அன்பின் மொ(வி)ழியில் – 25.
கண்ணுக்கு எட்டியவரை தூரம் வரை பச்சை பசேலென பட்டுடுத்தி நிலமகள் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு காட்சியளிக்க…
அதையொட்டி ஊர் எல்லையில் காக்கும் தெய்வமாக கைகளில் அருவாளை ஏந்தி… வெண் குதிரை மீது கம்பீரமாய் கருப்பன் அமர்ந்திருக்க, வேந்தனின் குடும்பம் மொத்தமும் தங்கள் குலதெய்வமாம் கருப்பனுக்கு கிடா வெட்டி, படையல் இட்டு, பொங்கல் வைத்து காணிக்கை செலுத்த சங்கிலி கருப்பன் முன்பு கூடியிருந்தனர்.
வீட்டிலிருந்து புறப்பட்டு காரில் வரும் வரை ஒரே ஆட்டமாக போட்டுக் கொண்டிருந்த ஆதியும், ரவியும் அந்த வெட்ட வெளியில் அமைந்திருந்த கருப்பனின் சிலையைக் கண்டு பயந்து தன் அன்னையின் பின்னே ஒளிந்து கொண்டனர்…
அதைக்கண்ட வள்ளி, கயலிடம் “நீ போத்தா… அங்கன செத்த தள்ளி பாக்கொளம் ( பால் போன்ற பருகுவதற்கு இனிமையான நீருள்ள குளம்) இருக்கு, அதுல நீயும், மருமவளும் போய் தண்ணி கொண்டு வாங்க… பொங்கல் வைக்க” என்றவர்.
சற்று தள்ளி கறுப்பனை பார்த்தவாறு அமர்ந்து தன் கைவளைவுக்குள் பேரப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு… “ராசா! உங்களுக்கு ஒரு கதை சொல்லவா…?” என்ன கேட்டு நிறுத்த.
சிறு பிள்ளைகள் இரண்டும் கதை கேட்கும் ஆர்வத்தில், தன் பயத்தை ஒதுக்கி … தலை அசைத்து வள்ளியின் முகம் பார்க்க…
“என் செல்ல குட்டி ரெண்டுத்துக்கும், குட்டி கண்ணன் அதாவது கிருஷ்ணன் பிடிக்குமா?” என்ற வள்ளியின் வார்த்தைகள் முடிவதற்குள்,
ஓ… எங்களுக்கு ரொம்ப பிடிக்குமே… அம்மு கண்ணன் கதை எங்ககிட்ட அடிக்கடி சொல்லுவாங்க…” என்றனர் ரவி குதூகலமாய்…!
“வெண்ணெய் திருடின மாய கண்ணன் கதை” என்றான் ஆதி ஆர்வமாக.
அதை கண்டு புன்னகைத்தவாறு “கருப்பசாமி கூட கண்ணனோட அம்சம் தான்னு எங்க அப்பா… அதாவது உங்க பாட்டன் சொல்லுவாங்க”
“பாட்டன் அப்படின்னா என்ன பாட்டி?” என்றான் ரவி புரியாமல்
நீல நிற குண்டு விழிகள் இரண்டும் விரிந்த நிலையில் பால் வண்ணம் பூசிய அந்த இரண்டு மொட்டுக்களையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை வள்ளிக்கு…
“உங்க தாத்தா ஓட அப்பாரு தான் உங்களுக்கு பாட்டன் அவங்க அப்பாவை பூட்டன்னு சொல்லுவாங்க…”
நம்ம ஊர்ல கருப்பன் அப்படினு சொல்ற தமிழ் தெய்வம் தான் வடமொழியில் கிருஷ்ணனா சொல்லப்படுது அப்படின்னு கூட சொல்லுவாங்க, அது உண்மையா என்று தெரியவில்லை ஆனா…’ மாயோன் மேய காடுறை உலகம்…’ அப்படின்கிற தொல்காப்பிய வரி கருப்பன் எவ்வளவு பழமையானவன்னு சொல்லுது… அந்த காலத்துல நிறத்தை வச்சு தான் கடவுளை குறிப்பிடுவாங்க… அத வச்சு தான் கரிய நிறமுடையவன் கருப்பன் னு சொல்லுவாங்க… காலப் போக்குல கருப்பன் இப்படி என்ற பெயர் மாறி கண்ணன் ஆச்சுன்னு கூட ஒரு நம்பிக்கை இருக்கு…
(மாயோன் என்பதற்கு பரிமேலழகரின் பரிபாடல் உரை கரிய நிறம் உடையவன் என்று பொருள் தருகிறது)
செல்ல குட்டி உங்களுக்கு கண்ணனைப் பார்த்து ஏதாவது பயன் இருக்குமா அதுமாதிரி தான், கருப்பனை பார்த்து பயப்பட கூடாது… தப்பு பண்றவங்க தான் நம்ம குலசாமிய பார்த்து பயப்படுவாங்க… அவிங்களுக்கு தான் அவரு துடியான சாமி… நமக்கெல்லாம் ரொம்ப அன்பானவன்” என்று பொறுமையாக கூறி பிள்ளைகளின் அச்சம் போக்க முயன்றார் இருப்பினும் கருப்பனை கண்டு அஞ்சாத உள்ளம் உண்டோ!
