kv-18
kv-18
18
வழியெங்கும் ட்ரெக்கிங் செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்தனர். அந்த நதிக் கரையில் சிலர் டென்ட் அடித்துத் தங்கியும் இருக்க, விஜயும் ஜானவியும் அங்கிருந்த சிறு பெட்டிக் கடையில் சென்று அமர்ந்தனர்.
அந்தக் கடையில் குளிருக்கு இதமாக நூடுல்ஸ் மற்றும் டீ மட்டுமே விற்பனை செய்தனர். அது போக சிகரெட்டும் இருக்க, முக்கால் வாசி ஆண்கள் அங்கே ஊதித் தள்ளினர். அந்த இடமே சிகரெட் வாசனையில் மூழ்கிக் கிடக்க, ஜானவிக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அதைக் கண்டும் காணாதது போல இருந்தான் விஜய்.
‘உனக்கு பிடிக்கலனா அது உன்னோட‘ என தனக்கு மட்டும் ஒரு டீயும் நூடுல்சும் ஆர்டர் செய்தான். அவளுக்கு வேண்டுமா என்று கூட கேட்கவில்லை.
அவன் முகத்தை வைத்தே அவன் தனக்கு எதுவும் செய்யமாட்டான் என அறிந்து கொண்டவள், தனக்கு ஒரு டீ மட்டும் ஆர்டர் செய்தாள்.
“பரவாலையே , ராஜ பரம்பரை டீ கடைலலாம் டீ குடிப்பீங்களா?” நக்கல் செய்தான்.
“நான் அப்படி யார் கிட்டயும் காடிட்டது இல்லையே..” முறைப்புடன் நின்றாள்.
“ஆமாமா… காட்டிக்காம செஞ்சுடுவீங்க எல்லாத்தையும்..ம்ம்ம்” கடுப்பில் சலித்தான்.
“ஹல்லோ.. நானும் பாக்கறேன் ரொம்ப தான் என்னை மட்டம் தட்டறீங்க..” சற்று குரல் உயர, சுற்றுபுறம் பார்த்த அவனது விழி சைகையில் அவளும் அமைதியானாள்.
இருவரும் பின் அமைதியாக உண்டுவிட்டுக் கிளம்ப, அப்போது தான் ஒரு ட்ரெக்கிங் க்ரூப் கிளம்பியது. அவர்களுக்கு முன்னே விஜய் கிளம்ப, ஜானவி அவர்களுக்குப் பின்னே சென்றாள்.
வழியெங்கும் அந்தக் கூட்டம் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டு நடக்க, ஜானவி வேகமாக நடந்து செல்லும் அவனைப் பிடிக்க அந்தக் கூட்டத்தில் நுழைந்து செல்லப் பார்த்தாள்.
‘இவள் தங்களுடன் வரவில்லையே‘ என நினைத்தவர்கள் அவளையே கேட்க, தான் முன்னே சென்று கொண்டிருப்பவனுடன் வந்தேன் என்று கூறி முன்னேறினாள்.
அதற்குள் அவன் எங்கோ சென்று விட, இவளும் வேக நடை கூட்டிச் செல்ல, கல் இடறி தடுமாறி விழுந்தாள். கூட வந்தவர்கள் அவளைப் பிடித்து அமர வைக்க, அதில் ஒருவர் “இருங்க உங்க கூட வந்தவர கூப்பிடறேன்” என்று ஓடினார்.
அவனிடம் விஷயத்தைக் கூற, “இது என்ன தேவையில்லாத இம்சை” என்று முனகிக் கொண்டு திரும்பி நடந்து வந்தான்.
அவன் வந்ததும் மற்றவர்கள் விலகிச் செல்ல, அவன் புருவத்தை உயர்த்தி அவளது கால்களைப் பார்த்து,
“ஒன்னும் பெருசா இல்ல.. ரெண்டு தடவ உதறிட்டு எந்திரிச்சு வா.. இந்த மாதிரி எல்லாம் தொட்டதுக்கெல்லாம் உகந்துட்டா ஒரு வேலையும் நடக்காது.
