am4

am4

ஆசை முகம் 4

வேந்தன் அலுவலகத்திற்கு சென்றபின், நிதானமாக மகனது அறைக்குள் நுழைந்தார் அத்தாய்.

சோபா, டீ டேபிள் மட்டும் ஒரு புறத்தில் இருக்க, சிங்கிள் காட் படுக்கை, சுவரில் மாட்டப்பட்டிருந்த டிவி, வார்ட்ரோப் ஒன்றும் இருந்தது. அட்டாச்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட். பெரும்பாலும் அங்கேதான் இருப்பான் வேந்தன்.   அந்த அறையில் இருந்து மேல்தளத்திற்குச் செல்லுவதற்கு ஏதுவாக படிகள்.

இந்தத் தளத்திற்கு அவசியம் என்றால் மட்டுமே செல்வான்.

முழங்கால் வலி காரணமாக பெரும்பாலும் தரைத்தளத்தை மட்டுமே பயன்படுத்துவார் அனுசியா.

அலைபேசியை அணைத்து கையில் எடுத்துக் கொண்டு, எந்த இடர்ப்பாடும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கருத்தோடு தொடர்ந்தார்.

எழில்வேந்தனை பிரசவித்த தருணம் நினைவிற்கு வந்தது. புன்னகை பூசிக்கொண்டது.

தன்னை இதுவரை எதற்காகவும் கஷ்டப்படுத்தாத மகன்.

தந்தை, தாய் இருவரையும் அவனைப்போல தாங்க முடியாது.

சிறுவயது முதலே அதிக கரிசனத்தோடு இருப்பான்.

அப்போதே தாயை விட்டு உண்ண மாட்டான்.  மற்ற மகன்கள், மகள்கள் அப்டியல்ல. நிறைந்தால் போதும் என்று எழுந்து சென்றுவிடுவர்.

ஐந்து மக்களோடு, உடன் மாமனார், மாமியார் என மொத்தம் ஒன்பது வயிறு. இரண்டு சக்கர வாகனப் பழுது நீக்கி கிடைக்கப்பெற்ற வருமானத்தில் வயிராற உணவு, வருடத்திற்கு இரண்டு ஆடைகள் அவ்வளவுதான் முடிந்தது.

அத்தனை பேருக்கும் உணவு மட்டுமே சாத்தியமாக இருந்தது. நிறைவு நீண்ட காலம் சாத்தியமாக இருந்ததில்லை.

அத்துணை பிரச்சனைகளிலிருந்த குடும்பத்தை மீட்டெடுத்த விடிவெள்ளி எழில்வேந்தன்.

அந்த காலகட்டத்தில் உணவை உண்டு எழும்போது, தான் உண்டதில் பாதி உணவுப் பொருள்களை தாயிக்கு என வைத்துவிட்டு எழுவான் வேந்தன்.

அனுசியா எவ்வளவு மறுத்தாலும், தாயை உண்ணச் செய்துவிட்டே அகல்வான்.

வறுமை உணர்ந்து வளர்ந்த மகன்.

வயிறு நிறைந்தால்போதும் என்று ஒருநாளும் மறந்தும் எழுந்ததில்லை.

இன்றுவரை அப்டித்தான் இருக்கிறான்.

“நிறையவே இருக்கு வேந்தா.  ஒழுங்கா நீயே சாப்பிட்டிரு”, என்று தாய் வைதாலும், வைப்பதை மறக்க மாட்டான்.

மற்றவர்கள் இதைக் கவனித்தார்களா, இல்லையா என்பதுகூட இன்றுவரை அனுசியாவிற்குத் தெரியாது.

அத்தகைய மகன், இன்று வாலிப வறுமையில் சிக்கிக்கொண்டுத் தவிக்கிறான்.

மீள்வானா என்று தெரியாமல், மீளும் வழி தேடி கோவில், கோவிலாக அர்ச்சனைகளையும், வேண்டுதல்களையும் அத்தாய் நிறைவேற்றி வருகிறார்.

