Aathiye anthamai – 36

Aathiye anthamai – 36

சிவசங்கரன் மரணித்தாலும் முதுமையில்லாத இளமையோடு இன்றும் செல்வியின் நினைவுச்சிறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

செல்வி ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ளும் போதும் அவரின் உயிரின் அடி ஆழத்தில் இருந்து வலிக்கும்.

தன் கணவனுக்கு நேர்ந்த அந்த கோரமான மரணத்தை ஏற்று கொள்ள முடியாமல் அவர் நொறுங்கி போக,

இம்முறைம் அந்த நினைவுகள் அவரை  நிலைகுலைத்ததென்றே சொல்ல வேண்டும்.

அதே நேரம் செல்லம்மாவின் மனம் அந்த ஞாபகங்களை தாண்டி நிறைய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

இன்னமும் தான் ஏன் இந்த விஷயத்தை ஆதியிடம் மறைக்க நினைக்கிறோம்…

அந்த  ஊரும் உறவுகளும் வேண்டாமென்று எண்ணி தள்ளி இருந்த காரணம் இனி அவசியமற்ற ஒன்றாய் மாறிவிட்டது.

ஆதிதான் இப்போது அந்த ஊரையும் உறவுகளையும் தேடி சென்றுவிட்டாளே!

அதுவும் அவள் தன் தந்தையின் மரணத்தை குறித்து கேள்வி எழுப்ப அவளுக்கு எல்லாம் உரிமையும் இருக்கிறது.

இனியும் தான் எந்த விஷயத்தையும் தன் மகளிடம் மறைப்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணியவர் அவளிடம்  நடந்தேறிய எல்லா உண்மைகளையும் சொல்ல முடிவெடுத்திருந்தார்.

அதே நேரம் ஆதிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமே எனில் அன்று தான் அந்த கோரத் தீக்குள் சிக்கி கொணடிருக்கும் போதே அவள்  வெறும் உயிராகவே கருகி இருக்க கூடும்…

அப்படி எதுவும் நடவாமல் எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் உருப்பெற்று இந்த உலகை வந்தடையந்தால் எனில் நிச்சயம் அவளுக்கு நேரிடும் எந்த இடறையும் அவள் கடந்து வருவாள் என்று செல்லம்மாவிற்கு நம்பிக்கை உண்டாக,

அப்பொழுது  ஒர் அழுத்தமான தெளிவும் தைரியமும் ஏற்பட்டிருந்தது அவருக்கு.

ஆனால் ஆதித்தபுரத்தில் உதிக்கும் ஒவ்வொரு விடியலும் ஆதியின் நம்பிக்கையை குலைத்து கொண்டே வந்தது. அந்த தொழிற்சாலைக்கான வேலையை தான் இனி தடுத்து நிறுத்திவிட முடியுமா என்ற குழப்பம் ஒரு புறமும்

அந்த கோவிலின் ரகசியத்தை இந்த மக்களுக்கு எப்படி எடுத்துரைப்பது என்று கவலை மறுபுறமும்

அவளை அழுத்திக் கொண்டிருந்தது.

இப்படியான எண்ணத்திற்கிடையில் அன்று செல்லம்மா மகளை அவள் கைப்பேசியில் அழைத்து பேசினார்.

ஆதி நம்பிக்கையற்ற நிலையிலேயே அந்த அழைப்பை ஏற்று பேச,  தன் தாயின் குரலில் ஒளித்த தீர்க்கமும் தெளிவும் ஆதிக்கு புது தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. 

அவள் தந்தையின் இறப்பு அன்று நடந்த விஷயங்களை செல்லம்மா அவளுக்கு விவரிக்க அவளின் முகப்பாவனை மாறிக் கொண்டே வந்தது.

அதை கோபம் என்று சாதாரணமாய் ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ரௌத்திரத்தின் உச்சத்தை தொட்டது அவள் மனநிலை.

வேல்முருகன்தான் தன் அப்பாவின் மரணத்திற்கு காரணம் என்று ஏற்கனவே அவள் யூகித்திருந்தாள். ஆனால் நடந்த விஷயம் விதி வசமல்ல என்றும் அது திட்டமிட்டு செய்யபட்ட சதி என்றும் தோன்றியது.

