உயிரோவியம் நீயடி பெண்ணே – 3

உயிரோவியம் நீயடி பெண்ணே – 3
3
ஜெயசூர்யா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவனது நண்பர்கள் அமர்ந்திருக்க, அவனுடன் வீட்டில் தங்கி இருக்கும் நண்பன், “என்ன? என்ன சொல்றான்? கல்யாணம் ஆகிருச்சுன்னா? அவன் இதுவரை அப்படி வைஃப்ன்னு யாரு கூடவும் பேசிப் பார்த்தது இல்லையே.. அவனோட ரூம்ல கூட அவங்க போட்டோ இல்ல.. ஆனா.. ஷர்ட் மாத்தும் போது நெஞ்சுல ஒரு டாட்டூ பார்த்து இருக்கேன்.. ஆனா.. அதை பக்கத்துல பார்த்தது இல்ல.” யோசனையோடு சொல்லிக் கொண்டே வந்தவன், அவசரமாக எழுந்து,
“அவன் போற நிலைமையே சரி இல்ல.. நான் அவன் கூட போறேன்..” அவனது தோழன் சொல்லிவிட்டு, சூர்யாவின் பின்னோடு ஓடிச் சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்த சூர்யா, தனது கையில் இருந்த பாட்டிலைத் திறந்து அப்படியே குடித்து முடித்தவன், வாய் விட்டு கதறி அழத் துவங்கினான்..
“சுஜி.. எங்கடி இருக்க? நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தான் சுஜி.. அதுக்காக என்னை தண்டிச்சது போதாதா? என்கிட்டே வந்திரு சுஜி.. இங்க உயிரோட நான் செத்துட்டு இருக்கேன்டி. இன்னும் நான் உன்னை எவ்வளவு காலம்டி தேடணும். என்னால முடியல.. என்கிட்டே வந்திறேன்.. இல்ல எங்க இருக்கன்னாவது சொல்லுடி.. நான் உன்கிட்ட ஓடி வரேன்.. எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது..” நெஞ்சில் குத்திக் கொண்டு, சத்தமாக புலம்பிக் கொண்டிருக்க, அதைக் கேட்டு அதிர்ந்த அவனது நண்பன்,
“சூர்யா” வேகமாக அவனிடம் சென்று அவனது கையைப் பிடித்துக் கொண்டான்.
“சுஜியை என்கிட்டே வரச் சொல்லு விமல்.. எனக்கு அவ வேணும்.. அவ இல்லாம வாழ்க்கையே நரகமா இருக்கு..” புலம்பிக் கொண்டே சோபாவில் சாய்ந்தவன், அதையே மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டு உறங்கத் துவங்கினான்..
அவன் சொன்ன விஷயங்களைக் கேட்ட விமல், உள்ளுக்குள் அதிர்ந்தபடி அவனை நேராக படுக்க வைக்க முயன்றான். அவனது ஜாக்கட்டை கழட்டி விட்டு அவனது சட்டை பட்டன்களை தளர்த்தி விட்டவனின் கண்களில் அவனது டாட்டூ பட்டது. நெஞ்சின் மீது இதய வடிவில் இருந்த டாட்டூவில் சுஜா (SUJA) என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த விமல், ஒரு பெருமூச்சுடன் சூர்யாவின் முகத்தைப் பார்த்தான்.
அவனது முகம் இன்னமும் அழுகையில் கசங்கி இருக்கவும், தலையைத் தட்டிக் கொண்டவன், அவனது அறைக்குச் சென்று, போர்வையை எடுக்க, அதிலிருந்து ஒரு போட்டோ கீழே விழுந்தது..
