Antha Maalai Pozhuthil – 1

Antha Maalai Pozhuthil – 1

                        அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 1
அழகான மாலைப் பொழுது!
                சூரிய பகவான் காலையிலிருந்து அரங்கேறிய பல நடைமுறைகளைப் பார்த்துவிட்டு அஸ்தமித்துக் கொண்டிருந்தார். பல அநியாயங்கள் நடந்தேறினாலும், காதல் என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கும் கூத்தை மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
           சில காதல் கண்ணியமாக இருந்தன. சில காதலின் ஆழத்தில் மயங்கினார். சில காதலைப் பார்த்து சூரிய பகவானும் மெல்லிய வெட்கத்தோடு ரசித்து தன்னை மேகத்திற்குள் மறைத்து சிரித்துக் கொண்டார்.
     ஆனால், எல்லா காதலும் நியாயம் செய்கிறதா? ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிநிகராகக் காதல் அன்பை மட்டும்தான் பொழிகிறதா? பதிலறியா கேள்வியோடு, அவர் உலகின் மறுபக்கத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.
அவர் பயணத்தை உணர்த்தும் விதமாக வானம் செவ்வானமாக மாறிக் கொண்டிருந்தது.  ஆம், அந்த மாலைப் பொழுதில் தான்! பலரின் வாழ்க்கையைச் சூறையாடிய அதே மாலைப்பொழுது தான்!
                                     பசுபதி முறுக்கேறிய மீசையை நீவியபடி, தன் ஜீப்பைச் செலுத்திக் கொண்டிருந்தான். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தான்.
        அவன் கண்களில் ரௌத்திரம். அதன் காரணமாகச் சிவந்திருந்த அவன் கண்கள், அவன் அருகே இருந்த அரிவாளைத் தொட்டு மீண்டது.
         அவனுள் இருந்த கோபத்தின் விளைவாக கிளட்ச், கியர், பிரேக் என அனைத்தும் சுக்கு நூறாக உடைவது போல் உணர்ந்தது. சரேலென்று ஸ்டியரிங்கை திருப்பினான். அவன் கைகளின் நரம்பு புடைத்தது. ஸ்டியரிங், அவன் ஆளுமைக்கு அடங்குவது போல், இசைந்து கொடுத்தது.
     மொத்தத்தில் அந்த ஜீப், அவன் அடக்குமுறையில் அடங்கி அவன் சொற்படி ஓடிக்கொண்டிருந்தது. அனைத்தையும் அடக்குவதில் வல்லவன் இந்த பசுபதி.
       ஆனால், அவனிடம் அடங்காத ஒன்றும் இருந்தது. அது தான். அவன் காதல்!
                              அவன் வண்டியை செலுத்திய வேகத்தில், கோபம் கொண்டு சிலர் விழிக்க, பசுபதி என்றறிந்து, “வணக்கம் அண்ணாச்சி…” என்று பலரும் கை எடுத்துக் கும்பிட்டனர்.
   பசுபதிக்கு வயது பின் இருபதுகளிலிருந்தாலும், மரியாதை கருதி அவனை அப்படியே அவ்வூர் மக்கள் அழைப்பது வழக்கம்.
   அந்த வேகத்திலும், கம்பீரமாகத் தலை அசைத்து, அவர்கள் மரியாதையை உள்வாங்கிக் கொண்டு வண்டியைச் செலுத்தினான் பசுபதி.
         வல்லநாட்டில் ஆரம்பித்த வேகம், பல திருப்பங்களோடு திருநெல்வேலியில் அமைந்திருந்த அந்த திருமண மண்டபத்தின் முன் வந்து நின்றது.
   “சர்…” என்று குதித்து, தன் இடது கையால் கழுத்தை நீவிக்கொண்டு, வலது கையால் அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஒரு எட்டு எடுத்து வைத்தான்.
           அவன் அரிவாள் பிடித்திருந்த வேகத்தில், அழுத்தத்தில்  ‘பல தலைகளை நாம் காவு வாங்கப் போகிறோம்.’ என்று அந்த அரிவாளும் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது.
    திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக, அங்கு ‘ரகுநந்தன் வெட்ஸ் அபிநயா’ என்ற பெயர்ப் பலகை வீற்றிருக்க, அந்த பலகையை உடைத்து எரியும் வேகம் அவனுள் எழுந்தது.
       அந்த அபிநயா, என்ற பெயரை அவன் கண்கள் தழுவும் பொழுது, ‘அத்தான்…’ என்ற அழைப்பு அவன் செவிகளில் விழ, ஒரு எட்டு பின்னே நடந்தான்.
    தன் கைகளில் உள்ள அரிவாளைப் பார்த்தான்.  ‘அத்தான் ஏன் இப்படி பண்ணீக? அதுவும் என் கிட்ட! ஏன்? ஏன்? ஏன்?’ என்று அபிநயா அன்று கதறியது நினைவு வர, மீண்டும் ஒரு எட்டு பின்னே எடுத்து வைத்தான்.
             அன்றைய கதறல். அன்று மட்டுமா? அந்த கதறல், தொடர்ந்து வந்த அவள் கண்ணீர், அவள் கேள்வி என அனைத்தும் நினைவு வர, எடுத்த அரிவாளை ஜீப்பினுள் வைத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் பசுபதி.
     ‘கிறுக்கு பய மாதிரி நான் இப்ப கோவபடக் கூடாது. அந்தானைக்கு நான் வந்த சோலியே நாசமா போய்டும். அம்முக்குட்டி. அவ சம்மததேன் முக்கியம்.’ என்று அபிநயாவைப் பற்றி யோசித்தான்.  ஆம்! அபிநயா என்றும் அவனுக்கு அம்முக்குட்டி தான்.
அவன் அம்முக்குட்டியை பற்றி எண்ணிக்கொண்டு யாருக்கும் தெரியாவண்ணம் பின் பக்கமாக மண்டபத்திற்குள் நுழைந்தான் பசுபதி.
               பெண் அழைப்பு முடிந்து, அபிநயா மண்டபத்திலிருந்தாள்.  மறுநாள் விடியற்காலை முகூர்த்தம் என்பதால் மாப்பிள்ளை அழைப்பும் நல்ல நேரத்தில் முதல் நாளே  முடிந்திருந்தது.
                     அனைவரும் பலகாரம் உண்ணக் கீழே இருக்கும் டைனிங் ஹாலுக்கு சென்றிருந்தனர். பலர் அழைத்தும் அபிநயா அவர்களோடு செல்ல மறுத்துவிட்டாள்.
       அவள் எண்ணங்கள் திருமணத்தையே சுற்றிக் கொண்டிருந்தது. முழு மனதோடு தான் இந்த திருமணத்திற்குச் சம்மதித்திருந்தாள் அபிநயா. ஆனால்?
   
     அந்த ஆனால்? என்ற எண்ணத்திற்குப் பின் மறைந்திருக்கும் காரணம் அனைவரும் அறிந்ததே.
         சிந்தித்துச் சிந்தித்து அவள் தலை விண்வினென்று வலித்தது. மணமகள் அறையிலிருந்து, தன் தலையை மட்டும் வெளியே நீட்டி, எட்டி  பார்த்தாள். ‘அவ்வளவா ஜனம் இல்லை.’ என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு,  காற்று வாங்க வெளியே வந்தாள்.
அவள் அறையின் எதிர் பக்கம் சுவரில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தபடி, ‘ஆனால்?’ என்ற எண்ணத்தின் நாயகனான பசுபதி நின்று கொண்டிருந்தான். 
    அங்குச் சற்று இருள் சூழ்ந்திருந்தது.  அவன் கண்களில் துயரம். மீசைக்குக் கீழே இருந்த அவன் உதடுகள் துடித்தன.  ‘அத்தான்…’ வார்த்தைகள் வராமல் தன் மனதிற்குள் மனதார அழைத்தாள் அபிநயா.
