Ani Shiva’s Agalya 8

Ani Shiva’s Agalya 8

8

அவரின் பார்வை வீச்சை பார்த்துக் கிரிதரனுக்கே சற்று தயக்கமாக இருந்தது. பின்னர், தொடர்ந்து, “ உங்கள் பெண்பேரில் எந்தத் தப்புமில்லை, அவளுக்கு நாங்க இந்த விஷயத்துக்குத் தான் வருகிறோமென்று கூடத் தெரியாது…”

நம்பி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை… அமைதியாய் யோசித்தபடியிருந்தார்…

அவர் இருந்த நிலையைப் பார்த்த கிரிதரனுக்கு இந்தச் சம்பந்தம் கைகூடுமா என்பது சற்று ஐயமே!

“தப்பா எடுத்துக்காதீங்க… என் பொண்டாட்டி கிட்ட கேட்காமல் எனக்கு எந்த முடிவும் எடுத்துப் பழக்கமில்லை… ஒரு அஞ்சு நிமிஷம், வந்துடுறேன்…”

அவர் மனைவியை அழைத்துக்கொண்டு தனியறையில் சென்று பேசினார் நம்பி…

பூவிழி குடும்பத்திற்கு அவர்கள் பார்த்து வளர்ந்த பையன் அகிலன். அவனின் ஒவ்வொரு வயதிலும் பெற்றோருக்குப் பெருமை சேர்த்திருக்கிறான்… படிப்பு, வேலை என்று குறை சொல்ல எதுவும் இல்லை… நல்லவன் என்ற அபிமானமும் அவர்களுக்கு உண்டு, வேறு சமூகம் என்பதைத் தவிர யோசிப்பதற்கு விஷயமும் இல்லை… அகல்யாவும் தன் மகளுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பாள்… இவை எல்லாம் அவரைச் சம்மதிக்க வைத்தது.

காத்துக் கொண்டிருந்த அகிலனுக்கு அவன் உயிரே கையில் இல்லை… அவனுக்குள், ‘முடியாதென்று சொல்லிட்டாருன்னா?’ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.

இந்தப் பூவிழி வேறு பொம்மை மாதிரி நின்று கொண்டிருக்கிறாளே. இப்போதாவது அவள் ஏதாவது கூறி தன்னை தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று அவளது தந்தையிடம் கூற மாட்டாளா என்று தோன்றியது அகிலனுக்கு.

பேசாமல் ஓடிப்போய் விடலாமா என்று ஒரு மனம் கேட்டபோதே, ச்சே ச்சே அது தவறு என்று கூறிய இன்னொரு மனம்… அப்படியே நீ அழைத்தவுடன் இவள் வந்து விடுவாளா என்ன? என்றும் கேட்டு அவனுக்குத் தொப்பியைப் பரிசளித்தது.

அவர் வருவதற்குள் ஆயிரம் முறை கடவுளை வேண்டிக்கொண்டிருந்தான். அகல்யாவிடம் வேறு ஒன்றும் சொல்லாமல் வேறு வந்தது அகிலனுக்கு என்னவோ போல இருந்தது.

இவ்வளவும் அகிலன் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் அவன் முகம் சாந்தமாய் காட்சியளித்தது…

இருபது நிமிடம் கழித்து வந்த நம்பி, பூவிழியிடம், “அம்மா உனக்கு அகிலனை பிடிச்சியிருக்கா மா?” எனக் கேட்க…

அவள் அவரிடம் பதிலேதும் கூறாமல் தலை குனிந்தபடியிருந்தாள்… அவள் அம்மா அவளைத் தனியே அழைத்துச்சென்று கேட்டுவிட்டு பின், அவரிடம், ‘‘பிடிச்சிருக்குனு சொல்றாங்க…” என்று சொன்னாள்.

