Aahiri-3

அத்தியாயம்-3

 

“அலை அலையாய் எழும் நினைவுகள்..

கனவுருவில் கரைய..

அரண்டு விழித்தால்..

அத்துவான காட்டில் அரவணைப்பின்

கதகதப்பு..!!”

 

ஜனார்த்தனன், ஜேஜே க்ரூப் ஆஃப் கம்பனீஸ் எனும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை தன் விரல் நுனி கொண்டு ஆட்டுவிக்கும் வல்லமைக்கொண்டவர். ஜேஜே க்ரூப் ஆஃப் கம்பனீஸ்.. பல்வேறு துறைகளில் காலூன்றி மூன்று தலைமுறைகளாய் நிலைத்து நிற்கும் ஒன்று!!  கண்ணசைவில் காரியத்தை முடித்திடும் பலம் கொண்டவர் ஜனார்த்தனன்.  சுருக்கமாய் ஒற்றை வார்த்தையில் பிக் ஷாட்!! 

 

அப்படிப்பட்ட ஜனார்த்தனின் ஒரே மகளான ஆஹிரியோ இன்று..

 

“ஆஹிரி ஜனார்த்தனன்..” என்று உச்சரித்தவளின் இதழ்களில் கசந்த முறுவல் ஒன்று படர மனதிலோ அலை அலையாய் எண்ண அலைகள்!!

 

‘தந்தையையே காப்பாற்றாத இந்த பணமும் பலமுமா தன்னை காத்துவிட போகிறது??’ என்றெழுந்த எண்ணத்தை தலையசைத்து தடுத்தவளாய் அந்த அறையின் விட்டத்தையே வெறித்திருந்தாள் அவள்.

 

கண்களிலிருந்து தாமாய் கசியும் கண்ணீரை துடைத்தெறிய மறந்தவளாய்..!!

 

மெத்தையில் குறுக்காக படுத்திருந்தவள் மெல்ல தலையை இடப்புறமாய் திருப்பினாள்.. அவ்வறையின் கண்ணாடியில்  பார்வை பதித்தவளாய்.. என்ன நினைத்தாளோ, எழுந்தவள்  பார்வையை சற்றும் அகற்றாமல் அதிலேயே பதித்திருக்க கால்களோ தாமாகவே அதனருகில் சென்றிருந்தன.

 

ஏனோ அவ்வறையின் கண்ணாடி தன்னை கட்டியிழுப்பதைபோலொரு உணர்வு எழாமல் இல்லை!!

 

எதையும் பொருட்படுத்தாது.. தன் முன் சுவராய் நின்ற கண்ணாடியை அவள் நெருங்கியிருந்தாள். 

 

அவள் கை அதை தொடும் முயற்சியில் உயர்ந்த நொடி.. ‘ஹாய்ங்ங்ங்!!!’ என்ற கோரமான சத்ததுடன் இரத்தத்தில் குளித்த பருந்தொன்று அதிவேகமாய்.. தூக்கியெறியப்பட்டதுபோல.. உயிருக்கு தப்பி ஓடியதுபோல.. பலத்த ஓசையுடன் அவள் முகத்திற்கு நேரெதிரில்.. அந்த கண்ணாடியில் மோதி தன் உதிரத்தால் பயங்கர ஓவியமொன்றை வரைந்து.. சறுக்கியிருந்தது!! 

 

திக்கென ஆகிட ஓர்நொடி நெஞ்சு நின்றுவிடும்போல்… நின்றிருந்தாள்   மறுகணமே “ஆஆஆஆ!!!!!” என்ற அலறல் அந்த வனத்தின் நிசப்தத்தை கிழித்தெறிந்தது.

 

பட்டென கதவு திறக்கப்பட வேகநடையுடன் அறையினுள் நுழைந்தவனின் பார்வையிலோ.. பதற்றத்தின் சாயலும்..பயத்தின் நடுக்கமுமாய்.. நடுநடுங்கிய இரு கரங்களின் பிடியில் இறுகியிருந்த போர்வை ஒன்று!! 

 

அதற்குமேலாய்.. பயமும் தவிப்புமாய் எதிர்புற கண்ணாடியையே வெறித்துப்பார்த்திருந்த இருவிழிகள்!! 

