t12

t12

காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே …

ஐந்து வருடங்களுக்குப் பின்…

தெலங்காணா மாநிலம், செகந்திராபாத், விக்ரமபுரி…

அதரம் பவுண்டேஷன்… ஆதரவற்றோருக்கான இல்லம்.  சுபாஷ் அங்கு உள்ளவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தப் பொருட்களை, அங்கிருப்போரின் எண்ணிக்கைக் கேற்ப பிரித்துக் கொண்டிருந்தான்.

நந்தகுமார் இல்லத்து நிர்வாகியுடன் உரையாடிக் கொண்டே, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“இல்லத்துல இருக்கறவங்க எல்லாரும் வந்துட்டாங்களா சார்?”

“யாரையும் மிஸ் பண்ணிடாதீங்க. எல்லாருக்கும் அவர் கையால பொருட்களைக் கொடுக்கனும்னு நினைப்பாரு”  என்று தெலுங்கில் உரையாடியபடி, சற்று தூரத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு,  அங்கிருந்த மரத்தில் சாய்ந்தபடி, சுற்றுப் புறத்தைத் தன் பாரவையால் அலசியவாறு நின்றிருந்த ஆகாஷைக் காட்டினான்.

“எல்லாரும் வந்துட்டாங்க சார். இங்க தங்கியிருக்கவங்க, வேலை செய்யறவங்க யாரையும் விடாம அழைச்சிட்டு வந்திருக்கோம் சார்” தெலுங்கில் பதில் கூறினார் அந்த நிர்வாகி.

ஆகாஷ் அருகே வந்த சுபாஷ்,

“எல்லாம் ரெடி ஆகாஷ்.  இப்ப கொடுக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும். அப்புறம் சாப்பாடு போடனும்ல.”

“ஆகாஷ்… எல்லாரும் ஹால்ல கூடியிருக்காங்க, வா  பொருட்களைக் கொடுத்து முடிச்சிட்டு, சாப்பிட அனுப்பலாம்” என்று அழைத்தான் நந்து.

சரி என்று தலையசைத்தவன் அவர்களுடன் நடந்தான். ஒவ்வெருவருக்கும் தலா ஒரு உடை, ஒரு வருடத்திற்குத் தேவையான சோப்பு, தேங்காய் எண்ணெய், ஷாம்பு போன்ற பொருட்கள், ஒரு ஜோடி காலணி,  சிறுவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் அடங்கிய கவரை, இல்லத்து நிர்வாகி பேர் வாசிக்க வாசிக்க ஒவ்வொருவருடைய முகத்தையும் பார்த்துக் கொண்டே கொடுத்து முடித்தான் ஆகாஷ்.

‘இங்கயும் அவ இல்ல…’

அனைவருக்கும் கொடுத்து முடித்து, அவர்களைச் சாப்பிட அனுப்பிய பின், அங்கிருந்த சேரில் தளர்ந்து அமர்ந்தவனின் அருகே வந்தான் நந்தகுமார்.

“மச்சான், தளர்ந்து போகாதடா… கண்டிப்பா கங்காவ கண்டுபிடிக்க முடியும்டா.”

அவன் முகம் தெளியாததைக் கண்டு, “கங்கா  எங்க இருந்தாலும் கண்டிப்பா நல்லா இருப்பாடா. நீ இப்படி வருத்தப் படறது தெரிஞ்சா கண்டிப்பா அவளும் வருத்தப்படுவா” எதைச் சொன்னால் அவன் தெளிவானோ, அதைச் சொன்னதும் நிமிர்ந்து அமர்ந்தான் ஆகாஷ்.

“நான் வருத்தப் படலை மச்சான், எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கனும். அதான் எனக்கு வேணும்”

என்று கூறியவன் நந்துவுடன் உணவருந்தும் இடத்திற்குச் சென்றான்.

