YNM-PF

YNM-PF

9

பிடிவாதம்

அந்த முயல் கூண்டை பார்த்து படுகோபமான கலிவரதன், பரியை நிற்க வைத்து திட்டி தீர்த்துவிட்டார். அவனும் அசராமல் திட்டு வாங்கி கொண்டிருந்தான். ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல்!

எதிரே இருப்பவர்கள் கடுப்பேற்றும் சூட்சமம் அது! அவன் மௌன நிலையில் இருப்பதை கண்டு ரொம்பவும் எரிச்சலடைந்த கலிவரதன், அதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவதென்று அவனை ஏறஇறங்க பார்த்துவிட்டு தலையிலடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.

மகிழினிக்கோ பரி திட்டு வாங்குவதை பார்த்து மனதிற்கு ரொம்பவும் சங்கடமாகி போனது. முயல் குட்டியை எடுத்து வந்ததால்தானே மாமா அவனை கடிந்து கொண்டார் என்ற குற்றவுணர்வு!

அதேநேரம் பரி கொஞ்சமும் அதை பற்றி கவலையில்லாமல் சமையலறையில் நுழைந்து, “ம்மா… ஸ்ட்ராங்கா ஒரு காபி” என்று கேட்க,

தாமரை வருத்தத்தோடு, “இப்ப என்ன பண்ணிட்டன்னு இப்படி உன்னை திட்டிராரு… நேத்துதான் கல்யாணம் ஆன புள்ளை… மருமக வீட்டில இருக்கான்னு கொஞ்சமும் யோசிக்க வேண்டாம்” என்று புலம்பி கொண்டே காபியை போட்டு மகனிடம் கொடுத்துவிட்டு,

“என்னடா கண்ணா! அப்பா பேசணுதுல வருத்தமா?” என்று பரிவாக கேட்டார்.

“அவர் என்ன பேசறன்னு தெரிஞ்சாதானே வருத்தப்பட… நான்தான் அவர் பேசுனத கேட்கவே இல்லையே” என்று பரி தன் காதில் பின்புறம் மாட்டி வைத்திருந்த ஹெட் போனை காட்ட,

“அடப்பாவி! அந்த மனுஷன் பாட்டுக்கு அந்த கத்து கத்திட்டு இருக்காரு” என்று தாமரை மகனை அதிர்ச்சியாக பார்த்தார்.

“அவரை யார் அப்படி கத்த சொன்னது… கோர்ட்ல பேசி பேசி உன் புருஷனுக்கு வாய் ரொம்ப நீளமாயிடுச்சு” என்று அவன் சொல்ல தாமரை,

“டேய்!” என்று மகனின் காதை திருகினார்.

அவன் சிரித்து கொண்டே காபியை குடித்துவிட்டு, “நீயும் பேசாம இதே ஐடியாவை பாஃலோ பண்ணும்மா” என்று சொல்லி கொண்டே சமையலறை விட்டு வெளியே வந்தான்.

“உனக்கு உதைதான் விழ போகுது” என்று தாமரை சொல்ல இதெல்லாம் வெளியே மகிழினி நின்று கேட்டு கொண்டிருந்ததை பரி அறியவில்லை.

மகிழினி படிக்கெட்டில் யோசனையாக நின்று கொண்டிருப்பதை பார்த்து அவன் தன் முகத்தை பாவமாக மாற்றி கொண்டு, “ஏன் மகி… உனக்காக எவ்வளவு திட்டெல்லாம் வாங்குனே… அதுக்கு கம்பன்செட் பண்ற மாதிரி மாமாவுக்கு ஒரு கிஸ் கொடுக்க கூடாதா?” என்று அவள் முகத்தை நெருங்க,

“சீ” என்று அவனை தள்ளிவிட்டவள், “நீங்க எப்படி திட்டு வாங்குனீங்கன்னு அத்தைகிட்ட சொன்னதை நான் கேட்டேன்… சரியான ஃப்ராடு” என்று அவள் முகம் சுணங்கினாள்.