முறுக்கிய மீசையும், பயமுறுத்தும் பார்வையும், வீச்சருவா கையில் ஏந்தி வெண்புரவி அமர்ந்திருப்பதை கண்டு சிறு அச்சம் யாருக்கும் ஏற்படுவது இயல்புதான்…
முன்புபோல் ஒரேடியாக பயந்து யாரையும் ஒட்டிக் கொண்டு திரியாமல் சற்று தள்ளி அமைதியாக விளையாடினர் குழந்தைகள் இருவரும், அவர்களுடன் பொன்னியும் நிலாவும் இணைந்து கொள்ள , பெரியவர்கள் மேற் பார்வையில் மற்ற வேலைகள் சரியாக நடந்தன.
ஜாஸ்ஸிற்கு பெரிய அளவு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் மற்றவர்களின் கருத்துக்களை நசுக்க கூடியவர் அல்ல, அதோடு இவை அனைத்தும் அவர் திருமணம் முடித்து வந்தது முதல் அவரது நாத்தனார்களே, பொறுப்பாக செய்து வர…
பார்த்துக் கொண்டிருந்தவரின் கவனம் முழுவதும் தன் பேரப் பிள்ளைகள் மீது இருந்தது.
அன்னையின் பார்வையை கவனித்த ராஜ் “என்ன மாம் நம்ம வீட்டுக்கு குட்டீஸ் இரண்டு பேரையும் இப்படி பார்த்துட்டு இருக்கீங்க…?” என்றான் கேள்வியாக.
“விஜய் இங்கதான் இருக்கான் ராஜ், அவனோட நெக்ஸ்ட் மூவ் என்னனு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றார் சாதாரணமாக.
“என்ன மாம் சொல்றீங்க?” அதிர்ந்து அவனை கண்டு மென்மையாக சிரித்தவர்,
“நீங்க என்கிட்ட எதுவும் சொல்லலைன்னா… என்னால் எதையும் தெரிஞ்சுக்க முடியாதா? என் பையன் வாழ்க்கையில நடந்த இவ்வளவு பெரிய விஷயத்துக்கு காரணமானவன் யாருன்னு தெரிஞ்சுக்காமலா போயிடுவேன்” என்று கேலியாக சொன்னவர்.
“ஒரு அம்மாவா இந்த குடும்பத்துல இருக்கிற எல்லாரும் பாதுகாப்பும் என்ன சேர்ந்தது ராஜ், எப்பவும் யாரையும் என்னோட குடும்பத்தை நெருங்க கூட விட மாட்டேன்” என்றார் உறுதியாக.
அதே நேரத்தில் அவர் யோசனையில் திருவிழாவின் போது யாரும் பார்க்காத விஜயைப் பார்த்தவர்… சில நொடி மட்டுமே அவனின் கண்களில் தோன்றி மறைந்த ஏக்கத்தையும் உணர்ந்திருந்தார், அதன்பின் தோன்றிய வெறுப்பு, கோபம் எதுவுமே ஜாஸ்ஸின் நீல நிற விழிகளில் இருந்து தப்பவில்லை…
மனிதர்களை நன்றாக படிக்கத் தெரிந்தவர், சில நிமிட பார்வையிலேயே விஜய்யின் மனதை ஜாஸ்ஸினால் உணர முடிந்தது, அதோடு அவனின் மீது சந்தேகம் கொண்டவர், தனது நம்பிக்கையான ஆட்களை கொண்டு விஜய் பற்றி முழுவதாக அறிந்து கொண்டபோது அவன் செயல்களில் மீது கோபம் அவரின் தாயுள்ளம் சிறிதளவு அவனுக்காகவும் பரிதாபமும் பட்டது.
பிள்ளைகளின் மீது கவனத்தை வைத்திருந்த வாரே, யோசனையுடன் அமர்ந்திருந்த அன்னையை ஆழ்ந்த நிலையை கலைக்காமல் எழுந்தவன் மனதிலும் பலவித கேள்விகள் சூழ்ந்திருந்தது.
