கோவிலுக்குச் செல்ல நினைத்து சில வாரங்கள் தட்டிப்போயிருக்க, அன்று வம்படியாக மீராவுடன் கோவிலுக்குக் கிளம்பியிருந்தார் அனுசியா.
அனுசியாவின் நீண்ட நாளைக்குப் பிறகான தெளிவான முகம் கண்டு, “என்னமா இன்னிக்கு ஒரே சந்தோசமா இருக்கறமாதிரி தெரியுது!”
“நம்பிக்கை! அது வந்ததும் முகம் பளிச்சுனு ஆயிருச்சுபோல!”, என சன்னமாகச் சிரித்தார்.
“அப்ப இவ்ளோ நாள் நம்பிக்கை இல்லாமலா இருந்தீங்க!”
“அப்டியில்ல! கரை எங்கிட்டு இருக்கு? வழி எதுனு தெரியாம கண்ணைக் கட்டிட்டு இருந்த எனக்கு, இப்ப வழி என்ன? எந்தக் கரையைக் கடக்கணும்னு தெளிவு வந்திருக்கு! அதனால இனி சீக்கிரமா நல்லது நடக்கும்னு நம்பிக்கை வந்திருச்சு!”, என்றபடியே கோவிலுக்குள் சென்று, இறைவனுக்கு நன்றி கூறி, நிதானமாக சாமி கும்பிட்டு சற்று நேரம் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர்.
விசயத்தைக் கூறியதோடு, சென்ற இடங்கள் பற்றி மீரா சிலாகித்திட சற்று நேரம் அதைக் கேட்டபடியே பொழுது கடந்தது.
வேந்தனோடு அவனது நண்பர்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அவனது தொழில் சார்ந்து பணியில் இருப்பதால், மாத வருவாய் என ஒரு தொகையைக் கொடுத்துவிட்டாலும், வரக்கூடிய இலாபத்திலும் சிறுதொகையை உல்லாச செலவினங்களுக்கு வருடமொருமுறை ஒதுக்குவதை வாடிக்கையாக்கியிருந்ததை அனுசியாவும் அறிந்திருந்தார்.
பிறகு அனுசியா அனுப்பிய புகைப்படத்தைப் பற்றி பேசத் துவங்கினாள் மீரா.
“அந்த போட்டோவுல இருக்கற மாதிரி பொண்ணுலாம் எங்க பேட்ஜ்லதான் இருந்தாங்கம்மா. மூக்குத்திலாம் இப்ப யாரும் குத்தறதில்லை. ரொம்ப ரேரா ஆர்ட்டிபிஷியலா ஃபிக்ஸ் பண்ணிட்டு, ஃபங்சன் முடிஞ்சதுமே வந்து ரிமூவ் பண்ணிறாங்க. அந்த பொண்ணோட ரிசெம்பிள்ல நமக்கு பொண்ணு கிடைச்சாலும் இந்த மாதிரி சாந்தமா கிடைக்குமா தெரியாது!”, என மதியம் அனுசியா அனுப்பிய படத்திற்கான விளக்கத்தை மீரா கூற முயல
“எனக்கு தேவை அந்த மாதிரி சாயல்ல ஒரு பொண்ணு. அதுக்குமேல கல்யாணம் பண்ணிட்டு வாழப் போறவனோட சமத்து!”, என்றிருந்தார் அனுசியா.
“வழக்கமா பாக்கறதுதான். ஏற்கனவே நாலு பேருக்கு எல்லாம் பாத்துத்தான் திருப்தியா செஞ்சேன். ஆனா இது நாளக் கடத்திட்டதால, நம்ம இழுப்புக்கு எல்லாம் இனி யாரும் வரமாட்டாங்க. நாமதான் அவங்க இழுத்த இழுப்புக்கு போற மாதிரி இருக்கும்!”, என நிதர்சனம் உரைத்தார் அந்தத்தாய்.