      அவள் மனதின் அழைப்பைப் புரிந்து கொண்டு, பசுபதியின் கண்கள் ‘ஒய்… அம்முக்குட்டி…’ என்று கண்களால், மனதால் அழைத்தது.
பசுபதியின் கண்களில் பரிதவிப்பு. சற்று முன் இருந்த ரௌத்திரம் மாறி, அவளைப் பார்த்ததும் அவன் கண்கள் அன்பைப் பொழிந்தது. அன்பை மட்டுமா தேக்கி நின்றது? ஏக்கம்… பரிதவிப்பு… என அனைத்தையும் பிரதிபலித்தது. அவன் கண்களைப் பார்த்ததும் அவள் மனமோ, ‘ஐயோ…’ என்று பதறியது.
    
        அவர்களுக்கு இடையிலிருந்த படிகளில் ஏறி வந்தான் ரகுநந்தன். மண்டபத்தின் வசதிக்காக கட்டப்பட்டதோ? இல்லை வாழ்க்கையை குறிப்பதற்காக அமைக்கப்பட்டதோ? என அமைத்திருந்தது அந்த படிகள்!
ரகுநந்தன்! அபிநயாவுக்கு நிச்சயப்பட்டிருக்கும் மாப்பிள்ளை.  அவன் நடையில் மெல்லிய தடுமாற்றம். இருவரும் அவனை அங்கு எதிர்பார்க்காததால், ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர்.  ‘நான் இப்ப அறையை விட்டு வெளிய வந்திருக்க கூடாது.’ தன்னை தானே நொந்து கொண்டாள் அபிநயா.
   ‘அத்தான் இப்ப ஏன் இங்க வரணும்? எதுவும் பிரச்சனை பண்ண வந்திருப்பாகளோ?’ பசுபதியை எண்ணி அவள் மனம் பதறியது.
   ரகுநந்தன் அபிநயாவை பார்த்து பதட்டமடைந்தான்.
 ‘இவ ஏன் இங்கு இந்நேரத்தில்…’ என்ற எண்ணத்தோடு, ரகுநந்தன் அபிநயாவை நெருங்க, அவன் மேலிருந்து குடிபோதையின் நாற்றம்.
       அபிநயா முகம் சுழித்தாள்.  ரகுநந்தன் சற்று தடுமாறி, அவள் மீது மொத எத்தனிக்க, ‘குடிகார மாப்பிள்ளை. இவயேல்லாம் என் அம்முக்குட்டிக்கு ஒரு மாப்பிள்ளையா?’ பசுபதியின் கை முஷ்டி இறுகியது.
        அவர்கள் தேகம் உரசுவதற்குள் சுதாரித்துக் கொண்டு அவனும் விலகினான். அவளும் வேகமாகப் பதறிக்கொண்டு விலகினாள்.
   “ஹே…. நோ… நோ… ஐ அம் எ பக்கா ஜென்டில் மேன்.” அவன் ஸ்டைலாக கை அசைத்து, சிரித்துக் கொண்டே உறுதியாகக் கூறினான்.
      ‘ஜென்டில் மேனின் லட்சணம் அழகா தெரியுது…’ என்பது போல் அவனை பார்த்தாள் அபிநயா.
‘கிராமத்து வாத்தியார் அம்மா செம்ம ஸ்ட்ரிக்ட் போல.’ என்று அவள் பணியோடு, அவளை ஒப்பிட்டுப் பார்த்தான் ரகுநந்தன்.
       “நான் டெய்லி எல்லாம் குடிக்க மாட்டேன். இந்த மாதிரி எப்பையாவது தான். இன்னைக்கு பச்சிலர்ஸ் பார்ட்டி. பிரெண்ட்ஸ் கம்பெல் பண்ணாங்க. அது தான்.” என்று வருத்தம் தெரிவிக்கும் தொனியில் கூறினான் ரகுநந்தன்.
