1
இடியுடன் கூடிய மழை பொழிந்து கொண்டிருந்தது… மழை வருமா வராதா என்று ஏங்கி கொண்டிருந்த நெல்லை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது போல…
‘சின்னச் சின்னத் தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…’
மழையை அனுபவிக்கும் போதெல்லாம் அகல்யாவால் இந்தப் பாடலை முனுமுனுக்காமல் இருக்க முடியாது…
அகல்யா…
அவள் நினைவு வந்ததும் சூர்யாவின் இதயம் படபடத்தது.
முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தான். வாழ்க்கையில் எல்லாமே அடைந்துவிட்டேன் என்று மகிழ்ந்த வேளையில் தான், அடைவது சுலபம் அதைத் தக்கவைப்பது கடினம் என்ற நிதர்சனம் அவனுக்குப் புரிந்தது…
ஆறடி உயரத்தில், இதிகாசங்களில் வர்ணிக்கப்படும் கதாநாயகன் போன்ற அற்புதமான தோற்றத்தைக் கொண்டிருந்தான். அடக்கம் என்பது ஆண் குலத்துக்கும் உரியது என்பது போல் இருப்பவன். அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு சொந்தகாரன் என்பதை காட்டிக்கொள்ளாதவன்…
மழையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, அகல்யாவை பெண் பார்த்தது முதல், அவள் அவனை விட்டுப் பிரிந்து சென்றது வரை அனைத்தும் அவன் மனக்கண்ணில் ஒடியது.
எங்குத் தன் வாழ்க்கை தவற ஆரம்பித்தது என்பதை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. இதே சிந்தனையில் அமர்ந்து கொண்டிருந்தவனுக்கு வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டது…
இரவு ஒன்பதரை மணி… கொட்டும் மழை !
இந்த நேரத்தில் யார்?
அம்மா அப்பா தூங்கியிருப்பார்கள்…
தூங்கி கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் அவனே சென்று கதவைத் திறந்தான்.
அதிர்ந்தான்!
இன்ப அதிர்ச்சி தான்…
அகல்யா தான்…
மழையில் நனைந்திருத்ததாள்… உடல் நடுங்கி கொண்டிருந்தது…
இரண்டு வருடம் முன்பு இருந்ததை விட மெலிந்திருந்தாள். ஈரப் புடவையுடன், கையில் ஒரு பையுடன் அவனை வெறித்துப் பார்த்தாள். கதவைத் திறந்தவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், வழியையும் விடத் தோன்றாமல்!
சிறிது நேரம் அவனைப் பார்த்தவள், “கொஞ்சம் வழி விடுறீங்களா? நான் உள்ளே போகணும்” என்றாள்.
எவ்வளவு நாள் ஆயிற்று இவளது குரலைக் கேட்டு என்றிருந்தது சூர்யாவுக்கு… தன்னை மீட்டுக் கொண்டவன்,
“வா அகல்யா” என்றான் அவளை நேராகப் பார்த்து…
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டுப் பதில் கூறாமல் உள்ளே சென்றாள்… எங்கே செல்கிறாள் என்று பார்த்தவன், மாடியில் உள்ள அவர்களது அறைக்கு போவதை பார்த்துத் திருப்தியடைந்தான். சூர்யாவுக்கு சற்று நேரம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.
கதவைப் பூட்டவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவனது அம்மா எழுந்து வந்துவிட்டார்.
“என்னப்பா… ஏன் இங்க இருக்கே? யார் வந்தா?”
சூர்யா எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கி, பின்…
“அகல்யா வந்திருக்கா மா” என்று கூற,
“என்னது? அவ ஏன்டா இங்கே, இப்போ வந்தா?” என்றாள் ராஜம்.
இப்படியொரு கேள்வியா என்று யோசித்தவன், உடனே “அம்மா அவ என் பொண்டாட்டி மா, ஞாபகம் இருக்கா இல்லையா?” தாயிடம் எரிந்து விழ, ராஜம் அத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
சூர்யா வாசல் கதவை மூடும்முன் வாசலில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தான், எவரும் இல்லை… இந்த நேரத்தில் தனியாக வந்திருக்கிறாளா, என்று சிந்தித்தபடியே படி ஏறினான், அவனது அறைக்கு!
