am14

am14

ஆசை முகம் 14

கதவைத் திறந்து விட்ட வாணி, முகத்தில் கடுகளவும் கனிவின்றி வெளியில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து அதிர்ந்து திகைக்க, வந்த பெண்மணியோ, “யாரு நீ?”, என வாணியைப் பார்த்து கடுப்பாக வினவியிருந்தார்.

அனுசியாவிற்கு பேச்சு சத்தம் லச்சுமியுடையது இல்லை எனத் தோன்றியதுமே சோபாவிலிருந்து எழுந்து வந்தார்.

வாணிக்கு புரியவில்லை.  ஒரு வேலைக்காரி வீட்டிற்கு வந்திருந்த புதிய நபரைப் பார்த்து எப்டி இப்படி வினவலாம் என்று பதிலுரைக்காமல் பார்த்திருந்தாள்.

வந்தது லச்சுமியல்லவே! 

“அம்மா இல்லையா?”

அனுசியாவைத்தான் கேட்கிறார் என எண்ணி, “உள்ள இருக்காங்க..”, தயங்கி உரைத்த வாணி, அனுசியாவை நோக்கி, “பாட்டீமா!”, என்றபடியே திரும்ப

அதற்குள் வாயிலுக்கு விரைந்திருந்தார் அனுசியா.

புரியாமல் விழித்த வாணியை வலப்புறம் தன்னை ஒட்டி இழுத்து ஆதரவாகப் பிடித்துக் கொண்டவர், வாயிலில் நின்றிருந்த பெண்ணைக் கண்டதும் சற்றே சுதாரித்தபடியே சிரித்த முகமாக, “லச்சுமி வர நேரத்துக்கெல்லாம் நீ கிளம்பி வந்திட்டுருக்கியே? என்ன விசயம் மீனா?”, என குரலில் தேனைத் தடவி வினவ

வந்தது யாரென்று இன்னும் தெரியாததால் அனுசியாவையும், வந்திருந்தவரையும் மாறி மாறிப் பார்த்திருந்தாள் வாணி.

ஆனால் உள்ளே வராமல் வாணியையே உறுத்தபடி வெளியில் நின்றிருந்தாள், மீனா. 

மீனாட்சி, அனுசியாவின் மூத்த மகள். வேந்தனது மூத்த சகோதரி.

“அட… இன்னும் ஏன் வெளியிலேயே நின்னுட்ட இருக்க? உள்ள வா?”, என்றதோடு

“இது வேந்தனோட மூத்த அக்கா, மீனாட்சி!”, என வாணிக்கு அறிமுகம் செய்திட

தன்னிடம், வந்திருந்த புதுப்பெண்ணைப் பற்றி எந்த அறிமுகமும் செய்யாமல், தன்னை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்திட்ட தாயை கொலைவெறியோடு பார்த்திருந்தாள் மீனா.

அனுசியாவைப் பொறுத்தவரை வாணிதான் வேந்தனது மனைவி என முடிவு செய்தாகிவிட்டது.  அதற்கான மாறறத்தின் முதல்படிதான் தற்போது நடப்பது.

அப்போதுதான் வாணிக்கு வந்தது வேலைக்காரி அல்ல என்பது புரிந்தது.

அனுசியாவையும் மீனாவையும் மாறி மாறிப் பார்த்தபடியே, ‘ஏன் உள்ள வராம வெளியிலேயே நிக்குறாங்க’ என்கிற யோசனையோடு புரியாமல் பார்த்திருந்தாள்.

“இது யாரு?”, வாணியைப் பார்த்து அதிகார தோரணையோடு தாயிடம் கேட்க

“அதுவா? அது வாணி! நம்ம தூரத்து உறவு!  அவங்க வீட்ல எல்லாம் திருப்பதி போயிருக்காங்க! புள்ளைக்கு படிப்பு கெட்டுப் போயிரும்னு இங்க ரெண்டு நாள் கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருக்காங்க!”, என அலுங்காது, மேற்கொண்டு மீனா எதுவும் கேட்காதபடி பொய்யை மெய்யாகவே உணரும்படி பதிலுரைத்தார் அனுசியா.

