Alaikadal-13

Alaikadal-13

அலைகடல் – 13

 

“சமுத்திரகுமாரியைப் பார்க்க” என்று ஆரவ் கூறியதும் குழப்பத்தோடு, “யாருண்ணா அது அவங்களை பார்க்கக் கடலுக்குதான் போகனுமா?” என்றான் பூவேந்தன்.

 

இதே பொன்னியின் செல்வனைப் படித்திருந்தால் தெரிந்திருக்கும் பூங்குழலியின் மற்றொரு பெயர் சமுத்திரகுமாரி என!

 

“அட யாரும் இல்லை மேன்… கடலுக்கு இன்னொரு பேர் சமுத்திரகுமாரி அதான் சொன்னேன் போ போய் தூங்கு. குட் நைட்” அவனை விரட்டிவிட்டவாறு ஆரவ் பேச்சினை முடித்துவிட அத்தோடு அன்றைய சம்பாசனை முடிவடைந்தது.

 

அடுத்த நாளே ஆபிஸ் சென்றதும் வினோத்தை அழைத்து பாதுகாப்பு அமைச்சருடன் பேச வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யுமாறும் கூற அடுத்த ஒரு மணிநேரத்தில் லைனில் வந்தார் அவர்.

 

ஹிந்தி ஆங்கிலம் இரண்டும் கலந்துகட்டி இருந்தது அவர்களின் பேச்சு. சிறிது நேர நலம் விசாரிப்பு, நாட்டு விசாரிப்பு முடிந்தவுடனே ஆரம்பித்தான் ஆரவ்,

 

“சர், சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ். ஆக்சுவல்லி நெக்ஸ்ட் மந்த் நடக்குற மலபார் நேவி எக்ஸர்சைஸ் பார்க்கதான் உங்களை கான்டாக்ட் பண்ணுனேன். ஷால் ஐ?” என்று பணிந்தும் பணியாமல் வினவ,

 

“ஆஆ…” என்று பார்த்திருந்தான் வினோத் காணக்கிடைக்காத இந்த பணிவைப் பார்த்து.

 

எதிர்ப்புறம், “ஓஹ் ரியல்லி! எஸ் எஸ் மிஸ்டர் ஆரவ். நான் பிரதமர் அண்ட் மலபார் டீம் கூட ஆலோசனை செய்து தகவல் அனுப்புறேன். இன்னும் யார் யாரை இன்வைட் பண்ணனும்னு முடிவு பண்ணலை. பட் ஐ ஹோப் உங்களை கண்டிப்பா இன்வைட் பண்ணுவாங்க. இன்னக்கி ஈவினிங் தகவல் வந்ததும் சொல்றேன். டோன்ட் மிஸ்டேக் மீ” என

 

“நோ சர் நாட் அட் ஆல். நீங்க கேட்டுட்டே தகவல் சொல்லுங்க தேங்க் யூ” என்ற ஆரவ் செல்பேசியை வைத்ததும் கேள்வியாகப் பார்த்த வினோத்திடம் ஏன் அங்கே போகிறான் என்பதற்கான காரணத்தைக் கூற,

 

“சூப்பர் சார்… அப்போ இனி பூவேந்தன் அவங்க அக்கா கூட சேரப்போறான். நீங்க இத்தனை வருசமா சுமந்தப் பாரத்தை இறக்கி வைக்கப் போறீங்க. ரொம்ப நல்லது சார்”

 

அன்று தான் கூறிய வார்த்தைகள்தான் ஆனால் இன்று வினோத் கூறுகையில் நாராசமாய் ஒலித்தது.

 

‘அன்றைக்கு பாரமா நினைச்சேன் அது இன்றைக்கு இறங்கப்போகுதுன்னு தெரியுறப்ப இன்னமும் பாரம் அதிகமாதான் ஆகுது’ என்றெண்ணிக் கொண்டான் ஆரவ் ஆனால் வெளியில் மூச்சே விடவில்லை.

 

மாலையில் வீட்டில் ஓய்வாக அமர்ந்து தன் முன்னே இருக்கும் அடுத்த படத்திற்கான கதை கருவை தேர்ந்தெடுக்க மெனக்கெட்டுக் கொண்டிருந்தான் ஆரவ்.

