ANRA9

ANRA9

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 9

அந்த ப்ளாக் ஆடி சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அபராஜிதன் ட்ரைவ் பண்ணிய படியே ராதாவைத் திரும்பிப் பார்த்தான்.

முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை. மறு வீட்டு விருந்திற்குப் போகும் உற்சாகம் அவளிடத்தில் சற்றும் காணப்படவில்லை. அதன் காரணம் அபிக்குத் தெரியும்.

சென்னை போகும் போது ஆத்மிகாவையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போக அவள் வைத்த விண்ணப்பம் அவனால் மறுக்கப்பட்டிருந்தது. அதனால் தான் அம்மணி முகத்தைத் தொங்கப் போட்டபடி உட்கார்ந்திருக்கிறார்.

காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தான்.

“இப்போ எதுக்கு நீங்க இப்படி உம்முன்னு உட்காந்திருக்கீங்க டார்லிங்?” அவன் சமரசப் பேச்சில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ராதா.

“அட! இப்போ எதுக்கு முகத்தைத் திருப்பிக்கிறீங்க? நீங்க என்னோட இப்போ பேசலைனா கார் இந்த இடத்தை விட்டு நகராது.” 

போக்குவரத்திற்குத் தடையில்லாமல் காரை நிறுத்தி இருந்ததால் சிகரெட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு இறங்கினான் அபி.

மனம் லேசாக இருக்கும் போது அந்த ஆறாம் விரல் அவனுக்குத் தேவைப்படும். அப்போது மட்டும் யாரும் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வான்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அடுத்த நாளே மறுவீட்டு விருந்துக்குப் போக வேண்டும் என்று சுஜாதா சொன்ன போதும் திடீரென்று எஸ்டேட்டில் ஒரு மெஷின் பழுது பட்டதால் அவனால் அசைய முடியவில்லை.

வெளிநாட்டிலிருந்து வரவழைக்க வேண்டிய உபகரணம். அதிக விலை என்பதால் அவனே நேரடியாக இருந்து வேலையை முடித்திருந்தான். நேற்றிரவு தான் கொஞ்சம் ஃப்ரீ ஆகியிருந்தான் அபி.

ராதாவின் பெற்றோருக்கு ஏற்கெனவே தகவல் சொல்லி இருந்தான். அவர்களும் புரிந்து கொள்ளவே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போனது. ஆனால் அவர்கள் பெற்றது தான் புரிந்து கொள்ள மறுத்தது.

சுஜாதாவிற்கும் அபி சொல்வதுதான் சரியென்று பட்டது. திருமணம் முடிந்த நாளிலிருந்து ஆத்மிகா ராதாவோடு முன்னை விட அதிகமாக ஒட்டிக் கொண்டது அவருக்கும் அவ்வளவு பிடிக்கவில்லை. 

அவர் மகனைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அவரின் எண்ணம் முழுவதும் ராதா தான் அமர்ந்திருந்தாள். சின்னப் பெண். அவளின்  சந்தோஷமான வாழ்வு தான் அவருக்கு முதன்மையாகப் பட்டது. மற்றதெல்லாம் பிற்பாடுதான்.

முன்பெல்லாம் தன் ரூமிலேயே அடைந்து கிடக்கும் ஆத்மிகாவிற்கு இப்போது அப்படி ஒரு இடம் இருப்பதே மறந்து போனது. இரவில் கூட ஆன்ட்டியோடு தூங்கவே அடம் பிடிப்பாள்.

அபியும் கொஞ்சம் அதற்கு இசைந்து கொடுத்தான். அந்தச் சின்னப் பெண்ணின் ஸ்பரிசம் அவனுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. தன் மகளின் ஆறு வருட வாழ்க்கையில் தன் பங்கு எதுவும் இல்லை என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்.

தான் இத்தனை காலமும் எத்தனை பெரிய சுகத்தை இழந்திருக்கிறோம் என்று அவனுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தூக்கக் கலக்கத்தில் தன் மேல் பொத்தென்று விழும் அந்தக் குட்டிக் காலில் முத்தம் வைக்க அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

தன் தாயைக் கொஞ்சமும் அவனுக்கு ஆத்மிகா ஞாபகப் படுத்தவில்லை. மாறாக ராதா தான் அவள் தாயென்ற பிரமையே அவன் மனதில் தோன்றிவிட்டது.

அப்பா ஆன்ட்டி இருவரையும் இரு புறம் வைத்துக் கொண்டு தூக்கம் வரும் வரை கதை பேசுவாள் ஆத்மிகா. எது எப்படி இருந்த போதும் அவன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அபிக்குத் தெரிந்திருந்தது.

