Ani Shiva’s Agalya 20

20

இரண்டு நாள் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை, சாப்பிடவில்லை… எதுவும் வேண்டாம் என்றிருந்தவளை, பூவிழி தான் சமாதான படுத்தினாள்…

அந்தச் சண்டை நடந்த சமயம் பூவிழி இருந்தது அவள் அன்னை வீட்டில்…

அகல்யாவா இப்படிச் செய்தாள் என்பதை நம்பச் சிரமமாகத் தான் இருந்தது…

பூவிழி வற்புறுத்திக் கேட்க, தன் மாமியார் தன்னிடம், குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றிப் பேசிய பேச்சும், அதனால் அவள் போட்ட சண்டையையும் சொன்னாள். சூர்யாவும் என்றுமே அவளின் புகார்களை நம்பவில்லை என்று அழுதாள் அகல்யா…

“அகல்யா, இங்க பார், அழாதே டீ… இந்தப் பிரச்சனையை எப்படிச் சரி பண்ணலாமென்று யோசி…”

பூவிழி அவளைத் தன் மடியில் கிடத்தி, தலை கோதியபடி சொல்ல, அவள் சொன்னது கேட்டாலும் அகல்யா அழுதபடியிருந்தாள்…

“அவர்கள் பண்ணது தப்பு தான். அதுக்கு ஏன் டீ வீட்டை விட்டு வந்தே?” பூவிழி கேட்க,

“சும்மா இரு பூவிழி, எவ்வளவு நாள் நான் சொன்னதை எல்லாம் நம்பாமல் இருந்திருக்கிறார் தெரியுமா? சரியான அம்மா பிள்ளை… இவ்ளோ நாள் அவர் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போச்சு! கடைசியில் நான் தான் அந்த அம்மாவுடைய நெஞ்சு வலிக்கு காரணமென்று வேற எங்க மாமனாரையும் நினைக்க வச்சட்டாங்க டீ… நான் என்ன கொலை பண்ணவா அங்க போயிருக்கிறேன்?”

பூவிழிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை… அகல்யா ஏன் இப்படி மாறிப் போனாள்? தைரியசாலி என்று நினைத்தவள் இன்று கோழையாகி விட்டாள்… இதைச் சமாளிப்பது அகல்யாவுக்கு முடியாத காரியமா?

அகல்யா இருக்கும் நிலையில் தான் எது சொன்னாலும் தப்பாய் தான் தெரியும் இப்போது… அகிலனிடம் சொல்லலாம், எதாவது வழி கிடைக்குமா பார்ப்போம் என்று மனதில் குறித்துக்கொண்டாள் பூவிழி…

அதன் பிறகு நடந்தவை எல்லாமே நரகம் தான்… அகல்யாவின் தனிமை வாழ்க்கை தன் கோரத்தைக் காட்ட ஆரம்பித்தது… அவ்வளவு நாளும் தோன்றாத ஏதோ மனதில் தோன்றி அவள் உடல் நிலையை ‘அசிடிக்காக’ மாற்றிவிட்டிருந்தது…

சுவாசிப்பதை யாரும் உணர்ந்து செய்வதில்லை, ஆனால் என்று சுவாச கோளாரில் ஆக்ஸிஜன் தேவைப் படுகிறதோ, அப்போது தான் அதை இவ்வளவு நாளும் சிரமமில்லால் செய்துகொண்டிருந்தோமே என்ற உணர்வு வரும்… அகல்யாவுக்கு இப்போது அதே நிலை தான்!

யாரையும் பார்க்க பிடிக்கவில்லை, பேசவோ சாப்பிடவோ இஷ்டமில்லை…

அகல்யாவின் இந்தப் புதுப் பிரச்சனையால் அவளும் அவளைச் சார்ந்தவர்களும் வெளியே எங்கும் போகவில்லை… சிறையில் இருப்பது போல் ஒரு நிலை அவளால் தன் குடும்பத்தினர் அனைவருக்கும்.

