவள் ஏறியமர்ந்ததும்தான் தாமதம், அவள் முழங்கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் ரிஷி. அவன் பிடியில் அத்தனை அழுத்தம்.
“ஸ்ஸ் ஆஆ…” என்று வலியில் முணங்கியவாறு, “வலிக்குது வேது, ஏன் இப்படி…” என்று சொல்லிக்கொண்டு நிமிர்ந்தவள், அவனின் சிவந்து இறுகிய முகத்தைப் பார்த்து வாயை மூடிக்கொள்ள, அவளை உறுத்து விழித்தான் ரிஷி.
“ஆமா… அவன் யாரு? ரொம்ப நெருங்கி தொட்டு பேசுற அளவுக்கு இருக்கு. இப்போ நான் பிடிச்சதுக்கு மட்டும் கத்துற.” என்று பற்களைக் கடித்துக்கொண்டு அவன் கேட்க, முதலில் புரியாது சிலகணங்கள் விழித்த சனா, பின்னரே அர்த்தம் புரிந்து அவனை பதிலுக்கு முறைத்துப் பார்த்தாள்.
அவன் பிடியிலிருந்து கைகளை விலக்க திமிறியவாறு, “நான் யார் கூட பழகினா உனக்கென்னடா டுபுக்கு? நீ உன் வேலைய மட்டும் பாரு, என்னை விடுடா மொதல்ல! நீ பண்றது கொஞ்சம் கூட நியாயமே இல்லை.” என்று அவள் அடித்தொண்டையிலிருந்து கத்த, அவனுக்கோ மேலும் உரிமை கலந்த கோபம்.
மூச்சு வாங்கியவாறு அவளை சில கணங்கள் வெறித்தவன், அவள் கையை விடுத்து அவள் கன்னத்தைத் தாங்கி, வேகமாக அவள் இதழை தன்னிதழால் சிறைப்பிடிக்க, எப்போதும் போல் அவனுடைய திடீர் முத்தத்தில் அதிர்ந்து விழிகளை சாரசர் போல் விரித்தாள் அந்த மங்கை.
அவனுக்கோ அத்தனை கோபமும் இப்போது இறங்கிவிட்ட உணர்வு. விழிகளை மூடி அவள் இதழ்சுவையை அனுபவித்தவன், குறும்புச் சிரிப்போடு மெல்ல விலகி, அவளின் காதருகில் “எவ்ரிதிங் இஸ் ஃபெயார் இன் லவ் என்ட் வார். லவ் இஸ் ஆல்சோ லைக் அ வார்.” என்று கண்சிமிட்டிச் சிரிக்க, அவனுடைய அந்த விம்பம் சனாவின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.
அன்றைய சம்பவத்தின் தாக்கத்தில் வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டவள், அடுத்த சில கணங்களிலேயே வலி நிறைந்த புன்னகை சிந்தினாள்.
அவளைப் பொருத்தவரை அவள் வாழ்க்கையில் ரிஷி பாலைவனத்தில் தென்படும் கானல்நீர் போன்றவன்.
உள்ளுக்குள் சுருக்கென்ற ஒரு வலியெடுக்க, கீழுதட்டைக் கடித்து அடக்கிக்கொண்டவள், அதற்குமேல் அங்கு நிற்காது திரும்பப் போக எண்ணித் திரும்ப, சட்டென பின்னால் நின்றிருந்தவளின்மேல் மோதி நின்றாள்.
“அய்யோ சாரிங்க!” என்று சனா பதட்டமாகச் சொல்லி முடிக்கவில்லை, “இந்த சாரி முன்னாடியே கேட்டிருக்க வேண்டியது!” என்றாள் மேக்னா விழிகளில் விஷமத்தோடு.
சனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. விழிகள் மட்டும் தெரியுமளவிற்கு முகத்தை மறைத்து தன்னெதிரே நின்றிருந்த பெண்ணை சில கணங்கள் உற்றுப் பார்த்தப் பின்னரே, “சாணக்கியா…” என்ற தெரிந்த குரலில் அது மேக்னா என்று உறுதி செய்துக்கொண்டாள்.
புருவத்தை யோசனையில் நெறித்து அவள் அமைதியாக நிற்க, “எப்படியிருக்க சனா, பார்த்து ரொம்பநாளாச்சு. ஆமா… என்ன வாடி வதங்கி போயிருக்க. ரிஷியோட கவனிப்பு இல்லையோ?” என்று மேக்னா ஏளனமாகக் கேட்க, சனாவோ அவளின் பேச்சை கேட்க விரும்பாதது போல் முகத்தை சுழித்துவிட்டு அங்கிருந்து நகரப் போனாள்.
ஆனால், மேக்னா அவ்வளவு இலகுவாக விட்டுவிடுவாளா என்ன!