சற்றுநேரம் பெண் பார்க்கும் படலம்பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள், நேரம் சென்றதையே கவனிக்க மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அலைபேசியில் அழைப்பு மீராவிற்கு வரவே நடப்பிற்கு வந்தார்கள். பேசிவிட்டு வைத்தவள், “இங்க வகேசன்ல ஒரு ஃபைன் ஆர்ட்ஸ் கிளாஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணிருந்தாங்க. அதுல வயசு வித்தியாசம் இல்லாம எல்லாம் போயிட்டு வந்ததுங்க. இப்ப அதுக்கு வேணுங்கற திங்க்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லி விட்டாங்க பக்கத்துல. அதை ஞாபகப்படுத்தத்தான் கூப்பிட்டுருக்காங்க”, என அழைப்பிற்கான காரணத்தை கூறினாள் மீரா.
“ஆமா, கலை மகளும்தான் சொல்லிட்டே இருந்தா. ஒரு கிளாஸ் போயிட்டு வந்ததுக்கே பைத்தியமா ஆகிருச்சு. அவ அம்மா எதையும் கண்டுக்கலபோல. அதனால அப்பப்ப எங்கிட்ட வந்துதான் திங்ஸ் வாங்கித் தரச் சொல்லிக் கேப்பா”, என அனுசியா மகிழ்ச்சியோடு கூற
“அவ சின்ன பொண்ணுதான”
“ஆனாலும் அவளுக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இருக்கு”
“அப்ப போயிட்டு வரட்டும்”
“இப்ப இதுபோல கிளாஸ்ல கொண்டு போயி விட்டுட்டு, லீவுல பிக்கல் பிடுங்கல் இல்லாம இருக்க புதுவழி கண்டு பிடிச்சிருக்காங்கபோல. ரொம்பச் சின்ன புள்ளைகதான் நிறைய. செம கூட்டம்”, என அதுசார்ந்த பேச்சுக்களுடன் நடந்து வெளியே வந்தவர்கள் விடைபெற்றுக் கிளம்பியிருந்தனர்.
ஒரு நாள் பேத்தியை தானே அழைத்துச் சென்று விட்டு வந்திருந்தார் அனுசியா.
வாசலோடு வந்து விட்டதால் வாணியைப் பார்க்கும் வாய்ப்பை அன்று இழந்திருந்தார்.
/////////////////
வாணி, ரெங்கனுடன் அவள் படித்த பள்ளிக்குச் சென்று மதிப்பெண் அட்டவணையைப் பெற்றுக் கொண்டு ஒரே நாளில் சென்னை திரும்பியிருந்தாள்.
இணையவழி கலந்தாய்வில் தன்னாட்சி இருபாலர் பயிலும் கல்லூரியில் கணிதவியலில் இடம் கிடைத்து சேர்ந்திருந்தாள்.
தான் விரும்பியபடி இடம் கிடைத்த மகிழ்ச்சியில் வாணியிருக்க, ரங்கன் வாணிக்கு வேண்டியவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டு திருப்தியோடு ஊருக்குக் கிளம்பியிருந்தார்.
சில நாள்களாகவே அவளை யாரோ பின்தொடர்வது போன்ற உணர்வு பெண்ணுக்கு எழுந்திருந்தது.
சுற்றிலும் பார்வையை வீசினாலும், சந்தேகம் கொள்ளும்படி எதையும் பார்த்திராததால், ‘நமக்குத்தான் பிரமையோ’, என புறந்தள்ள எண்ணுகிறாள். ஆனால் எண்ணம் விடாமல் வலுக்கிறது.
கடற்கரையில் பார்த்தவனைப் பற்றி அதிக சிந்தனை இல்லை.
உண்மையில் அத்தோடு மறந்துவிட்டாள்.
எப்போதாவது சிந்தனையில் வந்தாலும், ‘யாரவங்க? எங்க இதுக்கு முன்ன பாத்திருக்கோம்? நல்ல பரிச்சயமான மாதிரி இருக்காங்க. ப்ச்சு.. ஆனா நினைவுக்கே வரமாட்டுது’, என நினைவடுக்கில் தேடி எதுவும் புலப்படாததால், விட்டுவிடுகிறாள்.
வகுப்புகள் ஜுலை மாதம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்க, அதுவரை வாரயிறுதி நாள்களில் மட்டும் இணையவழி நுண்கலை வகுப்புகளை நடத்தினாள்.
