யசோதாவின் அதட்டலான குரலைக் கேட்டு சித்தார்த் மட்டுமின்றி வீட்டுக்குள் இருந்த கார்த்திக் மற்றும் கண்ணன் கூட அதிர்ச்சியாக அவரைத் திரும்பிப் பார்த்தனர்.
“அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு? எதற்காக இவ்வளவு கோபம்?” சித்தார்த் குழப்பம் கொண்டவனாக தன் அன்னையின் முன்னால் வந்து நின்று கேட்க
அவனை கோபமாக முறைத்து பார்த்தவர் “எங்க போய்ட்டு வர சித்தார்த்?” அதட்டலாக வினவினார்.
“என்னம்மா இது கேள்வி? நான் எங்கிருந்து வரப்போகிறேன்? ஸ்டேஷனிலிருந்து தான் வர்றேன்”
“யார் கூட வந்த?”
“யார் கூடன்னா? ஓஹ்! மேக்னா கூட வந்ததை பார்த்தீங்களா? வர்ற வழியில் பஸ்ஸ்டாண்டில் தனியாக நின்னுட்டு இருந்தா ரொம்ப நேரமா காத்திருந்தும் பஸ் வரலைன்னு சொன்னா நான் வீட்டுக்குத் தானே போறேன் நானே கொண்டு போய் விடுறேன்னு சொல்லி கூட்டி வந்தேன் இதற்கு தானா இவ்வளவு கோபம்? என் செல்ல அம்மா!” சித்தார்த் சிரித்துக்கொண்டே யசோதாவின் கன்னத்தை பிடிக்கப் போக
அவனது கையை தட்டி விட்டவர்
“நீ என்ன பண்ணுறேன்னு தெரிந்துதான் பண்ணுறியா சித்தார்த்? அந்த பொண்ணை உன் பைக்கில் ஏற்றிக்கொண்டு இப்படி எல்லோரும் பாக்குற மாதிரி வர்றியே நாளைக்கு உனக்கு கல்யாணம் பேசப்போகிற இடத்தில் இதையெல்லாம் யாராவது சொல்லி அவங்க அதை பற்றி கேட்டால் நான் என்னடா சொல்லுவேன்?” கோபமாக கேட்கவும்
தன் தலையில் கையை வைத்துக்கொண்டவன்
“அம்மா என் பைக்கில் தானே அவளை கூட்டிட்டு வந்தேன் அதில் ஒன்னும் தப்பு இல்லையே! அதோடு அவ ஒன்னும் யாரோ இல்லையே! என் அத்தை பொண்ணு தானே! இதில் என்ன தப்பு இருக்கு?” கேள்வியாக தன் அன்னையை நோக்கினான்.
“ஐயோ! சித்தார்த் நீ இன்னும் சின்ன பையனா இருக்கியே டா! நீ இன்னும் சின்னப் பையன் இல்லை அதை முதலில் புரிஞ்சுக்கோ! ஜெயிலுக்குப் போயிட்டு வந்த ஒரு பொண்ணை இப்படி பைக்கில் ஏற்றிக் கொண்டு வருவது எல்லாம் சரி இல்லை சித்தார்த்!”
“ஐயோ! அம்மா! அம்மா! ஏன்மா இப்படி யோசிக்கிறீங்க? அவ ஜெயிலுக்கு போன விஷயத்தையும் இவ்வளவு பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லைம்மா! ஏன்மா ஜெயிலுக்கு போயிட்டு வந்த ஒரு பொண்ணு சாதாரணமா ஒரு வாழ்க்கை வாழ கூடாதா? ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பொண்ணு கூட பழகக்கூடாதுன்னா நம்ம ஜெஸ்ஸியும் தான் தினமும் ஜெயிலுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் போயிட்டு வர்றா அப்போ அவ கூடவும் பழகுவது தப்பா?”
“சபாஷ் சித்ண்ணா! சரியான கேள்வி!” செமஸ்டர் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்த கார்த்திக் தன் அண்ணனை பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்ட
அவனைத் திரும்பிப் பார்த்த யசோதா “என்னடா? அண்ணனுக்கு சப்போர்ட்டா? அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு இங்க என்ன பார்வை? ஒழுங்காக படி!” முறைத்து பார்த்த படியே அதட்டலாக கூறினார்.