   அதே நேரம், சட்டென்று, ‘நான் ஏன் இவளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்?’ என்று எண்ணியவனாக, “எனக்கு யாருக்கும் விளக்கம் சொல்லி பழக்கம் கிடையாது. பிடிக்கவும் பிடிக்காது.” தெனாவட்டாக கூறினான் ரகுநந்தன்.
   “யாரும் கேட்கலை.” அசட்டையாகக் கூறினாள் அபிநயா.
            அவள் பதிலில் சுவாரஸ்யமாகி, “வாத்தியார் சரி… உன் பெயர்?” என்று யோசனையாகத் தலையைத் தட்டினான் ரகுநந்தன்.
   ‘அம்முக்குட்டி, உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்ச நான் எங்க? உம் பேரு கூட தெரியாத இவன் எங்க? என்னை போய், தூர போன்னு சொல்லுதியே?’ என்பது போல், ரகுநந்தனின் பின்னாடி நின்று இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த பசுபதி அபிநயாவைக் கோபமாகப் பார்த்தான்.
    ‘என்னை பத்தி எல்லா தெரிஞ்சும் ஏன் அத்தான் இப்படி பண்ணீக?’ என்று அவனை இறைஞ்சுதலாகப் பார்த்துவிட்டு, தன் கவனத்தை ரகுநந்தனின் பக்கம் திருப்பினாள் அபிநயா.
    “பெயர்?” என்று ரகுநந்தன் விடாமல் கேட்க, “பெயர் தெரியலைனா… வாத்தியார் அம்மான்னு கூப்பிடுங்க.” இடக்காக கூறினாள் அபிநயா.
   “வாத்தியார் அம்மா!” அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் ரகுநந்தன்.
“பியுட்டிபுல்…”என்று ரகுநந்தன் கூற, அபிநயா அவனைத் திடுக்கிட்டுப் பார்க்க, “பெயரை சொன்னேன்… வாத்தியார் அம்மா…” அந்த ‘வாத்தியார் அம்மா…’ வில் சற்று அழுத்தம் கொடுத்துக் கூறி, ஏதோ உலகில் மிக பெரிய ஹாஸ்யத்தை கண்டுவிட்டவன் போல் பெருங்குரலில் சிரித்தான் ரகுநந்தன்.
                 அதற்குள் ரகுநந்தனின், தமக்கை வந்துவிட , ‘என் தம்பி இப்படி தான்…’ என்பது போல் ஓர் பார்வை பார்த்து அவனை அழைத்துச் சென்றார்.
      ‘உன்கிட்ட பேசணும்…’ என்பது போல் பசுபதி அழைக்க, ‘வரமாட்டேன்…’ என்று மறுப்பு தெரிவித்துவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் அபிநயா.
       மணமகன் அறைக்குள் சென்ற ரகுநந்தனின் மனதில் குழப்பம்.
‘வாத்தியார் அம்மா பயங்குற ஸ்ட்ரிக்ட் போலையே. எனக்கு இந்த கல்யாணம், கண்றாவி  பிடிக்க கூட இல்லை. நான் ஏன் இவளை மணம் முடிக்கணும்? எவளோ ஒருத்திக்கு நான் ஏன் அடி பணியனும்? இந்த லட்சணத்தில் என்னைக் கேள்வி கேக்குற மாதிரி வாத்தியார் பொண்டாட்டி. ச்… ச…’ என்று சலிப்பாக எண்ணினான் ரகுநந்தன்.
       ‘நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கக் கூடாதோ?’ ரகுநந்தனின்  மனம் கேள்வியோடு தவித்தது.
அதே நேரம் மணமகள் அறையில் தன்னை அடைத்துக் கொண்டாள் அபிநயா.
      ‘நான் செய்றது தப்பா?’ அவள் மனதில் கேள்வி எழுந்தது.  “இல்லை சரிதேன்…” அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.
       “காதல்… இது காதலா? காதல் தவறுகளை மன்னிக்குமா? காதல் தவறுகளை மறக்குமா?” தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.