 

உடல் நடுங்க அமர்ந்திருந்தவளின் அருகில் அவன் விரைந்திருக்க அவளோ இன்னும் பயத்தின் பிடியில்!! 

 

அவனது திடீர் ஸ்பரிசத்தில் முதலில் பதறியவளை அவன் ஆதரவாய் பிடித்திருந்தான்.

 

“என்னாச்சுடா??ஏன் இப்படி வேர்த்திருக்குமா??” என்றவனின் கேள்விக்கு பதிலாய் சற்றும் தன் பார்வையை அக்கண்ணாடியை விட்டு அகற்றியிராதவளோ திக்கித் திணறியவளாய் வார்த்தைகளை கோர்த்திருந்தாள்.

 

“ர..ர..ரத்தம்!!” என்றவளின் அரண்ட விழிப்பார்வையைக் கண்டவனின் கண்கள் அந்த அறையை அலசிட அதில் அவன் பார்வையில் எதுவுமே படாமல் போக..

 

“எங்கடா?? எங்க பாத்த??” என்றான் குழப்பத்தை தத்தெடுத்த குரலில். 

 

இறுகப்பற்றியிருந்த போர்வையில் இருந்து ஒரு கையை பிரித்தவள் ஒற்றை விரலை சுட்டிக்காட்டியவளாய் அந்த அகண்டு நின்ற கண்ணாடியை பார்க்க.. அதுவோ துடைத்து வைத்ததைப்போல அத்தனை சுத்தமாய்..!!

 

 

அவளில் கவனம் பதித்திருந்தவன் அவள் முகம் சூடும் குழப்பத்தைக் கண்டு கொண்டவனாய் தரையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவளின் தோள்பற்றி எழுப்பினான்.  அத்தனை நேரம் இருந்தது இப்பொழுது மாயமாய் மறைந்திருக்க அந்த குழப்பத்தில் இருந்தவளோ அவன் இழுப்பிற்கு எழுந்துவிட்டிருந்தாள்.

 

ஆனால் எழுப்பிய அவனோ அந்த கண்ணாடியிடமே நகர அவள் கால்கள் நகர மறுத்தன.. கண்கள் அதே பயங்கரப்பார்வையை உதிர்க்க அவள் தோளை ஆதரவாய் பற்றியிருந்தவனோ “ஒன்னுமில்லடா!! இங்க பாரு..”  என்று பேசியவாரே அவளை அதனருகில் நகர்த்தியிருந்தவன் அவள் பின்னிருந்த படியே அவளது வலக்கரத்தை தனதுக்குள் எடுத்து அதை அந்த கண்ணாடியில் பதித்தான்.

 

இறுக மூடியிருந்த அவள் விழிகளை கண்டவனோ காதருகில் குனிந்து,

 

“இங்க பாரு ஆரிமா!!  ஒன்னுமே இல்ல.. கண்ண திறடா” என்க மெல்ல மலர்த்திய பார்வையில் நிம்மதிக்கு பதில் அதிர்ச்சியே படர்ந்திருந்தது!!

 

பட்டென அவன் புறம் திரும்பியவளின் பார்வை அலைபாய்ந்தன..

 

“இல்ல..நான் பாத்தேன்!! நான் பாத்தேன்!! இது முழுக்க ரத்தம்..”  என்றவளின் குரலில் மற்றவனுக்கு புரிய வைத்துவிடும் தவிப்பே நிறைந்திருக்க அலைபாயும் அவள் விழியைக் கண்டவன் அவள் முகம் பற்றி தன்புறம் திருப்பினான், 

 

“அது வெறும் ஹாலுஸிநேஷன்!! மாயைடா!! இங்க பாரு..” என்று அதை சுட்டிக்காட்டியவனோ “இங்க அதுக்கான சின்ன தடயம்கூட இல்ல பாரு..” 

என்றவன் மௌனமாய் நின்றவளை பார்த்துவிட்டு “சரி வா! சாப்பிடலாம்!” என்று  கையோடு கொண்டு வந்திருந்தவற்றை பரிமாறத் துவங்க இங்கு ஆஹிரியின் மனதினுள்ளோ ஆயிரம் குழப்பங்கள் குடிகொண்டிருந்தன.