“ஏய் வெயிட் வெயிட்! முக்கியமான மேட்டர். அதை மட்டும் கேட்டுட்டு போ!” என்று மேக்னா அவளை வழி மறிப்பது போல் வந்து நிற்க, விழிகளை உருட்டியவள், “என்ன?” என்று கேட்டாள் முறைப்பாக.
அவளை சில கணங்கள் கேலிச் சிரிப்போடுப் பார்த்து, “நெக்ஸ்ட் மன்த் எனக்கும் ரிஷிக்கும் நிச்சயதார்த்தம். கல்யாணத்துக்கு கூப்பிட ஆசைதான். பட், ரொம்ப பெரிய ஆளுங்க வருவாங்க. உன்னை போய் எப்படி கூப்பிட்டு…” என்று நிறுத்தி மேக்னா வாயைப் பொத்திச் சிரிக்க, அவள் தன் தரத்தைப் பற்றி பேசியதெல்லாம் சனாவின் காதுகளுக்கு விழவேயில்லை.
தன்னவனுக்கும் மேக்னாவுக்கும் நிச்சயதார்த்தம் என்று மட்டுமே அவள் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இதுவே பழைய சனாவாக இருந்தால் எதிரிலிருப்பவள் அவளின் தரத்தைப் பற்றி பேசிய அடுத்தநொடி அவளின் கன்னம் பழுத்திருக்கும்.
ஆனால் இன்று எதையும் உணர முடியாது அசைவற்று நின்றிருந்தவள், மேக்னா பேசிவிட்டு சென்றதையும் உணரவில்லை, தான் எப்படி வீடு வந்துச் சேர்ந்தோம் என்பதையும் உணரவில்லை.
தொடர்ந்து இரவுகளில் அழுததில் விழிகளிலோ நீர் வற்றிவிட்டது போலும்! அழுகை கூட வராது உச்சகட்ட விரக்தி நிலையில் தரையில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
இந்த போலி வீராப்பை விட்டு அவனுக்கு ஒரு அழைப்பு எடுத்து விடுவோம் என்று மனம் உந்த மூளையோ அவனே சம்மதித்துவிட்டான் பிறகென்ன என்று கேட்டு அவளை தடுத்துக்கொண்டிருந்தது.
பல நாட்களுக்கு பின் தன்னவனின் பிரிவை தாங்க முடியாது மீண்டும் தன் தாயைப் பார்த்து கேட்டது அவள் மனம் ‘உன் கூடவே என்னை கூட்டிட்டு போயிருக்கலாமேம்மா’ என்று.
அடுத்து வந்து நாட்கள் காலில் சக்கரத்தைக் கட்டியது போல் வேகமாக ஓட, இன்னும் நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே.
அதற்குள் தொலைக்காட்சி செய்திகளிலும் வலைத்தளங்களிலும் மேக்னாவுக்கும் ரிஷிக்கும் திருமணமென்ற செய்தி வேகமாக பரவின.
அதற்கு காரணம் கூட அமுதாதான்.
ஊர்ப்பெருமைக்கு எல்லா இடத்திலும் அவர் செய்தியை பரப்பியிருக்க, சுற்றியிருந்தவர்களுக்கு எரிச்சலாக இருந்தாலும் அவரோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளவேயில்லை. கூடவே அமுதா போலியான சிரிப்புடன் “மருமகனே… மருமகனே…” என்று ரிஷியை நெருங்கினாலும், அவன் அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
அன்று, வீட்டிற்கு பின்னாலிருக்கும் நீச்சற்தடாகத்தின் படியில் கால்களை மட்டும் நீரில் விட்டு ஆட்டியவாறு ரிஷி ரம் அருந்திக்கொண்டிருக்க, “ரிஷ்…” என்றழைத்தவாறு அவனருகே வந்தமர்ந்தார் ராகவன்.
அவரை திரும்பிப் பார்க்காது, “இப்போ ரொம்ப ஹேப்பியா இருப்பீங்களே, நீங்க எதை எதிர்ப்பார்த்தீங்களோ அது நடந்திடுச்சு.” என்று போதையில் குளறியபடிச் சொல்ல, அவனை கூர்ந்து நோக்கியவர், “ரொம்ப ஏறிடிச்சு போலயிருக்கு. இப்போ போய் தூங்கு, அப்றம் பேசிக்கலாம்.” என்றார் அமைதியாக.
ஆனால், அவனிருக்கும் போதையில் தன் மனதிலுள்ளதை கொட்டிவிட மட்டும்தான் அவனுக்கு தோன்றியது.
