amf

amf

ஆசை முகம் 32 (நிறைவு)

 

கூட்டுக் குடும்பமாய் இல்லாதபோதும், வியாபாரம் சார்ந்து மூவரும் இணைந்து பயணிப்பதால், சகோதரர்கள் வீட்டில் உள்ள மற்ற பெண்கள் இதில் மூக்கை நுழைத்து பிரச்சனை செய்தனர்.

அனுசியாவிற்கு விசயம் தெரிய வந்ததும், “வீட்டுல இருக்கறவங்களுக்கு வேண்டியதைச் செய்யாம சர்வீஸ் பண்றேனு போயிட்டு, நேரங்கடந்து வந்து வெளிய சாப்பாடு வாங்கித் தரது மாதிரியா வேந்தன் பொண்டாட்டி பண்றா”

“…”

“இல்லைனா வீட்டைக் கண்டுக்காம எல்லாத்தையும் பட்டினியா போட்டுட்டு, கடையில போயி உக்கார்றாளா?  படிக்கணும்னு போனாலும் அவ புருசனுக்கு எதாவது செய்ய வேண்டியதுல குறை வைக்கிறாளா?” மூத்த மற்றும் இளைய மகன்கள் நியாயம் கேட்டு வந்தபோது, நேரிலேயே அனுசியா பேச

“என்னம்மா வாணிக்கு ஏத்துகிட்டேதான் எப்பவும் பேசுறீங்க”, வெற்றி குறைபட

“நான் நடக்காததையா தப்பாச் சொல்லிட்டேன்”

“இருந்தாலும், அவங்களுக்கு அதுமாதிரி எதாவது செய்து குடுக்கலைனாலும், பணமாவோ, இல்லனா நகையாவோ அவங்க பேருல வர மாதிரி செய்யச் சொல்றாங்க” விசயத்தைக் கூற

“அப்டிச் சொல்லு.  அதுக்கு எதுக்கு சுத்தி வளைச்சு மூக்கத் தொடுற”, என்றவர்

“வாணி கல்யாணம் பண்ணி வரும்போது அவளுக்கு சீதனமா அவங்க தாத்தா வீட்ல இருந்து வந்த பணத்துலதான் இதெல்லாம் வேந்தன் அவளுக்கு பண்ணிக் குடுத்திருக்கான்”

“என்னம்மா! நம்பற மாதிரிச் சொல்லுங்கம்மா!”

“நீ நம்பு.  நம்பாட்டா போ.  அதுக்காக அவ எடுத்துட்டு வந்தது எதுவும் இல்லைனு போயிருமா”, என்றவர் தனது அறைக்குள் சென்று கையில் எதையோ எடுத்து வந்தார்.

மகனிடம் காட்டி, “இது அவபேருல டெபாஷிட் ஆகியிருக்கற பணம்.  அதுல வர மாச வட்டி மட்டுமே  இருவத்தஞ்சாயிரம்.  அதுபோக நகை, நட்டுன்னு லாக்கர்ல இருக்கறது, கையில இருக்கறது எல்லாம் எப்டியும் எம்பது பவுனுக்கு இருக்கும். எல்லாத்துக்கும் ரசீது அதுல இருக்குபாரு” என

வெற்றி, கலை இருவரும் ஒருமுறைக்கு இரண்டு முறை சரிபார்த்து பெருமூச்செரிந்தவர்கள் அமைதியாக இருக்க, “உங்கப்பாவோட மெக்கானிக் சாப்போட அன்னைக்கு மதிப்பு, வெறும் ஒரு லட்ச ரூவாதான்.  அதுக்கு பதினைஞ்சு வருசத்துக்கு வட்டியிலாம் போட்டாகூட ஆளுக்கு இரண்டு லட்சம் கூடத் தேராது.  ஆனா ஆளுக்கு அஞ்சு லட்ச ரூபா தரச் சொல்றேன்.  அது ஏன் முப்பது லட்சமா கூட தரச் சொல்றேன்.  எல்லாத்தையும் விட்டுட்டு அவங்கவங்க இனி தனியாப் போயி பொழப்பப் பாத்துக்கங்க”

“எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுறீங்கம்மா”, கலைவேந்தன் பதறியபடி கூற

“…”

