வேந்தனுக்கு வாணி தனது நிலையைக் கூறியதும் இருப்புக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்தநாள் இருக்கும் தொழில் தொடர்பான சந்திப்பிலிருந்து கிளம்ப முடியாத நிலை.
தன்னையே வெறுத்தான்.
வாணியின் வயதை அறிந்து சற்றே விலகியிருந்தாலும், அவனது மனம் சொன்னது வேறு கதை.
நேரமின்மையால் தனக்கு தொழில் முறையில் தெரிந்த காவல் அதிகாரியைத் தொடர்பு கொண்டு விசயம் கூறி, விபரம் கேட்டான்.
பிறகு, அவர் சொன்னபடியே இணையவழியில் புகார் அனுப்பியதோடு யாரை உதவிக்கு அழைக்கலாம் என யோசித்தான்.
சித்திக், மீரா இருவரைத் தேர்ந்தெடுத்து பின்னிரவில் அழைத்து சுருக்கமாக விசயத்தைக் கூறியதோடு, நகலை சித்திக்கிற்கு அனுப்பினான்.
அனைத்து ஏற்பாடுகளும் தான் செய்துவிட்டதாகவும், கண்டிப்பாக தான் புக் செய்திருக்கும் வண்டியில் அடுத்த நாள் விரைவில் கிளம்பி திண்டிவனம் வரை சென்று வரும்படியும், மற்ற விசயங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை வாட்சப்பில் அனுப்பிவிடுவதாகவும் கூறிவிட்டு, அடுத்த நாள் முக்கியமான தொழில் முறை சந்திப்பு இருப்பதால், அது முடிந்ததும் தானே தொடர்பு கொள்வதாகக் கூறி வைத்திருந்தான்.
காவல்துறை நண்பர் உதவியோடு, சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியின் அலைபேசி எண்ணை வாங்கி அப்போதே பேசியிருந்தான் வேந்தன்.
சிறு பிழை உண்டானாலும், தாமதித்தாலும், வாணிக்கு நேரும் அபாய நிலையை உணர்ந்து அனைத்தையும் ஆராய்ந்து, பணிகளைச் செய்து முடித்து நிமிர்ந்தபோது விடியலுக்காய் பூமி காத்திருக்க, பகலவன் பகட்டில்லாமல் எட்டிப்பார்க்கத் துவங்கியிருந்தான்.
இரவு பகல் பாராது உழைப்பது எல்லாம் பழக்கம்தான் வேந்தனுக்கு.
தனது ஆசை முகமேந்தி வந்தவளுக்காக இதற்குமேலும் செய்வான்.
//////////
மீராவிற்கு விசயம் காவல்துறை சம்பந்தப்பட்டது எனத் தெரிந்ததும், உடன் மாதவியையும் வருத்தி அழைத்துக் கொண்டாள்.
வாணியை சித்திக் மட்டுமே நேரில் பார்த்திருந்தான்.
மீராவிற்கு வாணியைப் பற்றி வேந்தன் கூறிய விசயங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாத நிலை.
மற்றபடி வாணிக்கான வேந்தனது திடீர் மாற்றங்களை மனதில் குறித்துக் கொண்டுதான் கிளம்பி வந்திருந்தாள் மீரா.
வேந்தன் முகூர்த்த நேரம் சரியாகத் தெரியவில்லை என்று கூறியிருக்க, அன்றைய தேதியில் இருந்த நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், அமிர்த யோக நேரம் ஆகியவற்றை கண்ணுற்று ஒன்பது மணிக்கு மேல்தான் அனைத்துமே என தீர்மானமாகக் கண்டபின்பு, அதற்குமுன் வந்து சேரும்படியாக கிளம்பி வந்திருந்தார்கள்.
ஆனாலும் எதிர்பாரா நிகழ்வாக பெண்ணது மயக்கம் காரணமாக மருத்துவனைக்கு விரைந்திருந்தனர்.
…………
மருத்துவமனையில் வாணியை பரிசோதித்த மருத்துவர், உண்ணாததாலும், மனக் குழப்பம் காரணமாக எழுந்த மயக்கம் என ஒரு மணித்தியாலம் ஓய்வெடுக்கும்படி வாணியைப் பணித்திருந்தனர்.
