am15

ஆசை முகம் 15

விழுப்புரத்தை நோக்கி வண்டி விரைந்து கொண்டிருந்தது.

மீனாவின் இடையூறால் கிளம்புவதற்கு தாமதமாகியிருக்க, வேந்தன் வண்டியை வேகமாக இயக்கிக் கொண்டிருந்தான்.

வாணியுடனான பழக்கம், பேச்சு என ஆரம்பித்ததிலிருந்தே பெரும்பாலும் ஓட்டுநரைத் தவிர்த்து தானே காரெடுக்கப் பழகியிருந்தான் வேந்தன்.

முகம் இயல்பாக இல்லை.

இதுபோல இறுக்கமாக இதுவரை வேந்தனைப் பார்த்ததில்லை வாணி.

அதிகம் சந்தித்திராததால் வேந்தனை நன்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்பது வாணியின் கருத்து.

வேந்தனைப் பார்ப்பதும், யோசிப்பதும், சற்று நேரம் சாலையைப் பார்த்தபடியே வருவதுமாக இருந்தாள்.

வேந்தனுக்கு மீனாவிடம் பேசியதைவிட, தாய் முந்தைய தினம் செய்த செயலைப் பற்றி அறிந்தபின், எரிச்சலாக உணர்ந்தான்.

‘எதுக்கு தேவையில்லாம எதாவது பண்ணிக்கிட்டு!’, என்பதாக இருந்தது வேந்தனது எண்ணம்.

வாணி அதனால் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற விழிப்புணர்வுதான் அதற்கான காரணம்.

வாணிக்கு இதுவரை உதவுவது, தன் மனங்கவர்ந்தவளின் சாயலில் இருக்கும் பெண் என்கிற ஒரே காரணம்தானே தவிர.  வேறு இல்லை.

அவளைப் பற்றி அறிந்து கொள்ளும்முன் திருமணம் பற்றிய கனவில் வலம் வந்ததென்னவோ உண்மைதான்.  எப்போது பெண்ணது வயதை அறிந்து கொண்டானோ அப்போதே மனதிற்கு கடிவாளம் இட்டிருந்தான்.

காண்பது, பேசுவது, உதவுவது எல்லாம், அவனது ஆத்ம திருப்திக்காகவும், பெண்ணோடு உண்டான உறவை விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.

அந்த உறவிலும் தெளிவான வரைமுறை வைத்திருந்தான். அதை மாற்றிக் கொள்ளும் எண்ணம் நிச்சயமாக வேந்தனிடம் இல்லை.

அதேநேரம் கிளம்பும்முன் மீனாவிடம் வேந்தன் பேசியதை நினைத்துப் பார்த்தபடியே வந்தாள் வாணி.

“க்கா நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ! என்னை நம்பி உம்பொண்ணை வச்சிருக்காத!  உனக்கு எப்டி மருமகன் வேணுனு சொல்லு!  நானே கூட பாக்கறேன். என்னை விட்டுரு!”, வேந்தன்.

மீனா, “உனக்குத்தான் குடுக்கணும்னு உங்க மச்சானும் பிரியப்படறார்.  நீ என்னடான்னா எந்தங்கத்தை வேணாம்னு ஒதுக்கி விட்டுட்டு, வேற வழியப் பாக்கற மாதிரியில்ல தெரியுது!” இக்கு வைத்துப் பேசினார்.

இது அனைத்தும் பொய் என்பது அனுசியாவும் அறிவார், வேந்தனும் அறிந்ததுதான்.

வாணிக்கு இதைப்பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

மீனாவின் பேச்சும் மனதை விட்டு நீங்காமல் நின்றது.

மீனாவிற்கு எப்படியாவது, மகளை இங்கு வாழவைத்துவிட வேண்டும் என்கிற வெறி.  அவ்வாறெல்லாம் பேசச் செய்தது.

“என்னக்கா, வாயிக்கு வந்ததைப் பேசிக்கிட்டிருக்க!  எனக்கு கல்யாணமே வேணானு தானே சொல்றேன்!”