தன்னால் அவனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாத வருத்தத்தில், இதயமே ரணமாகிப் போயிருந்தது அந்தத் தாயிக்கு.

தகுந்த நியாயம் செய்யத் தவறிய தாயாய் இருந்துவிட்டோமோ என்ற வருத்தமே, மகனிடம் இன்று பொய்க்கோபம், கடுமை தரிக்கச் சொன்னது.

அவனுக்கேற்ற ஒருத்தியை தன்னால் கண்டுபிடிக்க இயலாதா?

வேண்டுதலோடும், விடாமுயற்சியோடும் இருந்தவருக்கு, இன்று எதாவது அடுத்த கட்டத்திற்கான வாய்ப்புகள் சாத்தியப்படாதா என்கிற ஏக்கத்தோடு பார்வை அறை முழுவதும் படர்ந்தது.

அறைக்குள் இருந்த சுத்தம், பராமரிப்பு இரண்டுமே மகனைப்பற்றி அறிந்ததுதான் என்றாலும், புன்முறுவலோடு கடந்தார்.

மியூசியம் போலக் காட்சியளித்த அறைக்குள் நுழைந்ததும் ஏதோ ஒரு நல்ல உணர்வு தொற்றிக் கொண்டது அனுசியாவிற்கு.

தனியொருவனுக்கு அத்தனை பெரிய அறையா என்று யோசிக்குமளவிற்குத்தான் நீண்டு பெரியதாக இருந்தது.

மாடுலர் கிச்சன் ஒரு புறம்.  அதனை ஒட்டி நால்வர் அமரும் வகையில் டைனிங் டேபிள்.

தான் பெண்களது வீட்டிற்குச் சென்றால் எழில்வேந்தனுக்குத் தேவையானதை அவனே தயாரித்து உண்டு கொள்வான் என்பது அறிந்ததே.

ஆனால் இந்தளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை இன்றுதான் நேரில் வந்து கவனிக்கிறார்.

ஒவ்வொன்றையும் அனுபவித்து, ரசித்து வடிவமைத்திருந்த பாங்கு, அனுசியாவிற்கு மகனின் மீதான பெருமிதத்தை கூட்டித் தந்ததென்னவோ உண்மைதான்.

படுக்கையாகட்டும், பணி செய்வதற்காக இருந்த கணினியாகட்டும் ஒவ்வொன்றிலும் ஒரு நுணுக்கம், நேர்த்தி.

நூலகம் போன்ற சுழலும் மரத்தாலான ஷெல்ஃப், அதில் படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் இருந்த அடுக்கு, இனி படிக்கக் காத்திருக்கும் புத்தகங்கள், படித்து முடித்தவை என ஒவ்வொன்றும் தனியான வண்ணத்தில் பிரித்து அடுக்கப்பட்டிருந்த முறைமை அனைத்துமே கவர்ந்தது. கண்ணாடியிலான அந்த இடம் படிக்காதவர்களைக்கூட அமர்ந்து படிக்கத் தூண்டும். நீள சோபா ஒன்றும், அமர்ந்து படிக்க ஏதுவாக மேசையில் ஸ்டடி லேம்ப், நாற்காலி நீண்ட நேரம் அமர்ந்து படிக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது.

தினசரி நடைபயிற்சிக்கு சென்றுவிடுவான்.  தவிர்க்க இயலாத நிலையில் வீட்டிலேயே பயிற்சி செய்ய ஏதுவாக சிறியளவில் பயிற்சி கூடம் ஒன்றும் அதனுள்ளேயே அமைக்கப்பட்டிருந்தது.

பால்கனிக்கு சென்றவருக்கு, குறுஞ்செடிகள் பராமரிக்கப்பட்டு பசுமையாக இருந்தது.  அங்காங்கு மலர்கள் பல வண்ணங்களில் இருந்தது. அதனை ஒட்டி வரைவதற்கேற்றார்போல அமைக்கப்பட்டிருந்த தடுப்பு.

