am29

am29

ஆசை முகம் 29

 

திருமண வரவேற்பு…

கோலாகல வரவேற்பில், பசுஞ்சோலையில் பூத்திட்ட புத்தம் புது மலராய் வாணியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளையைப் போல கம்பீரமாக எழில்வேந்தனும் மேடையில் நின்றிருந்தனர்.

மகால் இருக்கும் சாலையில் மாலை முதலே வாகன நெரிசல்.

தொழில்முறை பழக்கத்தின் பெயரில் திரளான கூட்டம் நிரம்பி வழிந்தது.

வாணிக்கு அறிமுகம் செய்திட்டாலும், அவளால் வேந்தனது குறிப்பினை ஒரு நிலைக்குமேல் மனதில் இருத்திக் கொள்ள இயலாமல் தடுமாறினாள்.

வாணியின் தடுமாற்றம் முகத்தில் பிரதிபலித்தது கண்டு, “இன்ட்ரடியூஸ் பண்ணலைனா நல்லாயிருக்காதுடா.  இதுவரை நாம இன்வைட் பண்ணதுல ஒன் தேர்ட் ஆஃப் பீப்பிள்தான் வந்திருக்காங்க.  நீ ஃபீரியா இரு.  அதுக்காக முகத்தைத் தூக்கி வைக்காத!” கரிசனையோடு கூறிட ‘அப்பாடா’ என இலகுவாயிருந்தாள் பெண்.

நண்பர்கள் கூட்டத்தை மட்டும், “இவங்களோட அடிக்கடி நாம மீட் பண்ற மாதிரி இருக்கும் வாணி” எத்தனை தூரம் வேண்டப்பட்டவர்கள் என்பதை மெல்லிய குரலில் என்றாலும், அவர்களது நிலையை உணர்த்தும் வகையில் கூறி அறிமுகம் செய்தான்.

தோழமைகளின் பிள்ளைகள் பெரும்பாலும் பத்து வயது மதிக்கத்தக்க வயதினராய் இருந்தனர்.

திருமாறன் வந்து வாணியையும், வேந்தனையும் நேரில் சந்தித்து வாழ்த்திட, “இருந்து கண்டிப்பா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” உரிமைக் குரலில் கூறி அரவணைத்துக் கொண்டான் வேந்தன்.

மனதார வாழ்த்தியவன் வாணியிடம், “அப்பாகிட்ட சொன்னேன்.  இன்னும் கோபம் குறையல.  குறைஞ்சதும் ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்” என விடைபெற்றிருந்தான்.

இந்துமதி இன்னும் தனியொருத்தியாய் இருப்பதனால் அலுவலகப் பெண்ணோடு வந்திருந்து வாழ்த்திச் சென்றாள்.

அன்று அதிகாலை எழுந்து, பங்களூரில் திருமணம் முடிந்த கையோடு மதிய உணவை முடித்துக் கொண்டு வந்திருந்தனர்.

வேந்தனது வீட்டிற்குச் சென்று பால் பழம் உண்டதும், மகாலிற்கு கிளம்பி வந்திருந்தனர்.

வரவேற்பிற்கான மெனக்கெடல்கள். அதன்பின் வரவேற்பு துவங்கியது முதலே உட்கார முடியாத அளவிற்கு கூட்டம்.

வாணிக்கு கால்கள் இரண்டும் கடுக்கத் துவங்கியிருந்தது.

வேந்தனுக்கு தொழில் சார்ந்து அலைந்து திரிந்து பழகியிருந்ததால், அசௌகர்யத்தை உணரவில்லை.

மீனாட்சி, மித்ராதரணி என அனைவரும் குடும்பமாக வந்திருந்தனர்.

மித்ராதரணியின் பார்வையில், ‘எவ்வளவு எடுத்தச் சொல்லியும், இப்டி லூசுத்தனம் பண்ணிட்டியே’ என்பதாய்.  வாணி அதைக் கண்டு கொள்ளவேயில்லை.

ஆனால் அதிக நேரம் அங்கிருக்காமல், உடனே கிளம்பியிருந்தனர்.

கலைவேந்தன், வெற்றிவேந்தன் குடும்பத்தினர் அனைவரும் அங்குதான் இருந்தனர்.

கலைவேந்தனது மகளுக்கோ, ஃபைன் ஆர்ட்ஸ் மிஸ், பெரியம்மா ஆனதில் ஏக மகிழ்ச்சி.

