ANRA12
ANRA12
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 12
ஆத்மிகாவின் பதிலில் ராதா பொது இடம் என்றும் பாராமல் அபியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அபிக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை என்றாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தான்.
“ஓ… அப்போ அவங்க தான் உங்க மம்மியா?” நீதிபதியின் கேள்வி தொடர்ந்தது.
“ஆமா.” இது ஆத்மிகா.
“அப்போ ஏன் மம்மிக்கிட்ட இருக்காம ஆத்மிகா ஆன்ட்டிக்கிட்ட இருக்கீங்க?” வாழைப்பழத்தில் லேசாக ஊசியை ஏற்றினார் ஜட்ஜ் அம்மா. இருந்தாலும் இதற்குப் பதில் சொல்லக் குழந்தைக்குத் தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தது.
“ஏன்? உங்களுக்கு மம்மியைப் பிடிக்காதா?”
“பிடிக்கும்.”
“அப்போ மம்மியோட போய் இருக்கீங்களா?” இதை அந்த அம்மா கேட்ட போது ஆத்மிகா சட்டென்று ராதாவைத் திரும்பிப் பார்த்தாள். தலையைக் குனிந்து கொண்டாள் பெரியவள்.
குழந்தைக்கு இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாகவே இருந்தது. ஆனாலும் நீதி தன் கடமையைச் செவ்வனே செய்தது.
“மம்மியை உங்களுக்கு நிறைய பிடிக்குமா?”
“ம்…”
“ஏன் பிடிக்கும்?”
“மம்மி கூட ஒரு க்யூட் பேபி வரும்.”
“ஓ… அதால உங்களுக்கு மம்மியைப் பிடிக்குமா?”
“யெஸ்.” குழந்தையின் முகத்தில் இப்போது ஒரு மலர்ச்சி தெரிந்தது.
ஸ்வரா தன் ஒரு வயதுக் குழந்தையை ஆத்மிகாவைப் பார்க்க வரும் போது அழைத்து வந்திருந்தாள். அதுவரை தன்னை நெருங்கவே விரும்பாத மகள், குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் இறங்கி வரவும் அதையே துருப்புச் சீட்டாகப் பற்றிக் கொண்டாள்.
“சரி, உங்க ஆன்ட்டி பெயரை எனக்குச் சொல்லலையே நீங்க?”
“ராதா ஆன்ட்டி.” குழந்தையின் முகத்தில் வெட்கப் புன்முறுவல் ஒன்று இப்போது தோன்றியது.
“அப்படியா! ராதா ஆன்ட்டியை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா?”
“ஆமா.”
“ஏன் பிடிக்கும்?”
“என்னை ‘ஹக்’ பண்ணுவாங்க. எனக்கு ‘கிஸ்’ குடுப்பாங்க.” குழந்தை பட்டியல் போட்டது.
“ஸோ ஸ்வீட். வேற என்ன பண்ணுவாங்க?”
“நைட்ல ஸ்டோரி ரீட் பண்ணுவாங்க, கேம்ஸ் விளையாடுவாங்க.”
“அதுசரி, ராதா ஆன்ட்டி எதுக்கு உங்க வீட்டுல இருக்காங்க? அவங்க உங்க ஸ்கூல் மிஸ் தானே?”
“ஆமா ஆன்ட்டி. எனக்கும் முதல்ல ராதா ஆன்ட்டியை ஸ்கூல்ல க்ளாஸ் மிஸ்ஸாப் பார்த்தப்போ பிடிக்கலை. ஆனா ஆன்ட்டி ஸோ ஸ்வீட். எங்கிட்ட நிறையப் பேசுவாங்க. ஈவ்னிங் வீட்டுக்கு வந்து எங்கூட விளையாடுவாங்க.”
“அப்போ அப்பா வீட்டுல இருப்பாங்களா?” கேள்வி மிகவும் லாவகமாக வந்தது.