அகல்யா சோபாவில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள். சூர்யா உள்ளே வந்ததும் அவனைக் கண்டும் காணாதது போலிருந்தாள்.
ஏதும் பேசுவாள் என்று எதிர்பார்த்தான் சூர்யா, ஆனால் அவள் அமைதியாக இருக்கவே, அவனே தொடர்ந்தான்… “வரனும்னு சொல்லியிருந்தா நான் வந்திருப்பேனே கூப்பிட, ஏன் தனியா வந்த?”
அவள் எதுவும் பேசவில்லை… சிறு அமைதிக்கு பிறகு, “எதாவது சாப்பிடுறியா?” என்றான்.
மறுப்பாகத் தலையசைத்தாள்… சூர்யாவும் அமைதியாகி விட்டான், அவளைப் பார்த்ததே சந்தோஷமாக இருந்தது.
கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பதுபோல் அமர்ந்து கொண்டு அவளை ரசித்துகொண்டிருந்தான்… அவன் செய்வதை அவளும் உணர்ந்து கொண்டு தான் இருந்தாள், சிறிது நேரத்திற்குப் பின் “பாவா எனக்குத் தூங்கணும்”, என்றாள்.
சூர்யா எழுந்து அவளுக்கு ஒரு தலையணையைக் கட்டிலில் போட, அவளோ அவனை அதிர்ச்சியாகப் பார்த்துவிட்டு… “நான் சோபாலையே படுத்துக்குறேன்” என்று கூற, அவன் பதிலளிக்கவில்லை.
புத்தகத்துடன் கட்டிலில் சாய்ந்த்தவனின் மனம் அவளை விட்டு வர மறுத்தது…
என்னவாகி இருக்கும்?
ஏன் இப்போது வந்திருக்கிறாள்?
திரும்பிப் போயிடுவாளோ?
பேசினால் தானே புரியும்!
இவள் என்ன பேசத் தெரியாதவளா?
பலதையும் யோசித்துக் கொண்டிருந்தது மனது…
“லைட் ஆஃப் பண்ணவா?” என்று கேட்டாள். சூர்யா சிரித்துகொண்டான்… “ம்ம் சரி” என்று கூறிவிட்டுப் பெட்சைட் லாம்பை போட்டுகொண்டான்.
சட்டென உறங்கி விட்டாள் போல… சூர்யாவின் உறக்கம் எட்டா இடத்திற்குச் சென்றது. தான் உயிரை வைத்திருக்கும் ஒரு ஜீவன் தன்னைவிட்டு விலகியிருப்பது துயரமாய் இருந்தது.
தான் கடந்து வந்த பாதையை நினைத்தபடி உறங்க முற்பட்டான்…
*****
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துக்கொண்டிருந்தான் சூர்யா. கல்லூரி படிப்பை முடித்தவுடன் மகன் தன் சுமையைக் குறைத்துவிடுவான் என்று எண்ணிகொண்டிருக்கும் கோடானு கோடி அப்பாக்களைப் போல் ஒருவர் தான் சூர்யாவின் தந்தையும். மிகுந்த சிரமங்களுக்கு இடையே மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் சூர்யா சென்னை சென்று வேலை தேடினான்.
பகுதி நேரத்தில், தன் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான மென்பொருள் வகுப்புகளில் சேர்ந்தான்.
அயராத முயற்சி…
நல்ல சம்பளத்துடன் ஒரு வேலையும் கிடைத்தது. இரண்டு வருடம், எந்தச் சிந்தனைகளிலும் தன்னைத் தொலைக்காமல் வேலை வேலை என்றிருந்ததில், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது.
கடன் சுமை அவன் குடும்பத்தை நெருக்கும் சமயம், அவனது உள்ளூர் சம்பளம், யானை பசிக்கு ஒரு சின்னப் பொறி உருண்டை போலிருந்தது.
எந்தக் காலத்தில் கடனை முடிப்பேன் என்று குழம்பியிருந்தவனுக்கு வெளிநாட்டு வாய்ப்பு கடவுளின் வரப்பிரசாதமாகத் தோன்றியது.
அவனது தந்தை ராமானுஜம் மிகவும் ஆனந்தபட்டுப் போனார். நல்லபடியாக மகன் அவரைக் கறையேற்றி விடுவான், தம்பி தங்கையைப் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை வந்தது.
