km-9

km-9

9

 

“ஏண்டி வச்சு கொழந்தேளுக்கு எண்ணெய் தேச்சி குளிபாட்ரியோ? பப்பி பாட்டி கீரை ஆய்ந்து கொண்டே கேட்க, 

“முன்னாடி எல்லாம் தேச்சி விட்டுண்டிருந்தேன். இப்போல்லாம் அதுகளே பண்ணிக்கறதுகள். நேக்கும் கை அழுத்தி தேய்க்க முடியல” வச்சு குறைபட்டுக் கொள்ள,

 

“என்ன டீ நீ? தானே தேச்சிண்டா என்னமா இருக்கும்? இன்னிக்கு வெள்ளிக்கிழமை வைஷுவும் லேட்டா தான போவா நான் ரெண்டு பேரையும் உக்காத்தி வெச்சு தேய்ச்சி விடறேன். “

 

“பாட்டி மொதல்ல வைஷுவுக்கு. அவ தான் கிளம்பனும். நான் அப்பறமா குளிக்கிறேன்” அனு வைஷுவை அனுப்ப,

 

மிளகு போட்டு நல்ல சூடாகக் காய்ச்சிய நல்லெண்ணெய் எடுத்து வந்தாள் பப்பி பாட்டி. 

வைஷுவை கொல்லைப்புறத்தில் ஒரு மரப்பலகையில் அமர வைத்து நன்றாக தலையில் தட்டி தட்டி எண்ணெய் தேய்த்தாள்.

 

தலை நுனி முதல் அடி வரை எண்ணெய் ஊற வைத்தாள். 

 

பாட்டியின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வைஷு ஆடிக் கொண்டிருந்தாள். கண்கள் சொருகி சுகமாக மீண்டும் தூக்கம் வந்தது வைஷுவுக்கு. 

அவளை அங்கேயே விட்டுட்டு ஊரிலிருந்து தான் அரைத்துக் கொண்டு வந்த சீயக்காய் பொடியை தன் பையிலிருந்து எடுத்து வந்தாள் பப்பி பாட்டி.

 

அதை அவளிடம் கொடுத்து வெந்நீரில் குளித்து விட்டு வருமாறு சொன்னாள். 

அவள் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லுமுன், 

“வைஷு அனு மாமியாரை மட்டந் தட்ட அருமையான வழி ஒன்னு சொல்றேன்” 

 

வைஷு கையில் இருந்ததை அங்கேயே வைத்து விட்டு பாட்டியிடம் அமர்ந்து ரகசியம் பேச ஆரம்பித்தாள்.

 

“என்ன பாட்டி. சொல்லு சொல்லு” ஆர்வமாக, 

 

“உனக்கு நான் ஒரு பாட்டு சொல்லித் தரேன். அந்த பாட்ட பாடு. அவளுக்கு சரியான பதிலடியா இருக்கும். இது அன்னிக்கு சாப்பாட்டை குறை சொன்னதுக்காக மட்டும் தான். 

அவ பண்ற ஜம்பத்துக்கு அப்பப்ப நான் உனக்கு என்ன பண்ணனும் னு எடுத்து கொடுக்கறேன்.” பாட்டி திட்டம் தீட்டினாள்.

 

“பாட்டா? என்ன பாட்டி, பாட்டுல எப்படி அவா மூக்கை உடைக்கறது.” வைஷு மறுக்க,

 

” அந்தக் காலத்துல மாப்பிளை ஆத்து சம்மந்திக்காராள பாட்டு பாடி தான் கல்யாணத்துல கிண்டல் பண்ணுவா. நலங்கு, ஊஞ்சல், எல்லாத்துக்கும் பாட்டு பாடணும். அதுமாதிரி இதையும் பாடு. அப்புறம் பாரு வேடிக்கைய.” 

 

“சரி நீ ஏதோ சொல்ற. உன்ன நம்பலாமா பப்பி?”

“பப்பி கிட்ட சொல்லிட்டா நீ கவலை இல்லாம இருக்கலாம். நம்மாத்த விட்டுக்கொடுக்க முடியுமா?”

பப்பி பாட்டி ஆத்து பெருமையை காப்பாற்றுவாள் என்று வைஷு குளிக்கச் சென்றாள்.

 

அன்று அனுவிற்கு நலங்கு வைக்க ஏற்பாடு செய்தனர். வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து, பூஜை அறையில் பூ பழம் முதலிய  மங்கள பொருட்களை வைத்து தயார் செய்தாள் வச்சு. 

 

வழக்கம் போல பொன்னம்மா கறிகாய்களை கொண்டு வந்து தர, மாமி அத்தை பெரியம்மா பாட்டி என அனைத்து குடும்பமும் சூழ்ந்தது. 