 

பழத்துண்டொன்றை வாயிலிட்ட பின்னரே ஒன்று உறுத்தியது உள்ளுக்குள்..

‘எப்படிப்பட்ட சூழ்நிலை இது? கடத்தினவன்கிட்டயே அடைக்கலம் தேடுற சூழ்நிலை..!!’  கசந்த உணர்வொன்றுடன் உண்ணவும் முடியாமல் சிந்திக்கவும் இயலாமல் அமர்ந்திருந்தாள் அவள்.

 

கண்ணுக்கு முன்னிருந்த தட்டில் அழகாய் அலங்கரித்து நின்ற செர்ரி பழத்தை பார்க்க பார்க்க பழைய நினைவுகளெல்லாம் அழையா விருந்தாளியாய் மேல் எழும்பின..

 

அதற்குமேல் தன்னால் முடியாது என்பதுபோல் அவள் வைத்துவிட அவளையே கவனித்திருந்தவனோ, “சாப்பிடு ஆஹிரி!! இல்லன்னா.. என்கிட்ட இருந்து தப்பிக்கறத பத்தி அப்பறமா யோசிக்கலாம்”

 

அதே குரல்!! நேற்று ஒலித்த அதே தொனியில்.. 

 

பட்டென அவள் தலை நிமிர தோளை குலுக்கியவனாய் அவன் உண்பதை தொடர்ந்திருந்தான்.

 

விறைத்து நின்ற அவன் தேகமும்.. இறுகியிருந்த முகமும்.. ஏனோ சற்று முன் வரை  தளர்ந்த பிடியில் அவளை ஆதரவாய் அணுகி  அரவணைப்பாய் கைப்பற்றியவனுக்கும் இவனுக்கும் துளியளவும் சம்பந்தமில்லாததுபோல உணர்ந்தாள்.. அவன் உணர வைத்தான்!!

 

 

சாப்பிட்டு முடித்த கையோடு எதிர் வீட்டிற்கு சென்றவன் திரும்பியப்பொழுது கையில் ஒரு டைரியும் பென்னும்.. ஒரு பெரியளவிலான  புத்தகமும் ஆக்கிரமித்திருந்தது.

 

டைரியையும் பேனாவையும் மெத்தைமேல் போட்டவன் கையிலிருந்த புத்தகத்துடன் அங்கு கிடந்த அந்த ஒற்றை  சேரில் அமர்ந்துவாறு அதை புரட்டினான்.  இடையில் இவளிடம் விளக்கம் வேறு!!

 

“அது உனக்குதான்!” என்றதோடு சரி,  அதன்பின் மறந்தும் இவள்புறம் திரும்பவில்லை. 

 

அந்த டைரியையே வெறித்து நோக்கியவளினுள் அதிர்ச்சியின் அடைமழை..!! அவளது  டைரி எழுதும் பழக்கம் சிறுவயதிலிருந்தே அவள் தொடரும் ஒன்று.. சில காலமாகவே அவள் அதை நிறுத்தியிருந்தாள்.. நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாளோ?? என்ற சந்தேகமும் அவ்வப்பொழுது உள்ளே முணுமுணுப்பாய் எழும்..

திடீரென மாயமான தனது டைரிகளின் தொடர்ச்சியோ..?! தன்னறையில்..தனக்கு மட்டுமே தெரிந்த இடத்தில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்தவையெல்லாம் ஒரே நாளில் சுவடே இல்லாமல் மறைந்திருந்தது இப்பொழுது நினைவில் ஆடின.. 

 

‘இவனுக்கு எப்படி தெரியும்?? ஒரு வேளை.. இவனுக்கும் அதுக்கும்.. இல்லை அதுக்கு வாய்ப்பே இல்ல!!..’ என்றெண்ணமும் எழுந்து அவளை அழுத்தியது.

 

அவனையே தொடர்ந்தது அவளது ஆராய்ச்சிப்பார்வை!! ஆறடியா?? இல்ல அதற்குமே.. ஆனால் அவளைவிட சற்று இல்லை.. அதிகமே உயரம் அவன். கொஞ்ச நேரம் அவன் கண் பார்த்து பேசினாலும் அவளுக்கு கழுத்து வலி வந்துவிடுமளவு!! அந்த தேன் நிற  கண்கள்.. கூர்மையான ஈட்டியாய்..!! நிமிர்ந்த தோற்றம்!! தோற்றத்திலேயே அத்தனை நிமிர்வு அவனிடம்.

