idhayam – 33

அத்தியாயம் – 33

இந்த விஷயம் எதுவும் அறியாத ஆதி இன்டர்வ்யூவில் தேர்வான மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வரும்போது மஞ்சுளா பின்வாசலில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

“அம்மா” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்த மகனின் முகத்தில் சந்தோஷத்தை கண்டு, “என்ன ஆதி என்ன விஷயம்” என்றபடி எழுந்து அவனின் அருகே வந்தார்.

தன் கையிலிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை தாயிடம் கொடுத்து, “எனக்கு வேலை கிடைச்சிருக்கு அம்மா” என்றான். இத்தனை நாளாக அவரின் மனதில் அழுத்திக்கொண்டு இருந்த பாரம் குறைந்துவிட்டது.

தன் கணவனைபோல தன் பிள்ளையும் பணத்தின் பின்னோடு போய்விடுவானோ என்ற கலக்கத்தில் இருந்து விடுபட்டவராக, “எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு ஆதி. உனக்கு இவ்வளவு சீக்கிரம் வேலை கிடைச்சது மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்றவர் வீட்டிற்குள் நுழைய அவரை பின் தொடர்ந்தான் மகன்.

அதே நேரத்தில் முன் வாசலின் வழியாக வீட்டிற்குள் நுழைந்த ஜெகனை கண்டதும் ஆதியின் முகம் பாறையாக இறுகிவிட, “அம்மா நான் பிரவீன் வீடுவரை போயிட்டு வரேன்” என்றவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினான்.

தன்னை கண்டதும் நில்லாமல் செல்லும் மகனைப் பார்த்து அவரின் மனம் வருந்திட, “மஞ்சுளா எப்படி இருக்கிற” என்ற ஜெகன் அங்கிருந்த சோபாவில் அமர கணவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றார்.

அவரின் கையிலிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை பார்த்தும், “பரவல்ல நான் சொன்ன மாதிரியே வேலை போட்டு கொடுத்துட்டான்” என்ற கணவனை நிமிர்ந்து பார்த்த மஞ்சுளாவின் மனதிலிருந்த கோபம் அதிகமானது.

தன்னையும், தன் பிள்ளையையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டு பணத்திற்காக மேனகாவை கல்யாணம் செய்த கணவனை அன்று அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அம்மா என்று இடையை கட்டிக்கொண்டு நின்ற ஆதிக்காக இவ்வளவு நாளும் அமைதியாக இருந்தார்.

ஆனால் இப்போது அவனையே தன்னிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் கணவன் இறங்கி இருப்பதை உணர்ந்து, “இந்த வேலை கிடைக்க நீங்கதான் காரணமா?” என்ற மஞ்சுளாவின் முகத்திலிருந்து அவரால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ம்ம்” என்றதுதான் தாமதம்தன் கையிலிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை கிழித்து வீசிய மஞ்சுளாவை அவர் குழப்பத்துடன் ஏறிட்டார்.

“நீங்க என்னைவிட்டு மேனகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அதுக்கு பிறகும் பிள்ளையைக் காட்டி சந்திப்பை ஏற்படும்போது அவன் படிப்பை முடிக்கணும் என்ற ஒரே காரணத்திற்காக மௌனமாக இருந்தேன். இப்போ என் மகனையும் பணத்தைக்காட்டி உங்கப்பக்கம் இழுக்க நினைப்பது எனக்கு பிடிக்கல..” என்ற மஞ்சுளாவின் பேச்சும் பார்வையும் ஜெகனை கோபபடுத்தியது.

“அதுக்காக அப்பாயின்மென்ட் ஆர்டரை கிழித்து போடுவீயா” என்று கோபத்துடன் எழுந்து மஞ்சுளாவின் அருகே வந்தார்.

என்றும் இல்லாத திருநாளாக கணவனின் முகத்தை பயம் இல்லாமல் பார்த்த மஞ்சுளா, “என் பையன் திறமைக்கு கிடைக்காத இந்த வேலை அவனுக்கு தேவையில்லை. அதுக்கு அவன் போகணும் என்ற அவசியம் இல்ல. உங்க பணத்து ஆசையும் பணக்கார திமிரையும் இத்தோட நிறுத்திக்கோங்க.” என்று விரல்நீட்டி எச்சரித்தவர் தொடர்ந்து,

“இன்னொரு முறை நீங்க அவனுக்கு வேலைக்கு ஏற்பாடும் செய்த விஷயம் எனக்கு தெரிஞ்சது பொறுமையா இருக்கமாட்டேன். கோர்ட் போய் உங்க மானமரியாதை கெடுத்துட்டு தான் வேற வேலையே பார்ப்பேன்” என்று சத்தமே இல்லாமல் சாந்தமான குரலில் மிரட்டிவிட்டு சென்ற மனையாளை திகைப்புடன் பார்த்தார் ஜெகன்.