அகிலனுக்கு அப்பாடி என்றிருந்தது…

நம்பியும், “அப்போ எங்களுக்கும் சம்மதங்க, என் பெண் போற இடத்தில் நல்லா இருக்க வேண்டும், அது ஒன்றுதான் நான் நினைத்தது, உங்க பையன் பத்தி எனக்கு நல்லா தெரியும், இந்தக் கல்யாணம் பத்தி நாம் மேற்படி பேசலாம்…” என்று கூறி அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தார்…

சுதா பூவிழிக்கு அலங்காரம் செய்து அழகு பதுமையாய் மாற்றி அவள் கையில் அனைவருக்கும் பாயாசம் கொடுத்தனுப்பினார்…

தன்னிடம் கொடுக்க வந்தவளை ஒரு சில நிமிடம் பார்த்து ரசித்த பிறகே அவளிடமிருந்து கிண்ணத்தை வாங்கினான்…

மஹா தான் கொண்டு வந்திருந்த பூவை, பூவிழியிடம் கொடுக்க… அவள் புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள்… கிளம்பும் முன் அவளின் தொலைப்பேசி எண்ணை வாங்கி விட்டான் அகிலன்…

அந்தச் சாதனையை அகல்யாவிடம் அவன் பீற்றிக்கொள்ள…

“அட லூசு பையா, அவ நம்பர் தான் என் கிட்டையே இருக்குல்லடா…” அகல்யாவிடம் கொட்டும் வாங்கினான்…

அகிலன், பூவிழி திருமணத் தேதி குறிக்கப்போகிறார்கள்…

அன்று மாமியார் வீட்டிலிருந்த அகல்யா, அகிலன் பூவிழி திருமணத்தைப் பத்தி சீதாவிடம் வாயடித்துக்கொண்டிருந்தாள்.

“போன வாரம் ஒரு நாள் கோவில்பட்டிக்கு, உங்க சொந்தத்தில் ஒரு கல்யாணத்துக்கு போனோமே, அப்போது தான் பூவிழி வீட்டுக்குப் போய்ப் பேசியிருக்காங்க…”

அவள் சீதாவிடம் சொல்லாமல் விட்டது, ‘எப்போவுமே விட்டுவிட்டு போற உங்க அம்மா, கரெக்டா அன்றைக்கு என்னைக் கூட்டிட்டு போயிட்டாங்களே!’ என்பதை மட்டும்!

சீதா அவளிடம், “அய்யோ நீ பெண் பார்க்கப் போறதை மிஸ் பண்ணிட்டியே…” என்றாள்.

“ஆமா, இந்த அகிலன் வேணும்னே என்னைக் கழட்டி விட்டுவிட்டு போயிட்டான், வேற ஒரு நாள் போலாம்னு சொன்னதைக் கேட்கவேயில்லை…”

சீதா சிரித்துக்கொண்டாள்…

பேச்சினூடே திருமணத்திற்கு என்ன புடவை வாங்குவது, நகை என்ன போடலாம் என்று விவாதித்தபடியிருந்தனர்… இரண்டு பெண்கள் சேர்ந்தால் பேச விஷயமா இல்லை? வேலைகளை முடித்துவிட்டு அவர்களிடம் வந்த ராஜம்,

“யாருக்குக் கல்யாணம்?” எனக் கேட்க,

அகல்யா மிகச் சந்தோஷமாக, தன் அண்ணனுக்கும், பூவிழிக்கும் என்றாள்

ராஜத்திற்கு சிறு அதிர்ச்சி தான், ‘இப்போது தானே பெண்ணுக்கு முடிச்சாங்க, கொஞ்ச நாள் போகட்டும்னு நினைத்தது தப்பாகப் போய்விட்டதே…’

“என்ன பேசியே முடிச்சாச்சா?”என மேலும் கேட்க,

“ஆமா அத்தம்மா…” பதிலளித்தவளை முந்திக்கொண்டு,

“சீதா மாப்பிள்ளையுடைய ஒன்றுவிட்ட தங்கச்சி பெண்ணுக்காக, அகிலன உங்க கல்யாணத்தில் பார்த்து ரொம்ப இஷ்டமா என் கிட்ட அவர்கள் சார்பா பேசச் சொல்லிக் கேட்டாங்க, நானும் பேசுறேன்னு சொல்லியிருந்தேன்…” சொல்லிக்கொண்டிருந்தாள் ராஜம் சம்மந்தமே இல்லாமல்…