“கேட்டிட்டியா… ச்சே… ஒரு பரிதாப அலையை உருவாக்கி மாமன் உன்னை இம்ப்ரஸ் பண்ணலாம்னு பார்த்தா… வட போச்சே! இட்ஸ் ஓகே… நெக்ஸ்ட் டைம் இதை விட பெட்டரா எதாச்சும் ட்ரை பண்றேன் பேபி” என்று சொல்ல,

“மூஞ்சி… நீங்க எப்படி ட்ரை பண்ணாலும் எனக்கு உங்களை பிடிக்காது” என்று அவனை பார்த்து எரிச்சலாக சொல்லிவிட்டு அவள் படியிறங்கி சென்றுவிட, “பார்க்கலாம் பேபி!” என்று சவாலாக சொல்லி கொண்டே அவன் படியேறி சென்றுவிட்டான்.

ஒரு வாரமாக அவர்களின் இரவும் பகலும் இப்படியான செல்ல  சண்டைகளில்தான் கழிந்தது. அதுவும் இரவானால் விம்புக்கென்று அவளை இழுத்து அணைத்து கொண்டுதான் படுத்து கொள்வான்.

முதலில் அவளுக்கு அது ரொம்பவும் சிரமமாக இருந்தாலும் நாளாக நாளாக அவன் அணைப்பு அவளின் இறுக்கத்தை தளர்த்தி கொண்டிருந்தது. அவள் பெண்மை மெல்ல மெல்ல அதை ரசிக்க தூண்டியது. ஆனால் அவன் மீதான கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த உணர்வுகளை தள்ளிவைத்து விடுவாள்.

அன்று பரி வேகமாக வீட்டிற்கு வந்து தன் அன்னையிடம் மகிழினி எங்கே என்று கேட்க, “அவ மேல ஃபோன் பேசிட்டு இருக்கா” என்றார்.

பரி தன்னறைக்குள் நுழையவும் மகிழினி தன் பேசியில் பேசி கொண்டே அவனை முறைத்து பார்த்துவிட்டு திரும்பி அமர்ந்து கொள்ள, “மகி கிளம்பு… கொஞ்சம் வெளியே போகணும்” என்று சொல்ல,

அவள் அவன் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் பேசியில் தன் உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தாள். அவனும் மகி மகி என்று அழைத்து ஒரு நிலைக்கு மேல் கடுப்பாகி அவள் பேசியை வாங்கி அதன் திரையை பார்த்துவிட்டு, “அத்தை நாங்க கொஞ்சம் வெளிய போறோம்… நீங்க அப்புறம் பேசுங்க” என்று அழைப்பை துண்டித்தான்.

“கொஞ்சம் கூட அறிவே இல்லயா உங்களுக்கு”

“ஹ்ம்ம்… எனக்கு இல்ல… உனக்கு இருந்தா கொடு” என்று எள்ளலாக அவன் பதில் சொல்ல அவள் தலையிலடித்து கொண்டு, “உங்க கிட்ட பேசறதே வேஸ்ட்” என்று சொல்லி அவள் வெளியே செல்ல பார்க்கவும்,

“மகி… டிரஸ் மாத்திட்டு கிளம்பு… வெளியே கிளம்பணும்” என்று அவள் கரத்தை அழுத்தி பிடித்து கொண்டான்.

“நான் வரல… என் கையை விடுங்க” என்றவள் சொல்ல, “அப்படியா… அப்புறம் இன்னைக்கு நைட் எதாச்சும் எடாகுடாம நடந்திரும்.. அப்புறம் நீ என்கிட்ட கோவிச்சிக்க கூடாது” என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு அவள் கரத்தை விட, “மிரட்டிறீங்களா?” என்று திரும்பி அவனை முறைத்தாள்.