அதை எடுத்துப் பார்த்த விமல், தலையை அசைத்துக் கொண்டான்.. ‘ஹ்ம்ம்.. இவங்க தான் சுஜி போல.. ஆனா.. சின்னப் பொண்ணா இருக்காங்களே.. இவங்க சூர்யா வைஃப்பா?” தனக்குள் கேட்டுக் கொண்டே, அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
அது அவள் கல்லூரிக்குச் சென்ற முதல் வருடம்.. அவளது டாக்டர் கோட்டுடன், ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டிக் கொண்டு, அவனது இதயத்தின் ஒலியை கேட்பது போல எடுத்திருந்த புகைப்படம். இருவரின் முகத்திலும் அவ்வளவு புன்னகை..
இப்பொழுதோ முப்பதின் முன் பாதியில் இருப்பவன், தனது வயதிற்கும் மேல் முதிர்ச்சியாக இருப்பது போல விமலுக்குத் தோன்றியது.. அவனது மனதின் வலியினால் தான் அவன் இப்படி இருக்கிறானோ? என்று யோசித்துக் கொண்டே அவனது தலையணையை எடுக்க, அதன் அடியில் இருந்து மேலும் இரண்டு புகைப்படங்கள் விழ, அதை எடுத்துப் பார்த்தவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்..
“எங்கடா இந்த ரெண்டு வருஷத்துல இவனோட வைஃப் போட்டோ ஒண்ணைக் கூட பார்க்கலையேன்னு நினைச்சேன்.. பார்த்தா எல்லாம் புதையல் போல இருக்கு..” என்று வியந்துக் கொண்டே, சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவின் தலையின் அடியில் வைத்து விட்டு, போர்வையைப் போர்த்தியவன், அவனது அறைக்குச் சென்று அவனது அலமாரியைத் திறக்க, அதன் பின்னணியில் சுஜிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நிறைந்து இருந்தது..
அவளது தோளில் கைப் போட்டபடி, அவளது கழுத்தில் செயினை அணிவிப்பது போல, அவளது முதல் நாள் கல்லூரியின் பொழுது எடுத்தது போலும்.. தூரத்தில் இருந்து அவளது கல்லூரி வாயிலில் நிற்பது போல எடுத்தப் புகைப்படம்.. ‘ஹ்ம்ம்.. நல்லா படிப்பாங்க போல. நல்ல காலேஜ்ல தான் படிச்சு இருக்காங்க..’ என்று தனக்குள் பேசிக் கொண்டவன், அடுத்த புகைப்படத்தைப் பார்க்க, அவனது புன்னகை மேலும் விரிந்தது..
‘பள்ளிச் சீருடையில் சுஜிதா இரட்டை ஜடைப் போட்டிருக்க, அந்த இரண்டு ஜடையை கையில் இழுத்தது போல சூர்யா சிரித்துக் கொண்டிருந்த புகைப்படம்.’ “ஹ்ம்ம்.. ஸ்கூல்ல இருந்தே லவ்வா? ரொம்ப வருஷ காதல் தான்.. இப்போ அவங்க எங்க இருக்காங்க? இவன் ஏன் இப்படி புலம்பறான்?” விமல் பேசிக் கொண்டே, தனது தலையணையையும், போர்வையையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்த இன்னொரு சோபாவில் படுத்துக் கொண்டான்.
“சுஜி.. நான் இனிமே குடிச்சிட்டு அப்படி செய்ய மாட்டேண்டி.. என்கிட்டே வந்திரு.. இப்படியே நான் செத்திருவேன் போல இருக்கு. எங்க இருக்கன்னாவது சொல்லு.. எனக்கு நீ வேணும்.. உன்னை என்னைக்காவது பார்த்திருவேன்னு தான் நான் உயிரோட இருக்கேன்..” உறக்கத்தில் அவன் அழுது புலம்ப, விமல் தலையில் கை வைத்து அமர்ந்துக் கொண்டான்..
“இவன் இதுக்குத் தான் குடிச்சா அமைதியா இருக்கானா? வீட்டுக்கு வந்தா ரூமுக்குள்ள போய் கதவை அடைச்சுக்கறானா?” என்று கேட்டுக் கொண்டே, தனது காதில் பஞ்சை அடைத்துக் கொண்டவன், தலை வரை போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கத் துவங்கினான்.