“எனக்குத் தெரியாத உறவா?”, என அதே பாணியில் வாணியை நோக்க, வாணிக்கு சங்கடமாக இருந்தது.

அனுசியாவிற்கு மீனாவின் எண்ணம் நன்கு தெரியும்.

மீனாவின் மகளான மித்ராவை எப்படியாவது வேந்தனுக்கு திருமணம் செய்துவிடும் எண்ணத்தில் மீனாட்சி இருக்க, வேந்தனும், அனுசியாவும் பிடிகொடுக்கவில்லை.

வேந்தனுக்கு பிடித்தமின்மையால், மீனாவின் எண்ணத்தை இதுவரை தூபம் போட்டு வளர்த்ததில்லை அனுசியா.

மீனா, தனது மகள் மித்ராவை வேந்தனுக்கு கொடுக்க நினைத்தாலும், மித்ராவிற்கு விருப்பமில்லை என்பதால் அதை லேசில் விட்டிருந்தார் அனுசியா.

மித்ராவிற்கு விரும்பமிருந்தால் மகனிடம் ஒருவேளை பேசியிருப்பாரா இருக்கும்.

ஆனால் மகன் விரும்பாத ஒன்றைத் திணிக்க வேண்டாம் என்கிற எண்ணமும் அனுசியாவிற்கு திண்ணமாக இருந்தது.

வேந்தனது குறுகிய கால வளர்ச்சியைப் பார்த்த பலரும், பெண் கொடுக்க நீ, நான் என முன்வர, வேந்தன் முற்றிலும் தவிர்த்திருந்தான்.

தவித்த தாயிடம், ‘ம்மா எனக்கு மனசுக்கு ஓகேனா மேரேஜ் பண்ணிப்பேன்.  கொஞ்ச நாள் போகட்டும். இப்ப வேணாமே’, என பலமுறை வந்த வாய்ப்புகளைத் தவிர்த்து, கடந்து வந்திருந்தான்.

மீனா மட்டுமல்லாது, மூத்த மகன் வெற்றிவேந்தனின் மனைவி பூரணிக்கும், தனது பிறந்த வீட்டு வழியில் வேந்தனுக்கு பெண் எடுக்க முயற்சி செய்தாள். அவளும் கொழுந்தனிடம் முதலில் பேசிப் பார்த்தாள். அவனோ, ‘எதுனா அம்மாகிட்ட பேசுங்க’, என்றிடவே, பிறகு மாமியாரிடம் முட்டி மோதி, கதைக்கு ஆகாததால் விட்டிருந்தாள்.

தனக்கு சாதகமாக மாமியார் எதுவும் சொல்லாதது வருத்தம் என்பதைவிட, தனது வீட்டார் முன் தன்னை அவமதித்து விட்டதாகவே இதுவரை எண்ணியிருப்பதோடு, மாமியாரின் மீது அதிருப்தியும் பூரணிக்கு வந்திருந்தது.

‘இந்த வயசிலயும் கிழவி வச்சதுதான் சட்டமா இருக்கு!  அதை மீறி நம்மால ஒன்னும் செய்ய முடியலை!’, என்கிற ஆதங்கம் மனதிற்குள் நிறையவே இருந்தது.

வேந்தனோடு அனுசியா இருப்பதால் அவரது கை அனைத்திலும் இன்றுவரை ஓங்கியே இருந்தது.

மகன்களும் தாயின் வார்த்தைகளுக்கு மறுப்பு கூறுவதில்லை.

பெரும்பாலும் அனுசியா மகன்களது விசயத்தில் தலையிட மாட்டார்.  அவர்வரை வந்த விசயங்களுக்கு தனக்கு நியாயமென்று தோன்றுவதைக் கூறினால் மகன்கள் தாய் சொல்வதைத் தட்டமாட்டார்கள்.

