am17

am17

ஆசை முகம் 17

வாணியைப் பற்றிய தேடல்களும், வேணியது நினைவின் தேங்கல்களும் மனதோடு இருக்க, வேந்தன் தன்னை முழுமையாக பணிகளில் ஈடுபடுத்தி, அதன் தாக்கத்திலிருந்து மீள முயன்றான்.

பெண்ணது பாராமுகம், தவிர்த்திடும் முறைமைகள் தவிப்பை உண்டாக்கிட, அவ்வப்போது நோக்கமின்றி, வெளிநாட்டுப் பயணங்களைத் தொடர்ந்தான்.

தூரம் போகப்போக, நினைவுகள் துரத்தியதே அன்றி, இனிமை சேர்க்கவில்லை.

பெண்ணது முதிர்வான பேச்சினை பலமுறை அசைபோட்டவனுக்கு, தற்போது கேட்பதற்கு சரியென்று தோன்றினாலும், தயக்கமும், எதிர்காலத்தை எண்ணிய தடுமாற்றமும், துணிந்து முடிவெடுக்க விடாமல் வேந்தனைத் தடுத்தது.

‘நாந்தான் சின்னவ!  யோசிக்காம முடிவெடுத்துட்டேன்.  நீங்க பெரியவங்கதான!  உங்களுக்கு எங்க போச்சு புத்தினு!’, பின்னாளில் வாணியிடமிருந்து ஏதேனும் பேச்சு வந்துவிட்டால், அதை நிச்சயமாக வேந்தனால் இயல்பாகக் கடக்க இயலாது.

அக்கா வீட்டில், சகோதரர்கள் வீட்டில், நண்பர்களின் பேச்சில், ஊழியர்களின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையெல்லாம் கடந்துதானே வந்திருக்கிறான்.   அந்த அனுபவம் அவ்வாறு யோசிக்கத் தூண்டியது.

அதனால் அவளது பேச்சை ஓடும் நீரில் விட்டதுபோல, அதைப்பற்றி யோசிக்கவே மறந்து இருந்தான்.

…………………………………..

தேர்வு முடிந்து சில நாள்கள் பருவ விடுமுறை இருந்தது. வேந்தன் ஊரில் இல்லாத நாள்களில் அனுசியாவோடு இரண்டொரு நாள் சென்று தங்கி வருவதை வாடிக்கையாக்கியிருந்தாள் வாணி.

தங்கும் நாள்களில் வேந்தனது, மூத்த, இளைய சகோதரர்களின் மக்கள் அனைவரும் வேந்தனது வீட்டில் கூடி, கொண்டாட்டம், குதூகலம் என கலகலவென அந்நாள்கள் நகருவதே தெரியாதபடி வேகமாகச் சென்றது.

மாலை வேளைகளில் அவ்வப்போது வாணியை மட்டும் வெளியே அழைத்துச் சென்று வருவார் அனுசியா.

“எதாவது வாங்கணும்னா கிளம்பு, வாங்கிட்டு, அப்டியே கோவிலுக்கும் ஒரு எட்டு போயிட்டு வருவோம்”, என்றிட வாணியும் மறுக்காது கிளம்பிவிடுவாள்.

அந்நாள்களில் புதிய, புதிய புடவைகளை கையில் திணித்து, கட்டி வரக் கூறுவார்.

ரவிக்கை இல்லை எனக் காரணம் கூறியது முதல், ரெடிமேட் ரவிக்கையையும் வாங்கி கையில் தந்து கட்டு என்றிருந்தார் அனுசியா.

ஆரம்பத்தில் வாணி மறுத்தாலும், அடுத்தடுத்து மறுக்காமல் கட்டிக்கொண்டு, அனுசியாவோடு வெளியில் சென்று வருவதை வழக்கமாக்கியிருந்தாள்.

“உனக்கு புடவை கட்டுனா மஹாலட்சுமி மாதிரி இருக்கு”, என பெண்ணிடம் ஐஸ் வேறு.