திருமணம் ஆன நாளில் இருந்து சத்தமாக கூட பேசாத மனைவி தன்னை மிரட்டிவிட்டு செல்வதை கண்டு அவருக்கு அதிர்ச்சி அதிகமாக இருந்தது. மேனகாவின் தொல்லை தங்காமல் அவர்தான்  அந்த வேலைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் இன்று  அதுவே தப்பாக போய்விட, ‘என்னைவிட இவளுக்கு பிள்ளை பெருசாக போச்சு’ தனக்குள் நினைத்துக் கொண்டார்.

அன்று இரவு வீடு திரும்பிய மகனிடம் நடந்த விஷயத்தை கூறிய மஞ்சுளா, “இங்கே பாரு ஆதி உன்னோட திறமையைக்கொண்டு நீ சம்பாரிக்கும் காசில் அம்மா நிம்மதியா சாப்பிடுவேன்.  அவங்க பணக்கார திமிருக்காக நீ அவங்களுக்கு அடிமையாக போகக்கூடாது. அந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை கிழிச்சு போட்டுட்டேன். நீ வேற வேலை தேடு” என்று சொல்லிவிட்டு அவரின் அறைக்கு சென்றுவிட்டார்.

மஞ்சுளா பேசிவிட்டு சென்றபிறகு சோபாவில் அமர்ந்து தீவிரமாக யோசித்தான் ஆதி. இத்தனை வருடமாக வேலை செய்து தன்னை படிக்க வைத்த தாயின் மனம் அவனுக்கு புரிந்தது. அதன்பிறகு ஆதி முழு மூச்சாக வேலைத்தேட துவங்கினான்.

அபூர்வா இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு என்பதால் அவளுக்கு படிக்கவே நேரம் சரியாக இருந்தது. இருவரும் சந்திப்பதற்கு நேரம் மெல்ல குறைந்து இறுதியில் இல்லாமல் போயிற்று. எந்தநேரமும் புத்தகமும் கையுமாக இருக்கும் பேத்தியை பற்றிய சிந்தனையோடு வலம் வந்தார் சிவரத்தினம்.

அடுத்த ஆறு மாதங்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஆதியின் தேடல் ஜீரோவில் முடிந்தது.  அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த மனது சிந்தனையில் ஆழ்ந்தது. குற்றாலத்தில் இருக்கும் வரை தனக்கு வேலை என்ற ஒன்று கிடைக்க போவதில்லை என்ற உண்மையை உணர்ந்தான்.

அவர்களின் பணத்தை காக்க என்னை வேலையாளாக ஆட்டிவைக்க நினைக்கும் அவங்களுக்கு தான் யாரென்று காட்டவேண்டும் என்று நினைத்தவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

‘இங்கே இருந்தால்தானே இவங்களுக்கு அடிமை ஆகணும். எனக்கு இப்போ வேலை முக்கியம். அதனால் சென்னை போவது சரிதான்’ என்று நினைக்கும்போது அபூர்வாவின் பூமுகம் அவனின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

‘இவளைவிட்டுட்டு அவ்வளவு தூரம் போகணுமா’ ஒரு மனம் பக்கம் பரிதவித்தது. அதற்கு அடுத்தடுத்து வந்த நாட்கள் யோசனையில் கழிந்தது. அவன் தீவிரமாக யோசித்தபோது படிப்பைவிட வேலை முக்கியம், அதே நேரத்தில் பெண்ணைக் கட்டிக்கொடுப்பவர்கள் கண்டிப்பாக அந்தஸ்து என்று ஒன்றை பார்ப்பார்கள்.

அங்கே எங்களின் உண்மையான காதல் தரம் தாழ்ந்து போக கூடாது என்ற முடிவிற்கு வந்த ஆதி, ‘இந்த பிரிவு அவசியமான ஒன்றுதான். இன்னும் ஆறு மாதத்தில் அவளும் ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டு மதுரை போயிருவாளே’ என்று நினைத்தான்.