அதில் நிறைய வருத்தம், வந்த இரு மருமகள்களுக்குமே.

வேந்தனுக்கு தனது உறவினர் வழியில் பெண் எடுத்து, கிழவியை உண்டு இல்லை என ஆக்க வேண்டும் என்கிற தணியாத வேட்கை இன்றும் உண்டு பூரணிக்கு.

ஆனால் எதுவும் கைகூடாது ஏமாற்றம் வந்திருக்க, திடீரென வீட்டின் முன் வந்திறங்கிய பெண்ணை வரவேற்ற முறைமை சற்றே யோசிக்க வைத்திருந்தது பூரணியை.

அதனால் முந்தைய தினம் வேந்தனது வீட்டின் முன் நடந்த ஆரத்தி எடுக்கும் நிகழ்வு, மாமியாரின் மகிழ்ச்சி, பட்டாடை உடுத்தி வந்த வாணியின் தோற்றம் அனைத்தும் உறுத்த, விசயம் என்னவென அறிந்து கொள்ளும் ஆவல் எழுந்திருந்தது.

வேந்தனது தோழ்ர்களை, அவர்களது குடும்பங்களை பூரணிக்கு அறவே பிடிக்காது.

அதனால் அவர்களிடமும் கேட்டறிந்து கொள்ள முடியாத நிலை.

அனைத்தையும் தங்களது வீட்டு பால்கனியில் இருந்தபடியே பார்த்திருந்தாள்.

பிள்ளைகளை, “ஏய், உங்க அப்பத்தா வீட்டுக்கு யாரோ புதுசா வந்திருக்காங்க.  யாருனு போய் பாத்திட்டு வா!”, என விரட்ட, தொலைக்காட்சியில் கண்ட காட்சிகளோடு தொலைந்து போய் இருந்தவர்கள், கண்டு கொள்ளவில்லை.

இதுவரை அங்கு சென்றால், “எதுக்கு அங்க போன?”, என வினவும் தாய் இன்று வலிய வந்து சொன்னதும், கண்டுகொள்ளாமல் இருந்தனர். மீண்டும், மீண்டும் வற்புறுத்திட, “போம்மா… வேண்ணா நீ போயி பாத்துக்கோ!”, விட்டேத்தியாகக் கூறியிருந்தனர்.

பிள்ளைகள் தனது வழிக்கு வரவில்லை என்றதும், வேந்தனது வீட்டைத் தாண்டிச் சென்று கொழுந்தன் வீட்டிற்கு செல்ல அலுப்பு.

வெளியில் விளையாடிக் கொண்டிருந்த கலைவேந்தனது பிள்ளைகளை அழைத்து என்னவென பார்த்து வரச் சொன்னாள்.

அதுவும் வேலைக்கு ஆகவில்லை.

கொழுந்தனின் மனைவியிடம் கேட்கலாம் என்றால் வெளியில் ஷாப்பிங் சென்றவள் வருமுன்னே, பூரணியின் கணவன் வெற்றிவேந்தன் வீட்டிற்கு வந்திருந்தான்.

கணவன் வீட்டிற்கு வந்ததும், வேந்தனது வீட்டில் என்ன விசேசம்? ஏது? என்று விசாரிக்க

“எனக்கெல்லாம் எதுவும் தெரியாது.  பக்கத்திலதான இருந்திருக்க!  அப்பவே போயி என்னானு பாத்திருக்க வேண்டியதுதானே!”, என்றதோடு ஒரு வார்த்தை பேசவில்லை மூத்தவன்.

அதன்பின்புதான் என்ன விசயம் என அறிந்து கொள்ள வேண்டி, மூத்த நாத்தனாருக்கு விசயத்தைப் பகிர்ந்திருந்தாள்.