“வேற ஹாஸ்பிடல்குனா கூட்டிட்டுப் போயிரலாமா சார்!”, மீரா அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் கேட்க
“இல்ல! அந்தப் பொண்ணுக்கு ஸ்ட்ரெஸ்லதான் ஃபிட்ஸ் வந்திருக்கு. இன்ஜ்செக்ஸன் போட்டிருக்கு. சோ ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும். கொஞ்ச நேரத்தில அதுவே எழுந்துக்கும்!”
மீரா, மாதவி இருவரும் இன்னும் வாணியை நேரில் பார்க்கவில்லை.
இன்ப அதிர்ச்சி ஒன்று தங்களுக்கு காத்திருப்பதை அறியாமல், மீரா, மாதவி இருவரும் வேந்தனது முந்தைய தின உரையாடல் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
வாணி கண் விழிக்கும் வரை காவல்துறையினர், மீரா, சித்திக் மற்றும் மாதவி, வாணியுடன் வந்திருந்த பெண்கள் அனைவரும் வெளியே காத்திருந்தனர்.
உதவிக்கு வந்த பெண்கள் இருவரும் தனியாக அமர்ந்து வாணியைப் பற்றி, அவளது தாய் மற்றும் குடும்பம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
மீராவாகவே காவல்துறை அதிகாரிகளிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டு, முந்தைய தினம் இரவில் வேந்தன் அளித்த புகாரின் பேரில், வேந்தனது சார்பில் தாங்கள் நேரில் வந்திருப்பதாகக் கூறிட, சில விசயங்களை பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.
வாணி கண்விழித்து எழுந்ததுமே தனது கழுத்தைத்தான் சோதனை செய்தாள். கழுத்தில் மஞ்சள் கயிறு எதுவும் இல்லையென்று உறுதிசெய்து கொண்ட பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
மருத்துவர் வாணி எழுந்ததைக் கண்டு, அவளின் நிலைபற்றிக் கேட்டறிந்து கொண்டபின், வெளியில் உள்ளவர்களுக்கு தெரிவித்தார்.
மீரா மட்டும் வந்து முதன் முறையாக வாணியை சந்திக்க அறைக்குள் நுழைய, வாணி மீராவை யாரென்று தெரியாமல் விழிக்க, மீராவிற்கோ வாணியைக் கண்டதும், இவளைத்தானே அனுசியா தனக்கு அனுப்பி தேடச் சொன்னார் என பழைய எண்ணங்கள் வந்திட அதிர்ச்சி ஒரு புறம் என்றால் கையிடுக்கில் வைத்துக் கொண்டு, கண்ட வீதியிலும் வாணியைத் தேடித் திரிந்த தங்களது மதியீனத்தை எண்ணி சிரித்தபடியே வாணி அருகே வந்தாள் மீரா.
மீராவின் அதிர்ச்சியை உள்வாங்கும் திராணி, வாணிக்கு அப்போது இல்லை.
சில நொடியில் தன்னை மீட்டுக் கொண்டு பேசத் துவங்குமுன், மீராவின் பின்னே வந்த சித்திக்கைப் பார்த்ததும் முகம் இயல்பாக மாறிய வாணி, வாங்க என தலையை அசைத்து சித்திக்கை வரவேற்றவள், “மாமா அனுப்பிவிட்டாங்களா?” என்றாள்.
மீராவிற்கோ, ‘நம்மைத்தான் புதுசா பாத்தா, சித்திக்க முன்னமே தெரிஞ்சதால அவளாவே பேசறா! பரவாயில்லை பொண்ணு ரொம்ப மூடி இல்லபோல’ என இருவரையும் பார்த்திருக்க
மீரா, “நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடலைன்னு பேசிக்கிட்டாங்க! அதனால இதுல இருக்கற இட்லிய சாப்பிட்டுட்டு மேல பேசு!”, என தனது கையில் இருந்த இட்லி பொட்டலத்தைக் கொடுத்துக் கறாராகக் கூறிட
மீராவைப் பார்த்து சித்திக்கிடம் கேள்வியாக நோக்க, “இவ என் மிஸ்ஸஸ்மா, நீ முதல்ல சாப்பிடு! அவ அப்டித்தான் தெரியாதவங்கனு தயங்கவெல்லாம் மாட்டா!”, என சிரித்தபடி கூறிவிட்டு வெளியில் செல்ல உண்ணும்வரை மற்றவர்கள் காத்திருந்தனர்.
இடையில், வெளியில் சென்று மாதவியின் காதில் ஏதோ கிசுகிசுத்த மீரா, மாதவியையும் உள்ளே அழைத்து வந்து, இருவரும் கண்களாலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்திட, இருவரது அமைதியான செயலில் புரியாமல் பார்த்த வாணியிடம் மாதவியை அறிமுகம் செய்தாள் மீரா.