இதற்கு என்ன தான் வழி?

கண்ணில் படாதது கருத்தில் நிலைப்பதில்லை… தன்னைப் பெற்றவர்களுக்கு அது பொருந்தாது என்றாலும், தான் சில காலம் ஒதுங்கியிருப்பது அகிலன் வாழ்வுக்கும் நல்லது என்று தோன்ற, ஊரை விட்டுப் போக முடிவெடுத்தாள்…

சென்னையில் விஜயா பெரியம்மா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தன் வீட்டில் சொல்ல முதலில் மறுத்தவிட்டனர் அவள் பெற்றோர்… தனக்கு இங்கே நிம்மதி கிடைக்கப்போவதில்லை, இடமாற்றம் வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திய பின்பே அவர்கள் வேறு வழியில்லாமல் சம்மதிக்க, அவளை அகிலன் சென்னையில் போய் விட ஏற்பாடானது… பூவிழிக்கு சிறிதும் விருப்பமில்லை இதில்…

அகல்யாவுக்கு அவளது பெரியம்மா விஜயா மிகவும் நெருக்கம்… விஜயாவுக்கு இரண்டுமே ஆண் மகவு என்பதால் தன் தங்கை பெண்ணான அகல்யாவின் மேல் பிரியமாய் இருப்பார்…

அகல்யாவின் திருமணத்தின் போது தன் மூத்த மருமகளின் பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தாள்… அப்போது வர இயலாதவர் அதன் பின் சில மாதங்களில் வந்து, சூர்யா அகல்யாவை வாழ்த்தி அவர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்து விட்டுத் தான் கிளம்பினாள்…

அகல்யாவிடம் சூர்யா மாதிரி ஒருவன் கணவனாய் அமையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவுபடுத்துவதை விஜயா தான் அதிகம் செய்வாள்.

இன்றோ அவள் வீட்டில் அகல்யா ‘வாழத் தெரியாதவள்’ என்ற பெயருடன், பெரியம்மா வீட்டுக்கு வந்தது ஒரு தப்பிக்கும் மனநிலையே. அங்கே ஊரில் அரசல் புரசலாக அகல்யா விஷயம் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது…

கிரிதரன் மஹாவுக்கு போன் மேல் போன் போட்டுத் துக்கம் விசாரித்தனர் பலர்! அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை, பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா என்ற நிலையில் இருந்தது அவர்கள் பேச்செல்லாம்… ஒரு புருஷன் பொண்டாட்டி பிரச்சனை என்றால் அவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் பேசுவார்கள், நம் ஊரில் மட்டும்!

பேசிப் பேசியே பிரச்சனையைப் பெரிது படுத்தி, சேர்ந்து வாழும் சந்தர்ப்பங்களை உடைத்துவிடும் வாய்ப்பை அதிகமாக்கி விடுவார்கள் சிலர்… அப்படியே பேசி சேர்த்து வைத்தாலும் எவ்வளவு நாள் அது தாங்கும்?

பற்ற வைத்து ஒட்ட வைக்க அது என்ன ஸ்டீல் பாத்திரமா?

தானாக உணர்ந்து தம்பதிகள் சேரும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாதே… இதை எல்லாருக்கும் புரிய வைக்க எவரால் முடியும்?

கிரிதரன் தன்னிடம் தன் மகள் வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கும் யாருக்கும் விளக்கம் எல்லாம் கொடுக்கவில்லை, ‘ஏதோ மனஸ்தாபம், கொஞ்ச நாள் எங்க கூட இருக்க வந்திருக்கா’ என்று அத்தோடு முடித்துக் கொள்வார்… சூர்யாவையோ அவன் பெற்றோரையோ சொல்ல இந்த விஷயத்தில் அவருக்கு இஷ்டம் இல்லை…

