அலைகடல் – 6
சென்னையில் ரித்தேஷ் தேடுதல் வேட்டையை கடைசி முயற்சியாகஎட்டுத்திக்கும் முடுக்கிவிட கிடைத்த பதிலே மீண்டும் கிடைக்கையில் சோர்ந்துதான் போனான்.
‘எங்கே போய் தொலைந்தாய் பெண்ணே உன்னால் என் தொழிலுக்கே முழுக்கு போடவேண்டி வருமோ?’கருநீல சுடிதார் அணிந்து கவலையின்றி சிரித்துக்கொண்டிருந்த பெண்ணின் நிழற்படத்திடம் வினவ பதில் இன்றி சிரித்தாள்பூங்குழலி. ஆம் கள்ளமில்லாமல் அதில் சிரித்துக்கொண்டிருப்பவள் பூங்குழலியேதான்.
இதற்கிடையில் கடலில் நடந்த தாக்குதல் நாட்டில் முக்கியமாக தென் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்த இஷ்டத்திற்குக் கதையைத் திரித்து கல்லாவைக்கட்டியது மீடியாக்கள்.
அதிலும்‘எல்லைமீறிய கப்பலில் கப்பற்படை தாக்குதல்’என்று தாக்குதலை நிகழ்த்தியது யாரென கூறாமல் பொதுவான கப்பற்படையையே கூறியதால் பூங்குழலியின் செய்தி கண்முன்னே சுற்றிவந்தாலும்அவர்களால் ஊகிக்க முடியதான் இல்லை.
***************************************
இந்தியப்பெருங்கடலில் மிதக்கும் விக்ரமாதித்யபோர்க்கப்பலானது நாட்டில் நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் அன்றாட வழக்கங்களில் ஈடுபட, ஒரே ஒரு சிறிய மாற்றமாக ரியாஸ் ஜான்சியை எங்குக் கண்டாலும் பளிச்செனப் புன்னகைக்கப் பழகியிருந்தான்.
பதிலுக்குஎகிறிய ஜான்சியின் முறைப்புகள் கோபங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக தோல்வியைத் தழுவ இப்போதெல்லாம் அவனைக் கண்டுக்கொள்ளாமல் செல்லப் பழகியிருந்தாள் அவள்.
**************************************
சில மாதங்கள் கடந்து…
ஒன்றரை வருடம் கழித்து தன் சொந்த ஊரான பீகாரில் இருக்கும்பாட்னாவிற்குச் செல்ல பயணமூட்டையைக் கட்டித் தயாரானாள் ஜான்சி.
இரு மாதங்கள் தொடர்ந்தாற்போல் விடுமுறை விட்ட மகிழ்ச்சியில், “பவிகா நான் ஊருக்கு போன நிம்மதில தொல்லை ஒழிஞ்சதுன்னு நினைச்சுக்காதீங்க ரெண்டே மாசம் சர்ர்ர்ன்னு போயிரும்” என குதூகலிக்க
பவிகாவோ, “அது போகும்… ஆனா நீ இங்க வரப்போ நான் ஊருக்குப் போக ரெடியா இருப்பேனே அப்போ என்ன பண்ணுவ?” என சீண்டினாள்.
“ஹான் அப்போ உங்க தொல்லை இல்லாம நான் ஜாலியா இருப்பேன் வேற என்ன பண்ணுவாங்க” பதிலுக்கு வாரியவாறு பவிகாவிடம் விடைபெற்றவள் பூங்குழலியிடம் சொல்லாமல் செல்ல மனம் வராததால் அவளைத்தேடிச் சென்றாள்.
அபிஷேக், பூங்குழலி இன்னும் இவர்களுக்கு நிகரான மற்ற மூன்று பேரும் கமாண்டர் அறையில் இருப்பதாக தகவல் கிடைக்க ஜான்சி சற்று ஏமாற்றத்தோடு ராட்சத கப்பலில் இருந்து கடலில் இறக்கபட்டு தயாராக இருந்த சிறு கப்பலில் ஏறி அமர்ந்தாள்.