அந்த பயங்கரமான தீயையும் பொருட்படுத்தாமல் தன் அண்ணனை காப்பாற்ற சென்ற அவள் தந்தையின் பாசமும் தைரியமும் அவளை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அவள் தன் தந்தையை பார்த்து பேசி பழகும் வாய்ப்பு கிடைக்காத போதும் சிவசங்கரன் ஆதியின் மனதில்  வானின் உயரத்தையும் மிஞ்சி கொண்டு நின்றான்.

அதேப் போல வேல்முருகனின் மீது ஏற்பட்ட வஞ்சமும் அத்தனை உயரமாய் வளர்ந்து நின்றது என்று சொன்னாலும் மிகையாகாது.

ஆதி தன் அம்மா சொன்னதை வைத்து சம்பவம் நடந்த அன்று, முதலில் புறப்பட்ட வேல்முருகன் எங்கே சென்றிருக்க கூடும்…

அன்று நெருப்பு ஏற்பட்டது இயற்கையாகவே நடந்ததா?

எப்படி வேல்முருகன் தீயில் மாட்டிக் கொண்டார் ?

காப்பாற்ற சென்ற தன் அப்பாவிற்கு என்ன நேர்ந்தது ?

அன்னம்மா வெள்ளையப்பா மனோகரன் இறந்த வரைக்குமான விஷயங்களை சொன்னாள். அதற்கு பிறகு நடந்த விஷயங்களை அவள் அம்மாவும் சொல்லியாயிற்று.

ஆனால் இன்னமும் ஆதி கேள்விக்கான விடை முழுமையாய் கிட்டவில்லை. அந்த விடையை வேல்முருகன்தான் சொல்ல முடியும்.

ஆதி இதற்கு பிறகு தன் பெரியப்பாவை குறி வைத்து செயல்பட தொடங்கியிருந்தாள். 

அதற்கு முதலில் ஆதித்தபுரத்தில் அந்த ராசயன தொழிற்சாலை கட்டுவதற்கு எதிராக தன் சட்ட ரீதியான  உரிமையை நிலைநாட்ட எண்ணியவள் கருணாகரன் மூலமாக ஒரு வக்கிலிடம் பேசினாள்.

எல்லாமே அவளுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தது. வேல்முருகனுக்கு எதிராக சரவணனை திருப்பி தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாள். 

ஆனால் இரண்டு நாட்களாய் அவனை அவளால் பார்க்க முடியவில்லை. அதற்காக அவள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகியிருந்தது.

ஆனால் அன்று அவனை தீர்க்கமாக பார்த்துவிட வேண்டுமென்று எண்ணியவள் பொழுது விடிந்ததிலிருந்து அவனை வீடு முழுவதும் தேடிவிட்டாள்.

ஆனால் அன்றும் அவனை காண முடியாமல் அவளுக்கு ஏமாற்றமே மிச்சமாயிருக்க,

மும்முரமாய் சமையல் வேளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மனோரஞ்சிதமும் வசந்தாவிடம்,

“ஏன் அத்தை… சரவணனை இரண்டு நாளா ஆளையே பார்க்க முடியலியே… ஏதாவது முக்கியமான வேலைக்கு போயிருக்காரா?” என்று ஆதி கேள்வி எழுப்பினாள்.

ஆதி அப்படி கேட்டதும் மனோரஞ்சிதம் அவளை அத்தனை சீற்றமாய் பார்க்க,

வசந்தா சமிஞ்சை செய்து அவளை போக சொல்லி தலையசைக்க அவளுக்கு எதுவும் விளங்கவில்லை. 