“ம்ஹூம், அப்பா எஸ்டேட் போயிடுவாங்க.”
“அது யாரு சொன்னா உங்களுக்கு?”
“பாட்டி.”
“நீங்க அப்பாவைத் தேடினீங்களா?”
“ஆமா. பாட்டியை கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டேன். எனக்கு அதெல்லாம் விளையாடத் தெரியாது. அப்பாவோடு விளையாடு ன்னு சொன்னாங்க.”
“அப்புறம்?”
“அப்பா எங்கேன்னு கேட்டேன்.”
“அப்போ தான் அப்பா எஸ்டேட்ல இருக்காங்கன்னு சொன்னாங்களா?”
“ஆமா.”
“அதுக்கப்புறம் ராதா ஆன்ட்டி கூட விளையாடினீங்களா?”
“ம்… டெய்லி விளையாடுவோம். ஆனா ஒரு நாள் ஆன்ட்டி வரலை.”
“ஐயையோ! ஏன்? என்னாச்சு ஆன்ட்டிக்கு?”
“தெரிலை… பாட்டி ஃபோன் பண்ணினாங்க. ஆன்ட்டி ஆன்ஸர் பண்ணலை.” குழந்தையின் முகத்தில் சோகம் அப்பிக் கொள்ள ஜட்ஜ் ராதாவைத் திரும்பிப் பார்த்தார். தலையைக் குனிவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்? அபிதான் லேசாகப் புன்னகைத்தவன் ராதாவைத் தோளோடு அணைத்துக் கொண்டான். பழைய கசப்புகளை விழுங்குவது போலிருந்தது அந்தச் செய்கை.
“அப்புறம் என்ன ஆச்சு?”
“நான் ரொம்ப நேரம் அழுதேன்.”
“ம்…”
“பாட்டி அப்பாக்கு ஃபோன் பண்ணினாங்க.”
“அப்பா வந்தாங்களா?”
“ம்… அப்பா வந்து, அழக்கூடாது நான் பேபியை ஆன்டிக்கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.”
“ஆன்ட்டியைப் பார்க்கப் போனீங்களா?”
“ஆமா. ஆன்ட்டியோட ஹாஸ்டலுக்குப் போனோம். போகும் போது அப்பா எங்கிட்ட கேட்டாங்க.”
“என்ன கேட்டாங்க?”
“எனக்கு ஆன்ட்டியை ரொம்பப் புடிக்குமான்னு கேட்டாங்க.”
“நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க?”
“ரொம்பப் புடிக்கும்னு சொன்னேன். அப்போ நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடலாமா ன்னு கேட்டாங்க.”
“ஹை… சூப்பர் இல்லை?”
“ஆமா ஆன்ட்டி. நானும் சூப்பர் னு தான் சொன்னேன். அப்புறம் ராதா ஆன்ட்டி வீட்டுக்கு வந்துட்டாங்க.” மலர்ந்து வாய் மொழிந்தது குழந்தை.
“அதான் ராதா ஆன்ட்டி உங்க கூடவே இருக்காங்க இல்லை? நீங்க ஏன் இன்னும் ஆன்ட்டியை ‘அம்மா’ ன்னு கூப்பிடலை?”
“அப்பாவும் பாட்டியும் சொன்னாங்க. ஆனா ராதா ஆன்ட்டி தான், பரவாயில்லை ஆத்மி குட்டிக்கு எப்படிப் புடிக்குதோ அப்படியே கூப்பிடட்டும் னு சொன்னாங்க.”
“அப்ப சரி. ஆத்மியோட ஸ்கூல்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க மம்மியோட தானே இருக்காங்க? நீங்க மட்டும் ஏன் ஆன்ட்டியோட இருக்கீங்க?”
“…………”
“உங்களுக்கு மம்மியோட போய் இருக்கணுமா?”
“…………”
“மம்மியோட போய் கொஞ்ச நாள் இருக்கீங்களா?”