கப்பல் கிளம்பபத்து நிமிடம் இருக்கையில் கமாண்டரின் அறையில் இருந்து வெளிவந்த பூங்குழலி தன் வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் முன் கப்பல் செல்லத் தயாராகிவிட்டதா என மேலிருந்து பார்த்தாள்.
கீழே இருந்தாலும் அடிக்கடி மேலே நோக்கியவாறு இருந்த ஜான்சி பூங்குழலியின் தலையைக் கண்டதும், “மேம்” என்று உற்சாகத்தில் கூவி கையசைக்க
பலர் விசித்திரமாக அவளைக் கண்ட பின்பே சற்று அசடுவழிய அடங்கினாள். பூங்குழலிக்கே ஜான்சியின் இச்செயல்இதழ்கடையோரம் லேசான புன்னகையை தோற்றுவிக்க அதனைத் தாங்கியபடியே நகர்ந்துவிட்டாள்.
ஆனால் ஜான்சிக்கு கழுகைக் காட்டிலும் தெளிவான பார்வை போலும் துல்லியமாக பூங்குழலியின் சிரிப்பைக் கண்டு தானும் பூரிக்க அவளைவிட பூரிப்பாக இருகண்கள் அவள் படகில் அமர்ந்ததில் இருந்து இப்போது வரை அவளின் செய்கைகளை ரசித்துக் கொண்டிருந்தது.
வெகுமாதங்கள் கழித்து குடும்பத்தினரைக் கண்டு அளவளாவச் செல்லும் மகிழ்ச்சி அங்கிருந்தோர் முகத்தில் தனிதேஜசைக் கொடுத்து டாலடிக்கச் செய்தது.
பின்னே பேசியே வருடத்திற்கு மேல் தாண்டியிருக்குமே!கப்பற்படை ரகசியங்கள் அனைத்தும் வெளியே அல்லது எதிரிகளுக்கு செல்போன் மூலம் எளிதாக கசிந்து விடுவதால் செல்பேசியை உபயோகிக்கவும் தடை செய்திருந்தனர்.
தென்இந்திய கப்பற்படையின் தலைமையகம் கொச்சியை நோக்கி கப்பல் நீரை கிழித்துக்கொண்டு வெள்ளிக்கோடுகள் வரைந்தவாறு நகர ஆரம்பித்தது.அங்கு சென்றபின் அங்கிருந்து அவரவர் ஊரிற்கு புறப்பட்டு விடலாம்.
இத்தனை நேரமும் ஜான்சியின் அருகில் உள்ள இருக்கை காற்று வாங்கிக்கொண்டிருக்க அந்தக் காற்றைவிரட்டியபடி பொத்தென விழுந்தது ஒரு உருவம்.ஜான்சியின் உள்ளுணர்வு பொய்க்கவில்லை. விழுந்தது சாட்சாத் ரியாஸே தான்!
தன்னையும் மீறி அருகில் இருப்பவனை முறைத்துவிட அவனின் உள்ளம் கொள்ளைகொண்ட பார்வையை கண்டு தனது அக்மார்க் பளிச் புன்னகையை தந்த ரியாஸ் இம்முறை அவளை தொடர்ந்து ரசித்ததால் உண்டான மயக்கத்தில் ஒருபடி மேல் சென்று கண்ணடித்து உதடு குவித்தான் சத்தமில்லாமல்.
கண்ணில் இருக்கும் கருவண்டுகள் இரண்டும் தன் முழு அளவை முழுதாய் எட்ட அவனின் அதிரடியில் அதிர்ந்து விழித்தாள் ஜான்சி.
