am24

am24

ஆசை முகம் 24

 

வாணிக்கு, வேந்தனது கேள்வி வேப்பங்காயாக கசந்திருந்தது.

தான் வேந்தனை நினைத்து, கனவிலும், நனவிலும் அருகி, உருகி, காதல் செய்ய, தன்னைத் தெரிந்திருந்தும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க மனம் எப்படி வந்தது, என்பதாக இருந்தது.

விசித்திரங்களைக் கொண்டது மனித மனம்!

உற்ற உறவுகள், உறவுமுறையை அறிமுகம் செய்து, கைகாட்டிய உறவல்லவே வேந்தன்!

எதையும் பொறுப்பெடுத்து வழிநடத்திட யாருமில்லாத நிலையில், தனக்கேற்ற வகையில் மனம் விரும்பும் உறவிற்கு ஏற்றவனை(ளை)யோ நேரில் சந்திக்கும்போது, தகுந்த உறவின் பெயரில் சாயம் பூசி, அதையே ஜென்ம சாபல்யமாக்கி பூரண நிறைவு கொள்கிறதே மனம்!

அப்படி வாணிக்குள் எழுந்த அன்புப் பிறவாக உணர்விற்கு, வேந்தன் தனக்குச் செய்திட்ட உபகாரங்களைக் கொண்டு கணித்து, அவளுக்கு ஏதுவாக, மனம் முழுதாக ஏற்றுக்கொண்டு முடிவு செய்திட்ட உறவல்லவா வேந்தன்!

அதனால்தானே மணம் புரிய விரும்புவதைக் கூறி, கணவனாகப் போகும் உரிமையோடுடனான உறவினை, அதற்கேற்ற செயல்முறைகளை வேந்தனிடம் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

அவனுக்கும் அப்படித் தோன்றாமலா, தனக்கு வேண்டியதைப் பார்த்துப், பார்த்துச் செய்தான், செய்கிறான்!

அப்படி இரங்கிச் செய்வதானாலும், தன்னை அன்றி வேறு யாருக்கெல்லாம் இத்தனை பரிவுடனும், பாசத்துடனும், பார்த்துப் பார்த்துச் செய்திருப்பான்.

சொந்த அக்காவின் மகளுக்கே எதுவும் செய்யாததை வாணியும் அறிந்திருந்தால் தானே!

தனக்கு ஒரு இக்கட்டு என்றதும், அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டு வந்தது எதற்காக?

வழி மாறிப்போனால், பெண்ணது வாழ்க்கையே மாறிப்போகும் என தன்னை நேரில் காண ஓடிவந்ததன் அர்த்தம்தான் என்ன?

இப்படி கேள்விகள் பல எழுந்து பெண்ணை கேலி செய்தது.

தன் மனதைத் திறந்ததுமே, வைராக்கியத்தோடு ‘என்னைக்கு எனக்குத் தாலி கட்டுங்கன்னு சொல்றேனோ, அன்னைக்கு ரெடியா இருக்கணும்’ என தான் உரைத்ததை வசதியாக மறந்து போனதேன் மாமூ?, என தனக்குள் புலம்பினாள்.

‘மாமூ நீங்க சாமியாரெல்லாம் கிடையாது.  கொஞ்சம் கூட உணர்ச்சிகள் இல்லாத ஜடம்.  அது தெரியாம நாந்தான் உங்களையே நினைச்சி, உருகிட்டு இருந்துருக்கேன்.  கனவெல்லாம் வேற கண்டு, இன்னும் என் ஆசையெல்லாம் வளர்த்தது, இப்டி நீங்க என்னோட நிலமைய யோசிக்காமக் கேக்கவா!’, என மனதிற்குள் குமுறித் தீர்த்திருந்தாள்.

விளையாட்டிற்காகவா ஒரு பெண் அப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவாள்!

தனது எதிர்பார்ப்பு, ஆசை, காதல், திருமணம் அனைத்தும் பொய்யாய் போனதாய் மனம் கலங்கி, கல்லாய்ப் போனாள் வாணி.

