anbin mozhi – 21

anbin mozhi – 21

  • ராமின் திருமணத்திற்காக வேண்டி,  நெய்வாசலிலிருந்து வந்திருந்த, சுசீலாவும், வள்ளியும் கணவனுடன் தங்கள் ஊருக்கு கிளம்பி விட்டனர்.
     
    “அண்ணி, நாங்க கிளம்பறோம். சீக்கிரம் பிள்ளைகளை கூட்டிட்டு ஊருக்கு வாங்க, குலதெய்வம் கோயிலுக்கு போகணும், நம்ம ஊரு, திருவிழா வேற வருது” என்றவரிடம் ஜாஸ்.
     
    “வரோம் சுசிலா திருவிழாவை நாம தான் எடுத்து செய்யணும், இந்த திடீர் கல்யாணத்தை பத்தி ஏதாவது  சொல்லுவார்கள், அதான் கொஞ்சம் மனசுக்கு குழப்பமா இருக்கு, கயல் வருத்தப்படுற  மாதிரி யாரும் எதுவும் சொல்லிறக் கூடாது…” 
     
    அதற்கு வள்ளி, “மனுஷ, மக்கணு இருந்தா, முன்ன பின்ன ஏதாவது சொல்லத்தான்  செய்வாங்க அண்ணி, அதுக்காக, நம்ம பிள்ளைகளை இப்படியே விட முடியுமா?, பேசுற வாய் தானா ரெண்டு நாள் பேசிட்டு அடங்கிப் போகும், நமக்கு, நம்ம புள்ளைங்க எதிர்காலம் தான் முக்கியம். நீங்க எதையும் மனசுல குழப்பி வைத்துக் கொண்டிருக்காமல், பிள்ளைகளை கூட்டிட்டு வாங்க”  என்றாள் ஆறுதலாய்.
     
    எத்தனை பேருக்கு சோர்ந்து போகும் போது தாங்கிப் பிடிக்க உறவுகள் இருக்கும் அந்த விதத்தில், ஜாஸ் கொடுத்து வைத்தவர் தான்.
     
     வேந்தனின் உறவுகள் எல்லாம் அன்பை மட்டுமே வழங்க தெரிந்த உறவுகளாய் அமைந்தது அவருக்கு, கலங்கி நிற்கும்  நேரத்தில் தலை சாய்த்துக் கொள்ள தோள் கொடுக்கும் சொந்தங்கள்.
     
    “சரி வள்ளி, பொன்னி இங்க இருக்கட்டும். நாங்க ஊருக்கு வரப்போ கூட்டிட்டு வரோம்” என்ற  வார்த்தையில் வள்ளி நிமிர்ந்து தன் கணவனை பார்க்க.
    வள்ளியின் பார்வையைப் புரிந்து கொண்டவர் சரி என்று தலையசைத்தார்.
     
    “சரி அண்ணி பார்த்துக்கோங்க” என்றவர் , சுசிலாவுடன்  கிளம்புவதற்கு தேவையானதை எடுத்து வைக்க சென்றுவிட்டார்.
     
    மறுநாள் அனைவரிடமும் சொல்லிவிட்டு, வந்திருந்தவர்கள் ஊருக்குத் திரும்பிவிட, வீடு சிறிது கலகலப்பு குறைந்து போய் இருக்க, பிள்ளைகளின் விளையாட்டு சத்தம் அப்போது வீட்டை நிறைத்தது.
     
     
     
    ஆதி, ரவி இருவரும் மாடியில் பொன்னி மற்றும் நிலாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, ஜாஸ், பிள்ளைகள் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தார்.
     
    அவருக்கும் தான் என்ன வேண்டும் பிள்ளைகளின் மகிழ்வை விட, வேந்தன் மறைவுக்குப் பிறகு மனது இப்பொழுது தான் சமன்பாட்டு சிறிது மகிழ்வாக இருந்தது.
     
    என்னதான் தன் பிள்ளைகளுக்காக வேண்டியது அனைத்தையும் செய்தாலும், பேரப் பிள்ளைகளை பார்ப்பதே ஒரு அளவுகடந்த சந்தோஷம் தான்.
     