***********************
ரம்யா, கயல் இருவரும் குளத்திலிருந்து நீர் எடுத்து வர முதலில் பொங்கல் வைத்து விட்டு இரவு நெருங்கும் வேளையில் கிடா வெட்டி அன்றைய தினத்தை நிறைவு செய்ய முடிவு எடுத்தவர்கள் இதற்கான வேலையை செய்ய…
ராம், பூசாரி உடன் பேசியவாறு பூஜை வேலைகளை கவனித்துக் கொண்டே, கயலுக்கும் சிறுசிறு உதவிகள் செய்து கொண்டிருந்தான்.
கணவனின் காதல் நிறைந்த பார்வைகளை எண்ணி மகிழ்ந்த படி அவனை வாழ்வின் வாரமாக தந்த இறைவனிடம் மனமார நன்றி செலுத்தி கொண்டு, பய பக்தியுடன் ஒவ்வொரு வேலையையும் சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தாள் ராமின் மனம் கவர்ந்தவள்.
**************************
செல்வமோ தனது முக்கிய கடமையான மனைவியை வெறுப்பேத்தும் பணியை மட்டும் செவ்வனே செய்து கொண்டிருந்தான்…
வெகு நாட்களுக்கு பிறகு பட்டுப்புடவை உடுத்தி கொண்டே வேலை பார்ப்பது அவளுக்கு சிரமமாக இருந்தது, மண்பானை இடுப்பில் நில்லாமல் சிறிது வழுக்கிக் கொண்டு இருக்க, தட்டுத் தடுமாறி நீரை எடுத்து நடந்து வந்தவளை கண்டவன்,
தலை முதல் பாதம் வரை அவளை அணு அணுவாக ரசித்துக் கொண்டே, தன் மனசாட்சிக்கு விரோதமாக, ரமியை கண்டு சிரித்தவன் மனமோ…
‘தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா…
தவிக்குது மனசு தவிக்குது’
என்ற பாடலை முணுமுணுத்தது.
தன்னவளை கண்டு ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த மனசாட்சியை தலையில் தட்டி துரத்தி விட்டவன் ரமியிடம்,
“ தங்கம், இடுப்பு தந்தூரி அடுப்பு மாதிரி இருந்தா…பாவம் குடம் எங்குட்டு நிக்கும்,” என்று போலியாக வருத்தப்பட்டவன். “வாய்ப்பில்லை செல்லம் வாய்ப்பில்லை…” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கேலியாக…
வாய் சொன்ன பொய்க்கு எதிராக கண்களோ ஏக்கத்துடன் அவளின் மெல்லிடையை தீண்டிச் சென்றது.
கணவனின் கிண்டல் கோபமாக திரும்பி அவனைப் பார்த்தவள், தன்னவனின் பார்வையை கண்டு முகம் சிவக்க சட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
திருமணம் முடிந்து இந்த சில நாட்களில் கணவனை பற்றி நன்கு அறிந்தவள் உள்ளம் சிறிது சிறிதாக, அவன் புறம் சாய தொடங்கி இருப்பதை அவளால் கூட மறுக்க முடியாது.
செல்வத்தின் மென்மையான அணுகு முறையோடு சேர்ந்து, மஞ்சள் கயிறும் அதன் மாயத்தை அழகாக செய்து கொண்டிருந்தது
ஜாஸ் அவளிடம் சொன்னது போல் இது தான் இறைவன் தனக்கு அமைத்துக் கொடுத்த வாழ்க்கையோ?
அன்றைய தினம் அன்னையிடம் பேசியதை நினைத்தவள் மனம் மெல்ல அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தொடங்கியது.
***
ஜாஸ் – தோட்டத்தில் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவளை தனியே பேச வேண்டுமென்று தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றவர் கூர்மையாக ரமியின் முகத்தை பார்த்து, “உன்னைய கல்யாணம் பண்ணிக்கனும்னு செல்வம் அவங்க அம்மா, அப்பாவோட வந்து பொண்ணு கேட்கிறான்… இதுல உன்னோட முடிவு என்னடா…?” என்றார் கனிவுடன், எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் நேரடியாக
அவரது கேள்வியில் ஒரு நொடி திகைத்தவள், எதை பற்றியும் யோசிக்காமல் “மறு நிமிடமே எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை” என்றாள் உறுதியாக.
