மனதோடு மனதாக – 23

th (17)

மனதோடு மனதாக – 23

23         

மறுநாளைய காலைப் பொழுது, ஜீவிதா-ராமின் வருகையில் பரபரப்பாக இருந்தது. பார்த்திபன் உம்மென்று அமர்ந்திருக்க, திலீபனும், பூரணியும், சுபத்ராவுடன் சேர்ந்து அவர்களை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தனர்..

“அவ தப்பு பண்ணிட்டா தான் அதுக்குன்னு அவளை அப்படியே விட முடியுமா? அவ தினமும் அழும் பொழுது பெத்த வயிறு எப்படி இருக்குத் தெரியுமா?” சுபத்ரா புலம்பிக் கொண்டே அவர்களுக்கான விருந்தை தயார் செய்துக் கொண்டிருக்க,

“அதுக்காக அவ செஞ்சதை என்னால அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.. ஏதோ இந்த அளவு அவங்களை வீட்டு உள்ள விடறேன்னு சந்தோஷப்பட்டுக்கோ.. என்னை எல்லாம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தாதே.. ஏதோ மாப்பிள்ளை நல்லவரா இருக்கப் போய் நிலாவை நல்லாப் பார்த்துக்கறாரு. ரெண்டு பேரும் மனசு ஒத்து வாழும் போது பார்க்க சந்தோஷமா இருக்கு. அதுவே   ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகலைன்னா அவங்க வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்?” என்று சொல்லிவிட்டு, அவர் தனது வேலையை கவனிக்கச் சென்றுவிட, திலீபன் சுபத்ராவை சமாதானம் செய்தான்.

இரவு ஒரு பக்கம் ஆர்யனின் அருகாமைக்கு ஏங்க, மறுபக்கமோ வயிறு பிரட்டிக் கொண்டிருக்க, இரண்டிற்கும் நடுவில் சிக்கிக் கொண்டவள், உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தாள்.  அதிகாலையிலேயே எழுந்துக் கொண்டவள், தலைக்குக் குளித்துவிட்டு வரவும், பூரணி அவளைக் கேள்வியாகப் பார்க்க, “இந்த மாசம் இப்போ தான்மா ஆகறேன். அஞ்சு நாள் தள்ளிடுச்சு.. அது தான் ரொம்ப டென்ஷனா போச்சு..” எங்கோ பார்வையைப் பதித்துக் கொண்டு சொல்லவும், பூரணிக்கு தனது மகளைப் பார்த்து சிரிப்பாக இருந்தது..

அவளது கன்னத்தைத் தட்டியவர், “அதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகிட்டு இருக்க?” என்று கேட்டுச் சிரித்து,

“சரி.. மாப்பிள்ளைக்கிட்ட பேசினயா? காலையில இங்க சாப்பிட வரச் சொல்லு. இப்படித் தான் எப்போப் பாரு அம்மா வீட்டுக்கு போகணும்ன்னு சொல்லுவாங்களா? அதுவும் வீட்டுக்கு வந்ததும் வராததுமா இங்க கிளம்பி வரலாமா? அங்க வீடு ஒரு மாசமா பூட்டி இருக்கு இல்ல.. அதை கிளீன் செய்யணும் தானே.” என்று கேட்டுக் கொண்டே அவளது கையில் காபியைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவள்,

“எனக்கு அது எல்லாம் மனசுல தோணவே இல்ல.. நாள் தள்ளுதேன்னு ரொம்ப டென்ஷனா இருந்ததும்மா. மாமாகிட்ட சொல்லவும் ஒரு மாதிரி இருந்தது. என்ன செய்யறதுன்னு தெரியாம தான் இங்க வந்துட்டேன். அது தான்..” என்று தயக்கமாகச் சொன்னவள், பூரணி அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,

“நான் மாமாக்கிட்ட பேசிட்டு.. அக்கா எல்லாம் வர விஷயத்தைச் சொல்லிட்டு, இங்க வந்து என்னைக் கூட்டிட்டு போகச் சொல்றேன்மா.. எப்படியும் இன்னைக்கு இங்க வருவார்ன்னு நினைக்கிறேன்..” காபியை உறிஞ்சிக் கொண்டே ஆர்யனுக்கு மெசேஜ் அனுப்புவதற்காக தனது போனை எடுக்க, அவன் போட்டிருந்த ஸ்டேட்டசைப் பார்த்தவள், திகைத்துப் போனாள்..