“அவனுக்கு இப்போ முடிஞ்சிருச்சுனு சொல்லிடுங்க…” என அகல்யா கூற

“என்ன இப்போ நிச்சயமா முடிஞ்சியிருக்கு? பேச்சுவார்த்தை தானே? நான் உங்க அம்மா அப்பா கிட்ட பேசிக்கிறேன், பூவிழி வீட்டைவிட நான் சொல்ற இந்த இடம் நல்ல வசதி, இதையே முடிக்கலாமென்று…” அசால்டாக வந்தது அவளிடமிருந்து…

அகல்யாவும், சீதாவும் ஒரு சேர அதிர்ந்தனர்…

சீதாவால் தன் அம்மா இப்படி கூடப் பேசுவாளா என்று நம்பவே முடியவில்லை… மருமகள் முன் அவளை ஒன்றும் சொல்ல முடியவில்லை அவளால்… அகல்யாவுக்கு அவ்வளவு ஆத்திரம். ‘இவர்கள் யார் என் அண்ணனின் வாழ்க்கையைத் தீர்மானிக்க?’ என்று!

அமைதியாய் இல்லாமல், “சரிப் படாது அத்தம்மா…”

“ஏன்” என்றாள் ராஜம்

“அகிலனுக்கு, பூவிழிய பிடிச்சிருக்கு… அதான் பேசி முடிச்சிட்டாங்க…”

“கதை அப்படி போகுதா? ஏன் உன் அண்ணனுக்கு இவ்ளோ அவசரம்?”

இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதைப் போல் அவளைப் பார்த்தாள் அகல்யா…

சீதாவுக்கு அவளது அம்மா வாயை மூடமாட்டாளா என்றிருந்தது… அதற்கேற்ப ‘கொஞ்சம் சும்மா இரேன் மா’ என்ற சைகை, கண் ஜாடை எல்லாம் காட்டி பார்த்தாள், ராஜம் சட்டை செய்யவேயில்லை…

அகல்யா ராஜமிடம், “என்ன அவசரம்னா? அவன் படிச்சிருக்கான், வியாபாரம் பண்றான், தங்கச்சியை கல்யாணம் செஞ்சி கொடுத்தாயிற்று… அவன் கடமையை எல்லாம் முடிச்சிட்டான்…”

சீதாவுக்கு, ‘அகல்யா நீயாவது சும்மா இரேன் மா’ என்றிருந்தது…

ராஜம் விடாமல், “சூர்யா பார் இப்போ தான் கல்யாணம் பண்ணிருக்கிறான்? அவனைவிட அகிலன் வயசு குறைவு தானே?”

சீதாவுக்கு ‘பக்’ என்றிருந்தது, அகல்யா அடுத்து என்ன சொல்லுவாள் என்று அவளுக்கு விளங்கியது…

“சூர்யாவுக்கு நீங்க ரொம்ப லேட்டா பண்ணியிருக்கீங்க… எங்க அம்மா அப்பா அவ்ளோ நாள் எல்லாம் அகிலனை விட்டுட மாட்டாங்க…” என்று பதிலளித்து விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள் அகல்யா…

சீதாவுக்கு அகல்யாவின் தைரியத்தைக் குறைகூறவா, பாராட்டவா என்று யோசனை… ராஜம் நிலைமையைப் பார்க்கத்தான் சீதாவிற்கு ஐயோவென்று இருந்தது, ஒரு சின்னப் பெண்ணிடம் மூக்கு அறுபட்ட நிலைமை…

அகல்யா அந்த இடத்தை விட்டுச் சென்றதும், ராஜம் சீதாவிடம் கத்தித் தீர்த்தாள்,

“என்ன நினைச்சிட்டு இருக்கா அவ? இப்படி தான் மரியதையில்லாம பேசுறதா?”

