ANRA – 4

ANRA – 4

 

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 4

ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தாள் ராதா. அர்ச்சனா வேறு இன்னும் ரூமிற்கு வரவில்லை. ஏதோ வேலையில் மாட்டிக் கொண்டாளாம். தகவல் அனுப்பியிருந்தாள்.

தனியாக உட்கார்ந்திருக்க போராக இருந்தது. கை தானாக ஆத்மிகாவின் வீட்டு நம்பரை அழைக்க, அழைப்பு ஏற்கப்படும் வரை காத்திருந்தாள்.

“ஹலோ.”

“ஆன்ட்டி நான் ராதா பேசுறேன்.”

“சொல்லு ராதா.”

“எங்கேயும் வெளியே போற ஐடியா இருக்கா ஆன்ட்டி?”

“இல்லைம்மா, வீட்டுல தான் இருக்கேன். நீ வர்றியா?”

“வரட்டுமா?”

“இதென்ன கேள்வி? ஃப்ரீயா இருந்தா வரவேண்டியது தானே.”

“அர்ச்சனாவும் இன்னைக்கு வர லேட்டாகுமாம். தனியா இருக்க என்னமோ மாதிரி இருக்கு. அதான் வீட்டுக்கு வரலாமேன்னு யோசிச்சேன்.”

“இவ்வளவு விளக்கம் எதுக்கு ராதா? கிளம்பி வாம்மா.”

“ஆன்ட்டி! என்ன வாய்ஸ் கொஞ்சம் டல்லா இருக்கு?”

“நேத்து நைட் ல இருந்து கை வலிக்குதும்மா.”

“பாரமா ஏதாவது தூக்கினீங்களா?”

“இல்லையேம்மா. சரி நீ கிளம்பி வாடா. வந்து பேசிக்கலாம்.” 

“சரி ஆன்ட்டி.” அழைப்பைத் துண்டித்தவள் அடுத்த பதினைந்தாவது நிமிடம் அபராஜிதன் வீட்டில் இருந்தாள். நேரம் போவதே தெரியாமல் ஆத்மிகாவோடு விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டில் யாரும் இல்லாதது வேறு வசதியாகிப் போனது. 

ஆனால் சுஜாதா தான் கொஞ்சம் டல்லாகத் தெரிந்தார். வழமை போல அன்று அவளோடு பேசவும் இல்லை. கையில் டீயோடு வந்தவரை ஆழ்ந்து பார்த்தாள் ராதா. முகத்தில் வலியின் சாயல்.

“ஆன்ட்டி! என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” ராதா கேட்டுக் கொண்டிருக்கும் போதே சுஜாதாவின் முகம் வலியில் கசங்கியது. சட்டென்று அவர் கையிலிருந்த ட்ரேயை வாங்கியவள் அதை மேஜை மேல் வைத்தாள்.

“ஆன்ட்டி! என்ன பண்ணுது? ஆன்ட்டி! ஆன்ட்டி!” கண்கள் சொருக சோஃபாவில் சாய்ந்தவரின் முகத்தில் படபடவென அடித்தாள் ராதா.

“ராதா… நெஞ்சு… நெஞ்சு சுருக்குன்னு… வலிக்குது.”

“ஐயையோ! ஆன்ட்டி!”

“ஆம்பியூலன்ஸுக்கு… கால் பண்ணு…” தட்டுத் தடுமாறிப் பேசினார் சுஜாதா. விளையாட்டில் கவனமாக இருந்த ஆத்மிகா இது எதையும் கவனிக்கவில்லை.

“இதோ! இதோ கூப்பிடுறேன் ஆன்ட்டி.” ஓடிப்போனவள் டெலிஃபோன் டைரக்டரியிலிருந்த அந்தப் பிரபலமான ஹாஸ்பிடலை அழைத்தாள். 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆம்பியூலன்ஸ் வந்து விட சுஜாதாவை அவசர அவசரமாக ஏற்றினார்கள். வேலை செய்பவர்களுக்குத் தகவல் சொன்னவள் ஆத்மிகாவையும் தூக்கிக் கொண்டு தானும் ஆம்பியூலன்ஸில் ஏறிக்கொண்டாள்.

வீட்டில் இருப்பவர்களின் ஃபோன் நம்பர் அவளிடம் இருக்கவில்லை. அதனால் யாருக்கும் தகவல் சொல்லவும் முடியவில்லை.