அமரும் வகையில் நீண்ட கால்களையுடைய முக்காலி. வரைய ஏதுவாக ஸ்டான்ட்.  அதிலேயே வரையப் பயன்படும் சாதனங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் பாதி வரையப்பட்ட நிலையில் படம் ஒன்றிருந்தது.  இன்னும் முகம் முழுமைபெறாமல் இருந்தது.

பால்கனியில் மறுபுறம் போடப்பட்டிருந்த மூங்கில் நாற்காலியில் சென்று அமர்ந்தவர் வெளியே பார்வையை வீசினார். அந்த தெரு முழுவதும் இருபக்கத்திலும் நன்றாகத் தெரிந்தது.

ஒட்டி அமைந்திருந்த மகிழம்பூ மரத்திலிருந்து வந்த மனமும், வேப்பம்பூவின் வாசமும் இதமாய் நாசியைத் தூண்டியது. அமர்ந்த நிலையிலேயே கடந்து வந்த அறைக்குள் பார்வையை ஓடவிட்டார்.

கசகசவென்று இல்லாமல் அனைத்து வதியும் அந்த தளத்திற்குள்ளேயே நேர்த்தியாக இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது.

தனது எதிர்பார்ப்புகள் வீணானதாய் மனம் ஒரு கனம் கலங்கியது. 

எதுவுமே இல்லையே என யோசித்தபடியே கீழே அதுவரை பார்வையை ஓடவிட்டவர், அமர்ந்தபடியே நாலாபுறமும் நோக்கினார். முழுவதும் பார்வைக்குள் வந்தபோது, சுவரில் லேமினேசன் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்த படங்கள் நிதானிக்கச் செய்தது. படங்களில் ஏதோ வித்தியாசம் உணர்ந்தார்.

எழுந்து நிதானமாக வந்து ஒவ்வொன்றாக பார்த்தவருக்கு, கண்டுபிடித்துவிட்டதாக மனம் கூப்பாடு போட்டது.

ஒற்றை மூக்குத்தியில், நீண்ட பின்னலை முன்னால் போட்டபடி அமைந்திருந்த பெண்ணது படங்கள். மொத்தமே நான்குதான் அங்கு மாட்டப்பட்டிருந்தது.  ஒவ்வொன்றிலும் வேறுவிதமான ஆடைகள்.

உள்ளே நடந்து வரும்போது அது பார்வைக்கு கிட்டவில்லை.  பால்கனியில் அமர்ந்து கூர்ந்து பார்த்தால் தெரியும் வகையில் சுவரில் அழகாய் ஒவ்வொன்றும்  அமைக்கப்பட்டிருந்தது.

சேலை, தாவணி, சுரிதார் மட்டுமே அணிந்த வகையிலான படங்கள்.

நல்ல சந்தன நிறம்.

மாசு மருவற்ற புன்முறுவலான வசிய முகம்.

உதடுகள் பீட்ரூட் நிறத்தில் ஆரஞ்சு சுளைகளை நினைவுறுத்தியது.

பூசினாற் போன்ற தேகம்

ஆனால் அனைத்துமே ஒரே சாயலில்… ஆனால் வேறு வேறு விதமான அமைப்பு நிலையில் வரையப்பட்டிருந்தது.

மிகவும் அருகே நின்று கவனித்துப் பார்த்தபோது, அனைத்தும் வேந்தனது கைவண்ணம் என்பதுவும் புரிந்தது.

அனைத்திலும் எழில் என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

கையில் இருந்த அலைபேசியினை உயிர்ப்பித்து, இருந்ததில் அனைத்துமே சிறப்பாக இருந்தபோதிலும், தனக்கு நிறைவாய்த் தோன்றியதை படமெடுத்துக் கொண்டு, எதிலும் தான் வந்து சென்ற தடயங்களை தவறுதலாக விட்டுவிடாமல், அறையைவிட்டு நிறைவோடு வெளியேறினார்.

நிதானமாக மதிய உணவிற்கான வேலைகளைச் செய்யப் பணித்தார்.

கலைவேந்தன், வெற்றிவேந்தனது மக்கள் வழமைபோல அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றனர்.