சீதா பதிலேதும் சொல்லவில்லை, சொல்லவும் விருப்பமில்லை… அதனால் அவள் ஆமோதிப்பதாக எடுத்துக் கொண்ட ராஜம்,

“அவ அம்மா வீட்டுக்குப் போறேன்ல, இப்படியா பொண்ண வளர்ப்பாங்கனு கேட்கிறேன் பார்!”

இப்போது இந்த அம்மாக்கு என்னதான் ஆச்சு? சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போலல்லவா நடந்து கொள்கிறாள்… சீதாவுக்கு மூச்சு முட்டுவது போல் ஆயிற்று…

அம்மாவை அதிகம் எதிர்த்துப்பேசியதில்லை, ஆதலால் தற்போது பேச நாவும் எழவில்லை…

நீண்ட நேரம் புலம்பிப் பின் அடங்கிபோனாள் ராஜம்…

ராஜமிடமிருந்து தோட்டம் பக்கம் சென்ற அகல்யாவுக்கு தன் மாமியார் பேச்சில் உண்டான எரிச்சல் அடங்க நீண்ட நேரம் ஆனது.

சிறிது நேரத்தில் சீதா வந்தாள் அவளிடம்…

“அகல்யா, பெரியவர்கள் கொஞ்சம் அதிகப்படி எல்லாம் பேசத்தான் செய்வாங்க… நாம எல்லாத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்ல… நீ சின்னப் பெண், உனக்குப் புரிய கொஞ்சம் நாள் ஆகும் தான்…”

“ஆமா நீங்க ஐம்பது வயசு பாட்டி…” சிரித்தபடி பதில் கூறினாள்…

சிரித்துக்கொண்டார்கள்… அப்படியே பேச்சுத் திசை மாறிவிட்டது…

சீதாவிடம் அடுத்து எப்போது அவள் இங்கு வருவாள் என்று உறுதிப்படுத்தி கொண்டு அம்மா வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள் அகல்யா… அத்தோடு அந்தப் பேச்சையும் மறந்து போனாள், ராஜம் அவள் பெற்றோரிடம் வந்து பேசும் வரை…

ராஜமுக்கு தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பணமும், வசதியும், பிள்ளைகள் மற்றும் புருஷனின் சம்மதமும் தான் தீர்மானிப்பதாக ஒரு நினைப்பு. இவ்வளவு நாளும் அதன்படி நடந்தாலும் இவர்கள் எல்லாம் எப்படி என் விஷயத்தைத் தீர்மானிக்கலாம்? ச்சே… யாரையும் அண்டி வாழக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்…

என்னதான் ராஜம் குட்டி நகரம்போல் ஒரு ஊரில் இருந்திருந்தாலும், குணம் எல்லாம் கொஞ்சம் பிற்போக்குத் தன்மை தான்… அகல்யாவும் அதே ஊர் தான் என்றாலும், அவள் வீட்டில் இந்தக் கட்டுபெட்டித்தனம் கிடையாது… பெண் என்று தட்டிவைக்கவும் மாட்டார்கள்… இவர்கள் இருவரும் ஒத்துப்போவார்களா? ராஜம் தன் மாமியார் வேலையை ஆரம்பித்துவிட்டார்…

அகல்யாவுக்கு தன் அம்மா வீட்டில் நேரத்தைப் போக்க முடியவில்லை என்று தினமும் அகிலனுடன் அவன் ‘ஃபார்ம்ஸ்’க்கு போக ஆரம்பித்திருந்தாள்… அன்றும் அப்படி தான்… வேலை முடிந்து அங்கே இருந்து வரும் வழியில்,

“பூவிழிய பார்த்துட்டு போகலாமாடா?” என்றவளிடம்…

“நீ வேணும்னா தனியா போய்ப் பார்த்துக்கொள், எனக்கு அசதியா இருக்கு, வீட்டுக்குப் போகணும்…” என்றான்.