    “போதும் பசங்களா வாங்க, வாங்க எல்லாம் வந்து பால் குடிச்சிட்டு போய் கீழே விளையாடுங்க, ரொம்ப நேரம் பனியிலேயே ஆடிக்கிட்டு இருக்கக் கூடாது, உடம்புக்கு ஏதாவது வந்திடும், போதும்  கிளம்பலாம்” என்று பிள்ளைகளை அழைக்க.
     
    “பாட்டி”என்று துள்ளிக் குதித்துக் கொண்டே, இருவரும் ஜாஸ்ஸின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டனர்
    .
    பொன்னியும், நிலாவும் மூச்சு வாங்க ஜாஸ்ஸின்  அருகே உக்கார்ந்து நீரை குடித்து முடிக்க, ரவி,  நிலாவின் மடியில் அமர்ந்துக் கொண்டான்.
     
    பிறந்தது முதல் ரமி, கயல் இருவரை மட்டுமே, தங்கள் உலகமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்களுக்கு இவ்வளவு சொந்தங்கள் கண்டு அத்தனை சந்தோஷமாக இருந்தது.
     
    “ப்ளீஸ், ப்ளீஸ் பாட்டி, இன்னும் கொஞ்ச நேரம் மட்டும், என் தங்க கியூட் பாட்டி இல்ல, நாங்க இப்போ விளையாடுறோம், ஓகேவா” என்றான் ஆதி மழலைக்கே உண்டான மயக்கும் குரலில். 
     
    முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, குரலில் ஏற்ற இறக்கங்களுடன் கண்களை சுருக்கி, அழகாகப் பேசும் அவனைக் கண்டு அத்தனை சிரிப்பாக வந்தது ஜாஸ்ஸிற்கு, சிறுவயது  ராஜினை பார்த்தது போலிருந்தது, அவனும் இது போலத் தான் காரியம் ஆக வேண்டுமென்றால், மயக்கும் விதத்தில் அழகாக பேசுவான்.
     
    “ரொம்ப ஐஸ் வைக்கக்கூடாது பட்டு,  உன் சித்துவையே   சமாளிக்க தெரியும் எனக்கு, அதனால, என் குட்டி செல்லம் என்ன பண்றீங்க, உடனே கிளம்பி பாட்டியோட கீழே வர்றீங்க, நான்  உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிடிக்குமோ எல்லாத்தையும் செஞ்சு தர சொல்றேன் சரியா”என்று அவனை போலவே ஏற்ற இறக்கங்களுடன் கூறி, அவனது சிறிய மூக்கை பிடித்து ஆட்ட, பொன்னி, நிலா இருவரும் சிரித்து விட்டனர்.
     
    “போங்க பாட்டி” என்றவன் புன்னகைத்துக் கொண்டிருந்த பொன்னியின் மடிக்குத் தாவினான்.
     
    குழலினிது யாழ் இனிது என்பர், தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார். என்பதற்கேற்ப இனிமையான சிரிப்பு சத்தமும் மழலை மொழிகளும் வீடு முழுவதும் நிறைந்திருந்தது
     
     
    ****************************
     
    ராம், ராஜ் இருவரின் நேரத்தையும் ரிசார்ட் வேலைகள் எடுத்துக் கொள்ள இங்கு வீட்டில்,
     
    ஜாஸ் வில்லியம்ஸ், மருத்துவமனை கட்டுவது, தொடர்பான எல்லா பொறுப்புகளையும் ரம்யா, செல்வம் மற்றும்  கயலிடம் கொடுத்திருந்தார்.
     
    ரம்யாவிற்கு சிறிதளவு எரிச்சல் தான், செல்வம் தங்களுடன் சேர்ந்து வேலையை பார்ப்பது பற்றி, என்ன செய்ய முடியும், அப்பகுதி மக்களுக்கு மிகவும் முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்யப் பட வேண்டிய விஷயத்தில், தன்னால் எந்த வித  தடங்களும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தாள்.
     
    ரம்யா, கயலுடன் பேசிக் கொண்டு முன்னே நடக்க, அவர்களின் பின்னே செல்வம் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.
     
    தோழியுடன் பேசும் சுவாரஸ்யத்தில் கீழே கிடந்த கட்டையை ரம்யா கவனிக்கவில்லை, பேசிக் கொண்டே நடந்தவள் அதில் கால் இடறி  விழுங்கப் போகும் நொடியில், அவள் தோள் பற்றி நிறுத்தினான் செல்வம்.
     