சத்தியேந்திரன் வற்புறுத்தியதால், அவர்களின் நிறுவனத்தையும் பொருள்களை வாங்கிக் கொள்ள அடையாளம் காட்டியிருந்தாள்.
சத்தியேந்திரனுக்கு வாணியைக் காணும்போது, இது பொன் முட்டையிடும் வாத்து என்கிற எண்ணம்தான்.
பள்ளிகள் துவங்கியிருக்க, மாணவர்களின் வருகை வெகுவாகக் குறைந்திருந்தது.
இந்துமதி அலுவலகம் சென்றுவிட, அறைக்குள் அமர்ந்து கிளாஸ் பெயிண்டிங் செய்து கொண்டிருந்தவளின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
இளா அத்தான் என ஒளிர, எதற்கும் இதுவரை தன்னை அழைத்திராதவன் இன்று திடீரென எதற்கு அழைக்கிறான் எனப் பயந்து போய், “சொல்லுங்க அத்தான். மாமாலாம் நல்லா இருக்காங்கள்ல”, என்றிட
“ம்ஹ்ம்.. நீ எப்டி இருக்க?”, குரலில் குழைவு தோன்றியதோ, இல்லை தனக்குத்தான் அப்டி ஒரு நினைப்போ எனும்படியாக இருந்தது இளாவின் குரல்.
‘ச்சேச்சேய்.. அப்டியொன்னும் இருக்காது’, என தேற்றி நடப்பிற்கு வந்தாள் வாணி.
“நல்லாயிருக்கேன். என்ன திடீர்னு கால் பண்ணிருக்கீங்க”
“நான் சென்னைக்கு ஒரு வேலையா வந்தேன். நீ தங்கியிருக்கற இடம் எங்கனு சொல்லு”
வாணிக்கு ஒரே யோசனை. இதுவரை தன்னை பள்ளி நாட்களில் பெரியதாகக் கண்டு கொள்ளாதவன், தற்போது தன்னைக் காண வருகிறான் என்றதும், மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள்.
பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கே உண்டான மகிழ்ச்சி அது.
வீட்டில் அத்தைக்குப் பயந்து மாறன் தன்னோடு அதிகம் பேசாமல் இருப்பதை வாணியும் அறிவாள்.
வந்தவன் வெளியே எங்காவது செல்லலாம் என அழைக்க, ‘இது என்ன புதுசா இருக்கே’, என ஒரு கனம் யோசித்தவள், விடுதியில் அவனோடு இயல்பாக பேச இயலாது என்பதை உணர்ந்து, சொல்லிக் கொண்டு கிளம்பியிருந்தாள்.
முதலில் மதிய உணவிற்கு வெளியே அழைத்துச் சென்றான்.
ஏதோ பேசத் தயங்குதாக உணர்ந்தாள்.
அடுத்து கிண்டியில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.
பெண் எங்கே என எதுவும் கேட்கவில்லை.
பெண் அன்றுதான் முதன்முறையாக அங்கு வந்ததால் சுற்றிலும் பார்வையை ஓடவிட, “உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும் எழில்”, எனும் குரலில் யோசனையோடு இளமாறனைப் பார்த்தாள்.
எதுவும் பதில் பேசாமல், ‘இது என்னடா கிணறு வெட்ட பூதம் மாதிரி, கிண்டிக்கு வந்ததும் ஒண்டியா இருக்கற எனக்கு வந்த சோதனை’, என என்ன பதில் கூறுவது என்பதைவிட, அவன் முழுமையாகப் பேசி முடிக்கட்டும் எனக் காத்திருந்தாள்.
சுகுணா, இளமாறன் எழில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதாலும், முத்துரங்கனுக்கு விருப்பம் இருந்தபோதும், அதை சுகுணா கண்டிப்பாக ஆமோதிக்க மாட்டார் என்பதாலும், அப்படி தந்தையிடம் தான் கூறினாலும் இருவருக்குமிடையே தன்னால் பெரும் மனவருத்தம், சண்டை, சச்சரவுகள் நிகழக்கூடுமே அன்றி தங்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலும், தானாகவே இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்தான்.