நேரத்திற்கு உணவைக்கூட தவிர்த்திருந்தாள்.

அனுசியா, “ஏன்மா, என்ன செய்யுது.  ரெண்டு நாளா ஒழுங்காவே சாப்பிடலை”

“என்னானு தெரியலை பாட்டீமா.  பசிக்கவே மாட்டுது”

“டாக்டர்கிட்ட போயிட்டு வருவமா?”

“இல்ல பாட்டீமா.  ரெண்டொரு நாள் பாப்போம்.  அதுக்குள்ள சரியாகிரும்.  இல்லைனா அப்புறம் பாக்கலாம்”

அடுத்து வந்த இரண்டு நாள்களும், முன்பைக் காட்டிலும் வேந்தனைத் தவிர்த்து ஒதுங்கியிருந்தாள்.

முகமே சரியில்லை.  அனுசியா மீண்டும் விசாரித்தார்.  ‘சரியாகிட்டு வருது பாட்டீமா’ என்றதோடு இறுகிய முகத்தோடே வளைய வந்தாள்.

“காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?  வாயைத் திறந்து சொன்னாதான தெரியும் வாணி” என்றவரிடம்,

“அப்டி எதனா இருந்தா உங்ககிட்டச் சொல்லாம வேற யாருகிட்ட போயி சொல்லப் போறேன் பாட்டீமா” என்றதோடு கலங்கிய கண்ணை மறைத்து, அறைக்குள் சென்று அழுது தீர்த்தாள்.

இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என எண்ணியே இரண்டு நாள்கள் சென்றிருந்தது.

மூன்றாம் நாள் துவக்கத்திலும் அதே நிலையில் வாணி இருந்தாள்.

வேந்தனிடம் வாணியைப் பற்றிப் பேச எண்ணிய அனுசியா அலைபேசியில் தொடர்பு கொள்ள, “ம்மா, முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்.  முடிஞ்சதும் நானே கூப்டறேன்” என வைத்திருந்தான்.

அனுசியாவிற்கும், வெளியில் வேலை. 

அன்று கல்லூரி விடுமுறை தினம்.

அதேதினம் சத்தியேந்திரன் ஏதோ வியாபாரம் சம்பந்தமாக புதிய முடிவுகள் எடுக்க வேண்டி இருப்பதால், கட்டாயமாக வாணி நேரில் வரவேண்டும் என்றிடவே, சரியாக பத்து மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தாள் வாணி.

அனுசியாவிடம் கூறிக்கொண்டு, “மதியம் வந்துருவேன் பாட்டீமா”, என விடைபெற

“நான் இன்னிக்கு சின்னவ(மகள்) வீடு வரை போயிட்டு சாயங்காலந்தான் வருவேன்.  லச்சுமிகிட்ட சொல்லிட்டுப் போறேன்.  பாத்து பத்திரமா போயிட்டு வாடா”, என வாணியை வழி அனுப்பி வைத்திருந்தார் அனுசியா.

“என்ன ஏதுனு ஒன்னும் வாயைத் திறந்து சொல்ல மாட்டிங்குது.  அவன் கேட்டாக்கூட சொல்லுவா.  நம்மள கொஞ்சம் தள்ளித்தான் நிறுத்துவா”, என தனக்குத்தானே பேசிக் கொண்டவர்,

வேந்தனை நினைத்து, “இவனுக்கு இன்னும் பொறுப்பு வராமத் தெரியறானே.  கல்யாணத்துக்குப் பின்னயாவது ஒழுங்கா இருப்பானா?” மகனது செயலில் உண்டான வருத்தம் வேறு மனதில் எழ, புலம்பலோடு கிளம்பினார் அனுசியா.

……………..

இரண்டரை மணிபோல வீட்டிற்கு வந்தவள் முகம் முன்பைக் காட்டிலும் வாட்டத்தோடு இருந்தது. அனுசியா இன்னும் வந்திருக்கவில்லை.