பொதுவாக அனைத்து பிள்ளைகளுக்குமே வாணியின் வரவில் சந்தோசம்.

மறுநாள் தேர்வுகள் இருக்க, வேந்தனது அண்ணி, தம்பி மனைவி இருவரும் பிள்ளைகளோடு கிளம்ப எண்ணி அவர்களை அழைக்க, அசைவேனா என்றிருந்தார்கள்.

அனுசியாவோடு சேர்ந்து கொண்டு மிகவும் ஆர்வத்தோடு இருந்தனர்.

உற்றார், உறவினர் என கூட்டத்திற்கு குறைவில்லாமல் திருவிழாபோல அந்த மகால் காட்சியளித்தது.

பத்து மணிக்குமேல் கூட்டம் குறைந்திட, பத்தரை மணிக்குமேல் வீடு திரும்பியிருந்தனர்.

சத்தியேந்திரனுக்கு அழைப்பு போயிருந்தது.  ஆனால் குற்றமுள்ள நெஞ்சல்ல அது.  குரூரம் நிறைந்திருந்த நெஞ்சென்பதை அறிந்து கொள்ள முடிந்த தருணமது.

வேந்தன் நேரில் சென்று அழைப்பிதழைத் தர, “உங்க குடும்பம் நல்ல பாரம்பரிமானது.  அப்புறம் ஏன் இப்டி ஒரு ஓடுகாலிப் பொண்ணைப் போயி எடுக்கறீங்க!” என்றிட

“என்ன செய்யறது!  உங்களை மாதிரி ஆளுங்கனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்க வாழ்க்கையை எல்லாம், என்னை மாதிரி எவனாவது வந்து மீட்டெடுக்கலைன்னா அவங்களும் பாவந்தான சார்!”

வேந்தனது பதிலில் அமைதியாகியிருந்தவரைப் பார்த்து, “இந்த இன்விடேசன் என்னோட தனிப்பட்ட விருப்பம் காரணமா வந்து நேருல தர நினைச்சேன்.  எதுக்குன்னா, வாணிக்கும், எனக்கும் கல்யாணம்னு உங்களுக்குத் தெரியணும்ல.  அதுக்குத்தான்.  கண்டிப்பா அந்தப் பக்கம்கூட வந்திராதீங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என விடைபெற்றிருந்தான்.

வேந்தனது செயலில் வாணி அனைத்தையும் கூறிவிட்டாளோ என எண்ணி அவமான உணர்வு எழுந்தபோதும், அதை மறைத்து மிடுக்காய்த் தன்னைக் காட்டிக் கொண்டிருந்தார் சத்தியேந்திரன்.

ஆனால் அதைப்பற்றி வாணி மூச்சுகூட விடவில்லை என்பது வேந்தன் மட்டுமே அறிவான்.

——————————-

வாணி முன்பு பயன்படுத்திய அறையிலேயே, அவளது பொருள்கள் இருக்க, வந்ததும் அறைக்குள் நுழைந்து, தன்னை சீர் செய்து கொண்டவள், அசதியில் படுத்திருந்தாள்.

வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து, அனைவரையும் கவனித்து நிமிரும்போது மணி பனிரெண்டாகியிருந்தது.

அனுசியா, “நாள் நாளைக்குத்தான் நல்லாருக்கு வேந்தா. வாணி அசதில தூங்கிட்டா!  நீ உன்னோட ரூம்ல போயிப் படு!”

“பரவாயில்லை!  நாளைக்கே உங்க ஃபார்மல் எலலாம் பாத்துக்கலாம்.  ஆனா இப்ப அவளை எங்கூட அனுப்பி வைங்க!” அந்நேரத்தில் சிறுவனைப்போல அடம் பிடித்தான் வேந்தன்.

மகனது அடத்தைக் கண்டு, “தூங்குறவளை எழுப்பினா தூக்கம் கலைஞ்சு, அப்புறம் தூக்கம் வராதுல்ல வேந்தா!” சிறுபிள்ளைக்கு கூறுவதுபோல விளக்க

“அவளை நான் தூங்க வச்சிக்குவேன்!” நகராமல் நின்றிருந்தவனைக் கண்டு தலையால் அடித்துக் கொண்டார் அந்தத் தாய்.

“ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆரப் பொறுக்கலைனு சொல்ற மாதிரி இருக்கு வேந்தா!” ஆனாலும் வேந்தனது முடிவில் பின்வாங்காமல் இருந்தான்.