இப்போதெல்லாம் வீட்டிற்கு விரைவாக வரும் மகனைப் பார்த்து சுஜாதாவுமே லேசாக ஆச்சரியப்பட்டார். எஸ்டேட்டில் வேலை ஓடாமல் நேரத்தை நெட்டித் தள்ளி விட்டு அவன் ஓடி வருவது அவருக்கெங்கே தெரியும்? 

புதிதாக அவன் வாழ்வில் கிடைத்த அந்த இரு பெண்களின் அறிமுகமும் அவனை வீட்டுக்கு சீக்கிரமாக இழுத்து வந்தது.

காரை விட்டிறங்கிய அபி டோரை சாத்திவிட்டு அதன் மேல் சாய்ந்து நின்றபடியே சிகரெட்டைப் பற்ற வைத்தான். வாழ்க்கையில் ஏதோ ஓர் பிடிமானம் வந்தாற்போல தோன்றியது. எதெதையோ மறக்க வேலைக்குள் தன் தலையைப் புகுத்திக் கொண்ட காலம் காணாமற் போயிருந்தது.

அந்த நொடியை அனுபவித்தவன் புகையை ஆழ்ந்து இழுத்தான். நாடி நரம்பெங்கும் ஏதோ ஒரு சுகம் பரவியது.

தனக்கு முதுகு காட்டி நிற்கும் கணவனைப் பார்த்தாள் ராதா. இந்த ஒரு வார வாழ்க்கையில் அபியின் நடவடிக்கைகள் அனைத்தும் அவளுக்கு ஓரளவு அத்துப்படி ஆகியிருந்தது. காரை விட்டு இறங்காமல் அவள் அமர்ந்திருப்பதற்கும் அது தான் காரணம். 

அவன் தனிமை தேடும் இந்த ஐந்து நிமிடங்களில் அவனை யாரும் தொந்தரவு பண்ணக்கூடாது. உடலுக்குக் கேடு என்று தெரிந்திருந்த போதும் ராதா கொஞ்சம் விட்டுக் கொடுத்தாள். வந்த உடனேயே சட்ட திட்டங்கள் போட அவளுக்குமே பிடிக்கவில்லை.

அத்தோடு அபராஜிதன் தன் தவறுகளில் கூட கொஞ்சம் நியாயமானவனாக இருந்தான். தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தான். 

ராதா கண்மூடி சீட்டில் தலைசாய்த்துக் கொண்டாள். ஆத்மிகா இல்லாதது வருத்தமாக இருந்தாலும் கணவனோடான அந்தப் பயணத்தை அவளுமே ரசித்தாள். 

நடக்கவே நடக்காது என்று தான் நினைத்திருந்த வாழ்க்கை. இன்று அவளைச் சொர்க்கத்தின் வாசலில் நிறுத்தி இருந்தது. 

வெளி உலகுக்கெல்லாம் கொஞ்சம் கடினமாகத் தெரியும் தன் கணவன் தன்னிடம் உருகி வழிவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எஸ்டேட்டில் அவனது கடின முகத்தை, உழைப்பை ராதா இந்த ஒரு வாரத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால் தன்னை நெருங்கும் போது அவன் காட்டும் காதலும் கனிவும் அவனுக்கே உரித்தான அந்த வாசனையும்…

அவள் பக்கக் காரின் கதவு சட்டெனத் திறக்கவும் சிந்தனை கலைந்தாள் ராதா. அவளுக்காக அவன் கைநீட்ட அந்தக் கையைப் பற்றிய படி காரை விட்டிறங்கினாள்.

“என்ன மேடம்? இன்னும் கோபம் போகலையா?” 

“கோபமெல்லாம் இல்லை… சின்ன வருத்தம் தான்.” இப்போதும் பட்டும் படாமலும் தான் வந்தது அவள் குரல்.

“ராது! சொன்னாப் புரிஞ்சுக்கணும். ஆத்மிகா உனக்கும் எனக்கும் ரொம்பவே முக்கியம் தான் இல்லேங்கலை. அதையே நாம உன் வீட்டுலயும் எதிர்பார்க்க முடியாதில்லையா? அத்தைக்கும் மாமாக்கும் நம்ம கல்யாணத்துல ஏற்கனவே ஒரு சின்ன வருத்தம் இருக்கு. இதுல முதல் முதலா அங்க போகும் போது ஆத்மியையும் கூட்டிக்கிட்டு போனா நல்லா இருக்காதுடா. இது வரைக்கும் நான் எப்படீன்னு எனக்குத் தெரியாது. ஆனா இனிமே நான் எது பண்ணினாலும் அதுல நம்ம மூணு பேரோட நன்மையும் இருக்கும். அதை நீ புரிஞ்சிக்கணும்.”

