சூரியக்கதிர்கள் கிழக்கில் தன் ஒளியை பாய்ச்சி சூரியன் வருவதற்கான அறிகுறியைக் கூற இரவு விரைவாக தூங்கிய பூவேந்தனோ அந்நேரமே எழுந்து அருகில் மற்றொரு கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ஆரவ்வை எழுப்பிக்கொண்டிருந்தான்.
அதில் லேசாக அசைந்தவனிடம், “அண்ணா வேக் அப்… வேக் அப்… பாருங்க சன் ரைஸ் ஆகப் போகுது” என
அவனின் இந்த கேள்வியில் சிரிப்புவர வெகுநாட்கள் கழித்து வாய்விட்டு சிரித்தான் ஆரவ்.
“ஹாஹா… அன்னக்கி என்ன படம் பார்த்த மேன். டைட்டானிக்கா?” என்றான் விரிந்த புன்னகையுடன்.
“போங்கண்ணா டவுட் கேட்டா கிண்டல் பண்றீங்க” என்று சிணுங்கியவனிடம்
“சரி சரி கிண்டல் பண்ணலை பட் நம்மளை நாமதான் காப்பாத்திக்கணும் எதுக்கு மத்தவங்களை எதிர்பார்க்கணும்? ஏன் உனக்கு நீச்சல் தெரியாதா? அதுவும் அதோ இருக்கே அந்த லைஃப் ஜாக்கெட் அண்ட் லைஃப் பாய் போட்டு கடல்ல குதிக்க முடியாதா?” என
“ஆமாம்ல… நீச்சல் தெரியும் சரி. குதிச்ச பிறகு என்ன பண்றது? எப்படி சென்னை போறது? எந்த பக்கம் போனும்ன்னு கூட தெரியாதே”
“வேந்தா… நாம பண்ற தப்பு அதுதான்… கண் முன்னாடி என்ன வழி இருக்கோ அதை செஞ்சிட்டு போயிட்டே இருக்கனும். அடுத்து என்னாகும்ன்னு நினைச்சி எதுவும் பண்ணாம இருந்தா அப்போவே நம்ம வாழ்க்கை முடிஞ்சிரும்” என்றவன் பேச்சு சீரியசாக போவதைக்கண்டு
“இப்போ என்ன குதிச்ச பிறகு எப்படியும் ரெண்டு மூணு நாள் இங்கதானே சுத்துவோம் என்ன வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா? ஆனா நாம நல்லதை மட்டும்தான் நினைக்கணும். என் மேல நம்பிக்கை இல்லையா? அவ்ளோ ஈசியா ஆபத்தை வாங்குறவனா நான்… ஷிப் ரொம்ப சேப் அதைவிட போக போற இடம் பயங்கர சேப் சோ ரொம்ப யோசிக்காம கிளம்பு” என்றுவிட்டு வெளியே செல்ல
“ஓகே ஓகே… ஐ பிலீவ் யூ. வில் ரெடி இன் ஆப் அன் ஹார் ண்ணா” கத்தியபடி குளியலறை நுழைந்தான் பூவேந்தன்.
இருவரும் கிளம்பி உணவையும் முடித்து தயாராக இருக்க கப்பற்படையில் இருந்து வந்த கப்பல் இவர்களை அழைத்துச்சென்று விக்ரமாதித்திய கப்பலில் சேர்த்தது.
அவனை முக்கிய விருந்தினர்களுக்கு கொடுக்க வேண்டிய சகல மரியாதையைக் கொடுத்து பூங்கொத்து நீட்டி வரவேற்றான் சபரி. விருந்தினர்களை வரவேற்கும் முக்கிய பொறுப்பை சபரியிடம் கொடுத்திருந்தனர். அனைவரும் வந்தபின் தான் அவன் மீட்டிங் ஹால் செல்ல வேண்டும்.
அங்கிருந்த கடைநிலை ஊழியரிடம் ஆரவ்வை அறைக்கு அழைத்துச் செல்லக் கூறியவன் அனைவரும் வந்துவிட்டதை அறிந்து ஹாலிற்கு சென்றான்.
இருபதிற்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த கப்பல்களும் முப்பதிற்கும் மேற்பட்ட விமானங்களும் ஆங்காங்கே திமிங்கலத்தின் திமில்போல் நகரும் நீர்மூழ்கி கப்பல்களும் ஏதோ புதுவகையான உலகத்தில், போர்களத்தில் கால்பதித்த உணர்வை அங்கிருந்த ஆரவ்விற்கு கொடுத்தது. பூவேந்தனோ இதையெல்லாம் விழிகள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
கப்பலின் உள்ளிருக்கும் படியேறி இரண்டாம் தளம் வரும்வரை கூட வந்த பணியாளர் பின் அங்கிருந்த ஒரு கதைவைத்திறந்து, “வெல்கம் டூ மலபார் சர் ப்ளீஸ் கெட் இன். வேறு ஏதாவது தேவை என்றால் உள்ளே இரண்டு பேர் எப்போதும் இருப்பாங்க. அவங்க கிட்ட கேளுங்க. தே வில் ஹெல்ப் பார் யூ” என்றவாறு நகர திறந்திறந்த கதவினுள் நுழைந்தனர் இருவரும்.