இல்ல நீ இப்படித் தான் னா தயவு செஞ்சு திரும்பி போய்டு. உன்னால நானும் எல்லா இடத்துலையும் இப்படி ரெஸ்ட் எடுக்க முடியாது.” இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அவன் நின்றான்.
பொங்கி வந்த கோபத்துடன் எழுந்து நடக்க ஆரம்பித்தாள் ஜானவி. முதலில் சற்று வலியில் விந்தி நடந்தாலும், அவன் சொன்னது போல உதறிய பின் சற்று தேவலாம் போல இருந்தது.
“என் தலைல இடியே விழுந்தாலும் நான் எங்கயும் உட்கார மாட்டேன் போதுமா..!” பல்லைக் கடித்தாள்.
உதட்டை கஷ்டப்பட்டு இழுத்து சிரித்தவன், “நட” என்று முன்னே நடந்தான்.
“சரியான ராட்ஷசன்” ஜானவியின் வாய்க்குள் முனகியது அவனுக்கு நன்றாகவே கேட்டது. இருந்தாலும் அவளிடம் சரிக்கு சரி நின்று வம்பிழுக்க இது நேரமல்ல என்றுணர்ந்து முன்னேறினான்.
அவர்களுக்கு முன்னே சென்றவர்கள் நதிக்கரையின் ஒரு பகுதிக்குச் செல்ல, விஜய் அந்தப் பாதையை தவிர்த்து சற்று தள்ளி வேறு ஒரு பகுதிக்குச் சென்றான்.
இது அனைவரும் புழங்கும் வழி என்பதால் அவன் அங்கு எதுவும் கிடைக்காது என்பதை அறிந்திருந்தான். அவனைப் பின் தொடர்ந்தாள் ஜானவி. கையில் இருந்த மேப் இந்தப் பகுதி புதர்கள் இருக்கும் பகுதி என்று காட்ட, அதை அவனிடம் கூறலாம் என வாய் திறக்க,
“இங்க நெறய புதர்கள் இருக்கும். பாத்து கால வை. அப்புறம் விழுந்துவெச்சு மறுபடியும் உட்கார்திராத. நான் கெளம்பி போயிட்டே இருப்பேன்.” சிறிதும் இறக்கம் இன்றி கூறினான்.
“நீங்க அலெர்ட் பண்றதுக்கு முன்னாடியே நான் மேப்ல பாத்து வெச்சிருக்கேன். ரொம்ப நன்றி உங்க கரிசனைக்கு. ஹ்ம்ம்” ஆளுக்கு ஒரு திசையில் முகத்தை திருப்பி நடந்தனர்.
சிறிது தூரத்தில் நதியின் சலசலப்பு கேட்க நதியின் பக்கம் சென்றான் விஜய். குளிர் உடலை குத்தியது. போட்டிருந்த ஜெர்கின்னையும் தாண்டி சில்லிட்டது.
அந்த விஷ்ணுவே இந்த நதியில் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் தான் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு சாளக்ராம கல்லுகுள்ளும் அந்த மகாவிஷ்ணுவை பார்க்க முடிகிறது.
அந்த நதியில் இருந்து சிறிது நீரைக் கையில் எடுத்தவன், கண்மூடி தியானித்து பின் பருகினான். கண்ணில் தெரிந்தவரை எதாவது சாளக்ராமக் கல் கிடைக்கிறதா என்று பார்த்தான்.
ஆனால் நம் மக்கள் கூடுமானவரை அனைத்தையும் எடுத்து தூர் வாரி விட்டனர். ஒரு கல் கூட இப்போது கிடைப்பதில்லை. விஜய் சிறிது நேரம் அங்கேயே நிற்க,
“அல்ரெடி மதியம் தாண்டிடுச்சு. சீக்கிரம் கிளம்பினா தான் ஒரு நல்ல இடமா பாத்து டென்ட் அடிக்க முடியும்.” அவன் தன்னை மதிப்பதில்லை என்றாலும் இப்போது இருவர் மட்டுமே இந்தப் பயணத்தில் இருக்க, அவனிடம் சொன்னாள்.
