aanandha bhairavi 19

aanandha bhairavi 19

ஆனந்த பைரவி 19

பைரவியின் காதிலிருந்த ஹெட்ஃபோனில் கெப்டனின் அறிவிப்பு களைப்பாய் ஒலித்தது. ப்ரிட்டிஷ் எயார்வேய்ஸின் BA0119 இலக்க விமானம் தரையிறங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அத்தனை ஏற்பாடுகளும்கபின்க்ரூஆல் மேற்கொள்ளப் பட்டுக்கொண்டிருந்தது. திருச்சியின் தட்ப, வெப்பநிலை அனைத்தும் அறிவிக்கப்பட்டு முடிய, பேரிரைச்சலோடு அந்த ராட்சசப் பறவை ஒரு குலுக்கலுடன் தரையை முத்தமிட்டது.

அருந்ததியின் அண்ணன் இவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அத்தனை ஏற்பாடுகளையும் லிவர்பூலில் இருந்தபடியே தன் சொந்த பந்தங்களை வைத்து முடித்திருந்தார் அருந்ததி.

ஜாதகம் பார்த்து எட்டுப் பொருத்தம் இருக்கவே மிகவும் மகிழ்ந்து போனார். தன் குடும்பத்தினரையும் விசாரிக்கச் செய்து மாப்பிள்ளை தரப்பினரை அறிந்து கொண்டார். குடும்ப அளவிலான நிச்சயதார்த்தமே ஆர்த்தியோடு நடந்து இருந்ததால் எந்த தகவலும் யாருடைய காதுகளையும் எட்டவில்லை

பாட்டிக்கு ஃபோன் மூலமாக தங்கள் சம்மதத்தை சந்திரன் தெரிவிக்க ஜரூராக வேலைகள் ஆரம்பித்தது. கல்யாணம் பூஞ்சோலையில்தான் நடக்க வேண்டும் என்று ஆனந்தன் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட அருந்ததிக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவருக்கு அதில் அத்தனை உடன்பாடு இல்லை என்றாலும் மகளுக்காக பொறுத்துக் கொண்டார்

சந்திரன், மாப்பிள்ளை எள் என்னும் முன் எண்ணெயாக நின்றார். ஆனந்தன் குடும்பத்திற்கு சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் இருக்கவே அந்தப் பொறுப்பை மாப்பிள்ளை வீட்டார் ஏற்றுக் கொண்டனர். திருமணப் பத்திரிகையும் ஆன்லைனில் ஆர்டர் கொடுக்கவே, ரெடியாக இருந்தது. பைரவிக்குத் தேவையான நகைகளை மட்டும் லண்டனில் இருந்து வாங்கிக் கொண்டு வரவே, இந்தியாவில் ஜவுளி எடுக்கும் வேலை மாத்திரமே மிச்சம் இருந்தது

ஆனந்தன் கிளம்பி கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு பிறகு பைரவி குடும்பம் இந்தியா வந்திறங்கியது. கமலாக்கா இவர்கள் வரும் சேதியறிந்து முன்கூட்டியே திருச்சி வீட்டை சுத்தம் பண்ணி வைத்திருந்தார். அத்தனை சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது. பைரவியைக் கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டார். பயணக் களைப்பு என்று பேர் பண்ணிக் கொண்டு தனது ரூமிற்குள் புகுந்து கொண்டாள் பைரவி. ஃபோனை எடுத்து ஆனந்தனை அழைக்கவே, முதலாவது ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன்,

ஹேய் பட்டு, என்னைக் கூப்பிட இத்தனை நேரமா? ஃப்ளைட் லான்ட் ஆகி கிட்டத்தட்ட மூணு மணி நேரமாச்சுஅவன் குரல் குழைந்தது.

ஆனந்த் எப்படி இருக்கீங்க? மாமா வந்திருந்தாங்க. எல்லார் முன்னாடியும் ஃபோனைத் தூக்கினா நல்லா இருக்காதில்லை. அதான் லேட் ஆகிடுச்சு பா.”

சரிடா பட்டு, எப்படி இருக்கே?”

நல்லாவே இல்லை.” சொல்லும் போதே குரல் கலங்கியது.

ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு பொண்ணு பேசுறா பேச்சா இது? ஏன் பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையோ?” அவன் கேலியில் இறங்க,

பேச்சை மாத்தாதீங்க ஆனந்த். நீங்க இந்தியா வந்ததுக்கு அப்புறம் எத்தனை வாட்டி எங்கூட பேசியிருக்கீங்க சொல்லுங்க. ஃபோனை ஆன்ஸர் பண்ணுறதே இல்லை. நீங்க என்னை மிஸ் பண்ணவே இல்லையா ஆனந்த்?” அவள் கலக்கத்துடன் கேட்க,

அப்படி இல்லை பைரவி. கல்யாணத்திற்கு முன்னாடி ரிசோர்ட் வேலையை முடிச்சிரணும்னு ரொம்பவே தீவிரமா இருக்கேன். இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டாத்தான் நிம்மதி. அதுக்கப்புறம் ஃபுல் டைம் என் பட்டு கூடத்தான் சரியா?” 

ம்…” அவள் இழுக்க,

அதை சிரிச்சுட்டே சொல்லலாமே

ஆனந்த்…”

என்னடா..?” இந்த உலகத்துக் காதலெல்லாம் அவன் குரலில் வழிந்தது.

எனக்கு உங்களைப் பாக்கனும்அவள் குரலில் கலக்கம் தெரிந்தது.

என்னால உங்க வீட்டுக்கு வரமுடியாது பைரவி. அது அழகும் இல்லை. முகூர்த்தப்பட்டு எடுக்க உன்னையும் வரச்சொல்லி பாட்டி உங்கம்மா கிட்ட கேட்டாங்களாம். அதுக்கு அவங்க, கல்யாணம் நிச்சயம் ஆனா பொண்ணை வெளியே எங்கேயும் எங்க வழக்கப்படி அனுப்பமாட்டோம் அப்படீன்னு சொல்லிட்டாங்களாம். மாமியார் சங்கதி தெரிஞ்சது தானே. அதனாலே மாமனாரை தாஜா பண்ணி வெச்சிருக்கேன். பாக்கலாம்டா.” பேசிக் கொண்டிருந்தவன்,

பைரவி, முக்கியமான ஒருத்தர் கால் பண்ணுறார். நான் அப்புறமா கூப்பிடுறேன்டாஅவள் பதிலை எதிர்பாராமல் வைத்து விட்டான் ஆனந்தன். பைரவிக்கு சலிப்பாக இருந்தது. இனி அவனாகக் கூப்பிட மாட்டான். வேலையில் பிஸியாகிவிட்டால் இவள் அழைத்தாலும் பதில் இருக்காது.

கதவு தட்டும் சத்தம் கேட்கவே திறக்க, கமலாக்கா டீயோடு நின்றிருந்தார்.

பாப்பாவாஞ்சையோடு அழைத்துக் கொண்டு உள்ளே வந்தவர் டீயை அவளிடம் கொடுத்து விட்டு,

பாப்பா, உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.ஆனா நீங்க திட்டக் கூடாது.” பெரிய பீடிகையோடு ஆரம்பிக்க, சிரித்தவள்

இல்லைக்கா, சொல்லுங்க. என்ன விஷயம்?”

அது பாப்பா, நீங்க ஊருக்கு கிளம்பும் போது சாவியை பாட்டிக்கிட்ட குடுக்க சொன்னீங்க இல்லையா? நான் பாட்டிக்கிட்ட குடுக்கலை பாப்பா!” பைரவி கேள்வியாகப் பார்க்க

நான் ஆனந்தன் தம்பிகிட்ட தான் குடுத்தேன்.”

…! அவங்களை எங்க பாத்தீங்க?”

குற்றாலம் போனேன் பாப்பா. லியம் தம்பியோட நீங்க பேசும் போது சொன்னது எனக்கு கொஞ்சம் புரிஞ்சுது பாப்பா. டாக்ஸி காரர்கிட்டஅருவி ரிசோர்ட்ன்னு சொன்னேன். கொண்டு போய் விட்டாரு.”

எதுக்குக்கா அவ்வளவு தூரம் போனீங்க?”

எனக்கு தம்பிகிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருந்தது பாப்பா.” அவள் அமைதியாகப் பார்த்திருக்க, கமலா தொடர்ந்தார்.