“என்ன, இல்லை என்னன்னு கேக்குறேன். பெத்த பொண்ணு மேல ரொம்ப பாசமோ, எல்லாத்தையும் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க. மாமாவோட பேச்சை என்னைக்கும் மீற கூடாதுன்னு அப்பா அவர் சாக முன்னாடி சொன்ன ஒரே காரணத்துக்காகதான் இந்த ரிஷி அமைதியா இருக்கான். இல்லைன்னு வைங்க……” என்று கத்தியவாறு தள்ளாடியபடி மதுபோத்தலோடு எழுந்து நின்றவன், “ஏய் அமுதா, உன்னாலதான்டீ இவ்வளவும். உனக்கெல்லாம் இனி நோ மரியாதை.” என்று வாய்க்குளற கத்த, தலையிலடித்துக்கொண்டார் ராககன்.
“ரிஷ், அமைதியா இரு, சொல்றேன்ல! உனக்கு பிடிக்கலன்னா நீயே…” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை, “அப்பா ஆசைப்பட்டுடாராமே! நான் என்ன பண்ண முடியும். அப்பாவுக்காக நான் எதுவும் பண்ணதில்லை. இதையாச்சும்…” என்றவன் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு தள்ளாடியபடி நகர, ராகவனுக்கோ அவனை பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால், அவர் நினைத்தது போல் அவன் அவனது அறைக்குச் செல்லவில்லை. நேராக தன் காரை நோக்கிச் சென்றவன், போதை மயக்கத்தில் காரை செலுத்தியது என்னவோ சனாவின் வீட்டை நோக்கிதான்.
அதேநேரம், தொண்டையிலிருந்து இறங்காத உணவை எப்படியோ விழுங்கி பாதி உணவை உண்டு முடித்தவள், மீதியை மூடி வைத்துவிட்டு அப்போதுதான் ஹோலில் படுக்கையை விரித்து அலைப்பேசியை நோண்டத் துவங்க, சரியாக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கும் செய்தி அவள் விழிகளுக்கு தென்பட்டு மனதின் காயத்தை மேலும் ரணப்படுத்தியது.
அதில் விழிகள் கலங்க, அலைப்பேசியையும் பார்க்கப் பிடிக்காது அதை தூக்கியெறிந்தவள், தலையணையில் விழிநீரை துடைத்து அதிலேயே முகத்தைப் புதைத்து தூங்க முயற்சிக்க, திடீரென சமையலறை பக்கம் ஏதோ சத்தம்.
அவள் விழிகள் பட்டென்று திறந்துக்கொண்டது. சமையலறைப் பக்கம் அவள் முழுதாக திரும்பிப் பார்க்கவில்லை அதற்குள், “ஏய் அரக்கி…” என்று கத்திக்கொண்டு பின் வாசல் வழியாக நுழைந்தான் ரிஷி.
அவனைப் பார்த்ததும் ஒருநிமிடம் அதிர்ந்துப்போய் அமர்ந்திருந்தவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பல மாதங்களுக்கு பிறகு அவனை நேரில் பார்க்கிறாள். இத்தனை நாட்களாக இருந்த மனதின் வெறுமை அவன் முகத்தைப் பார்த்ததும் அகன்ற உணர்வு.
எழுந்து நின்றவள், அசையாது விழிகளை விரித்து அப்படியே நிற்க, அவளைப் பார்த்ததும் போதையிலிருந்தவன் என்ன நினைத்தானோ, தள்ளாடியபடியே வந்து அவளை வேகமாக அணைத்துக்கொள்ள, சந்தோஷத்தில் விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாக ஓடின.
சிலைபோல் சமைந்தேவிட்டாள் சனா. கூடவே இது கனவாக இருந்துவிடக் கூடாதென்று அவள் மனம் வாதிட்டது.
சில நிமிடங்கள்தான். அவளை விட்டு விலகிய ரிஷி, “என்னை மன்னிச்சிருடீ!” என்று மட்டும் சொல்லி முதல் சந்திப்பின் போது செய்த அதே வேலையை இன்றும் சிறப்பாக செய்தான்.
அதாவது, அவள்மேல் மொத்தத்தையும் வாந்தியெடுத்துவிட்டு அப்படியே தரையில் மயங்கி விழ, உச்சக்கட்ட அதிர்ச்சியில் தன்னையும் கீழே விழுந்து கிடந்தவனையும் மாறி மாறி பார்த்தவளுக்கு ஏனோ அன்று வந்தது போல் கோபம் வரவில்லை.
‘இவன் திருந்தவே மாட்டான்!’ சிறு சிரிப்போடு நினைத்துக்கொண்டவள், அவனோடு சேர்த்து தன்னையும் சுத்தப்படுத்திவிட்டு அவன் மயக்கத்திலிருந்து விழிக்கும் வரை அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
சில மணிநேரங்கள் கழித்து விடியற்காலையில் விழிப்பு தட்டவும், “ஸ்ஸ் ஆஆ…” என்று தலையை பிடித்துக்கொண்டு விழிகளைத் திறந்தவனுக்கு விழிகளைத் திறந்ததுமே தெரிந்த கூரையைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.