 

அந்த மரத்தாலான சாய்வு நாற்காலியில் கையில் இருந்த புத்தகத்தில் தனது பார்வையை பதித்தவனாய் அமர்ந்திருந்தவனை காண அவளுள்ளோ குழப்பங்களே கூடின!!

 

நொடிக்கொன்றாக மாறும் அவனது குணம்..அதை எந்த வகையில் சேர்க்கவென்று புரியாத நிலையில் அவள்.

 

பதறிய பொழுது அரவணைத்த அவனே கணங்களில் பதறவும் வைத்தான்..

 

இதற்கு முன் அவனை பார்த்ததாக தற்போதைய நினைவில் சிறுதுளி ஞாபகம்கூட இல்லை!! ஐந்து வருடம் காத்திருந்ததாக அவனுரைப்பதை ஏனோ அவளால் முழு மனதாய் ஏற்க இயலவில்லை..

 

“அரண்..” என்றவளின் அழைப்பில் மைக்ரோ ஸெக்கண்ட் அதிர்வொன்று அவனில்.. பின் மெச்சுதலாய் அவன் விழிகள்..!!

 

“நீ.. என்ன ஏன் கடத்தின??” என்றவளின் கேள்வியில் எதையும் பிரதிபலிக்காத அதே முகபாவத்துடன்,  ஒரு அலட்சிய தோள் குலுக்கலுடன்,

 

“அதான் சொன்னேனே!” என்றுவிட்டு தன் கவனத்தை புத்தகத்தினுள் திருப்பியிருந்தான்.

 

“பொய்!!” என்றவளின் குரல் உயர்ந்திருந்தது தொடர்ந்தவளாய், “கடத்தற அளவு நானொன்னும் பேரழகியுமில்ல!! இளவரசியுமில்ல!! சராசரி பொண்ணு..”

 

மெத்தையில் அமர்ந்திருந்தவளின் கால் கட்டைவிரல் நுனி, நிலத்தை தொட்டிருக்க கைகளை தன் இருபுறமும் ஊன்றி அமர்ந்திருந்தவளையே ஒரு முழு நிமிடம் ஏற இறங்க பார்த்தவன் பின் அதே அலட்சியத்துடன்,

 

“எனக்கு அப்படி தோணல!” என்றுவிட்டு கையிலிருந்ததில் கவனம் பதிக்கலானான்.

 

அவனது அலட்சிய பாவனையும்.. பார்வையும் அவளை பொறுமையிழக்கச் செய்திருந்தது.

 

பட்டென எழுந்து நின்றவளோ , “யூ!!! யூ வில் ரிக்ரெட்!!!” என்று கத்திவிட விருட்டென எழுந்தவனோ அவளைவிட வேகமாய் கையிலிருந்த புத்தகத்தை மெத்தையில் வீசியவனாய்.. அவளை நெருங்க.. அனிச்சையாய் இரண்டு எட்டு பின்னோக்கி வைத்திருந்தவளோ சுதாரித்தவளாய் நின்றிருந்தாள்.. 

 

பார்த்துவிடலாமென்றா..?

 

அவள் எதிர்ப்பார்த்திராத நேரத்தில் சுட்டிக்காட்டிய அவள் கையை இறுகப்பிடித்தவன்  அதை அப்படியே குறுக்காக அவள் தோளோடு சேர்த்து சில செண்ட்டிமீட்டர்கள் தொலைவில் இருந்த சுவற்றில் தள்ள, முட்டி நின்றவளின் பார்வையோ முதலில் அதிர்ந்து பின் நிமிர்ந்திருந்தது.

 

தன் முகத்திற்கு வெகு அருகில் இருந்தவனின் கண்களையே அவள் நேருக்குநேர் பார்த்தவளாய் நின்றிருந்தாள். 

 

கொஞ்ச நேரத்திற்கு முன் பயந்து அலறியவளா இவள் என்ற சந்தேகமெழும் அளவிற்கு!! நேற்று அவளிடம் அவன் கண்ட அதே பார்வை..!! 