தனது ஊரில், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து காலைச் சூரியனை தனது அன்னையுடன் படம்படித்து, ‘வாட் எ சன்ரைஸ் வித் மை லவ்விங் மாம்..’ என்று எழுதி பதிவிட்டு இருக்க, அதைப் பார்த்தவள், திகைத்துப் போனாள்..

“அம்மா.. மாமா ஊருக்கு போயிட்டாரு போல.. என்கிட்ட சொல்லவே இல்ல..” என்று பதறியவள், அவளது போனை அவன் எடுக்காமல் போகவும், அவளது கண்கள் கசியத் துவங்கியது..

“அம்மா.. என்கிட்டே கோவிச்சுக்கிட்டு அவரு அம்மா வீட்டுக்குப் போயிட்டாரு.. நான் மாமாகிட்ட சொல்லி இருக்கணும்.. இப்படி வந்தது தப்பு தான்.. இப்போ நான் என்ன செய்யறது?” என்று பூரணியிடம் புலம்ப, அந்த நேரம், ஜீவிதாவும் ராமும் உள்ளே நுழையவும் பூரணியின் கவனம் அங்குத் திரும்பியது.  

“உனக்கு வேற பொழப்பே இல்லடி.. தேவை இல்லாம இங்க ஓடி வந்துட்டு அங்க போகணும்ன்னு குதிக்கிறது? இதுல அவரு கோவிச்சுக்கிட்டாருன்னு புலம்பல் வேற..” என்று சொன்ன பூரணி, அவர்களைப் பார்த்து ரசாபாசம் எதுவும் ஆகி விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டே, அவர்களை வரவேற்க, சிறிது நேரம் அனைவருமே கண்ணீரில் கறைந்தனர்..

பார்த்திபன் உம்மென்று அமர்ந்திருக்க, அவரின் அருகே சென்ற ராம், “மாமா.. நான் செஞ்சது தப்புத் தான்.. என்ன காரணம் சொன்னாலும் அது மன்னிக்க முடியாது குற்றம் தான். உங்க காயம் பெருசு.. ஆனாலும் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னை மன்னிச்சுடுங்க.. எனக்கு ஜீவிதான்னா உயிரு.. அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது.. அது தான்.” என்றபடி அவரது காலில் விழப் போக, அவனுடன் சேர்ந்து ஜீவிதாவும் விழ பார்த்திபன் செய்வதறியாது தடுமாறினார்.. 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. ஆனா.. எனக்கு இதெல்லாம் ஒத்துக்க டைம் எடுக்கும்.. இன்னும் எனக்கு அவ கொடுத்த ஏமாற்றத்தை தள்ளிட்டுப் போக மனசு வரல..” என்றவர், அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, அவர் இந்த அளவிற்கு பேசியதே போதுமானதாக சுபத்ரா ஜீவிதாவின் தலையை வருடினார்..

“என்ன ஜீவி இப்படி இளைச்சு போயிருக்க? சரியா சாப்பிடறது இல்லையா?” பூரணி கேட்க,

“அதெல்லாம் இல்லை சித்தி.. நல்லா தான் சாப்பிடறேன்.. ஏன்னு தெரியல..” அவளது பதிலைக் கேட்ட வெண்ணிலாவிற்கு ஆர்யனின் நினைப்பு ஒட்டிக்கொண்டது.. அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, அவளோ அமைதியாக அவன் போடும் போட்டோக்களைப் பார்த்து பொங்கிக் கொண்டிருந்தாள்..

‘மை மாம்ஸ் டேஸ்டி புட்’, ‘என்ஜாயிங் மை டே’ என்று வரிசையாக அவன் ஸ்டேட்டசுகளாக போட்டுத் தள்ளிக் கொண்டிருக்க, அவர்களுடன் சேர்ந்து உணவைக் கொரித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த ஜீவிதா,

“ஹே நிலா.. நீ ஏன் இப்படி டல்லடிக்கிற? எங்க உன் ஹஸ்பன்ட்? அவரு வீட்ல இருக்காரா? ஆஸ்திரேலியா எல்லாம் எப்படி இருந்தது? நீ போட்ட ஸ்டேடஸ் பார்த்தேன்..” என்று கேட்க, உண்டு விட்டு கை கழுவி வந்த ராம்,  

“ஆரி எங்க நிலா? உன்னை விட்டுட்டு அவர் எப்படித் தனியா இருக்கார்? அவரோட உயிரை விட்டுட்டு அவருக்கு தனியா என்ன வேலை? ஆபிஸ்க்கு போயிருக்காரா?” என்று கேட்க, பூரணி வெண்ணிலாவைப் பதட்டமாகப் பார்க்க, வெண்ணிலாவின் உதடுகள் அழுகையில் துடிக்கத் துவங்கியது..