 

இப்போதே தேர்ந்தெடுத்தால்தான் ஆறு மாதங்களுக்கு பின் ஜூன் மாதம் முழுவதும் கால்சீட் கொடுக்க முடியும். அவன் முதலமைச்சர் ஆகிய பின் சினிமாவில் நடிக்க வந்த நிகழ்வே சுவாரசியமானது.

 

சிஎம் ஆகியபின் நான்கு ஆண்டுகள் கடும்உழைப்பு என்பதால் சினிமாவைப் பற்றி யோசிக்காமல் இருந்தவன் தன் வேலையை முடித்து முக்கியமானதைத் தவிர மற்ற வேலைகளை எல்லாம் பிரித்துக்கொடுத்து கண்காணிக்க ஆரம்பிக்கவும் வேலைகள் கணிசமாக குறைந்தது. பதிலிற்கு எதிர்க்கட்சிகளும் குற்றம் செய்வோர்களும் காண்டாகி குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர்.

 

மிகவும் அடக்குமுறை, சர்வதிகாரம், இதெல்லாம் தேவையில்லை என்று கூச்சலிட, லட்சக்கணக்கான உளவாளிகள் அவர்களுக்கு சம்பளம் மக்கள் வரிப்பணத்தில் அதுக்கே எல்லாம் போயிரும் இதெல்லாம் தேவையா? என்று ஒருசிலர் ஆட்சேபிக்க பெரும்பாலானோர் தப்பு செய்யிறவங்களைத் தானே தண்டிக்குறான்? என்ன கொஞ்சம் கடுமையா இருக்கு அவ்ளோதானே இருந்துட்டுபோகட்டும். அப்போதான் திரும்ப செய்ய மாட்டாங்க என்று இவனுடன் நின்றனர்.

 

ஆனாலும் நாட்டில் கலவரம் நடந்து வரிப்பணத்தை இப்படி தண்டத்துக்கு செலவழிக்க விடமாட்டோம் என்று போராட இரவு முழுதும் தூங்காமல் யோசித்து நான்கு வருடம் முன்பு அரசியல் நுழையும் முன்பு பெரும் பட்ஜெட்டில் தன்னை நடிக்க அழைத்த புகழ்பெற்ற இயக்குனரை தொடர்புக் கொண்டான்.

 

பிரதமரிடமும் தற்போது அதிக நேரம் கிடைப்பதால் நடிக்கப் போவதாகக் கூறி தனது திட்டத்திற்கும் அனுமதி வாங்கியவன் அதனை மக்களோடு பகிர்ந்துக் கொள்ளும் முறையில் இருநாட்கள் கழித்து நேரலையில் பேசினான்.                 

 

தான் மீண்டும் நடிக்க போவதாகவும் அதில் வரும் வருமானம் அனைத்தும் தான் முதலமைச்சராக இருக்கும் வரை அரசுக்கு சொந்தமானது என்றும் வாக்கு கொடுத்து பத்திரத்தில் கையெழுத்திட கப்சிப் என ஆனது மொத்த கலவரமும். பின்னே கொடுப்பது ஒன்றா இரண்டா கிட்டதட்ட நூறு கோடியை தொடுமே! 

 

வருமானம் என்பது ஆரவ்விற்கு பிரச்சனையே இல்லை. தாய் சேர்த்துவைத்தது கூடவே பங்குச்சந்தையில் முதலீடு, வீடு, இரண்டு தியேட்டர், மால் என்று பல உண்டு அத்தனையும் வாங்கிவிட்டே மீதத்தை அரசியலில் போட்டதால் ஏழு தலைமுறைக்கு சும்மா உட்கார்ந்தாலும் திவ்வியமாக மூன்று நேரமும் அறுசுவை உணவை உண்பது சாத்தியம். இப்போது வருடந்தோறும் கிட்டதட்ட நூறுகோடி கொடுக்கையில் மக்களின் வரிப்பணமும் மிச்சம் நடிக்க வந்து பிடித்துப் போன திரைத்தொழிலிலும் கால்பதிக்க முடியும்.