உண்டபடியே மாதவியை வரவேற்றவள், ரங்கன் வேறு யாரும் வந்திருக்கிறார்களா என எட்டிப் பார்த்தபடியே உண்டாள்.
மீரா விசாரிக்க மனதில் உள்ளதை அவர்களிடம் உரைத்தாள் வாணி.
“இல்ல அவங்கள்லாம் யாருமே வரலை. உங்கூடவே வந்த ரெண்டு லேடீஸ் மட்டும் வெளிய உக்காந்திருக்காங்க. கூப்பிடவா”, என்றிட
“இல்ல. வேணாம்”, என்றுவிட்டு அமைதியாக உண்டாள்.
வாணி உண்ட பிறகு சித்திக்கிடம் விசயத்தைக் கூற, “போலீஸ் உங்கள என்கொயரி பண்ண வயிட் பண்றாங்க. வரச் சொல்லலாமா? இல்லை கொஞ்சம் ரெஸ்ட்கு பின்ன வரச் சொல்லலாமா?”, எனக் கேட்க
கட்டிலைவிட்டு கீழே இறங்க முயன்ற வாணியை, “நீ இங்கேயா இரும்மா, அவங்களை உள்ளே அனுப்பறேன்”, என்றதுமே காவல்துறையினர் உள்ளே வந்திருந்தனர்.
வயது, திருமணத்தில் பிடித்தம், மற்றும் குடும்பம் இதர விசயங்களை விசாரித்தவர்கள், “இப்ப என்ன பண்றதா ஐடியால இருக்கம்மா?”, என வாணியிடம் கேட்க
எப்படி என்ன என வேந்தன், வாணி உறவு பற்றி குறுக்கு விசாரணை எதுவும் துவங்காதது அனைவருக்கும் ஆச்சர்யமே.
ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால் அங்கிருந்த மருத்துவரிடம் சொல்லிக் கொண்டு, வாணியை அழைத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்தனர்.
வாணி, துணைக்கு வந்திருந்த ரங்கன் வீட்டு அருகே வசிக்கும் பெண்மணிகள், மீரா, மாதவி, சித்திக் மற்றும் காவல்துறையினர் அனைவரும் ரங்கன் வீடு நோக்கிக் கிளம்பினர்.
ரங்கன் வீட்டினர் தவிர வீட்டில் யாரும் இல்லை. மாறனையும் அவர்களது பெண்ணையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருக்க, வீடு வெறிச்சோடி இருந்தது.
காவல்துறையினர் வந்ததால் பிரச்சனை எதற்கு என்று வாணிக்கு பார்த்த மாப்பிள்ளை கிளம்ப எத்தனிக்க, 18 வயது நிறைவடையாத இளம்பருவப் பெண்ணை திருமணம் செய்திட முன்வந்ததால், காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக முன்பே அழைத்துச் சென்றிருந்தனர்.
வாணியின் உடல்நிலையில் உண்டான பின்னடைவால் வாணியை விசாரிக்க இருவரை நியமித்திருந்தனர். ஆகையால் அவர்கள் சுகாதார நிலையத்தில் காத்திருந்தனர்.
விசாரணையை தொடர்ந்திட, வாதங்களும் தொடர்ந்தது.
ரங்கனுக்கு காவல்துறை எப்படி திருமண நேரத்தில் வந்தது எனத் தெரியாமல் இதுவரை திருமாறனைச் சாடியிருந்தார்.
சுகுணாவும் ஒன்றும் புரியாமல் கணவனையும் மகன்களையும் திட்டித் தீர்த்திருந்தார்.
காவல்துறை நேரில் வந்து விசாரிக்கத் துவங்கிய பிறகே வாணியின் மூலம் வேறு யாரோ கொடுத்த புகாரின் பேரில் வந்திருப்பது தெரிய வந்திட, மூர்க்கமாக மாறியிருந்தார் ரங்கன்.
வாணியை அடிக்க கையை ஓங்கியபடி வர, குறுக்கே வந்த காவல்துறை, “நீங்க பண்ணது சரியில்லைங்கறதை முதல்ல ஒத்துக்கங்க சார். அதவிட்டுட்டு அந்தப் பொண்ணை இப்போ எதுக்கு அடிக்கப் போறீங்க”, எனத் தடுத்திருந்தார்.