ரஞ்சிதத்தை குழப்பமாய் பார்த்தவள்,

“என்னாச்சு அத்தை… ஏதாச்சும் என் மேல கோபமா?” என்று கேட்க அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்கமால்,

“நான் யாரும்மா உன் மேல கோபப்பட… நீ இங்க வந்த வேலையை மட்டும் பாரு… எதுக்கு சரவணனை தேடிட்டு இருக்க?” என்று வெடுக்கென அவர் பேசிவிட ஆதி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

அப்போது வசந்தா இடையிட்டு,

“ஏன் அத்தை இப்படி பேசிறீங்க.. ஆதி என்ன பண்ணுவா பாவம்?” என்று கேட்க,

“அப்போ ஆதிக்கும் சரவணன் செய்கிற எதுக்கும் சம்பந்தமில்லைனு சொல்ல வர்றியா வசந்தா” என்று ரஞ்சிதம் பதில் கேள்வி கேட்க,

“சரவணன் என்ன செஞ்சான் ?” என்று குழப்பமாய் ஆதி வசந்தாவின் முகத்தை பார்த்தாள்.

“அது வந்து” என்று வசந்தா இழுக்க,

“ப்ச் எதுவாயிருந்தாலும் சொல்லுங்கக்கா” என்றாள் ஆதி.

“அவன் இரண்டு நாளா வீட்டுக்கு நேரம் கழிச்சுதான் வர்றான்… அதுவும் குடிச்சிட்டு” என்று சொல்ல ஆதி அதிர்ந்தாள்.

வசந்தா மேலும்,

“அவன் கொஞ்சம் முரடன்தான்… போக்கிரித்தனம் பண்ணுவான்… ஆனா குடிக்க எல்லாம் மாட்டான்” என்க,

அப்போது ஆதி தன் அத்தையின் புறம் திரும்பி,

“ஓ… உங்க பிள்ளை குடிக்க நான்தான் காரணம் நினைக்கிறீங்க… அதானே உங்க கோபம்” என்று பளிச்சென்று கேட்டாள்.

அதற்கு மனோரஞ்சிதம் பதில் பேசாமல் அமைதியாய் நிற்க பின்னோடு வந்த கனகவல்லி,

“அப்படி இல்ல ஆதி… அவன் மனசுல உன்னை நினைச்சிட்டானே… அதான் காரணம்” என்றார்.

ஆதி பதிலின்றி மௌனமாய் நிற்க மனோரஞ்சிதம் இப்போது இறங்கிய தொனியில் அவள் தோளினை தொட்டு,

“நீ மட்டும் சரவணனை கட்டிக்கிட்டா அவன் நிச்சயம் மாறிடுவான் ஆதி” என்று சொல்ல ஆதியின் முகம் வெளிறி போனது.

“நீ மட்டும் சம்மதிச்சன்னா” என்று ரஞ்சிதம் மீண்டும் ஆதியை பரிதவிப்போடு பார்க்க,

அந்த பேச்சை அவள் மேலும் வளர்க்க விரும்பவில்லை. மூவரின் மீதும் தன் பார்வையை படரவிட்டவள் ரஞ்சிதத்தை பார்த்து,

“நான் சொல்றதை தப்பா எடுத்துகாதீங்க அத்தை… நான் விஷ்வாவைதான் விரும்பிறேன்… நான் அவனைதான் கல்யாணம் பன்னிக்கனும்னு ஆசைப்படிறேன்… அம்மாவோட ஆசையும் கூட அதுதான்” என்க,

அந்த நொடியே ஏமாற்றத்தினால் ரஞ்சிதத்தில் விழிகள் நீரை சுரந்தது. வசந்தா இந்த பதிலை எதிர்பார்த்தாள்.

ஆதி அப்போது, “அத்தை… ப்ளீஸ் அழாதீங்க… நான் சரவணன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு  அந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்க விரும்பாமல் அவள் அங்கிருந்து அகன்றுவிட,

கனகவல்லி ரஞ்சிதத்திடம் ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றினார்.

ஆதி வேதனையோடும் கோபத்தோடும் நேராய் விஷ்வாவை பார்க்க அவன் அறைக்கு செல்ல அவன் அப்போது மேற்சட்டையில்லாமல் ஷார்ட்ஸோட உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

“விஷ்வா” என்றழைத்து விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவள் அவன் சட்டை இல்லாததை பார்த்த அந்த நொடியே பார்வையை வேறுபுறம் திருப்பி  கொண்டுவிட,

அவனோ அவளை பார்த்தவுடன் முகம் மலர,

“ஹாய் டார்லிங்… காலையிலேயே என்னை பார்க்க ஓடோடி வந்திருக்க… நைட்டெல்லாம் என் நினைப்பில தூக்கம் வரலியோ?!” என்றான்.