“ம்ம்… போலாம்.” ஒரு நிதானமான பதில் அவனிடமிருந்து வர, ஜானவி ஆச்சரியப் பட்டாள்.
“சரி இந்த கரையைக் கடந்து அந்தப் பக்கம் போகணும். அடிச்சுட்டு ஓடுற தண்ணீல பாத்து கால வெச்சு வா.” ஒரு எச்சரிக்கை தந்துவிட்டு ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
ஜானவிக்கு இதெல்லாம் சிறிதும் பயம் இல்லை. அவனுக்கு இணையான தைரியம் அவளிடம் எப்போதும் உண்டு. ஆகையால் அவன் பின்னோடு அவளும் ஆற்றில் இறங்கினாள்.
ஆற்று நீர் முதலில் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இடுப்பளவு நீரில் அவர்கள் செல்லும் போது சற்று வேகம் பிடிக்க ஆரம்பித்தது.
இருவருமே அதை உணர,
“கொஞ்சம் வேகமா வா. அப்ப தான் நீரோட்டத்தோட வேகத்துக்கு இணையா ஈசியா கடக்க முடியும்.” மீண்டும் விஜய் தானாகக் கூற
“சரி” என்றாள் பாதையில் கவனம் வைத்து.
விஜய் மனதில் அந்த பத்மநாபக் கடவுளை நினைத்துக் கொண்டு கடக்க, ஆற்றில் வேகம் இன்னும் அதிகரித்தது. விஜயின் நெஞ்சு வரை நீர் வந்துவிட, ஜானவிக்கு கழுத்து வரை இருந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்துல என் தலைக்கு மேல போய்டும்” என்றாள்.
அவர்களது பைகளையும் சுமந்து செல்வதால் அவர்களால் பாரத்தோடு நீந்தக் கூட முடியாது.
அவளின் கஷ்டம் உணர்ந்தவன் மனது அவளுக்கு உதவச் சொல்லி அவனை உந்த,
“என் கைய பிடிச்சுகிட்டு கொஞ்சம் தண்ணீல கால ஊனி குதிச்சு வ.. அப்போ தான் எம்பி, மூழ்காம வர முடியும்.”
அந்தச் சமயத்தில் சிறிதும் யோசிக்காமல் அவனது கையைப் பற்றிக் கொள்ள,
இருவர் மனதிலும் ஒரு பாரம் அழுத்தியது. எத்தனை தான் நிமிர்வும் மனதின் திடமும் நிறைந்திருந்தாலும், வயது என்ற ஒரு கருவி, நேரம் வந்தபோது அதன் ஹார்மோன்களை சுழற்றி விட்டது.
அடுத்த நொடி விஜய் தன்னை சமாளித்து நடக்க, ஜானவிக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. கண்களில் அதைக் காட்டிவிடாமல் கண்களை மூடி, அவன் சொன்னபடி நீரில் உந்தி நடந்தாள்.
சில நிமிடங்களில் இருவரும் அந்த ஆழமான பகுதிகளைக் கடந்துவிட, இடுப்பளவு நீர் வரும் வரை இருவரும் கையை விடவில்லை. பின்பு சுயம் பெற இருவரும் ஒரே சமயத்தில் கையை விடுவித்துக் கொண்டனர்.
சூரியன் அந்தப்பகுதியைச் சுற்றி இருந்த மலையின் பின் ஒளியத் தொடங்க, இருவரும் வேகமாகக் கரையை அடைந்து காட்டிற்குள் புகுந்தனர். மணி ஐந்தரைக்கே அங்கே இருள் ஆரம்பித்துவிட, இருவரும் ஹெட்லைட் கொண்ட தொப்பியை அணிந்து கொள்ள, அடர்ந்த காடு புலப்பட்டது.