**************************************
ரித்தேஷின் கெடு முடிய இன்னமும் ஒரு வாரமே இருந்தது. சிறு துரும்பு கிடைத்தாலும் இறுக்கப்பற்றி மேலேறி வரும் வெறியில் இருக்க காலத்தை நிறுத்தி வைக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் எப்போதோ நிறுத்தி வைத்து அக்கடா என ஆசுவாசமாக குப்புறப்படுத்திருப்பான்.
அந்தளவு கூடப்படித்து குழித்தோண்டக் காத்திருக்கும் அந்த புதியவனின் மேல் பயத்தில் இருந்தான். காலமும் நிற்காமல் அவனைச் சந்திக்க செல்லும் நாள் வந்தே விட மனம் வெறுத்து விடிகாலையிலே அவனின் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான் ரித்தேஷ்.
வாயிலில் பாதுகாப்பிற்காக இருக்கும் புதியவனின் தனிப்பட்ட காவலர்கள் வந்தவனைச் சோதனை செய்து அனுப்ப உள்ளே நுழைந்ததும் தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த புதியவன் தன் ஓட்டத்தை நிறுத்தி நாற்காலியில் இருந்த துவாலையை எடுத்து துடைத்தவாறு அதில் அமர்ந்தான்.
நேரே சென்று நின்றதோடு கையில் இருந்த கோப்பை அவன் முன் இருக்கும் மேசையில் வைத்த ரித்தேஷ், “சாரி ஆ.. சார். ஐ லாஸ்ட்” என்றுவிட்டு இறுக்கமாக நிற்க
“ஐ க்நொவ்” என்றான் சன்னச்சிரிப்புடன்.
அது ரித்தேஷிற்கு அலட்சியமாகத் தெரிய சுள்ளென்று அவன் மீது கோபம் கொப்பளித்தது நிஜம்.
ஆனால் அதனைக் காண்பிக்க அவன் கூட படித்தவன் என்ற வரையறையோடு மட்டும் இருக்க வேண்டுமே? அதைத் தாண்டி வருடங்கள் பல கடந்திருக்க அவனின் பதவியும் பணமும் வாயைக் கட்டிப்போட வைத்தது.
அதற்கு மேல்அங்கிருக்க விருப்பமின்றி நகர ஆரம்பித்தவனிடம்.“ரித்தேஷ் நில்லு. இந்த பைலை எடுத்துட்டு போ. உன்னால முடிஞ்சா அவளைத்தேடிக் குடு முடியலையா விட்ரு” என்றவாறு எழ
‘என்ன சொல்கிறான் இவன்?’ என விசித்திரமாக பார்த்தான் டிடெக்டிவ்.அன்று கத்தியது என்ன? இன்று கூறுவது என்ன? புரியாத பாவனையில் குழப்பத்துடன் நோக்க
“அன்னைக்கு கோபத்துல இருந்தேன் அதான் கொஞ்சம் வார்த்தை தாறுமாறா வந்துருச்சி. அதுக்கு அப்புறம் உன்கிட்ட பேச நினைத்தேன் ஆனா நீ முழுமூச்சா திரும்ப இறங்கிருக்கன்னு தகவல் கிடைக்கவும் சரி எப்படியாச்சும் அவளைப்பற்றி தெரிஞ்சா நல்லதுதானேன்னு நினைச்சி விட்டுட்டேன். எனக்கு தெரியும் நீ உன்னால முடிஞ்ச அத்தனையும் பண்ணிட்ட. அதுக்கு தேங்க்ஸ் அண்ட் முயற்சியை கைவிடாத எவ்ளோ பணம் செலவானாலும் நான் தரேன்” என்றுவிட்டு வீட்டினுள் எட்டி ஒரு பார்வை பார்த்தவன் பைலை அவனின் கையில் வைத்துச் சென்றுவிட்டான்.