ஆம்பியூலன்ஸில் டாக்டர் ஒருவரும் வந்திருந்ததால் அவசர அவசரமாக ஈஸிஜி எடுத்தார்கள். மானிட்டரைப் பார்த்த போது ராதாவுக்கே பயமாக இருந்தது. க்ராஃப் கொஞ்சம் தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு மாத்திரையை சுஜாதாவின் நாக்கின் அடியில் வைக்கக் கொடுத்தார்கள். கண்ணீரைத் துடைத்தபடி அனைத்தையும் பார்த்திருந்தாள் ராதா.

ஹாஸ்பிடலை அடைந்த போது நேரடியாகவே சுஜாதாவை ஐஸியூ ற்கு கொண்டு போய் விட்டார்கள். ஆம்பியூலன்ஸில் இருந்த டாக்டர் ஏற்கனவே ஹாஸ்பிடலுக்குத் தகவல் சொல்லி இருந்ததால் எல்லாம் ஆயத்தமாகவே இருந்தது.

“மேடம்! இந்த அமௌன்ட்டை கவுன்ட்டர்ல செட்டில் பண்ணிடுங்க.” ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் கவனம் கலைந்தாள் ராதா.

அவள் நீட்டிய காகிதத்தைப் பார்த்த போது ராதாவிற்குத் தலை சுற்றியது. இத்தனை பெரிய தொகைக்கு அவள் எங்கே போவாள்? 

தன்னோடே ஒட்டிக்கொண்டிருந்த ஆத்மிகாவின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தாள் பெண். அபராஜிதனின் நம்பரை சேமித்து வைத்துக் கொள்ளாதது எத்தனை பெரிய தவறென்று இப்போது புரிந்தது அவளுக்கு.

ஐஸியூ ஐ விட்டு வெளியே வந்த டாக்டர் நேராக இவளிடம் தான் வந்தார். 

“பேஷன்ட்டோட வந்தது நீங்க தானே மேடம்?”

“ஆமா டாக்டர்.” கைகள் நடுங்கியது ராதாவிற்கு. அவள் முகத்தைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ…

“பயப்படாதீங்கம்மா, க்ரிடிக்கல் ஸ்டேஜ் இல்லை. ப்ளாக் இருக்கு. ரிமூவ் பண்ண ஸ்டென்ட் போடப்போறோம். உங்களுக்கு ஓகே தானே?” என்றார்.

“ஓகே டாக்டர்.”

“குட்.” சொல்லிவிட்டு மடமடவென உள்ளே மீண்டும் போய்விட்டார் அந்த டாக்டர். 

ராதாவிற்குப் பயம் அப்பிக் கொண்டது. ‘நாம் பாட்டிற்கு ஓகே சொல்லி விட்டோம். ஆன்ட்டி வீட்டிலிருந்து இன்னும் யாரையும் காணலை. வந்தால் என்ன சொல்வார்களோ…’ 

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது ராதாவிற்கு. குழந்தை வேறு இவளை விட்டு ஒரு அங்குலமும் நகர மறுத்தது. அலைபாய்ந்து கொண்டிருந்த அவள் விழிகளில் தூரத்தே அபராஜிதன் வருவது தெரிந்தது.

“அப்பாடா!” வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள். 

கண்களைத் துடைத்தபடி அவள் நகரப்போக கால்களைக் கட்டிக் கொண்டாள் ஆத்மிகா. குழந்தையைத் தூக்கிக் கொண்டவள்,

“ஆத்மிகா! அங்கப் பாருங்க. அப்பா வர்றாங்க. அப்பாக்கிட்டப் போகலாமா?” என்றாள். அப்பா என்றதும் குழந்தை இன்னும் இறுக்கமாக அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டது. அதற்குள் அபராஜிதனே அவர்களிடம் வந்திருந்தான்.

“என்ன ஆச்சு?” பதட்டத்துடன் வந்த அந்த ஆழ்ந்த குரல் இதுவரை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த துக்கத்தைத் தீண்டிப் பார்த்தது. கண்களில் கரகரவென கண்ணீர் வழிய தேம்பினாள் ராதா.