வாணியை மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஊடுறிவிய பார்வையை நீடிக்கச் செய்த மீனாவிற்கு தாயின் பதிலில் அத்தனை திருப்தியில்லை.

முந்தைய தினம் ஒன்பது மணியளவில் மூத்த தம்பியின் மனைவி பேசியதிலிருந்து மனமே சரியில்லை.

ஆரத்தி எடுத்து வரவேற்ற செய்தியை ஒன்றிற்கு நான்காக கூறியிருந்தாள் வெற்றிவேந்தனின் மனைவி.

ஆனாலும் வேந்தன் உள்ளூரில் இல்லை என்பதால் இவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து, விடியுமுன்னே கிளம்பி நேரில் வந்திருந்தாள் மீனா.

மன உளைச்சலோடு வீட்டிலிருக்க, நேரில் நடப்பதை என்னவென்று அறிந்து வரலாம் என கிளம்பி வந்திருந்தாள்.

அனுசியாவிற்கு மகளின் மனம் ஓரளவு புரிந்திட, “வாணி, நீ காலேஜ் போகணுமுல்ல!  போயி கிளம்பு!”

“சரி பாட்டீ”, என நகர்ந்தவளிடம்

“காலையில என்னடா சாப்பிடச் செய்ய?”, என வாணியிடம் கேட்டதும், மீனாவிற்கு தலைக்கு ஏறியிருந்தது தாயின் பரிவான வார்த்தை.

‘ரொம்ப ஓவரா இல்ல’, என மெல்லிய குரலில் தாயிக்கு கேட்கும்படி கூற, அனுசியா கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

“எதுனாலும் ஓகே பாட்டீ”, என்ற வாணி அங்கிருந்து அகன்றிருந்தாள்.

“சாப்பாடு ரெடியானதும் பாட்டீ கூப்பிடறேன்”, என அனுப்பியிருந்தார்.

/////////////////

முத்துரங்கனுக்கு, தனது ஒரே தங்கையின் மகளுக்கு தான் இழைக்க இருந்த அநீதி புரியவில்லை.

பெண் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி, காவல்நிலையத்தில் பிறரைக் கொண்டு புகார் செய்ததே பூதகரமாகத் தோன்றியது.

மனமெங்கும் ஒரே ரணம்.

வயதானவனுக்கு திருமணம் முடிக்க இருந்தது சற்றே உறுத்தினாலும், சம்பந்த வீட்டார் முன், பேசாமல் இருந்த மடத்தனம் மறந்து போயிருந்தது.

சம்பந்த வீட்டார் முன், சிறுபெண் காவல்துறையினரை அழைத்து அவமானப்படுத்தி விட்டதாகப் பொறுமித் தீர்த்திருந்தார்.

தூபம் போட சுகுணா வேறு இருக்க, வாணியின் மீது ஆங்காரமும், வெறுப்பும் மிகுந்தது.

பிறர் அறியவே வாணியைத் திட்டித் தீர்த்து தனது மனதை சாந்தமாக்க முனைந்தார்.

திருமாறன் மட்டுமே உண்மையில் வருந்தினான்.

அண்ணனுக்கு வாணியின் மீது ஆசை என்பதால் இத்தனை காலம் ஒதுங்கியிருந்திருந்தான்.

இளமாறனுக்கு வாணியின் மீது ஆசை இல்லை என்றோ, அவனால் சுகுணாவை சம்மதிக்க வைக்க இயலாத காரணத்தால் வாணியை திருமணம் செய்யவில்லை என உறுதியாகத் தெரிந்திருந்தால், நிச்சயம் வாணியை இதுபோன்றதொரு அனாதரவான நிலைக்குத் தள்ளியிருக்கமாட்டான்.

இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்தே திருமணம் என்ற எண்ணத்தில் இருந்தவன், வாணியை இளமாறன் திருமணம்  செய்து கொள்ளவில்லை என்றதும், ‘லட்டு இனி நமக்குத்தான் போ!’, என இறுமாந்திருந்தான்.