“ப்ரோ, ஏன் இந்த மாற்றம்? நான் உங்களுக்காகத் தானே சொன்னேன்!”என்றவளை பார்த்துச் சிரித்தவன்…

“நேற்று தான் அவங்க அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு அவளை வெளியே கூட்டிட்டு போனேன்…” என்று சொல்லிக் கண்ணடித்தான்.

“அடப்பாவி, என் கிட்ட சொன்னியா டா, அந்த அமுக்குணியும் வாய திறக்கலை…” சிரித்தபடியிருந்தவனை மொத்தினாள்.

“அகல்யா, எங்களுக்குக் கொஞ்சம் தனிமை வேண்டும் டீ, நீ கூட வந்தா அவ உன் கிட்டயே ஒட்டிகிட்டு இருப்பா, அதான் உன்னை விட்டுவிட்டு போயிட்டேன்… இனிமே அப்படிதான்… மனசை தேத்திக்கோ…” பொறுமையாக விளக்கம் கொடுத்தான்…

“இப்போவே இப்படி சொல்றியே, கல்யாணம் ஆச்சுனா?” கூறிய அகல்யாவுக்கு கண் எல்லாம் கலங்க ஆரம்பித்தது… அகிலனுக்கு அகல்யாவின் இந்தச் செய்கை புதிதாக இருந்தது,

“ஏன் டீ, நானே அவளைப் பேச வைக்க என்ன பாடு பட்டுட்டிருக்கேன்… நேற்றும் என் கிட்ட ஒரு வார்த்தை பேசலை அவ… அண்ணனுக்கு எப்படி உதவி செய்யலாமென்று யோசிக்காமல், புதுசா நீ ஒரு பிரச்சனையைச் சொல்றியா?”

‘ச்சே ஆமா ல… அகல்யா நீ ஒரு கூறு கெட்டவ’ என்று மனதில் தன்னைதானே அர்ச்சனை செய்துவிட்டவள்…

“சரி சரி… நான் ஒண்ணும் சொல்லலை, ஆனால் எனக்குத் தெரியாமல் நீ எந்தப் பிளானும் பண்ணக் கூடாது… ஓகே?”என்று சகோதரனைச் சமாளித்தாள்…

இருவரும் வீட்டுக்குள் போக, அங்கே அவர்கள் வீட்டுக்கு ராஜம் வந்திருந்தாள்… அகல்யா அவரை எதிர்பார்க்கவில்லை…

“வாங்க அத்தம்மா…” என்று இருவரும் ஒன்றாய் வரவேற்றனர்…

வரவேற்றவுடன் அகிலன் உள்ளே சென்றுவிட்டான்…

அகல்யா, ராஜம் மஹாவிடம் சில நேரம் இருந்தவள், அவர்கள் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கவும், அவளும் நழுவி உள்ளே சென்றுவிட்டாள்…

அவள் சென்றதும் ராஜம் மஹாவிடம் ஆரம்பித்தார்,

“அகிலனுக்கு நல்ல வரன் வந்திருக்கு, அதைப் பத்தி சொல்லலாமென்று தான் இன்னிக்கி வந்தேன்…”

மஹா உடனே, “ நாங்களே உங்க கிட்ட சொல்லலாமென்று இருந்தோம், அவனுக்கு பூவிழிய பேசி முடிச்சிருக்கு…”

அது தான் எனக்குத் தெரியுமே என்பது போல் மஹாவை பார்த்த ராஜம், “அவர்கள் நம்ம ஆளுங்க இல்லையே” என இழுக்க…

மஹாவும் சளைக்காமல், “ஆமா, இல்லதான்… ஆனால் பையன் ஆசைபட்டுட்டான்… அதுவுமில்லாமல் அவர்கள் ரொம்ப நல்ல குடும்பம்… அதனால் அகிலனோட அப்பா வேற எதைப்பத்தியும் பெரிசா எல்லாம் யோசிக்கவில்லை…”

“நல்லவேளை அகல்யாவுக்கு சீக்கிரம் முடிச்சிட்டீங்க, இல்லைனா…” மஹாவின் பார்வையைப் பார்த்து மீதி வாக்கியத்தைச் சொல்லாமல் விட்டார் ராஜம்…

மஹா பேசாமல் இருந்தார், இவரிடம் என்ன பேச?