புருவத்தைச் சுருக்கியவன், அரவம் உணர்ந்து பக்கவாட்டாகத் திரும்பிப் பார்க்க, அங்கு தேநீர் அருந்தியவாறு ரிஷியையே பார்த்தவாறு அமர்ந்திருந்த சனா, அவன் பார்வை தன் மீது படிந்ததுமே அவனை நோக்கி ஒரு குவளையை தள்ளி வைக்க, எழுந்தமர்ந்தவன் சில கணங்கள் எதுவும் பேசவில்லை.
அவன் பார்வை பல நாட்களுக்கு பிறகு காணும் தன்னவளை மேலும் கீழும் அளவிட்டது. மெலிந்து மேலும் கறுத்துப்போய் எப்போதும் இருக்கும் குறும்புக் கண்கள் இல்லாது வாடிப்போய் அமர்ந்திருந்தவளைப் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதற, அவளுக்கும் தன்னவனின் தோற்றத்தைப் பார்க்க அதே மனநிலைதான்.
தலைவலியில் சற்று தள்ளாடியபடி எழுந்து நின்றவன், பின்வாசல் வழியாகச் செல்லப் போக, “வே…” என்று அழைக்க முயன்று வார்த்தைகளை அடக்கிக் கொண்டாள் சனா.
சட்டென்று நின்ற ரிஷி, பக்கவாட்டாகத் திரும்பி கேள்வியாகப் பார்க்க, “அது… அது வந்து… வாழ்த்துக்கள்!” என்றாள் அவள் திக்கித்திணறி.
அந்த வாழ்த்தில் ரிஷிக்கு உள்ளுக்குள் எரிமலை வெடிக்க, கோபம் தாறுமாறாக எகிறியது.
அவள்புறம் திரும்பியவன், “தன்னோட காதலிக்கிட்டயிருந்தே கல்யாண வாழ்த்து கேக்குற மொதல் ஆள் நானாதான் இருப்பேன். எனிவேய், எனக்குள்ள ஒரேயொரு கேள்விதான். இப்போ வரைக்கும் உனக்கு என்மேல எந்த ஃபீலிங்ஸ்ஸும் இல்லையா சாணக்கியா, அன்னைக்கு என் கூட படுக்…” என்று நிறுத்தி கீழுதட்டைக் கடித்து, “இருக்கும் போதும் என்மேல ஒரு சொட்டு காதலில்லையா?” என்று அழுத்தமாக அதேசமயம் நிதானமாகக் கேட்டான்.
சனா எதுவும் பேசவில்லை. ஏதோ ஒன்று அவளை பதில் சொல்லவிடாமல் தடுத்தது. பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டவள், அப்போதும் அமைதியாக இருக்க, விரக்தியாகப் புன்னகைத்தான் ரிஷி.
“ஐ அம் டன், தட்ஸ் ஓகே. தேங்க் யூ ஃபார் யூவர் விஷ். என்ட் சோரி டூ டிஸ்டர்ப்.” என்றுவிட்டு அடுத்தகணம் அவளை வேகமாக நெருங்கியவன், “என்னோட மனஆறுதலுக்காக.” என்றுவிட்டு அவளிதழில் அழுந்த முத்தத்தைக் கொடுத்து விலகி விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
ஒருநிமிடம் உறைந்துப்போய் நின்றிருந்தவளுக்கு அவன் தன்னை விட்டு மொத்தமாகச் சென்றுவிட்டான் என்பது இப்போது மூளைக்கு உரைத்தது. உணர்ந்த அடுத்தகணம் சுவற்றில் சாய்ந்தவாறு தரையில் அமர்ந்து கண்ணீர்விட மட்டும்தான் அவளால் முடிந்தது.
இருவருக்கும் மனம் தத்தமது துணையில்லாமல் வெறுமையான உணர்வு. தன்னவனை மனம் மன்னித்தும் ஏனோ தான் பொருத்தமில்லையோ என்று சனா தன்னவனை நெருங்க மறுத்தாள் என்றால், தன் அப்பாவின் ஆசையென மனோகர் சொன்ன ஒரே காரணத்துக்காக இயந்திரம் போல் மேக்னாவுடனான நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தான் ரிஷி.
அவளின் அமைதி இவனுக்குள் மேலும் ஆத்திரத்தைத் தூண்டி நடப்பதைத் தடுக்கவும் விடவில்லை.
உச்சக்கட்ட விரக்தியில் ஆவது ஆகட்டும் விதிப்படி நடக்கட்டுமென விட்டுவிட்டான் போலும்!
இவ்வாறு நாட்கள் ஓடி நிச்சயதார்த்தத்துக்கான நாளும் வந்தது. அமுதா சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த சம்பவமும் நடந்தது.