“என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற நிலா?” ராம் புரியாமல் கேட்க,

“மாமா என்கிட்டே கோவிச்சுட்டு ஊருக்குப் போயிட்டார்.. நான் இங்க வந்ததுனால மாமாவுக்கு கோபம்..” வெண்ணிலா அழத் துவங்க, அவள் சொன்னதைக் கேட்டு திகைத்தவர்கள், உடனேயே சிரிக்கத் துவங்கினர்..

“என்னது மாமா உன்கிட்ட கோவிச்சிட்டு அவங்க வீட்டுக்கு போயிட்டாரா? என்ன உளறிட்டு இருக்க? நீ தானே காரை விட்டு இறங்காம, அவரை ‘உங்க பெட்டியை மட்டும் எடுத்துக்கோங்க. நான் இப்படியே எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்’னு சொன்னவ? இதுல அவரு இவளுக்கு பை சொல்லலைன்னு பின்னாலையே துரத்திட்டு போனா வேற..” திலீபன் அதட்ட, முகம் சிவக்க,

“வந்து மட்டும் உங்க மாமா உனக்கு தான் பை சொன்னாரு.. எனக்கு எங்க ஒழுங்கா சொன்னாரு? என்னை ஜாலியா இருக்க சொல்லல.. உங்க மாமா தான் ஜாலியா இருக்காரு..” என்று பொரிந்தபடி தனது மொபைலை அவனிடம் நீட்டியவள்,

“இங்கப் பாரு.. இங்கப் பாரு.. என்னை விட்டு அவரு எவ்வளவு ஜாலியா இருக்காரு பாரு.. காலையில இருந்து எவ்வளவு போட்டோ போட்டுட்டு இருக்காரு பாரு.. அத்தை சமையலை நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டு போட்டோ வேற போட்டு இருக்காரு பாரு.. அவருக்கு பொண்டாட்டியை விட்டுட்டு இருக்கோமேன்னு கொஞ்சம் கூட வருத்தமே இல்ல..” என்று வெடவெடக்க, அதைப் பார்த்த திலீபன்,

“வாவ் மாமா ஊருல சூப்பரா எஞ்சாய் பண்றார் போல இருக்கே.. பரவால்ல நீ இங்க ஜாலியா இரு.. அவரு அங்க ஜாலியா இருக்கட்டும்.. பாவம் அவருக்கும் கொஞ்சம் ரிலாக்சேஷன் ஏதாவது வேணும்ல..” என்று எரிகிற தீயில் எண்ணையை ஊற்ற, வெண்ணிலா அவனை அடிக்கத் துவங்கினாள்..  

“இப்போ எதுக்குடி அடிக்கிற? நீ தானே நேத்து என் கூட வந்த? அவருக்கு தனியா வீட்ல போர் அடிச்சிருக்கும் அவரு ஊருக்கு போயிருப்பாரு.. இது நல்ல கதையா இருக்கே.. நீ மட்டும் அம்மா வீட்டுக்கு போவ.. அவரு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கணுமா?” திலீபன் கேட்கவும்,

“என்னை பஸ் ஏத்திவிடு.. நான் அங்கப் போறேன்.. எனக்கு மாமா வேணும்..” அவள் அழத் துவங்க, பூரணி அவளை சமாதானப்படுத்தினார்.. அவளது சிறு பிள்ளைத்தனமான அழுகையில் அனைவருக்கும் சிரிப்பாகவும், ஒருபக்கம் அவளைப் பார்க்க பாவமாகவும் இருக்க, அனைவரின் பார்வையும் பூரணியை நோக்கித் திரும்பியது.

