alaikadal-25
alaikadal-25
அலைகடல் – 25
காலைக்கடன்களை முடித்து கதவைத் திறக்க முயற்சித்த ஆரவ்விற்கு அதனைத் திறப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை. பலம் கொண்ட மட்டும் இழுத்துப்பார்க்க அதுவோ அசைவேனா என்று சவால் விட்டுக்கொண்டிருந்தது.
வெளியே பூட்டியிருப்பது அறிந்தும் கூட சட்டென்று மனைவியை சந்தேகப்படவில்லை. கதவைத் தட்டியவாறு, “பூங்குழலி நான் உள்ள இருக்கேன்… கதவைத் திற” என்றான் ஆரவ்.
‘பாருடா… இப்போ நான் அச்சசோ அப்படியான்னு கேட்டு ஓடிப்போய் கதவைத் திறக்கனுமோ?’ அலட்சியமாய் எண்ணிய பூங்குழலி அவனைக் கண்டுக்கொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்த்து மேசையில் சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் ஆரவ்வின் கைபேசியை கைப்பற்றினாள்.
இத்தனை நேரமும் கதவை தட்டிக்கொண்டிருந்த ஆரவ் சட்டென்று நிறுத்திட, மயான அமைதியை தத்தெடுத்து அவ்வறை.
பாஸ்வேர்ட் கேட்ட செல்பேசியை தூக்கி வீசும் எண்ணம் வர, எரிச்சலுடன் எடுத்ததுபோல் வைத்த அடுத்த நிமிடம், “பூங்குழலி… விளையாடாத ஒழுங்கா கதவைத் திற” என்றான் அழுத்தமாய்.
ஆரவ்விற்கு கதவைத் தட்டியும் திறக்கவில்லை என்றதுமே தெரிந்துவிட்டது யாரின் வேலை என்று. வெளியே ஏதேனும் சத்தம் கேட்கிறதா என உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கையில் செல்பேசியை மேசையில் வைக்கும் ‘டொக்’ என்ற ஒலி மெலிதாய் என்றாலும் காட்டிக்கொடுக்க, உடனே அழைத்துவிட்டான்.
அப்பொழுதும் அமைதியாய் இருந்த மனைவியின் மேல் கண்ணை மறைத்திருந்த காதல் இறங்கி கன்னாபின்னாவென்று கோபம் ஏற, “ஹேய்… யாரை பூட்டி வச்சிருக்கன்னு தெரியுதா? ஓபன் தி டோர்… நானா வெளிய வந்தா நடக்குறதே வேற குழலி…” மிதமிஞ்சிய ஆத்திரத்தை கதவில் ஓங்கி அடித்து காண்பிக்க, அதில் கதவுடன் சேர்த்து அறையே ஒரு ஆட்டம் ஆடி அடங்கியது.
காது இரண்டையும் தன் இரு கைகளால் பொத்திக்கொண்டாள் பூங்குழலி. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் சிறகின்றி பறப்பதுபோல் லேசாய், திருப்தியாய் இருந்தது.
‘உன்னை உன் வீட்டு பாத்ரூம்ல அடைச்சி போட்டு வேலைக்கு குறுக்க வந்தாலே எவ்ளோ வெறி ஏறுது? அதேமாதிரி தானே எனக்கும் என் வாழ்க்கைல என்னைக் கேட்காம குறுக்க வந்தா வரும்? அனுபவி… எவ்ளோ நேரம் சமாளிக்குறன்னு நானும் பார்க்குறேன்’ மனதினுள் கருவிக்கொண்டு படுத்தேவிட்டாள். கண்கள் மட்டும் அடிக்கடி குளியலறையை பக்கம் பார்த்து, திறந்து திறந்து மூடியது.
உள்ளே இருப்பவனிற்கோ கொஞ்சம் கொஞ்சமாய் இரத்த அழுத்தம் எகிறிக்கொண்டிருந்தது. திருமணம் முடிந்ததால் தங்கியிருந்த ஆத்மதிருப்தி, சந்தோசம், உல்லாசம் அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் போக, அவனின் மனம் முழுதும் ஆக்கிரமித்தது அவளின் மீதான கோபம் கோபம் கோபம் மட்டுமே.