சென்னையில் இருவரும் கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்டு ஊருக்குச் சென்றால், ஆரம்பத்தில் தாய் புலம்பினாலும், வெறுத்தாலும், ஒதுக்கினாலும், நாள்கள் சென்றதும், தங்களை குறிப்பாக எழிலை மருமகளாக வேறு வழியின்றி ஏற்றுக் கொள்வார் என்றும் கூற
“அது தப்பு அத்தான்”, என்றவள், “எனக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கற வயசு வரல. இன்னும் மூணு வருசம் போகட்டும்ங்கறதுதான் என்னோட விருப்பம்”, தயங்கி உரைத்தாள்.
“கல்யாணம் பண்ணிட்டு நீ இங்கேயே படி, அதுக்குள்ள அம்மா மனசு மாறிருவாங்க”
“அத்தைக்கு ஏற்கனவே என்னைக் கண்டாலே ஆகாது. இதுல இப்டிப் பண்ணிட்டா அப்புறம் வீடே நரகம் ஆகிரும். நீங்க மாமாகிட்ட போயி சொல்லி வேணா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. அதவிட்டுட்டு இப்டியெல்லாம் என்னால யோசிக்க முடியாது”, என்பதை தெளிவாக உரைத்தவள்
“சாரி அத்தான். எங்கம்மா மாதிரி நானும் காலத்துக்கும் கெட்ட பேரோட வாழ முடியாது. நீங்க புரிஞ்சிப்பீங்கனு நினைக்கிறேன்”, என்று முடிவாக உரைத்திருந்தாள்.
“அதுக்கு நான் என்ன அத்தான் செய்ய முடியும்”, என பாவம்போலப் பேசியவளிடம், எவ்வளவோ முயன்றும் பெண் தன் முடிவில் இருந்து மாறாமல் இருந்தாள்.
கரைப்பார் கரைத்திருந்தால் கரைந்திருக்குமோ என்னவோ?
ஆனால் இங்கு மாறன் கரைக்க முயன்று, கரைந்து போயிருந்தான். வாணி எந்த மாற்றமும் இன்றி இருந்தாள்.
மாலை நெருங்கியதும் வாணி நேரம் செல்வதைக் கூறி, “ஹாஸ்டல் போகணும். இப்பவே கிளம்பினாத்தான் அங்க போகச் சரியா இருக்கும்”
“நீ இப்ப இதுக்கு ஒத்துக்கலைனா, அம்மா பாத்திருக்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டு காலத்துக்கும் பிடிப்பில்லாம வாழணும். அதுக்கு நான் செத்துறலாம்”, என இறுதி பிரயோகத்தையும் வார்த்தைகள் மூலம் கூறிட அப்போதும் அசையவில்லை எழில்வாணி.
விரக்தியோடு விடுதியில் விட்டுவிட்டு, “இன்னும் ஒன் மந்த் டைம் இருக்கு எழில். உனக்கு அப்டியொரு எண்ணமிருந்தா கண்டிப்பா என்னோட நம்பருக்கு கால் பண்ணு, மேற்கொண்டு நடக்க வேண்டியத நான் பாத்துக்குவேன்” மனமில்லாமல் லேசான நம்பிக்கையுடன் விடைபெற்றிருந்தான் இளமாறன்.
பெண்ணுக்கு தான் எடுத்த முடிவில் வருத்தமொன்றுமில்லை.
இளமாறனை எண்ணி வருந்தினாள்.
‘இதையே மாமாகிட்ட சொன்னா, மாமா எப்டினாலும் அத்தைகிட்ட பேசியோ, சண்டை போட்டோ இளா அத்தான் நினைச்ச மாதிரியே கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. இது புரியாம இவ்ளோ தூரம் மெனக்கெட்டு இங்க என்னைப் பாக்க வந்திருக்க வேணாம்’ என எண்ணியவள், இந்த விசயம் பற்றி முத்துரங்கனிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. பெண்ணிற்கு தோன்றவுமில்லை.
இரண்டொரு நாள் அவ்வப்போது மாறன் கெஞ்சியது மனதில் வந்து போனது.
ஆனால் மாறனுக்கு திருமணம் எனும்போது வேறு எந்த எண்ணமும், அதாவது தன்னுடையது பறிபோகப்போகும் உணர்வோ, பொறாமையோ, வருத்தமோ வாணிக்குத் தோன்றவில்லை.