அனுசியாவின் எதிர்பார்ப்பு ஓரளவு வாணிக்கும் புரிந்தே இருந்தது.

வாணிக்கு எல்லாமே ஸ்திரமாக முடிவு செய்தாயிற்று.  இதுதான் தான் வாழப்போகும் வீடு! அனுசியாதான் தனக்கு மாமியார்!  வேந்தன் தனது கணவன் என்று!

அவளது முடிவில் எந்த மாற்றமும் நேர வாய்ப்பில்லை என ஒரு முடிவோடு இருந்தாள் வாணி.

ஆனால் நிறைய கேள்விகள் அவளுக்குள்.  வேந்தன் தனக்கு எந்த விதத்திலும் உறவினனோ, உற்றானோ எதுவும் இல்லை.  அவர்களது குடும்பமும் அப்படியே.

ஆனால் வேந்தனைக் கண்ட முதல் நாளே பரிச்சயமான பிம்பம் தனது மனதில் தோன்றியதற்கான காரணம் என்ன?

அடுத்தடுத்த தருணங்களில் சந்தித்தபோதும், யாரிடமும் தோன்றாத இணக்கமும், நெருக்கமும், ஏதோ இனமறியா பாதுகாப்பு உணர்வும் தோன்றிட என்ன காரணம் இருக்க முடியும்?

அதைவிட, தனது கனவில் வந்தவன், வேந்தனது கல்லூரிப் புகைப்படத்தினை ஒத்த தோற்றத்தில் வந்ததேன்?

இன்றளவும் தனது பாதுகாப்பிற்காக தானறியாமலேயே, (அப்படி அவன் நினைத்துக் கொண்டு) நிழலாக தனக்கு பாதுகாப்பினை வேந்தன் வழங்குவதன் அவசியம் என்ன?

மனதிற்குள் இந்த விசயங்களைப் பற்றியே சிந்தனை பெண்ணுக்கு ஓடிக் கொண்டே இருந்தது.

மற்ற மருமகள்களுக்கோ, வாணியின் மீது வெறுப்பு மண்டிக் கிடந்தது.

‘யாரிவ! அடிக்கடி வந்து டேரா போடுறா!  அப்பப்போ கிழவி அவகூட ஜோடி போட்டு சுத்துது!’. என்பதாக

அவ்வப்போது மீனாட்சியும் வந்து பொருமித் தீர்த்துவிட்டே செல்கிறாள்.  ஆனாலும் அனுசியா எதையும் கண்டு கொள்வதே இல்லை.

………………………………….

பெண் விடுமுறையில் இருப்பதை அறிந்து சத்தியேந்திரன் அவரது சூப்பர் மார்கெட்டிற்கு வந்து செல்ல வேண்டுமாய் வருந்தி அழைக்க, தவிர்க்க இயலாது தினசரி இரண்டு மணிநேரம் அங்கு சென்று வந்தாள்.

இடையில் முத்துரங்கனிடம் பேசியதாக, அவராக வந்து கூற, எந்த மாறுதலும் இன்றி சத்தியேந்திரன் பேசியதைக் கண்டு, விசயம் எதுவும் பகிரப்படாததை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்தாள் வாணி.

அரையாண்டு விடுப்பில் பள்ளி மாணாக்கர்கள் இருப்பதை எண்ணி, மூன்று நாள் நுண்கலை வகுப்பிற்கு ஒப்புக் கொண்டாள்.

இணையவழி வகுப்புகள் என அறிவித்ததும், பலர் தங்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்க இயலுமா என மெசேஜ் மூலம் கேட்கவே, இரண்டாவது முறையாக நேரடி வகுப்பிற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தாள் வாணி.

சத்தியேந்திரனே இந்த முறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

கூட்டம் ஓரளவிற்கு வந்து, நல்ல வருமானத்தையும் பார்த்த சத்தியேந்திரன், அடுத்தடுத்து வகுப்புகள் நடத்த வாணியிடம் கூற, இரண்டாம் பருவத் தேர்விற்குப் பிறகு இனி பார்த்துக் கொள்ளலாம் என முடிவாகக் கூறிவிட்டாள்.

