am6

am6

ஆசை முகம் 6

 

கல்லூரி கலந்தாய்வு தேதியை மாமனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி முத்துரங்கனுக்கு அழைத்திருந்தாள் வாணி.

அப்போது சத்தியேந்திரன் மனைவியோடு வந்து விடுதியில் தன்னை சந்தித்துப் பேசியதைப் பகிர்ந்து கொண்டவள், அதற்குமுன் தான் உதவி கேட்டிருந்த நிறுவனம் தொடர்பு கொண்டதைப் பற்றியும் கூறினாள்.

“நீயே உனக்கு எது சரினு யோசிச்சு செய்டா.  மத்தவங்க என்ன நினைப்பாங்களோனு எந்த வம்புலயும் மாட்டிக்காம, எதுனாலும் நிதானமா யோசிச்சு செய்யி! நீ எது செஞ்சாலும் அது கண்டிப்பா நல்லா வரும்டா!”, என மருமகளுக்கு முழு சுதந்திரத்தோடு, தைரியமும். வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். சத்தியேந்திரன் வந்து பேசியதைப் பற்றி எண்ணித்  தயங்காமல், நேரில் சென்று அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டாள்.

தன்னால் யாரிடமும் எந்த நன்கொடைக்கும் அலைய முடியாது என்பதை தெளிவாக நேரில் உரைத்தவள், “நீங்க எல்லாத்தையும் ஏத்துக்க முன்வந்தா, உங்கட்டயே எல்லா மெட்டீரியலும் வாங்கற மாதிரி ஏற்பாடு பண்ணித்தர முடியும்.  இல்லனா இனி அவங்கவங்க வசதிக்கு எங்க முடியுதோ மெட்டீரியல்ஸ் அங்க கலெக்ட் பண்ணிக்க சொல்லலாம்னு யோசிச்சிருக்கேன் சார்!”, என்றதுமே

எதுவுமே இல்லை என்று போவதற்கு, ஒரு முறை ஏற்றுக்கொண்டு அதனால் உண்டாகும் இலாப நட்டத்தை அறிந்து, அடுத்தடுத்து முடிவெடுக்கலாம் என்கிற யோசனைக்கு வந்திருந்தது அந்நிறுவனம்.

ஏனெனில் ஒரு மாதத்திற்குள்ளாகவே வாணியும், வாணியிடம் பயில எண்ணியவர்களும் ஏற்படுத்திய வருமான உயர்வு அவ்வாறு நிதானிக்கச் செய்திருந்தது.

“பிகினிங்ல த்ரீ டேஸ் கோஸ் பாக்கலாம்.  அப்புறம் எப்டிப் போகுதுன்னு பாத்துட்டு நெக்ஸ்ட் செட்யூல் டிசைட் பண்ணலாம் மேடம்”, என்றிருந்தனர்.

கல்லூரி கவுன்சிலிங்கிற்கு முன்பே நுண்கலை நேரிடை வகுப்புகளுக்கான தேதியை கலந்தாலோசித்துக் கூறியிருந்தாள்.

…………………………

வேந்தனுக்கு இளைஞனைப்போல வாணியின் பின்னோடு திரிய ஆசையிருந்தபோதும், சமூகத்தில் தனக்கிருந்த மதிப்பு மற்றும் இதர விசயங்கள் தயங்கச் செய்ததோடு, லஜ்ஜையாகவும் இருந்தது.

நினைவுகள் நீங்காமல் இருந்தபோதும், பெண்ணைக் காண, பெண்ணைப் பற்றி அறிய என பிறர் சந்தேகித்திராதபடி மனதிற்குள் அட்டவணை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டான்.

அதன்படி சிறுகச் சிறுக தேனீயைப்போல பெண்ணது நடைமுறைகளை, இன்னபிற விசயங்களை, தனது மனமெனும் தேனடைக்குள், பெண்ணது உலாவல்களின்போது உற்சாகமாகச் சேகரிக்கத் துவங்கியிருந்தான்.