வெறித்திருந்தவனின் பார்வை சட்டென மாறியது.. கண்கள் இரண்டும் மின்னின.

 

“சீரியஸ்லி பேபி!! இனி நமக்கு நடுவுல யாருமில்ல!! நீ..  நான்.. அப்பறம் இந்த காடு மட்டும்தான்!!இனி இங்கதான்..” என்றவனை அத்தனை நேரம் பார்த்திருந்தவளின் கண்களில் சிறு பதட்டம்!!

 

‘ வாழ்நாள் முழுக்க  இங்கயே இருக்கனுமா?? அதுவும் இவனோட..!!??’ 

 

அவள் எண்ண அலைகளுக்குள் சிக்கியிருக்க அவனோ பற்றியிருந்த அவள் கையை விடுவிக்க மூளை அடித்த அபாயமணியில் அவள் நகரும் முன் தன்னிரு கரங்களையும் அவளுக்கு தடையாய்.. சுவற்றில் வைத்திருந்தான். அவள் பார்வை உயர்ந்து அதிர்ந்தது.

 

“என்ன பேபி?? இன்னும் நம்பிக்கை வரலையா??” என்றவனின் குரல் முன் தினத்தை நினைவில் கொண்டுவர தன் முழு பலத்தையும் திரட்டியவளாய் அவனை பிடித்து தள்ளியிருந்தாள். 

 

தள்ளியவள் கதவிடம் விரைந்து அது திறவாமல் போக, “நான் வில்லனில்ல ஆஹிரி!!” என்றவனின் கேலிக்குரலில் தன்னிலை மறந்தவளாய்..

 

“யெஸ்!! நீ வில்லன் இல்ல மான்ஸ்டர்!!”  கத்தலாய் வெளிவந்த குரலுடையவளோ மறுகணமே மயங்கிச் சரிந்தாள்.

 

அவளைத் தாங்கிப்பிடித்தவன்  மெத்தையில் கிடத்தியிருந்தான்.

 

 

படுக்கையில் அசைவற்று கிடப்பவரையே பார்த்திருந்த நிரூபாவினுள் இன்னும் தகித்துக் கொண்டுதான் இருந்தது.. கூடவே பதற்றங்களும் பயமும்!!

 

இருவரை தொலைத்தாயிற்று!! கணவரும் கண்ணெதிரே காலவரையற்ற நித்திரையில்.. இதில் எதை நினைத்து அழவென்று புரியாமல் போக இறுகிப்போய் அமர்ந்திருந்தார் நிரூபா.

 

கையில் பழச்சாறுடன் உள்ளே நுழைந்த வகுளாவின் கரிசனமான கை தொடுதலிலேயே நிகழுக்கு வந்திட மற்றவரோ இவர் கையில் திணித்துவிட்டு,

 

“இன்னைக்கு  முழுக்க இங்கதானிருக்கீங்க! இதையாவது குடிங்கக்கா!” என்றுவிட்டு  அப்பாவியாய் புன்னகைத்துச் சென்ற வகுளாவை காண ஏனோ உள்ளூர ஒரு ஓரத்தில் உறுத்தலாய்.. உணர்ந்தார்.

 

கண் விழித்த ஆஹிரியின்  முன் இருண்டு கிடந்த வானம் கதிரொளியால் இருள் விலகுவதுபோல கொஞ்ச கொஞ்சமாய் இருள் அகல பளீரென்று ஒளிர்ந்தது அவ்வானம்..!!

 

வானிற்கு மிக அருகாமையில் முகில் கூட்டங்களை ஏணி வைத்து பிடித்துவிடும் தூரத்தில் இருப்பதைபோல் உணர்ந்தவள் எழுந்தமரவே உரைத்தது சுற்றம்!! 

 

பெரிய அளவிலான கண்ணாடி பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தாள்.

 ஆம்! அடைக்கத்தான் பட்டிருந்தாள். ஏனெனில் எவ்வளவுதான் கண்கள் துழாவியும் கதவு தென்படவே இல்லை!! 