“நிலாக்குட்டி. இதோ இப்போவே சாயந்திரம் ஆகப் போகுது.. இதுக்கும் மேல விளக்கு வச்சு உன்னை இங்க இருந்து அனுப்பறது நல்லது இல்ல.. நாளைக்கு காலையில நான் உன்னை டாக்சியில கொண்டு விடறேன் என்ன? இப்போ அழக் கூடாது.. அக்கா மாமா எல்லாம் வந்திருக்காங்க இல்ல.. பேசிட்டு இரு..” என்று சமாதானம் செய்யவும், ஆர்யனுக்கு அவள் அழைக்க முயல, அவனது போன் எடுக்கப்படமால் போய்க் கொண்டிருந்தது..

இரண்டு முறை பிருந்தாவிற்கும், சேகருக்கும் அழைத்த பொழுதும், அவன் மில்லிற்குச் சென்றிருக்கிறான் என்ற பதிலே அவர்களிடம் இருந்துக் கிடைக்க, தான் செய்த கிறுக்குத்தனத்தை எண்ணி தன்னையே நொந்துக் கொண்டாள். 

அவளது அருகில் வந்த ராம், “உன் மேல எல்லாம் அவனுக்கு கோபம் இருக்காது.. சும்மா அவன் ஊருக்கு போயிருப்பான்.. ஆரியை விட எனக்கு உன்னை முன்னால இருந்து தெரியும்ங்கற உரிமைல நான் உன்னை கிண்டல் செஞ்சா கூட, உன்னை கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க மாட்டான் தெரியுமா?” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் கேட்க, வெண்ணிலா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.  

“நான் கூட உங்க கல்யாணம் ஆன போது முதல்ல கிண்டலா, ‘என்ன ப்ரோ உங்களுக்கு அவ செட் ஆவலான்னு கேட்டேன்? ஏன்னா என்கிட்டே ஜீவி எனக்கு செட் ஆக மாட்டான்னு சொன்னவன் அவன்.. அதனால ஒரு கடுப்புல கேட்டேன்.. அதுக்கு அவனோட பதில் என்ன தெரியுமா?” என்று கேட்டு நிறுத்த, வெண்ணிலா அவனைக் கேள்வியாகப் பார்க்க,

“ஹ்ம்ம்.. ‘ஹேப்பிலி மேரீட் டு மை லவ்’ன்னு பதில் சொன்னான்.. அதோட உன்னை ஆஸ்திரேலியால இருக்கும் போது ரொம்ப மிஸ் பண்ணினான்.. நான் நடுவுல ஒரு தடவ பேசும்போது சொன்னான்..” ராம் சொல்லச் சொல்ல,

“நீங்க அவரை அவன் இவன்னு பேசற அளவுக்கு ஃப்ரெண்ட்டா ராம்.. மா..மா.” என்று இழுக்க, ராம் புன்னகையுடன் தலையசைத்தான்.

“ஆமா.. ஆரி கூட முதல்ல ஏட்டிக்கு போட்டியா தான் பேசத் தொடங்கினேன்.. அப்பறம் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.. அவன் சும்மா ஜீவியை என் கூட அனுப்பல.. என்னோட நம்பரை என்கிட்டயே வாங்கி, அவன் என்னைப் பத்தி அக்குவேறு ஆணிவேறா அலசிட்டான். அவனுக்கு என்னோட ஜாதகமே தெரியும்..” என்று சிரித்த ராம்,

“நாளைக்கு நாங்களும் வரோம்.. அவங்க ஊரு நல்லா இருக்கும்ன்னு அவன் சொன்னான்.. சோ போகலாம்..” வெண்ணிலாவிடம் அவன் சொல்லவும், வெண்ணிலா பதறத் துவங்கினாள்.

“ஹையோ அதெல்லாம் வேண்டாம்.. அங்க அத்தை எல்லாம் இருப்பாங்க.. ஜீவிக்காவைப் பார்த்தா ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது..” என்று பதறவும்,

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. ஆரி பார்த்துப்பான்..” என்று அவளுக்கு சமாதானம் செய்தவன், சத்தமாக,

“நாளைக்கு நாங்க மட்டும் இங்க தனியா இருந்து என்ன பண்ணப் போறோம்? எப்படியும் நான் என்னோட சகலையை மீட் பண்ணனுமே..” ராம் சத்தமாகச் சொல்லி, மறுநாள் ஊருக்குக் கிளம்ப தயாராக, வெண்ணிலாவின் அழுகையைக் கேட்ட பார்த்திபன் சிரித்துக் கொண்டே,

“பெரிய கார எடுங்க.. எல்லாரும் போகலாம்.. போய் அவளை மாப்பிள்ளைக்கிட்ட விட்டுட்டு வரலாம்..” என்று சொல்லிவிட, அனைவருக்குமே உற்சாகம் தொற்றிக் கொள்ள, வெண்ணிலாவிற்கோ, ஆர்யனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது..    