 

அனைவரும் ஒன்றாக சிரித்து பேசி மகிழ்ந்து சமையல் செய்வதும், ஆளுக்கொரு வேலையாக உதவுவதும், கலகலப்பாக ஆனாது வீடு. 

 

அத்தை மகள், மாமன் மகன் போன்றவர்கள் கூடி, அனுவை கிண்டல் செய்ய தொடங்கினர்.

 

“இந்த அனு ஒரு ஐஞ்சு வருஷம் முன்னாடி பொறந்துட்டா. இல்லனா நானே இவளை கல்யாணம் பண்ணிருப்பேன். அட்லீஸ்ட் இந்த வைஷு வாச்சும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பொறந்திருக்கலாம்” 

அலுத்துக் கொண்டான் மாமன் மகன் கண்ணன் .

 

பாட்டி கொண்டு வந்த கை முறுக்கை சுவைத்து கொண்டிருந்த வைஷு,

“டேய்! உனக்கு டிராயர் போட சொல்லிகுடுத்தவளே நானு. என்னையே நீ கல்யாணம் பண்ணிக்கணுமா” 

 

“வேற பிகர் மாட்டல வைஷு. அட்ஜஸ்ட் பண்ணு  டீ” அவள் முறுக்கில் பாதி வாங்கி உண்டான். 

 

“முறுக்குல வேணா  அட்ஜஸ்ட் பண்றேன்.” வைஷு சிரிக்க, அவளுக்கு ஒரு ஐடியா வந்தது. 

 

இவர்களை வைத்து அரவிந்தை மடக்கலாம் என்று நினைத்தாள்.

 

அவன் இவர்களைக் கடந்து  போகும் போது கிண்டல் செய்வது, அவன் சாப்பிடும் போது பரிமாறாமல்  செல்வது, அவனை அவர்கள் கூப்பிடுவதாகவும் இவர்கள் கூப்பிடுவதாகவும் சொல்லி அலையவிடுவது போன்ற உன்னதமான ஐடியாக்கள் அவள் மூளையைச் சுற்றியது.

சரி டைம் பார்த்து அவனுக்கு என்னவெல்லாம் வெச்சு செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சுடணும். புன்னகை மலர அவள் அமர்ந்திருக்க,

“என்ன டீ வைஷு கனவா?நீயும் நானும் ஜோடியா!” கண்ணன் ஜொள்ளு விட,

 

“போடா அர டிக்கெட்டு” எழுந்து சென்று விட்டாள்.

 

“வைஷு மை லவ் ” கண்ணன் கண்மூடி பேச,

 

“டேய் அவ போய்  அரை நாள்  ஆகுது. வா ஒரு டம்ளர் பாயசம் குடிச்சுட்டு வரலாம்” ஜானகி கூட்டிச்சென்றாள்.

 

“நண்டு சிண்டு கூட நம்மள மதிக்க மாட்டேங்குது.” புலம்பிக்கொண்டே சென்றான்.

 

அனுவை அமர வைத்து ,

அவளுக்கு மஞ்சளும் குங்குமமும் கலந்த கலவையை கால்களில் நலங்கிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து,

 

கையிலும் கன்னத்திலும் காலிலும் சந்தனம் பூசி, உச்சந்தலையில் எண்ணெய் வைத்தனர்.

 

வரிசையாக வச்சு, பப்பி பாட்டி, அத்தை அம்பு, மாமி என பெரியவர்கள் அனைவரும் நலங்கிட,

 

“லட்சுமி கல்யாண வைபோகமே.. நம்ம அனு கல்யாண வைபோகமே

பாவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்திர…

ரவி சோம வர நேத்ர ரமணிய காத்ர”, வைஷு பாட்டு பாட

 

அவளை குளிக்கச் சொல்லி புது புடவை கட்டி வந்ததும் அனைவரும் தலையில் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்தனர்.

 

“நலங்கு நல்ல படியா முடிஞ்சுது அடுத்து பந்தக்கால் நடணும். அதுக்கு முன்ன நீ அப்பளம் இட ஆரம்பி அம்பு” பப்பி பாட்டி வேலை சொல்ல ஆரம்பித்தாள்.

 

ரகு வீட்டில் அனைவரும் சென்று பெண்ணுக்கு கூர புடவை மற்றும் திருமாங்கல்யம் அத்துடன் சேர்ந்த தாலிக் கொடியும் வாங்கினர்.

நாத்தனார் இல்லாததால் அவர்களே விளையாடல் சீர்களும் வாங்கிவிட,

 

அவளுக்கு எடுத்த புடவைகளுக்கான ரவிக்கையை  கொடுக்க பங்கஜம் கிளம்ப, கூடவே அரவிந்தும் கிளம்பினான்.

“வாமா வண்டில கூட்டிண்டு போறேன்” பாச வார்த்தைகள் கூற,

பங்கஜமும் அவனுடன் சென்றாள்.