நடைபாதை என்பது கூட அங்கே இல்லை. கல் வைக்கும் இடத்தில் கூட புற்கள் முளைத்து முழங்கால் வரை இருந்தது. அடியில் எந்த பூச்சி பொட்டு இருந்தாலும் சத்தியமாக கண்ணுக்குத் தெரியாது.
“போற இடம் பூரா இப்படியே இருந்தா, எப்படி? டென்ட் அடிக்கக் கூட ஒரு இடம் இருக்காது போலிருக்கே!” சற்று கலக்கம் அவள் குரலில் தெரிய, ஓரக்கனில் அவளின் பயந்த முகம் அவன் கண்ணில் பட்டது.
உள்ளுக்குள் அவளது பயம் அவனுக்கு அறுசுவை உணவு உண்டது போல நிறைவைத் தந்தது. அதில் லேசாகச் சிரித்தவன்,
“இன்னும் கொஞ்ச தூரம் போனா, சம தளம் வரும். பயப்படாத.” நாக்கை கண்ணக்கதுப்பில் அழுத்தி சிரிப்பை அடக்க , ஜானவிக்கு அந்த மங்கிய இருளில் நன்றாக கண்ணில் பட்டது. இந்த நேரத்தில் அவளது கெத்தை அவனிடம் காட்ட முடியாமல் போனதற்கு அவன் பின்னால் அழகு காட்டி முறைத்தாள்.
காட்டிற்குள் புலி உறுமும் சத்தமோ அல்லது கரடியின் சத்தமோ கேட்க, ஜானவியின் உயிர் வரை சில்லிட்டது.
“கொஞ்சம் வேகமா போங்க. ஏதாவது வந்துடப் போகுது. அவனது கையை அனிச்சையாகப் பிடித்துக் கொண்டு நடக்க,
“அப்படி ஒன்னும் வந்து உன்னைத் தின்னுடாது..” அவளது கையைப் பார்த்துக் கூறினான்.
உடனே அவள் கையை எடுத்துவிட்டு உதட்டை முருக்க, ‘என்ன பண்ணாலும் நடக்காது‘ என்பது போல அவன் பாதையை பார்த்து நடந்தான்.
சிறிது தூரம் வரை அந்த உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. பின் நின்று விட , ஒரு சமதளம் போன்ற இடமும் வந்தது.
இருவரும் எதுவும் பேசாமல், அவரவருக்கு கொண்டு வந்திருந்த டெண்ட்டைப் பிரித்து அங்கிருந்த பெரிய கற்களும் , திடமான குச்சியும் எடுத்து வந்து அமைத்துக் கொண்டனர்.
உடைகளை மாற்றிக் கொண்டு வர, காலையில் சாப்பிட்ட நூடுல்ஸ் எப்போதோ செரித்திருக்க, நீரில் நடந்து வந்ததும் சேர்ந்து இப்போது கொலைப் பசியை உண்டு பண்ணி இருந்தது.
ஜானவி உள்ளிருந்து ஆட்டோ காஸ் ஸ்டவ்வைக் கொண்டு அந்து அதில் கொண்டுவந்த ப்ரெட்டை சாப்பிட நினைத்தாள். அவளுக்கு அப்படியே சாப்பிடப் பிடிக்காது.
அதை அறிந்தவன், “ஸ்டவ்வ வேஸ்ட் பண்ணாத. இங்க மரக்குச்சி எல்லாம் இருக்கு. அதை வச்சு தீ மூட்டிக்கலாம். இன்னும் வேற எங்கல்லாம் போக வேண்டி இருக்குமோ. அங்க இந்த வசதி கூட இல்லாமல் போகலாம். அப்போ இது தேவைப்படும். இப்ப நான் தீ மூட்டறேன். அதுலயே வாட்டி சாப்பிடு.” திடீரென பொறுப்பு வந்தவனாகக் கூற,
சரியென தலையாட்டி. மற்றவைகளை வைத்து விட்டு ப்ரெட் மட்டும் கையில் எடுத்து வந்தாள்.