ராஜம் விடாமல் ஆரம்பித்தார், “நீங்க வேணா கிரி அண்ணன் கிட்ட இன்னோரு முறை பேசிட்டு ஒரு முடிவு சொல்லுங்க…”

மஹாவுக்கு வினோதமாயிருந்தது. இவர்களுக்கு உண்மையாகவே புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறார்களா? எண்ணியவள் ராஜமிடம்,

“ஐயோ அதுக்கெல்லாம் அவசியமே இல்லை, நாங்க ஏற்கனவே பூவிழி வீட்டில் வாக்கு குடுத்திட்டோம், இது எங்க புள்ள வாழ்க்கையும் கூட… அவர் கிட்ட கேட்டாலும் இதே தான் சொல்லுவார்…”

ராஜமுக்கு இது தேவைதானா? சம்பந்தி என்றால் இவள் சொல்லுவதைக் கேட்டு ஆடுவார்கள் என்று நினைத்தாள் போலும்…

“சரி அப்போ நான் கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டாள்…

அகல்யாவும் மஹாவும் வாசல் வரை வந்து வழியனுப்பினர்…

ராஜம் மனதில், ‘நல்ல வேளை அந்த மனுஷன் வரலை, வந்திருந்தா இப்போது நடந்ததைச் சொல்லியே என்னை ஒரு வழி பண்ணிருப்பார்…’ எண்ணியவள், அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டாள்…

வீட்டுக்குள் நுழைந்ததும் மஹா ராஜம் பேசியதை பற்றி யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஆனால் அம்மாவின் முகக்கலக்கத்தை வைத்தே, தன் மாமியார் ஏதோ வேலை செய்திருக்கிறார் என்று புரிந்துகொண்டாள் அகல்யா.

அன்று இரவு சூர்யாவை பற்றிய கனவாயிருந்ததால் தூக்கம் வரவில்லை அகல்யாவுக்கு… டீவி பார்க்கலாம் என்று வந்தவளுக்கு, ஹாலில் தன் அம்மா அப்பா பேசி கொண்டிருந்தது கேட்டது…

“அவங்க அப்படிப் பேசுவாங்கன்னு நான் நினைக்கலைங்க, எப்படித் தான் அகல்யா அங்க சமாளிக்கிறாளோ?” என்றாள் மஹா வருத்தமாக.

ஆமா மா என் பாடு பெரும்பாடு தான், அகல்யா மனது சத்தமாகச் சொன்னது…

“சரி சரி விடு, அவர்கள் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருந்தாலும், அகல்யா தான் எல்லாரையும் சமாளித்துக் கொண்டு போகவேண்டும்… இதைப் பத்தியெல்லாம் அவ கிட்ட சொல்லாதே…” என்று கூறிவிட்டார் கிரிதரன்…

அடுத்த நாள் அகிலனுடன் காரில் செல்லும் போது அவர்கள் பெற்றோர் பேசியதைக் கூறினாள் அகல்யா. அண்ணனாவது தனக்கு ஏதாவது உருப்படியான ஐடியா கொடுப்பான் என்ற எண்ணத்தில்…

அவனோ ஒரு படி மேலே போய்,

“நாளைக்கு நம்ம அம்மா என் பொண்டாட்டியா எப்படி வச்சிருப்பாங்களோ தெரியலையே…” என்று முடித்துவிட்டான்.

‘உனக்கு உன் கவலை…’ என்றது அகல்யா மைண்ட் வாய்ஸ்…

ஆனால் இதைப் பற்றியெல்லாம் மென்மேலும் சிந்திக்கத் தோன்றவில்லை அவளுக்கு, ஏனெனில் தன் கணவன் கூடிய விரைவில் திருநெல்வேலி வரப்போகிறான்…

3 thoughts on “Ani Shiva’s Agalya 8

  1. Very very superb ud, Ani Shiva dear
    waiting for your next lovely ud, Ani Shiva chellam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!