உணவு நேரத்தில் வந்து நின்ற கலைவேந்தனது மகள் வர்ஷினி, “பாட்டிமா என்ன சாப்பாடு”

“ஏண்டாம்மா, உங்கம்மா எங்க போனா”

“தெரியலை.  பசிக்குது”, என்று வந்தவளைக் கவனிக்கச் செய்து அனுப்பினார்.

விடுமுறைக் காலத்தில் தாய் வழிப் பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்து அன்றுதான் திரும்பியிருந்தார்கள். அதனால் பழையபடி வேலையைத் துவங்க சுணக்கமாயிருந்திருப்பாள் மருமகள் என அனுசியாவிற்கும் தெரியும்.

அத்தோடு தாய் வீட்டு பெருமையை, ஓரகத்திகள் பேசி முடிவுக்கு வர, இன்னும் ஒரு வாரமேனும் ஆகக்கூடும்.

மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த வேந்தனிடம், “மிச்சம் சொச்சமெல்லாம் இனி தட்டில வைக்கிற வேலை வச்சிக்காத… இனி நான் சாப்பிட மாட்டேன்”, என கறாராய்ப் பேசிட

முகமே வாடிப் போனது வேந்தனுக்கு.

மகனது வாட்டம் மனதிற்குள் வேட்டாக வலியை உண்டு செய்திட, “உம்பொண்டாட்டி வந்தபின்ன அவளுக்கு வையி. யாரு வேணானா.  நானெல்லாம் இனி மீந்ததை சாப்பிட மாட்டேன்”, என புன்முறுவலோடு கடந்தார்.

வேந்தனுக்கு தாயின் மாற்றங்கள் சிலிர்ப்பை உண்டு செய்தாலும், அப்டி அந்த அறையில் எதைப் பார்த்திருப்பார் எனும் யோசனையோடு, “ம்மா  உங்களுக்குப்பின்ன தான் யாராயிருந்தாலும்”, சட்டைக் காலரை தூக்கி பின்னே விட்டபடியே கூறிட

வேந்தனுக்கு அந்தப் படங்களையெல்லாம் தனது தாய் கூர்ந்து கவனித்திருக்க வாய்ப்பில்லை என்கிற கணிப்பு.

“எல்லாம் நீ சொல்லுவ.  ஆனா வரவ எப்டி விட்டுக் குடுப்பா”

“ஏன்?”

“ஏன்னா?  இப்டி இன்னும் ஒன்னும் தெரியாம இருக்கறதாலதான் கூடிவர மாட்டிங்குது.  இனியாவது நான் சொல்றதைக் கேளு.  ஒழுங்கா நான் சொன்னமாதிரி மிச்சம் வைக்காம சாப்பிட்டு எந்திரிச்சுப்போ”, என நகர்ந்திருந்தார்.

இதிலென்ன வரும் என்று யோசித்தவாறே உண்டு எழுந்தவனை, அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு தானும் உண்டு, மீராவிற்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பினார்.

‘இந்த மாதிரி பொண்ணு எதனா அமைஞ்சா சொல்லுடியம்மா.  அவனுக்கு இந்த மாதிரி டேஸ்ட்லதான் எதிர்பாக்கறான்போல. இது தெரியாம நாமளும் தேடிட்டு இருந்திருக்கோம்’ என அனுப்பிவிட்டு, சற்று யோசித்தவர், “வெள்ளிக்கிழமை கபாலீஸ்வரர் கோவிலுக்கு போயிட்டு வருவோமா?”, என அடுத்த மெசேஜையும் அனுப்பிவிட்டு படுக்கைக்குச் சென்றார்.

நீண்ட நாளுக்குப்பின் சற்றே நிம்மதியான இளைப்பாறல் அத்தாய்க்கு.

நம்பிக்கையோடு காத்திருந்தார்.

நல்ல செய்தி விரைவில் வருமென்று.

///////////////

அடுத்த கட்டமாக நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதைப் பற்றி பேசாமல், வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தாள் எழில்வாணி.