அதுவும் என்னோட பாப்பாவைப் பத்தி பேசணும், அதான் போனேன்.” பைரவி ஆச்சரியமாகப் பார்க்க,

ஒரு நாள் துவைச்ச துணியை உங்க ரூம்ல வைக்கப் போனப்போ, தம்பியோட ஃபோட்டோ உங்க பெட்ல இருந்ததைப் பாத்தேன். புரியாத நிறைய விஷயங்கள் அப்போ புரிஞ்சுது.” பைரவியின் தலை தானாகக் குனிந்தது.

ரொம்ப சந்தோஷமா இருந்தது பாப்பா. ஆனா அதைக் குலைக்குற மாதிரி அந்த ஆர்த்திப் பொண்ணு வந்தப்போ எனக்கு அப்படியொரு கோபம் வந்துச்சு. உடனேயே நீங்களும் கிளம்பிட்டீங்க. எனக்கு என்னவோ சரியில்லைன்னு தோனிக்கிட்டே இருந்துச்சு. அதான், நேரா தம்பிக்கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.”

அதுக்கு என்ன சொன்னாங்க?”

உங்க பாப்பாவுக்கும், எனக்கும் தான் கல்யாணம் நடக்கும். நீங்க எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க. ஆனா இதையெல்லாம் உங்க அருந்ததி அக்காக்கிட்ட சொல்லிராதீங்கன்னு சொன்னாங்க பாப்பா. நான் அக்காக்கிட்ட வாயே திறக்கல்லைஅவர் சொல்லிச் சிரிக்க, பைரவியும் இணைந்து கொண்டாள்.

**–**–**–**–**–**–**

அருந்ததி ரொம்பவே பிஸியாக இருந்தார். ஈவ்னிங் மாப்பிள்ளை வீட்டார் வர இருப்பதாக தகவல் வந்திருந்தது. முதல் முறையாக வீட்டிற்கு வருகிறார்கள். எந்தக் குறையும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இரவு உணவை தனக்கு மிகவும் பரிட்சயமான கேட்டரிங் நண்பரிடம் விட்டு விட்டார் சந்திரன்.

ஆனந்தனின் குடும்பம் அன்று காலையிலேயே புறப்பட்டு திருச்சி வந்து விட்டார்கள். பெண் வீட்டிற்கு முறையாக ஒரு நடை போய்விட்டு, அப்படியே கல்யாண ஜவுளியையும் அங்கேயே முடிக்க திட்டமிட்டிருந்தார்கள். அருந்ததி பைரவியை அத்தனை தொலைவிற்கு அனுப்பமாட்டார் என்பதால் ஆனந்தன் பாட்டியைக் கொண்டு இந்த ஏற்பாட்டை முடித்திருந்தான்.

கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. ஆனந்தன் ரிசோர்ட்டின் சகல வேலைகளையும் கிட்டத்தட்ட முடித்து விட்டான். சின்னச் சின்ன வேலைகளாக ஒன்றிரண்டு பாக்கி இருந்தது.

எல்லோரும் ஒரு ஆறு மணியளவில் வந்துவிட்டார்கள். அன்று பைரவி சிம்பிளாக ஒரு ப்ரின்டட் சில்க் சாரி உடுத்தி இருந்தாள். நீலமும், பச்சையும் கலந்த டேர்கொயிஸ் (turquoise) கலரில் அமைந்த சேலை. பெரிய கோல்ட் போடர், உடல் முழுவதும் அதே கோல்ட் கலரில் மயில் வேலைப்பாடு. ஹெட் பீஸ் மயில் கழுத்து நிறத்தில் இருந்தது. சின்னதாய் ஒரு ஆரம் மட்டும் கழுத்தில். பெரிய குடை ஜிமிக்கி, கையில் ஒன்றிரண்டாக வளையல்கள். தலை நிறைய மல்லிகைப்பூ வழிய அழகுப் பதுமையாக நின்றிருந்தாள்

அருந்ததிக்கு ஆச்சரியம் பிடிபடவில்லை. தன் பெண் தானா இது? புடவை கட்ட வைப்பதற்குள் அவளோடு ஒரு நாட்டியம் ஆடுவார் அருந்ததி. அத்தனை பாடு படுத்துபவள் இன்று சமத்தாய் புடவை கட்டிக் கொண்டாளே!