“நான் வீட்டுக்கு வந்தப்போ ஆன்ட்டி கை வலிக்குதுன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறமா… நெஞ்சு வலிக்குதுன்னு…” மேலே சொல்ல முடியாமல் அவள் திணற, ஆன்ட்டி அழுவதைப் பார்த்த குழந்தை தானும் வீறிட்டு அழ ஆரம்பித்தாள்.

அப்போதுதான் ராதாவிற்குத் தான் செய்த மடத்தனம் புரிந்தது. குழந்தைக்கு முன்னால் அழுதால்… பாவம், அது என்னதான் பண்ணும்? கண்களைத் துடைத்துக் கொண்டவள் அனைத்தையும் மறந்து ஆத்மிகாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“அடடா! ஆத்மிக் குட்டி இப்போ எதுக்கு அழுறீங்க? பாட்டிக்கு ஒன்னுமில்லை. அதுதான் இப்போ டாக்டர் அங்கிள் சொன்னாங்க இல்லை. ஒன்னும் ப்ராப்ளம் இல்லைன்னு.”

“நீங்க அழுறீங்க…” அழுகைக்கு நடுவே வந்தது பதில்.

“ஐயையோ! நீங்க பயந்துட்டீங்களா? அது ஒன்னுமில்லைடா. ஆன்ட்டி ரொம்ப நேரமா ஒன்னுமே சாப்பிடல்லையா… ஹங்க்ரி வந்திடுச்சு. அதுதான் அழுதுட்டேன்.”

“ஹங்க்ரி வந்தா நீங்க அழுவீங்களா?”

“ஆமா.” இவர்களைப் பேச்சைக் கலைத்தபடி வந்தார் டாக்டர்.

“ஹேய் அபி!” சற்று உரக்கவே அழைத்தவர் அபராஜிதனை நோக்கிப் புன்னகை முகமாக வந்தார். அபராஜிதனுக்குச் சட்டென்று அவரை இனங்காண முடியவில்லை. 

“டேய் மாப்பிளை… ராஜேஷ் டா!” ஒரு சில கணங்களுக்குப் பிறகே இவன் மூளை எதிரில் நிற்பவனைக் கண்டு கொண்டது.

“ராஜேஷ்! இங்க என்னடா பண்ணுற? சட்டுன்னு பார்த்ததும் என்னால கண்டுபிடிக்க முடியலை மாப்பிளை.”

“இங்கயா?மாடு மேய்க்கிறேன் மாப்பிளை. அது சரி! உள்ளே இருக்கிறது யாரு? அம்மாவா?”

“ஆமாண்டா.”

“பயப்படாத. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. உன்னோட வைஃப் கரெக்ட் டைமுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்க.” அவராகப் பேசியவர் அபராஜிதனோடு பேசியபடி அவனையும் அழைத்துக்கொண்டு தள்ளிப் போய்விட்டார்.

அபியின் விழிகள் ஒரு முறை தீர்க்கமாக ராதாவைத் தொட்டு மீண்டது. சங்கடமாகத் தலை குனிந்து கொண்டாள் ராதா.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவன் நீண்ட நேரமாக இவள் குழந்தையைச் சுமந்திருப்பதைப் பார்த்து குழந்தைக்காகக் கையை நீட்டினான்.

ஆத்மிகா போக மறுத்தாள். ராதாவின் கழுத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டவள் காலிரண்டையும் பெரியவள் இடையோடு பின்னிக்கொண்டாள். அபராஜிதன் பார்வை குழந்தையைத் தவிர்த்து ராதாவையே துளைத்தது.

“இந்த அமௌன்ட்டை… பே பண்ணச் சொன்னாங்க.” கையிலிருந்த பேப்பரை நீட்டினாள் பெண்.

“ம்…” வாங்கிக் கொண்டவன் கௌன்ட்டரை நோக்கிப் போய்விட்டான். அதன் பிறகே நிம்மதியாக மூச்சு விட்டாள் ராதா.

இரண்டு நாட்கள் ஷாஸ்பிடல் வாசத்தின் பின் வீடு திரும்பியிருந்தார் சுஜாதா. கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து சதவிகிதம் அடைப்பு இருந்ததாகவும், இதை இத்தனை நாள் எப்படிக் கவனிக்காமல் விட்டீர்கள் என்றும் டாக்டர் ராஜேஷ் கேட்டாராம். வீட்டுக்கு வந்த பின் அதற்காக தனி ஒரு ஆவர்த்தனம் வாசித்தானாம் அபராஜிதன். சுஜாதா ராதாவிடம் சொல்லிப் புலம்பி இருந்தார்.