அத்தனை மாத மனவுளைச்சலும் இறங்கி உடல் மனம் இரண்டும் ரித்தேஷிற்கு இலகுவாக இருக்க ‘இன்று முழுவதும் பெற்றோர் மனைவி மகனுடன் நேரத்தை செலவழித்து என்ஜாய் பண்ணுவோம்’ என்றெண்ணிக் கொண்டே போர்டிகோவில் காரை நிறுத்தி வாசலை அடைந்தது தான் தாமதம், “ரித்தீ…” என்று கதவின் பின்னிருந்து கத்தியவாறு வெளிவந்து அவனைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கினான் ரியாஸ்.
“வாவ் ரியா…” என்று பதிலுக்கு கத்தியவாறு அவனைக் கட்டியணைத்தான் ரித்தேஷ். கையோடு கொண்டு வந்திருந்த பைல் இத்தனை களேபரத்தில் கீழே விழுந்து சிதறியிருந்தது.
“நீ எப்போடா வந்த? செம ஸ்ட்ரோங் ஆகிட்ட போல ஈசியா என்னை தூக்கீட்டியே” என
“பின்ன நான் யாரு? இந்தியன் நேவி ஆபிசராக்கும்” சட்டை காலரை ஸ்டைலாய் இழுத்துவிட
“அடடா சாப்பிட வாங்கடா ரெண்டு பேரும் வந்ததுல இருந்து இதையேதான் சொல்லி பீத்தீக்கிட்டு இருக்கான் சாப்பிடவே இல்லை. நீயும் காலையிலேயே வெளியபோயிட்ட. அண்ணனும் தம்பியும் இப்போவாச்சும் சாப்பிட்டு முடிச்சா என் வேலை முடியும்ல” என அங்கலாய்த்தவாறு உணவுண்ண அழைத்தார் இவர்களின் தாய்.
தவறிய காகிதங்களை எல்லாம் குனிந்து சேகரித்த ரித்தேஷ், “நீ போடா போய் சாப்பிடு நான் இதெல்லாம் ரூம்ல வச்சிட்டு வரேன்” என
எதேச்சையாகவோ விதியோ டேபிளுக்கு அருகில் விழுந்த புகைப்படம் ரியாஸைக் கண்டு சிரிக்க, ‘அட பூங்குழலி மேம் போட்டோ மாதிரியே இருக்கே’ புருவம் சுளிக்க யோசனையோடு எடுத்தவன் அது பூங்குழலிதான் என்று உறுதியாகவும், “ரித்தி இந்த போட்டோ எதுக்கு வச்சிருக்க” என தீவிரமாக கேட்டான்.
“இந்தப் பொண்ணைத் தாண்டா அஞ்சு வருசமா தேடிக்கிட்டு இருக்கேன். ரொம்ப சீக்ரெட் ப்ராஜெக்ட்” என
“யாரு தேடச் சொன்னா?”
தம்பியின் கேள்வியில், “டேய் கேஸ் விஷயம்லாம் எப்படா விசாரிக்க ஆரம்பிச்ச?” என ஆச்சரியமாக கேட்க
“யாரு தேடச் சொன்னானு சொல்லு ரித்தி. அவங்களோட அம்மா அப்பாவா?”
“இல்லை”
“அப்போ சொந்தக்காரங்களா?”
“பச் இல்லைடா” என்றுவிட்டு யாரெனச் சொல்ல
“என்னாது? அவரா? அவருக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம் ஏன்…” என முடிக்கும்முன்
“அதுக்கு முன்னாடி நீ ஏன் இப்படி துருவி துருவி கேட்குறன்னு சொல்லு. அந்த பொண்ணை எங்கயாவது பார்த்தியா என்ன?” என்றான் எங்கே பார்த்திருக்க போறான் என்ற தொனியில்
“பார்த்தேன்…” என்றான் ரியாஸ் பட்டென்று கூடுதலாக,
“ஆனா எங்கன்னு சொல்லமாட்டேன்” என சேர்த்து சொல்ல
வந்த கோபத்தை தாய் அருகே வருவதைக் கண்டு அடக்கியவன், “அம்மா கொஞ்ச நேரத்துல வரோம் நீங்க போங்க” என்றுவிட்டு தம்பியை இழுத்துக்கொண்டு தனதறைக்குச் சென்றான்.