    அவளை விழுந்து விடாமல் தடுக்க தான் தோள்களைப் பற்றினான், ஆனால் அது கூட ரம்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,  கோபமாக அவனை நோக்கி தன் கைகளை ஓங்க போக,
     
    கயலின் “ரம்யா” என்ற கோபமான அழைப்பில் முயன்று, தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
     
    கயலோ, தோழியின் செயலை கண்டு அதிர்ந்து போக, செல்வத்திடம் “மன்னிச்சிடுங்க அண்ணா, ரம்யா ஏதோ ஒரு ஞாபகத்தில் இப்படி நடந்துகிட்டா உங்க கிட்ட…  தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள் வருத்தமாக.
     
    “பரவாயில்ல விடுமா, நான் எதுவும் நினைக்கல” என்று சொன்னவன். முகம் வாடி போய் தான் இருந்தது, செல்வம்  மெல்லத் திரும்பி தன்னவள் முகத்தினை பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.
     
     
    கயலின் முகம் மட்டுமே வருத்தமாக காணப்பட்டது,  ரம்யாவின் முகம் இன்னும் செல்வத்தை  வெறுப்புடன் தான், நோக்கிக் கொண்டிருந்தது.
     
    இவ்வளவு வெறுக்கும் அளவிற்கு இந்தப் பெண்ணிற்கு தான் என்ன செய்தோம்? என்று அவனுக்கு இதுவரை புரியவில்லை, அவளின் கடந்த காலம் தான், நிகழ்காலத்தில் அவள் வாழ்வை மாற்ற  நினைக்கும் அவனை வெறுக்க காரணம் ஆகிவிட்டதை பாவம் செல்வம் அறிந்திருக்கவில்லை.
     
    அறியும் போது அவனது முடிவுகள் எப்படி இருக்குமோ!…
     
    செல்வத்திற்கு ரம்யா தன்னிடம் காட்டும் முகமும், சற்று முன் அவள் நடந்து கொண்ட முறை, அவனுக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தது.
     
    “கயல் நான் செத்த நேரம் அந்த பக்கமா, நடந்து போயிட்டு, அப்படியே  வீட்டுக்கு வரேன். நீங்க ஸ்ட்ரைட்டா போயிருங்க” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல், கயலின் பதிலையும் எதிர்பார்க்காமல் நடந்து விட்டான்.
     
    அவன் சென்றது தான் தாமதம் கயல் ரம்யாவை ஒரு பிடி பிடித்து விட்டாள்.
     
    “என்ன ரமி புதுசா?, நீ இந்த மாதிரி யார்கிட்டயும் இதுவரைக்கும் நடந்தில்லையே, ஏன் அண்ணா கிட்ட மட்டும், இந்த மாதிரி  நடந்துகிட்ட?, இப்பல்லாம் வரவர ரொம்ப வித்தியாசமா பண்ற,  என்னன்னே தெரியல” என்று அழுத்தமாக கூறியவள், தோழியின் முகம் பார்க்க ரம்யாவின் முகமோ, சிறுத்து கசங்கி இருப்பதைக் கண்டு  அமைதியாகி விட்டாள்.
     
    “சரி வா வீட்டுக்கு போகலாம்” என்ற கயலின் மனதும் ஏதோ சிந்தனையிலேயே இருந்தது, தோழியின் நடவடிக்கையை கண்டு.
     
    ரம்யாவின் நிலையோ, அவன் தன்மை விரும்புவதை கூறியதிலிருந்து, கலங்கி, நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
     
     
    ரம்யா இந்த நொடி வரை தனக்கு ஒரு வாழ்வு வேண்டுமென்றோ,   புதிதாக ஒரு மணவாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்றோ, துளி அளவு கூட எண்ணவில்லை. அவளை பொருத்தவரை தன்னுடைய வாழ்வு என்பது ஆதி ரவி இருவரை சுற்றி மட்டுமே.
     
    அவளின் அந்த அழகான உலகத்தில், புதிதாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணமும் ரம்யாவுக்கு இல்லை.
     
    செல்வம் தன்னிடம் காட்டும் ஆர்வம், ரமிக்கு  விருப்பமானதாக இல்லை அவனுடைய பார்வை சொல்லும் விடயங்கள் அவளுக்கு சிறிதளவு பயத்தை கொடுக்க, தனக்குப் பிரியமான சுசிலா அத்தையின் மகனிடம் வெறுப்பை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தாள்.
     