தனக்கென்று இதுவரை முத்துரங்கன் மாமா மட்டுமே. வேறு யாருமில்லை. அப்படி இருக்க இளா எனும் பற்றுகோலை முறையில்லாமல் பற்றிக் கொள்ள மனம் விரும்பவில்லை.
முறையாகத் திருமணம் என்றால் மறுக்கும் எண்ணமும் இல்லாதவள், மனதை அதிலிருந்து திருப்ப தனது நுண்கலை வகுப்புகளில் கவனம் செலுத்தினாள்.
////////////////
கல்லூரியில் வகுப்புகள் துவங்கியிருந்தது.
இருபாலர் பயிலும் கல்லூரி.
ரேகிங் கூடாது, மீறினால் குறிப்பிட்ட எண்ணிற்கு புகாரளியுங்கள் என ஆங்காங்கு செய்திகள் தெரிவிக்கப்பட்டிப்பதையும் மீறி சைலண்டாக ரேகிங் நடந்தது.
ஆரம்பத்தில் முட்டி, மோதிக் கொண்டவர்கள் பின்னாளில் மிகவும் தோழமையோடு வளாகத்தினுள் செல்லும் நிலை மாறியிருந்தது.
இதற்கிடையே இளமாறன் திருமண அழைப்பிதழோடு வந்த முத்துரங்கன் எழில்வாணியை அழைக்க, “அன்னைக்கு ஒரு நாள் வந்துட்டு உடனே திரும்பணும் மாமா. சோ ஒரு வீக்கெண்ட் வந்திட்டு வரேன்”, என்றிருந்தாள்.
அத்தையின் மனநிலையை அன்று சென்று கெடுக்க வேண்டாமே என்கிற எண்ணத்தோடு, இளமாறனின் மனம் அறிந்தும், அங்கு செல்வது தவறு என மனம் நினைத்திட, அதைக் கூறாமல், இப்படிச் சமாளித்திருந்தாள்.
படிப்பில் ஆர்வம் காரணமாக வகுப்புகளை புறந்தள்ளாமல் கல்லூரியே கதி என்றிருந்தாள் எழில்வாணி.
எழில்வாணியைப் போல மிகச் சிலரே ஆர்வமாக இருந்தனர்.
கல்லூரிக்கு வந்தாயிற்று. இன்னும் சிறு பிள்ளைபோல புத்தகத்தையும், நோட்டையும் எடுத்துக் கொண்டு என எத்துனை நபர்கள் கேலி செய்தாலும் எழில்வாணி சிரிப்போடு கடக்கப் பழகியிருந்தாள்.
அதுதானே அவளது குணம்.
ஆகஸ்டு மாதம் இறுதி வரை முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு சேர்க்கை நடைபெற்றதால், சிலர் வந்து சேருவதும், பிறகு மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, தனக்கு நாட்டமான வேறு கல்லூரியில் சீட் கிடைத்தது என போவதுமாக இருந்தனர்.
இரண்டு மாதங்கள் சென்றிருந்தது.
செப்டம்பர் மாதம் வந்ததும், சீனியர் மாணாக்கர்கள் இணைந்து, ஜூனியர் மாணாக்கர்களுக்கு (வரவேற்பு)வெல்கம் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்லூரியில் துவங்கும் கொண்டாட்டத்தை, வெளியில் சென்று நிறைவு செய்திட விரும்ப, பெரும்பான்மையினோர் ஆமோதித்திருந்தனர்.
நகரின் முக்கிய பிரபலமான மாலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க அனைவரும் அங்கு செல்லத் தீர்மானித்து அதன்படி எழில்வாணியும் சென்றாள்.
///////////////////
வேந்தனது வேலைகள் ஒரு புறம் அவனை ஆக்ரமித்துக்கொள்ள, எண்ணமெல்லாம் புதிதாய் தனது கனவுகளை நனவாக்கிய பெண் சித்திரத்தின் நினைவோடு இன்னும் புத்துணர்வோடு செயல்பட்டான்.