மங்கையற்கரசியும் அன்று குடும்பத்தோடு வந்திருந்தார். பெரிய கலாட்டா பேர்வழியாக இருந்தார். ஐஷுவின் அத்தனை சேட்டைகளும் யாரிடமிருந்து வந்திருக்கும் என்று சொல்லாமலே புரிந்தது. இதற்கு எதிர்மாறாக அவர் கணவன் வாகீசன் அமைதியாக இருந்தார். எல்லோரும் வந்திருக்க, அந்த கறுப்பு Audi மட்டும் மிஸ்ஸிங். சோர்ந்து போனாள் பைரவி. பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணியதெல்லாம் வீணாகத் தோன்றியது. தனியாக சாதனாவைப் பிடித்தவள்

அண்ணா வரலையா சாதனா?” என்க,

இப்போ வந்திருவாங்க அண்ணி.” பைரவி நம்பாத பார்வை பார்க்க,

எல்லாரும் ஒன்னா வர்ரதாத்தான் இருந்தது. அவசரமா ஒரு ஃபோன் கால் வரவும் அண்ணா போயிருக்காங்க. இப்போ வந்திடுவாங்க அண்ணிஇவள் இங்கு தலையாட்ட, அதே கேள்வியை சந்திரன் பாட்டியிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

பேச்சும், சிரிப்புமாக அந்த இடத்தில் கல்யாணக் களைகட்டியது. பைரவி மட்டும் எதிலும் பங்குபற்றாமல் அமைதியாக இருந்தாள். கண்கள் மட்டும் வாசலையே பார்த்திருந்தது. ஏதோ தோன்ற ஃபோனை எடுத்தவள் ஆனந்தன் நம்பருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினாள்

எங்கே இருக்கிறீர்கள்?” உடனேயே பதில் வந்தது.

வந்து கொண்டிருக்கிறேன்“. கூட்டத்திலிருந்து மெதுவாக நழுவியவள், மாடி பால்கனியில் லைட்டை அணைத்து விட்டு அவன் வருகைக்காக காத்திருந்தாள். ஒரு சில நிமிடங்களில் அந்த black Audi அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரை விட்டு இறங்கியவன் ஃபோனை எடுப்பது இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்த பைரவிக்குப் புரிந்தது. அடுத்த வினாடி அவள் ஃபோன் உயிர் பெற, வந்த அழைப்பை ஏற்றவள் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க

ஏய் பட்டு, கோபமா இருக்கியா? ஒரு ஹலோ கூட சொல்லலை.”

ஏன் இவ்வளவு லேட்?”

ஒரு அவசரமான வேலைடா. அதை முடிச்சுட்டு ஓடி வந்துட்டேன்.” சொன்னவன் கறுப்பு ஜீன்ஸும், க்ரே கலர் ஷேர்ட்டுமாக இருந்தான். அவனையே பார்த்தபடி அவள் இருக்க,

எங்க இருக்கீங்க அம்மணி?”

உங்களைத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்அவள் சொல்லி வாய் மூடவில்லை, அவன் பார்வை பால்கனியை நோக்கி உயர்ந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் வரிவடிவத்தை பார்த்தவன் அப்படியே நின்று விட்டான்.

பாத்து ஒரு மாசமாச்சு. உன்னைப் பாக்கணும்னு அதை, இதை சொல்லி ஒட்டுமொத்த குடும்பத்தையும் அள்ளிப் போட்டுக்கிட்டு வந்திருக்கேன். நீ என்னடான்னா இருட்டில தரிசனம் குடுக்கிறயா?”

“……”

கீழே வா பைரவிஅவன் குரல் அத்தனை குழைந்திருந்தது. பால்கனி லைட்டை ஆன் பண்ணிவிட்டு கீழே இறங்கி வந்தாள் பைரவி. உள்ளே வந்தவனை வரவேற்ற சந்திரன்,

வாங்க மாப்பிள்ளை, உங்களைத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருக்கோம்.” அவ்வளவு மகிழ்ச்சி அவர் குரலில். அருந்ததி என்ன நினைத்தாரோ, பைரவியை அழைத்து ட்ரேயை அவள் கையில் கொடுத்தவர்

மாப்பிள்ளைக்கு கொடுஎன்றார். மெதுவாக வாங்கிக் கொண்டவள் அவனை நெருங்கி ட்ரேயை நீட்ட, ஆனந்தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஐஷ்வர்யா எதற்கோ அவசரமாக எழும்ப, ஜூஸ் சரிந்து ஆனந்தன் மேல் சிதறியது.