அதன்பிறகு ஐந்து வருடபடிப்பை அவள் முடிக்கும் முன்னே நல்ல ஒரு நிலைக்கு வரவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானம் எடுத்தான். அவளை பெண்கேட்டு போகும்போது நான் ஒரு நல்ல நிலையில் இருக்க வேண்டும். எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தங்களின் திருமணம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை இந்த முடிவு எடுக்க வைத்தது.  

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் இருந்தும் பயனில்லையே.

அவன்தான் சிவாவிற்கு அழைத்து, “சென்னையில் எனக்கு வேலை ஏற்பாடு செய்டா” என்றதும்,

“சித்தப்பா நிறுவனத்தில் உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் ஆதி. நானும் இப்போ குற்றாலத்தில் தான் இருக்கேன். இங்கே ஒரு வேலையை முடிச்சிட்டு உன்னை பார்க்க வரேன் ஆதி” என்றவன் போனை வைத்துவிட்டான்.

இந்த விஷயத்தை  அபூர்வாவிடம் சொல்ல தேடும்போது தான் அவள்  கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேலாக வரவில்லை என்ற விஷயம் ஆர்த்தியின் மூலமாக அவனுக்கு தெரிய வந்தது.

“ஆர்த்தி அபூர்வா ஊருக்கு எல்லாம் போகும் ஆளிள்ளை. அப்புறம் எப்படி அவள் ஸ்கூலுக்கு வராமல் இருக்கிற” என்றவன் புரியாமல் அவளிடம் கேட்டு வைக்க அவனிடம் எப்படி விஷயத்தை சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தாள் ஆர்த்தி.

“என்ன இப்படி பார்த்துட்டு நிற்கிற. அவளுக்கு என்னாச்சு? ஏன் ஸ்கூலுக்கு வரல” அவன் கோபத்துடன் கேட்க, “அவளுக்கு உடம்பு சரியில்ல” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“அவளுக்கு காய்ச்சலா?” என்று பதறினான் ஆதி.

அவனை முறைத்து பார்த்த ஆர்த்தி மெளனமாக நிற்பதை கண்டு அவனின் கோபம் அதிகரிக்க, “நீ சொல்லவே வேண்டாம் கிளம்பு. நான் அவளை அவங்க வீட்டில் போய் பார்த்துட்டு வரேன்” அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற திசையை சிலநொடி நின்று பார்த்த ஆர்த்தி, “இந்த பசங்களுக்கு இது ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிட்ட எந்த பொண்ணுக்கும் பிரச்சனையே வராது. இப்போ இவன் போய் நின்னா அவ என்கிட்ட சண்டைக்கு வருவாளே” தான் நிற்கும் இடம் மறந்து வாய்விட்டு சத்தமாக புலம்பிட சில ஸ்கூல் பிள்ளைகள் அவளை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றனர்.

“ஆதியிடம் அவள் உண்மை சொன்னாலும் சரி இல்ல பொய் சொன்னாலும் சரி அது அவங்க பிரச்சனை. நம்ம இப்போ ஸ்கூல் போலாம். அங்கே போன அந்த மேக்ஸ் மேம் பேப்பரை திருத்தி கொண்டுவந்து இருப்பாங்களே. பத்து மார்க் எடுத்தேனா இல்ல அதுவும் இல்லையான்னு தெரியலையே” ஆதியை மறந்துவிட்டு எக்ஸாம் பேப்பர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ஆதி அபூர்வாவின் வீட்டிற்குள் செல்லும்போது கேட்டை திறந்து வெளியே வந்த பாரிஜாதம், “ஆதி வாப்பா” என்று அழைத்தார். ஆதியை சின்ன வயதில் இருந்தே அவருக்கு தெரியும்.

“அக்கா பெரியவங்க இருவரும் வெளியே போகின்ற மாதிரி தெரியுது” என்றான் கார் சென்ற திசையைப் பார்த்தபடி.

“ஆமா ஆதி. யாருக்கோ உடம்பு சரியில்லன்னு தூத்துக்குடி திருநெல்வேலி ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்காங்களாம். அவங்கள பார்க்கத்தான் இருவரும் போறாங்க” என்று சொல்லும்போது அவரின் செல்போன் சிணுங்கியது.

அவர் சிந்தனையோடு எடுத்து பேச, “என்ன சொல்றீங்க மாமா. இதோ நான் நேர அங்கே வரேன். நீங்க கொஞ்சம் கவனமாக இருங்க..” என்று சொல்லிவிட்டு சட்டென்று நிமிர்ந்தவரின் கண்கள் கலங்கி  சிவந்திருந்தது.