“வெறும் ஒரு லட்சத்தை வச்சி, இன்னிக்கு இத்தனை கடை, கண்ணினு எல்லாத்தையும் உசுரக் குடுத்து உருவாக்குனது வேந்தன்டா.  நீங்க சொகுசா போக வர இருக்கறது அவனோட பல நாள் பட்டினி, தூக்கம் இல்லாத உழைப்புடா.  உங்களை ராசா கணக்கா உக்கார வச்சுப் பாக்கறவன் அவன்.  அவம் பொண்டாட்டிக்கு செய்யறதைப்போல உம் பொண்டாட்டிக்கும் செய்யணும்னு வந்து கேக்கறீங்களே, எந்த நினைப்புல வந்து கேக்கறீங்கடா.  உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு”, அனுசியா

“…”

“…”

“வேந்தனை மாதிரித்தான் வாணியும்.  அவபோயி அங்க சும்மா உக்காந்தா எந்திரிச்சு வர்றா.  வியாபாரம் பாக்குது புள்ளை.  ஒரு நிமிசம் ஊசுனு உக்காரமா நேரத்தை அப்டியே காசாக்கிருவா.  சாடிக்கு ஏத்த மூடி.  அப்படிப்பட்டவளோட ஏதுறு மாதிரி போடுவாளுங்களா உங்க பொண்டாண்டிங்க”

“….”

“…”

“கல்யாணம் பண்ணி வந்தப்புறம் நான் இல்லாதப்பக்கூட, நேரங் காலம் பாக்காம வந்து, நேரத்துக்கு எதாவது வந்து சாப்பிட்டுப் போறீங்களே.  இத்தனை வருசத்துல எத்தனை தடவை அப்டி வேந்தனைக் கூப்பிட்டு பச்சத் தண்ணி குடுத்துருப்பாளுங்க உங்க வீடுகள்ல.  ரெண்டு பேரையுந்தான் சொல்றேன்”

“……….”

“…………..”

“வேந்தன் வரட்டும்.  எல்லாத்தையும் பிரிச்சதோட, இனி அவனவன் பொறுப்பில இருக்கறதை தனித்தனியா குடுத்துட்டு தலையிடாம ஒதுங்கீறுன்னு சொல்லிறேன்”

“ம்மா அதுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்” வெற்றி

“அப்ப வாணியோட எதுக்கு ஏறுமாறு போடுறாக உங்க ரெண்டு பேரு வீட்டுப் பொம்பளைங்களும்”

“…”

“…”

“வாணி ஒன்னுமே இல்லாம வந்தவளாவே இருக்கட்டுமே.  அவம் பொண்டாட்டியை அவன் இஷ்டம்போல வச்சிப்பான்.  அவனுக்கு தோணுறதை செய்வான்.  அதுக்குலாம் உங்க வீட்டுப் பொம்பளைககிட்ட கணக்குச் சொல்லணுமா.  இல்ல எனக்கு அப்டித்தான் நீங்க பேசற மாதிரி இருக்கு”

“அவளுக பேச்சைக் கேட்டு புரியாம கேட்டுட்டோம்.  இதோட விட்ருங்கம்மா”, கலை

“அவளுங்களுக்கு உண்மை நிலை தெரியாது.  அதுக்கு, நீங்களும் யோசிக்காம வந்து பேசுவீங்களா?”

“…”

“…”

“முடிவா பேசிறது நல்லது” என்றவர் அத்தோடு வேந்தன் வந்ததும் தனது முடிவைக் கூற, அவன் மறுத்தும் பிடிவாதமாக அவரவர் தொழிலை தனித்து நடத்தும்படி உத்தரவிட்டிருந்தார் அனுசியா.

“அவளுக கேட்டாளுகன்னா, இவனுகளுக்கு புத்தி எங்க போச்சு.  அதைக் கேட்டுட்டு நியாயம் கேக்க வராணுங்க.  அதனால எங்காலத்துக்குப் பின்ன இந்த மாதிரி பிரச்சனை வந்தா உனக்கு மனசு வருத்தம், சங்கடம்.  அதான் இப்பவே எல்லாத்தையும் பிரிச்சிட்டு ஒதுங்கிக்கங்க”

தாயின் சொல்லைக் கேட்டு, அதன்பின் தனித்தனியே தொழில் முறை வரவு செலவுகள் என்றாகியிருந்தது.  வேந்தனுக்கு முன்புபோல அலைச்சல் இல்லை.

“வயசு போகுது வேந்தா.  சீக்கிரமா ஒரு குழந்தையப் பெத்துட்டா நானும் என்னால முடிஞ்சவரை பாத்துக்குவேன்.  வாணிக்குனு யாரும் எடுத்துச் செய்ய இல்லலையா”, என வேந்தனிடம் கூற

“ம்மா. இன்னும் ஒரு வருசம் போகட்டும்.  அவ காலேஜ் முடிச்ச பின்ன பாத்துக்கலாம்”, கூறிவிட்டுக் கடந்திருந்தான்.