 

வைஷுவைப் பார்க்க கிளம்புகிறான் என்று அவன் மட்டுமே அறிவான்.

 

தான் வரப்போவதாக முன்னமே போன் செய்து கூறினாள் பங்கஜம். வச்சு அதை பொதுவில் சொல்ல, பாட்டியும் பேத்தியும் கண்ணால் ஜாடை காட்டிக் கொண்டனர்.

 

பப்பி பாட்டி வைஷுவை தனியே அழைத்துச் சென்று,

 

“வைஷு இப்போ எதுவும் பண்ணி வைக்காத. மொதல்ல அவ எப்படின்னு பாக்கறேன்  . அப்பறம் கல்யாணத்துனால பாத்துக்கலாம்” சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

 

“கெடச்ச சான்சை விடுதே இந்த பப்பி” வேறு வழியின்றி தானும் செல்ல,

 

இன்று நலங்கு வைத்ததால் சாப்பாடும் தடபுடலாக இருக்க அவளையும் சாப்பிடச் சொல்லலாம் என்று இருந்தாள் வச்சு.

 

வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க, வாசலில் இருந்த ஜானகி கண்ணன் அனைவரும் பங்கஜத்தை அடையாளம் கண்டு கொண்டு, அவளை உள்ளே அழைக்க, கூடவே வந்த அரவிந்தைப் பார்த்ததும்,

 

“என்னோட பையன் அர்விந்த் கிருஷ்ணா ” என அறிமுகம் செய்தாள் பங்கஜம்.

 

“இவாளாம் அனுவோட கசின்ஸ்” என அர்விந்திடம் சொல்ல,

 

அவனும் ” ஹாய் கைஸ்” என சகஜமாக பேச அங்கேயே அறிமுகப் படலம் நடந்தது. ஜானகி வந்தது முதல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

 

அர்விந்துக்கும் புரிந்தது அவளின் நிலை.  “ஹே ஜானு , நீ என்ன பண்ற” என கண்ணனை விட்டு அவளிடமும் சற்று பேச, அவள் தன்னைப் பற்றி மொத்தத்தையும் கூற ஆரம்பித்தாள்.

பங்கஜம் முன்னே சென்று விட, அரவிந்தன் இருவரோடும் பின்னால் வர,

வைஷு அதிர்ந்தாள். இவன் என்ன இதுங்களோட ஒட்டிக்கிட்டு இருக்கான். நம்ம பிளான் என்ன ஆகிறது.

 

இந்த ஜானகி வேற அவனோட ஈஷிண்டு நிக்கறா,

வைஷுவைக் கண்டதும் அர்விந்த் லேசாகக் கண்ணடிக்க, அவள் முறைத்து விட்டு,

“ஜானகி வா டி இங்க” பல்லைக் கடித்து கத்தினாள்.

 

அவளோ கண்டு கொள்ளாமல் அவனைப் பார்த்தபடி இருக்க,

அதை பார்த்து மெல்ல சிரித்தான் அர்விந்த்.

“அப்புறம் ஜானு, நீ எங்க இருக்க?” என குழையவும்,

 

இவனிடம் அவளை நெருங்க விடுவது தவறு என்று தானே அங்கு சென்று, அவளை இழுத்து வந்தாள்.

“என்ன வைஷு இது, பேசிண்டு இருக்கும்போது இப்படி பாதில கூட்டிண்டு வர, அவர் என்ன நெனச்சுப்பார்?”

 

பின்னால் அவன் கண்ணனோடு வருவது தெரியாமல்,

 

“அவர் என்ன டீ அவரு . ஏன் டீ இப்படி வழியற. சகிக்கல” காட்டமாக கூறினாள்.

 

“நான் ஒன்னும் வழியல்ல. பையன் கொஞ்சம் நன்னா இருக்கானேன்னு பேசினேன்.” ஜானகி அலுத்து கொள்ளாமல் சொல்ல,

“ச்சீ. அவன் என்ன டீ நன்னா இருக்கான்.”

“ஆமா உனக்கு மன்மதனே வந்தாலும் சுமாரா தான் தெரிவான். நீ சாமியாரா தான் போக போற. யாரை பாத்தாலும் புடிக்கலன்னு சொல்லிண்டு. போடி நான் போய் அனுக்கு என்ன என்ன  கலர் பிளவுஸ் எடுத்துண்டு வந்திருக்கான்னு பாத்துட்டு வரேன்” அறையிலிருந்து அவளும் ஓடிவிட,

 

வைஷு அங்கேயே நின்று பொருமிக் கொண்டிருந்தாள்.