எதேனும் இக்கட்டில் மாட்டிக் கொள்ளக்கூடாதல்லவா.

பொழுது போகவில்லை என்று ஆரம்பித்ததுதான்.  ஆகையினால் தற்போது செல்லும் வகுப்புகளே அதீதம்தான் அவளுக்கு.

ஆகையினால் பேராசை கொண்டு எந்த வம்பையும் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டாம் என அமைதி காத்தாள்.

நுண்கலைக்குத் தேவையான பொருள்கள் வாங்கும் நிறுவனத்திற்கு தன்னாலும், தன்னால் நடத்தப்பட்டு வரும் வகுப்புகளாலும் நல்ல வருமானமே.  தாங்களே தனித்து ஏற்று நடத்தினால்கூட இலகுவாக சமாளிக்க இயலும்.  அப்படியிருக்க, வேறு கட்டிட நிறுவனங்களை கைகாட்டியது சற்றே பெண்ணை பின்வாங்கச் செய்திருந்தது.

எல்லாம் புத்தகங்கள் கற்றுக் கொடுத்ததுதான்.

தமிழை மட்டுமல்லாது, அனைத்துத் துறைகளையும், வெவ்வேறு வகையினாலான பலவித கருத்துகளையும் தரம் வாய்ந்த புத்தகங்களில், பலவித மொழிபெயர்ப்பு மற்றும் ஆங்கில புத்தகங்களின் வாயிலாகப் பயின்றிருந்த அனுபவம் தற்போது கைகொடுத்தது.

அதனால் நிதானமாகவே யோசித்துப் பின்வாங்கியிருந்தாள்.

அழைத்து அவர்களாகவே மேற்கொண்டு பேசினால் மட்டும், மேற்படி வகுப்பை எடுக்க ஒத்துக் கொள்வது எனத் தீர்மானித்து ஒதுங்கிவிட்டாள்.

நேரடி வகுப்பு எடுப்பதற்கான ஏற்பாட்டை அந்நிறுவனம் தனித்து செய்யும் நிலையில், மிகவும் சொற்ப நபர்கள் வந்தாலும் லாபமே.  அப்படியிருக்க அவர்கள் இன்னும் அதிகமாக லாபம் சம்பாதிக்க எண்ணியே தன்னை வெளியிடங்களில் (நன்கொடை)ஷ்பான்சர் கேட்க ஊக்குவிக்கிறார்கள் என்பதும் பெண் உணர்ந்திருந்தாள்.

இடையிடையே நேரம் கிடைத்தபோது, வேண்டிய கல்லூரியில் கணிதம் படிக்க வேண்டி விண்ணப்பித்தாள்.

ஒன்றிற்கு மேற்பட்ட கல்லூரிகளில் விண்ணப்பித்ததோடு, நுண்கலை வகுப்புகளில் கவனம் செலுத்தலானாள்.

சற்றும் எதிர்பாரா விதமாக அன்றைய தினம் விடிந்திருந்தது.

அறைக்குள் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவளை, “வாணி, உங்களைத் தேடி விசிட்டர்”

“கொஞ்சம் வயிட் பண்ணச் சொல்லுங்கோ மேடம்.  இன்னும் பத்து நிமிஷத்துல வந்திறேன்”

சரியென்று சென்ற பத்தாவது நிமிடம், கேள்வியோடு கீழே வந்தாள் பெண்.

முத்துரங்கனின் நண்பர் சத்தியேந்திரன் மனைவியோடு வாணியைக் காண வந்திருந்தார்.

நிச்சயமாக பெண் அவரையும், குறிப்பாக அவரது மனைவியை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது தடுமாற்றத்திலேயே உணர்ந்து கொண்டிருந்தார்.

எளிதாக வாணியை சாதாரண நிலைக்குக் கொண்டு வந்தவர், “முத்து ஃபோன் பண்ணியிருந்தான்.  நீ ஏதோ கிளாஸ்லாம் எடுக்கறதா சொன்னான்”, என்றதுமே பெண் புரிந்து கொண்டாள்.  பின் அவரின் நுண்கலை சார்ந்த வினாக்களுக்கு உரிய பதிலைப் பகிர்ந்து கொண்டாள்.

“டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் இதுதான்மா நான் கான்சன்ட்ரேட் பண்ணிட்டு இருக்கேன்”, என்றவர் பெண்ணுக்கு தேவையான கலைப் பொருள்களைப் பற்றி கேட்டறிந்து கொண்டு, அதைப்பற்றி விவாதித்தார்.

“நம்ம ஸ்டோர்லயே நீ சொல்ற எல்லாமே கிடைக்கும்மா.  நீ அங்கேயே வாங்கிக்கோ. உனக்குச் செய்யாம, வேற யாருக்குச் செய்யப் போறேன்”, என்றவர் மனைவியைப் பார்த்து,

“ரொம்ப பொறுப்பா இப்பவே இருக்கும்னு அடிக்கடி முத்து சொல்வான்.  அதான் எழிலைப் பாக்க நான் உன்னையும் கூடக் கூட்டிட்டு வந்தேன்”, என்றதுமே எல்லாம் மாமாவின் புகழாரத்தால் கிடைத்த வெகுமதி என்பதைப் புரிந்து “அப்டியெல்லாம் ஒன்னுமில்லை.  பொழுது போகலை.  எனக்குத் தெரிஞ்சதை இப்டிக் கிளாஸ் எடுக்கலாம்னு தோணுச்சு.  சார் அதிகப்படியா சொல்றாங்க”, என சத்தியேந்திரன் மனைவியிடம் தன்னடக்கத்தோடு கூறினாள் வாணி.

வாணியிடம் பயிற்சியைப் பற்றியும், இதனை ஆன்லைனில் எப்படி நடத்துகிறாய் என்பது பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

“சிக்ஸ்த் சம்மர் வகேசன்ல இருந்து விளையாட்டாப் போனது.  இப்ப கை குடுக்குது”, என்றவள், “ஸ்கைப்லதான் கிளாஸ் பாக்கறேன் சார்.  இன்னும் கொஞ்ச நாள் போனபின்ன லேப் ஒன்னு வாங்கிக்கணும்”, என்க

“என்ன வேணுமோ எங்கிட்ட சொல்லு.  நானே உனக்கு பண்ணித்தரேன்”, என அவராகவே முன்வந்திட

பதறிப் போனவள், “சும்மா இருக்க போரா இருந்ததுன்னு ஆரம்பிச்சதுதான் சார்.  காலேஜ் போக ஆரம்பிச்சிட்டா டைம் கிடைக்குமான்னு தெரியலை.  அதனால் பின்னாடி பாத்துட்டு வேணுனா வாங்கிக்கலாம்”

முத்துரங்கன் கூறியபோது சாதாரணமாகத்தான் கேட்டிருந்தார்.  அதன்பின் எதேச்சையாய் கடையில் அந்த பகுதியில் வியாபாரத்திற்கு நின்றபோது, வகுப்புகளுக்கு என சிலர் வாங்கிச் சென்ற உபகரணங்களையும், அதில் திடீரென்று கிடைத்த வருவாயையும் கூர்ந்து கவனிக்கச் செய்து, வந்தவர்களிடம் விசாரித்தார்.

அவர்களும் விசயத்தைக் கூறிட, என்னவென்று விசாரித்தபோது, விசயம் புரிந்தாற் போலிருக்க, இருந்த பணிகளையெல்லாம் அப்படியே போட்டவர், வேலையாக இருந்த மனைவியை, “மனுசனோட அவசரம் புரியாம என்ன பண்ணிட்டுருக்க.  அது லேடீஸ் ஹாஸ்டல்.  நாமட்டும் போயி நின்னா, ஆம்பளைனு பாக்க விடலன்னா போன காரியம் வீணா போயிரும்.  மசமசன்னு நிக்காம, சீக்கிரமா கிளம்பி வா.  வந்து வீட்டு வேலையப் பாத்துக்கோ”, எனக் கத்தி கையோடு அழைத்து வந்திருந்தார் சத்தியேந்திரன்.