     
    திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறைதான் என்னும் அளவிற்கு இருந்தது அவளது மனநிலை, சேதுவுக்கு பின் அவளால் யாரையும் மனதில் நினைக்க முடியவில்லை.
     
    அதுவே செல்வத்தின் மீதான வெறுப்பிற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. ‘தன் இயல்பை தன் வாழ்க்கையை, எங்கிருந்தோ வந்தவன் மாற்றுவதா’ என்று.
     
    மூவரும் வெவ்வேறு சிந்தனையுடன் வீட்டை அடைந்தனர்.
     
    ********************
     
    இதமான குளிர்ந்த காற்று தன்னை வருடி செல்ல கையெட்டும் தூரத்தில் இருந்த மேகங்களை கண்டு ரசித்தவாறு நின்றிருந்தான் ராம் வில்லியம்ஸ்.
     
    மலைகள் நடுவே துரத்தில் சிறிய அளவிலான அருவி ஒன்று  வெள்ளியை உருக்கி ஊற்றியது போல், மேலிருந்து கீழே நிலத்தின் மீது விழுந்து, அந்த இடம் முழுவதும் பரவி, பின் தழுவி செல்வது தெரிய, பலவகையான மரங்கள், கொடிகள், அதில் நிறைந்துள்ள அழகிய பலவண்ண பூக்கள் எல்லாம் அந்த பகுதியை சொர்க்கம் போல அலங்கரித்து கொண்டிருந்தன.
     
     அவற்றையெல்லாம் தன்  விழி அகல, பார்த்துக்  கொண்டிருந்த ராமிற்கு இமைக்க கூட முடியவில்லை, அதிலும் ஆரஸ்வதி  மரத்தின் வாசம் அந்த பகுதியை அத்தனை ரம்யமாக மாற்றிக் கொண்டிருந்தது.
     
    ராமின் நிலைக் கண்டு  அவனை நெருங்கிய ராஜ், மெல்லிய புன்னகையுடன்
     “ஆஹா ராம், நீ அண்ணியை கூட இவ்வளவு ஆசையா பார்த்ததில்ல, வாவ்… இப்போ உன் கண்ணு ரெண்டுலயும் காதல் மின்னுது போ” என்றான் கேலியாக.
     
    தன் இரட்டையின் கிண்டலை  கூட காதில் வாங்காமல், விழி அகல இயற்கை  அன்னையை ரசித்துக் கொண்டு,
     
    “பாத்தியாலே, இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு, எவ்வளவு நாட்டுக்கு போய் இருக்கோம், இந்த மாதிரி ஒரு அமைதி, மனசுக்கு எங்கேயாவது கிடைக்குதா… இயற்கைக்கு மட்டும் தான் மனசை அமைதி படுத்தும் தன்மை இருக்கு, இவை எல்லாத்தையும் அழித்து விட்டு,   ஆடம்பர வீடு, ஹோட்டல், ரிசார்ட் எல்லாம் கட்டி,  இதோட அழகையே நாம இல்லாமல் பண்ணிடுறோம்.” என்றான்  ஒரு விவசாயிக்கு உரிய ஆதங்கத்துடன்.
     
    “நம்மளோட ஆடம்பர வாழ்க்கைக்காக இயற்கையை, ஒன்னும் இல்லாம செஞ்சு,  விவசாயத்தை பத்தி கவலைபடாமல், எதை நோக்கி போகுது இந்த சமுதாயம். எனக்கு தெரியல,  பணத்தை சாப்பிட முடியாது,  விவசாயியை அழிச்சிட்டு,  விவசாயத்தை அழிச்சிட்டு எதை சாதிக்கப் போறோம்…?” என்ற ராமின் வார்த்தைகளில் அவனின் தோளை தட்டிய ராஜ்,
     
     “இந்த இடத்தில நாமதான் ரிசார்ட் கட்டப் போறோம், சோ எதையும் அழிக்காமல், எதோட அழகை கெடுக்காமல்,  உன்னால மட்டும் தான்  இதை சிறப்பா  செய்ய முடியும்,  அதனால தான் உன் கிட்ட இந்த ப்ராஜெக்ட் செய்ய கொடுத்திருக்கேன்” என்றவன்.
     