வாணியின் இந்த பேச்சுகள் சத்தியேந்திரனுக்கு கோபத்தை உண்டு செய்தாலும், வருமானம் அவளை வைத்து வருவதால் பொறுமையாகவே கடக்கப் பழகினார்.

ஆனால் பெண் அவ்விடம் விட்டு நகர்ந்ததும், வாணியை மனம் போன போக்கில் வசவுகளை வாரியிறைத்து மனம் குளிர்ந்தார்.

இடையிடையே ஞாபகப்படுத்துவதாக சத்தியேந்திரன் அவரது அடுத்த வருமானத்திற்கு பேச, அவரைப் புரிந்தாலும் தன் மாமனின் நண்பன் என பொறுமையாகவே பதிலளித்தாள் வாணி.

……………………….

வேந்தனுக்கு, வாணி தன் தாயோடு அவ்வப்போது வந்து தங்கி இருப்பது, வெளியில் சென்று வருவது அனைத்துமே தெரியும்.

ஆனால், அனுசியாவின் அறிமுகத்திற்கு முன் அனைத்திற்கும் தன்னை நாடியவள், தற்போது தனது பக்கமே வருவதில்லை என்பது ஏமாற்றமே.

எதிர்பாரா நிகழ்வுகளாக சந்திக்க நேர்ந்தாலும், வேந்தனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

டைனிங்கில் மூவருமாக அமர்ந்து உண்டு கொண்டிருக்க, “பாட்டீமா! அந்த பாத்திரத்தை எம்பக்கமா நகத்துங்க!”, என தூரத்தில் அமர்ந்திருக்கும் அனுசியாவிடம் கேட்பாளே அன்றி, அருகே அமர்ந்திருக்கும் வேந்தனிடம் கேட்க மாட்டாள்.

அத்தனை ஒதுக்கம்.

பிறகு அனுசியாவே, “வேந்தா, வாணிக்கு அதை எடுத்துக் குடு”, என்றிட வேந்தன்தான் அந்த பணியைச் செய்தான்.

வேந்தனுக்கே சங்கடமாக உணர்ந்த தருணமது.

அதுவும் பெண்ணிற்கு நல்லதுதான் என தன்னையே சமாதானம் செய்து கொண்டான்.

அவளது நலனை விரும்பினால், தான் இந்த இடைவெளியை தவறாது பின்பற்றியே ஆக வேண்டும் என தனக்குள் உறுதியோடு இருந்தான் வேந்தன்.

தனித்து விடுதிக்கு கிளம்பினவளை வேந்தனைக் கொண்டு விடச் சொன்னால், “இல்ல பாட்டீமா, எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு.  அதை முடிச்சிட்டு அப்டியே நானே போயிக்குவேன், அதுக்கு ஏன் மாமாவைப் டிஸ்ட்ரப் பண்ணிட்டு”, என வேந்தனை தவிர்க்கத் துவங்கினாள்.

வேந்தனுக்குள் தவிப்புகள் கூடிப்போன தருணமது.

இருவரது கண்ணாமூச்சி ஆட்டத்தை பெருமூச்சோடு கடப்பதுவே, அனுசியாவிற்கு வேதனை.

வகுப்புகள், தனது தேடல்கள், நூலகம், நுண்கலை சார்ந்த நேரங்கள் என பெண்ணிற்கு நேரம் இறக்கை கட்டிச் சென்றது.

வேந்தனைத் தேடிய உள்ளத்திற்கு வடிகால் வேண்டி, நூலகத்தில் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டாள் வாணி.

கல்லூரியில் இருந்து வரும்போது, தன்னைக் கடந்து போன வாகனத்தை வைத்து வேந்தனதுதான் என்பதை அறிந்து கொண்டவள், “மாமூவோட வண்டி மாறி இருக்கு?  என்னைய வர வர கண்டுக்காம போறாங்க!”, என்கிற ஏக்கம்தான் பெண்ணுக்கு.