அன்று வார இறுதி, ஆதலால் சூர்யாவும் நன்றாக உறங்கி விட, “சூர்யா.. மை டியர் சூ..ர்..யா. குட் மார்னிங் மை லவ்.. ஹேவ் எ நைஸ் டே..” சூர்யாவின் மொபைல் குரல் கொடுக்க, அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சூர்யா, பட்டென்று கண் விழித்தான்.. மொபைலைக் கையில் வைத்துக் கொண்டு, மீண்டும் அவளது குரலைக் கேட்டுக் கொண்டிருக்க, மெல்ல தனது போர்வையை விலக்கி விமல் சூர்யாவைப் பார்த்தான்.
“லவ் யூ டி பொண்டாட்டி.. இன்னைக்கு சண்டே எனக்கு லீவ்.. நான் இன்னைக்கு வெட்டி தான்.. நீ என்ன பண்ணிட்டு இருப்ப? டாக்டரம்மா ரொம்ப பிசியா சர்ஜரில இருப்பீங்களோ? எவன் கையையாவது உடைச்சு கட்டு போட்டுட்டு இருப்பியா? என்னைப் பத்தி ஒரு நிமிஷமாவது உனக்கு நினைப்பு வருமா? இல்ல என்னை மறந்துட்டியா? உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி.. உன் கூட பேசணும்ன்னு இருக்கு.” என்றபடி அவனது செல்போனிற்கு முத்தம் கொடுக்க, விமலுக்கு சூர்யாவைப் பார்க்க பாவமாக இருந்தது..
இப்படி அவன் நிழலுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதும், அது தெரியாத அளவிற்கு அவன் அனைத்தையும் தனது அறைக்குள்ளேயே புதைத்துக் கொண்டு வாழ்வதையும் நினைத்தவனுக்கு ஒரு பெரும்மூச்சே எழுந்தது..
செல்போனிற்கு முத்தம் கொடுத்தவன், எழுந்து தனது காலைக் கடமைகளை முடித்து, காபியுடன் அமர, அவனது செல்போன் இசைத்தது.
போனைப் பார்த்தவன், ஒரு மெல்லிய புன்னகையுடன், “ஹலோ ஜைஷு.. எப்படி இருக்க? இந்த டைம்ல கால் பண்ணி இருக்க? என்னை நியாபகம் இருக்கா?” கேலியாக அவன் கேட்க,
“ஒண்ணும் இல்லடா.. சும்மா தான் உன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு கால் பண்றேன்.. உங்களுக்கு தான் என் நியாபகமே வராது.. ஊருக்கு வந்தே ரொம்ப வருஷம் ஆச்சு.. இதுல நீயும் எதையாவது கேட்காதே. சாதாரணமா பேசு..” விரக்தியாக அவள் சொல்ல, ஒரு பெருமூச்சுடன் சூர்யா அவளைப் பார்த்தான்.
“ஜைஷு. நீ யாராவது வேற நல்ல டாக்டரா பாரேன்டி. ஏன் மத்தவங்க பேச்சைக் கேட்கணும்? இந்த சுஜி எங்கன்னு தெரிஞ்சா அவகிட்ட கேட்கலாம்..” தலையை பிடித்துக் கொண்டு அவன் சொல்லவும்,
“ஹ்ம்ப்ச்.. அம்மா அவளைத் தேவை இல்லாம பேசினதுக்கு தான் நான் இப்போ பேச்சு வாங்கறேனோ? என்னவோ போ. அன்னைக்கு. வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு போற அப்போ அம்மா பேசின பேச்சுல அவங்க அம்மா முகமே சரி இல்ல.. நீ இருந்ததிருந்தா அம்மாவை உண்டு இல்லைன்னு செய்திருப்ப. அன்னைக்கு அவங்களைப் பார்த்தது தான்.. வீட்டைக் கூட அவங்க மாமா பொறுப்புல விட்டுட்டாங்க. இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னே தெரியல.. கண்டிப்பா கோயம்பத்தூர்ல தான் இருப்பாங்க. சுஜியும் அங்க தான் டாக்டரா இருப்பா.. அன்னைக்கு கூட அப்பாக்கிட்ட பேசிட்டு இருக்கும்போது, சுஜி இல்லாம பக்கத்து வீடே வீடா இல்லைன்னு சொன்னாங்க..” ஜைஷ்ணவி சொல்லவும், சூர்யாவிற்கு கண்களில் கண்ணீர் கசிந்தது.