பெண் பெரும்பாலும் வெளியே செல்லவில்லை என்பதே முதலில் வேந்தனது கருத்தில் பதிந்திருந்தது. ‘உலகத்தைச் சுத்தி வரவனுக்கு, இப்டி உள்ளேயே அடைஞ்சிருக்கிற மாதிரிப் பொண்ணாக் காட்டிருக்கியே கடவுளே!  எல்லாம் சரி வருமானு தெரியலையே!’ என மனம் சுணங்கினாலும், செயல் சுருங்காமல் அதற்கான பணிகளில் ஈடுபட்டான்.

அப்படி என்றேனும் பெண் செல்லும் இடங்களில், நுண்கலைக்குத் தேவையான பொருள்களை சேகரிக்கச் செல்லுமிடம் கவனத்திற்குள் வந்திருக்க குறித்துக் கொண்டான்.

‘பொழுது போகாததுக்கு, பெயிண்டிங் மாதிரி பொழுதைப் போக்க பிளான் பண்ணியிருக்கா போல’ என எண்ணிக் கொண்டான்.

இதில் யாரையும் துணைக்கு அழைக்க முடியாத தனது நிலையை எண்ணி சற்றே வருத்தமும் வந்திருந்தது.

தனி நபரை விசாரித்து அறிந்து கொள்ள ஆயிரம் வழிமுறைகள் இருந்தாலும், அதில் உள்ள பின்னடைவுகளை எண்ணி பின்வாங்கியிருந்தான்.  மேலும் தான் சேகரித்து அறிந்து கொள்ளும்போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அடிமையாகியிருந்தான்.

இதற்கிடையே கோடை விடுமுறைக்கு திட்டமிட்டிருந்த சுற்றுலா செல்லும் நாளும் நெருங்கியிருந்தது. நண்பர்கள் குடும்பத்தை சுற்றுலா அனுப்பிவிட்டு, தனக்கு தலைபோகும் வேலை இருப்பதாகக் கூறி கழன்று கொண்டிருந்தான் முதன் முறையாக.

ஆண்கள் அனைவரும், “எதுக்குடா அப்ப இந்த ட்ரிப்!  நீ வந்தாதான் நல்லா இருக்கும்.  நீ இல்லைனா நல்லாவே இருக்காது.  அடுத்து பாத்துக்கலாமே!”, என வேந்தனிடம் கூற

“ச்சேச்சே.. எனக்கு வேலைங்கற பேருல அப்பப்போ எல்லா இடத்துக்கும் போயிட்டு, வந்திட்டுதானடா இருக்கேன்.  நீங்கதான் ஃபுல்லா வேலை வேலைனு ஒரேயிடத்தில இருக்குறீங்க!  உங்களுக்கு ரிலாக்ஸாவும், ஒரு சேஞ்சாவும் இருக்கணும்னு ஏற்பாடு பண்றதுடா!  வருசத்துல ஒரு தடவை கம்பெனி செலவுல ஏற்பாடு பண்ணதை எனக்காக எதுக்குடா வேஸ்ட் பண்றீங்க!  அப்புறம் லேடீஸ், சில்ரன்ஸ் எல்லாம் அப்செட் ஆகிருவாங்க!  முடிஞ்சா இடையில நான் ஜாயிண்ட் பண்ணிக்கிறேன்! வேற எதுனா கால் பண்ணுங்கடா!”, என அனுப்பி வைத்திருந்தான்.

மீரா ட்ரிப்பில் இணைந்திருந்த பெண்களோடு, வேந்தனின் தாய் அனுப்பிய புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, “இதப்போல ரிசெம்ப்ளன்ஸ்ல பொண்ணு இருந்தா, இல்லை பாத்தாச் சொல்லுங்கப்பா”!, என கூறியிருந்தாள்.