“அப்ப எதுக்குடா நேத்து அந்தப் பொண்ணுக்கு ஆரத்தியெல்லாம் எடுத்து வீட்டுக்குள்ள அழைச்சாங்களாம்.  இல்லை தெரியாமத்தான் கேக்கறேன்.  ஒரு நாள் ஒரு பொழுது எம்மகளை எங்காவது தனியா கூட்டிட்டுப் போயிருப்பியா? இல்லை எதாவது ஆசையாத்தான் வாங்கித் தந்திருப்பியா? கட்டிக்கப் போறவன்னு கூட வேணாம்.  ஒரு மருமகன்னு கூட எதுவும் செஞ்சதில்லை. ஆனா இப்பப்பாரு!”, என வெளியில் சென்றிருந்த வாணியைக் காட்டிக் கூறிட வேந்தன் பதற்றமடைந்திருந்தான்.

வாணிக்கும் முந்தைய நாள் தோன்றியதுதான்.

வாணியை, ஊரிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து விடுதியில் விடத்தான் நண்பனிடம் கூறியிருந்தான் வேந்தன்.

ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகளின் எதிரொலியாக, வாணி தனது வீட்டிற்கு வந்தது அவனறியாதது.  மேலும் அவளை தன் வீட்டில் விட்டது தற்போது பிரச்சனையில்லை.  வந்ததும் அவளுக்கு ஆரத்தி எடுத்த விசயம்தான் அனைத்து பிரச்சனைக்கும் மூலமாகியிருந்தது.

விசயம் அறிந்த வேந்தனே பதறியதோடு, அதிர்ச்சி ஆகியிருந்தான்.

காவல் நிலையத்தில் அளித்த இணையவழிப் புகாரின் பெயரில் வாணியும் நேரில் பதிலளிக்க வேண்டிய நிலையில் தவிர்க்க இயலாமல் இன்று அழைத்துச் செல்லவிருக்கிறான்.

இதைப் பற்றி இங்கு விவரிக்கவும் முடியாது.  விசயத்தைக் கூறாததால் எழும் அத்தனை பேச்சுகளையும் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற நிலை.

விசயம் அறிந்தால், யார்? என்ன? எதற்குச் செய்கிறாய்? என்ன உறவு? என கேள்விகள் நீளுமே அன்றி, அதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், தனக்கும் அவப்பெயர் மட்டுமே எஞ்சும் என்பதையும் அறிந்திருந்ததால் வாயைத் திறக்க இயலாமல் நின்றிருந்தான்.

அனுசியாவை நோக்கி, ‘இதெல்லாம் என்னம்மா?’, என்பதுபோல பாவமாகப் பார்க்க

‘நான் செஞ்சதுல இப்ப என்ன தப்புங்கற!’, என்கிற ரீதியில் வேந்தனைப் பார்த்திருந்தார் அனுசியா.

அதற்குமேல் அதைப்பற்றி பேச விரும்பாதவன், நேரம் கடப்பதை அறிந்து கிளம்ப உத்தேசித்தான்.

அக்காவின் முன்பு எதாவது பேசப் போக, பிரச்சனை நீளுமே அன்றி முடிவுக்கு வராது என்பதைக் கணித்தவன், தனியே பின்பு தாயிடம் பேசிக் கொள்ளலாம் என நினைத்து, பேச்சை வளர்க்காது கிளம்பி வந்திருந்தான்.

மீனாவினது வார்த்தைகள் வேந்தனை கோபப்படுத்தியிருக்க, “இதெதுவும் எனக்குத் தெரியாது.  எதுனாலும் நீ அம்மாகிட்டயே பேசிக்கோ!”, என வாணியை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

கலைவேந்தன் மகளோடு வெளியில் பேசிக் கொண்டிருந்த வாணி, வண்டியின் அருகே நின்றபடிதான் பேசிக் கொண்டிருந்தாள்.

உள்ளே பேசியதனைத்தும் கேட்டுக் கொண்டேதான், சிறுமியோடு பேசிக் கொண்டிருந்தாள்.

ஃபைன் ஆர்ட்ஸ் வகுப்பில் சந்தித்த பழக்கத்திற்கு மிஸ் என ஆசையோடு ஓடிவந்த சிறுமியோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும், மனம் அதில் ஒட்டவில்லை.

‘தான் இங்கு வந்ததால் ஏதேனும் வேந்தனுக்குப் பிரச்சனையோ’, என மனம் தவிக்க, உள்ளே பேசியதில்தான் கவனம் இருந்தது வாணிக்கு.

பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் சிறுமியும் வாணியிடம் விடைபெற்றிருந்தாள்.

வேந்தன் கிளம்பி வாயிலுக்கு வர, அவனது பின்னயே வந்து, “புள்ளையப் பாத்து கூட்டிட்டுப் போயிட்டு வா வேந்தா.”, என்ற சொல்லில் வேந்தன் மட்டுமல்லாது, மீனாவுமே எரிச்சலைந்தனர்.