“அம்மா கூல் டவுன் ம்மா! அதெல்லாம் விட்டுட்டு முதலில் இப்படி வந்து உட்காருங்க!” அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அவரை அமரச் செய்தவன் அவரருகில் அருகில் அமர்ந்து கொண்டு அவர் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
“அம்மா மனிதனாகப் பிறந்த எல்லோரும் தன்னை அறிந்தோ அறியாமலோ தவறு செய்வது இயல்பு ஆனால் இப்போ மேக்னா ஜெயிலுக்கு போய் வந்தது அவ செய்யாத ஒரு தப்பிற்காக! அதை மட்டும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கம்மா!”
“சரி இது அவ தெரியாமல் பண்ண தப்பு ஆனா இதற்கு முதல் அவ பண்ணாலே தப்பு அதை எந்த கணக்கில் சித்தார்த் வைப்பது?”
“அ..ம்மா நீங்..க எதைப் பற்றி சொல்லுறீங்க?”
‘ஒருவேளை அம்மாவிற்கு மேக்னா இதற்கு முதல் பண்ண எல்லா விடயங்களும் தெரியவந்திருக்குமோ?’ மனதிற்குள் எழுந்த அச்ச உணர்வுடன் சித்தார்த் தன் அன்னையை நோக்க
அவனது கைகளில் இருந்து என் கையை விலக்கி எடுத்துக் கொண்டவர்
“நான் அந்த சின்ன பொண்ணு நர்மதா கூட பேசினேன்” அவனது கண்களைப் பார்த்துக்கொண்டே கூறினார்.
“நர்..ம..தாவா?! அவ…அவ என்ன சொன்னா?”
“அவ எப்படி மேக்னாவிற்கு தங்கச்சி ஆனான்னு சொன்னா”
“உப்ப்ப்ப்! அவ்வளவுதானா?”
“என்னடா அவ்வளவுதானா? தனியாக நின்று நான்கு, ஐந்து பசங்களை அடித்து போட்டு இருக்கா அந்த பொண்ணு அதை போய் சாதாரணமாக சொல்லுற?”
“அம்மா நீங்க அவ அந்த பசங்களை அடித்த அந்த ஒரு விஷயத்தைத் தான் பார்க்குறீங்க! ஆனால் அதுக்கு பின்னாடி இருக்கும் காரணத்தை பார்க்கல
அவ தைரியமாக அந்த பசங்க கிட்ட இருந்து ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கா இன்னைக்கு எத்தனை பேரு இவ்வளவு தைரியமா இருப்பாங்க? சொல்லுங்க பார்க்கலாம்?”
“சித்தார்த் நீ மேக்னாவை விரும்புகிறாயா கண்ணா?”
“அம்மா!” தன் அன்னையின் கேள்வியில் சித்தார்த் அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்த்தான்.
சித்தார்த்தின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவனது தலையை வருடிக் கொடுத்தவர்
“உன்னை சின்ன வயதில் இருந்து வளர்த்த உன் அம்மாடா நான்! நீ எந்த ஒரு விஷயத்திற்கும் இதுவரை என்னிடம் இந்த அளவிற்கு வாதாடியது இல்லை கண்ணா! முதன்முறையாக இவ்வளவு தூரம் ஒரு பொண்ணுக்காக பரிந்து பேசுறேன்னா அந்த பொண்ணு உன் மனதில் எந்த இடத்தில் இருக்கான்னு எனக்கு தெரியாமலா இருக்கும்?” கேள்வியாக தன் புருவம் உயர்த்தி கேட்டார்.