பார்த்துவிட்டு, “ஆயில் பெயிண்டிங்க் மாதிரி இருக்கு!  இப்டியெல்லாமா பொண்ணுங்க இருக்காங்க!”, கயல்

“இருப்பாங்களா இருக்கும்.  அதையே இப்ப இருக்கற டெக்னாலஜி யூஸ் பண்ணி இன்னும் அழகா காட்டிராங்கள்ல!”, ஷீபா

“ஆமாப்பா!  சமீபத்துல நாங்க ஒரு பொண்ணோட போட்டோ பாத்துட்டு நேருல பாக்கப் போனா அப்டி ஒரு வித்தியாசம்.  போட்டோல அவ்ளோ நல்லா காட்டிருக்கானுங்க.   நேருல ரொம்ப சுமார்தான்!”, நிஷா

“இப்டி ஒரு பொண்ணு வேணுனா நம்ம நயன்தாராவுக்குத்தான் மேக்கப் போட்டுக் கொண்டு போயி நிறுத்தனும்”, என மாதவி துவங்கிட

அடுத்தடுத்து, தங்களுக்குத் தோன்றிய பிரபல பெண்மணிகளின் சாயல் மற்றும் இத்யாதிகளைப் பற்றிப் பேசி பேசி, வேந்தனது பெண் பார்க்கும் நிகழ்வை விட்டு எங்கோ வெகுதூரம் பேச்சு சென்றிருந்தது.

இங்கோ வேந்தன் பெண்ணைப் பார்த்தும் தன்னால் பெண்ணை நெருங்க ஏதுவான சந்தர்ப்பம் அமையாதா எனக் காத்திருந்தான்.

/////////////////////

விளம்பரத்திலிருந்து அனைத்தையும் அந்நிறுவனத்தினரே பார்த்துக் கொண்டனர்.

வாணி ஃபைன் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி நிறுவனத்தோடு, அந்நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்ததாக விளம்பரம் அமைந்திருந்தது.

எழில்வாணியின் முறையான திட்டமிடல், பயிற்சி முறைகள், முதிர்ச்சியான அணுகுமுறை மற்றும் பேச்சினால், அவளை இருபத்தைந்து வயதிற்குமேல் கணித்திருந்தனர்.

பள்ளியில் படிக்கும்போது விடுதியில் சில பொறுப்புகளை ஏற்றுச் செய்திருந்த அனுபவம் இங்கு கைகொடுத்திருந்தது பெண்ணுக்கு.

மூன்று நாள் வகுப்பில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுமிகள், குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிச்சயமாக இதை அந்நிறுவனம் எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கு மாதத்தில் எடுக்க வேண்டிய இலாபத்தை சுளையாக முதல் நாளிலேயே பார்த்திருந்தது.

ஆரம்பகட்ட வகுப்புகள் என்பதால், அடுத்த வகுப்புகள் எப்போது, எங்கு என ஆர்வத்தோடு விசாரித்தவர்கள், அடுத்து இன்னும் கூடுதல் நாட்கள் வகுப்புகள் இருக்குமாறு ஏற்பாடு செய்திடுமாறு கேட்டிருந்தார்கள்.

சிலர் இரண்டாம் நாள் வந்து, “சாரி மேடம், ஒரு நாள் கிளாஸ் போனாலும் பரவாயில்லை.  இன்னும் ட்டூ டேஸ் கிளாஸ் இருக்குல்ல. நானும் ஜாயிண்ட் பண்ணிக்கிறேன்”, என வந்திருந்தனர்.

ஓரளவிற்கு திருப்திகரமாக நடந்து முடிந்த வகுப்பினால், எழில்வாணியும் அனைத்தையும் சமாளித்ததோடு, அனைவருடைய அலைபேசி எண்ணையும் தனிக் குறிப்பேட்டில் குறித்து வாங்கிக் கொண்டாள்.

வகுப்பில் கலைவேந்தனின் மகள் வர்ஷினியும் கலந்து கொண்டிருந்தாள்.

மிகவும் ஆர்வத்தோடும், கற்பனை கலந்தும் அடுத்தடுத்த விசயங்களைச் செய்திட்ட சிறுமியை எழில்வாணிக்கும் பிடித்திருந்தது.

அந்தச் சிறுமியின் ஆர்வம், தனது சிறுவயது ஆர்வத்தை நினைவுறுத்தியது பெண்ணுக்கு.

—————–

சத்தியேந்திரனுக்கு விளம்பரங்கள் கண்ணில்படவே, விசயம் அறிந்து கொதித்து விட்டார்.