மேலும் அங்கு அருகில் இருந்த இரண்டு இல்லங்களுக்கும் சென்று, அங்கிருப்பவர்களுக்குத் தேவையான பொருட்களைத் தந்தவர்கள், ஊருக்குத் திரும்பி காரில் வந்தனர்.

காரில் கணத்த மெளனம்,  இளையராஜா இசையில் சின்னக்குயில் மனதைப் பிழிந்து பாடிக் கொண்டிருந்தார். சுகராகம் என்றும் சோகம்தானே!

“மறந்தால் தானே நினைக்கனும் மாமா…

நினைவே நீதானே நீ…தானே

மனசும் மனசும் இணைஞ்சது மாமா…

நினைச்சுத் தவிச்சேனே நான்தானே.”

 

காரை சுபாஷ் ஓட்டிக் கொண்டிருக்க, நந்து முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான். ஆகாஷ் பின்னிருக்கையில் தலைசாய்த்துக் கண்களை மூடியிருந்தான்.

ஆகாஷை எண்ணி மனம் கணத்துப் போயிருந்தது நண்பர்களுக்கு. ஐந்து வருடங்களாக தொடரும் தேடல்.  தொடுவானம் என்று தெரியாமல், தொட்டுவிடக் கைநீட்டி ஏமாந்து போன குழந்தையின் தேடல்…

கங்கா என்று பெயர் கொண்ட பெண்கள் தங்கியிருப்பதாகத் தகவல் வந்தால், அந்த ஊரில் இருக்கும் அத்தனை ஆதரவற்ற இல்லங்களிலும் போய்ப் பார்த்து விடுவான்.

கண்டிப்பாக எங்கோ ஓரிடத்தில் நலமாக இருக்கிறாள் என்பது உறுதியாக புத்திக்கு தெரிகிறது. ஆனால் அவள் முகத்தை ஒரு முறையாவதுப் பார்த்து, அவளது நலனைத் தெரிந்து கொள் என்கிறது காதல் கொண்ட இதயம்.

தளராமல் தேடிக் கொண்டிருக்கிறான்…

நந்துவின் அலைபேசி ஒலித்தது. பாடலை நிறுத்தியவன் அழைப்பை ஏற்றான்.அபிதான் அழைத்திருந்தாள்.

“ஹலோ… ஒரு போன் கூட போடமாட்டீங்களா? நானும் போன் வரும்னு எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்?”

“அச்சோ… சாரி அபி… இப்பதான் முடிச்சிட்டு கார்ல ஏறினோம். உனக்கு போன் போடுவோம்னு நினைச்சேன், நீ போட்டுட்ட…”

“கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு, இன்னும் இந்த டையலாக்க மாத்தல நீங்க…

சரி, போன விஷயம் என்ன ஆச்சு?”

“ம்ப்ச்…  இங்க இல்ல அபி.”

எதிர்ப்புறத்தில் சற்று நேர அமைதி, “அண்ணா எங்க?”

“பின்னாடி படுத்திருக்கான்.”

அதற்குள் மறுமுனையில்,  “போன என்கிட்ட குடு… அத்த என்கிட்ட குடு…” சுகமான இரைச்சல்.

“ஹப்பா… ராட்சசி… இருடி தரேன்… உங்க மாமா பேசறாங்க”

“ஹலோ… மாமா… எப்ப வருவீங்க?  எங்க அப்பா எங்க?”

“செல்லக்குட்டி, மாமா வந்துகிட்டே இருக்கேன். உங்க அப்பா பின்னாடி உட்கார்ந்து இருக்கான்.”

மழலைக் குரலில் டாண் டாணென்று பேசும் தன் குழந்தையின் குரலைக் கேட்டதும், ஆகாஷின் கரங்கள் போனை வாங்கத் தாமாக நீண்டன.

“இந்தாங்க… உங்க அப்பாட்ட பேசுங்க.”

