Ani Shiva’s Agalya 14

14

சூர்யாவிடம் ஜப்பானிலேயே இருக்கலாமா, எனக் கேட்பதற்கு முன் அவனின் நிலையையும் ஆராய்ந்தபடியிருந்தாள் அகல்யா. மறுபடியும் வேலை செய்வானா? இல்லை அவனின் கம்பெனி வேலைகளும் வருமானமும் போதுமா, இந்த ஊரின் விலைவாசி எல்லாம் எப்படியோ என்று பலதையும் சிந்தித்தவள் அவனிடம் இதைப் பற்றிக் கலந்து பேசத் தக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்…

பூவிழி ஆமை என்று அகல்யா கூறியதை அகிலன் இப்போது தான் நன்றாகப் புரிந்திருந்தான். கணவனிடம் இந்த ஒதுக்கம் ஏன் என்று அவளுக்குச் சுத்தமாக விளங்கவில்லை. ஆனால் பூவிழியின் மனதில் என்றோ அவன் குடிவந்துவிட்டான் என்பதை அவன் அறியத் தான் இல்லை…

பூவிழிக்கு இப்போது ஒரு இக்கெட்டான நிலை.

அகிலன் நெருங்கி வந்தபோதெல்லாம் விலகி விலகிப் போனவள், இப்போது அவன் அருகாமைக்காக ஏங்கும் நிலைக்கு வந்தேவிட்டாள். பயந்து போய் வேலைக்கு வந்த காலமெல்லாம் போய், இப்போது அவனுக்கு முன் இவள் கிளம்பி விடுகிறாள்.

அவனுடன் சேர்ந்து இருக்கும் சமயம் எல்லாம் இன்பமயம் தான். ஏன் தனக்குப் பேச மட்டும் வாய் வரவில்லை, அவளுக்குத் தெரியவில்லை… தான் மாறியது ஏனோ? மஞ்சள் கயிற்றின் மகிமையோ? இல்லை அகிலனின் காதலின் வலிமை அவளையும் ஈர்த்துக்கொண்டதா?

எவருக்கும் இவை தெரிவதில்லை பூவிழி…

ஆனால் அவளுக்கு, அவனிடம் பேசலாம் என்று ஆரம்பித்தாலே காத்து தான் வந்தது!

அவளின் பிரச்சனையே இதுதான்…

அவனுடன் இருக்கும் சமயங்களில் எல்லாம் அவள் மனம் துள்ளுவதை அவள் உணர்திருந்தாள் தான், ஆனால் அவன் அதை உணர்வானா? இவளும் தன் விருப்பத்தை வெளிக்காட்ட வழி தெரியாதவளாய்!

அகல்யாவிடம் சொல்லாமா என்றெண்ணியவள், வேண்டாமே, காலம் முழுவதும் சொல்லி காட்டுவாள்… அவளது கேலிக்கு பயந்து அந்த யோசனையையும் விட்டுத் தள்ளினாள். என்னதான் வழி?

தன் மனைவியின் மனதில் இவ்வளவு தயக்கங்களுக்கும் காரணியாய் இருந்தவன், இதனைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை… இவனை என்ன தான் செய்ய?

செடி கொடி காய் என்று அதன் மாற்றங்களை மட்டும் பார்த்து பழகியவனுக்குப் பெண்மையின் மாற்றங்களை உணர முடியவில்லையோ?

பூவிழி வேலைக்கு அவனுடன் வந்த புதிதில், காரில் சேர்ந்து தான் போவார்கள். அச்சமயத்தில் எல்லாம் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் தான் அதிகம் ஓடவிடுவான் அகிலன். ஆனால் இப்போதெல்லாம் அவன் கேட்கும் பாடல் எல்லாம் பூவிழியே நொந்து போகும்படியிருந்த்து…

‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன், கேளு கேளு தம்பி’

‘என்னம்மா இப்படிப் பண்றேங்களே மா…’

பூவிழிக்கு இரண்டு நாளைக்கு மேல் இதை எல்லாம் கேட்க முடியவில்லை… தாங்கமுடியாமல் அவளே,

“அகிலன் பாட்டை மாற்றுங்களேன்…”அவள் சொன்னாலும் செய்ய மாட்டான்… பூவிழியே பின்னர் அந்தப் பழைய கலெக்ஷன்ஸை தேடிப் போட்டு விடுவாள்…

‘இப்படியாவது இவனுக்குப் புரியுமா’ என்று இவள் எண்ண, அவனோ,

‘பாட்டை மட்டும் நல்லா கேளு, செயலில் ஒன்றையும் காணோம்!’ என்று நினைத்துக்கொள்வான்.