“எனக்கு புரியுதுடா கண்ணா… பொண்ணுங்க கணவன் இல்லாம, தனியா வாழவே முடியாது அப்படிங்குறது என்னைய பொறுத்தவரைக்கும் முட்டாள் தனமானது” என்று அவளுக்கு ஆதரவாக பேச, அதில் முகம் மலர்ந்த ரம்யாவின் கன்னத்தை மென்மையாக வருடியவர்.
“அதே நேரத்தில் நம்மள உயிரை விட அதிகமாக விரும்புற ஒருத்தன், நம்ம வாழ்க்கைக்கு உள்ளவர விருப்பப்பட்ட நேரத்துல, அதை ஒதுக்கித் தள்ளி நான் எப்பவும் தனியாவே இருப்பேன் என்று பிடிவாதம் செய்றது அதைவிட மிகப் பெரிய முட்டாள்தனம்…
நான் பிறந்ததிலிருந்து செல்வத்தை பார்த்துகிட்டு இருக்கேன், கண்டிப்பா அவனால சிறந்த முறையில் உன்னோட வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியும்…
யாருக்கு தெரியும் உனக்கு இது மாதிரி ஒரு அமையனும் னு தான் கடவுள் அவ்வளவு இழப்புகளையும் தந்தாரோ என்னமோ?
ஒரு அம்மாவா இந்த கல்யாணம் நடக்கணும் என்று தான் நான் நினைக்கிறேன், வேந்தனும், ஏன் சேது கூட இதைதான் விரும்புவாங்க…
எந்தவிதத்திலும் உன்னைய நான் கட்டாயப் படுத்தல… எங்க எல்லாருக்காகவும் ஒரு முறை உன் பிடிவாதத்தை எல்லா தூக்கி போட்டுவிட்டு யோசி ரம்யா” என்றவர் அவளுக்கு யோசிக்க தனிமையை அளித்துவிட்டு அமைதியாக வெளியே வந்துவிட்டார்.
அம்மா அவளை கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் கூட அவரின் வார்த்தையை ரம்யாவாள் மீற முடியவில்லை…
பலவித யோசனைக்கு பிறகு அரை மனதாக சம்மதம் சொல்ல, அவள் சுதாரிப்பதற்குள் திருமணத்தையே நடத்தி முடித்திருந்தான் செல்வம்.
கயலுக்குத் தான் தலை கால் புரியவில்லை அத்தனை மகிழ்வு… தனது தோழியின் வாழ்வு மலர்ந்தது எண்ணி…
திருமணத்திற்குப் பின் செல்வம் எதற்குமே ரம்யாவை கட்டாயப்படுத்தவில்லை அவளுக்கான இடைவெளியை தாராளமாகவே அளித்திருந்தான்…
வார்த்தை சீண்டல்கள் இருந்தனவே தவிர வதனத்தின் சீண்டல்கள் இல்லவே இல்லை அவனிடம்.
கல்யாணத்திற்கு காட்டிய அவசரத்தை, வாழ்க்கையை தொடங்க அவன் சிறிதளவு கூட காட்டவில்லை,
அதிகம் பேசவில்லை என்றாலும் கனிவுடன் நடந்து கொள்ளும் மாமனார்.
ஜாஸ்ஸை போலவே சில இடங்களில் கண்டிப்பாக இருந்தாலும் அதிலும் அன்பையே முன்னெடுத்துச் செல்லும் சுசீலா அத்தையின் அருகாமை அமைதியை தர, ஆதி ரவி இனி பிரிய வேண்டியது இருக்காது என்பதே, அவளுக்குப் போதுமானதாக இருந்தது… வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் செல்ல செல்வத்தின் இந்த அணுகுமுறையே ரம்யாவை அவன்பால் மெல்ல மெல்ல ஈர்த்தது.
அனைத்தையும் எண்ணியவாறு சிறு புன்னகையுடன் கயலின் அருகில் இருந்து பொங்கல் வைத்து கொண்டிருந்தவளின் விழிகள் சில நிமிடங்களுக்கு ஒரு முறை தன்னை அறியாமல் செல்வத்தை வருடி சென்றது.
************************
சென்னையில் இருந்த விஷ்ணுவிற்கு போன் செய்து, செய்ய வேண்டிய வேலைகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தவன், “விஜய் அங்க தானே இருக்கான் வினி ?” என்றான் கேள்வியாக…
“ஏன் மச்சான் கேக்குற…?” என்றவன் “ நேத்து கூட பார்த்தேன் ராஜ், இங்க தான் இருக்கான்” என்ற விஷ்ணுவின் வார்த்தைகள் மேலும் குழப்பத்தை தான் தந்தது அவனிற்கு.