அலைபேசியைக் காதில் பொருத்தியதும் கேட்ட முத்தச் சத்தத்தில் ஆகாஷுக்கு மனம் நிறைந்து, ஆனந்தப் புன்னகை நெளிந்தது உதட்டில்.

தானும் முத்தமிட்டவன், “ பாப்பு… மிஸ் யூ டா…”

“அப்பா எப்ப வருவீங்க?” தந்தையிடமும் அதே பல்லவியைப் பாடியது சின்னச் சிட்டு.

“நாளைக்கு வந்திடுவேன்டா செல்லம்.”

“கங்காம்மா  பார்த்தீங்களா?”

மகளின் கேள்வியில் மனம் கசிந்தது. கரகரத்தக் குரலைச் சரி செய்து கொண்டு, “சீக்கிரம் பார்த்துடுவேன்டா.”

“அம்மா எங்கடா பாப்பு?”

“அம்மா சாமி பாக்க போய்ட்டு இப்பதா வந்தா. கீழ இருக்கா.  இருங்க அம்மாட்ட தரேன்” என்றபடி ஓடியது சுட்டி.

“அருந்ததீ… அப்பா பேசறா…” என்று மகள் கூவியதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான்.

“அடியேய்… பார்த்து இறங்கு. அம்மாவ பேர் சொல்லி கூப்பிடுற நீ… எல்லாம் அண்ணி தர்ற செல்லம்.”

அபியின் குரல் தேய்ந்து ஒலித்தது கேட்டது அவனுக்கு. அபிக்கு கங்கா மீது சற்று கோபம்தான். அத்தனை பாசமாகப் பழகியும் விட்டுச் சென்றுவிட்டாளே என்று.

அருந்ததியை நினைத்ததும் மனம் கனிந்தது ஆகாஷுக்கு. எத்தனை அருமையான பெண்.

கங்கா சென்றபின் முழுதாக ஆறு மாதங்கள் அவளைப் பைத்தியக்காரனைப் போலத் தேடி அலைந்தவனை அபிதான் தேற்றிக் கொண்டுவந்தாள்.

மகனது நிலையைக் கண்ட மஞ்சுளாவின் உடல்நிலையும் சீர்கெட்டது.

கங்காவின் கடிதத்தை காரணமாகச் சொல்லியும், மஞ்சுளாவின் சீர்கெட்ட உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவனைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பதற்குள் அபியைத் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தான் ஆகாஷ்.

முழுதாக ஒரு வருடம் ஆனது அவனுக்கு, அருந்ததியுடன் இயல்பான குடும்ப வாழ்க்கை வாழ. திருமணமானதிலிருந்து இன்றுவரை அவனைப் புரிந்துகொண்டு, அவன் மீது கரைகாணாக் காதலைக் காட்டும் அவள் மீது இயல்பாக நேசத்தைப் பொழிந்தது அவன்  மனது.

“அருந்ததி… இந்தா … அப்பா பேசறா…”

அலைபேசியை காதுக்கு கொடுத்தவள் மெல்லிய குரலில்,  “ஆகாஷ்…, கங்கா அங்க இருக்காங்களா?”

“ம்ப்ச்…  இல்லமா…”  அவனது குரலில் என்ன கண்டாளோ… ஆறுதலாக, “கண்டிப்பா கிடைப்பாங்க.  நம்பிக்கைய விடாதீங்க”

அவனது பெருமூச்சு மட்டுமே கேட்டது.

“எப்ப வருவீங்க?”

“நாளைக்கு வந்துடுவோம்மா.  அம்மா என்ன பண்றாங்க?”

“கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். பூஜை ரூம்ல இருக்காங்க. நீங்க சாப்பிட்டீங்களா?”

“சாப்பிட்டேன்மா, நீயும் நேரத்தோட சாப்பிடு, அம்மாவையும் சாப்பிட்டு மாத்திரை போடச் சொல்லு.”

“ம்ம்… நீங்க பார்த்து பத்திரமா வாங்க.”