ஆனாலும் ரங்கன் ஓயாமல், “உன்னைப் பாத்து பாத்து வளத்ததுக்கு கடைசியில எம்மூஞ்சியில கரியப் பூசிட்டல்ல! பாக்கறேன்! நீ எப்டி நல்லாயிருக்கேண்ணு!”, என்று சாபம் விடுவதுபோலப் பேசிட
அங்கிருந்து வயதான பெண்மணிகள் சிலர், “நீ வளத்தே! யாரு இல்லைன்னா! அதுக்காக அந்தப் புள்ளைக்கு நீ இன்னிக்கு செய்ய இருந்த காரியத்தை உங்க வம்சமே ஏத்துக்காது! செஞ்சு வச்சிருந்தாலும் யாரும் மன்னிக்க மாட்டாங்க! நல்ல வேளை, புள்ள அதுல இருந்து தப்பிச்சிட்டா! இனியாவது அவ நல்லா இருக்கட்டும்!”, என்றிட
“எப்டி நல்லா இருப்பா? எங்களையெல்லாம் போலீஸ்ல மாட்டிவிட்டு மானம் மரியாதையெல்லாம் போகற மாதிரி பண்ணியிருக்கா! அவளுக்கு ஏத்துக்கிட்டு பேசறீங்க!”, என அவர்களிடம் சண்டைக்குச் சென்றார்.
நீண்ட நேர வாதத்திற்குப் பின், இளம்பருவ விவாகத் தடைச் சட்டத்தை மதிக்காமல் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தமைக்கு காவல் நிலையத்தில் வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டு தாங்கள் சொல்வது போல வந்து எழுதித் தருமாறு ரங்கனைப் பணித்தது காவல்துறை.
ரங்கனுக்கு, எப்படி கையில் இருந்த போனை பறித்துக் கொண்டு வந்தபின்பும் வாணி பிறருக்கு விசயத்தைத் தெரிவித்தாள் எனப் புரியாமல் மண்டை குழம்பியிருந்தார்.
வாணியை, மீரா, சித்திக்குடன் அனுப்ப மறுத்த ரங்கனிடம், “பொண்ணு அவங்ககூட போகணும்னு பிரியப்படுது. அதனால நீங்க மறுப்பு சொல்ல முடியாது”, என்று வாணிக்கு ஏற்றுக் கொண்டு பேசியது காவல்துறை.
“கல்யாணத்துக்கு மட்டும் 18 வயசாகனும்னு சொல்றீங்க. யாரு என்னனே தெரியாதவங்க கூட எப்டி அனுப்பறீங்க!” ரங்கன்
“அந்தப் பொண்ணோட விருப்பத்தின் பேருல அனுப்பறோம். அதையும் எழுதி வாங்கிக்குவோம். பொண்ணுக்கு எதாவது ஒன்னுன்னா அவங்கதான் நாளை பின்ன பதில் சொல்லணும்”
அனைத்தையும் அமைதியாக மீரா, மாதவி, சித்திக், வாணி நால்வரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதேநேரம் வாணியிடம் திரும்பிய காவல் அதிகாரி, “ஸ்டேசன்ல வந்து எழுதிக் குடுத்துட்டு நீ அவங்கூட போம்மா!”, என்றதும் வாணி தயங்க, “என்னம்மா!”
“என்னோட திங்க்ஸ் எல்லாம் இங்க வீட்லயும், தோட்டத்து வீட்லயும் இருக்கு! காலேஜ் ஐடி கார்ட் எல்லாம் அதுலதான் இருக்கு!”
அதன்பின் அனைத்தையும் எடுத்துவரச் செய்து வாணியிடம் ஒப்படைத்திருந்தனர்.
அனைத்தும் முடிந்து அங்கிருந்து கிளம்பவே மணி இரண்டிற்கு மேலாகியிருந்தது.
……………..
நால்வருமாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வரும்வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பியிருந்தனர்.
இக்கட்டிலிருந்து மீண்டதே பெண்ணுக்கு மிகவும் மனம் இதமாக உணர, உண்ட மயக்கத்தில் உறங்கியிருந்தாள்.
வாணி உறங்குவதைக் கண்டதும், மூவரும் பொதுவான விசயங்கள் பேசியபடி வந்தனர்.
இரண்டு மணி நேர பிரயாணத்திற்குப்பின், “ஒரு காஃபி குடிச்சிட்டு போலாமா!”, என மாதவி வினவ
“ஆமா!”, என மீராவும் அதற்கு ஆமோதித்தாள்.