வேந்தனுக்கு ‘இந்த அம்மா எரியறதுல எண்ணெய் ஊத்த வரலைன்னு இப்பா யாரு கேட்டா’ என்பதாகவும், மீனாவிற்கோ, ‘தன்னைவிட புதிதாக வந்தவள் தாயிக்கு எந்த விதத்தில் உசத்தி’, என்பதாகவும் உண்டான எரிச்சல் அது.

உடனே உள்ளே நின்றிருந்த மகளிடம் திரும்பிய அனுசியாவோ வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு எனப் பேச்சைத் துவங்கியிருந்தார்.

“உம்மகளுக்கு வேந்தனை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை.  அவனும் பிடிகொடுக்காம இருக்கான். அப்டியிருக்க, நீ எதுக்கு இன்னும் இவனை நம்பி பொண்ணை வீட்ல வச்சிக்கிட்டு இருக்கேன்னே சொல்ற!  உனக்கு எப்டிப்பட்ட மாப்பிள்ளை மருமகனா வரணும்னு நினைக்கிறியோ பாத்து மேற்கொண்டு ஆகவேண்டியதைச் செய்ய வேண்டியதுதான!  அதவிட்டுட்டு, இவளுக்கு ஏன் ஆரத்தி எடுத்த, அவளுக்கு ஏன் எடுக்கலைன்னு காலங்காத்தால வந்து உக்காந்துகிட்டு குதர்க்கமா என்ன கேள்வி இது? இந்த வீட்ல நடக்கிற ஒவ்வொன்னுக்கும் நான் எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாமா? இல்லை இப்டித்தான் உன் வீட்டு விசயத்துல யாரும் வந்து தலையிடறாங்களா? அப்டித் தலையிட்டா நீ சும்மா விட்ருவியா?”, என மகளிடம் பொருமிவிட்டார்.

மீனாவிற்கோ, “அவன் பண்ணக்கிறேன்னு சொன்னாலும் உங்களுக்குத்தான் எடுக்கப் பிடிக்காத மாதிரி இருக்கும்மா.  ஆனா இப்டி நீங்க மாறுவீங்கனு எனக்குத் தெரியாமப் போச்சே”, எனப் புலம்பிட,

அனைத்தும் வெளியே சென்ற வேந்தனுக்கும் கேட்டது. வாணிக்கு அனைத்தும் தெரிய வந்ததில் சற்றே மனம் சுணங்கிட, அங்கிருந்து விரைவாகவே வண்டியைக் கிளம்பியிருந்தான் வேந்தன்.

/////////////

காலை நேர போக்குவரத்து நெரிசலைக் கடந்து, விழுப்புரம் வர சரியாக பன்னிரெண்டு மணியாகியிருந்தது.

வாணிக்கு வேந்தன் பேசாமல் வந்ததால், அனுசியாவோடு மீனாவின் தர்க்கம், வேந்தனோடு மீனாவின் எதிர்பார்ப்பு என கேட்டிருந்த வார்த்தைகளைப் பற்றி யோசித்ததோடு, திருமண ஏற்பாடு நடந்த முன்தின இரவு வந்தது கனவா? நனவா? போராட்டமும் சேர்ந்திருந்தது.

“என்னால உங்களுக்கு மட்டுமில்லாம எல்லாத்துக்கும் சிரமம் கொடுத்திட்டேன்.  சாரி மாமூ”, என வாணி உரைத்திட

“இதுல என்ன சிரமம்?  என்னிக்காது ஒரு நாள் இதுபோல எதாவது பிரச்சனை வரத்தான் செய்யும்.  தனியா சமாளிக்க முடிஞ்சா சமாளிப்போம்.  இல்லைனா யாரையாவது ஹெல்புக்கு கூப்பிடத்தானே செய்வோம்.  அதனால தேவையில்லாம இதைப் போட்டுக் குழப்பாத!”, என சட்டென பதிலளித்திருந்தான்.

அவனது மனதின் நிலை வார்த்தையில் உணர்ந்தாள். இதுவரை வேந்தனது தொனியை இதுபோலக் கேட்டதில்லை.

அதனால் அமைதியாகி இருந்தாள்.