பெயருக்குதான் அறை என்றனர் அதுவோ பெரும்பாலான இடத்தை வளைத்து பரந்து விரிந்திருந்தது. தங்க நிற விளக்குகள் பளிச் பளிச் என்று ஒளிவீசி மின்ன ஏசியில் இருந்து வந்த குளிர்காற்று உடம்பை சில்லிடவைத்தது.
வந்த கதவும் அடுத்து மற்றொரு மூலையில் இருக்கும் கதவினைத் தவிர நாலாபுறமும் திரைசீலை தொங்க நாற்காலியா சோபாவா என்று கணிக்க முடியாதபடி வெள்ளைநிற வெல்வெட் துணியால் மூடப்பட்டிருந்தது அமரும் இருக்கை.
வெளியே நடப்பதை உள்ளிருந்தே பார்க்கும்படி பெரிய காணொளி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் வெளியே தூரத்தில் பார்த்த காட்சிகள் தெளிவாக லைவில் ஒளிப்பரப்பி தன் கடமையைச் செய்துக்கொண்டிருந்தது ஒரு பக்கம் வைத்திருந்த காணொளி.
கிட்டதட்ட ஐம்பது பேர் அமரும் இடத்தில் வெறும் இருபது பேர் மட்டுமே ஆங்காங்கே அமர்ந்திருக்க பெரும்பாலானவர்கள் ஆரவ்விற்கு தெரிந்த முகம்தான். எல்லாம் பெரிய பெரிய அரசியல் புள்ளிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்டவர்கள். அனைவரையும் ஒரு புன்னகையோடு கடந்தவன் தனக்கு தோதானதொரு இடம் பார்த்து அமர்ந்து பூவேந்தனையும் அமர்த்திக்கொண்டான்.
நாலைந்து பேர் யாரென இவனிற்குத் தெரியவில்லை அவர்கள் சில ஆண்டுகள் முன்புவரை பெரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரிகள். முக்கிய விருந்தினர்கள் வரிசையில் அவர்களும் வந்திருந்தனர்.
சிறிது நேரத்தில் எல்லாம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது மலபார். மூன்று நாட்டின் தேசிய கொடியும் அவரவர் கப்பலில் கொடிகட்டி பறக்க இந்தியாவின் முக்கிய கப்பற்படை அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அதிகாரிகளை கைகுலுக்கி வரவேற்றனர்.
பயிற்சியை ஆரம்பிக்கும் முன் வரவேற்பு விழா நடத்தி செய்ய வேண்டிய பயிற்சிகள், அதன் பயன்கள் விளக்கிய பிறகே ஆரம்பிக்கும் மலபார் கூட்டுப் பயிற்சி. பின் அனைத்து பயிற்சியும் முடிவடையும் பத்தாம் நாள் ஆட்டம் பாட்டம் என்று ஆடிப்பாடி பிரியாவிடை பெரும்.
இப்போது அனைத்து வீரர்களும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் அமர்ந்திருந்தனர். பூங்குழலியும் அங்குதான் இருந்தாள். மனம் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. சிந்தை அனைத்தும் நேரெதிரே பேசிக்கொண்டிருந்த இந்திய கப்பற்படை அட்மிரலின் பேச்சில் இருந்தது. பெண்களாக பூங்குழலி, பவிகா மட்டுமே இந்திய கப்பற்படையில் இருக்க அமெரிக்க ஜப்பான் பெண் வீரர்கள் பத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
ஆனால் அத்தனையிலும் பேரிலும் விமானம் ஓட்டுவது இரண்டு பெண்கள் மட்டுமே. ஒன்று பூங்குழலி மற்றொன்று அமெரிக்கப் பெண். அதை நினைக்கையில் மனதில் பெரிதாக சாதித்த உணர்வு மேலோங்கி பூங்குழலியைப் பெருமைப்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களில் பாதுகாப்பு அமைச்சர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாததால் மற்றவர்கள் அவர்களுக்கான இடத்திலேயே இருந்தனர்.
வந்ததில் இருந்து ஆரவ்வின் கண்கள் காணொளியை விட்டு நகரவில்லை. மீட்டிங் அரங்கை காண்பிப்பார்களா? என்பதுபோல் அதனையே விடாமல் நோக்க ஏன் வந்திருக்கிறோம் எனத் தெரியாத பூவேந்தனுக்கு அறையில் அமர முடியாமல் போர் அடிக்க ஆரம்பித்தது.