“…………”
“ஆத்மிக் குட்டிக்கு என்ன தோணுது? இந்த ஆன்ட்டிக்கிட்ட நீங்க தாராளமா சொல்லலாம். மம்மிகூட போய் இருக்கப் போறீங்களா? இல்லை ராதா ஆன்ட்டிக்கிட்ட இருக்கப் போறீங்களா?”
“ராதா ஆன்ட்டி.” குழந்தையின் உதடு பிதுங்கியது.
“மம்மியும் பாவம் இல்லையா? அவங்க கூட கொஞ்ச நாள் போய் இருக்கீங்களா?”
“…………” மௌனமே பதிலாக வந்தது. இருந்தாலும் மறுக்கவில்லை.
“மம்மி கூட கொஞ்ச நாள் போயிருக்கீங்களா?” மென்மையாக இப்போது அழுத்தம் கொடுக்க, பிதுங்கிய உதடு இப்போது வெடித்து அழுதது.
அதுவரை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அங்கிருந்த அனைவரும் இந்தச் சம்பாஷனையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
குழந்தை அழ ஆரம்பிக்கவும் பொறுக்க முடியாமல் ராதா ஓடிப் போய்ச் சின்னவளைத் தூக்கிக் கொண்டாள். ஜட்ஜ் எதுவும் பேசவில்லை. நடக்கும் நாடகத்தை அமைதியாகப் பார்த்திருந்தார்.
ஸ்வராவின் முகத்தில் இப்போது ஒரு அலட்சியப் புன்னகை தான் தோன்றியது. குழந்தையைச் சமாதானப் படுத்தும் ராதாவை ஏளனமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
ராதா குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சமாதானம் பண்ண, அன்றைக்குப் போல இன்றைக்கும் அவளால் குழந்தையின் கனத்தைச் சமாளிக்க முடியவில்லை.
சட்டென்று அபி எழுந்து போய் ராதாவிடமிருந்து ஆத்மிகாவை வாங்கப் போக, அதை மறுத்து ஆன்ட்டியைக் இறுகக் கட்டிக் கொண்டது குழந்தை. ஆனால் அழுகை மட்டும் நிற்கவில்லை.
மதிய வேளை நெருங்கியதால் உணவுக்காக ஒரு சின்ன இடைவேளை கொடுத்து விட்டு ஜட்ஜ் வெளியேறி விட்டார். குழந்தையை ராதா வைத்திருக்க அவளைத் தோளோடு அணைத்தபடி நின்றிருந்த அபியை வெறித்துப் பார்த்தது ஸ்வராவின் கண்கள். தான் தவறிய புள்ளி எதுவென்று தெள்ளத்தெளிவாகப் புரிந்தது ஸ்வராவிற்கு.
விவாகரத்து ஆன கையோடு மனோஜை நிச்சயித்து விட்டார் தந்தை. ஸ்வராவிற்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. மனோஜ் குடும்பத்தினரின் பழக்கவழக்கங்கள் தங்களோடு ஒத்துப் போனதால் எல்லாம் இலகுவாக நடந்து முடிந்தது.
புதிய வாழ்க்கை தான் எதிர்பார்த்த அனைத்து வசந்தங்களையும் அள்ளித் தந்ததால் பழைய வாழ்க்கையையோ அதனால் வந்த சொந்தத்தையோ ஸ்வரா நினைக்கவில்லை. அதனால் ஆத்மிகா மீது பாசம் இல்லையென்று சொல்லிவிட முடியாது. அந்தப் பணக்கார வர்க்கத்திற்கு அதைக் காட்டத் தெரியவில்லை. அதற்காகப் பண்ணும் தியாகங்களின் சுகம் புரியவில்லை.
‘குழந்தை நன்றாக இருக்கிறது.’ இந்தத் தகவல் மட்டும் அந்தத் தாய்க்குப் போதுமானதாக இருந்தது. அதைத் தாண்டி யோசிக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை.