ஏற்கனவே அவள் கோபமாய் வர அவனின் பேச்சு எரிச்சல் மூட்டியது.

“மூஞ்சி… நான் கொஞ்சம் உன்கிட்ட பேசனும் ஷர்ட் போட்டுட்டு வா” என்று சொல்லி வெளியேற பார்க்க,

அவளை வழிமறித்து நின்றான். அவள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி கொள்ள,

“என்ன ஆதி? எப்பவும் ஐஸ் டூ ஐஸ் பார்த்து பேசுவ… இப்ப என்னவோ தடுமாற…

என்ன ? என் ஆர்ம்ஸ் பாடியெல்லாம் பார்த்து உன் மனசு தடுமாறுதா?” என்றவன் எகத்தாளமாய் கேட்ட நொடி கடுப்பானவள்,

“என் நிலைமை புரியாம இப்படி நான்ஸென்ஸ் மாறி பேசிக்கிட்டு… ஒழுங்கா போய் ஷர்ட்டை போட்டுட்டு வா” என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு அவள் அறையை விட்டு வெளியேற யத்தனிக்க,

அவளை போகவிடாமல் தன் கரத்தால் அவளை இழுத்து அணைத்து கொண்டுவிட்டான் விஷ்வா. அதுவும் அதே கோலத்தில்…

அவனின் அகண்ட மார்பும் புஜமும் கட்டுடல் மேனியும் அவன் கேட்டது போல அவளை முதல் பார்வையிலயே ஈர்த்தது என்னவோ உண்மைதான்.

இப்போது அவனின் இந்த நெருக்கமும்  அவள் ஹார்மோன்களை எல்லாம் துயில் கலைத்திட,

“இடியட் விடுடா என்னை” என்று நொடி நேரத்தில் அவனிடமிருந்து விலகி வந்தாள்.

அதே நேரம் அவனும் அத்தனை இறுக்கமாய் அவளை அணைக்கவில்லை என்பதுதான் உண்மை.

அவள் உடலெல்லாம் அவனின் வியர்வை துளி வாசம் வீச,

“இன்னொரு தடவை இப்படி பண்ண ஐ வில் கில் யூ ராஸ்கல்” என்று கொதிப்படைந்தாள்.

“கில் யூன்னு சொல்றதுக்கு பதிலா லவ் யூன்னு சொல்ல கூடாதா?!” தன் உடலை துண்டால் துடைத்தபடி சற்றும் அலட்டி கொள்ளாமல் கேட்டான்.

“ஆமா இப்ப அதான் ரொம்ப முக்கியமா?!”

“எனக்கு அதான் முக்கியம்” என்றவன் சொல்லி தோள்களை குலுக்க,

“தென் யூ கோ அவே மேன்” என்றவள்  சொல்லி முறைத்து பார்த்து கொண்டாள்.

“கிளம்புன்னு சொல்றியா?!”

“எஸ்” என்றாள் அவன் முகத்தை பாராமலே!

அவள் முன்னே வந்து நின்றவன், “நெவர் அட் ஆல்… உன்னை விட்டுட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்… அப்படி நான் போறதா இருந்தா… அது என் மரணமாதான் இருக்கும்” இறுகிய பார்வையோடு அவன் இப்படி சொல்ல ஒரு நொடி உறைந்து நின்றவள்

அவனை கோபமாம் ஏறிட்டு பளீரென்று அறைந்துவிட்டாள்.

“ஆ வலிக்குதுடி” என்றவன் கன்னத்தை பிடித்து கொள்ள,

“டோன்ட் அகையின் ஸே திஸ் வார்ட்” என்று சொல்லியவளின் கண்களில் நீர் தளும்பி நின்றது.

அவன் சொன்ன அந்த வார்த்தை அவள் தந்தையை நினைவுபடுத்துவிட அவளுக்குள் பெருகிய வலியையும் வேதனையையும் அவளால் கட்டுபடுத்தி கொள்ள முடியவில்லை.