“எப்படி வேணா வைச்சிக்கோ” என்றவன் தோள்களை குலுக்கி விஷமமாக சிரித்துவிட்டு அவன் அறையை விட்டு வெளியே செல்ல, அவளுக்கு கிலி பற்றி கொண்டது. அவன் செய்தாலும் செய்வான் என்று யோசித்துவிட்டு, பின் அவள் உடைமாற்றி கொண்டு அவனோடு கிளம்பினாள்.

ஆனால் அவள் முகத்தை தூக்கிவைத்து கொண்டு அவனுடன் காரில் வரவும் அவன் காரை இயக்கி கொண்டே, “என் டால் இப்படியிருந்தா அழகாவே இல்லயே… கொஞ்சம் ஸ்மைல் பண்ண கூடாதா?” என்று கேட்க,

அவள் இன்னும் கடுப்பாக முகத்தை மாற்றி கொண்டாள். அவன் ஏக்கபெருமூச்செறிந்துவிட்டு இறங்க வேண்டிய இடத்தில் காரை நிறுத்திவிட்டு, “இறங்கு மகி” என்று சொல்ல,

“எங்கே?” என்று கேட்டாள்.

“இறங்கு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு பரியும் காரை விட்டு இறங்க அவளும் அவனோடு இறங்கினாள். அது ஒரு கல்லூரி வாயில். அவனை அவள் குழப்பமாக பார்க்க அவன் முன்னே நடந்து சென்று கொண்டே, “வா மகி” என்றான்.

அவளும் உள்ளே செல்ல அப்போது பரி ஒரு அலுவலக அறைக்குள் நுழைந்து, அந்த தலைமை பொறுப்பாளரிடம் அவன் பேசியவற்றை கேட்டு வியப்பில் ஆழ்ந்தாள்.

“இந்த ஃபார்ம்ல ஒரு சைன் போடு மகி” என்றவன் சொல்ல அவள் அவனை புரியாமல் பார்க்க, “போடு” என்றான். அவளும் பதிலேதும் பேசாமல் அவற்றை பார்த்துவிட்டு கையெழுத்து போட்டு கொடுத்தாள். அவன் அதன் பின் சென்று கௌண்டரில் பணம் கட்டிவிட்டு திரும்ப அவள் மௌனமாக நின்றாள்.

அவன் திரும்பி வந்து, “காலேஜ் பிடிச்சிருக்கா… இங்க இதுதான் பெஸ்ட்… நம்ம வீட்டுல இருந்து இதுதான் பக்கமும் கூட” என்றவன் சொல்ல,

“என் சர்டிஃபிக்கேட் எல்லாம்” என்று கேட்டாள்.

“உன் பெட்டியில வைச்சிருந்தியே” என்றவன் சொல்ல, “உங்களை யார் என் பெட்டியை எடுக்க சொன்னது?!” என்று அவனை முறைத்தாள்.

“உன்கிட்ட சொல்லிட்டு செஞ்சா… என்னடி கிக்கு இருக்கு… அதான் கேட்காம எடுத்தேன்” என்று சொல்லி அவள் தோளில் கை போடவும் அவனை தள்ளிவிட்டு நகர்ந்து காரில் ஏறி கொண்டாள்.

அவனும் தன்னிருக்கையில் அமர அவள் அவனை முறைத்து பார்த்து, “இதெல்லாம் ரொம்ப ஓவர் டிராமா வா இருக்கு… நான் ஒன்னும் எல் கே ஜி பாப்பா இல்ல… நீங்க எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சதும் ஈஈன்னு பல்லை காட்டிட்டு வர” என்றாள்.

“சரி… என்ன செஞ்சா உனக்கு என்னை பிடிக்கும்னு சொல்லு மகி” என்றவன் இறங்கிய தொனியில் கேட்க,

“போன எங்க குடும்ப மானத்தை திரும்ப கொண்டு வாங்க… பார்ப்போம்… எங்க அப்பாவும் பெரியப்பாவும் உங்க அப்பா முன்னாடி அசிங்கப்பட்டு நின்னாங்களே… அதை மாத்துங்க பார்ப்போம்” என்று அவனிடம் அழுத்தமாக கேட்டாள்.