அனுசியா, அத்தோடு விடாமல் வாணியிடமும் அதேயே துவங்க, வாணிக்கு திருமணமான புதிதில், “இன்னும் இரண்டு வருசம் ஆகட்டும் வாணி”, என வேந்தன் கூறியது நினைவில் வந்தது.  ஆனாலும் அதைப்பற்றி அனுசியாவிடம் வாயைத் திறந்தாளில்லை.

வேந்தனுக்கு தங்களது அந்தரங்கம் பற்றி யாரிடமும் பேசுவது பிடிக்காது.

எத்தனை அன்னியோன்யமாக இருந்தாலும் அது அவர்களின் பகுதிக்குள் மட்டுந்தான்.  வெளியில் வந்தால், அவனா இவன் என வாணியே அயர்ந்த தருணங்கள் எல்லாம் ஆரம்பத்தில் இருந்தது.  ஆனால் போகப்போக வேந்தனைப் படித்து, பட்டம் வாங்கியிருந்தாள்.

வாணியின் விசயத்தில், அவ்வாறே வேந்தனும்.

……………………

ஏழு ஆண்டுகளுக்குப்பின்…

 

இளஅறிவியல் பட்டம் வாங்கியதோடு மேற்படிப்பு படிக்க கூற, மறுத்து விட்டாள்.

“வேணா மாமூ”

“ஏண்டீ”

“இதுல வர வருமானமே போதும் மாமூ”

அதன்பின் வேந்தனும் வற்புறுத்தவில்லை.

ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு வருட இடைவெளியில் இருமக்கள்.

பிள்ளைகளை கவனிப்பதிலும், வீட்டையும் வேந்தனையும் கவனிப்பதிலுமே வாணிக்கு நேரம் சென்றது.

அனுசியாவின் ஒத்துழைப்போடு, பிள்ளைகளை ஈன்றவளுக்கு, வேந்தனின் ஒத்துழைப்பு அளவிடற்கரியது.

அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும், மாலையில் விரைவில் வீட்டிற்கு வருபவன் அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்வரை மக்களை அவனது பொறுப்பில் பார்த்துக் கொள்வான்.

பிள்ளைகளுக்கும் வேந்தன் என்றால் போதும்.

உணவு ஊட்டி, உறங்கச் செய்வதுவரை அனைத்தையும் வேந்தனே பார்த்து, பார்த்து பிள்ளைகளை வளர்த்திருந்தான்.

வாணி, “இவங்களை ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு அனுப்பினாத்தான் நான் ரிலாக்சா என்னோட பழைய வர்க் கண்டினியூ பண்ண முடியும்” என்றிட

வேந்தன், “தம்பியவும், பாப்பாவையும் ரெண்டு நாள் நான் பாத்துக்கறேன்.  நீ, மீரா, மாதவி இல்லனா வேற யாரையாவது கூட்டிட்டு வெளியே போயிட்டு வா”

“உங்களை விட்டுட்டு யாருகூடவும் எனக்குப் போகப் பிடிக்கலை”

“அப்ப ஒன்னுமே பண்ண முடியாது” சிரிப்போடு கடப்பான்.

ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமிக்கு தனியாக ஒரு நபரை நிர்ணயித்து பார்த்துக் கொண்டான் வேந்தன்.

“ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி ரொம்ப நாளா மூடியே கிடக்கு” வருந்தியவளிடம்

“ஒன்னும் அவசரமில்லை.  நீ ரிலாக்சா வா.  அதுவரை அங்க பாத்துக்க ஆளிருக்காங்க” என வாணியை சமாதானம் செய்திருந்தான்.

திருமாறன் தனது திருமணத்திற்கு வந்து அழைத்தான்.  ஆனால் அங்கு நிலவரம் அத்தனை சரியில்லாததால், பரிசுப் பொருளை கொரியரில் அனுப்பியதோடு, வாழ்த்துகளை பகிர்ந்திருந்தாள்.

இடையே வாணியின் பிள்ளைப்பேறு சமயத்தில் வந்து பார்த்துச் சென்றிருந்தான்.

இரண்டு பிள்ளைகள் பிறந்ததன்பிறகு, முத்துரங்கனை அழைத்துக் கொண்டு திருமாறன் வந்திருந்தான்.

“என் காலம்வரைகூட உன்னை நல்லாப் பாத்துக்கல” வருந்தினார்.