    “சியர் அப் ப்ரோ,  அவ்வளவு சீக்கிரத்தில் இயற்கையையெல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது,  நாம ஒன்னும் செய்யணும்னு நினைச்சா, அது பத்து செஞ்சிடும், நாம அத அழிக்கிறதுக்கு முன்னாடி நம்மள ஒண்ணும் இல்லாம ஆகிடும்” என்றான் புன்னகையுடன்.
     
    ராஜின் வார்த்தைகள் கேட்ட ராமின் முகமும் புன்னகைத்தது, உண்மை அதுதானே, இயற்கைக்கே உண்டான சக்தி மகத்தானது.
     
     
    புன்னகையுடன் அப்பகுதியை பார்த்தவனுக்கு, எப்படி தன் தந்தைக்கு இந்த இடம் அத்துணை பிரியமானதாக அமைந்தது என்பது,  ராமிற்கு இப்போது தெளிவாக புரிந்தது.
     
    வேந்தனை மயக்கிய அந்த மலைப் பகுதி ராமை மயக்கவும் தயங்கவில்லை, ராம் மயங்கவும் தயங்கவில்லை.
     
    ராஜின் வார்த்தைகளை கேட்ட  பிறகு, அவனுக்கு பிடித்தமான இடத்தில் தான் கற்ற வேலையை செய்ய,  ராம் சிறிதளவு கூட தயக்கம் காட்டவில்லை.
     
    அவன் கண் முன்னே அந்த இடத்தில், அதன் இயல்பை சிதைக்காமல், செய்ய வேண்டிய மாற்றங்கள்  எல்லாம் விரிந்தன.
     
    ஒரு வரைபடம் முழுதாக கண்  முன்னே வர, ஒரு தேர்ந்த கட்டிட கலை நிபுணரென அந்த இடத்தை அணுஅணுவாக  ஆராய்ந்தான்.
     
     
    அவனின் இந்த மாற்றம் ராஜிற்கு அளவிட முடியாத சந்தோஷத்தை தந்தது, அவனுக்கு வேண்டியதும் அது தானே, உதித்தது முதல் ஒன்றாக இருப்பவர்கள், இணைந்து ஒன்றாக இந்த ஒப்பந்தத்திற்கு உண்டான திட்டத்தை                          ( ப்ரொஜெக்ட்) செய்ய வேண்டும் என்பது.
     
     
    ரிசார்ட் ஏற்பட்டுக்கான ப்ளூ ப்ரின்ட்  தயார் செய்தவுடன், சகோதரர்கள் இருவரும் அதன் பின் மின்னல் வேகத்தில் செயல்பட, விஜயோ தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்தான்.
     
     
    **********************
     
     
     
    பெண்களெல்லாம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, செல்வம் வீட்டினுள் வந்த அதே நேரத்தில் இரட்டையர்கள், இருவரும் தங்கள் வேலையை முடித்து உள்ளே வர சரியாக இருந்தது.
     
     வெளியில் சென்று வந்தவர்கள், ஜாஸ்ஸிடம் அன்றைய தினத்தைப் பற்றி சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க. அந்த இடத்தில் அமைதி சூழ்ந்திருந்தது இருவரிடம் மட்டுமே, கயல் மருத்துவமனை இடம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்க, ரம்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் அதேபோல் செல்வமும் எதுவும் பேசவில்லை.
     
    பேச்சு சுவாரஸ்யத்தில் மற்றவர்கள் இதை கவனிக்காத போதும், ராமின் கண்களில் இருந்து இவை எதுவும் தப்பவில்லை.
     
    ராம் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ரம்யாவின் முகமும் சரி இல்லை, அதே நேரம் செல்வம் முகம் சுத்தமாக எதையோ இழந்து விட்டது போலிருந்தது.
     
    சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன், அதற்கு மேல் முடியாமல் தன் நண்பனிடம்,
     
    “செல்வம் ஊரிலிருந்த பங்காளி பயலுக போன் பண்ணி இருந்தாங்கே, அடுத்த நடவு பத்தி பேசுறதுக்கு, நான் உன்னோட சேர்ந்து பேசலாம்னு அப்புறம் கூப்பிடுறேன் வச்சுட்டேன்,  வாலே, செத்த நேரம் அவிங்களுக்கு போன் பண்ணி என்னன்னு கேட்போம்” என்றவன் செல்வத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.
     