ஆனால் அது வழமையாக நடப்பதுதான் என்பதே பெண்ணுக்குத் தெரியாமல், வேந்தன் தன்னை ஒதுக்குவதாக எண்ணிக் கொண்டாள்.

தான் அவனை ஒதுக்கியது வாகாய் மறந்து போயிருந்தது பெண்ணுக்கு.

ஆனாலும் மனதின் திடம் மாறாமல் இருந்தாள்.

தன் வயதொத்த ஆண்களிடம் தோன்றாத உணர்வு வேந்தனிடம் மட்டும் தனக்குத் தோன்றுவதை சமீபகாலங்களில் உணரத் துவங்கியிருந்தாள்.

வேந்தனோடே இருக்க மனம் ஏங்கித் தவித்தது.

ஆனால் காண்பதே அரிது என்கிற நிலை.

இடையிடையே சத்தியேந்திரன் நுண்கலை வகுப்புகளுக்காக தொடர்பு கொள்ள, மே மாதம் வரை தேர்வுகள் இருக்க, அதன்பின் வகுப்புகள் எடுக்க வாணி ஒப்புக் கொண்டாள்.

“அப்போ ஒரு கிளாஸ் தான போட முடியும்”

“ஆமா, அதையே ஒன் வீக் கோர்ஸா போடுங்க.  அப்போ பாத்துக்கலாம்”, என்றிருந்தாள்.

கல்லூரியில் ஆகட்டும், வெளியில் செல்லும்போதும் தன்னிடம் வந்து பேசக்கூடிய ஆடவர்களின் எண்ணம் பெரும்பாலும், நட்பு எனும் முலாம் பூசப்பட்ட உறவாகவும், காதல் எனும் அரிதாரம் பூசப்பட்டதாகவும் இருக்கவே தவிர்க்கத் துவங்கினாள்.

சிலர் எமோசனல் பிளாக்மெயில் செய்திட, கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள்.

கல்லூரியில் ஆங்காங்கு சிலர் எழில்வாணி பெயரோடு இணைத்து எழுதி அவளை தனது ஆசைக்கு இணங்கும்படி செய்ய, எதையும் கண்டு கொண்டாளில்லை.

பெண்ணுக்கு, திமிர் பிடிச்சவ, ராங்கி, பெரிய அழகின்னு நினைப்பு என அவளைப் பற்றிய கருத்துகள் காதிற்கு வந்தாலும் ஒதுக்கிவிட்டதோடு, கண்டு கொள்ளவில்லை.

ஆனால் அதற்குப்பின் நீண்ட நாளாக எங்கும் பார்த்திராத வேந்தனை அவ்வப்போது நினைத்து பெருமிதம் கொள்வாள்.

சிலரைப்போல வேந்தனும் தன்னை சுற்றி வந்திருந்தால் தான் நிராகரித்திருந்தாலும் ஆச்சர்யமில்லை என்பதாகவே இருந்தது.

இணையத்தில் அவர்களின் தொழில் முறைகள், மற்றும் அலுவலகங்கள் போன்ற செய்திகளைத் தேடி அறிந்திருந்தாள்.

சிலதை அவனோடு அரிதாகப் பேசும்போது கேட்பாள்.

அனுசியா மூலமும் அறிந்து கொண்டாள்.

இருவரின் பொழுதுகளும் ஒருவரின் அருகாமைக்கு மற்றவர் ஏங்கி, ஏங்கியே ஏமாற்றத்தோடு செல்கிறது.

ஆனால் முன்பைவிட பெண்ணிடம் அதிக ஒதுக்கமாகவே நடந்து கொள்கிறான் வேந்தன்.

உள்ளுரில் இருந்தால், பெண்ணது தூரத்து தரிசனம் தொடர்கிறது. இயன்றவரை அவளது பார்வை படாமலேயே தரிசனத்தை முடித்துக் கொண்டு கடக்கிறான்.

………………………………

நாள்கள் அதன்போக்கில் நகரவே, அனுசியா மகனிடம் வந்து கூறிய விசயத்தைக் கேட்டதும் வேந்தன் பதறிவிட்டான்.