 

அதனையெல்லாம் எண்ணியவாறு காகிதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் ஆரவ். அன்றைய தினம் டான்ஸ் கிளாஸ் இல்லாததால் சீக்கிரம் வீடு வந்த பூவேந்தனோ, “அண்ணா இன்னக்கி ஹோம் தியேட்டர்ல படம் பார்க்கப் போறேன்” என்று கத்திக்கொண்டே வர, “பச் வேந்தா  முன்ன மாதிரி டைமை வேஸ்ட் பண்ணாதன்னு சொன்னேனா இல்லையா?” என்றான் சிறிது கண்டிப்புடன்.

 

அண்ணா… காலையில் இருந்து இதோ அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரை படிச்சிட்டேதான் இருந்தேன் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணனும் எனக்கு டான்ஸ் கிளாஸ் வேற தினமும் வேணாம்ன்னு சொல்லிட்டீங்க” என்றான் குறையாய்.

பத்தாம் வகுப்பு என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் டான்ஸ் கிளாஸ் போகும்படி ஏற்பாடு செய்திருந்தான் ஆரவ். ஆனாலும் பையல் அவனின் முன் படிக்கும்படி காணோம்.

 

மார்க் மட்டும் நடுநிலைக்கு மேலே வாங்கிவிடுவான் இன்னமும் படித்தால் முதலில் வரலாம் என்று கூறினாலும் கேட்கமாட்டான். “அது டுவெல்த்ல பார்த்துக்கலாம்ண்ணா” என்று விடுவான்.

 

ஆரவ்வும் ஓரளவு நன்றாகவே அவன் படிப்பதால் படிப்பு விசயத்தில் அதிகம் தலையிடமாட்டான்.

 

ஆனால் இப்போதோ ஒரு எண்ணம், ‘ஒருவேளை அவன் அம்மா அல்லது அக்கா இவனுடன் இருந்தால் சொல்பேச்சு கேட்பானோ? இன்னும் நல்லா படிச்சிருப்பானோ? நாம வளர்க்க தெரியாம கெடுக்குறோமோ’ என்பதுபோல். 

 

முன்னெல்லாம் இப்படியில்லை நேற்றில் இருந்துதான் அதுவும் பூவேந்தனை அனுப்ப வேண்டுமே என்றிருக்க சற்று அதிகமாகவே இப்போதெல்லாம் ஆராய்ந்தான். ஏதேனும் குறைகூறும்படி இருக்கிறதா? ஒழுங்காக வளர்ந்திருக்கிறானா? என.

 

இதெல்லாம் உள்ளுக்குள் முட்டிமோத வாய்விட்டே கேட்டுவிட்டான் ஆரவ். “வேந்தா… நான் உன்னை நல்லா பார்த்துக்கிட்டேனா? இத்தனை வருசத்துல உனக்கு என்மேல ஏதாவது குறை இருக்கா? ஒருவேளை உன் குடும்பத்தோடு இருந்திருந்தா இதை விட நல்லா வளர்ந்திருப்பியோ?” என்று வினவ, என்ன சொல்வான் அவன்.

 

அவனிற்கே தெரியாதே! குடும்பம் என்ற ஒன்று இல்லையென்றாலே பெரிய குறைதானே? அதுவும் ஆசாபாசமாய் தாயாய் தாங்கிய பூங்குழலியை மருத்துவமனையில் மிக மிகத் தேடினான்.

 

அந்த ரணம் முழுதாக மறையவில்லை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறான்தான். இதனைச் சொன்னால் தந்தையாய் இத்தனை வருடம் தாங்கிய ஆரவ் காயப்பட்டு போவான். இல்லை சந்தோசமா இருக்கிறேன் என்று பொய் கூறவும் முடியவில்லை. அன்றைக்கு நான் கொஞ்சம் ஜாக்கிரதையா ரோட்டை கிராஸ் பண்ணிருக்கலாம் என்று எப்போதும்போல் தன்னையே நிந்தித்தான்.

 

பதில் கூறாமல் அமைதியாய் முகம் கசங்கி இருக்கையிலேயே அவனிடம் பழசை தானே கிளறிவிட்டோம் என்று புரிய, மானசீகமாய் தலையில் அடித்தவன், உண்மையைக் கூறுவோமா என்று நினைக்கையில் அலைபேசி ஒலிஎழுப்பியது. எடுத்தவனிற்கு மலபார்க்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது.