ஆனால் எதிர்பாரா நிகழ்வாக, சம்பந்த வழி வீட்டினரின் வற்புறுத்தல், அதனால் வாணியின் திடீர் திருமணம் அவனை யோசிக்கவிடாமல் செய்திருந்தது.

ஆனாலும் நண்பர்களைக் கொண்டு, வாணியின் இளம்பருவ திருமணத்தை அலைபேசியின் வாயிலாக காவல்நிலையத்திற்கு அனாமத்த அழைப்பாக தெரிவிக்குமாறு செய்திருந்தான்.

அவனறியாமலேயே பல விசயங்கள் வீட்டில் நடந்திருக்க, தலைக்கு மேல் போகும் தண்ணீரை என்ன செய்ய, நடப்பது நடக்கட்டும் என விட்டிருந்தான்.

திருமணம் நின்றதில் ஏக சந்தோசம்.

சில குழறுபடிகள் இருந்தாலும், தந்தையை சமாளித்து தாயின் சம்மத்தோடு வாணியை கரம்பிடிக்கும் எண்ணம் மீண்டிருந்தது.

அதனால் வாணி எனும் பெண் தனக்குத்தான் என்கிற நம்பிக்கையும் துளிர்த்திருந்தது திருமாறனுக்கு.

//////////////////////

அறைக்குள் சென்றவளுக்கு, கல்லூரிக்கு செல்ல வேண்டிய பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டு அனைத்து விடுதியில் இருக்க, இனி அங்கு சென்று எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே என நேரத்தைப் பார்த்தாள்.

ஆறு மணிதான் ஆகியிருக்க, இங்கிருந்து விடுதிக்குச் செல்ல வேண்டி, இந்துவிடம் பேருந்து வழித்தடம் கேட்க எண்ணி அலைபேசியை எடுத்தாள்.

எடுத்தபோதுதான், தான் இருக்குமிடம் என்னவென்பதே தெரியாமல் இருப்பது உணர்ந்து, அலைபேசியையே பார்த்தபடி, ‘பாட்டீட்ட போயி இப்பக் கேக்க முடியாது, என்ன செய்யலாம்’, என வந்திருந்த மீனாட்சியை எண்ணி யோசித்தபடி அமர்ந்திருக்க அழைப்பு வந்தது.

‘நமக்கு யார் இன்னேரத்தில் அழைப்பது’ என்று பார்க்க, வேந்தனது அழைப்பு!

சந்தோசத்தோடு இரண்டாவது ரிங்கிலேயே எடுக்க,

“ஹலோ!”

“மாமூஊஉஉஉ!”

பெண்ணது அழைப்பில் அவனுக்கும் மகிழ்ச்சி ஒட்டிக் கொள்ள, “வாணி எப்டியிருக்க!”

“நல்லாயிருக்கேன்!”

“குட்! நான் வீட்டுக்குப் போயி ஃப்ரெஷ்ஷப் பண்ணிட்டு செவன் தர்ட்டிக்கெல்லாம் உங்க ஹாஸ்டல் வந்திரேன்! ஸ்டேசன்ல கொஞ்சம் வேலை இருக்கு! கிளம்பி இரு வாணி!”, என

தான் அவர்களது வீட்டில் இருப்பதே தெரியாமல் தன்னை வேந்தன் அழைத்திருப்பது வாணிக்குப் புரிய, “மாமூ! இப்ப நான் வீட்லதான் இருக்கேன்!”

“என்னஅஅஅஅ? எங்க?”, என பதறினான் வேந்தன்.

“சென்னைல!”

“சென்னையிலதான் எங்க?”. வேறு யாருடனும் தங்க வைத்திருக்கிறார்களோ என பதறிக் கேட்டான்.

“உங்க வீட்லதான் மாமூ!”

“ஓஹ்..”,என பெருமூச்செறிந்தவன், “சரி சரி! அப்ப நேருல பாத்து பேசலாம்!”, என வைத்துவிட்டான்.