வேந்தனது பேச்சை எல்லாம் மனம் ஒதுக்கியிருந்தது.

கடந்துபோன இரண்டு மணி நேரத்திற்கு முந்தைய உரையாடல்கள் மட்டுமே மனதை உளியால் செதுக்கிய உபத்திரவத்தைத் தந்தது.

இனிமேலும் அவளால் இங்கு தங்கியிருக்க இயலாது என மனம் ஓலமிட, யாரையும் குறைகூறித் தப்பிக்க எண்ணாது, தானே வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்தாள்.

அனுசியாவை எண்ணியதும் சற்றே தயங்கினாள்.

அவர்கள் வந்தால், தன்னால் சுதந்திரமாக இப்படி வீட்டை விட்டுக் கிளம்ப முடியாது என்பது வாணிக்கு திண்ணம்.

அனுசியாதானே, “நம்ம வீடு இவ்ளோ பெரிசா இருக்கும்போது, நீ எதுக்கு ஹாஸ்டல்ல இருந்து சங்கடப்படுற.  இனியும் நீ அங்க இருக்க வேணாம்.  வீட்டுக்கு வந்திரு.  வேந்தன்தான் சொல்லச் சொன்னான்”, என்றவரின் பேச்சை நம்பி வந்தவளுக்கு, வேந்தன் சொல்லவில்லை என்பதைச் சொல்ல, இனியும் யாரேனும் வரவேண்டுமா?

அனைத்தும் அனுசியாவின் ஆசைக்கிணங்கே நடந்தது என்பதை வாணியும் ஓரளவு யூகித்திருந்தாள்.

வேந்தன் என்றுமே வாணியை ஆசையாகவோ, ஆர்வமாகவோ பார்த்ததை பெண் பார்த்ததில்லை.  அதனால் அந்த முடிவுக்கு வந்திருந்தாள்.

அதனைக் காட்டிலும் பாரமேற்றியிருந்தது புதிய சம்பவம்!

அதன் நினைவால், மனம் தற்போது ரணமாய், யாரிடமும் மனதில் உள்ளதை, உள்ளவாறு பகிர முடியாத நிலை.

பகிர்ந்தாலும் பரிகாசம்தானே செய்யும் உலகம் என மனம் நிந்தித்தது.

வேந்தனிடம்கூட இனி இவ்விசயத்தைப்பற்றி தன்னால் கூற இயலாது என்று தோன்றிட, மரணத்தோடு மறைந்து போகக்கூடிய இதுபோன்ற விசயங்களை யாருமே வெளியில் பகிரத் தயங்குவர் என்பதும் புரிய முடிவெடுத்துவிட்டாள்.

வேந்தனது மனமும், இரண்டொரு நாளுக்கு முன்பு தெளிவாகப் புரிந்திட, தான் இனிமேலும் இங்கிருப்பது தவறு என்கிற முடிவுக்கு வாணி வந்திருந்தாள்.

வீட்டினுள் நுழைந்து, ஒரு மணித் தியாலத்திற்குப் பிறகு அவளது முக்கியமான சொற்ப உடைமைகளோடு, வீட்டை விட்டுக் கிளம்பியிருந்தாள் வாணி.

‘இனியும் இங்கிருந்தால், கீழிறக்கம் உறுதி’, என எண்ணியவளுக்கு, அத்தனை வருத்தம்.

வேந்தனைக் காணாது தன்னால் வாழ இயலுமா?

முடியாது என்பது புரிந்தாலும், இனியும் இங்கிருப்பது உசிதமல்ல என உள்ளம் கூற, கிளம்ப முடிவு செய்துவிட்டாள்.

யாரிடம் போய் இதைக் கூறி ஆறுதல் பெற இயலும் என மனம் பரிதவிக்க, தனக்குள் புதைக்க முயன்றாள்.

காலையில் இருந்ததைவிட இன்னும் இறுகிப் போயிருந்தாள்.

மனமே வெறுத்திருந்தது.