“அவ இல்லாம என்னோட வாழ்க்கையும் வாழ்க்கையா இல்ல.. எல்லாமே வெறுப்பா இருக்கு..” என்று சலித்துக் கொண்டவன்,
“அவ இப்போ கோயம்பத்தூர்ல இல்ல.. எங்க சண்டைக்கு அப்பறம், ஒரு ரெண்டு மூணு மாசத்துலையே அந்த வீட்டை காலி பண்ணிட்டாங்க. நானும் அவளைத் தேடிட்டு தான் இருக்கேன்.. எங்க? அவ கண்ணுலேயே பட மாட்டேங்கிறா.. எல்லாம் என்னால வந்தது.. என்னோட கோபம்.. என்னோட இந்த குடிக்கிற பழக்கம்.. அப்போ ஜாலிக்கு அவளைக் கெஞ்சிக் கெஞ்சி கேட்டு குடிச்சேன்.. இப்போ அவளோட நினைப்புல குடிக்கறேன்..” என்று தலையில் அடித்துக் கொண்டவன், ஒரு பெருமூச்சுடன் ஜைஷ்ணவியைப் பார்த்தான்.
அவனை ஜைஷ்ணவி பாவமாகப் பார்க்க, “சூர்யா.. அவ இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்காம உன்னை மாதிரி இருப்பான்னு நீ நினைக்கிறயா? இல்ல அவங்க அம்மா அப்பா தான் அவங்க ஒரே பொண்ணை தனியா விட்டு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறயா? நீ உன் வாழ்க்கையை நினைச்சுப் பாரு சூர்யா. நீ இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி இருப்ப? அப்பாவுக்கு உன்னை நினைச்சு ரொம்ப கவலையா இருக்கு.” ஜைஷ்ணவி கேட்க,
“எனக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சே ஜைஷு.. திரும்ப யாரைப் பண்ணிக்கச் சொல்ற? அது சட்டப்படி குற்றம் இல்லையா? அதே தானே அவளுக்கும்.. அவளால என்னை எல்லாம் விட்டுட்டு யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. ஏன்னா அய்யாவோட லவ் அப்படி..” கேலியாகச் சொன்னவன்,
“என்னைப் பத்தி விடு.. நீ சொல்லு.. யாராவது நல்ல டாக்டரா பார்க்கறியா? எந்த ப்ராப்லமும் இருக்காது.. ஆல் வில் பி ஃபைன்.. உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா சொல்லு.. நான் வரேன்..” அவளுக்கு தைரியம் சொல்ல, ஜைஷ்ணவி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“மாமாவோட ஆபிஸ்ல ஒருத்தங்க ராஜேஸ்வரின்னு ஒரு டாக்டரைப் பார்க்கச் சொல்லி இருக்காங்கடா.. ரொம்ப நல்ல டாக்டராம்.. நாங்க அடுத்த வாரத்துல ஒரு நாள் போகப் போறோம். கண்டிப்பா பார்த்துட்டு வரேன்டா.. அந்த டாக்டர் பத்தி சொல்லச் சொல்ல எனக்கு மனசுல என்னவோ கொஞ்சம் தெம்பா இருக்கு.. சீக்கிரம் உனக்கு ஒரு மருமகனையோ மருமகளையோ பெத்துத் தரேன்..” அவளது பதிலில், சூர்யாவிற்கு புன்னகை அரும்பியது..