 

எழுந்து நின்றவளை பிரமிக்க வைத்தது அக்காட்சி!! கண்ணெதிரே பரந்து விரிந்துக் கிடக்கும் இயற்கை!! மலைகளும்.. அருவியுமென.. போன மனதை கீழே பார்க்கும்படி உந்தித்தள்ள தரையில் கவனம் பதித்தவளை மிரள வைத்தது.. அவள் நின்றிருந்தது மலை உச்சியின் நுனியில் நின்ற கண்ணாடி பெட்டியைப்போல காட்சியளித்த அறை!! சரியாய் அவள் நின்றிருந்தது நிலத்தையும் தாண்டி.. அந்தரத்தில்.. கண்ணாடியில் கால் பதித்து!!

முதலில் பிரமிப்பாய் இருந்ததோ இப்பொழுது பயங்கரமாய்..!!

 

அடுத்த அடியை பின்னெடுத்து வைக்கவும் முடியாமல் அங்கேயே நிற்கவும் முடியாமல்.. நெஞ்சம் முழுதும் பயத்தில் நிரம்பி தளும்பி நிற்க வெற்று பாதத்தை மெல்ல மெல்ல பின்னால் நகர்த்தினாள். மெல்ல மெல்ல.. அவள் பாதம் பின்னோக்கி செல்ல  ‘சிலீர்ர்ர்’ என்ற பெரும் ஒலியுடன் அந்த கண்ணாடி உடைந்து சிதறியது!!  கண்கள் இரண்டையும் இறுக மூடியவள் கைகளைக் கொண்டு காதை அழுந்த மூடியிருக்க மண்டியிட்டமர்ந்திருந்தவளின் முட்டி பாதங்களென வெதுவெதுப்பாய் ஈரம் பரவுவதை உணர்ந்தவள் கண்களை திறக்க பிசுபிசுத்த கைகளிலோ  இரத்தத்தின் சாயல்!!

 

நிச்சயம் அது அவளது இல்லை என்பதை உணர்ந்தவளின் பார்வை அலைபாய  எதிரில் நிலைத்த பார்வை உறைந்திருந்தது.. அங்கு அவள் கண்டது..

 

“துஜீஈஈஈ!!!!!” என்ற அலறலுடன் கைகள் இரண்டால் தலையை பிடித்துக்கொண்டு கதறியபடி மெத்தையில் அமர்ந்திருந்தவளிடம் விரைந்தவன் மண்டியிட்டமர்ந்தவனாய் அவளை ஆதரவாய் அணைத்திருந்தான்.

 

ஒரு கையால் அவள் தலையையும் மறு கையால் அவள் முதுகையும் ஆறுதலாய் தடவிக்கொடுத்தவனின் இதழ்களோ, “ஒன்னுமில்லடா!! ஒன்னுமில்ல!! இங்க பாரு.. ஒன்னுமில்ல.. வெறும் கனவு!! வேறொன்னுமில்ல..”  என்று ஆறுதலளிக்க தன் கைகளுக்குள் இருந்தவளின் உடல் நடுங்கிய விதம் அவனை அதிரவைத்தது.

 

‘துஜீ..துஜீ” என்று அரற்றியவளிடம்  “ஒன்னுமில்ல ஆரிமா ஒன்னுமில்ல” என்று சமாதானப்படுத்த அரற்றல் மட்டுப்பட சற்று நேரம் எடுத்தாலும்.. பின் அழுது ஓய்ந்தவளாய் தன் தலையோடு அணைத்திருந்தவனின் ஸ்பரிசம் அவளுக்கு அப்படியொரு பாதுகாப்பு உணர்வை கொடுத்திருக்க அப்படியே உறங்கிப்போனாள் ஆஹிரி.

 

தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் தூக்கம் கலையாதவாறு படுக்க வைத்தவனின் பார்வையிலோ அவள் இமைகளுக்கு மேல் அழகாய் படுத்துறங்கியிருந்த ஐ லைனர் கசிந்திருப்பதை கண்டவன் கை குட்டையால் அதை சரிசெய்தவனாய் போர்வை ஒன்றை போர்த்தியிருந்தான் அவளுக்கு.. 

அவளையே பார்த்திருந்தவனுள்  ஏனோ ‘யூ வில் ரிக்ரெட்!!!!’ என்றதே.. அழுத்தமாய்..