விடுதியில் இருப்பதில் சில அசௌகரியங்களை உணர்வதால், வாடகைக்கு தனி வீடு எடுத்து வாணி செல்ல இருப்பதாகக் கூறினார் அனுசியா.

‘இது என்ன பைத்தியக்காரத் தனம்.  ஒன்னு ஹாஸ்டல்ல இருக்கணும்.  இல்ல பெரியவங்களோட வீட்ல இருக்கலாம். அதுக்கு வாய்ப்பு இல்லை. இங்க வந்திருந்தா எதாவது பின்னாடி சங்கடம் வரலாம்.  அதனாலதான் ஹாஸ்டலே பெஸ்ட்னு விட்ருக்கு, இப்ப தனி வீட்ல போயி எப்படி சமாளிப்பா.  அதெல்லாம் சரி வராது’, என்பதான தனது எண்ணத்தை வேந்தன் அனுசியாவிடம் மறைக்காது கூறிட

“அவங்க ஹாஸ்டல்ல தங்கியிருக்கறவங்களுக்கும், அந்தப் பகுதியில இருக்கறவங்களுக்கும், நிறைய பேருக்கு டெங்கு ஃபீவராம்.  அதான் அங்க இருக்க பயப்படறா!”, என்றிருந்தார் அனுசியா.

“அதுக்காக தனி வீட்டுக்குப் போவாளாமா?”

“புள்ளைக்கு வேற கதி?”, பாவம்போல முகத்தை வைத்துக்கொண்டு வாணிக்குப் பரிந்து பேசிட

“ஏன், வேற ஹாஸ்டல் பாக்க வேண்டியதுதான?”

“அது அவளுக்கு சௌர்யமா இருக்கணுமே!”

“தேடிப் பாத்தா தெரிஞ்சிரப் போகுது!”, என வேந்தன் கூற

“ஏன் நம்ம வீட்ல தங்க வச்சிகிட்டா!”, என அனுசியா மகனிடம் நைசாகக் கேட்க

“என்னாடா இன்னும் கேக்கலையேன்னு யோசிச்சேன்.  கேட்டுட்டீங்க!”, என்றவன், “ம்மா, உங்க வயசுக்கு நான் சொல்லித்தான் தெரியணுமா?  யோசிக்காம எதையாவது செய்றீங்க! பேசுறீங்க!”, என்றிட

“என்னடா இப்ப யோசிக்காம செஞ்சுட்டேன்!”, என மகனிடம் சண்டைக்கு வந்திருந்தார்.

“அந்தப் புள்ளை இங்க வந்த முத நாளே ஆரத்தி எடுத்தவங்கதான நீங்க?  அதை நீங்க என்ன நினைச்சு எடுக்கச் சொல்லியிருப்பீங்கனு தெரியும்!”, என்றிட

“ரொம்ப நல்லவன் வேசம் போடாதடா! உன்னை, உன் மனசை எனக்குத் தெரியாதுனு வாயிக்கு வந்ததைப் பேசாத.  எல்லாம் எனக்கும் தெரியும்”, என்றவர், வாணியின் சாயலில் வேந்தன் வரைந்திருந்த படங்களைப் பற்றிக் கூறிட, தலையைத் தாங்கியவாறு அமர்ந்துவிட்டான் வேந்தன்.

“நீ என்ன நினைச்சுப் பண்றனு புரியாத அளவுக்கு நான் ஒன்னுந் தெரியாதவ கிடையாதுடா?”, என்றவர் “எல்லாம் தெரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கேன்.   ஏன்? எல்லாம் என் தலைவிதி”, என கண்களில் நீர்வரப் பேசிய தாயைக் கண்டு

“இப்டி கண்ணுல தண்ணியக் காட்டியே ஏமாத்துங்க!”