அனைத்தையும் விட, முதல் சந்திப்பிலேயே வேந்தன் தனக்கு பரிச்சயமாகத் தோன்றியது, அதன்பின் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி தனக்கு இவ்வளவு தூரம் உதவ முடியும் என நினைவுகள் ஒவ்வொன்றாக மீண்டு, நீண்டிருந்தது.

பேருந்து வழித்தடம் தெரியாமல் தவறியதாக எண்ணித் தேடி வந்தது மனதில் வந்த போனது.

அதன் பிறகும் அவ்வப்போது தன் மீது அக்கறை கொண்டிருந்த வேந்தனது பாங்கு, அனைத்தையும் யோசித்தபோது நினைவுகள் பெண்ணையும் அசைத்திருந்தது.

இதைப்பற்றியெல்லாம் இதுவரை யோசித்திராதவள் இன்று முதன் முறையாக யோசித்திருந்தாள்.

வேந்தன் தனியன் என்பது வேறு பூதகரமாக நினைவில் நின்றது.

திருமணம் உறுதிசெய்ததைக் கூறி அழுததும், உடனே அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தன்னைக் காத்தது எல்லாம் சாதாரண விசயமா?

ஒரு வாரம் திட்டமிட்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தவன், தனக்காக தனது பணியைக் கிடப்பில் போட்டுவிட்டு இன்று வந்தது பெண்ணை மேலும் சிந்திக்கத் தூண்டியது.

அதைவிட, பேச்சினூடே மீனாவிடம், ‘என்ன விட்டுரு’, ‘எனக்கு கல்யாணமே வேண்டானுதானே சொல்றேன்’ என்ற வேந்தனது வார்த்தைகளே வந்து மனதை ஏதோ செய்தது.

‘ஏனாம்? சாமியாராப் போறாராமா?’, என்றெல்லாம் யோசனைகள் ஓடியது.

தன்னிடம் வரம்பு மீறியோ, வேறு நோக்கத்தில் பழகுவது போலவோ, இல்லாமல் சாதாரணமாக உள்ளதே வேந்தனது செயல் என்பதையும் வாணி யோசிக்காமல் இல்லை.

தனக்கு உதவுவதற்கான காரணம் ஏதோ உள்ளது என்பதும் நிச்சயம் என மனம் சொன்னது.

அது என்ன என்பது வேந்தன் மட்டுமே அறிவான் என்பதும் வாணி யூகித்தாள்.

‘ஒரு வேளை இது சாமியார் ரகம்தானோ?’, எனவும் தோன்ற காரை ஓட்டியவனைத் திரும்பிப் பார்த்தாள்.

வெளித் தோற்றம் பார்க்க அப்டியில்லை. ஃபுல் கம்ஸ் ரிங்கிள் ஃபீரி  செக்டு சர்ட்டில், திருத்தமான மாநிற செதுக்கிய முகமும், சீரான நாசியும், அழுத்தமான புகை பிடித்திறாத உதடுகளும், அதற்கு மேல் அடர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்ட மீசையும்,  அழுந்த படிய அடர்ந்திருந்த அடங்காத முடியை அடக்கி வாரியிருந்த முறையும் முதன்முறையாக கவனித்துப் பார்த்தாள்.

நவீன யுக ஆண்களைப்போல இல்லாமல், பகட்டில்லாத எளிமையான ஆனால் வசீகரிக்கும் ஆளுமையான தோற்றம்!

இந்து ஒரு முறை தன்னிடம் கூறியதும் மனதில் வந்து போனது.

‘இப்டி ஹீரோ மாதிரி மாமா யாருக்குடீ கிடைக்கும்.  சினி இண்டஸ்ட்ரீஸ்ல உள்ள டைரக்டர்ஸ் யாரு கண்ணுலயும் இன்னுமா படாம இருக்கார்.  குடுத்து வச்சவ-டீ. ராசிக்காரிதான் நீ! யங்கா, அடிதூள்ங்கற மாதிரி சப்ஸ்டியூட்டே இல்லாத ஹாண்ட்சம் பர்சனாலிட்டி!’, இன்னும் விட்டால் சொல்லிக் கொண்டே போயிருப்பாள் இந்து.

வாணிதான், “எனக்கொன்னும் அப்டிலாம் தெரியலையே”, எனக்கூறி அவளை அப்படியே ஆஃப் மோடுக்கு கொண்டு போயிருந்தாள்.

வசீகரித்ததோ!  

தீவிர சிந்தனையோடு இருந்தவனைப் பார்த்தபோது வாணிக்குத் தெவிட்டவில்லை.