வாணியை எழுப்ப சித்திக் கூற, “இல்ல! அசந்து தெரியறா! தூங்கட்டும்! இன்னும் ஒன் அவர்ல போயிரலாம்” மாதவி கூற
மூவருமாக வேண்டியதை வாங்கிக் கொண்டு அமர்ந்தனர்.
“வேந்தன் இன்னும் கால் பண்ணலை!”, என அவனது அழைப்பினை எதிர்பார்த்தபடி இருந்த சித்திக் கூற
“ஹாஸ்டல்ல கொண்டு போயி விடணுமா? இல்லை அவங்க வீட்லயே விட்ரலாமா?”, புலம்ப
“போலீஸ் சொன்னதைக் கேக்கலையா! வாணிக்கு எதாவது ஒன்னுன்னா கூட்டிட்டு வந்த நாம மூனுபேருதான் பதில் சொல்லணும்!”, என மாதவி ஞாபகப்படுத்த
“இந்தப் பொண்ணு பத்தி அவங்கம்மாவுக்கு விசயம் தெரியாதுனு நினைக்கிறேன்”, என மீரா கூறிட
அனுசியாவிற்கு வாணி பற்றிய விபரம் தெரிந்திருந்தால் தன்னிடம் தெரிவிக்காமல் இருக்க மாட்டார் என்கிற நம்பிக்கையில் மீரா கூறியிருந்தாள்.
“தனியா விடறது இப்போ சேஃப் இல்ல! நாம அங்க கொண்டு போயி விட்டதும் அவங்க மாமா வீடோ, இல்லை அந்த மாப்பிள்ளை வீடோ பிரச்சனை பண்ணா என்ன பண்றது?”
“ஆமா சித்திக் சொல்றதும் சரிதான். நாம வேந்தன் காலுக்கு இன்னும் வயிட் பண்ண முடியாது. சோ அவங்க அம்மாகிட்டயே ஒப்படைச்சிரலாம்”, என ஒரு முடிவுக்கு வந்தவர்கள், வாணியின் பாதுகாப்பு கருதி, நேராக வேந்தனது வீடு நோக்கி வண்டியைச் செலுத்துமாறு கூறினார்கள்.
////////////////
வண்டியில் இருந்து இறங்க முனைந்தவளை, “கொஞ்சம் வயிட் பண்ணு” என மீரா இறங்கி அனுசியாவைப் பார்க்க வீட்டிற்குள் செல்ல
“உன்னை ஹாஸ்டல்ல விடறது இப்ப சேஃப் இல்லல! அதான் கொஞ்ச நாள் இங்க இரு!”, என்றிட்ட மாதவி இன்றைய நிலை பற்றி விளக்கிட, அவளது கூற்றில் இருந்த உண்மை விளங்கிட அமைதியாக இருந்தாள் வாணி.
பத்து நிமிடமாகியும் வராத மீராவைக் காணச் சென்ற மாதவியையும் காணவில்லை.
அதன்பிறகே அனுசியா, மீரா, மாதவி மூவருமாக வெளிவர, ஆரத்தியோடு வந்த மீராவைக் கண்ட வாணிக்கு எதற்கு இதல்லாம் என்ற கேள்வி எழ, சித்திக், ‘இவ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கா’, என மனதில் ஓடியது.
அன்று காலையில் மெரூன் வண்ண பட்டு சரிகையிட்ட புடவையில் கலைந்த ஓவியம் போல, உறங்கியதால் உண்டான தெளிந்த முகத்தோடு இறங்கி அழகோவியமாக நின்றவளைக் கண்ட அனுசியாவிற்கு மகனது வாழ்வு இனி சுபிட்சமாகிவிடும் என்கிற நம்பிக்கையில் தன்னை மறந்த புன்னகையோடு, “வாவா… வாவா… மகாலெட்சுமியே வீடு தேடி வந்திருக்கு!”, என மனம் நிறைவோடு வாணியை வரவேற்றிருந்தார்.