“ஆனா! அம்மா! அது…”
“சொல்லு கண்ணா நீ அவளை விரும்புகிறாயா?” யசோதாவின் கேள்வியில் தன் கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தவன்
“அம்மா நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லுவேன் அதை மட்டும் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்க உங்க அனுமதியோ, சம்மதமோ இல்லாமல் நான் எந்த ஒரு விடயத்தையும் செய்ய மாட்டேன் அது மட்டும் உறுதி இது நான் உங்களுக்கு தர்ற வாக்கும் கூட” மறைமுகமாக மேக்னா மீதான காதலை பற்றிய விடயத்தை தவிர்த்து விட்டு தன் அறைக்குள் சென்று நுழைந்து கொள்ள அவரோ மனம் நிறைந்த குழப்பத்துடன் தன் மகனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
தன் அன்னை மற்றும் அண்ணனின் சம்பாஷணையை அத்தனை நேரமும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு யசோதாவின் அருகில் சென்று அவரது தோளில் கையை வைத்து
“அம்மா உங்களுக்கு பிடிக்காத எதையும் அண்ணா பண்ண மாட்டாங்கம்மா! நீங்க எதைப்பற்றியும் யோசித்து கவலைப்பட வேண்டாம்மா!” ஆதரவாக அழுத்திக் கொடுத்தவாறே கூற அவனது கூற்றில் அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவர் அவனது தலையை கோதி விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
ஒருவருக்கொருவர் பெரிதாக பேசிக் கொள்ளாமல் இரவு உணவை முடித்துவிட்டு தங்களது அறைகளுக்குள் சென்றுவிட சித்தார்த் மாத்திரம் உறக்கம் வராமல் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
மேக்னா மீதான காதல் ஒரு புறம், தன் அன்னையின் குழப்பமான கேள்விகள் இன்னொரு புறம் என தன் மனதிற்குள் தவியாய் தவித்துப் போனவன் சிறிது நேரம் காற்றாட வெளியிலிருந்து விட்டு வரலாம் என்று எண்ணிக் கொண்டு தங்கள் வீட்டின் பின்னால் இருந்த அந்த காகிதப் பூ பந்தலின் கீழ் சென்று அமர்ந்து கொண்டான்.
சிறு வயதிலிருந்தே அந்த காகிதபூ பந்தல் அவனுக்கு மிகவும் பிடித்தமான இடம்.
அந்த இடத்தில் இருந்து பார்த்தால் மேக்னா இருக்கும் வீட்டின் பின்புற பகுதி தெளிவாகத் தெரியும்.
இரண்டு வீடுகளும் அவர்களது வீடு என்பதால் முன்புறம் மாத்திரம் இரு வீடுகளையும் பிரிப்பது போல கற் சுவராலான வேலி அமைக்கப்பட்டிருக்க வீட்டின் பின்புறம் ஒற்றைக் கம்பியிலான வேலி அமைக்கப்பட்டிருந்தது.
அவளது வீட்டைப் பார்த்த படியே அந்த பந்தலின் கீழ் அமர்ந்திருந்தவன் மனதிற்குள் மேக்னாவை முதன்முதலாக நீதிமன்றத்தில் வைத்து சந்தித்த அந்த நிகழ்வே மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.
தான் அவளை முதல் தடவை சந்தித்த போது தான் அவளுக்காக இவ்வளவு தூரம் மனதிற்குள்ளும் வெளியிலும் போராட வேண்டியிருக்கும் என்று துளியும் நினைத்திருக்கவில்லை.
மேக்னாவைப் பற்றிய எண்ணங்களோடு சித்தார்த் அமர்ந்திருக்க அவனது சிந்தனைக்கு காரணமானவளோ அவளது வீட்டின் பின்புறமாக இருந்து ஒரு திட்டில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அவளை அந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத சித்தார்த்
“மேக்னா! இந்த நேரத்தில் இவ இங்கே என்ன பண்ணுறா?” யோசனையோடு அவளை பார்த்துக்கொண்டே அங்கிருந்த அந்த கம்பி வேலியின் பக்கமாக சென்று நின்று கொண்டான்.
சுற்றிலும் இருட்டாக இருந்ததனால் மேக்னாவிற்கு சித்தார்த் அங்கு வந்து நின்றது தெரியவில்லை.