ஐயோ! சாரி அத்தான். நான் கவனிக்கலை. ஷேர்ட்ல பட்டிருச்சே. உடனே வாஷ் பண்ணினா கறை படியாது இல்லை சாதனா?”

ம்ஆமா அண்ணா. அண்ணி உங்க பாத்ரூம் எங்கே இருக்கு?” இரண்டு பேரும் ஆனந்தனை கைப்பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு சென்றனர். சட்டென பதறிய அருந்ததி,

பைரவி அப்பாவோட ஆஃபிஸ் ரூமுக்கு கூட்டிட்டுப் போ.” என்றார். மாப்பிள்ளை வந்ததும் வராததுமாக இது என்ன இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை அவருக்கு.

சந்திரனுக்கு என்று சிறிதாக ஒரு ஆஃபீஸ் ரூம், அட்டாச்ட் பாத்ரூமோடு இருந்தது. அவர் இங்கு வேலை பார்த்த போது அவர் அதிகம் வீட்டில் செலவழிப்பது அந்த ரூமில் தான். பைரவி தவித்துப் போனவள், ஓட்டமும் நடையுமாக அந்த ரூமிற்கு சென்று லைட்டை ஆன் பண்ணி விட்டு,

பாத்ரூம் அங்க இருக்கு…” முழுதாக முடிப்பதற்குள் ஆனந்தனின் இறுக்கிய அணைப்பிற்குள் இருந்தாள் பைரவி. சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? கூடவே வந்த சாதனாவும், ஐஷுவும் எங்கே? ஆனந்தனும், தானும் ரூமிற்குள் இருக்க, கதவு பூட்டப்பட்டிருந்தது. அவள் சிந்தனை அத்தனையையும் ஒட்டுமொத்தமாக சுருட்டிக் கொண்டது ஆனந்தனின் செய்கை. அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன், அந்த முகமெங்கும் முத்தம் பதித்தான். அவளைப் பிரிந்திருந்த ஏக்கம், அவளால் மட்டுமே தனக்குள் தூண்டி விடக் கூடிய இந்த உணர்வு என அத்தனையும் அவனை ஆக்கிரமிக்க, இத்தனை நாளும் தன்னைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவன் இன்று அத்தனையும் கரையுடைக்க அந்த நொடிகளுக்குள் கரைந்து போனான். முகம் முழுவதும் நடந்த அந்த இதழ் ஊர்வலம், அவள் செவ்விதழ்களில் முடிவடைந்த போது, அவன் தாபம் புரிந்தது பைரவிக்கு

ஒரு ஒற்றை நிமிடத்தை மட்டுமே தனதாக்கிக் கொண்டவன் அவளை விடுவித்த போது, அவன் மார்பிற்குள் புகுந்து கொண்டாள் பைரவி

இப்போ சொல்லு பைரவி, நான் சாமியா? ஆசாமியா?” சிரிப்புடன் அவன் கேட்க, அவன் மார்பில் லேசாகக் குத்தியவள் வெளியே ஓடிவிட்டாள். ஷேர்ட்டைக் கழுவியதாக பேர் பண்ணிக் கொண்டு அவன் வெளியே வந்தபோது, ஐஷுவும், சாதனாவும் பைரவியை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். இவன் தலை தெரிந்தவுடன் சாதனா அமைதியாகி விட, ஐஷ்வர்யா சத்தமாச் சிரித்தாள்.

பெரியவர்கள் அவர்கள் பேச்சில் மும்முரமாக இருக்க, இளையவர்களை கண்டுகொள்ளவில்லை. பெண்கள் மூவரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்க, அங்கே போன ஆனந்தன் பைரவிக்கு பக்கத்தில் இருந்த செயாரில் உட்கார்ந்து கொண்டான்

என்ன அத்தான் ஷேர்ட்டை நல்ல்லாவாஷ் பண்ணினீங்களோ?” ஐஷூ வேண்டுமென்றே கேலி பண்ண

நீ இன்னைக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கே ஐஷுஎன்றான்.