காலம் இப்படியே உருண்டோடியது. ஆனால், அபியின் மறுமணம் அத்தனை கோலாகலமாக நடைபெற்ற செய்தி அவள் காதுகளை எட்டிய போது ஸ்வராவிற்கு ஏதோ பண்ணியது.
அவளைப் பொறுத்த வரை அபராஜிதன் என்ற மனிதன் பணம் படைத்த முட்டாள். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாத ஜென்மம். தன்னைத் தவிர இனி யாரையும் அவன் திரும்பியும் பார்க்கப் போவதில்லை என்ற இறுமாப்புடன் இருந்த மனதிற்கு அபியின் மறுமணம் பெருத்த அடியாக விழுந்தது.
அதுவும் சிம்பிளாக முடிந்திருந்தால் இத்தனை தூரம் ஸ்வரா இறங்கியிருக்க மாட்டாள். ஊரே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நடைபெற்ற அந்தத் திருமணத்தை ஸ்வரா அடியோடு வெறுத்தாள். அம்மா எத்தனை தூரம் அறிவுரை சொன்ன போதும் அவள் கண்களில் ஒன்று அவர்கள் மேல் பதிந்து போனது.
காலம் வரும் வரை காத்திருந்தாள் ஸ்வரா. அபியுடனான அந்தக் கொஞ்ச கால வாழ்க்கையில் அவன் கண்கள் இத்தனை காதலாக அவளைப் பார்த்தில்லை.
அதே கண்கள் இப்போது அந்தச் சாமானியப் பெண்ணின் மேல் காதலைக் கொட்டியபோது ஸ்வராவின் அழகு, அந்தஸ்து, பணம் என அனைத்தும் பயங்கரமாகத் தோற்றுப் போனது. அந்தத் தோல்வியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை மனோஜிடம் இந்தக் காதலைக் கண்டிருந்தால் இத்தனை தூரம் இறங்கியிருக்க மாட்டளோ.
இவள் நீட்டிய கரத்தை அபியின் தம்பி மனைவி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அபியின் ஆதாரம் அந்த ராதா. ராதாவின் ஆதாரம் ஆத்மிகா. இலகுவாகக் காய் நகர்த்தினாள் பெண்.
புதுமணத் தம்பதிகள் விருந்து, விழாக்கள் என்று கொஞ்சம் பிஸியாக இருந்ததால், ஆத்மிகாவை ஸ்கூலுக்கு அழைத்துச் சென்று, மீண்டும் அழைத்து வரும் பொறுப்பு கொஞ்ச நாட்களுக்கு அபியின் தம்பி மனைவிக்கு சுஜாதாவால் வழங்கப் பட்டிருந்தது.
இது ஒன்றே ஸ்வராவிற்குப் போதுமானதாக இருந்தது. ஈஸியாக ஆத்மியை நெருங்கி விட்டாள். முதலில் தயங்கிய குழந்தையும் இயற்கையின் நியதிக்குப் பணிந்தாற் போல தன் வேரை உணர்ந்து கொண்டது. லேசாக நெருங்கியது.
வாய்ப்பைத் தவற விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டாள் ஸ்வரா.
லன்ச் இடைவேளை முடிந்திருக்க மீண்டும் அனைவரும் அந்த அறையில் கூடி இருந்தார்கள். நீதிபதி பேச ஆரம்பித்தார்.
“மிஸ்டர் அபராஜிதன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”
“நோ யுவர் ஆனர்.”
“மிஸஸ் ஸ்வரா தரப்பில் ஆஜரான வக்கீல் ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?”
“யெஸ் யுவர் ஆனர்.”
“யூ மே ப்ரொஸீட்.”
“இது வரை காலமும் மிஸ்டர் அபி எனது கட்சிக் காரருக்கும் உரிமையுள்ள குழந்தையை அவர் வசமே வைத்திருந்தார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அவர் இன்னொரு திருமணம் பண்ணிக் கொண்டதால் குழந்தை இனிமேல் அதன் அம்மாவிடம் இருப்பதுதான் சிறந்தது என்று குழந்தையின் தாயான எனது கட்சிக்காரர் நினைக்கிறார். அதை கனம் கோட்டார் அவர்களிடம் நான் பதிவு பண்ண விரும்புகிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.”