தன் கையிலிருந்த புகைப்படத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் அதை வருடிக் கொடுத்தபடியே தன் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
“சுந்தரி ம்மா! அப்பா! எதற்காக என்னை மட்டும் இங்கே தனியாக விட்டுட்டுப் போனீங்க? நீங்க போகும் போது என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாமே! நீங்க என்னை விட்டுப் போனதால் தானே நான் தப்பான வழியை தேர்ந்தெடுத்து இப்படி எல்லாம் பண்ணுனேன்! எனக்கு நல்லது எது? கெட்டது எது? என்று சொல்லித்தர கூட யாருமே இல்லையே!
அந்த இன்ஸ்பெக்டர் சார் ரொம்ப நல்லவரு நான் ஒரு உதவியை வாய்திறந்து கேட்க முதலே அதை உணர்ந்து எனக்காக எல்லாவற்றையும் செய்து தருவார் எனக்காக ஒவ்வொரு விடயமும் பார்த்துப் பார்த்து செய்கிறார் அவர் மேலே எனக்கு இருக்கிறது மரியாதையா? இல்லை காதலா? அதைக் கூட என்னால் பிரித்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முடியலை என் மனதுக்குள் இருக்கும் இந்த சந்தேகத்தை கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியல!
நான் என்ன பண்ணுறது சுந்தரி ம்மா? அழுவது கோழைத்தனமான செயல்ன்னு இத்தனை நாளா சொல்லிட்டு இருந்தேன் ஆனால் இப்போது இந்த அழுகையை தவிர வேறு எதுவும் எனக்குத் துணையாக இல்லையே!’ இதுநாள் வரை எந்த ஒரே காரணத்திற்காகவும் இத்தனை தூரம் வேதனைப்பட்டு கலங்காதவள் முதன்முதலாக தன் முன்னால் கண்கள் கலங்கி அமர்ந்திருப்பதைப் பார்த்து சித்தார்த்தின் மனம் சொல்லில் அடங்கா வேதனையில் தவித்தது.
அவள் கண்ணீரை பார்த்த அடுத்த நொடி எதைப் பற்றியும் யோசிக்காமல் யோசிக்காமல் தன் முன்னால் இருந்து தடுப்பு வேலியை மட்டுமல்லாமல் தன் மனத்திற்குள் அத்தனை காலமாக மறைந்து இருந்த தடுப்பு வேலியையும் கடந்து சென்றவன் அவள் முன்னால் சென்று நின்றான்.
அவனை அந்த நேரத்தில், அந்த சூழ்நிலையில், அந்த இடத்தில் எதிர்பாராத மேக்னா
“இன்ஸ்பெக்டர் சார் நீங்க இங்க எப்படி?” அதிர்ச்சி கலந்த தயக்கத்துடன் வினவ
அவளது கையிலிருந்த புகைப்படத்தையும் அவளது முகத்தையும் சுட்டிக்காட்டியவன்
“இதற்கு என்ன மேக்னா அர்த்தம்?” கேள்வியாக அவளை நோக்கினான்.