 

இப்போதே கூறினால் உடனே செல்ல வேண்டும் என்று சூழ்நிலை புரியாமல் அடம்பிடிப்பான் அல்லது அதையே நினைத்து, இருக்கும் படிப்பிலும் கோட்டை விடுவான் என்று தோன்ற, “போ போ போய் படம் பாரு மேன்” என்று தோளைத்தட்டி சிந்தனையைக் கலைத்தான்.

 

தோளைத் தட்டிய கையை உள்ளங்கையால் பிடித்த பூவேந்தன், “அண்ணா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா இப்படிக் கேட்டா பதில் சொல்லத் தெரியலை. நடந்து முடிஞ்சது முடிஞ்சதுதான் அது இப்படி நடந்திருந்தா! அப்படி நடந்திருந்தா! என்று யோசிச்சிட்டு இருந்தா நம்ம நிம்மதிதான் போகும்” என்றான் கண்ணை சிமிட்டி.

 

ஏனெனில், அது ரோட்டை ஒழுங்கா கிராஸ் பண்ணிருக்கலாம் என்று முன்னே அடிக்கடி புலம்பிய பூவேந்தனை சமாதானம் செய்ய ஆரவ் சொல்லும் வாக்கியம்.

 

மனம் லேசாக, “அடேய் பெரிய மனுசா நான் சொன்னது எனக்கேவா” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

 

****************************************

 

அன்றைய இரவே பூங்குழலிக்கு கமாண்டர் மூலம் ஆரவ் வருவது தெரிந்துவிட தன் முகமாற்றத்தை காண்பிக்காமல் இருக்க வெகுவாக கடினப்பட்டாள்.

 

படுத்ததும் உறங்கும் ரகமில்லை என்றாலும் அடுத்த நாள் வேலையை அல்லது அன்று நடந்ததை நினைத்தேத் தூங்கிவிடும் பழக்கம் கொண்டவளுக்கு இன்று முழு முளையையும் அபகரித்துக் கொண்டது ஆரவ் நினைவுகள்.

 

‘வருகிறானா? அதுவும் தானாகவே வருவதாக கேட்டு… அப்படியென்றால் தான் இங்கிருப்பது தெரிந்துவிட்டதா? இல்லை எதேச்சையாகக் கேட்டிருப்பானா? நான் குறைந்தது பத்து வருசமாச்சும் சர்வீஸ் செய்து ரிடையர் ஆன பிறகுதானே இவனை கொல்ல நினைச்சேன். இப்போது தானாகவே வந்து சிக்குறான் என்றால் அவனை தான் இப்போதே கொல்லவேண்டுமோ?’ மனம் விபரீதமாகச் சிந்தித்தது.

 

‘கொன்னுட்டா எல்லாருக்கும் தெரிந்துவிடுமே இன்னொருத்தனை வேற போய் தேடனும். (அந்த இன்னொருத்தன் வேறு யாருமில்லை அர்ஜுன்தான்) ச்சை கொஞ்சமா சந்தோசமா இருந்துற கூடாது பேசாம விமானத்தை தரையில் இறக்குறதுக்கு பதிலா அவன் தலையில் இறக்குனா என்ன? ஆக்சிடன்ட் அவனுக்கு மட்டும்தான் செய்யத்தெரியுமா எனக்கும் தெரியும்’ பொருமல் பொருமல் அப்படி ஒரு பொருமல்!

 

மனம் தாறுமாறாய் பொரும மூளை பொறுமையாக எடுத்துச் சொல்லியது ‘இங்கு எந்த அசம்பாவிதம் நேர்ந்தாலும் அது நம்ம நாட்டைத்தான் பாதிக்கும் அதுவும் அமெரிக்கா, ஜப்பான் நாட்டின் முன்னால். இதுதான் உன் தாய் நாட்டுக்கு செய்யுற சேவையா’ என்று கடிய அதில் அடங்கியவள் மெதுவே முனுமுனுத்தாள்,

 

“அவன் மட்டும் என் கண் முன்னாடி வந்துரக்கூடாது. அப்படி வந்தான் அப்புறம் என்கிட்ட இருக்குற துப்பாக்கியால அவன் முகரையைப் பெயர்ப்பது உறுதி! சுட்டு கொல்லத்தானே முடியாது அடிச்சி முகரைய பெயர்க்கலாம்ல?