‘இரண்டெழை விடாததுலாம் என்னமா யோசிக்குது.  மரியாதை தெரியாததா இருக்கும்போல.  இவ்வளவு பெரிய மனுசன் நம்மளத் தேடி வந்து பேசுறானேனுகூட நம்ம பேச்சைக் கேக்கலை பாரு. ரொம்பத் தெளிவா இருக்குதுங்க இந்தக் காலத்துப் புள்ளைங்க”, என புலம்பியவர், “நமக்குந்தான் வந்து வாய்ச்சிருக்கு.  கட்டுனதும் சரியில்லை.  பெத்ததும் சரியில்லை. பெறந்ததும் சரியில்லை’ என்றதோடு, புலம்பலை மேலும் நீட்டி, வாணியை வாய்க்கு வந்தபடி பேசி மனதைத் தேற்றியிருந்தார்.

ஆனாலும் பெண்ணிடம் நேரில் பேசும்போது சர்க்கரையாகப் பேசினார்.

“அந்தக் கலைவாணியோட அம்சமே நீதான்மா”, என்று பேசுவதைக் கேட்ட சூப்பர் மார்கெட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சத்தியேந்திரனைப் பற்றி அறிந்திருந்தமையால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எதையும் அறியாத வாணியோ, மதிப்பும் மரியாதையும் தந்ததோடு, அவரைப்பற்றி நல்லெண்ணத்தோடு இருந்தாள்.

……………..

முத்துரெங்கன், வாணியின் கலந்தாய்விற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே சென்னை வந்திருந்தார்.

சத்தியேந்திரன் மிகவும் வருந்திப் பேசியதால், மருமகளோடு அவரின் சூப்பர் மார்க்கெட்டிற்கு விஜயம் செய்தார்கள்.  அரைநாளை அங்கேயே செலவளிக்கும்படி ஆகியிருந்தது.

கல்லூரிக்குச் செல்ல ஏதுவாய் ஆடைகள், காலணி மற்றும் இத்யாதிகளை சுருக்கமாக வாங்கினர்.

ஓரளவு சென்னை பிடிபட்டிருக்க, மாமனுக்கு சென்னையைப் பற்றிய விசயங்களை எடுத்துக் கூறுமளவிற்கு முன்னேறியிருந்தாள் வாணி.

அனைத்திற்கும் உரிய செலவினங்களைப் பார்க்க முன்னேற்பாடுடன் வந்திருந்தார் முத்துரங்கன்.  ஆனால், நுண்கலை வகுப்புகள் மூலம் சம்பாதித்த தொகையை மாமனிடம் கொடுத்து, “இத வச்சே எனக்கு வேணுங்கறதை வாங்கிக்கலாம் மாமா”, என்றிருந்தாள்.

தொகையை பார்த்தவருக்கு, ‘பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் அமையணும்.  மற்றபடி வருமானத்தைப் பெருக்க அவளுக்கு யாரும் சொல்லிக் குடுக்கத் தேவையில்லை. சமத்துப் புள்ளைக்கு சரியான இடம் அமையணும் இறைவா’, என மனதார வேண்டிக் கொண்டார்.

வாணியை எண்ணிப் பிரமிப்புதான் எப்போதும்.

அந்தப் பணத்தை தொடவே இல்லை.

அடுத்த நாள் விரைவிலேயே எழுந்து இருவருமாக மெரீனாவிற்கு நடைபயிற்சி என்கிற பெயரில், பேசியபடியே நடக்கத் துவங்கியிருந்தனர்.

தன்னோடு அறையைப் பகிர்ந்து கொண்ட இந்துமதியை முன்பே நடைபயிற்சிக்கு அழைத்திருந்தாள் வாணி.

ஆனால் காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பவே நேரம் சரியாக இருக்கும் நிலையில், மெரீனா வரை வாக்கிங் என்பதையெல்லாம் எதாவது விடுமுறை நாளில் பார்க்கலாம் என்றிருந்தார்.

நீண்ட நாள் ஆசை பெண்ணுக்கு.