அகல்யா போன் செய்தாலும் அகிலன் இப்போதெல்லாம் பூவிழி பற்றி அதிகம் பேசுவதில்லை. அவளே கேட்டாலும்,

“அவளுக்கு என்ன டீ குறை? எல்லாம் நல்லா தான் இருக்கா”என்று பிடியில்லாமல் பேசுவான்.

அகல்யாவுக்கு மறுபடியும் பதட்டமாகிவிட்டது…

நல்லா தானே போயிட்டிருந்தது? பாவி! டீ பூ! உனக்கு இவ்ளோ நாள் குடுத்ததுல உனக்குத் திமிர் ஜாஸ்தி ஆயிடிச்சு. இப்படியே இருக்கலாமென்று முடிவு பண்ணிட்டியா என்றெண்ணி அவளுக்கு உடனே ஒரு போனை போட்டாள்.

அன்று பூவிழி அகிலனுடன் செல்லாமல் வீட்டில் தான் இருந்தாள். மஹாவும் கிரியும் ஏதோ திருமணத்திற்காக மதுரை வரை சென்றிருந்தனர். ஆதலால் சமையல் வேலை என்று இவள் வீட்டில் தங்கி விட்டாள். அன்று பார்த்து தான் அகல்யாவின் அழைப்பும் வந்தது… போனை பூவிழி எடுத்தவுடனேயே கண்டபடி பேசினாள்.

“அறிவிருக்கா டீ உனக்கு? முட்டாளா நீ? என் அண்ணன் வாழ்க்கையைப் பாழாக்கவே வந்தியா. அவனைப் பிடிக்கலைன்னா ஏன் டீ கல்யாணம் பண்ணிகிட்ட?” படபடத்தாள் அகல்யா…

எதிர்முனையில் அமைதி மட்டுமே.

“நீ சரி வர மாட்டே! நான் ஊருக்கு வந்ததும் நம்பி மாமா கிட்ட பேசிறவேண்டியது தான்…”அகல்யா முடிக்க,

சில விநாடிகளில் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது… அகல்யாவுக்கு இருந்த ஆத்திரத்தில் அவள், பூவிழி பாவம் என்றெல்லாம் தோன்றவில்லை. தன் அண்ணியின் பதிலுக்காக அமைதியாகக் காத்திருந்தவள்,

“இருக்கியா டீ? சரி நான் அப்புறம் பேசுறேன்…”என்று முடிக்கப்போனவளை சந்தோஷத்தில் ஆழ்த்தியது பூவிழியின் வார்த்தைகள்.

“அகல்யா நான் அகிலனை விரும்புறேன் டீ, அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை டீ…”

ஆ! அவனின் அதே வசனத்தை இவளும் சொல்கிறாளே!

“எருமை, அமுக்குணி உன்னையெல்லாம் என்ன டீ பண்றது? இதைச் சொல்லவேண்டியவன் கிட்ட இன்னும் ஏன் சொல்லலை?”

அகல்யா மறுபடியும் கத்த,

“அவரே புரிஞ்சிப்பாருன்னு நினைச்சேன். ஆனால் இப்ப எல்லாம் என் கிட்ட ஒழுங்கா பேசுறதே இல்ல…”என்றாள் குரலில் உண்மையான வருத்தத்துடன்.

‘ஆமா உன் கிட்ட பேசிட்டாலும்!’ எண்ணிய அகல்யா சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டுத் தாமதம் வேண்டாம் என்று முடித்துவிட்டுத் தான் போனை வைத்தாள்.

நீண்ட நாளாய் நீண்டு கொண்டிருந்த அண்ணனின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததில் மகிழ்ந்தாள் அகல்யா.

பூவிழிக்கு தன் தோழியிடம் திட்டு வாங்கியது விடவும், தன் மனதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்து நிம்மதியாகத் தோன்றியது.

அதன்பிறகு அகிலனிடம் எப்படித் தன் காதலைச் சொல்லலாம் என்றே சிந்தித்துக்கொண்டிருந்தாள். அதையே எண்ணியபடி அவனுக்குப் பிடித்ததை எல்லாம் சமைத்தாள்… மதியம் அவன் சாப்பிட வருகிறேன் என்றிருந்தால், அவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்…

ஆளைக் காணவில்லை இன்னமும்.