ஜப்பானை பற்றி வரலாற்றில் படித்து ஆச்சரியப்பட்டிருந்தாலும், அந்த மக்களின் ஒழுக்கத்தையும் உழைப்பும் அவர்களுடன் வேலை பார்த்ததும் மிகத் தெளிவாக உணர்ந்தான்.
பேச வேண்டிய இடத்தில் பேசுவதும், மற்ற இடங்களில் என்ன அவசரம் என்றாலும் அமைதிகாப்பதும், வரிசையில் நிற்பதை ஒரு கடமையாகச் செய்வதும்… இன்னும் சொல்லிகொண்டே போகலாம்…
இந்த ஜப்பான் நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த நற்செயல்களும் ஒரு காரணம் தான்.
சுயஒழுக்கம் இல்லாதவர்களுக்குத் தான் பொது இடத்தில் கத்துவதும், குப்பை போடுவதும், பொதுச் சொத்தைச் சேதப்படுத்துவதும் தப்பாகத் தெரியாது…
சரியான உடற்தகுதி, சுயஒழுக்கம், எந்த வேலையிலும் அர்ப்பணிப்பு, இம்மூன்றும் ஒரு மனிதனுக்குத் தேவை. வருங்காலத்திலும் சுயஒழுக்கம் முக்கியம் என்று கற்றுதருபவர்கள் நிறைய உருவாகுவார்கள் என்று நம்புவோமாக…
ஜப்பான் வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது சூர்யாவுக்கு.
அலுவலகத்தின் அருகிலேயே வீடு எடுத்திருந்தான். நடந்து செல்லும் வசதிக்கேற்ப!
வேலை முடிந்ததும் சிறிது உலாவிவிட்டு வந்தால், இரவு சமையல் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றித் திட்டமிடுதல் என்று அந்த நாள் இனிதே முடிந்து விடும்.
ஆயிற்று பல வருடம். ஒருவழியாய், அவனது வீட்டின் கடனை முழுவதும் அடைத்துவிட்டு நிம்மதியானான்…
அலுவலகத்தின் பணியே பரவாயில்லை போல என்று எண்ணும்படியாக இருந்தது அவனது குடும்பத்தின் எதிர்பார்ப்பு.
அவனுக்குச் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றார்கள், தம்பிக்கு ஏதாவது வழி செய் என்றார்கள், தங்கை வீட்டில் மேலும் நகை கேட்கிறார்கள் என்றார்கள், அனைத்தையும் சமயம் வரும் போதெல்லாம் செய்தாயிற்று.
அடுத்து அவனது திருமணத்தில் வந்து நின்றார்கள். பெண் தேடும் படலம் ஆரம்பமானது. எத்தனை எத்தனை வரன்கள். சொந்தம், அசல், வெளியூர், உள்ளுர், பக்கத்து மாநிலம் என்று பெண் பார்த்தும், ஏனோ ஒன்றுமே அமையவில்லை.
சூர்யாவுக்கு என்னடா இது எனக்கு வந்த சோதனை என்றிருந்தது… முப்பத்தி ஐந்து வயதில் தான் திருமணம் செய்து வைப்பார்கள் போல என்று நொந்து கொள்ளத் தான் முடிந்தது.
சின்ன வயதில் அவ்வளவு பணக்கஷ்டத்திலும் கூட அவன் அம்மா அப்பாவிடம் என்றுமே கோபப்பட்டதில்லை… ஆதலால் திருமண விஷயத்தில் அவர்களை எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டான்… இதனிடையே திருநெல்வேலியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டான்…
*****
காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது சூர்யாவுக்கு. ஏதோ முனகல் சத்தம் கேட்டபடியே இருந்தது. என்னது நமது அறையில் சத்தம் என்று சிந்தித்தபடியே எழுந்து வந்தான்.
அகல்யா தான்!
பார்த்ததும் பதறிப் போனான்.
“அகல்யா என்ன மா? என்ன பண்ணுது?”