இந்துமதியிடம் விசயம் எதையும் கூறாமல், தனக்கு அடுத்த நாள் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் தனது உடைமைகள் தான் வந்து எடுக்கும்வரை இங்கிருக்கட்டும் எனக்கூறி வைத்துவிட்டு, அன்றே அவள் படித்த பள்ளி இருந்த ஊருக்கு கிளம்பிச் சென்றாள்.

………………

மாலையில் வீட்டிற்கு வந்த அனுசியா வாணியைக் காணாது, வெளியில் எங்கேனும் வேலையாகச் சென்றிருப்பாளோ எனக் காத்திருந்தார்.

வெளியில் சென்றாலும் தன்னிடம் கூறாமல் போகமாட்டாளே என்கிற எண்ணம் வந்தாலும், அவசரமாக எதாவது வாங்க வேண்டியிருந்ததால் சென்றிருக்கலாம் என ஏழு மணிவரை காத்திருந்தார்.  வாணி வராமல் போகவே வாணியின் அலைபேசிக்கு அழைத்தார்.

தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் எனும் செய்திதான் வந்ததே அன்றி அழைப்பு சென்றதாகவே தெரியவில்லை.

நேரம் செல்லச் செல்ல அதேநிலை தொடர, மனம் பதறிப் போனவர், வேந்தனுக்கு அழைத்து விபரம் கூற, “இதோ என்னானு நான் பாக்கறேன்மா” என வைத்திருந்தான்.

அன்றைய மீட்டிங் முடிந்து, அது தொடர்பான பணியில் இருந்ததால், வாணிக்கு ஒரு முறை அழைத்து, பிஸி என வந்ததும் வைத்தவன், அடுத்தடுத்த வேலைகள் வரவே அத்தோடு மறந்திருந்தான்.

ஒன்பதரைக்கு மீண்டும் அனுசியா அழைத்த பிறகே, “இன்னுமா வரலை.  உங்ககிட்ட எதுவும் சொல்லலையா?” எனக் கேட்டாலும் உள்ளுக்குள் பதறினான்.

தாயிடம் தனது பதற்றத்தைக் காட்டாது மறைக்க எண்ணியவன், “அவளைக் கூட்டிட்டு வரேன்மா”, என வைத்துவிட்டு, தொடர்பு கொள்ள முயன்றான்.

அனைத்து முயற்சிகளும் தோல்வி.

மேலும் ஒரு மணி நேரம் கடந்தும், அவளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ள இயலவில்லை.

வீட்டிற்கு கிளம்பி வந்தவன், அன்றைய தினம் வாணி வெளியே கிளம்பியது முதல் நடந்ததைக் கேட்க எண்ணி தாயை அணுக, அனுசியா வெளியே சென்ற செய்தி அறிந்து ஓய்ந்து போய் அமர்ந்தான்.

செக்யூரிட்டியிடம் கேட்க, இரண்டு மணிக்குமேல் வாணி வீட்டிற்கு திரும்பியது, பிறகு மூன்றரை மணிக்கு மேல் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றது தெரிய வந்தது.

அதன்பின் எங்கு சென்றாள் எனத் தெரியவில்லை.

இந்துமதியின் நினைவு வரவே, அந்த நேரம் விடுதிக்கு அழைத்து இந்துமதியை கேட்க தொடர்பு கொள்ள, “அவங்க ஹாஸ்டலை விட்டுப் போயி ரொம்ப நாளாச்சே” என்றதும் என்ன செய்வதென்றே புரியவில்லை வேந்தனுக்கு.

எடுத்ததற்கு எல்லாம் காவல் நிலையத்திற்கு செல்ல இயலுமா?

பொறுமையாகவே தாயிடம் மீண்டும் விசாரித்தான்.

காலையில் பெண்ணது சோர்ந்திருந்த தோற்றம், அதன்பின் சத்தியேந்திரனைக் காணச் சென்றது வரை விசயத்தை அனுசியா கூறினார்.