“அவ ரூம்லனா நீயும் தங்கிக்கோ!”

“இல்ல!”

“என்ன வேந்தா!” அலுத்தவர் “என்னவோ பண்ணு!” என்றதுமே, பெண்ணது அறைக்குள் நுழைந்திருந்தான்.

“வாணீ..” பெண்ணை எழுப்ப, கும்பகர்ணியைப்போல உறங்கிக் கொண்டிருந்தவளை, விடாது உலுக்கி எழ வைத்திருந்தான்.

“என்ன மாமூ…!”

“வா! நம்ம ரூம்ல போயி படுத்துக்கலாம்”

வேந்தனது பேச்சைக் கேட்டு எழுந்தவளுக்கு, கால்களை எடுத்து வைக்க முடியாத அளவிற்கு கால் வேதனை இருக்க, “ஆஹ்” கால்களைப் பிடித்தபடியே படுக்கையில் அமர்ந்து விட்டாள்.

அனுசியா பார்க்க, வாணி தடுத்தும் கேளாமல் பெண்ணை கைகளில் ஏந்தியிருந்தான்.

அனுசியா இருப்பதைக் கண்டு, “இல்ல என்னை இறக்கி விடுங்க மாமூ!” வாணியின் பேச்சை காதில் வாங்காமல், கைகளில் வாணியை ஏந்தியபடி வெளியேறியவன்,  “ம்மா என்னோட ரூம் டோரை ஓபன் பண்ணுங்க!”

“ஏன் சொல்லமாட்ட!” என்றவாறே கதவைத் திறந்து விட, உள்ளே நுழைந்தவன், “நீங்களே வெளியே பூட்டிருங்க!” என்றவாறு படிகளில் ஏறத் துவங்கியிருந்தான்.

அனுசியாவின் வார்த்தைகள் ஏதும் வேந்தனது காதில் விழவில்லை.

“ஏன் மாமூ, இறக்கிவிடாம இப்டித் தூக்கிட்டு!”

“ஷ்… பேசாம வா!” என தங்களது தளத்தில் இருந்த, இதுவரை யாரும் பார்த்திராத அறைக்குள் வாணியோடு நுழைந்தான்.

அறையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது.

படுக்கையில் பெண்ணை விட்டு, “எப்டியிருக்கு, நம்ம பள்ளியறை?”

பேச வார்த்தைகள் இல்லாமல், அதிசயமாய், சுற்றிலும் தெரிந்த தனது படங்களை ‘ஆவென’ப் பார்த்தாள் வாணீ.

கடற்கரையில் முதன்முதலாக வாணியைச் சந்தித்தபோது எடுத்த படம் ஒன்று, இன்னும் சில தருணங்களில் எடுக்கப்பட்ட படம் இரண்டு, ஆக மொத்தம் மூன்று.

விளக்கை அணைத்ததும், வேந்தனது சமீபத்திய படங்கள் ஆங்காங்கு.

மாறி, மாறி விளக்கைப் போட்டுக் காட்ட, பெண் இமை மூட மறந்து பார்த்தாள்.

வெவ்வேறு திசைகளில் இருந்தது.

அப்படங்கள் அனைத்தும் அற்புதமாக அச்சிட்டு, லேமினேசன் செய்யப்பட்டு, அதில் மட்டும் வெளிச்சம் படும்படியாக அமைக்கப்பட்டு இருந்தது.

வாணிக்கும் தனது படங்கள் எடுத்த தருணங்களை நினைவு கூர்ந்திட முயன்றாள். அது அனைத்துமே வாணி, வேந்தனிடம் தனது அவாவைத் தெரிவிக்கும் முன்பே எடுக்கப்பட்டவை.

வேந்தனது காதலின் ஆழத்தை, வார்த்தைகளின்றி விளக்கியிருந்தான்.

நிலவு வெளிச்சம் இருக்கும் பட்சத்தில், அதன் ஒளி அறையில் பாயும் படி அமைக்கப்பட்டிருந்தது.

நிலவொளி இல்லாத நாள்களில் செயற்கை நிலாவின் வெளிச்சம் அறையில் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது.

கால் வலியையையும் மீறி, படுக்கையில் இருந்து எழுந்தவள் “மாமூ” என வேந்தனை ஆரத் தழுவிக் கொண்டாள்.