அவரின் பேச்சில் இருந்த பதட்டம் உணர்ந்து, “என்னக்கா ஆச்சு” என்றவன் விசாரிக்க, “தம்பி என் புள்ளைக்கு திடீரென்று ஆக்சிடென்ட் ஆகிருச்சுன்னு போன் வந்திருக்கு. இங்கே அந்த அபூர்வா புள்ளைக்கும் உடம்பு முடியல இப்போ நான் என்ன பண்றது” என்று பதறினார்.

ஆதி சட்டென்று யோசித்து, “நீங்க போய் உங்க மகனை பாருங்க அக்கா. நான் இங்கே இருக்கேன்” என்றான்.  

அவனின் மீது நம்பிக்கை அதிகம் இருந்ததால், “சரிப்பா நீ அங்கே வீட்டில் போய் உட்காரு..” என்ற பாரிஜாதம் சட்டென்று ஞாபகம் வந்தவராக ஆதியின் பக்கம் திரும்பி,

“பெரியவங்க பெரிய வீட்டை பூட்டிட்டு போயிட்டாங்க. அபூர்வா தோட்டத்து வீட்டில் படுத்திருக்கு. வாட்ச்மேன் அண்ணா இன்னும் வேலைக்கு வரல. அதனால் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பா. நான் முடிஞ்சவரை சீக்கிரம் வர பார்க்கிறேன்” பொறுப்பை ஆதியிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியில் வேகமாக அங்கிருந்து சென்றார் பாரிஜாதம்.

அவர் கைகாட்டிய திசையில் நடந்து சென்ற ஆதி தோட்டத்திற்கு அருகே இருந்த வீட்டிற்குள் நுழையும்போது படுக்கையறையில் இருந்து அபூர்வாவின் சோர்ந்த குரல் கேட்டது.

“அக்கா கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாங்க” என்றாள்.

அவன் தண்ணீர் பாட்டிலை எடுத்துகொண்டு அறைக்குள் நுழைய அங்கே வெறும் தரையில் துணியை மட்டும் விரித்து படுத்திருந்தவளைப் பார்த்தும் துடித்துப்போன ஆதி, “என்னம்மா உடம்பு சரியில்லன்னு சொல்லிட்டு வெறும் தரையில்..” என்ற ஆதியின் குரல்கேட்டு வெடுக்கென்று நிமிர்ந்தாள்.

அவளுக்கு டம்ளாரில் தண்ணீர் ஊற்றி கொடுத்துவிட்டு அவளின் அருகே அமர்ந்தான்.  முடியெல்லாம் கலைந்து இருக்க கருப்பு நிற உடையில் பொலிவு இழந்த முகத்துடன் சோர்வுடன் கண்கள் சொருகிட அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவனின் மனதை வலிக்க செய்தது.

“என்னாச்சு அபூர்வா” என்றவன் அவளின் அருகே வர, “பக்கத்தில் வராதே ஆதி”அவனை தடுத்துவிட்டு அவசரமாக அவள் நகர்ந்து அமர்ந்தாள்.

அவளை நிதானமாக பார்த்தவன், “உனக்கு உடம்பு சரியில்லன்னு ஆர்த்தி சொன்னால்” என்றதும்  உதட்டை கடித்துக்கொண்டு அவள் தலைகுனிந்தாள்.

அவனின் பார்வை கூர்மையாக அவளும் மீது படிய, “ம்ம்” என்றாள் மெல்லிய குரலில்.

“என்னாச்சு” என்றவன் கேட்க, “இதெல்லாம் சொல்ல முடியாது ஆதி” என்று சிணுங்கிட மெல்ல அவளின் அருகே சென்று ஒரு விரலால் முகத்தை நிமிர்த்தி அவளின் விழிகளை நோக்கினான்.

அவனின் பார்வை உயிர்வரை ஊடுருவிச் செல்ல உண்மையை சொல்லாமல் இவன் விடமாட்டான் என்றதும், “பிரீயட்ஸ் டைம்” என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் முகத்தை மறைத்த கற்றை கூந்தலை அவளின் காதோரம் ஒதுக்கிவிட்டு, “இதுக்கு ஏன் நீ இவ்வளவு தூரம் தயங்கற” அவன் கேள்வியாக புருவம் உயர்த்திட அவளோ பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்தாள்.