யாரு நானா? உங்களைக் காணல்லைன்ன உடனே ஃபீலிங்ஸ் ஒஃப் இந்தியா ஆனது உங்க ஆளு. அது தெரியுமா உங்களுக்கு?” அவள் மேலும் கலாய்க்க

இல்லைநான்சும்மாதான் கேட்டேன்.” பைரவி திக்கித் திணற, இப்போது அவர்களோடு ஆனந்தனும் கூடச் சேர்ந்து சிரித்தான்.

சாப்பாடு ஆயத்தமாகி விடவே எல்லோரும் சாப்பிட ஆயத்தமானார்கள். கமலாக்கா மாப்பிள்ளை வீட்டாரை ஓடி ஓடி கவனித்தார். ஏதோ தன் மகளின் கல்யாணம் என்பது போல இருந்தது அவர் செய்கைகள் அத்தனையும். விருந்து முடியவே எல்லாரும் சற்று நேரம் உட்கார்ந்து கல்யாண ஏற்பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அருந்ததி, கொடி வீட்டுல நீங்க தங்குங்க. இன்னும் ரெண்டு வீடு ஏற்பாடு பண்ணி இருக்கு. உங்க சொந்த பந்தமெல்லாம் அங்க தங்கிக்கலாம். வேற ஏதாவது வேணுமாம்மா?”

இல்லை பெரியம்மா, இது போதும்.” 

வீடெல்லாம் சுத்தப்படுத்தி ரெடியா இருக்கு. நீங்க ரெண்டு நாள் முன்னாடியே கிளம்பி வந்திருங்கநேரம் ஒன்பதைத் தொட,

அப்போ நாங்க கிளம்பறோம் சந்திராதாத்தா வணக்கம் வைக்க, சந்திரனும்..

சரிங்க ஐயாபவ்வியமாக கை கூப்பினார்.

அருந்ததி, நாளைக்கு முகூர்த்தப் பட்டு எடுக்கப் போறோம். நீங்க எல்லாரும் பைரவியை கூட்டிக்கிட்டு வரணும்.” பாட்டி சொல்ல, தலை ஆட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை அருந்ததிக்கு

வாசுகி பைரவியின் அருகில் வந்தவர் அவள் கன்னந் தடவி முத்தம் வைக்க, சந்தோஷம் பிடிபடவில்லை அருந்ததிக்கு. தன் பெண் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசம் அருந்ததியைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. தான் தேடியலைந்து கண்டு பிடித்திருந்தால் கூட இப்படி ஒரு சம்பந்தம் தங்களுக்கு அமைந்திருக்குமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டார்.

ஐஷ்வர்யா தான் வேண்டுமென்றே வாசுகி அருகில் வந்தவள்,

அத்தை அங்கப்பாருங்க, உங்க பையன் உங்களை முறைச்சுப் பாக்கிறாருஎன்றாள். ஏன் என்பதாய் அவர் பார்க்க,

பின்னே, அவருக்கு கிடைக்காத சான்ஸ் எல்லாம் உங்களுக்கு கிடைக்குதேஅவள் அங்கலாய்க்க, எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். பைரவிக்கு சங்கடமாகிப் போனது.

ஒரு சிறு தலை அசைப்போடு அவளிடம் விடை பெற்றுக் கொண்டான் ஆனந்தன். நிறைவான அந்த மாலைப் பொழுதை அனுபவித்துக்கொண்டு இருந்தான். சின்னச் சின்ன தீண்டல்களால் தன் பொழுதுகளை இந்தப் பெண் வண்ணமயம் ஆக்கிவிடுகிறாள் என்று தோன்றியது. அவளை சந்திக்கும் ஒவ்வொரு நேரமும் தான் முழுமை பெற்றுப் போவதை அவனால் உணர முடிந்தது. எல்லோருக்கும் வணக்கம் வைத்தவன், பைரவியைப் பார்த்து மந்தகாசமாய் ஒரு புன்னகை சிந்தினான். சொக்கிப் போனாள் பைரவி.

ஆனந்தனின் பைரவி!

error: Content is protected !!