அவள் கண்களைத் திறக்ககூடச் சக்தியற்றவளாய் இருந்தாள். நெற்றியில் கை வைத்துப் பார்தால் உடல் அனலாக கொதித்தது…
சூர்யாவுக்கு ஆற்றாமையில் கோபமாய் வந்தது, இவள் என்ன சின்னக் குழந்தையா? இப்படி மழையில் நனைந்து காய்ச்சலை வரவழைத்துக் கொண்டாளே என்று நினைத்தவன், உடனடியாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆயுத்தமானான்.
அவளை எழுப்பிப் பார்த்து, தோற்று கைத்தாங்கலாகத் தூக்கிக் கொண்டு படியிறங்கினான்.
டிரைவரை வண்டி எடுக்கச் சொல்லிவிட்டு, பின் சீட்டில் அவளை அணைத்தவாறு அமர்ந்து கொண்டான். எமர்ஜென்சி வார்டில் மருத்துவர் அவளுக்குச் சில சோதனைகள் செய்து விட்டு,
“வைரல் ஃபீவர் தான்… ட்ராவல் பண்ணாங்களா? திரவ ஆகாரம் மட்டும் குடுங்க…” என்று கூறி, மூன்று நாட்களுக்கு மருந்து கொடுத்தார்.
சூர்யா, அகல்யாவை அழைத்துக் கொண்டு, டிரைவரைக் கம்பெனிக்குச் செல்லுமாறு கூறி அவனே காரை ஓட்டிச்சென்றான்.
வீட்டில் அவனது பெற்றோர் வாசலிலேயே காத்து கொண்டிருந்தனர். யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டதால், என்னவோ ஏதோ என்றிருந்தனர்.
அகல்யா காரிலிருந்து இறங்கி அவர்களைக் காணாதது போலச் சென்றுவிட்டாள்.
மருமகளது செய்கையைப் பார்த்து ராஜத்திற்கு ஆத்திரமாக இருந்தது.
“மரியாதை தெரியாதவள்…” என்று முனகிக்கொண்டாள்…
சூர்யா எதையும் சட்டை செய்யாமல் அவள் பின்னோடு செல்ல, அங்குப் படியில் ஏறும்போது தடுமாறியவளை தாங்கிகொண்டு, “பார்த்து மா, என்ன அவசரம்? நான் தான் வர்றேனே?”
அகல்யாவின் கண்கள் கலங்கியது, அவனது அக்கறையில்… அவர்களின் இனிமையான நினைவுகள் எல்லாம் இப்போது ஞாபகம் வந்தது.
தலையைக் குனிந்துகொண்டு கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.
அவளைப் படுக்கையில் படுக்க வைத்ததும் அலுவலகத்திற்குப் போன் செய்து, தான் இன்று வர இயலாது என்றும் கார்த்தியை வைத்துப் பணிகளைக் கவனித்துக்கொள்ளுமாறும் கட்டளையிட்டவன், நேராகச் சென்று சமையலறைக்குள் புகுந்துகொண்டான்.
பிரட், மஞ்சள் பால், மெது தோசை என்று தயாரித்தவன், அவற்றை எடுத்துக் கொண்டு மேலே தன்னறைக்குச் சென்றான்.
அறைக்குச் சென்றவன் அகல்யாவுக்கு ஊட்டிவிட்டான்… அவளும் மறுக்காமல் உண்டு முடிக்க, மாத்திரையும் கொடுத்துவிட்டு,
“நல்லா தூங்கு, நான் இன்னைக்கு வீட்ல தான் இருப்பேன், எதாவது வேணும்னா என்னைக் கூப்பிடு…” என்று கூறியவன் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
அகல்யாவிற்கு எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.
களைப்பு மிகுதியால் அப்படியே தூங்கிப் போனாள். கனவில் யாரோ தன்னை எழுப்புவதும், உணவு ஊட்டுவதும் போலவே இருந்தது…
மறுபடி கண் விழித்துப் பார்த்தபோது விடிந்திருந்தது.
அவள் பக்கத்தில், கட்டிலில், சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
குழந்தைபோல் தூங்கிகொண்டிருந்தவனைக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் குழப்பமாக இருந்தது.
நேற்றிலிருந்து ஒரு வார்த்தைக் கூட அவள் காயப்படும்படி பேசவில்லை… ஒரு தாயை போலத் தன்னைக் கவனித்துக் கொண்டானே! ஏன் இவனை விட்டுப் பிரிந்தேன்?