“அது… அது ஒன்னும் இல்லைங்க இன்ஸ்பெக்டர் சார்” அவசரமாக தன் கையில் இருந்த புகைப்படத்தை தன் பின்னால் மறைத்துக் கொண்டவள்
“இன்ஸ்பெக்டர் சார் முதலில் இங்கே இருந்து கிளம்புங்க சார் யாராவது பார்த்தால் தேவையில்லாத பிரச்சினை வரும்” தலையை குனிந்தபடியே கூறவும்
தன் ஒற்றை விரல் கொண்டு அவள் தாடையை பற்றி நிமிர்த்தியவன்
“உனக்கு யாருமில்லைன்னு யாரு சொன்னா மேக்னா? உனக்கு அம்மாவா, அப்பாவா, நண்பனாக, காதலனாக, காவலனாக எல்லாமுமாய் இருக்க நான் காத்துட்டு இருக்கேன்
இதை நான் உன்னை பார்த்து பரிதாபத்தினாலோ, வேறு எதுவும் சுயநலத்திற்காகவோ சொல்லல என் மனதார உணர்ந்து தான் இதை உன்கிட்ட சொல்லுறேன் உன்னோட கண்ணில் கண்ணீரை பார்க்கும்போது என்னால் சாதாரணமாக இருக்க முடியல உன் கிட்ட இதை எப்படி சொல்லுறதுன்னு தெரியாமல் தான் இத்தனை நாளாக இருந்தேன்
உனக்கு உதவி பண்ணதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கும்னு நீ அன்னைக்கு சொன்னே இல்லையா? அந்த வேறு ஒரு காரணம் தான் இந்த காதல்! நான் உன்னை மனதார காதலிக்கிறேன் எப்போ, எப்படி எனக்கு இந்த எண்ணம் வந்ததுன்னு தெரியவில்லை ஆனா நான் காதலிப்பது உறுதி! நீ உன் பதிலை இப்பவே சொல்லனும்னு இல்ல உனக்கு எப்ப தோணுதோ அப்போ சொல்லு அதுவரைக்கும் நான் சந்தோசமாக காத்துட்டு இருப்பேன் இனிமே உன் கண்ணில் இந்த கண்ணீர் வேண்டாம் மேக்னான்னா ஒரு தனி கெத்து இருக்கு அவளோடே மிரட்டலான பார்வை, அதட்டல், கண்டிப்பு இதெல்லாம் தான் உனக்கு தேவை இந்த அழுகை இல்லை” அவளின் கண்களை துடைத்து விட்டபடியே கூறவும் அவளோ கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
சிறைக்குள் அன்றொரு நாள் அவனை மிகவும் நெருக்கத்தில் பார்த்ததற்கு பின்னர் இன்றுதான் அவள் அவனை மீண்டும் இத்தனை நெருக்கத்தில் பார்க்கிறாள்.
எதற்குமே சலனப்படாத அவள் மனது இன்று அவன் முன்னால் வலிமை இழந்து நிற்க அதை ஏனோ அவள் ஆழ்மனது ரசிக்கவில்லை.
அவனை விட்டு விலகி செல்ல அவள் ஆழ் மனது அவளுக்கு கட்டளையிட்டாலும் இன்னொரு புற மனது அவன் அருகாமையை ரசிக்கவே செய்தது.
இரவு நேரத்து குளிர் காற்று, அமைதியான சூழல், காதல் நிறைந்த அவனது பார்வை என் எல்லாம் சேர்ந்து அந்த கன்னி மனதிற்குள் பெரும் சூறாவளியை கிளரச் செய்தது.
“மேக்னா!” வார்த்தைகளுக்கு வலித்து விடுமோ என்பது போல வந்த சித்தார்த்தின் அழைப்பில் மேக்னாவும் சொக்கித் தான் போனாள்.
‘இவர் மேல் இருப்பது மரியாதையா? காதலா?’ மீண்டும் அவள் மனதிற்குள் ஒரு புறமாக அந்த கேள்வி மேலெழ
‘நீ செய்த விடயங்களை எல்லாம் மறந்து விட்டாயா மேக்னா? தனபாலனைப் பழி தீர்க்க வேண்டும் என்று திட்டம் போட்டு விட்டு இப்போது நீ காதல் எனும் மாயைக்குள் தொலைத்து போகப் போகிறாயா? அப்படி என்றால் நீ போட்ட திட்டம் என்னாவது?’ அவளது இன்னொரு புற மனது அவளைக் கேள்வியால் துளைத்தது.
‘இல்லை! இல்லை! இது நடக்காது! நடக்கவும் கூடாது! இன்ஸ்பெக்டர் சார் நான் தகுதியானவள் இல்லை’ சட்டென்று அவன் கையை தட்டிவிட்டவள் வேகமாக ஓடிச்சென்று தன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.
‘என்னை பற்றி உங்களுக்கு முழுமையாகத் தெரியாது இன்ஸ்பெக்டர் சார் என்னை பற்றி முழு விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொண்ட பின்னர் உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணமே இருக்காது இன்ஸ்பெக்டர் சார்! நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை! நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை!’ தன் மனதிற்குள் புலம்பியபடியே அந்த கதவின் மீது மேக்னா சாய்ந்து அமர்ந்து கொண்டாள்……….