“ ஓகேமா…டேக் கேர்.”

அலைபேசியை அணைத்து நந்துவிடம் கொடுத்தவன், தலையைத் திருப்பி காரின் ஜன்னல் வழியே, வெளியில் ஓடும் மரங்களையும் கட்டிடங்களையும் வெறித்தபடி வந்தான்.

அவனது உள்ளம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கங்கா அவனை விட்டுச்சென்ற நாளுக்குச் சென்றது.

அன்று காலையில் எழுந்த அபி, கங்காவுக்கும் தனக்கும் காபியைக் கலந்து கொண்டு அவளை எழுப்பிவிடச் சென்றாள்.

கங்காவின் அறை வெறுமையாக இருக்கவும் துணுக்குற்றவள், அவளின் உடைமைகளும் இல்லாததைக் கண்டு பதறிப் போனாள். வீடு முழுக்கத் தேடியும் கங்காவைக் காணாமல், அழுது கொண்டே தன் அண்ணனைத் தேடிப் போனாள்.

இரவெல்லாம் தூங்காமல் கங்காவின் மருத்துவ அறிக்கையை நம்பகமான மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றவன், வெகுநேரம் கழித்தே உறங்கியிருந்தான்.

“அண்ணா… மச்சிய காணோம்…”

திடுக்கிட்டு எழுந்தவன், “என்ன சொல்ற அபி?”

அபியின் குரலைக் கேட்டு எழுந்து வந்த மஞ்சுளாவும் காசியும் அதிர்ந்து நின்றனர். அபி அழுகையுடன்,

“ஆமாண்ணா வீடு பூரா தேடிட்டேன், அவங்க இல்ல.”

சட்டென்று காசியைத் திரும்பிப் பார்த்தவன், கொத்தாக அவர் சட்டையைப் பிடித்திருந்தான், “யோவ், மரியாதையா என் கங்கா எங்கன்னு சொல்லிடு… வயசானவன்னு பார்க்க மாட்டேன், கொன்னு புதைச்சிடுவேன் உன்ன…”

அவனது கரங்களைப் பிடித்தவர் அழுகையுடன், “ஐயோ… சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது தம்பி. அவளைக் கொல்லனும்னு பழிவெறியோட சுத்தினவன்தான் நான்,

ஆனா… என்னைக்கு எம்பேத்தி அவளுக்கு வந்திருக்கற நோயப் பத்திச்  சொல்லி, என்னைக் கொன்னு நீங்க பழியேத்துக்க வேணாம் தாத்தா, நானே சீக்கிரம் செத்துப் போய்டுவேன்னு என் கையப் பிடிச்சிட்டுக் கதறி அழுதாளோ, அன்னைக்கே என் அகங்காரமெல்லாம் அழிஞ்சு போச்சு தம்பி.

அவள என்கூடவே கூட்டிட்டு போய், என் கடைசி காலம் வரை அவ பாதத்தை என் கண்ணீரால கழுவி, என் பாவத்தைக் கரைக்கனும்னுதான், இங்க உங்க வீட்டுக்கே வந்தேன்.

ஆனா, உங்க மூலமா எம்பேத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போகுதேன்னு சந்தோஷமாதான்யா இருந்தேன்.

ஐயா… எம்பேத்தி  உன் மேல உசிரையே வச்சிருக்காய்யா. என்னால உனக்கும் உன் குடும்பத்துக்கும் எந்த ஆபத்தும் வந்துரக் கூடாதுன்னுதான் அவ எங்களைப் பார்க்க வந்ததே.”

“அவளுக்கு என்னாச்சுன்னு பாருய்யா…” என்று கதறி அழுதார்.

மஞ்சுளாவும், “பதட்டப்படாம அவ எங்க போனான்னு தேடு ஆகாஷ்.”