“என்னடா ஏமாத்தினேன்.  நீ உன்னை ஏமாத்திக்கிரத விடவா ஏமாத்திட்டேன்”. அடுத்தடுத்து பேச்சுகள் தொடர்ந்திட, பேச்சை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய அனுசியா, “ஒழுங்கா மறைக்காமச் சொல்லு.  உனக்கு அந்தப் புள்ளைய புடிச்சிருந்தும் ஏன் பிடிகொடுக்காம திரியற!”, என்றிட

“ம்மா அது வேற, இது வேற”

“அப்டீனா”

“அப்டீனா அப்டித்தான்”

“மக மாதிரியா”

“ம்மா..”, என்று வேந்தன் கத்தியிருந்தான்.

“இல்ல சரி, உம்மனசுல வாணியில்லனா,  நான் பாக்கற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”

“..” தலையைக் குனிந்தபடியே அமைதியாக இருந்தவனின் மறுப்பு புரிந்திட

“அப்ப வாணியவே நான் பேசி முடிக்கறேன்”, என்றிட

“நீங்களா வாயிக்கு வந்ததை எங்கிட்ட சொன்ன மாதிரி அந்தச் சின்னப் புள்ளைக்கிட்டயும் சொல்லி மனசைக் குழப்பிறாதீங்க!”, வெடுக்கெனக் கூறினான்.

“சின்னப் புள்ளையா?”

“ம் பின்ன! அவ பெரியவளா!  அவளுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? பதினேழு வருசம்.  எதுனாலும் ஒரு நியாயம் வேணாமா?”, என வேந்தன் உக்கிரமாக வினவ

நீ சொல்றது சரினு வச்சிக்குவோம்.  ஆனா அதே வயசு வித்தியாசத்துல இருக்குறவங்க ரெண்டு பேரும்  ஒருத்தருக்கொருத்தர் ஆசைப்பட்டா, கட்டி வச்சிரதுதான நல்லது!”

“என்னம்மா சொல்றீங்க!”, என எரிச்சலோடு வேந்தன் வினவ

“கண்ணுல வர்ற மின்னலை மறைக்க கருப்புக் கண்ணாடிய மாட்டி ஏமாத்திட்டு நீ ஒரு பக்கமா திரியற, வந்தா உன்னோட பாராமுகத்தைப் பாக்க முடியாம தவிச்சுப்போயி அவ இங்க வராம படிக்கிறேன்னு சாக்குச் சொல்லிகிட்டு லைப்ரரியே கதினு திரியறா.  இதுல நான் வந்து என்னத்தைச் சொல்ல”, என பட்டென அனுசியா பேசியிருந்தார்.

வேந்தனுக்கு அனைத்தும் அறிந்தும் இந்தத் தாய் தன்னைக் கேலி பேசுவதை எண்ணிய வருத்தத்தைவிட, “அப்டியே உங்க மனசோட வச்சுக்கங்க!  ஆனா இதப்பத்தி அவகிட்ட மூச்சு விட்றாதீங்க!”

“அதெல்லாம் அந்தப் புள்ளைக்குத் தெரியாமயா இருக்கும்!”, என எகத்தாளமான குரலில் வினவ

“நீங்க சொல்லாத வரை தெரியாது”, திடமாக உரைத்தான் வேந்தன்.

“சரி இப்ப உன் பிரச்சனை என்ன?”, என விசயத்துக்கு அனுசியா வந்திட

“அவளை இங்க கொண்டு வந்து வச்சா, நாளைபின்ன அவளுக்கு மாப்பிள்ளை பாக்கும்போது எதாவது பிரச்சனைனா கஷ்டம்.  அதுக்குத்தான் வேணானு சொல்றேன்”, என திடமாய் தனது எண்ணத்தை உரைத்தான்.

“நீ இருக்கும்போது வேற மாப்பிள்ளை எதுக்கு?”

“ம்மா படிச்சிப் படிச்சு இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன்.  ஒன்னுமே புரியாத மாதிரி அதையே சொன்னா என்னம்மா அர்த்தம்?”