மறுநாள் அதிகாலையிலேயே வெண்ணிலா தனது பையுடன் தயாராகி நிற்கவும், பூரணியும் சுபத்ராவும் அவளைப் பார்த்துச் சிரித்தனர். “இந்த அட்டகாசம் செய்யறதுக்கு எதுக்கு அவரை விட்டுட்டு இங்க வரது?” என்று கேட்டுக் கொண்டே சுபத்ரா, அவளது தலையில் பூச்வைச் சூட்டி விட்டு, கன்னத்தை வழித்து நெட்டி முறித்து,

“இனிமே அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்ன? எதுவா இருந்தாலும் அவர் கிட்ட சொல்லணும்..” என்றவர்கள், அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

ஊரை நெருங்க நெருங்க, தான் சொல்லப் போவதை கேட்டு ஆர்யன் செய்யப் போகும் கிண்டலை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்தது.. தனது இதழைக் கடித்து சிரிப்பை அடக்கிக் கொள்ள, அவர்கள் கார் வீட்டின் கேட்டிற்குள் நுழையவும், காரின் சத்தம் கேட்டு சேகரும், ப்ரியாவும் வியப்பாகப் பார்க்க, பிருந்தா வேகமாக வாசலுக்கு வந்தார்..

“வாங்க வாங்க..” அவர்களை வரவேற்க, அவர்களுடன் இறங்கிய ஜீவிதாவைப் பார்த்தவர், திகைப்புடன் சேகரைப் பார்க்க, அதே நேரம் ப்ரியாவும் சேகரைப் பார்த்தாள்..

சுபத்ராவும் பார்த்திபனும் சங்கடமாக அவர்களைப் பார்க்க, நொடியில் தன்னை சமாளித்துக் கொண்ட சேகர், “வாங்க.. வீட்டு உள்ள வாங்க.. என்ன அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க..” என்று அவர்களை வரவேற்க, பிருந்தாவும் தன்னை சமாளித்துக் கொண்டு,

“எல்லாரும் உள்ள வாங்க.. வாம்மா ஜீவிதா.. எப்படி இருக்க?” என்று அவர்களை வரவேற்க,

“நல்லா இருக்கேன் அத்தை..” என்றவள், அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க, பிருந்தா வெண்ணிலாவின் கையைப் பிடித்துக் கொண்டார். 

“வாடா வெண்ணிலா.. எப்படி இருந்தது ஆஸ்ட்ரேலியா எல்லாம்? நல்லா சுத்திப் பார்த்துட்டு வந்தியா? நீ கேட்டது எல்லாம் வாங்கித் தந்தானா?” அவளது தலையை வருடிக் கொண்டே கேட்க,

“ஜாலியா இருந்தது அத்தை..” என்று சொல்லிவிட்டு,

“எல்லாரும் வாங்க.. இங்கயே நின்னுட்டு பேசிட்டு இருக்கப் போறீங்களா? அந்த வீட்டுப் பெண்ணாய் மாறி அவர்களை உபசரிக்கத் துவங்கினாள். ஜீவிதா அவளை வியப்பாய் பார்க்க, பிருந்தாவிற்கு உதவியாக, அவனைவருக்கும் காபியைக் கொடுத்தவளின் கண்கள் ஆர்யனைத் தேடத் துவங்கியது..

“அண்ணா.. மாமா எங்க? நான் வந்ததுல இருந்து பார்க்கறேன் அவரைக் காணவே இல்லையே..” அதற்குமேல் பொறுக்க முடியாமல் அவள் கேட்க, அப்பொழுது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த கவின், ‘அத்தை’ என்று அவளைக் கட்டிக் கொள்ள,

“ஹாய்டா குட்டி.. உங்க மாமா எங்க?” அவள் கேட்டு முடிப்பதற்குள்,

“மாமா.. மொட்டை மாடியில போட்டோ எடுத்துட்டு இருக்காரு.. வாங்க போகலாம்..” என்று அவளை இழுக்க, ‘வாடா..’ என்றபடி வெண்ணிலா அவசரமாக மாடிக்கு ஓட, சேகர் வேகமாக சென்று கவினைப் பிடித்துக் கொண்டான்..