உடனடியாக செக்யூரிட்டியிடம் விசாரித்தான். அவருக்கும் எந்தத் தகவலும் தெரியாததால், சிசிடிவி பதிவுகளைப் பார்த்தான். அதில் நள்ளிரவில் கங்கா , செக்யூரிட்டி அசந்த நேரம் வீட்டைவிட்டு வெளியேறுவது தெரிந்தது.

பதற்றமடைந்தவர்கள் அவளுடைய அறைக்குச் சென்று பார்க்க அங்கு வீற்றிருந்தது, அவள் ஆகாஷுக்கு எழுதிய கடிதம். கைகள் நடுங்க அதை எடுத்துப் பிரித்துப் படித்தான்.

‘அன்புள்ள டாக்டர் சார்,

முதல்ல நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க, உங்க யாரையும் பிரிய மனசில்லாமதான் நான் பிரியறேன்.

உங்க எல்லாரோட அன்புலயும் பாசத்துலயும் நனைஞ்சுகிட்டு சுகமா வாழ்ந்திடனும்னுதான் நான் நினைச்சேன். ஆனா என்னைக்கு நீங்க என்னை விரும்புறீங்கன்னு தெரிஞ்சுதோ, அன்னைக்கே உங்களை விட்டுப் போகனும்னு முடிவு பண்ணிட்டேன்.

நீங்க,  நம்ம கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னதும் எனக்கு வேற வழி தெரியல. என்ன மன்னிச்சுடுங்க.

உலகத்துல பூக்குற எல்லா பூவும் பூஜைக்கு போறதில்லை. அதுமாதிரிதான் நானும் பூஜைக்கேத்த பூ இல்ல, எதுக்கும் பயன்படாத காகிதப் பூ.

உங்ககூட இருந்தா கண்டிப்பா என்னை சந்தோஷமா வச்சுப்பீங்க. உலகத்தின் ராணியே நான்தான்னு என்னை ஃபீல் பண்ண வைப்பீங்க. ஆனா அதே சந்தோஷத்தை என்னால உங்களுக்கு கொடுக்க முடியாது. குற்றஉணர்ச்சில நான் செத்துடுவேன்.

காதல்ங்கறது  சந்தோஷத்துல மட்டுமில்ல துக்கத்திலயும் பங்கு போட்டுக்கனும்னு சொன்னீங்க. உண்மைதான், ஆனா காதல் தன்னோட இணையை எப்பவும் சந்தோஷமா வச்சிருக்கனும்னுதான் நினைக்கும். என்னைக் கல்யாணம் பண்ணா உங்களுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது.

தாம்பத்தியம் மட்டும் திருமணவாழ்க்கைக்கு முக்கியமில்லதான் அது எனக்கும் புரியுது. அதைத் தாண்டி எவ்வளவோ இருக்கு, ஆனால் தாம்பத்தியம், சந்ததிகள்  இல்லாத திருமணவாழ்க்கை உயிர்ப்போட இருக்காது.

உங்களுக்கு உலகத்துல இருக்கற எல்லா சந்தோஷமும் கிடைக்கனும். நீங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும் சார். குடும்பம் குழந்தைகள்னு நீங்க முழுமையான வாழ்க்கை வாழ்ந்தாதான் என்னுடைய மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.

நான், உங்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க முடியற தூரத்துலதான் இருப்பேன். நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரிஞ்சாதான் என்னுடைய மீதி காலங்களை, நான் நிம்மதியா கழிக்க முடியும்.

கங்கான்னு ஒருத்தி உங்க வாழ்க்கைல வந்தத மறந்துடுங்க சார். அபிகிட்டயும் மஞ்சும்மா கிட்டயும் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க.

பின்குறிப்பு:

தாத்தாவுக்கு,

இந்த பிறவியில நம்மோட பிறந்த சொந்தங்கள், அடுத்த பிறவியில நம்மகூட பிறப்பாங்களான்னு தெரியாது தாத்தா. அப்படி இருக்கும் போது அவங்க மேல பகையோ, கோபமோ  காட்டறதுல என்ன அர்த்தம் இருக்கு.