“ம்… சரிங்க.” அமைதியாக அவனை ஏற்றுக் கொண்டாள் ராதா. அவனின் ‘ராது’ என்ற அழைப்பு அவளை என்னவோ பண்ணியது. தலையைக் குனிந்து கொண்டாள்.

தான் என்ன சொன்னாலும் அமைதியாக அதை ஏற்றுக் கொள்ளும் அவளின் அந்த இயல்பு அவனை அவள் மேல் மேலும் மேலும் பித்தங் கொள்ள வைத்தது.

“அது என்ன? எப்பப் பார்த்தாலும் ஆத்மி… ஆத்மி… ஏன்? அவங்கப்பாவைப் பார்த்தாப் பாவமா இல்லையா?” அந்தக் குரலில் இருந்த கிறக்கத்தில் திடுக்கிட்டுப் போனாள் ராதா.

“நடு ரோட்டுல நிற்கிறோம்…” விலகப் போனவளைத் தடுத்தவன்,

“அப்போ கார் ஓகே வா?” என்றான்.

“லன்ச்சுக்கு வந்து சேர்ந்திருவோம்னு வீட்டுல சொல்லி இருக்கோம். கிளம்பலாமே…” அவள் கெஞ்சலில் லேசாகப் புன்னகைத்தவன் காரைக் கிளப்பினான். சுகமாக அமைந்தது அந்தப் பயணம்.

*************

ராதாவின் வீட்டைக் கார் நெருங்கிய போது வாசலுக்கே வந்து வரவேற்றார் ரங்கராஜன். மீராவைத்தான் கையில் பிடிக்க முடியவில்லை.

தன் அக்காவின் ஹான்ட்ஸம்மான கணவனை அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லாமல் வளர்ந்த அபிக்கும் அந்தச் சின்னப் பெண்ணின் ஆர்ப்பரிப்பு இதமாகத்தான் இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மகேஷ்வரி,

“மீரா! போதும் நிறுத்து. அத்தான் இவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணி வந்திருக்காங்க. டயர்டா இருக்கும். அவங்களைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு.” என்று ஒரு அதட்டல் போட்டார்.

“ராதா! மாப்பிள்ளையை ரூமுக்குக் கூட்டிட்டுப் போ. குளிக்கிறதுன்னா குளிக்கட்டும். சென்னை வெயில் அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும்.” அம்மா சொல்லவும் அபராஜிதனைப் பார்த்தாள் ராதா. 

“என்ன அத்தை இப்படி வெயில் அடிக்குது? இந்த நேரத்துக்கு வெளியே போறதை நினைச்சும் பார்க்க முடியாது போல இருக்கே?”

“ஆமா மாப்பிள்ளை. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.” இயல்பாக இருந்தது அவர்களின் உரையாடல். ராதா லேசாக ஆச்சரியப்பட்டாள். 

தன் அம்மா இந்தத் திருமணத்திற்கு சம்மதித்திருந்தாலும் முழு மனதாக சம்மதிக்கவில்லை என்று ராதாவிற்குத் தெரியும். ஒரு சின்ன ஒதுக்கத்தை எதிர்பார்த்து வந்தவளுக்கு அம்மாவின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் ராதாவிற்குப் புரியாத விஷயம் என்னவென்றால் மகளின் முகத்தில் மகேஷ்வரி தேடிய சந்தோஷமும் திருப்தியும் அங்கு தேவைக்கதிமாக இருந்தது தான். 

மகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருக்குப் புரிந்தது. அவள் எத்தனை சந்தோஷமாக இருக்கிறாள் என்று. தானாகவே மாப்பிள்ளை மேல் மரியாதை வந்து ஒட்டிக் கொண்டது. இயல்பாகப் பேச முடிந்தது. 

ராதா கணவனை ரூமிற்குள் அழைத்துச் சென்றாள். கொஞ்ச நாட்கள் ஊட்டியில் இருந்ததற்கே தனக்கு இத்தனை கஷ்டமாக இருக்கிறதே! அபியின் நிலைமை எப்படி இருக்கும்? நினைத்தபடியே ஏஸி யை ஆன் பண்ணினாள்.

அவள் பின்னாலேயே வந்தவன் அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். அந்தக் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டவன்,

“டூ டேய்ஸுக்கு நோ டென்ஷன், நோ எஸ்டேட், நத்திங். ஒன்லி ராது… ராது… ராது…” என்றான் கிறக்கமாக.  