அந்த இடம் மீண்டும் அமைதியாகிப் போனது. தீர்ப்பிற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் எல்லோரும் ஒரு விதப் பதட்டத்தோடே அமர்ந்திருந்தார்கள். ராதா அபியைத் திரும்பிப் பார்த்தாள். கண்களை ஒரு தரம் அழுந்த மூடி அவளை வளைத்திருந்த தோளை லேசாக அழுத்திக் கொடுத்தான்.
“வழக்கு ஆறு வயதுக் குழந்தை சம்மந்தப்பட்டது என்பதாலும் அந்தக் குழந்தையே இங்கு பிரதானம் என்பதாலும் வழக்கை மிகவும் சாதாரண முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தேன். இதில் விசித்திரம் என்னவென்றால் பாடப் புத்தகத்தில் என்றோ நான் படித்த கதை நிஜத்தில் இன்று இங்கு அரங்கேறி இருக்கிறது.” சற்றே இடைவெளி கொடுத்த ஜட்ஜ் ஒரு புன்னகையோடு மீண்டும் ஆரம்பித்தார்.
“இரண்டு தாய்மார்கள். ஒரு குழந்தை. வினோதம் தான். பெற்றவளா? இல்லை வளர்த்தவளா? அதிலும்… இங்கு வளர்த்தவள் என்று சொல்லுவதும் அத்தனை தூரம் பொருந்தாது. ஒரு சில மாதங்களே குழந்தைக்கு அறிமுகமாகி, இப்போது அப்பாவிற்கு மனைவியாக ஆகியிருக்கும் பெண்.”
“எது எப்படியாகி இருந்தாலும் குழந்தையே இங்கு பிரதானம் என்பதால் அதன் வளர்ச்சி, மனநிலை, சந்தோஷம் இவற்றைப் பிரதானமாகக் கொண்டு குழந்தை யாருடன் இருக்கப் பிரியப்படுகிறதோ அவர்களிடமே இருக்க இந்தக் கோர்ட் உத்தரவிடுகிறது.”
“குழந்தையின் விருப்பம் ராதா என்பதால் இனியும் குழந்தை மிஸ்டர் அபராஜிதன் வசமே இருக்க இந்த நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.”
“இருந்தாலும், அன்பையும் பாசத்தையும் வெளிக் காட்டத் தெரியாத காரணத்தினாலேயே ஒரு தாயின் அன்பைப் புறக்கணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. மிஸஸ் ஸ்வரா அவர்கள் விருப்பப்படும் போது, குழந்தையும் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களின் நல்லுறவைப் பேணுவதற்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று மிஸ்டர் அன்ட் மிஸஸ் அபராஜிதனை இந்த நீதிமன்றம் வேண்டிக் கொள்கிறது.”
அத்தோடு அந்த வழக்கை முடித்துக் கொண்டு ஜட்ஜ் எழுந்து செல்ல ராதா அபியின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். ஸ்வரா ராதாவை முறைத்தபடி வெளியே போக அதைப் பார்த்த ராதா அபியைத் திரும்பிப் பார்த்தாள். அபியின் கண்கள் ஆங்காரத்தோடு ஸ்வராவைத் தொடர்ந்து கொண்டிருந்தன.
“நான்… நான் அவங்க கிட்ட பேசட்டுமா?” பயந்த படியே கேட்டாள் ராதா.
“எவங்க கிட்ட?” அபியின் குரலில் வெப்பம் கூடியிருந்தது.
“இல்லை… அவங்களும் பாவம் இல்லையா? ஆத்மியை எப்போ வேணும்னாலும் வந்து…” மனைவி முடிக்கும் முன்னரே அபியின் விழிகள் அவளைக் கோபமாகப் பார்த்தன.