    வெளியே வந்து தோட்டத்தின் மேடையில் அமர்ந்தவன்,  நொடி கூட தாமதிக்காது,  “என்னாச்சுலே, உன் முகம் பார்க்க என்னென்டோ இருக்கு ?” என்றவனிடம் எதுவும் பேசாமல், செல்வம் தூரத்தில் தெரிந்த மலை முகட்டை வெறுமையாய் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் துணுக்குற்றான் ராம்.
     
    எப்பொழுதும் ஜாலியாக பேசி, சுற்றிக் கொண்டு துள்ளலுடன் திரிபவனின், முகத்தில் இதுவரை இப்படி ஒரு கலக்கத்தை ராம் கண்டதில்லை.
     
    செல்வத்தின் கரங்களை இறுகப் பற்றி, “என்னலே” என்றான் ஒற்றை வார்த்தையாய். 
     
    எப்பொழுதும் விளையாட்டாய் பேசி மற்றவர்களின் கவலையை மறக்கச் செய்பவன், மனம் வெதும்பி தன்னை பற்றி இருந்த தன் நண்பனின் கைகளை இறுகப் பற்றியபடி,  “என்னால தாங்க முடியல ராம், இதுவரைக்கும்  நான் மத்தவங்கள கேலி, கிண்டல் பண்ணி, விளையாட்டா  வம்பு  இழுத்து இருக்கேன்லே, அதே நேரத்துல  நான் யாரையும் தப்பான ஒரு பார்வை கூட பார்த்ததில்லை தானே?, ஆனா இன்னைக்கு அவ என்னை எவ்வளவு தப்பா பார்த்தா தெரியுமாடா?” என்றான் ஆற்றாமையாய்.
     
     
     
    ராம், செல்வத்தை கேள்வியாக நோக்க,  அவனின் அத்தை மகனோ, தலை குனிந்தவாறு சிறு அமைதிக்கு பின் “ரம்யா…  ரம்யா தான் மச்சான்” என்றான் தடுமாற்றமாய், என்ன தான்   உயிர் தோழனாக  இருந்தாலும் ரமி, ராமின் தங்கைக்கு நிகரானவள். குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பவள்.
     
    செல்வத்தின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் “என்ன?”  என்று ராம் வியப்பாக கேட்க.
     
    இன்று நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டவன், இங்கு வந்ததிலிருந்து, தன் மனதில் உள்ள அனைத்தையும் ஒன்று விடாமல், நண்பனிடம் கொட்டி விட்டான்.
     
     
    செல்வம், ராமிடம் ரம்யாவை விரும்புவதை வெளிப்படையாக கூறி விட்டான். மனதில் உள்ளதை தன் மாமன் மகனிடம், அவனால் இதற்கு மேலும் மறைக்க முடியவில்லை. ராஜுக்கு ஓரளவுக்கு செல்வத்தின் மனது, இலை மறை காயாய் தெரியும் என்றாலும், அவன் ராமிடம் தான் முதலில் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டான்.
     
    “மச்சான், எனக்கு ரம்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு, என்னமோ தெரியல, எத்தனையோ புள்ளகளை பார்த்துட்டேன். ஆனால் இந்த புள்ளயை பார்த்த உடனே என்னமோ மனசுக்குள்ள, இவ தான் எனக்கு என்ற மாதிரி ஒரு எண்ணம். ஆனா எனக்கு மட்டும் தான் அந்த எண்ணம் இருக்கு…, எதனாலோ, அந்த புள்ளக்கு என்னய பிடிக்கல” என்று சொல்லும் போது அவன் குரல்,  இயலாமையும், வருத்தமும் சேர்ந்து சிறிதாக ஆக மாறியது.
     
     செல்வம்,  அவன் மனதில் உள்ளதை சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ராம், எதையும் பேசாமல் புருவங்கள் சுருங்க யோசனையாக அமர்ந்திருந்தான்.
     
    நண்பனின் மௌனம் கண்டு முதலில் ஒன்றும் புரியாமல் இருந்தவன். ராமின் மனதை மாற்ற, மெல்லிய புன்னகையுடன் “ஏன் உன் தங்கச்சிய என கட்டி கொடுக்க மாட்டியா?” என்றான் கேலியாக, ஆனால் அந்த கேள்வியிலும் நூலளவு வருத்தம் இழையோடியது.
     