தற்போது அப்படியே மாறி அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தார் வாணியிடம்.

“உனக்கு என்ன உதவினாலும் எங்கிட்ட சொல்லு. ஒரு நாள் எப்ப ஃபீரினு சொன்னா நம்ம கடைக்குக் கூட்டிட்டுப்போக ஏற்பாடு பண்றேன்”, எனப் பேசியவர் மனைவியிடம் பணத்தைக் கொடுத்து, வாணியிடம் கொடுக்கப் பணித்தவர், “செலவுக்கு வச்சுக்கோம்மா”, என்றிட

“எனக்கு செலவெல்லாம் ஒன்னுமில்லை சார். மாமா தந்துட்டுப் போனதே எனக்குப் போதும்.  அதுலயே நான் பாத்துப்பேன் சார்.  நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்.  பணமெல்லாம் வேணாம் சார்”, என மறுக்கவே

முத்துரங்கன் அழைத்துச் சென்று காண்பித்து ஒரு மாதம் நிறைவு பெற்றிருக்க, இப்போது திடீரென்று வந்து பாசமழை, நேசமழை எனப் பொழிந்தவரைப் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தாள் வாணி.

“அப்டிச் சொல்லக் கூடாதும்மா.  கண்டிப்பா வாங்கிக்கோ”, என வற்புறுத்திட அவரது மனைவி, கணவரின் பேச்சைத் தட்டாமல் வாணியிடம் பணத்தைத் திணிக்க, அந்த நேரம் பெண்ணுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

நேரடி வகுப்பிற்காக பெண் தங்களை மீண்டும் தொடர்பு கொண்டால், நன்கொடை சார்ந்த விசயங்களுக்கு பெண்ணையே வெளியில் அனுப்பலாம் என காத்திருந்தவர்களுக்கு, வாணி தொடர்பு கொள்ளாதது ஏமாற்றமே.

அதனால் அவர்கள் வந்தவரை வரட்டும், மேற்கொண்டு பேசலாம், விட்டால் உள்ளதும் இல்லையென்றாகிவிடும் என சமயோசிதமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்து அழைத்திருந்தனர்.

பத்து நிமிடங்கள் வந்தவர்களை காக்க வைத்தபடியே அனைத்தையும் அலைபேசியில் பேசிவிட்டு, அவர்கள் கூறிய தேதியில் தனக்கு காலேஜ் கவுன்சிலிங் இருக்க வாய்ப்பு இருப்பதால் அதற்கு முன்னதாக வைத்துக் கொள்வதென்றால் தனக்கு சரியாக இருக்கும் என்று கூறிவிட்டு வைத்தாள் வாணி.

அனைத்தையும் கேட்டிருந்தவருக்கு அனைத்தும் புரிந்திட, வாணியிடம் விசயத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்.

“இப்டி யாரோ சொல்றாங்கனு எதுலயும் போயி சிக்கல்ல மாட்டிக்க வேணாம்மா.  நான் எதுக்கு இருக்கேன்.  என்ன ஏதுன்னு சொன்னா நானே உனக்கு எல்லாம் பண்ணித்தர ஏற்பாடு செய்யறேன்.  உனக்கு எப்போ நேரங்கிடைக்குதோ நம்ம காரை அனுப்பறேன்.  நீ நம்ம வீட்டுக்கு வந்தாலும் சரி, இல்லைனா கடைக்கு வந்தாலும் பொறுமையா பேசி நல்ல முடிவெடுக்கலாம்”, என வாணியை சம்மதிக்க வைத்துவிட்டு, மனைவியோடு விடைபெற்றுக் கிளம்பியிருந்தார் சத்தியேந்திரன்.

வாணிக்கு யோசிக்க வேண்டியிருந்தது.

ஆனால் மனம் இலேசாகாததால், அன்று மாலையில் வெளியில் ஏதேனும் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தாள் வாணி.

Leave a Reply

error: Content is protected !!