அத்தனை வருடம் வாழ்ந்த சுதந்திர வாழ்வு நொடியில் பறிக்கப்பட்ட உணர்வு. அது கொடுத்த உளைச்சல் அவனின் தன்மானம், ஈகோ மற்றும் இன்ன பிறவற்றை சீண்டிவிட, அங்கும் இங்கும் உலாவினான் ஆரவ். தான் மாட்டியதை விடவும் அது வெளியே தெரியக்கூடாது என்பது தான் பிரதானமாக இருந்தது. இல்லையென்றால் அவனுக்கிருந்த மனநிலையில் பாதுகாவலரை அழைத்தோ ஜன்னலை உடைத்தோ வெளியேறியிருப்பான்.
கடிகார முட்கள் நிற்காமல் நகர்ந்துக்கொண்டிருந்தது. எட்டு… ஒன்பது… கீழே வேலை செய்வோர், பாதுகாவலர் ஆகியோரின் பார்வை அடிக்கடி மாடிப்படியை தொட்டு தொட்டு மீளத் தொடங்கியிருந்தது.
ஒன்பதரை… எதற்கோ தயாராகி வெளியே வந்த வேந்தனிடம் இன்னும் ஆரவ் கீழே வரவில்லை என்ற செய்தியை பாதுகாவலர் கூற, சட்டென்று மேலே சென்று பார்க்கவும் தயக்கமாக இருந்தது. சிறுவன் என்றாலும் பதினைந்து வயதிற்குரிய பக்குவம் உண்டல்லவா? ஆனால் அவர்கள் வாழும் லட்சணம் அறிந்த இவனாவது யோசித்திருக்கலாம்.
ஆரவ் மீது இருந்த நம்பிக்கையில், “இன்னும் அரைமணி நேரம் போகட்டும் வரலைன்னா போய் பார்க்குறேன்” என்று அவரை அனுப்பிவைத்து தானும் காத்திருக்க ஆரம்பித்தான்.
ஷவரில் நனைந்து உச்சி மண்டைக்கு எறிய உஷ்ணத்தை குறைத்தான், பாத்டப்பில் மூழ்கி உடலோடு மனதையும் குளிர வைத்தான். எதுவும் பெரிதாக பலனளிக்காமல் போக, மனைவியை திட்டித்தீர்த்து கதவையும், டைல்ஸ் பதிந்த சுவரையும் அவளாக எண்ணி உதைத்து கால் வலியை வாங்கினான்.
பத்து மணி… கிட்டதட்ட ஆரவ் உள்ளே சென்று மூன்று மணிநேரம் சென்றிருந்தது. வாழ்நாளில் இவ்வளவு மோசமாக நேரத்தை செலவளித்திறாதவனுக்கு பைத்தியம் பிடிப்பதுபோல் இருந்தது.
சரியாக அப்பொழுது வேந்தனின் குரல் வெளியே கேட்க, படுத்திருந்த பூங்குழலி விலுக்கென்று எழுந்தமர்ந்து யோசிக்கையில் உள்ளிருந்த ஆரவ், “வேந்தா… உள்ளே வா நான் பாத்ரூமில் இருக்கேன்” என்று கத்த அவனிற்கு மேல், “இதோ வந்துட்டேன்” என்று கத்தினாள் பூங்குழலி.
சத்தியமாக மற்றவர்கள் இந்த உரையாடலில் என்ன நினைப்பார்களோ அதையேதான் பூவேந்தனும் நினைத்தான். ‘ஏதோ விளையாடுறாங்க போல! அழைப்பதா? வேண்டாமா?’ என்றெண்ணி வாசலிலே தயங்கினான்.
இருவரும் சேர்ந்து கத்துவதால் தெளிவாக கேட்கவில்லை என்றாலும் ஆரவ் அழைப்பது மட்டும் தெரிந்தது.
விரைந்து வெளியே வந்து, “பாத்ரூம்ல தான் இருக்கான்… நீ கீழே போய் யாராச்சும் தேடுனா கொஞ்சம் தூங்கிட்டாங்க அதான் லேட்ன்னு சொல்லுடா… பத்து நிமிஷத்துல வந்துருவாங்க” துரத்தி விடாத குறையாக கீழே செல்லும் படியருகே வரை வேந்தனை அழைத்து வந்து கூறினாள் பூங்குழலி. அதுவே சந்தேகத்தைக் கிளப்ப, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறுதான் கீழிறங்கிச் சென்றான் பூவேந்தன்.
அவன் பார்வையே அதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று தோன்ற, குளியலறை கதவைத் திறக்கச் சென்றாள் பூங்குழலி.
இன்னமும் வேந்தனை அழைத்துக்கொண்டிருந்தவனிடம், “அவன் போய் அரைமணி நேரம் ஆச்சு… கொஞ்சம் அடங்குறீங்களா” என்றாள் இவள்.