“நீ வாணியக் கல்யாணம் பண்ணிகோனுதான் அர்த்தம்.  வேற என்ன?”, என இலகுவாகக் கூறிவிட்டுப் பார்க்க

“உங்க பொண்ணுங்களுக்கு இவ்ளோ வயசு வித்யாசத்துல மாப்பிள்ளை பாத்திருந்தா ஒத்திட்டு இருப்பீங்களா?”

“கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்தான்.  ஆனா, மனசுக்கு புடிச்சிப் போச்சுன்னா வயசெல்லாம் பாக்கணும்னு அவசியமில்லை”, பட்டெனக் கூறினார்.

“எதேது!  எப்டிம்மா இப்டி நியாமில்லாம பேசுறீங்க?”

“வாணிக்கும் மனசுக்குப் புடிச்சிருக்குங்கற ஒரே காரணத்துக்காகத்தான் இவ்ளோதூரம் இறங்கிப் பேசறேன்.  இல்லைனா இந்தப் பேச்சை இவ்ளோ காலம் கழிச்சி எடுத்திருக்கவே மாட்டேன்”, என அனுசியாவும் திடமாக உரைக்க, சற்று நேரம் வேந்தன் அமைதியாக இருந்தான்.

மகனது அமைதியை தனக்குச் சாதகமாக்க எண்ணியவர், “வேந்தா, வாணிக்குனு சொந்தம், சுருத்துனு யாரும் இல்ல.  ஒத்துக்கறேன். அதனால மட்டுந்தான் உங்கிட்ட உதவி கேட்டானு நினைக்கிறியா?  எல்லாருட்டயும், அப்டிலாம் ஒரு பொண்ணால தன்னைப் பத்தி ஈஸியா பேசிறவோ, கஷ்டத்துல அதை பகிந்துக்கவோ முடியும்னு நினைக்கிறியா?  அப்டியெல்லாம் பொண்ணுங்க எல்லாருகிட்டயும் எல்லாத்தையும் பகிந்துக்க மாட்டாங்க. அதை முதல்ல புரிஞ்சுக்கோ.

எல்லாத்துக்கும் மாமா மாமானு உன்னைத்தான் தேடுனா. அப்போ உங்கிட்ட ஏதோ ஒன்னு அவளுக்குப் புடிச்சிருக்கு, இல்லை உம்மேல இருக்கற நம்பிக்கை! இதனாலதான் உன்னை அண்டி வந்திருப்பா. அப்புறம் போகப்போகதான் யோசிச்சிருப்பா.  ஏன்னு? இப்ப தெளிவாகிட்டா. நீதான் இன்னும் தெரியாம, தெளியாமத் திரியற!”, மகனது நிலையை வருத்தத்தோடு கூறிவிட்டு

“நீ என்ன நினைச்சு இப்டித் தனிமரமா இருக்க நினைக்கிறேனு சத்தியமா எனக்குப் புரியலைடா.  ஆனா உம்மனசு முழுக்க அவதான் இருக்கானு எனக்குத் தெரியும்.  வயசைக் காரணமா எடுத்தா, அதப்பத்தி நீ பயப்படவே தேவையில்லை.  அந்தக் காலத்துல ரொம்ப வயசு வித்தியாசத்துல கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாத்தான் இருந்தாங்க. இப்பவும் கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோசமாத்தான் இருப்பீங்க. நல்லா புரிஞ்சுட்டதால அனுசரிச்சு போயிக்குவீங்க.

அந்தக் காலத்துலலாம் எங்கேயும் சண்டை, சச்சரவு, விவாகரத்து இப்டி பாக்கவே முடியாது.  ஆனா இப்ப, அப்டி இல்லை. ஒரே வயசில, இல்லனா அஞ்சாறு வருசம் வித்தியாசத்துல பண்றாங்க. எங்க பாத்தாலும், நாம் பெருசா, இல்ல நீ பெருசானு சண்டை, சச்சரவு, விவாகரத்து, பிரச்சனைனு…

பொண்ணுங்களோட மனசு, சூரிய ஒளியைவிட வேகமா பயணிக்கும்னு விளையாட்டாச் சொல்வாங்க!  அது விளையாட்டில்ல! 