உள்ளே வந்ததும் வராததுமாக, “சொல்லு எங்கடா பார்த்த?” என தோளை உடும்புபிடியாக பற்றிக் கேட்க
“அதான் சொல்லிட்டேனே சொல்ல முடியாது. நீ எதுக்கு தேடுறேன்னு முதல சொல்லு. அது நியாயமா இருந்தா நானும் எங்க பார்த்தேன்னு சொல்றேன்” என்றவாறு திமிறி விடுபட
“இதுக்குதாண்டா…” என்றவாறு கேஸ் சம்பந்தப்பட்ட காகிதத்தைக் கொத்தாக கையில்எடுத்து தம்பியிடம் திணித்தவன் எதற்கென்று தனக்குத் தெரிந்ததைக் கூறவும் ஆரம்பிக்க காலம் ஏழு வருடம் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
நாமும் இவர்களுக்கு தெரிந்ததும் தெரியாததுமாக கலந்திருக்கும் கடந்தகாலத்தில் பயணிப்போமா?
ஏழு வருடங்களுக்கு முன்…
பரபரப்பான சென்னை மாநகரம் தன் பரபரப்பைத் தொலைத்து நிசப்தத்தில் மூழ்கும் நடுநிசி பன்னிரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஆளில்லா சாலையில் மஞ்சள் விளக்கு தன் கடமையை செவ்வனே செய்துக்கொண்டிருக்க திடுமென அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு தடதடவென ஓடும் பல காலடிச் சத்தங்கள் கேட்டன.
இருவர் மூச்சிரைக்க எதிலிருந்தோ தப்பிப்பதைப் போல் தெரித்து ஓட, பின்னாலே காக்கிசட்டை அணிந்து ஒற்றை ஆளாகத் துரத்திக்கொண்டிருந்தான் அவன். சாலை வளைவு திரும்பி கடற்கரை தெரியவும் அதனை நோக்கி ஆளுக்கொரு திசையில் சிதறினர்.
அதற்கு மேல் பொறுமையின்றி தன்னுடைய துப்பாக்கியை எடுத்தவன், “இப்போ நீங்க நிறுத்தலை என்கௌன்ட்டர் பண்ணி பாடிய கடல்ல தூக்கிபோட்டு ஸ்டேஷன்ல காணவில்லைன்னு போஸ்டர் ஓட்டிருவேன்” மூச்சு வாங்கியதையும் மீறி கர்ஜித்தான்.
அந்த குரலில் அதில் இருந்த உறுதியில் ஒருவன் தயங்க அவனைப் பிடித்து அப்போதுதான் வந்தடைந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றினான். மற்றொருவன் அதற்குள் மாயமாய் மறைந்திருக்க, ‘எங்க போயிருக்க போறான்? இருக்கு அவனுக்கு’ என்றபடி தேடுதலைத் தொடங்க அடுத்த ஐந்து நிமிடத்தில் தேடுபவனின் சட்டைக்காலர் அவனின் கையில்.
முன்னவனைப் போல் சும்மா ஏற்றாமல் பின்னவனை நன்றாக நையப்புடைத்து விட்டான். பின் வண்டியில் ஏற்றி தன்னிடத்தில் அமர்ந்து இன்னும் மிச்சம் இருந்த கோபத்தில் கதவை ஓங்கி அடித்தான். உதடு கிழிந்தா அல்ல பல் உடைந்தா என்று கண்டுபிடிக்க முடியாதபடி வாயில் இருந்து குருதி ஒழுக அரைஉயிராய் அருகில் அமர்ந்திருப்பவனை பரிதாபமாய் பார்த்திருந்தான் முதலாமவன்!