அகல்யாவால் அவள் பெற்றோர் படும் பாட்டை எல்லாம் பார்க்க முடியவில்லை… நல்ல பேர் வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை இந்த மாதிரி ஒரு அவமானத்தைத் தந்துவிட்டோமே என்று வருந்தியவள், சிறிது காலம் ஒதுங்கியிருப்போம் என்று தான் சென்னை வந்ததே…

பெரியம்மா விஜயா, சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். அகல்யாவுக்கு இந்த இடமாற்றம் தேவையானதாக இருந்தது. அகிலன் வந்து விட்டு, ‘சீக்கிரம் திரும்பி வா’ என்ற உத்திரவோடு கிளம்பிவிட்டான்…

விஜயாவுக்கு கணவர் இல்லை. இரண்டு மகன்கள், இருவரும் வெளிநாட்டிலிருக்க, விஜயாவுக்கு என்றுமே தனிமை தான்… தனிமையின் கொடுமையை அனுபவித்தவருக்குத் தெரியாதா, அகல்யா செய்துகொண்டிருக்கிற முட்டாள்தனம்?

ஆனாலும் தன் அருமை மகளை விட்டுக்கொடுக்க முடியவில்லை, காரணமில்லாமல் செய்வாளா? தன் வாழ்க்கையை இப்படித் தொலைப்பாளா? கேட்டுச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். சிறிது காலம் ஆளை அவள் போக்கில் விட்ட விஜயா, பிறகு

“அகல்யா, தினமும் வீட்டில் இருந்தா எப்படி மா? ஏதாவது படியேன். உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்…” என்று படிப்பதில் திசைதிருப்பினாள் அவளை…

வெளியில் சாதாரணமாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் மனதுக்குள் அழுதாள்… சூர்யாவுடன் தான் வாழ்ந்த நாட்கள் எல்லாம் அடிக்கடி நினைவில் வந்தது.

எல்லா நாட்களின் இரவுகளும் அழுகையில் தான் முடியும், விடியலும் அப்படியே!

அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?

தலைவா சுகமா சுகமா?

உன் தனிமை சுகமா சுகமா?

வீடு வாசல் சுகமா?

உன் வீட்டுத் தோட்டம் சுகமா?

அவன் பின் செல்லும் மனதை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொள்வாள்… அது சண்டித்தனம் செய்தால், அவன் அவளை நம்பாததையும், அவன் அம்மாவை விட்டுத்தராமல் பேசியதையும், அடித்தது என்று அனைத்தையும் யோசித்து யோசித்து அவன் பக்கம் வெறுப்பை வளர்த்துக் கொள்ளப் பழகிக்கொண்டாள்… இது தான் அவளின் அனேக நேர வேலையே!

விஜயாவின் வற்புறுத்தலில் தான் அகல்யா கம்பியூட்டர் கோர்ஸில் சேர்ந்தது… தினமும் சில மணிநேரம் அதில் போய்விடும். வீடு வந்தால் தன் பெரியம்மாவுடன் சேர்ந்து சமையல், கோவில், கடை, கைவேலை என்று ஏதேனும் செய்வது…

வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கோவில் என்று விஜயா அட்டவணை போட்டு தந்திருந்தாள்… கோவிலுக்குப் போனதால் கிடைத்த அமைதி பிடித்திருந்ததால் அதை மறக்காமல் பின்பற்றினாள் அகல்யா… வடபழனி முருகன், மாங்காடு, கபாலீசுவரர், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் என்று நித்தமும் ஒரு கோவில்…

அந்தக் கணினி மையத்திலும் நன்றாகவே படித்தாள்… வாழ்க்கை பாடத்தில் அரியர் இருக்கிறதே என்று அடிக்கடி அவள் மனசு அவளைக் குத்திக்காட்டியது வேறு கதை!

கல்லூரியில் கூட இந்த அளவுக்கு மெனக்கிடவில்லை அவள். ஆனால் ஏனோ இப்போது படிப்பது ஏதும் வேலையில் சேர உதவும் என்று எண்ணமிட்டபடி நன்றாகவே செய்தாள். சில மாதங்களில் கோர்ஸ் முடிந்துவிடும் அதன்பிறகு என்ன என்ற கவலையும் அவளைச் சேர்ந்து கொண்டது.