அந்த அறையை விட்டு அவள் விறுவிறுவென நடந்து வெளியேறிவிட விஷ்வா தன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு அவசரமாய் அவள் பின்னோடு ஓடி வந்து,

“ஆதி ஸ்டாப்” என்றவன் அழைக்கவும் அப்படியே அவள் தேங்கி நின்றாள்.

“ஐம் எக்ஸ்டிர்ம்லீ சாரி” என்று சொல்லியபடி அவள் அருகில் அவன் வரவும் அவள் தன் விழி நீரை துடைத்து கொண்டு,

“ஐம் ஸாரி டூ” என்றாள்.

பின்னர் இருவரும் மேலே என்ன பேசுவதென்று புரியாமல் மௌனமாய் நடக்க

“ஆமா ஏதோ பேசனும்னு சொன்னியே” என்று விஷ்வா கேட்க 

“ஹ்ம்ம்” என்றாள்.

“என்ன விஷயம் ஆதி?”

” சரவணன்கிட்ட ஏதாவது சொன்னியா?”

“நான் அவன்கிட்ட எதுவும் சொல்லலை…அவன்தான் என்கிட்ட தேவையில்லாம பேசினான்”

“என்ன பேசினான் ?”

“நான் இந்த ஊரை விட்டு போகனுமா… உன்னை விட்டு போகனுமா… இல்லாட்டி இந்த உலகத்தை விட்டே போயிடுவன்னு சொன்னான்”

“இத பத்தி நீ ஏன் என்கிட்ட சொல்லை விஷ்வா”

“அவனுக்கு காதல் கை கூடலன்னு டிப்பிரஷன்… அவனை பார்க்கவே பாவமா இருந்துச்சு… அதை நான் பெரிசா எடுத்துக்கல”

விஷ்வா சொன்னதை எல்லாம் கேட்டு ஆதி தீவிரமாய் சிந்தித்து கொண்டிருக்க,

“ஏ ஆதி” என்றழைத்து அவள் சிந்தனையை அவன் தடைப்படுத்த,

“சொல்லு விஷ்வா” என்றாள்.

“சும்மா சொல்ல கூடாது… செம அடி…  நச்சுன்னு இருந்துச்சு” என்றவன் கல்மிஷமாய் சிரித்து கண்ணடிக்க ஆச்சர்யம் மிகுந்த புன்னகையோடு அவனை ஏறிட்டவள்,

“சாருக்கு இன்னும் ஒண்ணும் வேணுமோ?!” என்று சொல்லி சிரித்து கொண்டே தன் இருகரத்தை தேய்த்தாள்.

“ஹ்ம்ம் கொடு… ஆனா கையில வேண்டாம்” என்று சொல்லியவனின் பார்வை அவள் உதட்டில் நிலைகுத்தி நிற்க,

“நீ ரொம்ப நேஸ்ட்டியா பேசிற… போடா”

என்று சொல்லிவிட்டு வெட்க புன்னகையோடு கடந்து சென்றாள் அவள்

“அப்போ கொடுக்க மாட்ட”

நின்ற இடத்தில் இருந்ததே அவன் கேட்க,

“நெவர்” என்றவள் திரும்பி ஓர் பார்வை பார்க்க,

“யூ வில்” என்றான் தீர்க்கமாக!

“ஐ வோன்ட்” அவன் முகம் பாராமலே தன் கரத்தை அசைத்து பதில் உரைத்துவிட்டு அகன்றாள்.

இவர்களின் காதலும் மோதலும் ஒருபுறமிருக்க ஆதியின் தேடலும் நிற்காமல் நடைப்பெற்று கொண்டிருந்தது.  அதுவும் ஆதி எதிர்பார்த்த காத்திருந்த தமிழ்வேந்தன் வருவதாக ஜேம்ஸிடம் இருந்து தகவல் வந்தது.

ஆதி அவர்கள் இருவரையும் கோவிலில் நடமாட்டம் இல்லாத மதிய வேளையில் வரும்படி சொல்லியிருந்தாள்.

ஆதிபரமேஸ்வரி கோவிலை பற்றிய ஆயிரம் வருஷம் பழமையான ரகசியம் என்ன? அன்று தன் அப்பாவோடு பிரச்சனை செய்த அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் மனதில் உள்ள எண்ணம் என்னவாக இருக்கும் என்று தமிழ்வேந்தனால் நிச்சயம் கணிக்க முடியும் என்று ஆதி அழுத்தமாய் நம்பினாள்.