“உன்னை… இடியட்…” கத்தியத்தில் இரத்த அழுத்தம் தாறுமாறாக எகிற தஸ் புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான் ஆரவ்.
அவன் குரலே அவனின் மனநிலையைக் கூற, சீண்டிவிட்ட சிங்கத்தை எதிர்கொள்ளும் பாவனையில் கதவைத் திறந்து எச்சரிக்கையாக தள்ளி நின்றதுதான் தாமதம். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக நேராக சென்று அவனின் இலக்காகிய பூங்குழலியிடம் பாய்ந்தான் ஆரவ்.
தலை கலைந்து, கண்கள் இரத்த நிறம் கொண்டிருக்க மனப்புழுக்கம் உடலை பாதித்து வியர்வை ஆறாய் பெருகிக்கொண்டிருந்தது ஆரவ்விற்கு.
“ஹௌ டேர்… ” என்றவாறு கையை பூங்குழலியின் கன்னத்திற்கு குறிவைத்து ஓங்க, இலாவகமாய் தட்டிவிட்டு தள்ளிச் சென்றாள் அவள்.
தான் என்ற பெருமையும், அவனுடைய உயரம், பதவி அனைத்தும் அள்ளிகொடுத்த கர்வமும் சில மணிநேரங்கள் என்றாலும் அடிப்பட்டிருக்க, அந்த கோபத்தின் முன்பு பூங்குழலியின் பலம் சில நிமிடங்களில் தோய்ந்து அவனிடம் தோற்றுதான் போனது.
சட்டென்று அவளைத் தூக்கியவன், “என்னையா பாத்ரூம்ல பூட்டுன… ஏண்டா இவனை அடைச்சோம்ன்னு நொந்துபோற அளவுக்கு உள்ளேயே இரு” குளியலறை நுழைந்து தண்ணீர் நிரம்பிய பாத்டப்பில் முழுதாய் போட்டவன் அவள் மூழ்கி எழுந்து, மூச்சு வாங்கி சுதாரிக்கும் முன் வெளியே தாழிட்டுவிட்டான்.
அடுத்தடுத்து செய்ததெல்லாம் வேகம் வேகம் வேகம்தான். விடாமல் தொல்லை செய்த செல்பேசியை பார்த்தால் வரிசையாய் பல அழைப்புகள். பாதுகாவலரிடம், வேந்தனிடம், வினோத்திடம் இன்னும் பல. அதில் வினோத்தை அழைத்து மீட்டிங்கை மாற்றி வைக்கக் கூறினான்.
பின் மனதை சமன்படுத்தி தயாராகி வெளியே சென்ற பிறகே அவ்வளவு நேரமும் அமைதியாய் இருக்கும் பூங்குழலியின் நினைவுவர, இருமனதாய் தவிக்க ஆரம்பித்தான் ஆரவ்.
“பிசாசு பிசாசு… பொண்டாட்டின்னு நானே வம்படியா கூட்டிட்டு வந்த கொழுப்பெடுத்த பிசாசு. கொஞ்ச நேரம் கூட என்னால பூட்டி போட முடியல. இவ என்னடான்னா மனசாட்சியே இல்லாம மூணு மணி நேரம் பூட்டியதும் இல்லாம, உள்ள தள்ளியும் பேச்சு மூச்சின்றி இருக்கா பாரு. ஆனாலும் ஒரு மனுஷிக்கு இவ்ளோ அழுத்தம் ஆகாது” மீண்டும் அறைக்குள் நுழைந்த ஆரவ் சிலீர் என்று கேட்ட கண்ணாடி நொறுங்கும் சத்தத்தில் திகைத்து நின்றான்.
இன்னும் ஏதேதோ சத்தம் கேட்க, விரைந்து வந்தவன் கண்டது குளியலறை ஜன்னலை உடைத்ததால் அங்கிருந்து சிதறிய கண்ணாடி துண்டுகள் டீசர்ட் மறைக்காத கை, கழுத்தில் சிராய்த்து இரத்தம் லேசாய் எட்டிப்பார்க்க நின்ற பூங்குழலியைதான். முகத்தை கைவைத்து மறைந்திருந்ததால் அந்த மட்டும் முகம் கீறல் விழாமல் தப்பித்திருந்தது.
ஆரவ்விற்கு தான் வெளியே தெரியக்கூடாது என்ற கவலையெல்லாம். பூங்குழலிக்கு இல்லையே! உடைத்து தள்ளிவிட்டாள்.