அவள் படிக்கச் சென்ற மையத்தில் பல தோழிகள் அமைந்தனர் அவளுக்கு… இவளை விட இளையவர்களாய் இருந்தனர்… அவர்களுடன் இருப்பது அவள் மனக்கவலையைக் குறைத்தது தான்… யாரும் எதுவும் அவளைப் பற்றிக் கேட்டு துளைத்தெடுப்பதில்லை, அந்தக் காரணமாய்க் கூட இருக்கலாம்…

கிரியும் மஹாவும் வந்து சில நாள் அவளுடன் இருந்தனர்… மஹா தான் பாவம், தன் ஆசை மகளின் இந்த நிலை அவளை நிலைகுலைய செய்திருந்தது…

அவளும் விஜயாவும் பலமுறை வேறு வேறு விதமாகச் சொல்லிபார்த்தனர், ‘இந்த உலகில் தனியே வாழ்வது எல்லாம் சரி வராது, மாமியார் பிரச்சனை, அது யாருக்குத் தான் இல்லை? சமாளித்து தான் போகவேண்டும்! வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது’ அப்படி இப்படி என்று அவள் மனதை மாற்றும் முயற்சி நிறையவே நடக்கும் மஹா வருகையின் சமயம்…

அன்றும் திடுதிப்பென்று, “பாவி என் பொண்ணு வாழ்க்கையை இப்படிக் கெடுத்துட்டானே… நல்லவனென்று நம்பி தானே பொண்ண அவனுக்குக் கட்டி வைத்தோம்…” அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மஹா அழுதபடி சூர்யாவை வசைபாட,

“அம்மா அவரை ஏன் திட்றீங்க? அவர் பேரில் எந்தத் தப்பும் இல்லை… இதைப் பத்தி இனிமேல் நீங்க பேசாதீர்கள்…”

சூர்யாவின் மேல் கோபம் தான்… ஆனால் எப்படி அவள் அம்மா அப்படிப் பேசலாம்? அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டாள்.

விஜயா அதன்பின் மஹாவை சமாதானப்படுத்தினாள்…

“எல்லார் வாழ்க்கையிலும் இந்த மாதிரி பிரச்சனை வர்றது சகஜம் தான்… உன் பொண்ணு ஏதோ பெரிய சரி செய்ய முடியாத விஷயத்தில் மாட்டிகிட்டான்னு இவ்ளோ நாள் கவலை பட்டிருந்தேன், ஆனா அவ எப்போ சூர்யாவை விட்டுக்குடுக்காம பேசினாளோ, அப்பவே எனக்குப் புரிஞ்சிருச்சு, கூடிய சீக்கிரம் நம்ம பொண்ணு அவ புருஷன் கூடச் சேர்ந்திடுவா, கவலைப் படாதே…”

அவள் அக்காவின் வாக்கைத் தெய்வ வாக்காக எண்ணி அப்போதைக்கு நிம்மதி அடைந்தாள் மஹா… அது பலிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள்… கிரி மஹா ஊருக்கு திரும்பும் சமயம் அகல்யாவையும் அழைக்க, அவள் வர இஷ்டப்படவில்லை…

கணினி மையத்தில் கோர்ஸ் முடியும் தருவாயில் இருந்தது… அவளுக்குச் சொல்லி கொடுத்த டியூட்டர் வேலையை விட்டதால், ஆர்வமாய் இருந்த அகல்யாவை வேலையில் சேர கேட்டார்கள்…

அகல்யாவும் அதனை ஒப்புக்கொண்டு வேலைக்கு வர ஆரம்பித்திருந்தாள்…

தினமும் வேலைக்குப் போவது ஒரு நல்ல மாற்றமாய் இருக்கத் தன் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டாள் அகல்யா…