தழுவிக் கொண்டவளின் முதுகைத் தடவிக் கொடுத்தடியே, “ரெஸ்ட் எடு வாணீ!  நாளைக்கு வேற ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!”

“இன்னுமா!”

“ம்ஹ்ம்!” என வாணியை அணைத்தவாறே, படுக்கைக்கு வந்தவன், ஆசை முகம் தனது கரங்களுக்குள் வந்ததை எண்ணிய, அளவற்ற மகிழ்ச்சியோடு, நினைவு வந்தவனாய் “கால் வலி இப்ப எப்டி இருக்கு?”

“நடக்கும்போதுதான் வலி தெரியுது”

படுக்கையில் எழுந்தமர்ந்தபடி வாணியின் கால்களைப் பிடித்துவிட முயல, கூச்சத்தில் கதறியிருந்தாள் வாணி.

அத்தோடு, “அய்யோ கூசுது.  இப்டித் தீடீர்னு காலெல்லாம் பிடிச்சு விட்டு என்னை சங்கடப்படுத்தாதீங்க மாமூ!”

“ஏன்? பிடிச்சு விட்டா என்னவாம்! அப்பதான வலி குறையும்! பேசாமத் தூங்கு!” என வாணியின் பிடிவாதத்தையும் மீறி இதமாய் கால்களைப் பிடித்துவிட, சற்று நேரத்தில் கண்ணசந்திருந்தாள் வாணி.

ஈகோ எழவே செய்யாத காதல், அன்பு, நேசம், நீங்காது வேந்தனது நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்க, வாணிக்கு இல்லாமல் போன அனைத்து உறவுகளுமாய், வேந்தன் ஒருவனே இனி இருப்பான்.

நித்தம், நித்தம் இதுபோன்ற ஆச்சர்யங்களைத் தந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவான்.

பதிலுக்கு பெண்ணும், தனது நேசத்தால் வேந்தனைத் தாங்கிக் கொள்வாள்.

கூறாத காதல் மீட்டாத வீணையாய், வீணாகிப் போகலாம்.  ஆனால் தனது காதலை செயலால் உணரச் செய்திட்டவன் உள்ளம் உல்லாசமாய் மாறியிருக்க, அந்த மயக்கத்திலேயே உறக்கத்தை தழுவியிருந்தான்.

……………………..

முகத்தை

முகவரியாகக்

கொண்டு

முன்னுரை எழுதிய

காதலில்…

முடிவுவரை

முகத் திருப்பல்கள்

முகச் சுழிப்புகள்

முடிச்சுகள்

முரண்கள் என பல

முட்டுக்கட்டை போட்டாலும்

முடங்கிடாது

மூச்சிருக்கும்வரை

நீளும்!

அதனால் காதல்

வாழும்!

…………………….

(இதோட நிறைவு செய்திடலாமா ஃபிரண்ட்ஸ்.

நூற்றில் 0.03 சதவீதம் இந்த மாதிரி பெண்ணோட அதீத (ஒரு பக்க காதல்) விருப்பத்தில்பேரில், தயக்கமாகவே ஆண்கள் திருமணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அந்தத் திருமணங்களில் சலிப்போ, வெறுப்போ, வருத்தமோ, ஏக்கமோ, நிராசையோ, கழிவிரக்கமோ இல்லாமல் இருசாரருமே நிறைவான சந்தோசத்தோட வாழறாங்க.  நான் பார்த்த அதிகபட்ச வயது வித்தியாசம் 16 ஆண்டுகள். இந்தக் கதையில ஒரு வருடம் கூடுதலாக சொல்லிட்டேன்.  சிலருக்கு இதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாது.

ஆனா நான் கண்ட அதிக வயது வித்தியாசமுள்ள மூன்று ஜோடிகளைக் கொண்டே இந்தக் கற்பனை உதயமானது.

அந்தப் பெண்கள் ஒரே வயதிலோ, ஐந்து வயது அல்லது அதற்கும் குறைவான வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டவர்களைப்போல, தனது வாழ்க்கைத் துணையைப் பற்றிய எந்த கருத்து வேறுபாடும் இன்றி இருக்கறதை ஆச்சர்யமாகவே இன்னும் கடக்கிறேன்.  ஆனாலும் அவர்களை எண்ணி மகிழ்ச்சியே.

எதனாலும் படிச்சிட்டு உங்களோட கருத்தை என்னோட பகிர்ந்துக்கங்க டாலிஸ்…

இதுவரை இந்த கதையோடு பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள்!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!