இன்னும் நான்கு நாள்களுக்கும் மேல் சென்ற இடத்தில் வேலை இருக்க, பெண்ணது நிலை, காவல்துறையில் புகாரளித்தது போன்றவற்றை கருத்தில் கொண்டு, முந்தைய தினம் முழுமைக்கும் இருந்து செய்ய வேண்டிய முக்கியமான பணிகளைச் செய்து விட்டு, கிடைத்த ஃபிளைட்டில் அதிகாலை கிளம்பி சென்னை வந்திருந்தான்.

தாமதமாக சித்திக் அனுப்பிய செய்தியைப் பார்த்ததோடு, காலையில் எழுந்ததும் பேசிக் கொள்ளலாம் என நினைத்திருந்தான்.

அன்று காலை பன்னிரெண்டு மணியளவில் காவல்நிலையத்தில் நேரில் பதிலளிக்க வேண்டியிருக்க, வாணியையும் உடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்திருந்தான்.

பெண் எங்கு தங்க வைக்கப்பட்டிருக்கிறாள் என்கிற விசயம் எதுவும் வேந்தன் கேட்டு அறிந்து கொண்டிருக்கவில்லை.

வாணியிடம் தற்போது பேசியதும் சற்றே ஆசுவாசமாக இருந்தது.

முந்தைய தினம் முழுக்க, அங்கு நிலவரம் என்னவோ? எல்லாம் நன்றாக நடக்க வேண்டுமே? என்கிற பரிதவிப்பு ஒரு புறம், வந்த இடத்தில் செய்து முடிக்க வேண்டிய பணிப்பளு மறுபுறம்.  ஆகையால் யாருடனும் பேச இயலவில்லை.

வேந்தன் அறியாதது, தாயிக்கு தனது ஆசைமுகத்தைத் தெரியும் என்பதும்.  அவளது சாயலில் உள்ள வாணியை அவர் முந்தைய தினமே வீட்டின் மகாலெட்சுமி எனக்கூறி ஆரத்தி எடுத்து வரவேற்றதும்.

எதையும் அறியாதவன், வாணி தனது வீட்டில் இருக்கிறாள் என்கிற மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

மேலும் வேந்தனது மூத்த அக்கா, தற்போது தங்களது வீட்டில் இருப்பதும் அவனறியாதது.

//////////////

வந்தவனைப் பார்த்து அனுசியாவிற்கே ஆச்சர்யம்.

ஒருவாரம் என்றுவிட்டுச் செல்பவன் குறைந்தது பதினைந்து நாள்களுக்குப் பிறகே இதுவரை வீட்டிற்கு வந்திருக்கிறான் என்கிற நிலையில் சென்ற நான்கைந்து நாட்களில் வீடு திரும்பியது.

அதைக் காட்டிலும், என்றுமே இல்லாத அதிசயமாக புத்துணர்வோடும், ஆரவார மகிழ்ச்சியோடும் வந்த வேந்தனது வருகை.

மீனா அனைத்தையுமே ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்திருந்தார்.

அந்நேரத்தில் மீனாவை அங்கு எதிர்பார்த்திராதவன், “க்கா..! என்ன இந்நேரத்தில இங்க இருக்க! மச்சான், புள்ளைங்க எல்லாம் எங்க?”

“ம்ஹ்ம்.. அவங்கல்லாம் இன்னும் எந்திருச்சிருக்க மாட்டாங்க!”

சற்று நேரம் அக்காவிடம் பேசிவிட்டு, மாடிக்குச் சென்றவனை இருவருமே யோசனையோடு பார்த்திருந்தனர்.

வாணியைச் சந்திக்காமல் சென்ற வேந்தனது செய்கைதான் அதற்குக் காரணம்.

அரைமணி நேரத்தில் கீழிறங்கி வந்தவன், “ம்மா சாப்பிட எதாவது இருக்கா?”