அடுத்த நொடி “கட் கட்” என்ற குரலோடு அந்த இடம் பளிச் பளிச் என்று விளக்குகள் மின்ன, “வெல் டன் ஆரவ்… உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே இதுதான் ஒரே டேக்ல ஓகே ஆகிருது. இப்போ புரியுது ஏன் திரைஉலகமும் மக்களும் உங்களை தலையில் தூக்கி வச்சி கொண்டாடுறாங்கன்னு” இயக்குனர் ஆஹா ஓஹோ என்று புகழ சிறுபுன்னகையுடன் இறங்கி தன்னிடம் போலியாக அடிவாங்கியவரிடம் சென்றான்.
“ஆர் யூ ஓகே? எங்கயாச்சும் நிஜமா அடிப்பட்டு வலிக்குதா?” என்று கரிசனையாக வினவ, “நோ சார் ஐ அம் ஆல்ரைட்” என்றவரிடம் கைகுலுக்கிமற்றவர்களிடமும் விடைபெற்றவன் தன் கேரவன் சென்று உடையை மாற்றினான்.
பின் நேரே தன் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அதனைக் கிளப்பிச் சென்றான் திரை உலகின் மிகவும் விருப்பத்திற்குரிய கதாநாயகன் என்ற அந்தஸ்தோடு வலம் வந்துக்கொண்டிருக்கும் ஆரவ் என்கிற ஆராவமுதன்.
இதற்குள் கரிசனையாக அவன் கேட்டதே காட்டுத்தீயாக செட்டில் பரவியிருக்கக்கூடும். அநேகமாக நாளை அவனிற்கு அன்பானவன் பண்பானவன் என்றபட்டங்கள் கிடைக்கலாம். அதற்குத்தானே கரிசனையாகக் கேட்டது? அப்போ அவன் நடிக்கிறானா என்றால் அதற்கான பதில் ஆரவிற்கு மட்டுமே தெரியும்.
சிறிதுதூரம் சென்றதும் ஏதேனும் சூடாக குடிக்க வேண்டும் போல் இருக்க, எப்போதும் வேலைசெய்பவர்களை மாலையோடு வேலையை முடித்துக்கிளம்பும் படி கூறியிருந்ததால் வீட்டிற்கு சென்றால் தானே அனைத்தையும் செய்யவேண்டுமே என்ற சோம்பேறித்தனத்தில் சாலையோரம் அப்போதும் திறந்திருக்கும் டீக்கடையோரம் நிறுத்தினான்.
பின் முகம் மறைக்கும் குல்லாவை எடுத்தான் ஏனோ அதைப் பார்த்ததும் எரிச்சலாக வர எடுத்த இடத்திலே வீசியவன் கடையில் ஓரிருவரே இருந்ததால் இறங்கி சென்று டீ ஆத்திக் கொண்டிருந்தவரிடம், “அண்ணா ஒரு டீ கொஞ்சம் சக்கரை அதிகமா போட்டு” என
அவனின் குரல் கேட்டுப் பார்த்தவர்கள் ஒருநொடி திகைத்தபின்பே தத்தம் சுயநினைவை அடைந்தனர். அதற்குள் அந்த ரெண்டொருவர் அருகில் வந்து, “வாவ்… ஆரவ் சூட்டிங் முடிஞ்சிருச்சா? அடுத்த படம் எப்போ? போலீஸ்ன்னு கேள்விப்பட்டோம் உண்மையா?”
“அண்ணே இப்போ கூட தியேட்டர் போயிட்டுதான் வந்தேன்.. படம் சூப்பர்”
“ஒரு செல்பி சார் ப்ளீஸ்”
ஒருங்கே இத்தனை குரல் வந்ததும் சிரித்தே சமாளித்தவனிடம் அவனுக்கான டீ வர குடித்துமுடித்து காசைக் கொடுத்து ஓட்டமெடுத்தான்.