ஏதேதோ குழப்பத்துடனும் நடந்து வந்த ராஜின் மீது , பிள்ளைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த பொன்னி மோதி விட…
தன்னவளில் தேகம் தீண்டிய நொடி மனதில் இருந்த கலக்கம் மறந்து அந்த இடத்தில் உல்லாசம் நிறைந்தது.
தன் கரங்களில் விழுந்த அந்த மலரிலும் மெல்லியவளை, தன்னுடன் சேர்த்து அணைத்த வாரே, தன்னுடைய கூர்மையான விழிகள் சுழல விட்டவன், யாரும் அறியா வண்ணம் நொடிப் பொழுதில் ஒரு பெரிய மரத்தின் அடியில் தங்களை மறைத்தவாறு நகர்ந்து விட்டான்.
வினாடிக்கும் குறைவான நேரத்தில் நடந்த எதையும் கணிக்க முடிவதற்குள் இப்படி ஒரு மறைவான இடத்திற்கு தன்னை அள்ளிக் கொண்டு வந்தவனை வெளியில் முறைத்தாலும்… மனதிற்குள் மெச்சாமலும் இருக்க முடியவில்லை பொன்னியால்.
அணைப்பை இருக்கி, கட்டுப்படுத்த முடியாமல் மெல்ல அத்துமீறும் தன்னவனின் விரல் செய்யும் மாயத்தில் மயங்கிய மனதை அடக்கி… உணர்வுகளின் பிடியில் மொத்தமாய் தொலைந்திருந்த ராஜின் நெஞ்சில் கரம் பதித்து அழுத்தமாய் தள்ளி விட்டவள்… மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்தாள்.
அதுவரை தன்னிலை இழந்து நடந்து கொண்டவன் தன் செயலை எண்ணி வெக்கி தலைகுனிந்து “சாரிடா” என்றான் இறங்கிய குரலில்…
அவளின் காதல் கொண்ட மனது, தன்னவனின் வேதனையை பொறுக்காமல் தவிக்க…
சிறிதே தடுமாறினாலும், கலங்கிய மனதை அடக்கி ராஜ்-ன் கழுத்தை தன் மெல்லிய கரம் கொண்டு வளைத்தவள் அவனது நெற்றியில் முத்தமிட… தன்னவளின் முதல் முத்தத்தில் மயங்கியவன் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
தன்னுள் தோன்றிய மோகத்தை ஒற்றை முத்தத்தில் தனிய செய்தவள் மீது இன்னும் இன்னும் காதல் பெருகியது அவளவனிற்க்கு.
அவர்களின் விழிகளின் மொழியின் முன்னே வார்த்தைகள் வாயடைத்து தான் போனது.
*********************
விஜய்க்கு இந்த ஒரு வாரமாக இருப்பே கொள்ள வில்லை, திருவிழாவில் பார்த்த அந்த அழகிய குடும்பமும், அதில் உள்ள உயிர்ப்புமே அவன் கண்முன் தோன்றி மறைந்தது.
அவனின் இயல்பான வஞ்சம் நிறைந்த குணம் அந்த மகிழ்வை அழிக்க சொல்லி தாண்டவம் ஆட… எங்கோ ஒரு மூலையில் பதுங்கியிருந்த மனித தன்மையோ..! , அந்த சூழலில் அவனையும் ஆழ்ந்து போக தூண்டியது.
செய்வதறியாது அவன் மட்டும் தனியாக மீண்டும் இரவோடு இரவாக நெய்வாசல் வந்திருந்தவன், ஊரின் எல்லையை தாண்டும் முன்பே அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டான்.
காரில் இருந்து இறங்காமல் அமைதியாக அமர்ந்து இருந்தவனின் விழிகள் ஒரு நொடி கூட கயலை தீண்டவில்லை, அவனின் பார்வை முழுவதும் அந்த இனிய காலை பொழுதை தங்கள் மழலை மொழியாலும், முயல் சாகசங்களாலும் மேலும் இனிமையாக மாற்றி கொண்டிருந்த அந்த சிறு சிட்டுகளின் மீதே இருந்தது.
தன்னுடைய மழலை நினைவுகள் ஏதும் இல்லாதவன்… அந்த குழந்தைகளின் செயலில் கரைந்து கொண்டிருந்தான்
அப்போது யாரோ காரின் கதவினை தட்ட, திரும்பியவன் கண்டது பால் வண்ணத்தில் நீல நிற அகன்ற துருதுருவென்று அலைபாயும் விழிகளைக் கொண்டு, கரங்களில் சிறு வாழை இலை தனில் பொங்கலை ஏந்தி வெளியே நின்றிருந்த குழந்தையை தான்.