“நடக்காததெல்லாம் கேட்டா நான் எப்படிறி செய்ய முடியும்” என்றவன் கேட்க,

“முடியாது இல்ல… அப்போ விடுங்க” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.  அவனால் அதற்கு பிறகு அவளிடம் எதுவும் பேச முடியவில்லை. உண்மையிலேயே அவனுக்கு அவளின் பிடிவாதம் மனதை ரொம்பவும் வருத்தியது. ஏமாற்றமாகவும் இருந்தது.

இருவருக்கும் இடையிலான உறவு அத்தனை சுமுகமாக இருக்கவில்லை. இந்த ஏமாற்றத்தில் பரியும் அவளிடம் இயல்பாக பேசவில்லை. இந்நிலையில் அவனின் அலுவலக வேலைகள் வேறு அவனை  உள் இழுத்து கொள்ள அவனுக்கு மகிழினியோடு நேரம் கழிக்க முடியவில்லை. அவளும் கல்லூரி போக தொடங்கியிருந்தாள். படிக்கிறேன் பேர் வழியென்று அவனிடம் பேசுவதை தவிர்த்துவிடுவாள்.

இந்த சூழ்நிலையில் வசந்தாவும் சுசீந்திரனும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

“பசங்கள விருந்துக்கு அழைச்சிட்டு போகலாம்னு” என்று வசந்தா தயங்கி தயங்கி சொல்ல கலிவரதன் தாமரையை முறைத்துவிட்டு,

“நான் அந்த வீட்டு பக்கம் வர மாட்டேன்” என்று வீம்பாக சொல்ல, அங்கேதான் பரியும் மகிழினியும் நின்று கொண்டிருந்தனர்.

மகிழினிக்கு கலிவரதனின் வார்த்தைகள் பரியின் மீதான கோபத்தையே அதிகப்படுத்தியது.

வசந்தாதான் கெஞ்சலாக, “இப்படி சொன்னா எப்படி? எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு… அதுவுமில்லாம என் பொண்ணு என்ன தப்பு செஞ்சா?” என்று கேட்க, கலிவரதன் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசனையாக மேலும் கீழும் பார்த்தார்.

அதன் பின் அவரே, “இரண்டு நாள்தான்…. கூட்டிட்டு போங்க… ஆனா நானும் என் பொண்டாட்டியும் வர மாட்டோம்” என்றார் முடிவாக. தாமரை பெருமூச்செறிந்தார். இந்தளவுக்கு அவர் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்றிருந்தது தாமரைக்கு!

கலிவரதன் பேசி விட்டு உள்ளே சென்றுவிட சுசீந்திரன் பரியிடம், “எங்க கார்லயே நீங்களும் மகிழினியும் வந்துருங்க மாப்பிள்ளை!” என்று மாப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அவர் அழுத்தம் கொடுக்க, அவரை ஆழ்ந்து பார்த்துவிட்டு,

“நாங்க பின்னாடி எங்க கார்ல வரோம் மாமா” என்றான்.

மகிழினி தன் வீட்டிற்கு போகும் ஆர்வத்தில் புறப்பட்டு கொண்டிருக்க அவன் விருப்பமே இல்லாமல் கிளம்பி கொண்டிருந்தான்.

அவர்கள் கார் முன்னே செல்ல பரியும் மகிழினியும் பின்னே சென்று கொண்டிருந்தனர். பரி காரை ஒட்டும் போது அவன் கைபேசி அழைக்க அதனை கையிலெடுக்கும் போது தவறி கீழே விழவும் அதனை மகிழினி எடுத்து கொடுத்தாள்.

அதில் ஒளிர்ந்த எண்ணை கவனித்த

பரி, “உங்க அக்காதான்… எடுத்து பேசு” என்றான்.