மனம் மானசீகமாய் குல்லாவை போடாததால் திட்டித்தீர்த்தது. அதற்காக ரசிகர்களை வெறுப்பவன் என்றில்லை. சொல்லப்போனால் தன்னை அனைவரும் கொண்டாடவேண்டும், மக்களின் மனதில் குறுகிய காலத்தில் இடம்பிடிக்க வேண்டுமென்றே இந்த மூன்று வருடமாக கவனமாகவும் கடினமாகவும் பாடுபட்டான்.
சினிமா புகழ் ஒருபுறம் கணக்கில்லாமல் ரசிகர் மன்றம் உருவாக அதனை வைத்து செய்யும் நற்காரியங்கள் மறுபுறம் என தினமும் இவனைப்பற்றி ஒரு செய்தியாவது வெளிவராமல் தமிழ்நாட்டில் பொழுதுவிடியாது.அதற்கான பலன் கூடினாலும் கூடவே சுதந்திரமும் பறிபோனதைத்தான் தாங்க முடியவில்லை.
ஆனாலும் அவனால் இத்தகைய புகழ் இல்லாமல் செய்ய வேண்டிய காரியத்தை கச்சிதமாக முடிக்க இயலாதென்பதால் அதனை கடந்து வர பழகியிருந்தான்.
அங்கிருந்து கிளம்பியவனின் கார் ஒதுங்குபுறமான கடற்கரை சாலையில் செல்ல, ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கியவனின் கால்கள் மணலில் புதைய புதைய நடந்து சென்று அலைகளிடம் தஞ்சம் அடைந்தது.தனிமைஇப்போதெல்லாம் மிகப்பிடித்த ஒன்றாகிப்போனது.
அவன் அப்படித்தான். தன் தாயைத் தவிர வேறு மனிதர்களோடு நெருங்காதவன் நெருங்கவும் விடாதவன் இப்போதைய வாழ்க்கையில் மற்றவர்களை ஒதுக்க முடியாமல் போக தான் ஒதுங்கிக்கொண்டான்.
தாயிருக்கும் வரைமற்ற எல்லாரையும்போல்தனிமை என்ற ஒன்றை உணராமல் இருந்தவன்தான். அவர் இவ்வுலகை விட்டுச்சென்ற கடந்த நான்கு வருடமாக மட்டுமே தனிமை என்னும் கொடிய சிறையில் குடியிருப்பது.
தாயை நினைத்தாலே மனம் பாரமாக இருக்க, வருடக்கணக்காக காத்திருந்து அடைய நினைத்த ஒன்றிற்கான முதல் வெற்றிபடியில் நாளை காலடி எடுத்து வைக்கப்போகிறான்.
அதனை எண்ணி மனதின் பாரத்தைச் சிறிது குறைத்தவன்சற்றுத் துள்ளலுடன் தன் வீட்டிற்குச் சென்றான்.
பகலவன் எழுந்து அடுத்தநாள் காலைப்பொழுது ரம்மியமாய் விடியபத்து மணிவரை மட்டுமேபலருக்குவிடியல் சுமூகமாய்ச் சென்றிருக்கும்.
நேற்று எடுத்த முடிவின்படி திடீரென தன் உதவியாளர் மூலம் பத்திரிக்கைகள் மற்றும் மீடியாக்கள் கூட்டத்தை பத்துமணியளவில் கூட்டிய ஆரவ், வருகிற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிடப் போவதாகவும் விரைவில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்க ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வெடிவெடித்துக் கொண்டாடித் தீர்த்தனர்.
இருபத்தி ஏழே வயதான அவனின் இம்முடிவில் திரையுலகமே வியப்பில் திரும்பிப் பார்த்தது என்றால் அரசியல் உலகமோ ஆட்டம் கண்டது.