பெண் வெளியில் வரும் நாள்களில் தவறவிடாமல் எப்படியாவது பார்த்துவிடுகிறான்.
எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றாலும், இது உண்மைதானா? இல்லை கனவா? என அவ்வப்போது தன்னைச் சோதித்துக் கொள்கிறான்.
மிகவும் குறுகிய நாள்களே கல்லூரியில் பார்த்திருந்த முகம் பளிங்குபோல மனதில் பதிந்திருந்தது.
நிலவாய் மனவானில் ஜொலித்தவள்
தேய்பிறைபோல மறைந்தாலும்
வளர்பிறையாய் எண்ணங்களில் நிறைந்திருந்தாள்!
வளர்பிறையாக இருந்த பெண்ணின் நினைவுகளை, பெண்ணைக் காணாதபோதும் தேய்பிறையாக்கிட மனம் விரும்பாது இதுநாள் வரை வாழ்ந்திருந்தான்.
என்னவென்று விசாரித்தபோது, திருமணம் கைகூடியதாக அறிந்தான்.
அவ்வளவே, ஆனால் அதன்பின் அவளையன்றி வேறு யாரையும் மனதால் நினைக்க இயலவில்லை.
ஆனால் அவளின் பூமுகம் அவனின் நித்திய பூஸ்டராக(Booster) மாறியிருந்தது.
ஆனால் சமீபமாய் அதில் தெளிவின்மையை மனம் உணர, பதறியிருந்தான்.
ஆசை முகம் மறந்து போகுமோ என இறுமாப்பு கொள்ள முடியாத நிலை வந்திருந்தது.
அப்படியிருந்தபோது, எதிர்பாரா நாளில் அதே சாயலில் கோவிலில் கண்டவளை, தன்னை மீட்க வந்தவளாகவே எண்ணியது மனது.
பெண்ணைக் கண்டபின் முன்பைக் காட்டிலும் உத்வேகத்தோடு உழைக்கிறான்.
யாருக்காக, எதற்காக என யோசிக்கவில்லை.
ஆனால் அவளது ஆசை முகத்தை காணும் நேரத்தை யாசிக்கிறான்.
///////
நகரின் முக்கிய இடங்களில் வேந்தன் அபார்ட்மெண்ட் மற்றும் புரோமோட்டர்ஸ்ஸின் பைலட் அலுவலகத்தில் இருந்த அனுப்பப்பட்ட தரவுகளை ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வர முயன்று கொண்டிருந்தான்.
வேந்தன் அபார்மெண்ட்டிற்கு நல்லதொரு வரவேற்பு பரவலாக இருந்தது.
ஆகையால் புதியதாக அபார்ட்மெண்ட், தனி வீடுகள், வில்லா என விருப்பப்படும் வகையில் கட்டித்தரக்கூடிய வேந்தன் அபார்மெண்ட் பைலட் அலுவலகத்தை நாடுவார்கள்.
அங்கு எதிர்பார்ப்புகளை கூறவும், தங்களுக்குத் தேவையானவற்றை பதிவு செய்து வைக்கவும், உரிய ஆவணங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அதனை இரண்டு மாதங்களுக்கொரு முறை ஒப்பீடு செய்து, அதற்கேற்ப அபார்மெண்டாகவோ, தனி வீடுகளாகவோ, வில்லா முறையிலான வீடுகளாவோ தங்களது நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதும், உரியவர்களைத் தொடர்பு கொள்வார்கள்.
விருப்பமுள்ளவர்கள் தங்களது தேவைக்கேற்ப வாங்கிக் கொள்வார்கள்.
குறிப்பிட்ட அலுவலகத்தில் இருந்து வந்த தரவுகளில், அதிகப்படியான அபார்மெண்ட் வகையிலான வீடுகளையே தேர்வு செய்திருக்க, அதன்பொருட்டு பணியைத் துவங்கியிருந்தான்.
ஆகையால் காலையில் மற்ற அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டு, பதினோரு மணியளவில் கட்டுமானம் நடக்குமிடம் செல்வான்.
மதிய உணவிற்குமேல் பைலட் அலுவலகங்களை வாரமிருமுறை சென்று நேரில் பார்வையிடுவான்.