அவனை கோபமாக பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள். தமக்கையின் மீதிருந்த கோபம் அவளுக்குள் இருந்த ஆற்றாமை எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு அவள்,

“நான் மகி பேசுறேன்” என்றாள்.

“மகி” என்று சௌந்தர்யா ஆவல் ததும்ப அழைக்க அவள் குரல் தழுதழுத்தது.

“என் பேரை கூட சொல்லாதே” என்று கோபமாக பொங்க,

“நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு மகி” என்று சௌந்தர்யா நிதானமாக எடுத்துரைக்க,

“என்ன சொல்ல போற… நீ செஞ்சதை நியாயப்படுத்த போற… எனக்கு அதை கேட்க வேண்டாம்… என்ன நியாயம் சொன்னாலும் நீ செஞ்சது தப்புதான்… நம்ம குடும்ப கௌரவம் பெரியம்மா பெரியப்பா யாரை பத்தியும் நீ யோசிக்கல… கடைசி நிமஷம் வரைக்கும் இப்படி நம்ப வைச்சு கழுத்தை அறுத்திட்டியே க்கா… சத்தியமா இப்பவும் என்னால நம்ப முடியல நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருப்பேன்னு” என்றவள் பொரிந்து தள்ளினாள்.

பரி கோபமாகி, “என்னடி குடும்ப கௌரவம்… குடும்ப கௌரவம்னு ஓவரா சீனை போட்டுட்டு இருக்க… உங்க ஊர்லயே நீங்க மட்டும்தான் குடும்பமா… உங்க அப்பனும் பெரியப்பனுக்கும் மட்டும்தான் மரியாதை மத்த மண்ணாங்கட்டி எல்லாம் இருக்கா?” என்றவன் காட்டமாக கேட்க,

“வேண்டாம்… இதுக்கு மேல பேசாதீங்க” என்று மகிழினி அவன் புறம் சீற்றமாக திரும்பினாள்.

“உங்க அக்கா விஷயத்துல என்ன நடந்தது முதல தெரிஞ்சிட்டு பேசு” என்றவன் சொல்ல அவள் அவனை மௌனமாக பார்த்தாள்.

“காலேஜ் ஃப்ரஸ்ட் இயர்ல உங்க அக்கா கூட படிச்ச ஸ்டூடன்ட்… பேரு சௌந்தர்… ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பேரு… தெரியாம உங்க அக்கா புக் அவர் கிட்ட போயிடுச்சு… அதை திருப்பி கொடுத்த போது ரெண்டொரு வார்த்தை பேசனது ஒரு குத்தமா? அந்த பையன் கீழ் சாதிங்கற காரணத்துக்காக உங்க அப்பனும் பெரியப்பனும் ஓவர் ரியாக்ட் பண்ணி அந்த பையனோட படிப்பை கெடுத்து குடும்பதையே உங்க ஊரை விட்டு துரத்தி விட்டுட்டாங்க… சௌந்தர் சென்னை வந்து காலேஜ் சேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டுதான் படிச்சிருக்காரு…

உங்க அக்காவுக்கு இந்த விஷயத்துல ரொம்ப கில்டி… பேஸ் புக்ல சௌந்தரோட ஐடியை ரெண்டு வருஷமா தேடி புடிச்சு மன்னிப்பு கேட்டிருக்காங்க… முதல சண்டை கோபம் அதுக்கப்புறம் அவங்களையே அறியாம ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க…

அதுக்கப்புறம் ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வராதுன்னு ரெண்டு பேரும் ரொம்ப டீசன்ட்டா அவங்க லவை மறந்திறனும்னு முடிவும் பண்ணிட்டாங்க… இதுல வேடிக்கை என்னன்னா சௌந்தர் என் ஆபீஸ்ல  என் டீம்லதான் ஜாயின் பண்ணாங்க… ஒரு தடவை அவரோட போன்ல சௌந்தர்யாவோட போட்டோவை பார்த்து யாருன்னு விசாரிச்சேன்… இப்படி இப்படின்னு மேலோட்டமா அவங்க காதல் கதையை பத்தி சொன்னாங்க…