அதையும்  மாமனிடம் கூறியவள், “கடற்கரைப் பக்கமா காலை நேரத்துல வரும்போது என்ன மாதிரி ஃபீல் கிடைக்கும்னு ஒரு கேள்வி மனசுக்குள்ள ஓடிட்டே இருந்தது மாமா.  அதுக்கு இன்னிக்குத்தான் ஆன்சர் கிடைச்சிருக்கு”, என்று சிரித்தவாறு, கதைகள் பேசியபடியே நீண்ட தூரம் சென்றவர்கள் திரும்பத் துவங்கினர்

நிறைய மக்கள் காலை நேரத்து நடைபயிற்சியில் செல்வதும், திரும்புவதுமாக இருந்தாலும், மாலை நேரத்து மெரீனாபோல கசகசவென்றிராமல், கலைந்து சென்ற மேகம்போல அங்கொன்றும், இங்கொன்றுமாய் சேர்ந்தோ, அல்லது தனித்தோ இருப்பதுபோல இருந்தது.

நபர்கள் தொடர்ந்து நடைபயிற்சியில் இருந்தாலும், இதமாய் இருந்தது.

சிலர் தங்களது வீட்டுப் பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தனர்.

அங்கங்கு வீட்டுப் பிள்ளைகளை விளையாட விட்டு, இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட நபர்கள் இணைந்து நின்று பேசியபடி இருந்தனர்.

பிள்ளைகள் காலை வேலையிலேயே விளையாட்டில் பிஸியாக இருந்தனர்.

ரசித்தபடியே, பராக்குப் பார்த்துக் கொண்டு மாமனோடு பேசியபடியே நடந்து வந்தவள், மூன்று வயது சிறுமி தனது கையில் வைத்திருந்த டெடியோடு நடக்க முடியாமல் அங்குமிங்கும் நடப்பதைக் கவனித்தபடியே வந்தாள்.

சிறுமியை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லைபோலும்.

அங்கு கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்த, சிறுமியைவிட சற்று மூத்தவர்கள் இருக்க, அவர்களுக்கு இடையே போவதும், அவர்கள் சிறுமியை வெளியே கொண்டு வந்து நிறுத்துவதுமாக இருந்ததை புன்னகையோடு பார்த்தபடியே வந்தாள் வாணி.

‘உப்புக்குச் சப்பாணியாவாவது அந்தப் புள்ளையச் சேத்துட்டுருந்திருக்கலாம் பாவம்’ என எண்ணியபடியே வந்தாள்.

நினைவிடுக்கில் இதுபோன்ற நினைவுகளைத் தேடிப் பார்க்கிறாள்.

சற்று தூரத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்த சிறுவன் பேலன்ஸ் இல்லாமல் தடுமாறுவதும், வண்டியில் இருந்து இறங்குவதும், மீண்டும் முயற்சிப்பதுமாக இருந்தான்.

சிறுமியின் கையில் இருந்த, அவளைவிடப் பெரிய சைசில் இருந்த டெடியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வட்டத்திற்குள் நுழைய முயன்ற சிறுமியையே பார்த்தபடி வந்தாள் வாணி.

அதில் இருந்த ஒரு சுட்டி, பெண்ணது கையில் இருந்த டெடியைப் பிடுங்கி சற்று தூரத்தில் எறிந்திட, சிறுமி அதை எடுக்க சற்று தூரம் ஓடி வந்தது.

வந்து குனிய, தடுமாறி அதன்மேலேயே விழுந்து, அதனோடு உருண்டது.

அதேநேரம் அருகே சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன், சிறுமியின் தீடீர் செயலில் பதறி அவளின் மேலேயே சைக்கிளோடு விழுந்திருந்தான்.

வீல் எனும் சத்தம் வேறு வந்திருக்க பதறியவள், பார்த்ததும் தன்னை அறியாமல், “ஐயயோ…” எனக் கத்தியபடியே, “மாமா அந்தப் பாப்பாவை தூக்கி விட்டுட்டு வரேன்”, எனக் கூறிக் கொண்டே சற்று தூரத்தில் சம்பவம் நடந்த இடம் நோக்கி விரைந்து சென்றாள் பெண்.