“ஏய் அபூர்வா திருமண பந்தத்தில் சுகதுக்கங்கள் சரிபாதியாக  ஏற்றுகொண்டு இறுதிவரை பயணிக்கும் ஒரு இனிய பயணம். அதில் குழந்தை செல்வம் ஒரு அங்கம். அதற்கான அடிப்படையாக தான் பெண்களுக்கு இந்த நாட்கள் வருது. ஆனால் இந்த நாட்களில் நீங்க அனுபவிக்கும் வலியை ஆணிடம் சொல்லக்கூடாதுன்னு யார் சொன்னா” அவன் நிறுத்தி நிதானமாக கேட்டான்.

“இதெல்லாம் எப்படி சொல்ல முடியும்” என்றபடி அவள் கோபத்துடன் முகத்தை திருப்பினாள்.

“இந்த வலியையும் வேதனையையும் நீங்க உங்களுக்குள் வைத்துகொள்வதால் தான் இங்கே நிறைய தவறுகள் நடக்க காரணமே. தனக்கு குடும்பம் குழந்தை வேண்டும் என்று கனவுகாணும் ஆண்கள் பல பேருக்கு இந்த நாட்களில் நீங்க அனுபவிக்கும் வலி தெரியாமதானே கொடுமை படுத்தறாங்க” அவன் விடாமல் வாதாடவே, “இப்போ என்ன சொல்ல வர ஆதி”என்றவள் நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தாள்.

 “ம்ம் நீ இந்த நாட்களை பற்றி என்னிடம் சொல்வது தப்பு இல்லன்னு சொல்றேன். ஒரு தாய் மகனிடம் இந்த விஷயத்தை மறைப்பதால் நிறைய பேருக்கு பீரியஸ்ட் டைம்ல பெண்கள் அனுபவிக்கும் வலி தெரியாமல் போகிறது” என்றவன் காதருகே குனிந்து,

“முதலிரவில் தன் தேவை தீர்ந்ததும் விலகி செல்பவன் ஆண் இல்லடி. இந்த நாட்களில் கண்கள் கலங்க வலியை அனுபவிக்கும் பெண்ணை தாயாக இருந்து கவனித்து கொள்பவன் தான் நிஜமான ஆண்மகன். எனக்கு சுகத்தை கொடுத்துவிட்டு துக்கத்தை நீயே அனுபவிக்க நினைச்ச அடிதான் விழுகும்” காதலோடு கண்டித்தவனின் தோளில் சாய்ந்து அழுதாள் அபூர்வா.

அவள் சோர்வுடன் இருப்பதால் அதிகம் அழுகவிடாமல், “அபூர்வா சுகதுக்கங்கள் நம் இருவருக்கும் சரிபாதியாக பகிர்ந்துக்கலாம். சுகத்தில் சதிபாதின்னு சொல்லி நீ என்னை தவிக்க விடக்கூடாது” என்று தீவிரமாக வைத்துகொண்டு இருபொருள்பட கூறினான்.

முதலில் அர்த்தம் புரியாமல் திருதிருவென்று விழித்தவள் அர்த்தம் புரிந்த மறுநொடி, “ச்சீ ஆதி நீ ரொம்ப மோசம்” என்று அவனின் நெஞ்சில் அடித்த அபூர்வாவின் கரங்களை தடுத்து அவளைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்தான்.

சட்டென்று பாரிஜாதம் அக்காவின் நினைவு வர, “ஆமா நீ எப்படி வந்த” என்றதும் நடந்ததை அவளிடம் சொன்னான்.

“ஓஹோ அக்கா வெளியே போயிட்டாங்களா? இப்போ பசிக்குது நான் என்ன பண்றதுன்னு தெரியல” என்று அவள் புலம்பியபடி எழுந்தவளின் கரம்பிடித்து தடுத்த ஆதி, “நீ ரெஸ்ட் எடு நான் ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வரேன்” என்று அவன் அறையைவிட்டு வெளியே சென்றான்.

நானும் காதலிக்கிறேன் என்ற பெயரில் பெண்களை டார்ச்சர் செய்யும் ஆண்களின் நடுவே ஆதிமட்டும் தனித்து தெரிந்தான்.

அன்பு என்பது அட்சய பத்திரம்போல. அள்ள அள்ள குறையாதது. அவன் அவளிடம் காட்டும் காதலை அவளும் அவனுக்கு திரும்ப கொடுப்பாள். அவனின் ஒவ்வொரு செயலிலும் வெளிபட்ட காதலை அனுபவித்த அபூர்வா அதை இரட்டிப்பாக சேர்த்து அவனுக்கு கொடுக்க நினைத்தாள்.

மருந்து என்ற பெயரை சொல்லி அவளின் கையால் அவர்களின் காதலுக்கு விஷத்தை கொடுப்பார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.