வாழ்க்கை பூரா நான் சௌந்தர்யாவை நினைச்சிட்டு வாழ்ந்திருவேன்னு சொன்ன போது எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு… ரொம்ப இடியாட்டிக்கா இருந்துது… நான் அந்த விஷயத்தை அப்புறம் விட்டுட்டேன்… ஆனா அதே போல ஒரு போட்டோ என் மெயில் ஐடிக்கு வந்த போதுதான் ஷாக்…

அப்புறம்தான் சௌந்தர்யாவை பத்தி தெரியும்… அவங்ககிட்ட போனில் பேசும் போது சௌந்தர்யாவும் சௌந்தர் சொன்னதையே சொன்னாங்க… ஆனா அப்பவும் குடும்பத்தை எதிர்த்து எதுவும் செய்யணும்னு  அவங்க ரெண்டு பேருமே நினைக்கல

நான்தான் அவங்கள கன்வின்ஸ் பண்ணி இந்த பிளானுக்கு அக்செப்ட் பண்ண வைச்சேன்… உன் தில்லாலங்கடி அப்பனையும் பெரியப்பனையும் ஏமாத்தி அவங்க ரெண்டு பேரையும் சேஃபா இந்த நாட்டை விட்டே அனுப்பிவிட்டுடேன்… தலையால தண்ணி குடிச்சாலும் உங்க அப்பன் பெரியப்பனால உங்க அக்கா இருக்கிற இடத்தை கண்டுப்பிடிக்கவே முடியாது” என்றவன் தீர்க்கமாக சொல்ல மகிழினி அவன் சொல்வதை அதிர்ச்சியாக கேட்டு கொண்டிருந்தாள்.

“உங்க அப்பனுக்கும் பெரியப்பனுக்கும் இந்த அசிங்கமும் அவமானமும் தேவைதான்” என்று பரி மேலும் சொல்ல,

“போதும்” என்று மகிழினி சொல்லும் போதுதான் தன் கையிலிருந்து பேசியில் சௌந்தர்யா லைனில் இருப்பதை கவனித்தாள்.

மகிழினி மீண்டும் பேசியை காதில் வைத்து, “அக்கா” என்று அழைக்க,

“சாரி மகி” என்றாள் சௌந்தர்யா!

“என்கிட்ட ஏன் இது பத்தி எதுவும் நீ முன்னாடியே சொல்லல?” என்று மகி கண்ணீரோடு கேட்க,

“உனக்கு எந்த பிரச்சனையும் வந்திர கூடாதுன்னுதான் நான் சொல்லல மகி… அப்புறம்” என்று தயங்கியவள்,

“பரி என்கிட்ட உன்னை விரும்புறதை பத்தி என்கிட்ட தனியா பேசுன அன்னைக்கே சொன்னாரு… நான்தான் நீ காலேஜ் இப்பதான் சேர்ந்திருக்க… படிப்பு முடிக்கிற வரைக்கும் வைட் பண்ணுங்கன்னு சொன்னேன்… ஆனா அதுக்குள்ள என்னன்வோ நடந்து போச்சு” என்று சௌந்தர்யா நிறுத்த மகிழினி பரியின் முகத்தை பார்த்தாள்.

“நான் செஞ்சது தப்புன்னு எனக்கு தெரியும்… ஆனா எனக்கு வேற வழி தெரியல… பொய்யா ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு பரி சொன்னா மாதிரி கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் பார்ப்போமேன்னு தோணுச்சு” என்று சௌந்தர்யா சொல்வதை எப்படி எடுத்து கொள்வது என்று புரியாமல் மகிழினி மௌனம் காக்க,

“ஆனா இப்ப என்னோட கவலையே பரிதான்… அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா பரியை என்ன வேணா பண்ணுவாங்க… பரி தினமும் எனக்கும் சௌந்தருக்கும் நல்லா இருக்கீங்களான்னு கேட்டு ஒரு  மெயிலாச்சும்  பண்ணிடுவாரு… ஆனா இரண்டு நாளா மெயில் வரலயா… அதான் நான் பயந்துட்டு கால் பண்ணேன்” என்று சௌந்தர்யா பதட்டத்தோடு சொல்ல மகிழினிக்கு உள்ளுர  பதட்டமானது. அதற்கு பிறகு சௌந்தர்யா பேசியது எதுவும் அவள் மூளையை எட்டவில்லை. பரியை பற்றிய சிந்தனைதான் ஓடி கொண்டிருந்தது.