வேந்தனுக்கு அது வழமைபோல நடப்பதுதான் என்பதால், அதன்பின் என்ன நடந்தது என தெரியாத நிலையில் இருந்தான்.

ஒருவேளை திருமாறனோடு சென்றுவிட்டாளோ என எண்ணியதும் அறைக்குள் சென்று பார்க்க, அறையில் அவளது உடைமைகள் எதுவும் இல்லை.

துவண்டு அமர்ந்த மகனிடம் துளைத்த வினாக்களோடு அனுசியா அணுக, “அவளுக்குப் புடிச்சதால அவங்க மாமா பையனோட போயிட்டானு நினைக்கிறேன்”, என்றதுமே வேந்தனை ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார் அனுசியா.

வேந்தனுக்கும் திகைப்புதான்.

சிறுபிராயத்தில்கூட தாயிடமோ, தந்தையிடமோ அடி வாங்கியதாக நினைவில்லை.  ஆனால் இன்று எதற்காக தன்னை அடித்தார் என்பதுபோல நிமிர்ந்து தாயை கேள்வியோடு பார்த்திருந்தான்.

“வாயில வரதை யோசிக்காம பேசாத வேந்தா!  அவ நெருப்பு!  உன்னைத் தவிர வேற யாரையும் கனவுலகூட நினைக்க மாட்டா!”, என தீர்க்கமாக உரைத்திட

கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், தாயின் வார்த்தையை நம்பாது பார்த்தான்.

‘அப்போ அன்னிக்கு அப்டி சிரிச்சிக்கிட்டே எங்கிட்ட சொன்னாளே’ என்பதாகத்தான் வேந்தனது சிந்தனை இருந்தது.

“நம்ம வீட்ல அவ வந்திருந்தது கொஞ்ச காலமா இருந்தாலும், ஒரு பொண்ணோட செயலை வச்சே அவ எப்டினு தெரிஞ்சிக்க முடியும் வேந்தா! நீயா கற்பனையிலகூட அப்டி நினைக்காதே! 

அவளை நோகடிக்கற மாதிரி நீ எதாவது சொல்லியிருக்கணும்” என நிறுத்தி மகனைப் பார்க்க, வேந்தனோ புரியாமல் பார்த்தான்.

“….இல்லைனா வேற எதோ நம்மைச் சுற்றியிருக்கறவங்களோ, இல்லை அவளுக்குத் தெரிஞ்சவங்களோ அவளைக் காயப்படுத்தற மாதிரிப் பேசியிருக்கணும். ஆனா அவங்க பேசறதையெல்லாம் அவ கணக்குலயே எடுத்துக்க மாட்டா.  நீ எதாவது சொன்னியா? ஏன்னா  அவ ரோசக்காரி” மீண்டும் வேந்தனை குறுகுறுவென பார்வையால் ஊடுருவ

அனுசியாவினுடைய பார்வையின் கனம் தாங்காது, தான் ஏதேனும் தவறி விட்டோமோ என கீழே குனிந்திருந்தான் வேந்தன்.

மகனது செயலில் துணுக்குற்றவர், “அப்டி நீ என்ன சொன்னனு நல்லா யோசி.  இல்ல வேற யாரும் பேசி அதனால கிளம்பிப் போயிருந்தான்னா, என்ன செய்வியோ, ஏது செய்வியோ ஆடி பதினெட்டுக்குள்ள அவளைக் கொண்டு வந்து என் கண்ணுல காட்டுற” கட்டளையாகக் கூறினார்.

அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டவன், தனது தவறான கணிப்பை எண்ணி வருந்தியதோடு, அவனை அறியாமல் பதற்றமும் சேர, எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தான்.

வாணி வீட்டை விட்டுச் சென்றது யாருக்கும் தெரியுமுன்னே வீட்டிற்கு அழைத்து வர எண்ணி, அலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்வதற்காக தனது காவல்துறை நண்பனைத் தொடர்பு கொண்டான் வேந்தன்.