தனிமையைத் தவிர்த்து பிற நேரங்களில் சிறு மகிழ்ச்சியும் கிடைத்தது தன் புது வேலையால், அதனால் கிடைத்த சேர்க்கையாலும்… விருப்பத்துடனே சென்றாள்…

கெட்டது நடந்துவிட்டது, அதிலிருந்து மீளும் வழிகள் தான் என்ன? அகல்யா அதை யோசிக்காவிட்டாலும், விஜயாவின் பேச்சை கேட்டு நடந்து கொண்டது கைகொடுத்தது இப்போது!

அவள் வேலைக்குப் போகும் இடத்தில் சில நேரம் தோழிகள் இவளை ஷாப்பிங் என்று அழைத்துச் செல்வார்கள்… இஷ்டமில்லை என்றாலும் அவர்களுடன் செல்வாள்… அப்படி ஒரு சமயம் ஃபோரம் மாலில் சுற்றும் சமயம் சூர்யாவை அங்குக் கண்டாள், அவன் இவளைக் கவனிக்கவில்லை…

அவள் இதயம் ஒரு நிமிடம் தன் செயலை அதி வேகமாகச் செய்தது… கண் அவன் பிம்பத்தை நிரப்பிக் கொள்வதில் மும்முரமாயிருக்க, அவளின் சூர்யா ஒளி மங்கித் தெரிந்தானோ!

தன் பிரிவுக்கு வருந்துகிறானா என்ன?

அவனை இந்த நிலையில் பார்த்தது மனதை பிசையச் செய்தது… அவனின் பின் ஓடப் பார்த்த தன் மனதைப் பிடித்துவைப்பது பெரும் போராட்டமாய்ப் போயிற்று!

தன்னைப் பார்த்துவிடுவானோ என்று பதட்டமானவள், தோழிகளிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து உடனடியாகக் கிளம்பிவிட்டாள்…

ஆண்மை பண்பு என்பது மனைவி மீது வைக்கும் நம்பிக்கை, அவளை எவரிடமும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது… அதில் தவறிவிட்டானே!

அதை எல்லாம் எப்படி மறந்தோம்? இவனைப் பார்த்ததும் இந்த வெட்கம் கெட்ட மனது உருக ஆரம்பிக்கிறதே! என்ன தான் அவனைப் பற்றி எதிர்மறையாக நினைத்தாலும், அவனைப் பார்த்ததிலிருந்து ஒரு சில வாரங்கள் அவளுக்கு அவனின் நினைவே ஆக்கிரமித்திருந்தது…

பணியிடத்துச் சூழ்நிலை தன் மாற்றத்தைக் காட்ட ஆரம்பித்தது…

ஒரு பெண்ணிடம் கண்களைப் பார்த்து நேராகப் பேச வேண்டும். அவன் தான் நல்ல ஆண்மகன்… மஹா இதைபோல் பல விஷயம் தன் பிள்ளைகளிடம் பேசுவாள், அகிலன் அதையெல்லாம் கேட்டதாலோ என்னவோ மிகத் தன்மையானவன்… அப்படியொரு அண்ணனோடு வளர்ந்த அகல்யாவுக்கு இந்தப் பணியிட சூழல் தன் மற்றொரு கோணலை, கோணலாகக் காட்டியது…

சமுதாயத்தில் ஒரு பெண்ணை மரியாதையாக நடத்துவது என்பது வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பிள்ளைகளின் முன் மனைவியை இளக்காரமாகப் பேசுவது, பொது இடத்தில் திட்டுவது என்று ஏதேனும் செய்து இந்திய பெண்களின் சுயகவுரவத்தைக் கொலை செய்யவென்று சில பேர் உள்ளனர். இது போக மீதிப் பேர் பார்க்கும் பெண்களை எல்லாம் கண்களாலேயே தோலுரிப்பர். அது என்ன அப்படி ஒரு பார்வை?