ஆதிபரமேஸ்வரி ஆலயம் குடமுழக்கு விழாவுக்காக புதுப்பிக்கப்பட்டு ரொம்பவும் கம்பீரமான அழகில் காட்சியளித்து கொண்டிருந்தது.

ஆதியும் விஷ்வாவும் கோவில் வாசலில் காத்திருக்க அங்கே ஓர் கார் வந்து நின்றது.

ஜேம்ஸோடு நல்ல உயரமான கம்பீர உருவத்தோடு கண்ணனை போன்ற கருமை நிறத்தோடு ஆதியை நோக்கி வந்தவர்தான் தமிழ்வேந்தன்.

ஆதியே உயரமான தோற்றமாய் இருப்பினும் அவரை பார்க்க அவளே கொஞ்சம் தலைநிமிர்த்தி பார்க்க வேண்டியதாக இருந்தது.

“ஹெலோ சார்… ஐம் ஆதி” என்றாள்.

“வணக்கம்… நீங்கதான் ஆதியா?” என்று கேட்டு ஆச்சர்யம் பொங்க அவளை ஆழ்ந்து பார்த்தவர்,

“ஆதின்னதும் நான் வேற மாதிரி உருவத்தை கற்பனை பண்ணி இருந்தனே” என்று  அறிமுக புன்னகையோடு தன் மனஎண்ணத்தை தெரிவித்தார்.

அப்போது ஆதி ஜேம்ஸை பார்த்து, ” நீ என்னை பத்தி சொல்லவே இல்லையா ஜேம்ஸ்” என்று தன் கோபத்தை மறைத்து அவள் வினவ,

“சார் பேசிட்டு வந்ததை ஆர்வமாய் கேட்டதில்ல உங்களை பத்தி சொல்ல மறந்துட்டேன்” என்றான் ஜேம்ஸ்.

“பரவாயில்ல…உங்க கட்டூரைகளை நான் படிச்சிருக்கேன் ஆதி… ரொம்பவும் அருமை… ஆனா அந்த எழுத்தில இருந்த முதிர்ச்சியும் கம்பீரமும் ஆதிங்கிற பெயரும் ஒரு ஆண் உருவத்தையே முன்னாடி நிறுத்திடுச்சு… அந்த கற்பனையை உடைத்தெறிந்த உங்க தோற்றம் ஆழகான ஆச்சர்யத்தில ஆழ்த்திடுச்சு…ரொம்ப நல்ல அனுபவம்..நீங்க என் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கீங்க… சரி உங்க உண்மையான பெயர் என்ன?”என்று தமிழ்வேந்தன் கேட்கவும்,

“ஆதிபரமேஸ்வரி” என்றாள்.

“அருமை…இந்த பெயர்தான் உங்களுக்கு ரொம்பவும் பொருத்தமா இருக்கு” என்று தமிழ் வேந்தன் சொல்ல

விஷ்வா பின்னோடு நின்று கொண்டு “கூப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள ஒருநாள் முடிஞ்சிடுமே” என்றான் ஆதியின் காதில் மெலிதாக.

அவனை பார்த்து முறைத்துவிட்டு கோவில் வாசலுக்கு அவர்களை அழைத்து வந்தாள். கதவு வெளிப்புறம் பூட்டி இருக்க சங்கரி சாவியோடு மூச்சிறைக்க வந்து சேர்ந்தாள்.

“எப்படி சாவியை வாங்கிட்டு வந்த?” என்று கேட்டபடி ஆதி பூட்டை திறக்க,

“விளக்கேத்த போறேன்னு பொய் சொல்லிதான்” என்றாள்.

ஆதி தமிழ் வேந்தனை மட்டும் உள்ளே அழைத்து சென்றுவிட்டு மற்ற எல்லோரையும் வெளியில் காத்திருக்க சொல்ல,

ஜேம்ஸ் முதற் கொண்டு எல்லோருமே அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

அப்படி என்னதான் ரகசியம்?

error: Content is protected !!