கவனமாய் கீழே இருந்த கண்ணாடி சில்லுகளில் கால் வைக்காமல் தன்னை நோக்கி வந்த ஆரவ்வை கண்டவள் விறுவிறுவென அவனை தாண்டி சென்றும்விட்டாள்.
அதுவரை கொஞ்ச நஞ்சம் ஓட்டிக்கொண்டிருந்த கோபமும் மனையாளின் உதிரத்தைப் பார்த்து உதிர்ந்துவிட, டாக்டர் ராம்மிற்கு அழைப்பு விடுத்தான் அவன் மனைவி அனிதாவை வீட்டிற்கு அனுப்ப கூறுவதற்காக.
தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் குமிந்திருக்க, இந்த சூழல் வேறு அழுத்தமாக இருந்தது. இதுவரை வீட்டிற்குள் வந்தால் வெளியே இருக்கும் அழுத்தம் மறைந்துவிடும். அப்படி தான் வாழ்ந்து வந்தான். ஆனால் எதற்கும் முதல்முறை என்ற ஒன்று உண்டல்லவா? வீட்டிலேயே உருவான அழுத்தத்தை தாங்க சற்று திணறிதான் போனான்.
நேரம் வேறு அவனைப் பிடித்து அலுவலகத்திற்கு இழுத்தது. ஒரு மனம் எதுவென்றாலும் நாளை மறுநாள் கூட்டம் முடிவடைந்த பின் பார்த்துக்கொள்ளலாம் கிளம்பு என, இன்னொன்றோ ஈர உடையுடன் படுக்கையில் அமர்ந்திருந்தவள் அருகே சென்று விசாரிக்கச் சொன்னது.
இரு மனம் கூறியதையும் கேட்காதவன் காயங்களை பார்த்து, ‘ஆழமாக கிழிக்கவில்லை’ என்று நிம்மதி அடைந்தான்.
மனம் முழுதும் புதிதாக குற்றஉணர்ச்சி. அவள்தான் அப்படி செய்தால் தானும் அதையே திருப்பி செய்திருக்க வேண்டாமே!
கீழே வந்ததும் எதிர்பட்ட வேந்தனிடம், “உங்க அக்காக்கு அடிப்பட்டிருக்கு டாக்டரை வரச் சொல்லிருக்கேன். கூடவே இரு” முடிக்கும் முன்பே தடதடவென்று அவன் மேலே ஓட, அதைப் பார்த்தவாறு அங்கிருந்த பாதுகாவலரிடம், “வீட்டுல வாசல், பால்கனி தவிர இருக்குற மத்த எல்லா கதவோட வெளிப்புற தாழ்ப்பாளை ரிமூவ் பண்ணுங்க… என் ரூம் மொத்தமா கிளீன் பண்ணனும் கூடவே இருந்து கண்காணிங்க” படபடவென்று உத்தரவிட்டுக் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டான்.
நடந்ததை கேள்விப்பட்டு, “என்ன பூமா இப்படி பண்ணிட்ட” என்று வருந்திய இளையவனிடம்
“நான் விளையாட்டுக்குதான் பண்ணினேன் இப்படி ஆகிருச்சு… வேற ஒன்னும் இல்லடா” என்று சமாளித்துவிட்டாள். இப்போது ஈர உடையை மாற்றியிருந்தாள் ஆனாலும் எங்கெங்கே எரிகிறது என்று கூற முடியாமல் எல்லா இடமும் எரிந்தது.
சிறிது நேரத்தில் எல்லாம் அனிதா வந்துவிட, மருந்து போடும்பொழுதே, “அடடா… என்ன மேடம் நீங்க? ஒன்னு காயப்படுத்துறீங்க இல்லைன்னா காயப்பட்டு உட்கார்ந்திருக்கீங்க” என்று தன் வேலையை ஆரம்பித்தாள்.
அவளின் பேச்சு புரியாமல் கேள்வியாக பார்த்தவளிடம், “புரியலை போல… ஒன்னு உங்க ஹஸ்பண்டை காயப்படுத்துறீங்க இல்லைன்னா அவர் மேல இருக்குற கோபத்துல உங்களையே காயப்படுத்திக்குறீங்க” என்றவளை இவளுக்கு எப்படி தெரியும் என்பதுபோல் ஆராய்ச்சியாக பார்த்தாள் பூங்குழலி.
அவளின் பார்வை கேட்ட கேள்விக்கு, “யாரும் என்கிட்ட சொல்லலை… தன்னால ஒரு கெஸ்ஸிங் தான். என்ன கோபம் இருந்தாலும் சரி பேசி தீர்த்துக்கோங்க” என்றாள் சிநேக பாவனையில். அதில் ஏளனமாக வளைந்தது பூங்குழலியின் இதழ்கள். பேசி தீர்த்தால் முடிவது இல்லை எங்கள் பிரச்சனை என்றெண்ணினாளோ என்னவோ!