இந்த அன்புக்காக எத்தனை எத்தனை துன்பங்களையும் தாங்கிகொண்டிருக்கலாமே!
அவனுக்கு விழிப்பு வந்துவிடும் என்று தோன்றியதால், குளியலறைக்குள் புகுந்தாள்… வெளியே வந்தவளை இன்முகத்துடன் பார்த்த சூர்யா “அகல்யா இப்போ எப்படி இருக்கே?” என்று கேட்க,
“ம்ம்… இப்போ பரவாயில்லை, சாரி உங்களை ரொம்பப் படுத்திட்டேன்…” வருத்தமாகக் கூற,
“எப்போ படுத்தினதை சொல்றே?”
“ஆங்!?” என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தாள்.
“இப்போவா? இல்லை இந்த ரெண்டு வருஷமாவா?”
கேள்விக்கு விடை தெரியாத மாணவி போலிருந்தாள், அவன் மனைவி!
“சரி அதைவிடு, அத்தம்மா உனக்குப் போன் பண்ணாங்க… நீ இங்கே தான் இருக்கேன்னு சொன்னேன்… யாரு கிட்டேயும் சொல்லாம வந்துட்டியா?”
“ம்ம்…”
“என்னம்மா? அவங்க எவ்ளோ பதறியிருப்பாங்க? இன்னும் இந்தப் பழக்கத்த விடலையா நீ?”
“எந்தப் பழக்கம்?”
“இப்படிச் சொல்லாம போறதை!”
சில மணித்துளிகள் முன் தான், நம்மை ஒன்றும் சொல்லாத நல்லவனென்று நினைத்துக் கொண்டேன். இப்போது ஆரம்பித்து விட்டானே!
“எனக்குப் பசிக்குது…” இந்தப் பேச்சின் திசையை மாற்ற வேண்டும் என்று தான் ஆரம்பித்தாள்.
“அம்மா என்ன செஞ்சிருக்காங்கனு பார்த்திட்டு வர்றேன்…” சூர்யா எழுந்தான்…
“இல்லை எனக்குக் கடையில் வாங்கிட்டு வாங்க… இங்கே வேணாம்…”
சூர்யாவுக்கு அவளது செய்கை கோபத்தை ஏற்படுத்தியது… ஆத்திரத்தை கட்டுப்படுத்தியவன் “சாப்பிட என்ன வேணும், சொல்லு… இட்லி தானே?”
“ம்ம்ம்… இட்லி…”
இருவரும் ஒன்றாய் சொன்னார்கள் “இதுல மட்டும் மாறிடாதே… அப்படியே இரு!” என்றுவிட்டுக் கிளம்பினான்.
அகல்யாவுக்கு சோர்வாக இருந்தாலும், குளித்துவிட்டு, ஒரு மயில் பச்சை சல்வாரை அணிந்துகொண்டவள், தன் நீண்ட பின்னலை அழகாய் பின்னிக்கொண்டாள்.
கண்ணாடியில் பார்த்துத் தன் தோற்றத்தை மெச்சிவிட்டு, பால்கனியில் எட்டி பார்க்க, தான் உருவாக்கி வைத்துவிட்டுப் போன தோட்டம் எல்லாம் வெறும் சருகாக மாறியிருந்ததைக் கண்டு மனம் வருந்தினாள்.
தன் வாழ்க்கையும் இப்படித் தான் இப்பொழுது உள்ளது என்று மனசாட்சி நினைவுபடுத்த, நீயும் அதற்கு ஒரு முக்கியக் காரணம் என்றது, அவளும் அதை உணராமல் இல்லை.
இனிமேல் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாகக் கொண்டு செல்ல வேண்டும். சூர்யாவின் அன்பை இழக்கவே கூடாது…
அன்று தான் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துக்கொண்டு. தான் படித்த படிப்பை வீணாக்க அவள் மனம் விரும்பவில்லை, அவனைப் பிரிந்திருந்த வருடங்களில் மென்பொருள் பயிற்சி பெற்றிருந்தமையால், அவன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தகுதி தனக்கு உண்டு என்று நம்பினாள்.
சூர்யாவிடம் வேலை கேட்டால் தருவானா?