“காருக்குப் போகலாமா?” காட்டமாகக் கேட்டவன் ஆத்மிகாவையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து போய் விட்டான். அவன் நடையில் கூட அவன் கோபம் தெறித்தது.
* * * * * * * * *
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சுஜாதாவிடம் ஒரு ஆட்டம் போட்டான் அபி. வழிநெடுகிலும் ராதாவுடனும் எதுவும் பேசவில்லை. அவள் பேசிய போதும் அதற்கும் பதில் சொல்லவில்லை.
“இந்த வீட்டுல என்ன தான் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?”
“அபி! என்னப்பா ஆச்சு?”
“உங்களை நம்பித்தானே எம் பொண்ணை இங்க விட்டுட்டுப் போனேன். அதுவும் ரெண்டே ரெண்டு நாள். அதைக் கூட உங்களால ஒழுங்காப் பண்ண முடியாதா?” மகனின் பேச்சில் ஆடிப் போனார் சுஜாதா.
அந்த ப்ளாக் ஆடி சர்ரென்று சீறிக்கொண்டு வெளியேற ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார் சுஜாதா.
“என்னம்மா ஆச்சு? ஏன் அபி இப்படியெல்லாம் பேசுறான்?” மாமியாரின் ஆதங்கத்தில் கோர்ட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் ராதா.
“அட ஆண்டவா! எதுக்கும்மா இந்தச் சின்னவன் பொண்டாட்டி இப்படியொரு காரியத்தைப் பண்ணி இருக்கா? நான் அதுங்களுக்கு என்ன குறை வெச்சேன்? நினைச்சா வர்றாங்க நினைச்சாப் போறாங்க. நான் ஏதாவது சொல்லி இருப்பனா?” சுஜாதா புலம்பவும் அவரைச் சமாதானம் செய்தாள் ராதா.
“விடுங்கத்தை. ஏதோ ஒரு கோபத்துல பண்ணிட்டாங்க. இதைப் போய்ப் பேசினா பிரச்சினை தான் வரும். யாரு என்ன பண்ணினாலும் ஆத்மி நம்ம கூட தானே இருக்கா. நமக்கு அது போதும். நீங்க இதையெல்லாம் போட்டு யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.”
மனதில் இருந்த பாரம் தீர்ந்து போக அன்றாட வேலைகளில் ஐக்கியமாகிப் போனாள் ராதா. ஆனால் வெளியே போன அபிதான் இன்னும் வீடு வந்து சேரவில்லை. நேரம் பத்தையும் தாண்டி இருந்தது.
“என்னம்மா, இன்னும் அபி வரலை?”
“ஏதாவது வேலை வந்திருக்கும் அத்தை.” சுஜாதாவை சமாதானம் பண்ணியவள் ஆத்மிகாவையும் தூங்கச் செய்தாள்.
பதினொன்று தாண்டிய பிறகே வீட்டுக்கு வந்தான் அபி. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“சாப்பிடலாமா?” எந்தப் பதிலும் சொல்லாமல் மனைவி பரிமாற உண்டவன் ரூமிற்குள் போய் விட்டான். ராதாவை தன்னோடு சேர்ந்து உண்ணச் சொல்லவும் இல்லை.
ஒரு புன்னகையோடு உண்டு முடித்தவள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு மாடிக்கு வந்தாள். வீடே அமைதியைப் போர்த்திக் கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தது.
ரூம் லைட் ஆஃப் பண்ணி இருக்க பால்கனியில் அவனின் சிகரெட்டுத் தீக்கங்கு கண்சிமிட்டியது. ஒரு இரண்டு நிமிடங்கள் அவனுக்குத் தனிமை வழங்கியவள் தானும் பால்கனிக்குச் சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
“எம் மேல கோபமா?” ராதாவின் குரலில் அந்தப் புறமாகத் தலையைத் திருப்பிக் கொண்டான் அபி. அவன் நாடியைப் பற்றி அந்த முகத்தைத் தன் புறமாகத் திருப்பினாள் ராதா.