“பொண்ணை ப்ளான் பண்ணித்தான் விட்டுட்டு வந்த மாதிரித் தெரியுது.”

“ஹா… ஹா…” அவள் சொன்ன விதத்தில் வாய்விட்டுச் சிரித்தான் அபராஜிதன்.

“எனக்கு ஒன்னு தேவைன்னா அதை எங்கே எப்படி நடத்திக்கணும்னு எனக்குத் தெரியும் டார்லிங். அந்த சாமர்த்தியம் எங்கிட்ட நிறையவே இருக்கு. அதைப் போகப் போக நீங்களே புரிஞ்சுப்பீங்க.” பேசிய படியே அவன் சரசத்தில் இறங்கினான்.

“குளிச்சிட்டு வாங்க. எல்லாரும் வெளியே காத்திட்டிருப்பாங்க.” 

“ம்ப்ச்… குளிக்கலாம்டீ.” சலித்துக் கொண்டவன் பிடியே இறுதியில் வென்றது.

‘மாமியார் வீடு மகா சௌக்கியம்’ என்பது போல அன்றைய நாளை முழுதாக அனுபவித்தான் அபி. மனதுக்கு நிறைவாக இருந்தது. 

சென்னையில் அவர்களுக்கிருந்த வீடுளில் ஒரு சில திருத்தங்கள் செய்ய இருந்ததால் இந்தப் பயணத்திலேயே அதையும் முடித்து விட நினைத்திருந்தான் அபி. அதற்காக இன்னொரு முறை அவனால் பயணம் செய்ய இயலாது. அங்கே போக ப்ளான் பண்ணியவன், 

“ராதா, நீயும் வர்றியா? வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும்.” என்றான்.

“மீரா ஷாப்பிங் போகலாமான்னு கேட்டா…” அவள் இழுக்கவும்,

“சரிடா. நீ மீரா கூடப் போ. இன்னொரு நாள் வீட்டைப் பார்க்கலாம். நானும் கூடிய சீக்கிரமே வந்து உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.” 

“ம்…” மலர்ந்த முகத்துடன் அவள் சொல்ல கார்டை நீட்டினான் அபி.

“என்ன இது?”

“ஷாப்பிங் போகப் போறேன்னு சொன்ன இல்லை. அத்தை, மாமா, மீரா எல்லாருக்கும் வாங்குடா.” 

“எங்கிட்ட பணம் இருக்குங்க.”

“இல்லைன்னு யாரு சொன்னா? இதையும் வெச்சுக்கோ.” அவள் கையில் திணித்தவன் அவள் கன்னத்தில் இதமாக இதழ் பதித்து விட்டுப் போய்விட்டான். 

இத்தனை நாளும் அவளுக்கென மட்டுமே இருந்த அந்த ரூமில் இன்றைய ஒரு பொழுதிற்குள் அவன் வாசமே நிறைந்திருந்தது போல உணர்ந்தாள் ராதா.

ராதாவும் மீராவும் அந்த மாலை ஒரு வழி பண்ணி விட்டார்கள். அவர்கள் அடிக்கடி வந்து போகும் இடமென்பதால் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஐஸ்கிரீம், கான்டி ஃப்ளாஸ் என குழந்தை போலவே மாறிவிட்டாள் மீரா. கடந்த எட்டு மாத காலமாக ஊட்டி வாசம் என்பதால் ராதாவும் தங்கையின் குறும்புகளை நிறையவே மிஸ் பண்ணி இருந்தாள். இருவரும் எந்தத் தங்கு தடையும் இல்லாமல் என்ஜாய் பண்ணினார்கள்.

“எக்ஸ்கியூஸ் மீ!” அந்தக் குரலில் இரண்டு பெண்களுமே திரும்பிப் பார்த்தார்கள்.

“மிஸஸ் ராதா?”

“யெஸ்.” ராதாவின் முகத்தில் குழப்பம் இருந்தது. தங்கையைத் திரும்பிப் பார்த்தாள். அவளுமே ‘உனக்குத் தெரிந்தவர்கள் இல்லையா?’ என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்.” அந்தப் பெண் சொல்ல ராதா சட்டென்று மீராவின் கையைப் பிடித்தாள்.

“நீங்க யாருன்னு இன்னும் சொல்லலையே?” இது ராதா.

“நான் ஸ்வரா!” அந்தப் பெயரில் ஆடிப் போனாள் ராதா.

“அக்கா! நான் அந்த ஷாப்ல நிக்கிறேன். நீ பேசி முடிச்சிட்டு வந்திரு.” எதிரே இருந்த கடையைக் காட்டிய மீரா சட்டென்று நகர்ந்து விட்டாள். போகும் போது ராதாவின் கையை ஒரு தரம் அழுத்திக் கொடுக்கத் தவறவில்லை.