“ரெண்டுமே வந்தா கூட ஓகே தான்.. நான் ஹாப்பியா விளையாடுவேன்.. மூணு வந்தா கூட டபிள் ஓகே.. ஒரு குட்டியை நான் இங்க தூக்கிட்டு வந்து வளர்ப்பேன்.. என்ன ஓகே வா? எனக்குத் தரியா? ‘என் தம்பி பாவம்.. தனியா இருக்கான்.. அவனுக்கு ஒரு துணை வேணுமாம்’ன்னு சொல்லி, அந்த டாக்டர்கிட்ட என்னோட ஸ்பெஷல் ரெக்வஸ்ட்டா சொல்லேன்.. தனியா ரொம்ப போர் அடிக்குது ஜைஷு..” அவன் கிண்டலில் இறங்க,
“ஏன் இன்னும் ரெண்டு சேர்த்தே கேளேன்..” ஜைஷ்ணவி கிண்டல் செய்ய,
“கேட்கலாமே.. அந்த டாக்டர்க்கிட்ட என்னோட ஸ்பெஷல் ரெக்வெஸ்ட்ன்னு சொல்லு.. கண்டிப்பா செய்வாங்க..” அவன் வம்பு வளர்க்க,
“ஆசை தோசை அப்பள வடை..” என்ற ஜைஷ்ணவி சிரிக்க, அதற்கு மேல் இருவரும் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டு, மேலும் இரண்டு மணி நேரம் கடக்க, அந்த இரண்டு மணி நேரத்தில் அவன் சமையலையும் செய்து முடிக்க, அவனது வலிகள் தாற்காலிகமாக விடைப்பெற்றது.
“ஹலோ.. சுஜும்மா.. நான் ஒரு பேமிலி எமெர்ஜென்சில நாலு நாள் ஊருக்கு போறேன்.. ப்ளீஸ்.. நீ நம்ம அப்பாயிண்ட்மெண்ட்சை எல்லாம் பார்த்துக்கோ.. உனக்கு கூட ஹெல்ப்க்கு சுகன்யாவை வச்சிக்கோ.. நீ கண்டிப்பா கலக்குவன்னு எனக்குத் தெரியும்.. டேக் கேர்.. ஏதாவது டவுட்ன்னா எனக்கு கூப்பிடு.. நான் பதில் சொல்றேன்.. என்ன?” சுஜிதாவின் சீனியர் ராஜேஸ்வரி சொல்லிவிட, சுஜிதாவின் நாட்கள் ராக்கை கட்டி பறந்துக் கொண்டிருந்தது..
அவளைப் பற்றியே யோசிக்க முடியாத அளவிற்கு, டெலிவரியும், செக்கப்பிற்கு வருபவர்கள், ட்ரீட்மெண்ட்டிற்கு வருபவர்கள் என்று அவளது நேரம் அவளது கையில் இல்லாமல் இரவும் பகலுமாக சுழன்றுக் கொண்டிருந்தது..
அதிகாலையில் இருந்து இரண்டாவது சுகப்பிரசவத்தை முடித்து விட்டு, அடுத்து சிசேரியனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார்களை சந்திக்க அவள் வார்டிற்குச் சென்று பரிசோதித்துவிட்டு, அவள் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்து உடையை மாற்றிக் கொண்டு, ஒரு சிசேரியன் செய்து, பிரசவத்தை முடித்தவள், அடுத்த பேஷண்டை தயார் செய்வதற்குள், அவளைக் காண வந்திருந்த ஓ.பி. மக்களை பார்வையிடத் துவங்கி இருந்தாள்..
அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருந்த பொழுது, “மேடம்.. ஒருத்தங்க எமெர்ஜென்சில வந்திருக்காங்க.. அவங்களுக்கு பனிக்குடம் உடைஞ்சா போல இருக்கு.. ஆனா இன்னும் வலி வரல.. கொஞ்சம் வந்துப் பாருங்க..” ஒரு நர்ஸ் அவசரமாக சுஜிதாவை வந்து அழைக்க,
“ஓ.. இதோ வரேன்..” என்றவள், அவசரமாக தனது அறையில் இருந்து வெளியில் வந்தவள், எமெர்ஜென்சி அறைக்குள் நுழைந்து, அந்தப் பெண்ணை பரிசோதனைகள் செய்துவிட்டு, ரிப்போர்ட்டுடன் வெளியில் வந்தவள், அவளது சீனியருக்கு அழைத்து பேசிக் கொண்டே, தனது அறையை நோக்கி நடக்கத் துவங்கினாள்.
அப்பொழுது பார்வையாளர் வரிசையில் அமர்ந்து மருத்துவரைப் பார்க்க காத்திருந்த ஜைஷ்ணவி, “மேடம்..” என்ற நர்சின் குரலில் திரும்பிப் பார்த்தவள், கண்களில் கண்ணீர் கோர்க்க, சிலையாக அமர்ந்தாள்.
அந்த நர்சின் கையில் இருந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த சுஜிதா, “சீக்கிரம் நீங்க அவங்களை ஓ.டி. க்கு ஷிப்ட் பண்ணிட்டு, அவங்களைப் ப்ரிப்பேர் பண்ணிடுங்க.. நான் இதோ வரேன்..” என்றவள், அவளது அருகே வந்த மருத்துவரிடம் எதுவோ கூறிவிட்டு, வேகமாக படியேற, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜைஷ்ணவியை உலுக்கிய அவளது கணவன் ப்ரதாப்,
“ஜைஷு.. என்ன அப்படி பார்த்துட்டு இருக்க?” என்று கேட்க,
“அவ.. அவ.. சுஜி.. சூர்யா சுஜி..” திக்கித் திணறி அவள் சொல்லி முடிக்க, அவளது கணவன் பிரதாப் திகைத்துப் போனான்..
“சுஜிதா வா? ஜைஷு.. நல்லா பார்த்து தான் சொல்றியா? அவ சுஜிதா தானா?” ப்ரதாப் கேட்க,
“அவ தான்.. அவளை எனக்குத் தெரியாதா? ஹையோ. இப்போ நான் என்ன பண்ணுவேன்? அவ எங்கயோ அவசரமா போயிட்டு இருக்காளே..” அவளது உள்ளம் படபடக்க, கண்ணீர் வழிய செய்வதறியாது தனது கணவரைப் பார்க்க,
“நிஜமா தான் சொல்றியா? இதோ இரு நான் சூர்யாவுக்கு கூப்பிடறேன்..” என்ற ப்ரதாப் உடனே சூர்யாவிற்கு அழைத்தான்..
“இந்த ஹாஸ்பிடல்ல சொன்ன உங்க ஃப்ரெண்ட்க்கு நான் கோவில் கூட கட்டுவேங்க..” ஜைஷ்ணவி அவனது தோளில் சாய்ந்து அழ, அவளது கண்களைத் துடைத்தவன், அதற்குள் சூர்யா போனை எடுத்து விடவும்,
“சூர்யா.. என்ன தூங்கப் போறியா?” என்று கேட்க,
“மாமா.. நான் தூங்கிட்டு இருக்கேன் மாமா.. என்னாச்சு? ஏன் இந்த நேரத்துல கூப்பிடறீங்க?” பதட்டமாக அவன் கேட்க, ப்ரதாப் உச்சுக் கொட்டினான்..
“ஓ.. தூங்கறியா? சரி.. கொஞ்ச நேரம் முழிச்சிக்கிட்டே இரு.. முடிஞ்சா ரெண்டு மூணு காபி குடிச்சுட்டு கூட விழிச்சு இரு.. நான் கூப்பிட்ட உடனே போனை எடுக்கற. நான் சொல்றதை செஞ்சா நான் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்.. அதுவரை முழிச்சு இரு.” என்றவன் போனை வைத்துவிட்டு, ஜைஷ்ணவியைப் பார்க்க, அவளோ தலையில் அடித்துக் கொண்டாள்..