மீதி நேரம் தன் தோட்ட வேலைகளுக்கு ஏதேனும் யோசிக்க வேண்டும்… இவை அனைத்தையும் சிந்தித்தவாறே அறைக்குள் அவள் வரவும், அவனும் வந்தான்…
அவளையே கண்ணிமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தவன், அவள் உணவு பார்சலுக்காகக் கைநீட்டியதும் தான் நினைவுக்குத் திரும்பினான்.
“நான் கம்பெனிக்குக் கிளம்புறேன், ஏதாவதுன்னா கூப்பிடு…” கடமை முடிந்தது என்பது போல் சென்றுவிட்டான்…
அந்த நாளை அந்த ஒற்றை அறையில் செலவழிப்பதற்கு அகல்யா பட்ட பாடு அவளுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கே அவனிடம் பேசி அடுத்த நாளே வேலைக்குப் போக ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்…
சூர்யா திரும்ப இரவு எட்டரை மணி ஆனது.
“ஹாய்” என்று சிரித்தவனை, அவளும் ஒரு புன்முறுவலோடு எதிர்கொள்ள…
“என்ன சீதாதேவி! ரூம்லயே இருந்தீங்க போல!?”
“ம்ம… உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும், நான் ரெண்டு கோர்ஸ் முடிச்சிருக்கேன்”
“என்ன கோர்ஸ்?”
கோர்ஸ் விபரத்தைக் கூறி “உங்க கம்பெனில ஏதும் ஓபெனிங் இருக்கா?” என்று கேட்க,
“என்ன கேட்ட?” உறுமினான்!
அகல்யா பயந்தேபோனாள். தப்பாக எதுவும் கேட்டுவிட்டேனோ என்று!
அவனைக் கேள்வியோடு பார்த்தவளிடம், “என் கம்பெனி இல்ல, நம்ம கம்பெனி, எங்கே சொல்லு பார்போம்!” சீண்டினான்…
மானசீகமாய் அகல்யா தன் தலையில் கொட்டிகொண்டாள்…
“சரி நீங்க சொன்னது தான், வந்து… நான் வரலாமா?” மறுப்பானோ என்று அவள் யோசிக்க,
அவனோ “எப்போதிலிருந்து?” என்று கேட்க
“நாளைக்கு?” கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
கார்த்தியிடம் தொலைப்பேசியில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.
எதிர்முனையில் ஏதோ கேலி போல, சிரித்துக்கொண்டே, “என் ரூம் இல்ல, தனிக் காபின்… கார்த்தி, உனக்கு ரொம்பத் துளிர் விட்டுப் போச்சு, சரி சரி போதும்… சொன்னதை மட்டும் செய்…” என்று கூறியவன், அவளிடம் திரும்பி,
“ஓ.கே, நாளைக்கு ஒன்பது மணிக்கு ரெடி ஆயிடு…”
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தான் நினைத்த ஒரு காரியம் நிறைவேறியது, அகல்யாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது… அதே மகிழ்ச்சியுடன் தூங்க சென்றுவிட்டாள்.
மறுநாள் உற்சாகமாகவே விடிந்தது.
குளித்துமுடித்துத் தன் ராசியான சல்வாரை தேடி அணிந்துகொண்டவள்.
கோவிலுக்குப் போக வேண்டும் என்று எண்ணியபடி, சூர்யாவை தேட, அவன் மாடியில் இல்லை.
சரி கார் பக்கம் போகலாம் என்று இறங்கி வந்தவளுக்கு, ஹாலில் ராஜம் போனில் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.
“ஆமா, ரெண்டு நாள் இருக்கும். வந்ததும் காய்ச்சல்… என்புள்ள எப்படிப் பாத்துக்கிட்டான் தெரியுமா? காபி கூடப் போடத் தெரியாதவன்னு நினைச்சா, இவளுக்காக என்னன்னவோ செஞ்சி தந்தான்… இப்படி ஒருத்தன் கூட ஒழுங்கா வாழாம இவ்வளவு வருஷம் ஆட்டம் காட்டிட்டாளே…”
சுருக்கென்றிருந்தது…
காரணம் யார் என்று கேட்டது அகல்யாவின் மனது. கசப்பாக இருந்தது. ஆனாலும் காரணமென்றும் கூட யாரையுமே சொல்லக் கூடாது. தன்னுடைய முட்டாள்தனத்தை உபயோகித்துக் கொண்டவர்களை என்ன சொல்ல?