“என்னாச்சு?” பார்த்திபன் கேட்க,

“அவன் நேத்து வந்ததுல இருந்தே ஒருமாதிரியா தான் சுத்திட்டு இருக்கான்.. இவளை ரொம்ப மிஸ் பண்றான்.. ஆனாலும் ஏதோன்னு தோணிச்சு… அவங்களே பேசித் தீர்த்துக்கட்டும்ன்னு தான்..” என்ற சேகர், அவர்களுடன் அமர்ந்து பேசத் துவங்கினான்..

மாடிக்குச் சென்ற வெண்ணிலா, அங்கு நின்று வயல்வெளிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஆர்யனைப் பார்த்தவள், அவன் அருகே சென்று அவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள்..  ஆர்யன் அசையாமல் நிற்கவும்,

“ஏன் என்னோட போனை எடுக்கவே இல்ல மாமா? நான் ரெண்டு நாளா உங்களை கூப்பிடறேன் இல்ல.. ஊருக்கு வரேன்னு நீங்க சொல்லவே இல்ல..” குறையாகக் கேட்க,

“உங்க அம்மா வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் நீ நேத்து தானே கூப்பிட்ட.. நானும் எங்க அம்மா வீட்டுக்கு வந்த அப்பறம் ஒரு நாள் கழிச்சு இன்னைக்கு கூப்பிடலாம்ன்னு இருந்தேன்..” அவளுக்கு முகத்தைக் காட்டாமல் சொல்லவும், அவனது முகத்தைப் பிடித்துத் திருப்பியவள்,

“நான் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன்.. அது தான் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம அப்படி போயிட்டேன்..” என்று சொல்லிவிட்டு தலை குனிய, அவளது முகத்தைப் பிடித்து நிமிர்த்தியவன்,

“என்ன டென்ஷன்னு சொன்னா நான் அதுக்கு ஏதாவது சல்யூஷன் சொல்லப் போறேன்.. எதுவுமே சொல்லாம, வீட்டுக்கு உள்ள கூட வராம, அப்படியே அம்மா வீட்டுக்கு போனா நான் என்ன நினைக்கிறது? என் பொண்டாட்டி நான் ராம் கூட பேசறதை சொல்லலைன்னு கோவிச்சிக்கிட்டு போறான்னு நினைக்கிறதா? இல்ல என் பொண்டாட்டி இன்னும் என்னைப் புரிஞ்சிக்கவே இல்லைன்னு நினைக்கிறதா?” அவன் கேட்கவும், அவனது மார்பில் சாய்ந்துக் கொண்டவள்,

“அதுக்கு எல்லாம் நான் கோவிச்சுக்கல.. என் மாமாவை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா.. இது வேற..” மீண்டும் அவனது முகத்தைப் பார்த்து சொல்லிவிட்டு, அவனது மார்பில் புதைய, ஆர்யன் குழப்பத்துடன் அவளது முகத்தை நிமிர்த்தினான்..

“வேறன்னா?” அவன் குழம்ப,

“அது.. அது வந்து.. இந்த தடவ எனக்கு அஞ்சு நாள் பீரியட்ஸ் தள்ளிப் போயிருச்சு.. ஃப்ளைட்ல ஸ்ருதிக்கிட்ட பேசிட்டு இருக்கும் பொழுது தான் எனக்கு அதைப் பத்தி நியாபகமே வந்துச்சு. அது தான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.. எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு.. வேற எதுவுமே தோணல மாமா.. ஒரு நாள் பார்த்துட்டு அம்மாகிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன் அது தான்.” தயங்கித் தயங்கி ஒருவாறு சொல்லி முடிக்க, ஆர்யன் மேலும் குழம்பிப் போனான்.

“அதுக்கு சேன்ஸ் இல்லையேடா தேனு.. நாம ஃசேபா தானே இருந்தோம்? மிஸ் பண்ணிட்டோமா?” யோசனையுடன் அவன் சொல்ல, அவனது மார்பில் முட்டியவள்,

“ஆமா.. நான் தான் தேவை இல்லாம டென்ஷன் ஆகிட்டேன்.. சாரி மாமா..” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுச் சொல்லவும், ஆர்யன் தலையில் அடித்துக் கொண்டான்.