“அதல்லாம் இப்ப எதுக்கு நினைச்சு வருத்தப்படறீங்க மாமா.  போனது போகட்டும்.  அத்தை நல்லாயிருக்காங்கள்ல” என பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருந்தாள் வாணி.

……………….

பிள்ளைகள் பள்ளி செல்லத் துவங்கியிருந்தார்கள்.

வாணியும், வேந்தனது அலுவலகம் சார்ந்த விசயங்களை அறிந்து கொள்ள முயன்று, அதில் ஓரளவு நிர்வாகத் திறனை வளர்த்துக் கொண்டாள்.

வேந்தன் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும்போது, வாணியின் மேற்பார்வையில் அலுவலகங்கள் இயங்கின.

கட்டிடப் பணிகளைக்கூட நேரில் பார்வையிடத் துவங்கியிருந்தாள்.

மாலை முதல் பிள்ளைகள் காலையில் பள்ளி செல்லும்வரை குதூகலத்திற்கும், மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் இருந்தது.

அதனால் கலை, வெற்றியின் பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகும், வேந்தனையும், வாணியையும் அண்டியிருப்பதையே பெரிதும் விரும்பினர்.

“எப்பப்பாரு அங்கேயே போயி கிடையா கிடங்க.  இங்க சமைச்சத இப்ப யாரு சாப்பிடுவா” என அருகே உள்ள வீடுகளில் குரல் கேட்டாலும், அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் தம்பதியர் இருவரும்.

அனைவரையும் அரணைத்துச் செல்வதில் இருவருக்கும் ஈடு வேறு யாரும் இல்லை.

மித்ராவிற்கு நிறைய மனக்குறைகள். அவளது திருமணத்திற்குப் பின் வாணியைப் பார்க்கும்போதெல்லாம் பெருமூச்செரிந்து மனம் வாதனை கொள்கிறாள்.

‘இது நான் இருக்க வேண்டிய இடம்.   எங்கையோ இருந்து வந்து எல்லாத்தையும் இது அனுபவிக்கிது’ என்பதாக.

வாணி அனைவரையும் அரவணைத்துச் செல்ல பழகியிருந்தாள்.

………………..

அனுசியாவிற்கு நிறைவான மகிழ்ச்சி. பிள்ளைகளை கவனித்துக் கொள்வதோடு, அனுசியாவிற்கும் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக் கொள்கிறாள் வாணி.

மீரா, மாதவி, நிஷா, மற்ற அனைவருக்குமே வேந்தனது குடும்ப வாழ்க்கையை நினைத்து ஆச்சர்யமே.

“ஏய்… எப்டிப்பா?  நம்ம ஆளுங்களோடதான் வேந்தனும் படிச்சான்.  ஆனா அவன் மட்டும் இப்டி டோட்டலா உல்டாவா இருக்கான்” மீரா

“மேக் அப்டி மீரா” மாதவி

“புலம்புவாப்ளன்னு பாத்தா, புலம்ப வச்சிட்டாப்ளயே” நிஷா

“என்னவோ, வாணி மந்திரம், மாயம்னு பண்ணிட்டாளோ!” ஷீபா

“எனக்கும் அப்டித்தான் தோணுது!” கயல்

“கல்யாணமாகி மூனு மாசத்துல இதுங்கள மாதிரி மாறிருவான்னு நினச்சேன்.  இருக்க இருக்க இன்னும் நம்மை காண்டாக்குறான். வெறுப்பேத்துறான்” மீரா

“சரி, நம்ம ஆளுங்களையெல்லாம் வேந்தன்கிட்ட ட்யூசன் எடுக்கச் சொல்லி அனுப்பிப் பாக்கலாம்” கயல்

“போய்யா.  நீ வேற.  நம்ம ஆளுங்கள்லாம் நாய் வாலு மாதிரி” ஷீபா

“சரியா சொன்ன” மாதவி

இப்படி புலம்பல்கள், ஏக்கங்கள் நீண்டிருந்தது,

வேந்தன், வாணியைப் பற்றி பேச்சுகள் நித்தமும் அவர்களுக்கு இடையே வந்து கொண்டேயிருந்ததே அன்றி, குறைந்தபாடில்லை.

நாம் அவர்களது நிறைவான வாழ்க்கையைக் கண்டு, வாழ்த்தி விடைபெறுவோம்.

……………………..

அன்பு ஒன்றே அனைத்து மாயமும் செய்கிறது!

அது இல்லாத இடத்தில் வெறும் காயமே உண்டாகிறது!

—————————

Leave a Reply

error: Content is protected !!