மகிழினி மெளனமாக பேசியை பரியிடம் கொடுத்துவிட்டாள்.

அவன் பேசி விட்டு அழைப்பை துண்டித்துவிட, மகிழினி ஓர் கனத்த மௌனத்தோடு அமர்ந்திருந்தாள்.

அவளின் அமைதியை கண்ட பரி, “மகி” என்று அழைக்க,

அவள் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அக்காகிட்ட பேசுனதுல அப்செட் ஆயிட்டியா மகி” என்று பரி கேட்கவும், “ப்ளீஸ் கொஞ்ச நேரம் பேசாம வரீங்களா?” என்று சொல்லிவிட்டு முகத்தை தன் கரத்தால் மூடி கொண்டு அமர்ந்திருந்தாள்.

அதன் பின் பரி அவளிடம் எதுவும் பேசிக்கொள்வில்லை. அமைதியாக வந்தாலும் அவன் பார்வை மகிழினி மீதுதான் இருந்தது. வீடு வரும் வரை அவள் அப்படியேத்தான் வந்தாள்.

“மகி வீட்டுக்கு வந்தாச்சு” என்று பரி சொல்லவும் அவள் மிரட்சியோடு நிமிர்ந்து பார்க்க,  “வாங்க மாப்பிள்ளை வா மகிம்மா” என்று அழைத்துவிட்டு சென்றார் வசந்தா!

மகிழினி யோசனையோடு பரியை பார்த்துவிட்டு காரிலிருந்து இறங்க போக பரி அவள் கரத்தை பிடித்து கொண்டு,

“நான் இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் தப்புன்னு ஒத்துக்கிறேன்… அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கூட கேட்டுக்கிறேன்…  ப்ளீஸ் மகி… நான் உன்னை ரொம்ப பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… உன் கூட சந்தோஷமா வாழணும்னு ஆசைபடுறேன்டி” என்று அவன் இறைஞ்சுதலாக சொல்ல,

“கையை விடுங்க… நான் போகணும்” என்று அவன் கரத்தை பிரித்துவிட்டு இறங்கி சென்றுவிட்டாள்.

பரிக்கு கோபமேறியது. “இந்த மாதிரி நான் எவ கிட்டயும் இறங்கி போனதில்ல… ரொம்பத்தான் பண்றா… இதுக்கு மேல நான் என்னத்தான் பண்றது” என்று கடுப்பாகி ஸ்டியரிங்கில் குத்திவிட்டு அப்படியே விரக்தியாக காரிலேயே அமர்ந்து கொண்டான்.

மகிழினி உள்ளே சென்று தன் அறைக்குள்நுழைந்து கொள்ள, “எங்கடி மாப்பிள்ளை?” என்று கேட்ட வசந்தாவிடம், “வருவாரு… நீ எனக்கு ஒரு காபி போட்டுட்டு வர்றியா… தலை வலிக்குது ம்மா” என்றாள்.

“வண்டில வந்த களைப்பா இருக்கும்… இரு போய் எடுத்துட்டு வர்றேன்” என்று வசந்தா சொல்லிவிட்டு செல்ல,

அப்போது மகிழினி மூளைக்குள் சௌந்தர்யா கடைசியாக பரியை பற்றி சொன்னவற்றையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது.