    செல்வத்தின் வார்த்தைகளில் தன்னிலை பெற்றவன். “ஹேய்… என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியாலே, ரம்யாவுக்கு உன்ன விட நல்ல மாப்பிள்ளைய,  எங்களால வேறு எங்கேயும் தேட முடியாதுடா, ஆனா… எப்படி சொல்றது, இதுக்கு ரம்யா ஒத்துக்க மாட்டா” என்றான் ரம்யாவை நன்றாக உணர்ந்தவனாய்.
     
    செல்வத்திற்கு ரம்யாவை பற்றி இதுவரை ஒன்றும் தெரியாது, அவள் தன் மாமன் குடும்பத்திற்கு  நெருக்கமானவள் என்பதைத் தவிர ,  ராமின் வார்த்தைகள் புரியாமல் அவனைப் பார்க்க,
     
     
    “ரம்யா உன்ன மட்டும் இல்ல, வேற யாருமே கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டா, ஏன்னா ரமிக்கு அவ ஸ்கூல் படிக்கும் போதே,  அவ தாய்மாமாவுடன் கல்யாணம் ஆயிடுச்சு” என்ற வார்த்தைகளில் செல்வம் பேச்சில் இருந்து எழுந்து நின்று விட்டான்.
     
     
    மாற்றான் மனைவியை பார்ப்பதை விட கேவலமான ஒரு செயல் வேறு இல்லை என்று எண்ணும் அவன்.  தன் செயலை எண்ணி வெட்கி பேச முடியாமல் அமைதியாக தலைகுனிந்து நிற்க.
     
     
    சிறுவயது  முதலில் செல்வத்தைப் பற்றி நன்கு அறிந்த ராம் அவனின் மனம் உணர்ந்து, “உன் மேல தப்பு இல்ல செல்வம், அவ வாழ்க்கையை பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழி பண்ணி விட்டாங்க, போனவங்க பத்திப் பேச வேண்டாம், ஆனா சேது ரொம்ப நல்லவர் அப்படின்னு அம்மா சொல்லி இருக்காங்க, மலைப் பிரதேசத்தில் பாறையில் இருந்து தடுமாறின, ஒரு குழந்தையை காப்பாற்ற போய், அதுல அவரோட உயிரே போயிடுச்சு, அடிப்படை மருத்துவ வசதி இல்லாத இந்த ஊருல,  அவரை காப்பாற்ற முடியல. உடனே கொண்டு வந்து வைத்தியம் செஞ்சிருந்தா, இந்நேரம் அவர் உயிரோடு இருந்திருப்பார்”. என்றவன்.
     
     
     ஒரு பெருமூச்சுடன் “அவளுக்கு  நல்லதா ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கணும்னு எங்க எல்லாருக்கும் ஆசை இருக்கு, ஆனா அவ அதுக்கு சம்மதிப்பாளன்னு தெரியல, எனக்கு தெரிய  அவங்க மாமா சேது உடைய ஞாபகம் இன்னும், ரம்யா மனசுல ஆழமா இருக்கு, அதனால தான் புதுசா ஒரு வாழ்க்கையை ஏத்துக்க முடியாம இருக்கா, அந்த கோபத்தை கூட அவ  உன் மேல காட்டியிருக்கலாம்” என்றான் நீளமாக.
     
    செல்வத்தின் மனதில் தோன்றிய குற்ற உணர்ச்சியை அழித்து விடும் வேகத்தோடு ராமின் வார்த்தைகள் வெளிப்பட்டன, அதே நேரத்தில் அவனின் மனதில்,  இத்திருமணத்தை  எப்படியும் முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றி இருந்தது.
     
    ரம்யாவை பற்றி முழுவதும் அறிந்து கொண்டவன் மனதில்,  தன்னவளின் நிலை கண்டு வருத்தம் இருந்தாலும், இதுவரை மனதில் இருந்த கலக்கம் மறைந்து ஒருவித அமைதியும், அதே நேரத்தில் அவளை அடையும் உறுதியும் தோன்றியது.
     
    ***********************
     
     
     
  •  

Leave a Reply

error: Content is protected !!