உதவுவதாக வாக்களிக்கவும், அடுத்து அவளது அறைக்குள் நுழைந்து எதாவது விட்டுச் சென்றிருக்கிறாளா எனப் பார்த்தான்.

திரும்பி வரும் எண்ணமே பெண்ணுக்கு இல்லை என்பதும் அதில் தெளிவாகியது.

ஆனால் அப்படி என்ன தன்னிடம் வெறுப்பு?  அல்லது வேறு என்ன காரணத்திற்காக யாரிடமும் கூறாது சென்றாள்! வாணிக்கு ஏதேனும் சங்கடங்கள் என்றால், தானே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதும் மனதில் உறுத்த, இதை அப்படியே விடவும் முடியாதே என அடுத்த கட்டமாக தான் செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தான்.

உறக்கத்தில் இதுவரை பெண்ணது காதலை உணர்ந்தவனுக்கு, தனது கேள்வியால் எழுந்த கோபத்தில் வீட்டை விட்டுச் சென்று விட்டாளோ என ஒரு கனம் யோசித்தான்.

தான் பலமுறை அதைக் கூறியபோதெல்லாம் பெரியளவில் எந்த எதிர்ப்பையும் காட்டாதவள், இதற்கா கோபம் கொண்டால், நிச்சயமாக இது காரணமல்ல.  ஆனால் தனது சொல்லால் மனம் வருந்தி அதனால் சென்றாளோ எனும் ரீதியிலும் யோசித்தான்.

………………………

கிளம்பும் முன்பே விடுதி பொறுப்பாளருக்கு அழைத்து விசயத்தைச் சுருக்கமாகக் கூறியிருந்தாள்.

இரவு பள்ளி விடுதிக்குச் சென்றவள், தனது தற்போதைய நிலையைப் பகிர்ந்து கொண்டவள், தனக்கு பாதுகாப்பான இடத்தில் தங்க உதவும்படி கேட்க, “உன்னோட படிப்பு, மத்த செலவுங்களுக்கு எல்லாம் என்ன பண்றதா ஐடியால இருக்க”

“ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமில வேலைக்கு சேர்ந்துட்டு, டிகிரிய எப்டியாவது கண்டினியூ பண்ணனும் மேடம்”

“நல்லா யோசிச்சு முடிவெடு வாணி.  ஏன்னா அங்க அவ்வளவு சாதாரணமா தங்க யாருக்கும் இடம் கொடுக்க மாட்டாங்க.  நம்ம கரெஸ்பாண்டன்கிட்ட சொல்லித்தான் இந்த வாய்ப்பு உனக்கு வாங்கித் தந்திருக்கேன்”

“கண்டிப்பா, உங்க யாருக்கும் கீழிறக்கம் வராதபடி நடந்துப்பேன்”, என உறுதியளித்தவள், அன்றே சென்னை திரும்பினாள்.

அதிகாலை சென்னை வந்தவள், இந்துமதியிடம் இருந்த தனது பொருள்களைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றிருந்தாள்.

இந்துமதி, படிப்பை என்ன செய்வதாக இருக்கிறாய் என்று கேட்டதற்கும், அவள் சந்தேகம் கொள்ளாதபடி ஒரு பதிலைக் கூறிவிட்டு, தற்போது தனக்கு நல்ல வேலைவாய்ப்பு அமைந்திருப்பதால் செல்வதாகவும், பகுதி நேரத்தில் படிப்பைத் தொடர இருப்பதாகவும் கூறியிருந்தாள்.

பங்களூர் செல்வதாகக் கூறியவள், “அங்க போயிட்டு எங்க தங்கியிருக்கேன்னு சொல்றேங்கா.. உங்களுக்கு லீவு கிடைக்கும்போது கண்டிப்பா அங்க வரணும்”, என விடைபெற்றிருந்தாள்.