‘எனக்கு என்னம்மா தெரியும்? லேசா வலி இருந்துது. வாய்வுக் குணமா இருக்கும்னு நினைச்சுக் கஷாயம் வெச்சுக் குடிச்சேன்.’ சுஜாதா அப்பாவியாகச் சொன்ன போது சிரிப்பு வந்தது ராதாவிற்கு.

சுஜாதாவின் இளைய மருமகள் ராகினிக்கு இப்போது பார்த்து தூரத்து உறவில் ஒரு விசேஷம் வர அம்மாவின் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். அவள் கணவனும் அதைக் கண்டு கொண்டாற்போலத் தெரியவில்லை.

முகத்தில் குழப்பத்தோடு ராதா சுஜாதாவின் முகம் பார்க்கச் சிரித்தார் பெரியவர்.

‘விடு ராதா. எம் புள்ளைக்கே அக்கறை இல்லை. அவ பாவம் என்ன பண்ணுவா?’ 

‘ஆன்ட்டி! நீங்க கவலைப் படாதீங்க. ஸ்கூல் லீவ் போட முடியாது. நான் மார்னிங்கும் ஈவ்னிங்கும் உங்களை வந்து பார்க்கிறேன்.’ இளையவள் சொன்ன போது கையைப் பிடித்துக் கொண்டார் சுஜாதா.

‘எதுக்கும்மா நீ சிரமப்படுத்திக்கிற? என்னால சமாளிக்க முடியும்.’ அவர் எவ்வளவு சொல்லியும் ராதா கேட்கவில்லை. காலையில் ஸ்கூலுக்குப் போகும் முன்பாக ஆத்மிகா வீட்டிற்குச் செல்வாள். கொஞ்சம் விரைவாகச் செல்வதால் இப்போதெல்லாம் காஃபியும், பேப்பருமாக இருக்கும் அபராஜிதனின் தரிசனம் கிடைத்தது. 

காலையில் அவன் முகம் பார்ப்பது அத்தனை ஆனந்தமாக இருந்தது ராதாவிற்கு. ஆத்மிகாவிற்குத் தேவையானவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்தி விட்டு வேலை செய்பவர்களுக்கு சுஜாதா சொல்லும் ஆணைகளைக் கொண்டு சேர்ப்பாள். மதியம் சமையலும் அப்போதே ஆரம்பித்து விடும். 

சுஜாதாவோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பி விடுவாள். ஆத்மிகாவை ஸ்கூட்டியில் அழைத்துக் கொண்டு போகமாட்டாள். இத்தனை செய்த போதும் அதற்கு மட்டும் ஏனோ தைரியம் வரவில்லை.

மாலையில் ஒரு ஐந்து மணி போல மீண்டும் வந்தாள் என்றால் கொஞ்ச நேரம் அங்கே செலவழிப்பாள். எல்லா வேலைகளையும் செயவதற்கு ஆட்கள் இருந்ததால் ஒரு மேற்பார்வை மட்டுமே தேவைப்பட்டது. 

அதிக நேரம் ஆத்மிகாவோடும், சுஜாதாவோடுமே செலவழித்தாள். தாயன்பிற்கு ஏங்கியிருந்த குழந்தை பசை போடாமலேயே அவளோடு ஒட்டிக் கொண்டது.

அன்று வீடு கிளம்பும் போது ஆச்சரியமாக அபராஜிதன் வீடு திரும்பி இருந்தான். அது வழமை அல்ல. காலையில் கிடைக்கும் தரிசனம் மட்டும் தான் ராதாவிற்கு.

இவள் வெளியே செல்லவும் பின்னோடு வந்தவன்,

“மிஸ் ராதா!” என்றான். அன்னியப்படுத்திய அந்தக் குரலில் திகைத்தவள் திரும்பிப் பார்த்தாள்.

“நாளைக்குக் காலையில எஸ்டேட் ஆஃபிஸுக்கு வாங்க. உங்க கூட கொஞ்சம் பேசணும்.” சொல்லிவிட்டு நிற்காமல் உள்ளே போய்விட்டான். ராதா கொஞ்சம் திகைத்துப் போனாள்.

 

error: Content is protected !!