இதுபோன்று கண்ணோட்டத்தில் இதுவரை யாரையும் பார்த்திராத வாணியின் மனம் நாணம் கொண்டதென்னவோ உண்மை!

மனம் முழுக்க வேந்தனைப் பற்றிய சிந்தனை மட்டுமே!

வண்டியை விட்டு இறங்குமுன், “கொஞ்ச நேரம் வண்டியிலேயே இரு வாணி.  நான் உள்ளே போயி பாத்திட்டு வந்து கூப்பிடறேன்”, என உள்ளே சென்றிருந்தான்.

இந்தக் கரிசனை எல்லாருக்கும், எல்லோரிடமும் வருமா?

சிந்தனை செய்த மனம் அறிந்தது ஒன்றுதான்.

முடிவெடுத்து விட்டாள்.

கிடப்பில் போட்டு, கரிசனை, அனுதாபம் காரணமாக கண்டு கொள்ளும் ரகமல்ல வாணி.

நேர்த்தியும், கீர்த்தியும் அவளறியாமலேயே கிட்டியதுபோல, எண்ணமும், எதிர்பார்ப்பும் அப்படியே இருந்ததுதான் அவளின் சிறப்பு.

விழுப்புரம் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியை சந்திக்க வந்திருப்பதே, அப்போதுதான் சூழலைப் பார்த்து யூகித்திருந்தாள் வாணி.

தனது ஊருக்கோ என்ற தயக்கம் இருந்தாலும், வேந்தன் இருக்கும் தைரியத்தில் எதுவும் கேட்காமல் கிளம்பி வந்திருந்தாள்.

தற்போது அங்கு செல்லாததே நிம்மதி.

ஆனால் அன்றும் தனது கிராமத்திலிருந்து அழைத்துச் சென்றிருந்த அதற்குட்பட்ட காவல்நிலையத்தில் அனைத்தையும் பேசி, எழுதி என சில முறைமைகளைச் செய்திருந்தபோதும், இன்று இங்கு எதற்கு அழைத்து வந்திருக்கிறான் என ஒன்றும் புரியவில்லை.

அமைதியாகக் காத்திருந்தாள்.

///////////////

ஐம்பது வயது மதிக்கத் தக்க அதிகாரியிடம் தன்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தான் வேந்தன்.

“எழில்வாணி. இவங்களுக்காகத்தான் உங்களை அந்த மிட் நைட்ல தொந்திரவு பண்ணிட்டேன் சார்”, என பேசிட

இருவரையும் எதிரில் புன்னகையோடு அமரச் செய்தவர், பொதுவான விசயங்களை பேசும்போது, “மேரேஜ் அரேன்ஞ் பண்ண அதே டேயில அந்த சரௌண்டிங்க்ல உள்ள காயின் டெலஃபோன் பூத்ல இருந்தும் மெசேஜ் வந்திருக்கு.  அது யாரு பண்ணாங்கனு இதுவரைத் தெரியலை, ஊருக்குள்ள உனக்கு யாரும் ரொம்ப க்ளோஸ் யாரும் இருக்காங்களா?”, என்றிட

வாணிக்கு அப்டி யாரிடமும் பழக்கமில்லை என்றிருந்தாள்.

‘அந்த ஊருல யாரோ நம்ம வாணியோட நலன் விரும்பிபோல’, என இலகுவாக எடுத்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தவர், வேந்தனிடம், “வெளியே கொஞ்சம் வயிட் பண்ணுங்க வேந்தன்.  வாணிகிட்ட பர்சனலா சின்ன என்கொயரி”, என்றிட

வாணிக்கு என்ன கேட்பார்களோ? என பதற்றம் வந்திருந்தது. வெளியே செல்லும் வேந்தனையே பார்த்தபடி பரிதாபமான முகம் வைத்து இருந்தாள்.

வாணியைப் பற்றி முழுமையாக விசாரித்து அறிந்து கொண்டார். கனிவாகப் பேசியதால் எதையும் மறையாது பகிர்ந்து கொண்டாள் வாணி.