வேந்தன் வீட்டாரைப் பற்றி வினவ, “விருந்தும் மருந்தும் மூனு நாளுதான். அதுக்கு மேல எங்கயும் இருக்கக் கூடாதுக்கா!”, என பூடகமாகக் கூறிவிட்டுக் கிளம்பியிருந்தாள்.

……………………

தாயின் வார்த்தையைக் கேட்டவனுக்குள் குழப்பம்.

அன்று திருவைப் பற்றித் தன்னிடம் கூறியது, அதன்பின் தான் உதவுவதாகச் சொன்னது, அதன்பின் வாணியை தான் பார்க்காததும் நினைவில் வந்த இம்சித்தது.

அதிகாலையில் தனது அலைபேசிக்கு வந்த நோட்டிபிகேசன் சத்தம் கேட்டு அதை வேந்தன் பார்க்க,

வாணியிடமிருந்துதான் வந்திருந்தது.

மகிழ்ச்சியோடும், கேள்வியோடும் எடுத்தவனுக்கு… அதை வாசித்ததுமே மனம் இறுகிப் போயிருந்தது.

நீண்ட நேரமாக தனது வாட்சப்பிற்கு வாணி அனுப்பிய செய்தியையே பார்த்திருந்தான் வேந்தன்.

‘தாலி கட்ட உங்களை ரெடியா இருக்கச் சொல்லிட்டு, வேற மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிட்டுப் போக நினைக்கிற அளவு மோசமான பொண்ணு இல்ல நான். (அருகிலேயே அழுத நிலையில் உள்ள எமோஜிகள்)

எனக்காக நிறைய செய்திருக்கீங்க.  ரொம்ப நன்றி. (கும்பிடும் எமோஜிகள்)

பாட்டீமாகிட்ட என்னை மன்னிச்சிரச் சொல்லுங்க.  அவங்க நம்பிக்கைய நான் பொய்யாக்கிட்டேன். மீண்டும் அழும் எமோஜி

என்னைத் தேடி உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!

வந்தாலும், இனி யாருடனும், எங்கேயும் வரமாட்டேன்’, எனும் வார்த்தைகளைப் பார்த்தவனுக்குள்… பெண் தன்னிடம் பேசியதில் மகிழ்ச்சியும், அதேநேரம் வரமாட்டேன் என்ற வார்த்தையில் வலியும் வந்து போனது.

தனது வார்த்தைக்காகவா சென்றாள். 

அப்டியென்றால் தன்னிடமே கேட்டிருக்கலாம்.

அதற்காகவா வீட்டை விட்டுச் சென்றாள்.  யோசித்தவனுக்கு, தனது வார்த்தைகள் அவளிடம் இதே தொனியில்தான் இதுவரை இருந்து வந்ததையும், அதைக் காணாததுபோல கடந்து சென்றவள், தற்போது இதற்காக மட்டுமா தன்னைவிட்டுப் போனாள்? என யோசித்தபடி இருந்தவனுக்குள், இதைத் தவிர வேறு காரணமும் இருக்கிறது என்பதாகவே தோன்றியது.

அவளாக இனி தன்னைக் காண வரமாட்டாள் என்பது திண்ணம்.

ஆனால் தான் தேடிச் செல்வதாக இருந்தாலும், இனி தன்னை நம்பி உடன் வருவாளா?

அவனுக்குள் எழுந்த வினாவே வேந்தனை பரிகாசம் செய்தது.

வாட்சப் கால் செய்து பார்த்தான்.

எடுக்கப்படவும் இல்லை. அடுத்து அழைக்கவும் இல்லை.

வேலையின் பின்னோடு தெரிந்தவன் ஆசை முகத்தைக் காண என்ன செய்தான்?

…………………………..

அருகாமையில்….

நேசத்தின் அளவும்,

தேடலின் வீரியமும்,

காதலின் கணமும்,

காத்திருப்பின் வேதனையும்.

பாராத பரிதவிப்பும்,

பேசாத தொய்வும்,

காணா சோதனையும்

கேளாத வாதனையும்

தெரியாது!

………………………………..

Leave a Reply

error: Content is protected !!