நீங்க உங்க கூட என்னை வரச் சொன்னீங்க. அது என்னால முடியாது தாத்தா. உங்ககூட நான் வந்தா, என் சொந்தங்களை நான் இழந்த விதத்தை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்தும். அதையெல்லாம் நான் மறக்க நினைக்கிறேன் தாத்தா.

தெரிந்தோ தெரியாமலோ நீங்க செய்த செயலால எங்க குடும்பமே அழிஞ்சு போச்சு. இப்ப நான் உங்க முன்னாடி இருந்தா, என்னைப் பார்த்து பார்த்து, உங்களுக்கும் குற்றஉணர்ச்சி அதிகரிக்கும் தாத்தா.

நீங்க எனக்காக ஏதாவது செய்யனும்னு நினைச்சா, ஆதரவற்ற எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உரிய மருத்துவமும், பாதுகாப்பும் தரக்கூடிய காப்பகம் ஒன்னு ஏற்படுத்துங்க தாத்தா.

என்றும் உங்கள் நினைவுகளோடதான் இருப்பேன். என்னைத் தேட வேண்டாம்.

__கங்கா.

கண்ணின் ஓரம் நீர்க் கசிய சாய்ந்து அமர்ந்திருந்தவனை எழுப்பிய நந்து.

“ஆகாஷ், இறங்குடா சாப்பிடலாம்.” எங்கோ பார்வையைப் பதித்தவனின் தோள்களை அழுத்தியவன்.

“கங்கா நினைப்புல நீ இப்படி உருகறத அவளே விரும்ப மாட்டா ஆகாஷ்.  இப்ப நீ வாழ்ந்துட்டு இருக்கற வாழ்க்கைதான் உன்னுடையது. கங்கா தொடுவானம் என்னைக்குமே உன்னால தொடமுடியாது.  ரிலாக்ஸ் பண்ணிட்டு சாப்பிட வா”

“எனக்கும் இதெல்லாம் புரியுது நந்து. அவ நல்லா இருக்காளான்னு தெரிஞ்சுக்கனும். நான் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்றதைப் பார்த்து அவ மனசு நிம்மதியடையனும் அவ்வளவுதான். கண்டிப்பா என்னைக்காவது ஒருநாள் அவளைப் பார்ப்பேன்னு நம்பறேன்.”  என்றவன் இறங்கி நந்துவோடு நடந்தான்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். மாடிச் சுவரின் கைப்பிடியைப் பிடித்து நின்றுகொண்டு தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலை கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.

ஒற்றை அறையைக் கொண்ட சிறு வீடு அது. மாடியாகையால் மலைக்காற்று குளிர்ந்து வீசியது. கையில் உள்ள பையைத் தூக்க முடியாமல் தூக்கி வரும் வரதனைக் கண்டதும் ஓடிச்சென்று பையை வாங்கிக் கொண்டாள்.

“குரல் கொடுத்திருந்தா நான் வந்திருப்பேன்ல, நீங்க கஷ்டப்பட்டு தூக்கிட்டு வரனுமா தாத்தா”

“காய்கறிப் பைதான த்தா. கனமெல்லாம் இல்ல. நாளைச் சமையலுக்கு நிர்வாகி குடுத்தனுப்பினாரு.”

தனது தாத்தா தர்மனுக்கு கணக்கு பிள்ளையாக இருந்த வரதன் சிறுவயதில் இருந்தே கங்காவுக்கு பிரியமானவர்.  கங்காவின் தந்தையைப் பார்க்கப் போகும் போதெல்லாம் தன் முதலாளியின் ஆசைப் பேத்தியுடன் நேரம் செலவழிக்காமல் சென்றதில்லை அவர்.