 

நேரமும் காலமும் நிற்காமல் அதன் போக்கில் நகர மலபார் கூட்டுப்பயிற்சித் தொடங்க இருநாட்கள் இருக்கும் நிலையில் விக்ரமாதித்தியாக் கப்பல் மட்டுமின்றி இந்திய நாட்டின் பல சக்தி வாய்ந்தக் கப்பல்களும் வங்கக்கடலில் குமிந்தது.

 

அனைத்திலும் முதன்மையான பெரிய போர்கப்பலாக விக்ரமாதித்திய கப்பலே இருப்பதால் முக்கிய பிரமுகர்கள் அங்கும் அடுத்து பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வேறு சில கப்பல்களிலும் அமர்ந்து பார்க்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, ஆரவ்வும் முக்கிய பிரமுகர் வரிசையில் வருவதால் பூங்குழலி இருக்கும் விக்கிரமாத்திய கப்பலிலே மலபாரின் சாகசங்களைக் காண ஏற்பாடு செய்யப்படிருந்தது.

 

அதைக் கேட்டதும் பூங்குழலியின் முகம் அஷ்டகோணல் ஆக மனமோ எச்சரித்தது, “அவனைத் தப்பித்தவறியும் விமானம் ஓட்டும் முன் பார்த்துவிடாதே பின் உன் நிதானம் தப்பினால் விமானம் ஓட்டுவது சிக்கல் ஆகிவிடும்” என நினைத்தாலே பதட்டம் ஆகியது அவளுக்கு.

 

மனதை நிதானமாக்க கொல்கத்தாவில் ஒரு மாதம் பயின்ற யோகாவை கையில் எடுத்தாள் பூங்குழலி.

 

ஆரவ் மற்றும் பூவேந்தன் சென்னையில் இருந்து கப்பல் ஏறிவிட்டனர். சுமார் நூற்றி ஐம்பது கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். சொகுசு கப்பல்தான் என்பதால் முந்தின இரவில் நடுக்கடல் சென்றுவிட்டாலும் அடுத்தநாள் காலை அங்கு சென்றால்போதும்.

 

ஏறும்முன் எதற்காக என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம், “நம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நேவிக்கு ஒரு சிறிய மரியாதை. சமீபமாக நம்ம மீனவர்களைக் கூட காப்பாத்தியிருக்காங்க அதற்கு நன்றி சொல்லவும்தான்” என்று அடுத்து கேள்விகேட்க முடியாத காரணத்தைக் கூறி பூவேந்தனுடன் ஏறியிருந்தான்.

 

நள்ளிரவு அந்த சொகுசுக்கப்பல் மலபார் நடக்குமிடம் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளியே நிறுத்தப்பட அதிகாலையில் சிறப்பு கப்பல் இருவரையும் அழைத்துச்செல்ல வரும்.

 

எழுந்து ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்த்த ஆரவ்வின் கண்களுக்கு தட்டுப்பட்டது அமைதியான நடுக்கடலும், ஆளை அசரடிக்கும் காற்றும் அந்த காற்றிற்கே உண்டான நெய்தல் மனமும் அதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் வானை அலங்கரிக்கும் அழகான முழு பௌர்ணமி நிலவும்தான். முதல் தடவை பார்போரை நிச்சியம் கொள்ளைக் கொள்ளும் சுற்றுப்புறம்.

 

ஆனால் அதை ரசிக்கும் மனநிலை தாண்டி நாளை பூவேந்தனுக்கு ஏற்படும் சந்தோசத்தையும் அதை எப்படி வெளிப்படுத்துவான் என்பதிலும் மனம் லயிக்க லேசாக தன் உரிமை பறிபோகும் உணர்வும் இல்லாமல் இல்லை. முயன்று மனதை அடக்கினான் ஆரவ்.

 

அதேபோல் விக்ரமாதித்தியாக் கப்பலில் வழக்கமாக தான் நிற்கும் இடத்திற்கு வந்தவள் மனம் நிதானத்திற்கு வந்திருக்க கையில் இருந்த சூடான பானத்தை மெதுவே தொண்டைக்குள் சரித்தாள் பூங்குழலி.

 

இருவருக்கும் பொதுவான பூவேந்தன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க உறக்கத்தைத் தொலைத்த இருவரையும் மௌனச் சாட்சியாய் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது முழுநிலவு.

 

error: Content is protected !!