எதிரில் தன்னைப்போல சிறுமியைக் கவனித்துவிட்டு ஓடி வந்தவனைக் கவனிக்காமல், சென்ற வேகத்தோடு தலையோடு தலை மோதிக்கொண்டு, வலியெடுத்த இடத்தை தடவியவாறு பெண் நிமிர, அவனோ தன்னை இடித்ததைக்கூட கவனியாமல் செயலில் கவனமாக இருந்தான்.

அதே நேரம் நடந்ததைப் பார்த்திருந்த முத்துரங்கனோ, “பாத்துமா”, என்கவும்

முகம் தெரியாததால் இடித்தவனது செயல்களைப் பார்வையிட்டவாறு ஏதோ பேச வாயைத் திறக்க இருந்தவள், மாமனது பேச்சில் மாமனைத் திரும்பி நோக்கினாள். தன்னை நோக்கி ரங்கன் வருவதைக் கண்டு அமைதியாக நின்றாள்.

வாணியை சட்டை செய்யாமல் சைக்கிளோடு விழுந்திருந்த சிறுவனையும், சிறுமியின் மீதிருந்த சைக்கிள் இரண்டையும் தூக்கி நிறுத்த முதலில் குனிந்திருந்தான் வந்தவன்.

அதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்திருந்தது.

தன்னை இடித்துவிட்டு, அதைப் பொருட்படுத்தாது தூக்கிவிட்டதோடு, இறுதியாக அழுதபடி இருந்த சிறுமியைத் தூக்கிவிட்டு, அவளது கையில் கீழே விழுந்த டெடியை எடுத்துத் தரவும், பெற்றுக் கொண்டு கேவியபடியே இரண்டடி நடந்த சிறுமி, “டாடி…” என அங்கு வந்தவரின் காலைக் கட்டிக் கொண்டதையும் பார்த்தபடியே இருந்தாள், தன்னை யாரோ கவனிப்பதைக் கண்டு திரும்பி நோக்க, அதற்குள் அங்கு முத்துரங்கன் வந்திருந்தார்,

அடி யாருக்கும் பலமாக இல்லை. தங்களது கவனக் குறைவால் நிகழ்ந்ததால் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா எனப் பார்த்ததோடு, சமாதானம் செய்தபடியே கலைந்தது கூட்டம்.

திரும்பி நோக்கியவளிடம் ‘சாரி’, என்றபடியே கையை பெண்ணது பக்கமாக நீட்டி உரைத்தவாறே,  அவளிடமிருந்து பார்வையை விலக்காது பின்னோடு மெதுவாக கூட்டத்தைவிட்டு விலகியவனை அப்போதுதான் நன்றாக கவனித்தாள் வாணி.

இடித்ததற்கு சாரி சொல்கிறார் என்று புரிந்துகொண்டவள், “நானும் நீங்க வந்ததைக் கவனிக்கலை. நோ பிராப்ளம் சார்”, என்றபடியே முகத்தைப் பார்த்தவளுக்கு, எங்கோ பார்த்த, நன்கு பழகியது போன்ற உணர்வில் அருகே வந்து நின்ற முத்துரங்கனை நோக்கி, “இவங்க நமக்குத் தெரிஞ்சவங்க மாதிரி தோணுது மாமா”, என, வாணியின் மெதுவான பேச்சில் ரங்கனும் தங்களைப் பார்த்தபடியே அங்கிருந்து சென்றவனையே பார்க்க, வாணியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே செல்லும் வேந்தனை பெண்ணும் விழியெடுக்காமல் பார்த்தபடியே, ‘எங்க பாத்திருக்கோம்’ என யோசித்திருந்தாள்.

சிலரது முகம் பரிட்சயமாகத் தோன்றுவதற்கு காரணங்கள் பல இருக்கிறது.

அதில் இது என்ன மாதிரியான காரணமாக அமையும் என்பதை இருவராலுமே அனுமானிக்க முடியவில்லை.

வேந்தனுக்கான காரணம் அவன் அறிந்ததே!

முத்துரங்கனுக்குமே உறவினரா, அல்லது பழகியவரா என பரிச்சயமான முகச் சாயலில் இருந்தவனைப் பார்த்து ‘யாரது?’ என யோசித்தபடியே அகன்றார்.