“வேந்தன் உனக்கு க்ளோஸ் ரிலேசன் இல்லை.  அப்டி இருக்கும்போது அவங்களோட உதவில இருக்கறதை நீ பாதுகாப்பா உணரலைன்னாலோ, வேறு எதாவது இன்கண்வீனியன்ட், இல்ல இஸ்யூஸ்னா கண்டிப்பா எங்களோட உதவியை நாடலாம்மா!”, என்றதுமே

“அதுக்கு அவசியம் வராது சார்!”, என்றவள்

“நான் ஹாஸ்டல்லதான் இருக்கப் போறேன்.  என்னோட ஸ்டடீஸ், எக்ஸ்பென்சஸ் எல்லாமே நானே பாத்துப்பேன்.  அதுக்காக யாரையும் பேஸ் பண்ணியிருக்க வேண்டிய நிலை எனக்கு இல்லை.  இப்ப வந்த மாதிரி எதாவது அன்எக்ஸ்பெக்டடா வெளி நபர்னால பிரச்சனை வந்தா, அவரைத்தான் நான் முதல்ல தொந்திரவு பண்ற மாதிரி இருக்கும். அதுனால என்னாலதான் அவருக்குத் தொந்திரவே தவிர, அவரால எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது சார்!”, என புன்னகை முகத்தோடு திடமாக உரைத்திட

“குட்.  வேந்தனை நல்லாவே ஸ்டடீ பண்ணிருக்க போல!”

“தேங்க் யூ சார்!”

“ஃபியூச்சர் பிளான் என்னம்மா வச்சிருக்க!”

“யுஜி முடிச்சிட்டு, ஃபைன் ஆர்ட்ஸ், அன் ட்யூசன் சென்டர் மாதிரி ரெகுலர் பண்ணிட்டு, பார்ட் டைம்ல பிஜி பண்ணனும் சார்!”

பெண்ணது குறிக்கோள்களைக் கேட்டதும், இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண் பிள்ளையா என்று மனம் சந்தோசித்திருக்க, அதை அவரது முகம் காட்டியது.

விடுதி முகவரி, மற்றும் இதர விசயங்களையும் கேட்டறிந்து கொண்டவர், வாணியிடம், “தனது சொந்த விருப்பத்தின் பெயரில் மட்டுமே வேந்தனது உதவியை தான் நாடியிருப்பதாகவும், அவர்களால் தனக்கு எந்த பாதகமும் இல்லை”, என்றும் எழுதிக் கொடுத்திருந்தாள்.

அதிகாரி பெண்ணை வாழ்த்திவிட்டு, “நீ கொஞ்சம் வெளியில வயிட் பண்ணிட்டு, வேந்தனை உள்ளே அனுப்புமா”, என்றதும்

“சார் ஒரு ரெக்வெஸ்ட்”, என்றிட

யோசனையோடு என்னவெனக் கேட்டவரிடம், “என் ஃபியூச்சர் நல்லாயிருக்க விஷ் பண்ணதோட, வேந்தன், வாணி இன்னிக்கு மாதிரி இணைபிரியாம கடைசிவரை வாழணும்னு வாழ்த்துங்க சார்!”, என்றதும் அதிகாரியே வாயடைத்துப் போயிருந்தார்.

“எனக்குப் புரியலையேம்மா!”

“வருங்காலத்தில எல்லாமே எனக்கு அவர், அவருக்கு நான்னு வாழற மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை நாங்க வாழணும்னு, வாழ்த்தச் சொன்னேன் சார்”, என்றிட

சிரித்தபடியே “ஷ்யூர்மா!”, என்றதோடு வாணி கூறியதுபோல வாழ்த்திடவே, மகிழ்ச்சியோடு முகம் கொள்ளாப் புன்னகையோடு வெளிவந்தவள், வேந்தனை உள்ளே அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.

உள்ளே சென்றவனிடம் பொதுவான விசயங்கள் பேசிவிட்டு, “வேந்தன் உங்க பெர்சனல்னால இதுவரை எங்கிட்ட நீங்க ஷேர் பண்ணிக்காததை வாணி எங்கிட்ட ஷேர் பண்ணிட்டா! கங்கிராட்ஸ்”, என்றதுமே புரியாமல் பார்த்தான் வேந்தன்

விசயம் அறிந்த வேந்தன் என்ன செய்தான்?

///////////////

யாருக்கு யார்?

பிறந்தபோதே

நிர்ணயிக்கப்பட்டது!

 

நிச்சயித்திடவே

நாளும் கிழமையும்

நேரமும்!

 

நிர்ணயம் செய்தவன்

நிறுத்துவான்

கண்முன்னே

உற்ற துணையை!

 

நிமிடத்தில்

நடத்துவான்!

நடவாது என

நினைப்பதையும்!

………………………………….