“அப்படி பேசி தீர்க்க முடியலை என்றாலும் பரவால்ல உயிரில்லாத பொருட்கள் மீது உங்க கோபத்தை காட்டுங்க பூங்குழலி மேடம்… அது காலப்போக்கில் மறைந்து, மறந்துவிடும். அதைவிட்டுட்டு இப்படி ஆளாளுக்கு காலத்தால் மறையாத வீரத்தழும்பு வாங்குவானேன்?” என்றாள் காயத்தை சுட்டிக்காட்டி புன்னகையுடன்.
அனிதா சொன்னதும்தான் நினைவு வந்தது அன்று தான் அடித்ததால் உண்டான நெற்றியோர தழும்பு.
அனிதாவின் கைகள் பாட்டிற்கு அவள் வேலையைச் செய்துக் கொண்டிருக்க வாயோ அது இதுவென்று பேசி தீர்த்தது.
ஏனோ அனிதாவின் பேச்சு பூங்குழலிக்கு வெகுவாய் பிடித்துவிட, சிறிது மலர்ச்சியோடு மேலும் கீழும் தலையசைத்து அவளின் கூற்றை ஏற்றுக்கொண்டாள் பூங்குழலி.
“அவ்வளவுதான் முடிஞ்சது…” என்றாள் அனிதா தன் வேலை முடித்த திருப்தியில். தெரிந்தோ தெரியாமலோ அனிதா கூறியதை மனதில் ஏற்றவளோ அடுத்த செய்ய வேண்டிய அட்டகாசத்தை முடிவெடுத்துவிட்டாள்.
அதன்பிறகு தாழ்ப்பாள் அகற்றுவதையும் அறையை சுத்தம் செய்வதையும் வேடிக்கை பார்த்தே பூங்குழலியின் பொழுது இறக்கை கட்டி பறக்க, இனிய நினைவுகள் ஏதுமின்றி அன்றைய ஆரவ்வின் நாள் கழிந்திருந்தது. அவன் வீட்டிற்கு வரும்முன்பே ஆழ்ந்த உறக்கத்தை தஞ்சமடைந்திருந்தாள் பூங்குழலி.
படுக்கையில் படுத்ததும் காலையில் நடந்ததை மனம் இப்பொழுது அசைபோட, இருவர் செய்ததும் ஆரவ்விற்கு சிறுபிள்ளைத்தனமாகதான் தோன்றியது. அந்த நேர ஆத்திரம் அவனை வேறு எதையும் சிந்திக்கவிடவில்லை ஆனால் இப்படி ஏதேனும் நடக்கும் என்று திருமணத்திற்கு முன்பே தெரிந்தவன் தானே? என்ன இருநாட்கள் அமைதியாய் இருந்து திடீரென்று ஆரம்பிக்கவும் தடுமாறிவிட்டான்.
இனி கவனமாக இருக்கவேண்டும் என்றெண்ணித் தூக்கத்தை தழுவியவன், அடுத்தநாள் எழுகையில் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்த பூங்குழலியைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் பின் என்னவாயிற்றோ என்று பதறி கைகள் நெற்றியை தொட்டுப் பார்த்தது.
காய்ச்சல் எதுவும் இல்லையென்றதும் நிம்மதி எழ, பாவம் அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவென்று தெரியவில்லை.
எட்டு மணிபோல் செல்பேசி அழைத்து கூறிய செய்தியில் வாசலை நோக்கி விரைந்தவன் அவன் மனைவி செய்து வைத்திருந்த வேலையில் படு காண்டாகி, ‘பூங்குழலீலீ…’ என்று பல்லைக் கடித்தான்.
அவனுக்கு சொந்தமான மூன்று கார்களும் முழுதாக பஞ்சராகி பஞ்சத்தில் அடிப்பட்டதுபோல் சோர்ந்திருக்க, புல்லட் ப்ரூப் கண்ணாடியில் தெளிவாகப் பளிச்சென தெரிந்தது பல கீறல்கள்.
மொத்தத்தில் அலங்கோலமாக காட்சியளித்தது நேற்றிரவு வரை ராஜா வீட்டு குதிரையாக கம்பீரமாக வாயிலை அலங்கரித்த அந்த உயிரில்லா வாகனங்கள்!
அலைகடல் ஆர்ப்பரிக்கும்…