‘இவ இங்க எப்டி?’, எனும் மனக் கேள்வியோடு கண்களில் தெரிந்த ஆர்வத்தை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் வேந்தன்.

உடன் வந்து நின்று மருமகளிடம் பேசிய முத்துரங்கனையும் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தபடியே மனமின்றி மனதில் கேள்விகளோடு நகர்ந்திருந்தான் வேந்தன்.

‘இது யாரு புது டிக்கெட், அவங்கப்பாவா இருக்குமோ? இல்லையே அவ மாமான்ன மாதிரியில்ல கேட்டது’, என யோசித்தபடியே நடந்தான்.

சற்று தூரம் சென்றபின் மாமனும் மருமகளுமாய் பேசியவாறு நடந்து வருவதை, திரும்பிப் பார்த்தவனுக்கு, தனது நீண்ட நாள் ஆசையின் ஒரு பகுதி நிறைவேறிய சந்தோசம் நெஞ்சை நிறைத்திருந்தது.

ஆசை என்பதைவிட அப்படி ஒரு எதிர்பார்ப்பு வேந்தனுக்கு நீண்ட நாள் இருந்ததென்னவோ உண்மை.

காலையில் நடைபயிற்சிக்கு வரும்வேளையில் அவளைச் சிந்திக்காத நாளே இல்லை எனலாம்.

வருடங்கள் கடந்தாலும், வருடக் கணக்காக தனக்குள் புதைந்துள்ள ஏக்கங்கள் மறக்குமா?

 

பிஜிஎம்மில்

‘பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு…)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

(பருவமே புதிய பாடல் பாடு…)’ எனும் பாடல் ஓட, தன் மனங்கவர்ந்தவளோடு நடைபயிற்சி மேற்கொள்ள ஏங்கிய ஆவலான தருணங்கள் நினைவில் வந்து நிறைத்தது.

பாதி நிறைவேறிய உணர்வு.

நடைபயிற்சியின்போது பெண்ணை சந்தித்ததையே அவ்வாறு எண்ணிக் கொண்டு புன்முறுவலோடு தனது அன்றைய நாளை இனிதாக எதிர்கொள்கிறான்.

அவனது நடவடிக்கையோ, உடையோ இதர விசயங்களோ பெண்ணிற்கு மனதில் எந்தப் பாதிப்பையோ, வேறு சிந்தனையையோ தந்திருக்கவில்லை.

மாறாக அவனது முகம், பல காலம் பழகிய முகம் போலத் தோன்றக் காரணம் என்ன என அவ்வப்போது நினைவில் கேள்வி வந்து போனது,

நிச்சயமாக அந்த முகம் எவ்வித தொந்திரவினையும் தரவில்லை.

மாறாக, அமைதியையும் இனம் புரியாத சந்தோசத்தையும், உணர்வுகளால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு நிறைவையும் தந்திருந்தது.

ஆனால் இதற்குமுன் எங்கும் சந்தித்ததாய் நினைவில் இல்லை. பின் எப்படி? எனும் யோசனை வந்ததோடு, அடுத்து தனக்காகக் காத்திருந்த பணிகளில் தன்னை முகிழ்த்துக் கொண்டிருந்தாள் வாணி.

 

வசியம் செய்திட்டதோ

வயதின் மனதைக் கொய்திட்டதோ

நானறியேன்!

கண்ட நொடியில்..

நிறைவைத் தந்திட்டதேன்

நிழலாய் நின்றிட்டதேன்

நினைவில்!

அன்பா! ஆசையா!

இச்சையா! ஈகையா!

உவகையா! ஊக்கமா!

ஐயமா!

ஒதுக்கமா! ஓகையோ!

நானறியேன்!

பல காலமாய் என்னுள் விதைக்கப்பட்டு

கண்கள் பார்த்ததும் முளைவிட்டதாய்

எண்ணத் தோன்றுதே!

என்ன உணர்விது?

ஏன்?

புரியாத விடியல்

புதையலாய்

மனதில்…

புதையலென்று யூகித்தாலும்

இன்னவென்று

தெரியாமல்…

புதையலின்

மதிப்பறியா

மனம்

குழம்பியதோ!

Leave a Reply

error: Content is protected !!