“எதுக்குங்க இப்போ அவனுக்கு உடனே கால் பண்ணினீங்க? ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தா அவன் ஏமாந்து போவான்ல.. கொஞ்சம் அவளைப் பக்கத்துல பார்த்துட்டு கால் பண்ணி இருக்கலாம்..” ஏனோ ஜைஷ்ணவியின் மனதினில் ஒரு படபடப்பு..
“ஹே.. என்னோட மச்சானோட லவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. கொஞ்சம் வெயிட் பண்ணி தான் பார்த்துடுவோமே..” என்ற ப்ரதாப், சுஜிதாவைக் காணும் நேரத்திற்காக காத்திருந்தான்..
ஒருவன் காரணமே புரியாமல் நடுயிரவில் விழித்திருக்க, அவனது உறக்கம் கெடுவதற்கு காரணமானவளோ இரண்டு உயிர்களைக் காக்கும் முயற்சியில் வெகு சிரத்தையாக ஈடுபட்டிருந்தாள்..
பனிக்குடம் உடைந்து, குழந்தை தண்ணீரைக் குடித்திருக்க, அதற்கு மூச்சுத் திணறத் துவங்கி இருந்தது.. அதோடு அந்தத் தாய்க்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க, குழந்தை, தாய் இருவரையும் காக்கும் முயற்சியில் அவள் ஈடுபட்டிருந்தாள்..
குழந்தையை வெளியில் எடுத்தவள், தனது வழக்கம் போல அதன் கன்னத்தில் வருடி விட்டு, அருகில் இருந்த குழந்தைகள் நல மருத்துவரிடம் ஒப்படைக்க, அந்தக் குழந்தைக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு, அதனது மூச்சை சரி செய்யும் முயற்சியில் இறங்கினர்..
அதனுடன், அந்தத் தாய்க்கும் சிகிச்சை அளித்து, எந்த பிரச்சனையும் இல்லாமல் இரண்டு உயிர்களை காப்பாற்றியவள்,
“டெலிவரி ஆகிடுச்சு சேஃப்ன்னு சொல்லிடுங்க.” என்றபடி குழந்தை நல மருத்துவரைப் பார்க்க,
“பேபி ஸ்டெபிலைஸ் ஆகிட்டு வருது.. இன்னும் கொஞ்ச நேரம்.. நார்மல் ஆகிடும்..” என்று அவரும் சொல்லவும்,
“சரி.. அப்போ ரெண்டு பேரும் சேஃப்.. கொஞ்ச நேரம் கழிச்சு குழந்தையைக் காட்டுவாங்கன்னு மட்டும் சொல்லுங்க. வேற எதுவும் சொல்லி அவங்களை பயமுறுத்த வேண்டாம்.. நாங்க இந்த சிசேரியன் முடிச்சிட்டு வெளிய அவங்கக்கிட்ட விவரமா சொல்லிக்கறோம்..” என்றவள், ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்த அடுத்த அறுவை சிகிச்சையைத் துவங்கினாள்..
சிறிது நேரத்தில் மூச்சுத் திணறிய குழந்தையின் நலனைப் பார்த்து விட்டு, குழந்தை நலமாக இருக்கவும், அதை எடுத்து வருடிக் கொண்டே, “அவங்க அட்டெண்டர் கிட்ட குழந்தையைக் காட்டிட்டு கொஞ்ச நேரம் லைட்ல வைங்க.. இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சதும் ஃபீட் பண்ணச் சொல்லுங்க..” என்றபடி குழந்தையுடன் வெளியில் வர, பதட்டத்துடன் அந்தப் பெண்ணின் உறவினர்கள் நின்றிருந்தனர்..