வரவேற்பைக் கண்டு புரியாமல், நமக்கெதுக்கு ஆரத்தி என யோசித்தபடியே வாணியின் அருகே நின்றிருந்த மாதவியை நோக்க, வாணியின் குழப்ப முகம் கண்டு, “இவங்களைத் தெரியாதா?”, என்றிட
தலையை அசைத்து மறுத்தவளிடம், “இது வேந்தனோட அம்மா!”, என அறிமுகம் செய்திட
வாணியின் நெற்றியில் இதழால் ஒற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அனுசியா, மீரா ஆரத்தி எடுத்தபின் வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
சற்று நேரத்தில் அனைவரும் கிளம்பிட, அனுசியாவிற்கு, வாணியைப் பற்றித் தெரிந்து கொள்ள நிறைய இருக்க, அடுத்தடுத்து கேள்விக் கணைகளை வாணியை நோக்கித் தொடுத்தபடி இருந்தார்.
வாணிக்கு இக்கட்டான நிலை.
எதையும் மறைக்கவில்லை.
அவளறிந்த விசயங்கள் அனைத்தையும் சுருக்கமாகக் கூறி முடித்துவிட்டாள்.
வாணிக்கு தனி அறை, தனது அறைக்கு அருகிலேயே ஏற்பாடு செய்து தந்திருந்தார் அனுசியா.
வாணிக்கு வேந்தனைக் காணும்போது இத்தனை வசதியானவன் என யோசித்திருக்கவில்லை.
அவனது செல்வவளம் வீட்டின் அமைப்பு ஒவ்வொரு ஒவ்வொன்றிலும் உணர்ந்தாள்.
வெகுநேரம் அனுசியா வாணியோடு பேசிக் கொண்டிருந்தார்.
வாணிக்கும் தனது ஆச்சியின் நினைவு வந்திட, சற்றே இதமாக உணர்ந்ததால் அனுசியா கேட்ட அனைத்திற்கும் பொறுமையாகவே பதிலளித்தாள்.
இடையில், “அவங்க வயிஃப் குழந்தையெல்லாம்…”, என வாணி இழுக்க
ஏனெனில் வந்தது முதலே அத்தனை பெரிய வீட்டில் அனுசியா மட்டுமே இருந்தார். அதனால் வாணியின் மனதில் வேந்தனது குடும்பம் எங்கே உள்ளது எனக் கேட்டுவிட,
சற்று அமைதியான அனுசியா, “அவனைப் பத்தி உனக்கு எதுவுமே தெரியாதா?”
இல்லை என மறுக்க, “இன்னும் அவன் ஒண்டிக்கட்டைதான்”, என வேதனையோடு கூறியவர்
வாணி, வேந்தனுக்கு இடையேயான உறவு எத்தகையது என குழம்பிப் போனார்.
வாணிக்கு வேந்தனை எப்படித் தெரியும் என்பதையும் இறுதியாக கேட்டறிந்து கொண்டார்.
////////////
வேந்தனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
சித்திக் வேந்தனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தான்.
பெண்ணை பத்திரமாக சென்னை கூட்டி வந்தாயிற்று என.
மீராவிற்கு அடுத்தடுத்து பேச நிறைய விசயங்கள் கிடைத்திட, தோழிகளுக்கு அழைத்துவிட்டாள்.
வாணியைப் பற்றியும், வேந்தனது உதவியைக் கொண்டு, இருவருக்கும் விரைவில் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்கிற அளவிற்கு பேச்சு நீண்டிருந்தது.
/////////////
வயோதிகம் காரணமாக உறக்கமின்றி நாலரை மணிக்கு எழுந்து அனுசியா வர, அதேநேரம் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் எழுந்திருந்தாள் வாணி.
வெளியில் அரவம் கேட்டதும் அறையை விட்டு வந்தவள், அனுசியாவைக் கண்டதும், “குட் மார்னிங் பாட்டீமா!”
“குட் மார்னிங், குட் மார்னிங்”, என்றவர், “அதுக்குள்ள எழுந்துட்ட!”, தனது பேரன், பேத்திகள், மகள்கள், வேந்தன் தவிர்த்து மற்ற மகன்கள் அனைவருமே இவ்வளவு சீக்கிரம் எழுந்து பார்த்திராததால் ஆச்சர்யமாக வினவிட
“எப்போவும் சீக்கிரமா எழுந்துருவேன். நான் ஹாஸ்டல்லதான் பெரும்பாலும் வளந்தேன். சோ அந்த டைம்கு ரெகுலரா முழிப்பு வந்திரும்”, என்றிட
பெண்ணது முகத்தை தனது இரு கைகளாலும் மேலிருந்து கீழாகத் தடவி நெட்டி முறித்தார்.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, காஃபி தயாரிக்க முன்வந்த வாணியைத் தடுக்கவில்லை அனுசியா.