காசி கங்காவைக் கண்டுபிடித்துவிட்டதை அறிந்தது முதல் அவளைக் காப்பாற்ற துடித்துக் கொண்டிருந்தார். அபியின் நிச்சயம் முடிந்த அன்று கங்காவைச் சந்தித்து அவளது உயிருக்கு ஆபத்து இருப்பதைக் கூறி, தன்னுடன் வந்துவிடுமாறும், அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

மறுநாள் ஆகாஷ் , கண்டிப்பாகத் திருமணம் நடக்கும் என்று கூறியதும் அன்றிரவு அவருடன் கிளம்பி வந்தவள் நேராகத் திருவண்ணாமலை வந்து,  வீடெடுத்துத் தங்கி அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சமைத்து தருகிறாள். அவ்வப்போது ஊருக்குச் சென்று வரும் வரதன் அங்கிருக்கும் தகவல்களை அவளிடம் சேர்ப்பிப்பார்.

“தாத்தா ஊருக்கு போய்ட்டு  வந்தீங்களே ஏதும் தகவல் இருக்கா?”

“ம்ம்… போன வாரம், உன் பேர்ல ஆரம்பிச்சாங்கள்ல அந்த ட்ரஸ்ட்டுக்கு நான்காவது ஆண்டுவிழாவாம். ஊருக்கே சாப்பாடு போட்டுச் சிறப்பா செஞ்சிருக்காங்க.

ஆகாஷ் தம்பியும் குடும்பத்தோட வந்திருந்தாராம். காசி ஐயா இன்னும்  படுத்த படுக்கையாதான் கிடக்குறாரு. என்னைப் பார்த்ததும் ஒரு பாட்டம் புலம்புனாரு.

அவரு அம்மா விட்ட சாபம்தான் பலிச்சு போச்சு, அவர் செய்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது,  கண்ண மூடறதுக்குள்ள உன்னைப் பார்த்தாதான்  அவரு ஆத்மா சாந்தி அடையும்னு விடாம புலம்பிட்டு இருக்காரு.

மத்தபடி எல்லாம் நல்லா இருக்காங்க. போன தடவையே ஆகாஷ் தம்பியோட பிள்ளய பார்க்கனும்னு ஆசைபட்டல்ல, இந்தா என் பேத்தி இந்த போனுல போட்டோ பிடிச்சி குடுத்துருக்கா.” அலைபேசியை நீட்டவும் ஆவலுடன் வாங்கினாள்.

ஆகாஷின் அருகே அருந்ததி நின்றிருக்க, இருவரின் பார்வையோ வேறெங்கோ இருந்தது. அருந்ததி கையில் இருந்த துறு துறு குழந்தை கேமராவைப் பார்த்திருந்தது. கெள்ளை அழகாக பார்பி டால் போல இருந்த குழந்தையை கண்களில் நிரப்பிக் கொண்டாள்.

“குழந்தை ரொம்ப அழகுல்ல தாத்தா?”

“ம்ம், ரொம்ப சுட்டியும் கூடவாம். டாண் டாண்னு பேசுதாம். ஸ்ருதின்னு பேர் வச்சிருக்காங்க. கூடவே அபிம்மாவும் அவங்க பிள்ளை யஷ்வந்த்தும் இருக்காங்க பாரு.”

அடுத்தடுத்த புகைப்படங்களில் இருந்த ஆகாஷ், அருந்ததி, ஸ்ருதி, அபி, நந்து, அவர்களுடைய பையன் யஷ்வந்த் , மஞ்சுளா அனைவரையும் பார்த்தவளின் உள்ளம் நிறைந்தது.

“ சரி தாத்தா நான் மதிய சமையலுக்கு தயார் பண்றேன். நீங்க பன்னிரெண்டு மணிக்கு போன் பண்ணி சாப்பாடு எடுத்துப் போக வண்டி வரச் சொல்லிடுங்க.”

நெஞ்சில் நிறைந்த நிம்மதியுடன், வாழும் காலம் வரை மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் பயணத்தை தெடர்கிறாள் கங்கா.

_முடிவுற்றது.

 

.

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!