போன் அடித்தது, அவன் தான் போலும் என்று எடுத்தாள்… ஆனால் எதிர்முனையில் மேனேஜர் பேசினார். இவள் என்னவென்று கேட்பதற்கு முன்னமே “மேடம், அகிலன் சார பாம்பு கடிச்சிடிச்சு. மலர் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கிறோம்… இப்போது பயமில்லைனு சொல்லிட்டாங்க… உங்கள் கிட்டச் சொல்ல தான்… ஹலோ… ஹாலோ…”

பதிலில்லாமல் போனை வைத்தார் மேனேஜர்.

அந்தப் பாம்புக்கடி என்ற வார்த்தையிலேயே பதறியவள், ஹாஸ்பிடல் பேரைக் கேட்டதும் ஓட்டமெடுத்தாள்…

ஆட்டோ பிடித்தவள், வழி நெடுகிலும் தப்புப் பண்ணிட்டேன், அகிலன் எவ்ளோ நல்லவன், அவனைப் போய்க் கஷ்டபடுத்திட்டேனே! கடவுளே அகிலனை காப்பாற்றினதுக்கு நன்றி… என்று ஏதேதோ எண்ணயியபடி பதினைந்து வினாடிகளுக்குள் அவனிடமிருந்தாள்…

மயக்கத்தில் இருந்தான் அகிலன். அவனைக் காணவே மனம் வலித்தது பூவிழிக்கு…

அவன் கைகளைப் பிடித்தவாறு கண்ணீர் சிந்தினாள்…

மருத்துவர் வந்து பார்த்து “உடனே வந்ததால், ஒண்ணும் பிரச்சனை இல்லை. கண் முழித்ததும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்” சில மருந்துகள் எழுதிக் கொடுத்துவிட்டு அகன்றார்…

மீண்டும் தன் கணவனின் முகம் பார்த்தவளுக்கு அழுகை தான் வந்தது. ‘தைரியமாய் இரு ‘ என்று மனசுக்குள் குரல் கேட்டாலும் ஏனோ கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை. அவன் கையைப் பற்றியபடி அவன் பக்க கட்டிலில் தலைவைத்து கொண்டாள்.

நீண்ட நேரம் கழித்துக் கண்விழித்தவன், யாரிது பக்கத்தில் என்று புரிந்துகொள்ளச் சிரமப்பட்டான். அவன் தன் கையை அசைக்க முயற்சிக்கவும் தான் பூவிழி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அகிலனும் தன் மனைவியை வித்தியாசமாய்ப் பார்த்தான், கண் எல்லாம் வீங்கிச் சிவந்திருந்தது… அழுதாளா?

“பூவிழி எப்போ வந்தே? மேனேஜரா சொன்னார்? சொல்லவேணாம்னு சொல்லியிருந்தேனே!”

அவள் அதற்கெல்லாம் பதிலளிக்காமல், “இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?”எனக் கேட்க,

அவனோ “எனக்கு ஒண்ணுமில்லை. எப்போ வீட்டுக்குப் போலாமாம்? டாக்டர் என்ன சொன்னார்?”

மருத்துவர் கூறியதை அவனிடம் சொன்னவள், அதன் பின் சென்று மருத்துவப் பில் எல்லாம் கட்டிவிட்டு, அவனுடைய மருந்தையும் வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

அவனுடன் கார் பக்கம் போகவும், “நான் ஓட்டுறேன், நீங்க உட்காருங்க”என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“உனக்கு வண்டி ஓட்டத்தெரியுமா?”

ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தவள், அவனின் இன்னோவா காரை அசால்ட்டாக ஓட்டியதை வாயும் கண்ணும் மூடாமல் அதிசயமாகப் பார்த்தான் அகிலன்.

“உனக்குக் கார் ஓட்டத்தெரியும்னே எனக்குத் தெரியாது பூவிழி. எனக்குத் தெரியாமல் எப்போ கத்துக்கிட்ட? வேற இன்னும் என்னென்ன விஷயத்தை என் கிட்ட சொல்லாமல் மறைச்சி வச்சிருக்கே பூவிழி?” என அவன் கேட்க…

சொல்லிவிடலாமா என்று ஒரு நிமிடம் யோசித்தவள், வீட்டுக்குப் போய்ச் சொல்லுவோம் என்றிருந்துவிட்டாள்.

மேனேஜர், கிரிக்கும் தகவல் தந்துவிட்டார்போல. இவர்கள் வீடு வந்து சில நேரத்திலேயே கிரி, மஹா, நம்பி, சுதா எல்லாரும் வந்துவிட்டனர்.