“கண்ணன் உன்ன யாரோ கூப்பிட மாதிரி இருக்கே” அர்விந்த் அவனை கழட்டி விட,

அப்டியா எங்க மாமா கூப்பிட்டு இருப்பார் வாழை இலை வாங்க, போயிட்டு வந்துடறேன்” தானே கிளம்பினான்.

வைஷு இருந்த அறைக்குச் சென்றான். அழகாக புடவை அணிந்து பூ வைத்து இருக்க, அவள் அன்று மிகவும் அழகாகத் தெரிந்தாள். அன்று வீடியோ காலில் பார்த்தது போல இருக்க , அவனுக்குள் ஒரு அவள் மீது ஓர் ஈர்ப்பு வரவே செய்தது.

“இன்னிக்கு என்ன சவால் விட வந்த?”

” உன்ன பாக்கணும்னு தோணுச்சு பேபி. அதான் வந்தேன்” அவளின் அருகே சென்று சொல்ல,

 

” உன்ன பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு. அத்திம்பேர் க்கு இருக்கற குவாலிடீஸ்ல பத்து பெர்சன்ட் கூட உனக்கு இல்ல”

 

“உன் கசின் சொன்ன மாதிரி சாமியார் தான் புடிச்சிருக்கு” அவன் அவளைக் கண்டு சிரிக்க,

 

“ஒட்டு கேட்டியா?” இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

 

“ச்சே ச்சே நான் ஏன் ஒட்டு கேட்கணும். நானும் கண்ணனும் பின்னால வந்தோம். நீ எங்களை பாக்கல”

 

“இங்க பாரு என் கசின் கிட்ட லாம் எங்ககிட்ட நடந்துக்கிட்ட மாதிரி நடந்துக்கிட்டேனு தெரிஞ்சுது தொலைச்சிருவேன்” விறல் நீட்டி அவனிடம் எச்சரிக்கை செய்ய,

 அவளது விரலைப் பற்றினான்.

“உனக்கு பொறாமையா இருக்க பேபி? உங்கிட்ட மட்டும் தான் நான் பேசணுமா ? ஓப்பனா சொல்லு. ஐ அம் ரெடி” 

 

“ஐய. எனக்கு பொறாமையா? என் கசின் ஒன்னும் தெரியாதவ, உன்ன மாதிரி ரோமியோ கிட்டேந்து காப்பாத்தணும். அதுக்கு தான்”

 

“ம்ம்ம். அப்படி தெரிலயே. என்கூட அவ பேசிட்டு இருந்தப்ப உன் கண்ணுல லைட்டா பொறாமை பாத்தேன் டியர்”

 

அவளுக்கு கோபம் வர,

அவனே தொடர்ந்தான். 

“என்கிட்ட நீ மயங்கிட்டேன்னு சொல்ற நாள் ரொம்ப தூரம் இல்ல செல்லம்” 

 

“கனவு தான் நீ காணனும்” அனல் வீசியது அவள் முகத்தில்.

“ஆல்ரெடி என் கனவுல நீ தான்”

“ச்சே போ”

 

“இப்படி ஒருத்தர் மேல ரொம்ப கோவப்படற பொண்ணுங்க அப்பறம் அவனை செமயா லவ் பண்ணுவாங்களாம்”

 

“நான் அப்படி இல்ல செமயா அடி குடுத்து அனுப்புவேன்”

 

” கோவம் கொள்வாளே ஒருவள் அவள் மாற

    இறுக்கி அணைத்து விடல்

இந்த குறள் தான் உனக்கு செட் ஆகும்” என அவளை லேசாக அணைத்து விட்டு சென்று விட்டான்.

 

அவன் சொன்னத்தின் அர்த்தத்தை இவள் கிரகிக்கும் முன்னே அது நடந்தும் விட, உடல் படபடக்க அமர்ந்து விட்டாள்.

 

‘கட்டி பிடிச்சனா? இல்ல இல்ல இது ப்ரெண்ட்லி ஹக் தான். இருந்தாலும் எப்படி அவன் பண்ணலாம். எருமைமாடு. கொரங்கு. இப்படி பண்ணா நான் அவன் கிட்ட மயங்கிடுவேனா. நான் யாரு? வைஷு. அவனை எனக்கு பிடிக்காது. எப்பவும்’

 

“வைஷு” வச்சுவின் குறள் கேட்க, சுதாரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

நல்ல பிள்ளை போல பப்பி பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

“வந்து எல்லாருக்கும் சாதம் பரிமாறு” வச்சு அழைக்க,

 

அவளும் மறுப்பேதும் இன்றி அதை செய்தாள்.

 

அவள் பரிமாறும் போது கூட அரவிந்தன் எதையும் காட்டிக் கொள்ள வில்லை.

 

‘ஜென்டில் மேனாம்.’ வைஷு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது அவனைக் காண்கையில்.

 

 

 

error: Content is protected !!