அப்போதுதான் வந்த மகனைக் கவனிக்காமல், ஆராய்ச்சியோடு நின்றிருந்தது உரைக்க, “உக்காரு, சாப்பாடு வைக்கச் சொல்றேன்!”, என அடுக்களையில் நின்ற லச்சுமியிடம் சென்றார்.

பூட்டிய அறைக்குள் இருந்த வாணிக்கு எதுவும் தெரியவில்லை.

தட்டில் வைத்தபடியே நின்ற தாயிடம் மெல்லிய குரலில், “வாணி எங்கமா? சாப்பிட்டுருச்சா?”, என

மகனுக்குப் பதில் கூறாமல், அறையைத் தட்டி, எட்டிப் பார்த்த வாணியிடம், “சாப்பிட வாடா”, என்றார்.

அனுசியா, மீனா அனைவரும் இருக்க, வாணி அமைதியாக வெளியே வந்து டைனிங்கில் அமர்ந்தவள், வேந்தனைப் பார்த்து இதமாகப் புன்னகைத்துவிட்டு, உண்ணத் துவங்கினாள்.

மூன்று இட்லியோடு எழ, “வயசுப் புள்ளை இப்டிச் சாப்டா சத்து எப்டி வரும்”, என அனுசியா சத்தமிட

“ப்ளீஸ் பாட்டீமா, போதும்! இதுக்குமேல வயித்துல இடமில்லை!”, என தனது தாயிடம் கெஞ்சியவளை ரசனையோடு பார்த்தும் பாராமல் தட்டில் கவனம் செலுத்துவதுபோல இருந்தான் வேந்தன்.

அனுசியாவிற்கு வாணியைக் கண்டதும், பளிச்சென மாறிய மகனது முகம் கண்டு திருப்தியைத் தந்திருந்தது.

ஒரு சதவீத யோசனையும், ஒரு முடிவுக்கு வந்திருந்தது.

வாணியை அழைத்துக் கொண்டு கிளம்புவதை வேந்தன் தாயிடம் உரைத்துவிட்டு, மீனாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, “தம்பீ! எம்பொண்ணுக்கும் வயசாகிட்டே போகுது!  கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்னு சொன்னா, உங்க மச்சான் மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாக்க ஆரம்பிச்சிருவாரு!”, என

அந்த இடமே நிசப்தமாயிருந்தது.

அதுவரை வேந்தன், அனுசியாவின் மனதில் இருந்த இதம் குலைந்தாற் போலிருந்தது.

வாணி வேந்தனைப் பார்த்தபடி நிற்க, வேந்தன் அனுசியாவைப் பார்த்து மூச்சை இழுத்து விட்டவன், மீனாவிடம் பார்வையை செலுத்தி சற்று பொறு என கையால் செய்கை செய்தவன், ஒரு முடிவோடு வாணியை நோக்கித் திரும்பினான்.

“நீ வண்டில போயி வயிட் பண்ணு வாணி!  நா வந்திரேன்!”, என்ற வேந்தன், தமக்கை மீனாவிடம் என்ன கூறினான்…

……………….

வாழ்க்கை!!!

எதிர்பார்ப்பு என்ன?

எதிர்காலம் என்ன?

கிடைப்பது என்ன?

கிட்டாதது என்ன?

பொறுப்புகள் என்ன?

பொறுமைகள் என்ன?

திணிப்புகள் என்ன?

தித்திப்புகள் என்ன?

கசப்புகள் என்ன?

கவலைகள் என்ன?

ஆனந்தம் என்ன?

அழுகை என்ன?

அறியாதது என்ன?

அறிந்தது என்ன?

வைத்திருப்பது என்ன?

வாழாமல் தெரியாது!

வாழ்ந்தால் தெரியும்!

வீழ்ந்தாலும், வாழ்ந்து பார்!

வாழ்க்கையை!

///////////

 

Leave a Reply

error: Content is protected !!