//////////////
சென்னை வாழ் மக்களைப்போல உடையலங்காரங்களை மாற்றிக் கொள்ளவில்லை எழில்வாணி.
மிகவும் எளிமையான ஆடை, பெரியதாக அலங்காரம் எதுவுமில்லாமலேயே பெண் காண்பவரை கவர்ந்தாள்.
சீனியர், ஜூனியர் என அனைத்து ஆடவர்களின் கண்ணும் எழிலின் மீதுதான்.
யாரிடமும் முகம் கோணாது அமைதியான பதில் என்பதோடு ஒதுங்கிவிடுவாள்.
நீண்ட நேர கேளிக்கைகளுக்குப்பின், ஃபுட் கோர்ட் சென்றவர்கள், பஃபே முறையில் ஒவ்வொருவராக வேண்டியதை தாங்களே எடுத்துக் கொண்டு நகர, தடுமாறாமல் இயல்பாக நிதானமாக, முன்சென்றவர்களைத் தொடர்ந்து தானும் வேண்டியதை எடுத்துக் கொள்ளச் செல்ல, “இது டேஸ்ட் செமையா இருக்கும்”
“நான் எடுத்துத் தரேன்”, என அவளது கையில் இருந்த பிளேட்டை அவள் கொடுக்கும் முன் வாங்கி என்பதைவிட பிடுங்கி, அவளுக்கு வேண்டியதை எடுத்துத் தர முன்வந்த ஆடவர் கூட்டம் ஏராளம்.
சீனியர்களின் ஆரவாரத்தில், ஜூனியர் மாணவர்கள் சற்றே தயங்கி பின்வாங்கியிருந்தனர்.
உடன் பயிலும் பெண்கள் தவிர, சீனியர் பெண்களுக்கும் எழில் மீது பொறாமை பொங்கி வழிந்தது.
எழிலும் அதை உணர்ந்தாள். ஆனால் அதை தான் உணர்ந்ததுபோலக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக அனைவருடனும் இணைந்தே இருந்தாள்.
அனைவரும் உண்டு, அதன்பிறகும் கிளம்பும் உத்தேசமின்றி நேரத்தைக் கடத்தியிருந்தனர்.
இந்துமதியிடம் முன்பே அங்கிருந்து விடுதிக்கு வர பேருந்து, இதர வாகன வசதி பற்றி கேட்டறிந்திருந்ததால், அவசரம் காட்டாமல் இருந்தாள்.
ஒரு வழியாக வேண்டியவற்றில் சிறிது சிறிதாக எடுத்து சுவை பார்த்ததிலேயே பெண்ணுக்கு வயிறு நிறைந்திருந்தது.
அனைத்தும் முடிய நான்கு மணி ஆகியிருந்தது.
தங்களது வகுப்பு மாணவிகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியளை வழியனுப்ப வந்த கூட்டமும் இணைந்து, வாணியோடு லிஃட்டிற்கு காத்திருக்க, அனைத்தும் புரிந்தாலும் மனதின் ஓரத்தில் சற்று பயமும் இருந்தது எழிலுக்கு.
‘இனி இதுபோல எங்கயும் வெளிய வரக்கூடாது’, என மனதிற்குள் தனக்குத்தானே ஒரு முடிவை எடுத்திருந்தாள்.
ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாது லிஃட் திறந்ததும் எழில்வாணி உள்ளே நுழைய, அவளோடு இன்னும் சிலரும் உடன் வந்திருந்தனர்.
ஏறியது முதலே ஒரே சலசலப்பு. அன்று நடந்த கொண்டாட்டங்களைப் பற்றிச் சிலாகித்தபடியே வந்தார்கள்.
சற்று நேரத்தில் எத்தனை மாறுபட்ட பேச்சுகள்.
சிலரின் முகமாறுதல்களை கவனிக்கும் நிலையில் அங்கு யாரும் இல்லை.
லிஃடின் உள்ளே நுழைந்ததும் மனம் ஏனோ இதமாக உணர்ந்தது எழில்வாணிக்கு.
ஆனால் அந்த மாலை விட்டு வெளிவரும்போது, உடன் பயணித்தவனின் மனது மாறாக தயக்கத்திற்குச் சென்றிருந்தது