“கோபம் வந்தா திட்டணும், இல்லை ரெண்டு அடி வெக்கணும். அதை விட்டுட்டு இப்படிப் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” அந்தக் குரலில் காதல் வழிந்தது.
“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த நாளை நாம கொண்டாட வேணாமா?” அவன் மார்பில் முகம் பதித்து அவள் ஆசையாகக் கேட்க அபி கொஞ்சம் கரைந்து தான் போனான்.
எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கைகள் அவளை அணைத்துக் கொண்டன.
“பேசமாட்டீங்களா?”
“நீங்கதான் பெரிய மனுஷி மாதிரி என்னென்னமோ பேசினீங்களே. அதுக்கப்புறம் நான் பேச என்ன இருக்கு?”
“அப்படி இல்லைங்க. ஒரு தாயோட பாசத்தை நாம என்னைக்கும் உதாசீனம் பண்ணக்கூடாது.”
“ம்ப்ச்… அது பாசமே இல்லை ராதா.”
“இருந்திட்டுப் போகட்டும். காலப்போக்குல அதை ஆத்மி புரிஞ்சுக்குவா. அதை நாம தடுக்க வேணாம்.”
“என்னமோ பண்ணு.”
“பிரியம் இல்லாமலேயா அவங்க கூப்பிட்டதும் போயிருக்கா?”
“நீ வேற! க்யூட்டா ஒரு பேபி இருந்ததுன்னு சொன்னாளா இல்லையா? முதல்ல அதுக்கு நீ வழியைப் பண்ணு. அதுக்கப்புறம் உன்னோட இன்னும் ஒட்டிக்குவா.”
“நான் சீரியஸாப் பேசுறேன். நீங்க கேலி பண்ணாதீங்க.”
“ஏய்! நானும் சீரியஸாத்தான் பேசுறேன்டி. நான் பேசினது உனக்கு கேலி மாதிரித் தெரியுதா?”
“இல்லை… நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.”
“அப்போ எந்த அர்த்தத்துல சொன்னீங்க?”
“ஐயோ!…” அவள் மேலே ஏதோ பேசப்போக அதைப் பாதியிலேயே நிறுத்தியவன்,
“ராதூ… என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடு.” என்றான். அந்தக் குரலும் பார்வையும் ராதாவிற்கு ஏதேதோ கதைகள் சொன்னது.
“ம்ஹூம்…”
“ஏன்?”
“அந்தப் பெயரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”
“அப்போ கூப்பிடு.”
“அது கூப்பிடுற பெயரில்லைங்க. ரசிக்கிற பெயர்.”
“அப்படியா?”
“கிருஷ்ணனோட பெயர் அது. இந்த ராதாக்கு வாய்த்த கிருஷ்ணன் நீங்க. ராதாகிருஷ்ணன் நீங்க.” இதைச் சொல்லும் போது இந்த ஒட்டு மொத்த அண்ட சராசரத்தின் காதலும் அவள் கண்களில் தஞ்சம் புகுந்திருந்தது. அபி வாயடைத்துப் போனான்.
“அந்தப் பெயரை என்னைக் கூப்பிடச் சொல்லாதீங்க அத்தான்.” அவளின் அத்தான் என்ற அழைப்பில் அபிக்கு போதையேறிப் போனது.
“நமக்கு பால்கனி தாண்டி ராசி.” என்றவன் அதன்பிறகு முழுதாக ராதாவை ஆட்கொண்ட கிருஷ்ணனாகிப் போனான். பால்கனிக்குப் பக்கத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை மரம் அவர்களுக்கு சாமரம் வீசியது. இரவும் நிலவும் நகர்ந்து போக அங்கே உறவு உறங்காமல் விழித்திருந்தது.
வசீகரா வனமாலி – என்
வேதனை தீராய் நீ…