ஆனால் அவர் சொல்வதும் உண்மைதானே? தான் வாழத்தெரியாமல் இருந்ததால் இன்னும் யார் யார் பேச்சைக் கேட்கவேண்டுமோ?!
சூர்யா தயாராகி வந்தான்.
“அம்மாக்கு இன்னைக்கு முடியலை, ஸோ நாம வெளியே சாப்பிடலாம்…” என்றுகூறிவிட்டுக் காரில் ஏறிக்கொண்டான்…
பழக்கதோஷத்தில் அவன் பக்கக் கதவைத் திறந்தவள், அந்தச் சீட்டில் இருந்த சூர்யாவின் லாப்டாப் மற்றும் இத்தியாதிகளை என்ன செய்வது என்று பார்த்துக்கொண்டிருக்கையில், “மேடம், இங்கே உட்கார போறீங்களா?”
“வேற எங்கே உட்காரணும்?” அகல்யா விழிக்க,
இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்துக்காட்டி, “இங்கே? இல்லைனா என் மடில கூட உட்காரலாம்…” என்று புன்னகை சிந்தினான் அவள் கணவன்.
அவள் வாயை இருக்கமாக மூடிக்கொண்டாள். என்ன பேசினாலும் வாயடைத்துவிடுகிறான்!
சூர்யா முன் சீட்டைக் காலி செய்து, அவள் உட்கார வழி செய்தான். வண்டியை உயிர்ப்பித்ததும் “எனக்குப் பிள்ளையார் கோவிலுக்குப் போகணும்…” என்று அவள் கேட்க,
“போலாமே” சட்டென்று வந்தது பதில்.
கோவிலில் தரிசனம் முடிந்து, காலை உணவுக்கு ஆர்யாஸ் சென்றார்கள்…
அகல்யாவுக்கு அன்று ஏனோ உற்சாகமாகவே இருந்தது. சூர்யாவை பார்த்தாலும் அதுபோல் தான் தோன்றியது.
இருவரும் கம்பெனிக்குள் நுழைந்ததும், எல்லாரும் வேலையை விட்டு அவர்களையே பார்ப்பதுபோல் உணர்ந்தாள் அகல்யா. கார்த்தி அவர்களிடம் வந்து,
“நல்லாயிருக்கீங்களா மேடம்?” அவளிடம் கேட்க,
அவள் பதில்கூறவில்லை…
இரண்டு பேரின் பார்வையும் சந்தித்தது, அவனைப் பார்த்து முறைத்தாள்…
கார்த்தி அகல்யாவின் நெருங்கிய நண்பன், கல்லூரி தோழன். அவள் சிபாரிஸில் தான் சூர்யாவிடம் வேலைக்குச் சேர்ந்தான். சூர்யாவுக்கும் இவனுக்கும் சிந்தனைகள் நிறைய ஒத்துபோவதை பார்த்து வியந்திருக்கிறாள். இக்கணம் சூர்யாவுக்கு அவன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற அளவுக்கு வளர்ந்திருந்தான் கார்த்தி. ஆனால் அகல்யா அவனிடம் பேசிப் பல மாதங்களிருக்கும்…
சமாதான முயற்சியில் சில தடவை அவளிடம் பேசியிருக்கிறான். அன்றொருநாள் இருவருக்குமிடையே நிகழ்ந்த விவாதம் நினைவுக்கு வந்தது.
“அகல்யா உனக்குக் கொஞ்சமாவது மூளை இருக்கா? சூர்யா என்ன தப்பு பண்ணார்? நீ இப்போ அவருக்கு எவ்ளோ பெரிய கஷ்டத்தைக் குடுத்திட்டிருக்கே தெரியுமா?”
“அது பத்தி எனக்குக் கவலை இல்லை”
“நான் சொல்றதை கேளு, உங்க மாமியார் தானே உனக்குப் பிரச்சனை, தனியா போயிடுங்க, அதை விட்டுட்டு அவனே வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“நீ உன் பாஸ்க்கு சப்போர்ட் பண்ணாதே… அவரால தான் பாதிப் பிரச்சனை…”
“ஏன் இப்படிப் பேசுறே? எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம் தான். ஆனா நீ நினைக்குற மாதிரி அவர் பேர்ல தப்பு இருக்காது… புரிஞ்சிக்க முயற்சி பண்ணுமா…”
“கார்த்தி, போதும் இதைப் பற்றி இனி என் கிட்ட பேசாதே!”