சுஜிதாவைப் பார்த்ததும் அவர்கள் ஆவலும், ஏக்கமும், பதட்டமுமாக அவளது அருகே வர, “இதோ குழந்தையைப் பாருங்க.. ஏஞ்சல் பிறந்திருக்காங்க..” என்று அவர்களுக்கு காட்டிக் கொண்டே, மீண்டும் அதன் விரலை வருடியவள்,
“மதரும் நல்லா இருக்காங்க.. கொஞ்சம் தூங்கிட்டு இருக்காங்க.. அவங்க நார்மலானதும் ரூமுக்கு மாத்துவாங்க.. பாப்பா அம்மா கூட இருப்பாங்க…” என்றவள், அவர்களிடம் சிகிச்சையின் விவரத்தைச் சொல்ல, குழந்தைநல மருத்துவரும் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பற்றி விளக்க, அந்தப் பெண்ணின் கணவனும், அன்னையும் அவளிடம் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.. ஒரு புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டவள்,
“சரி சுகன்யா.. நானும் போய் சூடா ஒரு காபியைக் குடிச்சிட்டு அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கற பேஷண்ட்சைப் பார்க்கறேன்.. பாவம் அவங்களும் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..” என்று சொன்னபடி, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நர்சை பார்த்து கையை கொஞ்சம் என்பது போலக் காட்டிவிட்டு, தனது அறைக்குச் சென்றாள்.
இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜைஷ்ணவி, “கொஞ்சம் கூட முகத்துல அந்த வாட்டமே இல்ல பாருங்க.. பக்கத்துல இருக்கறவங்க சொன்னது கேட்டீங்க தானே.. காலையில இருந்து கேஸ் எல்லாம் எக்கச்சக்கமா இருக்காம். அவ எப்பவுமே அப்படி தாங்க.. ரொம்ப ஹார்ட் வர்க் பண்ணுவா.. சூர்யாவுக்கு அவகிட்ட பிடிச்ச விஷயமே அது தான்.. ஆனா.. நாம உள்ள போகும்போது அவ தான் டாக்டர்ன்னு தெரியாத மாதிரி போகணும் ஓகே வா? என்ன?” பெருமையாகச் சொல்லிக் கொண்டே வந்தவள், தனது கணவனிடம் திட்டத்தைச் சொல்ல, அந்த நேரம் பொறுமையில்லாமல் சூர்யா மீண்டும் ப்ரதாப்பிற்கு அழைத்திருந்தான்.
“என்னடா அதுக்குள்ள கால் பண்ற? ரெண்டு காபி குடிச்சு முடிச்சியா இல்லையா? இங்க ஒரே கும்பலா இருக்கே.. பாவம் டாக்டர் வேற கேஸ் நிறையா இருக்கறதுனால பாலன்ஸ் பண்ணி பார்த்துட்டு இருக்காங்க.. அதனால இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். நீ முழிச்சிட்டு இரு.. ஆனா.. நான் கால் பண்ணினா நீ எடுக்கணும்.. ஆனா.. பேச்சு மூச்சு சவுன்ட் எதுவுமே இருக்கக் கூடாது புரியுதா? நான் திரும்ப சொல்றேன்.. தயவு செய்து எந்த சத்தமும் போட்டுடாதே..” ப்ரதாப் பீடிகைப் போட,
“என்ன மாமா? ஏதாவது குட் நியூசா? அதுக்குத் தான் நீங்க இப்படி சொல்றீங்களா? சொல்லுங்க மாமா.. எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியலையே..” அவன் உற்சாகமாகக் கேட்க,
“அப்படி தான்னு வைச்சிக்கோயேன்.. கொஞ்சம் பொறுமையா காபி குடிச்சிட்டு இரு. டாக்டர் கூட காபி கேட்டு இருக்காங்க.. பாவம். ஓரிடத்துல நிக்க நேரமே இல்ல..” ப்ரதாப் கேலி செய்ய, அதை புரிந்துக் கொள்ளாமல், போனை வைத்த சூர்யா, மீண்டும் ப்ராதாபிடம் இருந்து வரும் அழைப்பிற்காக காத்திருந்தான்..