அதற்குள் அவன் காய்ந்த சருகுகள் மற்றும் குச்சிகள் என பொறுக்கிக் கொண்டு வந்தான். வெளிச்சத்திற்காக இருவரது டெண்டிலும் சிறு விளக்கை வைத்திருந்தனர். அருகருகே டென்ட் இருந்தாலும் இரண்டுக்கும் இடைவெளி இருந்தது.
அவன் கொண்டு வந்த சருகில் தீ மூட்டிப் பற்றவைக்க, அதைக் குளிருக்கு அது சற்று இதமளித்தது.
விஜயும் தான் கொண்டு வந்த பிரெட்டில் இரண்டை எடுத்து உண்ண, ஜானவி நெருப்பில் காட்டி சற்று டோஸ்ட் செய்து கொண்டிருந்தாள். லேசாக மனம் வீச, அப்போது தான் உணர்ந்தான், அது மிருகங்களை தூண்டிவிட வாய்ப்புள்ளது என்று.
உடனே அந்த நெருப்பை நீர் ஊற்றி அனைத்து விட்டான்.
“ஏன்?” கலக்கமாக ஜானவி பார்க்க,
“சுட்ட வரைக்கும் போதும். இதோ மனம் இங்க இருக்கற விலங்குகளுக்கு தெரிஞ்சா உடனே இங்க வந்துரும்” என பதறாமல் ஒரு குண்டைப் போட,
“என்னது…? ஐயோ இப்போ என்ன பண்றது…?” கண்களில் கலக்கம் ஏற்பட,
“பாத்துக்கலாம். நீ சாப்ட்டு போய் படு. எனக்கும் டயர்ட்டா இருக்கு” என எழுந்து உள்ளே சென்று, ச்லீபிங் பாக் போட்டு, கழுத்து வரை மூடிக்கொண்டு படுத்து விட்டான்.
ஜானவி டெண்டுக்குள் வந்து அதை உண்டவள். ச்லீபிங் பேகில் மூடிக்கொண்டு படுத்தாலும், அவன் சொன்னதிலேயே பக் பக்கென்று பயந்து தூக்கம் வராமல் தவித்தாள்.
அவன் தூங்கிவிட்டான் என அவன் மூச்சு சத்தத்தை வைத்தே உணர்ந்தவள், சுற்றும் முற்றும் வேறு எதாவது சத்தம் கேட்கிறதா என்ற உணர்வுடனே விழித்திருந்தாள்.
களைப்பு அவளையும் வாட்ட சற்று நேரத்தில் தூங்க ஆரம்பித்தாள். ஆனால் அப்போது தான் ஏதோ ஒன்று அவளது டெண்ட்டை உரசிக் கொண்டு போவது போல் இருக்க, இவளால் கண்ணைத் திறக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு கண்களைத் திறக்க, அவள் நினைத்தது மெய் என்பது போல ஏதோ ஒரு மிருகம் டென்டின் அருகே இருந்தது.
இவளுக்கு சத்தம் போடவும் முடியவில்லை. கத்தினால், அந்த சத்தத்திற்கு மற்ற மிருகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த மிருகமும் மிரண்டு விட்டால் வேறு வினையே வேண்டாம். கப் சிப் என்று படுத்திருக்க, மெல்ல அந்த மிருகம் அந்த வாசனையை மோப்பம் பிடித்து இவளின் டெண்டுக்குள் நுழைந்தது.
அப்போது தான் டெண்ட்டை மூடாமல் விட்டது கருத்தில் பட்டது.
அனைத்துக் கடவுள்களையும் வேண்டியபடி, கழுத்து வரை இருந்த ஸ்லீபிங் பேகின் மேல் ஒரு துண்டைப் போட்டு முகத்தை மூடியபடி படுத்திருந்தாள்.
அது என்ன மிருகம் என்று கூட அவளுக்குத் தெரியாது. ரூமின் விளைக்கையும் அனைத்திருக்க, எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அவள் அருகில் அந்த விலங்கு வரும் அரவம் கேட்க, அவளுக்கு உயிர் வெளியே வந்துவிடும் போல இருந்தது.