“மண்ணாங்கட்டி.. ஏண்டா தேனு.. நீ என்கிட்டே இதைப் பத்தி சொல்லி இருக்கலாம் இல்ல.. தேவை இல்லாம டென்ஷன் ஆகி.. அதோட அம்மா வீட்டுக்குப் போறேன்னு ஒரு கூத்து அடிச்சு  வச்சிருக்க?” அவளது நெற்றியில் முத்தமிட்ட படி அவன் கேட்க, தனது தலையில் தட்டிக் கொண்டவள்,

“எனக்கு டென்ஷன் ஆகிருச்சு.. நான் என்ன பண்ண? நான் சின்னப்பிள்ளை தானே?” அவள் கேட்கவும், அவளது இதழ்களில் முத்தமிட்டவன்,

“நீ படிச்சு முடிக்க நான் கேரண்டிடி என் பொண்டாட்டி.. அதுவரை நான் கண்டிப்பா கேர்ஃபுலா இருப்பேன்.. எதுன்னாலும் என்கிட்டே சொல்லு. இப்படி செய்யாதே என்ன? எனக்கு கஷ்டமா இருக்கு இல்ல?” என்று கேட்கவும், எம்பி அவனது இதழ்களில் இதழ் பதித்து,

“மாட்டேன். இனிமே இப்படி செய்யவே மாட்டேன்..” என்று சொன்னவளின் காது மடல்களை மென்மையாகக் கடித்தவன்,

“அப்படியே மிஸ் ஆச்சுன்னாலும் மேனேஜ் பண்ணிக்கலாம் என்ன?” என்று கேட்க,

“என்னது?” அவள் திகைத்துப் பார்க்க, சிரித்துக் கொண்டே,

“கீழ எல்லாரும் என்னவோ ஏதோன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ இருக்கப் பாரேன் என் குழந்தைப் பொண்டாட்டி.. இதைப் போய் சொன்னா எல்லாரும் சிரிக்க மாட்டாங்களா?” என்று கேலி செய்துக் கொண்டே படிகளில் இறங்கி ஓட,

“ஹையோ இருங்க மாமா.. என்ன சொன்னீங்கன்னு திரும்ப சொல்லிட்டுப் போங்க..” என்றவள், அவன் பின்னோடு ஓடிச் செல்ல, கீழே சென்ற ஆர்யனை அனைவரும் பிடித்துக் கொண்டனர்..

“என்ன மாமா இப்படி இவக்கிட்ட கோவிச்சுக்கிட்டு இப்படி அம்மா வீட்டுக்கு வந்துட்டீங்க?” திலீபன் கேட்க,

“என்ன ஆரி இது? அவகிட்ட கோபம்ன்னா இப்படி எல்லாம் அம்மா வீட்டுக்கு வரலாமா?” ராம் ஒரு பக்கம் பிடித்துக் கொள்ள,

“என்னது?” என்று கேட்ட ஆர்யனின் பின்னால் அவள் ஒளிந்துக் கொள்ள, அவளை முன் பக்கம் இழுத்தவன்,

“இதெல்லாம் உன் செயலா தேனு? இப்படி என்னை அசிங்கப்படுத்திட்டயே..” என்று கேட்கவும், அனைவரும் சிரிக்க,

“அப்படி எல்லாம் வரல.. இனிமே என்னை விட்டு அம்மா வீட்ல தங்கறேன்னு சொல்லக் கூடாதுல அதுக்கு தான்.. ஐ லவ் யூ..” அவளது காதில் சொல்லவும், வெண்ணிலா சுற்றம் மறந்து அவனது தோள் சாய,

“ஹே.. நாம இனிமே இவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டோம்.. நாம நம்ம வேலையைப் பார்க்கலாம்..” திலீபன் சொல்லவும், அனைவரும் மனம் நிறைந்து சிரித்து, அவர்கள் மகிழ்வுடன் வாழ மனதார வேண்டிக்கொள்ள, அதே போலவே அவர்கள் மனதோடு மனம் இணைந்து என்றுமே வாழ வாழ்த்தி விடைப்பெறுவோம்.. நன்றி வணக்கம்..  

     🙏🏼🙏🏼 

 

error: Content is protected !!