ஒரு விசயம் பத்தி பொண்ணு தன்னோட மனசுக்குள்ள முடிவெடுத்திட்டா எப்டிப்பட்ட கஷ்ட நஷ்டம் வந்தாலும், அதில இருந்து பின் வாங்க மாட்டா. 

முடிவெடுக்குமுன்ன, நேரம்னு சொல்றதைவிட, நாள் கணக்கா, மாசக் கணக்காகூட அதைப்பத்தி யோசிப்பாங்க. முடிவெடுத்திட்டாங்கன்னா, பின்வாங்கறதுங்கறது அவளோட அகராதியில வரவே வராது.

அப்டி முடிவெடுக்கும்முன், எல்லாவித சாதக, பாதகத்தையும் மனசுக்குள்ள போட்டு, அதுக்கு விடையும் தெரிஞ்சபின்ன தான் தெளிவாவா.

அப்டி யோசிச்சு வாணி ஒரு முடிவுக்கு வந்து நாளாகுது.  ஒரு பொண்ணே உன்னை ஏத்துக்க முன்வந்துட்டா, இதை நீ பெரிசு பண்ணாம கல்யாணம் பண்ணிக்கறதுதான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது.  அதைவிட்டுட்டு நாளைக் கடத்திரதால யாருக்கும் எந்த பிரயோசனமுமில்லை”, என்றவர்

“சீக்கிரமா யோசிச்சு நல்ல முடிவுக்கு வா.  அந்தப்புள்ளைக்கும் வயசு போகுது.  இன்னும் ரெண்டு வருசத்துல படிப்பும் முடிஞ்சிரும். டக்குனு முடிவு சொல்ல வேணாம். ஆனா யோசிச்சு நல்ல முடிவாச் சொல்லு”, என்றதோடு வேந்தனையே பார்த்திருந்தார்.

சற்று நேரம் கழித்து, “அந்தப் புள்ளைய நம்ம வீட்ல என்னோட கீழயே தங்க வச்சிக்கப் போறேன்”, என திடமான குரலில் செய்தியை உரைத்துவிட்டு அகன்றிருந்தார் அனுசியா.

ஆகமொத்தம் இந்தப் பேச்சு அனைத்தும் வாணியை தனது வீட்டிற்கு அழைத்து வரவே எனத் தெளிவாகப் புரிந்திட அதற்குமேல் எதவும் பேசாமல் அமர்ந்திருந்தான் வேந்தன்.

‘எல்லாந்தான் நீங்களே கேட்டு, பதிலையும் நீங்களே சொல்லி, ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களே!  அதுக்குப்பின்ன நான் என்ன முடிவு சொல்ல!’, என ஓய்ந்து போன தோற்றத்தில் இருந்தவனை பார்த்தபடியே வாணிக்கு அழைத்திருந்தார் அனுசியா.

மீளும் வழி கிடைக்காத என இன்னும் வழி தேடிக் களைக்கிறான்… கிட்டுமா?

…………………………………………..

தாம்பத்யம்!!!

எதிர்பார்ப்பு நிறைந்தது!

இன்பமும்,

துன்பமும்,

ஊடலும்

கூடலும்

பாடலும்

ஆடலும்

சீராட்டும்

பாராட்டும்

தாலாட்டும்

அதன் பக்கவாத்தியங்கள்!

கொடுப்பதும்

பெறுவதும்

அலாதியானது!

கொடுக்கல்

வாங்கலில்

குறைவுபட்டால்

கசந்து போகும்!

கசப்பு மிகுந்தால்

பிளவு நீளும்!

மனப் பிளவு

உறவை விரிசலாக்கும்!

விரிசல்

விவாதங்களை

முன் வைக்கும்!

விவாதங்கள்

விதண்டாவாதங்களாகும்!

விதண்டாவாதம் பிரிவுக்கு

வழிகோலும்!

பிரிவு

பிறரது கேளிக்கு ஆட்படும்!

…………………………………………

Leave a Reply

error: Content is protected !!