சுதா தான் பதறினாள், “பூவிழி, அம்மாகிட்டயும் சொல்லாமல், என்ன டீ வேலைப் பண்ண? எப்படித் தனியா போன?”

பதில் என்ன சொல்லுவாள் என்று அகிலன் எண்ணுகையில், பூவிழியோ “பதட்டத்தில் என்ன பண்றதுன்னு தெரியலை மா. அதான் நானே ஆட்டோவில் போய்ட்டேன்” என்றாள்…

அகிலனுக்கு அவனை வெள்ளை ஆடையணிந்த தேவதைகள் ‘தன் தன தன் தன’ என்னும் இசையில் அவனைச் சுற்றி வட்டமடித்ததைப் போல ஒரு பிரமை…

அவள் அப்படிச் சொன்னதும் யாரும் அதற்கு மேல் அவளிடம் கேட்டுக்கொள்ளவில்லை.

நம்பி மட்டும், “அகிலன் பத்திரமா இருங்க… பாம்பு நடமாட்டம் நிறைய இருக்கோ தோட்டத்தில்? பாம்பாட்டி யாரையும் ஏற்பாடு பண்ணவா?”என்று கேட்க

“இல்ல மாமா, புதுசா ஒரு வண்டி எரு வந்தது, அதுல தான் இது இருந்திருக்கும் போல. வேற எங்கேயும் வர வாய்ப்பில்லை. நான் பார்த்துக்குறேன்…” என்றுவிட்டான்…

பூவிழியின் பெற்றோர் விடை பெற்றுவிட்டனர்…

வாசல் வரை அவர்களை விடச் சென்றவளிடம் சுதா, “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு… ஜாக்கிரதையா இருங்க மா, நீ மாப்பிள்ளையோடு சங்கரன்கோவில் கோவிலுக்குப் போயிட்டு வந்துடு…” என்றுவிட்டுக் கிளம்பினர்…

மஹா மகனைச் சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார்…

பூவிழி அவர்கள் அறையில் அவன் ஓய்வெடுக்கவென்று படுக்கையைத் தயார் செய்தாள்…

அறைக்குள் வந்தவன், அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, “ரொம்பப் பயந்துட்டியா பூவிழி?” என்று அவளை நேர்பார்வை பார்த்துக் கேட்க, அவளும் அவனைப் பார்த்தபடி ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள்.

மெல்ல அவளை இடையோடு அணைத்தவன் அவளின் நெற்றியை தன் நெற்றியால் முட்டியபடி நின்றான்…

“ஏன் பயந்தே?” வேண்டுமென்றே கேட்டான். அவனுக்கு இப்போது புரிந்தாலும் அவள் வாயால் கேட்க வேண்டுமே…

பூவிழி ‘என்ன கேள்வி இது…’ என்பது போல் நிமிர்ந்து இமைக்காமல் அவனையே பார்த்திருந்தவளை,

“சொல்லு டீ, அமுக்குணி”, அகல்யாவை போலவே சொன்னான் அகிலன்,

அதிசயமாக இருவரும் ஒன்றாய் சிரித்தபடி!

“நான் உங்களை, உங்களை விரும்புறேன். நீங்க இல்லாமல் என்னால் வாழ முடியாது, ஐ லவ் யூ அகிலன்…” என்றாள்.

வெள்ளை தேவதைகள் அவனை வட்டமடிக்கத் தொடங்கவும், சூ… சூ… அவர்களை எல்லாம் விரட்டி விட்டான் அகிலன்…

தான் கேட்க நினைத்த ஏங்கிய வார்த்தையை, எவ்வளவு வருடமானாலும், இன்று அவளிடம் கேட்டது சந்தோஷ அலைகளை உண்டாக்கியது…

காத்திருப்புக்குக் கிடைத்த பலன்…

‘சொல்லிட்டாளே அவ காதல…

சொல்லும் போதே…’

பாட்டை எண்ணி நேரம் கடத்தவில்லை அவன்…

இதற்கு மேலும் அகிலனை கட்டுப்படுத்த முடியுமா என்ன?

அடுத்த நாளே அவன் அப்பாவிடம், ஊட்டி காட்டேஜை புக் பண்ணச் சொல்லிவிட்டான்…

அவன் அங்கே சென்றது மஹா சொல்லி தான் அகல்யாவுக்கே தெரிந்தது!

இனி அகிலன் பூவிழி வெரி பிசி…