    ‘கடத்தினாலும் காதல்… அசிட் ஊத்தினாலும் காதல்… ரேப் பண்ணலாம் காதல்…  சந்தேகப் பட்டாலும் காதல்… பொசெசிவ்னெஸ் என்ற பெயரில் காதல்… பழிவாங்க கல்யாணம் பண்ணாலும் காதல்… அசிங்கமா பேசிட்டு அவமான படுத்தினா காதல்… பெயரை கெடுத்தாலும் காதல்… எல்லாம் பண்ணிட்டு அதீத காதலன்னு மன்னிப்பு கேட்டா ஒரு பெண் மன்னிக்காணுமா?’ அபிநயாவின் மனதில் இறுமாப்பாக கேள்வி வந்து அமர்ந்து கொண்டது.
   ‘இது தான் காதலா? இது தான் அன்பா?’ அபிநயா அருவருப்பாக உணர்ந்தாள்.
அந்த நொடி காதல் என்ற சொல்லை அதீதமாக வெறுத்தாள் அபிநயா.
   ‘எல்லாம் பெண்களும் மன்னிச்சிருவாகளோ? என்னால் தான் முடியலையா?’ அவள் முடிவில் அவளுக்கே சந்தேகம் எழுந்தது.
   ‘கதையில் வரும் கதாநாயகிகளால் மட்டும்தேன் கொடூரமான தப்பை கூட மன்னிக்க முடியும். என்னை போல் ஒரு சராசரி பெண்ணால் ஒரு நாளும் முடியாது.’ தனக்கு தானே கூறிக் கொண்டாள்.
     ‘புருஷன் செஞ்ச தப்ப சொல்லி சொல்லி காட்டுற சராசரி பெண்ணின் ரத்தம் தான் என் உடம்பில் ஓடுது. செஞ்ச தப்பை எல்லாம் மறக்குற தெய்வீக வரம் வாங்கிட்டு நான் வரலை.’ அவள் மனம் கேலியாக எண்ணிக் கொண்டது.
   ‘ஏன் அத்தான் அப்படி பண்ணீக?’ எவ்வளவு யோசித்தாலும் அவள் மனம் பசுபதியை நிந்தித்துக் கொண்டு அங்கு வந்து நின்றது.
   ‘என்னால் பசுபதி அத்தான் செய்ததை ஒரு நாளும் மறக்க முடியாது. மறந்து திருமணம் செய்து கொள்ளவும் முடியாது. ஆனால்?’ அவள் எண்ணம் மேலே தொடர்ந்தது.
‘நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கக் கூடாதோ?’ அவள்  மனம் கேள்வியோடு தவித்தது.
   மண்டபத்திற்குப் பின் பக்கம் இருந்த மரத்திற்குக் கீழ் இருந்த கல்லின் மீது அமர்ந்திருந்தான் பசுபதி.
     ‘ஏலே… இவயேல்லாம் ஒரு மாப்பிள்ளையா? என் அம்முக்குட்டியை இவனை நம்பி கல்யாணம் செஞ்சி கொடுக்கணுமா? கல்யாணத்துக்கு முந்தின நாள் குடிச்சிட்டு வாரான். அயோக்கிய பய…. இவனை எல்லாம் வெட்டி சாய்க்கணும்.’ பசுபதியின் ரணத்தோடு தனக்கு தானே கேட்டுக் கொண்டான்.
   ‘நான் அம்முக்குட்டியை பார்க்காம போவமாட்டேன்.’ அவன் எண்ணிக்கொண்டிருக்க, ‘இல்லை… அவளை கூட்டிட்டு போகணும் இங்கிருந்து. அவ அப்பன் மாப்பிளை பாத்திருக்க லட்சணத்தை நான்தேன் பார்த்துடனே. இந்த கலியாணம் நடக்க கூடாது.’ என்ற எண்ணினான் பசுபதி.   
       ‘நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கக் கூடாதோ?’ பசுபதியின் மனம் கேள்வியோடு தவித்தது.
பொழுதுகள் விடியும்…
error: Content is protected !!