“இதைப் பற்றி மட்டும் தான் உன்கிட்ட என்னால பேச முடியும், அவரை வேணாம்னு சொல்றவ கிட்ட எனக்கு இனி என்ன பேச்சு? நீ எப்போ அவர் கூடச் சேர்ந்து வாழ்க்கை நடத்துறயோ, அதுக்கப்புறம் பேசுறேன் உன்கிட்டே… குட்பை.”
“கார்த்தி…”
வைத்துவிட்டான்…
அதன்பிறகு நிறைய இடங்களில் நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்ந்தாலும், கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவான்.
டேய் உனக்கு நான் பிரெண்டா, அவனாடா என்று மனசு துடிக்கத் திட்டிக்கொள்வாள்…
இப்போது வேண்டுமென்றே மேடம் என்று சொல்லிச் சீண்டுகிறான். இவனிடம் என்ன பேச்சு? பேசவே கூடாது…
சூர்யா அவளுக்கு அவள் காபினை காட்டினான்,
“பிரஷ்ஷர்ஸ்கெல்லாம் காபின் குடுக்க மாட்டோம்…” என்று சிரிக்க, அவள் கேள்வியாகப் பார்த்தாள்.
“ஆனா நீ ஸ்பெஷல்ல, அதான்…”
தலையைக் குனிந்துகொண்டாள்… சூர்யா தரையில் குனிந்து எதையோ தேட தொடங்கினான்…
“என்ன தேடுறீங்க?” அவள் புரியாமல் கேட்க,
“குனிஞ்சிட்டே இருக்கியே, எதையோ கீழே போட்டுடியோனு பார்த்தேன்…” கல கலவென்று சிரித்தான்…
ஹய்யோ இவன் தொல்லை தாங்கலையே!
“என்னால முடியலை…”
“என்னாலயும் தான்… வெட்கப்பட்டா அழகா தான் இருக்க, அதுக்காக அடிக்கடி படாத, அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன்…”
சூர்யா ஒரு முடிவோடு தானிருந்தான், தன் வாழ்க்கையை இனிமையாகக் கொண்டுசெல்ல… அகல்யாவின் கன்னம் சிவந்தது… முதல் நாளே இப்படிப் பேசுகிறானே, பாவி…
நல்லவேளை யாரோ கதவைத் தட்டினர்.
கார்த்தி தான்…
வந்தவன் இவள் இருந்த நிலையைப் பார்த்து, “என்ன பாஸ், ஒரு காபின் காட்ட இவ்வளவு நேரமா? அதான் ஒன் வீக் லீவ் வேணா போடுங்கனு சொன்னேன்! ஆஃபிஸ்ல வேலை… இல்ல… ஆஃபிஸ் வேலை… மட்டும் தானே பண்ணனும்…”
இவனும் சேர்ந்து கொண்டானா? அகல்யாவுக்கு மறுபடியும் எங்கேயாவது ஓடிவிடலாம் போலிருந்தது!
“கார்த்தி, உனக்கு வாய் ஜாஸ்தி, மீட்டிங் இருக்கு வா…”
“அது இவ்ளோ நேரம் உங்களுக்குத் தெரியலையோ, வாங்க பாஸ்…”
கிண்டலடித்துக்கொண்டே சென்றுவிட்டார்கள்…
‘அப்பாடி இப்போது தான் நிம்மதியாய் மூச்சு விட முடியுது. ஒரு நாளே இப்படி இருக்கே? எப்படிச் சமாளிக்கப் போறேன்? பேசாம ராஜம் கிட்டயே சரண்டர் ஆயிட்டு வீட்ல இருப்போமா?’ என்று தனக்குத் தானே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டவளுக்கு,
“நோ…”
“நெவர்…” என்று மனம் படு வேகமாகப் பதிலளித்தது.
முன் வைத்த காலைப் பின்வைக்க மாட்டாள் இந்த அகல்யா… வேலைகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்…