அப்போது வசந்தா காபியோடு வந்துவிட்டு, “எங்கடி மாப்பிள்ளை… காபி குடுக்கலாம்னு போனா ஆளையே காணோம்” என்று விசாரிக்க,

“எங்கம்மா போக போறாரு… இங்கதான் இருப்பாரு” என்று மகிழினி அலட்சியாமாக சொல்ல வசந்தா அவளுக்கு எடுத்துவந்த காபியை கொடுத்தார்.

மகிழினி அதை வாங்கி பருகி கொண்டே, “ஆமா அப்பா எங்கம்மா?” என்று கேட்க,

“வந்ததும் உன் அப்பனும் பெரியப்பனும் என்னவோ பேசிக்கிட்டு இருந்தாங்க… கூட உன் அண்ணனுங்க வேற இருந்தாங்க… அதுவும் ஆளுங்களோட…. இப்ப யாரையும் காணோம்… தோப்பு பக்கம் போயிருப்பாங்க போல… என்னத்தை பண்ணி தொலைக்க போறாங்களோ

நீ அந்த பக்கமெல்லாம் போயிடாதே  மகி… மாப்பிள்ளையும் அந்த பக்கம் போக விடாதே” என்று சொல்லும் போது மகிழினி முகம் குழப்பமாக மாறியது.

தான் பருகி கொண்டிருந்த காபியை அவசரமாக வைத்துவிட்டு பதறி கொண்டு அவள் எழுந்து வெளியே சென்றாள். சுற்றும் முற்றும் தேடலாக பார்க்க பரி எங்கேயும் காணவில்லை. அவசரமாக பின்புற வாயிற் வழியாக அவள் தோப்பிற்குள் நுழையும் போதே இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது. இதே இடத்தில் பரியை முதன்முதலாக பார்த்த நினைவு மின்னலென தோன்றி மறைந்தது.

அவள் அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே நடந்துவர, தூரமாக பேச்சு குரல் கேட்டது. அவள் இன்னும் சிறிது தூரம் உள்ளே நடக்க, எதிரே விமலன் சுசீந்திரனும் அவளின் தமையன்களும் திரும்பி நின்றிருந்தனர். அவர்களுடன் நிறைய ஆட்கள் வேறு சுற்றியிருக்க, தான் தேவையில்லாமல் கற்பனை செய்து பயந்து இங்கே வந்துவிட்டோமோ என்று தோன்றியது.

திரும்பி போய்விடலாமா என்று யோசிக்கும் போதுதான் அவள் இதயத்தை உறைய வைக்கும் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து நின்றாள். அவர்களுக்கு இடையில் பரி உடலெல்லாம் இரத்தம் சிதற, “நீங்க என்னை என்ன பண்ணாலும் சரி…  சௌந்தர்யா இருக்கிற இடத்தை நான் உங்ககிட்ட சொல்ல மாட்டேன்” என்றான்.

அப்போது விமலன் வெறியோடு பெரிய கொம்பில் அவனை தாக்க அப்படியே மண்டியிட்டு பரி கீழே சரிய

இந்த காட்சியை பார்த்த நொடி மகிழினி அழுகுரலோடு, “ஐயோ! மாமாஆஆஆஆ” என்று ஓடிசென்று அவனை தாங்கி கொண்டாள்.

அவன் வாய் வழியாக இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் மனித மிருங்கங்கள் போல் அவர்கள் எல்லோரும் காட்சி தர அசூயையாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “மாமா மாமா” என்று பதறியபடி தன் சேலை முந்தானையால் அவன் முகத்தை துடைத்துவிட்டாள்.

அந்த களேபரத்திலும் பரி அவளை நிமிர்ந்து பார்த்து, “நல்லவடி நீ… நான் மாமான்னு கூப்பிடுன்னு சொல்லும் போதெல்லாம் பிடிவாதமா மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கூப்பிடுறியாடி… மாமான்னு” என்று கேட்க, அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

“மாமா” என்று அழுதபடி அவனை அணைத்து கொண்டாள்.

error: Content is protected !!