பக்கத்தில் இருந்த கடையில் தான் மீரா நின்று கொண்டிருந்தாள். அக்காவின் மருண்ட முகம் அவளுக்கு அத்தனை நல்லதாகப் படவில்லை. கடையை வலம் வந்தாலும் ஒரு கண்ணை ராதாவின் மேலேயே வைத்திருந்தாள். 

வந்திருந்த பெண்ணைப் பார்த்த போதே மீராவுக்குப் புரிந்தது. பெண் பெரிய இடம் என்று. ஆனால் யாரென்று தான் பிடிபடவில்லை. தனக்குத் தெரியாமல் அதுவும் சென்னையில் அக்காவிற்கு யாரைத் தெரியும்? இல்லையே! நீங்கள் யாரென்று தானே அக்காவும் கேட்டாள். யோசனையை நிறுத்தி விட்டு அவர்களையே பார்த்தாள் மீரா.

அந்தப் பெண் தான் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசப் பேச ராதாவின் முகம் இருண்டு கொண்டிருந்தது. என்ன நடக்கிறது அங்கே? மண்டை வெடித்தது மீராவிற்கு.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் அந்தப் பெண் பேசியிருக்க மாட்டாள். பேச்சை முடித்துக் கொண்டு அவள் அப்பால் போக கடையை விட்டு வெளியே வந்தாள் மீரா.

“யாருக்கா அவங்க?”

“அது… அத்தானுக்குத் தெரிஞ்சவங்க.” சற்றே தடுமாறி விட்டுப் பதில் சொன்னாள் பெரியவள்.

“சரி… அதுக்கு ஏன் நீ இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்குற?”

“மீரா! நாம வீட்டுக்குப் போகலாம்.” பதட்டமாக வந்தது ராதாவின் குரல்.

“அக்கா! என்னக்கா? எவ்வளவு நாள் கழிச்சு இன்னைக்கு வெளியே வந்திருக்கோம். அத்தான் வேற வந்து ஜாயின் பண்ணிக்கிறேன், மூவிக்குப் போகலாம்னு சொன்னாங்க. நீ என்னடான்னா…”

“மீரா ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ. நாளைக்கு வேணும்னா நாம எல்லாரும் திரும்ப வரலாம். இப்போ என்னால முடியாது. வா போகலாம்.”

இவர்களின் வாக்குவாதம் இங்கே போய்க்கொண்டிருக்க அப்போதுதான் வந்து சேர்ந்தான் அபராஜிதன். முடிந்தவரை போன வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டு வந்திருந்தான்.

“என்ன நடக்குது இங்க? ஷாப்பிங் பண்ண வந்திட்டு அக்காவும் தங்கையும் சண்டை போட்டுக்கிட்டு நிக்கிறீங்க?” அந்தக் குரலில் நிஜத்துக்கு வந்தார்கள் இருவரும்.

அபியைப் பார்த்த மாத்திரத்தில் ராதாவின் கண்கள் சட்டென்று குளமாக அதை மறைக்க நினைத்தவள்,

“நான் கார் பார்க்கிங்க்கு போறேன்.” என்று விட்டு விடுவிடுவென நடந்து விட்டாள். திகைத்துப் போனான் அபி. அன்று முழுவதும் அவனோடு இசைவாக நடந்த பெண் இவளில்லையே! 

“அக்கா!” அவளோடு கூடப் போகப் போன மீராவைக் கைப்பிடித்து நிறுத்தினான் அபராஜிதன்.

“மீரா! என்னாச்சு? ஏன் ராதா ஒரு மாதிரியா இருக்கா?”

“அத்தான், இவ்வளவு நேரமும் நல்லாத்தான் இருந்தா. உங்க சொந்தக்காரப் பொண்ணொன்னு வந்து அக்காவோட பேசிச்சு. அதோட இவ அப்செட் ஆகிட்டா.”

“என் சொந்தக் காரப் பொண்ணா? அதுவும் சென்னைலயா?”

“ஆமா அத்தான். பெயர் கூட ஏதோ ஸ்வரான்னு சொன்னாங்க.” அத்தானிடம் ஒப்பித்து விட்டு அவள் ராதாவை நோக்கி ஓட அபியின் வலது கண் லேசாகச் சுருங்கியது. 

முகம் பாறை போல இறுக போகும் ராதைவையே பார்த்த படி நின்றிருந்தான் அபராஜிதன்.

 

error: Content is protected !!