அதை கூறவும் செய்தான், “அண்ணா எப்போ நாம கிளம்புவோம்… வெளிய என்றாலும் வேடிக்கை பார்க்கலாம் இங்க உட்கார்ந்து டிவிய பார்த்தா ஏதோ மொக்க மூவி மாதிரி தெரியுது” என அந்த பாவனையில் உதட்டோரம் சிரிப்பில் விரிய, “எப்போ பாரு மூவி, டான்ஸ் இதான் தெரியும்… உன்னோட” என்று சலித்தவாறு உதவிக்கு இருந்தவரிடம் வெளியே நடக்கும் நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியுமா என்று வினவ
அவரோ மற்றொரு மூலையில் இருந்த கதவைத் திறந்து “இங்கிருந்து பார்க்கலாம் சர்” என்றார். வெளியே சென்றவர்களுக்கு ஏசி காற்றில் இருந்து மாறுபட்டு வந்த கடற்காற்றில் சமாளித்து நிற்கவே சிறிது நேரம் தேவைப்பட்டது.
பின் அங்கிருந்து பார்க்க மொத்த கடலும் மற்றைய நாட்டு கப்பலும் தெளிவாகத் தெரிய ஆனால் தரைதளத்தில் நின்றிருந்த பணியாளர்கள் எல்லாம் லாலிபாப் அளவே தெரிந்தனர்.
பூவேந்தனோ உற்சாகத்துடன் கொண்டு வந்த பைனாகுலர் மூலம் தூரத்தில் நிறுத்தியுள்ள கப்பல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மீட்டிங் அரங்கின் வாசல் திறந்ததும் பல்வேறு வாத்தியங்களின் ஒலி காதை ஊடுருவியது.
அரங்கில் இருந்து ஒரு வரிசையில் ஐவர் விதம் நேர் அணிவகுப்பில் வீரர்கள் வெளிவர பூவேந்தனிடம் பைனாகுலரை வாங்கி வரிசையை நோக்கி செலுத்தினான் ஆரவ்.
அவசரமாக ஒவ்வொரு வரிசையாக தேட ஐந்தாம் வரிசையின் நடுவில் சிக்கினாள் பூங்குழலி தனக்கே உரிய கம்பீர நடையுடன்.
முதன்முதலாக அவளை முழுதாக பார்க்கிறான் எந்த வித பட்டாம்பூச்சும் வயிற்றில் பறக்கவில்லைதான் நெஞ்சமும் தன்னைமறந்து துடிக்கவில்லைதான் ஆனால் அவளின் கம்பீரம் மனதில் கல்வெட்டென பதிந்து தானாக ஒரு மரியாதையை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.
அருகில் இருந்து அவனையே பார்த்திருந்த பூவேந்தனிடம் பைனாகுலரை தந்தவன், “வேந்தா… ஐந்தாவது வரிசை சென்டர்ல பாரு” என
அவன் கூறிய தொனியே மனதினுள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியது பூவேந்தனிற்கு.
ஒரு கையால் பற்றியபடி ஐந்தாம் வரிசையை எட்டியவன் நடுவில் இருப்பவரைக் காண… கண்ட காட்சியை நம்ப இயலாமல் இப்போது இரு கைகளால் பைனாகுலரை பற்றி உற்றுப்பார்த்தான்.
பூங்குழலியின் ஒவ்வொரு நடையும் கட்டியம் கட்டிக் கூறியது காண்பது கனவில்லை நிஜம் என. குப்பென்று ஏதோ ஒன்று இதயத்தில் இருந்து கிளம்பி தொண்டையை அடைக்கும் உணர்வு.
அதை விழுங்க பார்த்தும் முடியாமல் போக அந்த முயற்சியில் கண்ணில் இருந்து கண்ணீர் வேறு வழிய ஓவென்று கத்தி குத்தாட்டம் போடவேண்டும் போல் மனமெல்லாம் பறந்தது.
அதற்கும் தொண்டை ஒத்துழைக்காததால் அருகில் இருந்த ஆரவ்வின் கழுத்தைப் பற்றி எம்பியவன் அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். இதை எதிர்பார்க்காத ஆரவ் கண்கள் நொடியில் கலங்க மனம் சில வருடங்கள் பின்னோக்கி சென்றது.
வீட்டுக்கு வந்த புதிதில் இவ்வளவு நெருக்கமாக பழகவில்லை இருவரும். ஆனால் அன்றொருநாள் அவனுக்கு பிடித்த உடை, விளையாட்டு சாமான் போன்றவற்றை வாங்கித்தர தயங்கி அவனருகே வந்தவன் தொடை அளவே இருந்ததால் கீழே குனியச்சொல்லி முத்தம் கொடுத்து வெட்கத்தில் குடுகுடுவென ஓடினான். அன்று ஏற்பட்ட பாசம் இன்று வரை குறையவேயில்லை.
ஆரவ்விடம், “தேங்க்ஸ் ண்ணா தேங்க் யூ சோ மச் என்றவன் மறு கன்னத்திலும் முத்தம் கொடுத்து இன்றும் குடுகுடுவென ஓட ஆனால் இம்முறை ஓடுவது வெட்கத்தில் இல்லையே!
அவன் செய்யப் போவதை உணர்ந்து கதவை நெருங்கியவனை, “ஹேய் வேந்தா நோ… இப்போ கீழ போக முடியாது ஜஸ்ட் லிஸன் மீ” என்றவாறு ஓடியவனை சடுதியில் பிடிக்க
“விடுங்கண்ணா விடுங்க சொல்றேன்ல… பூமாக்கிட்ட போகணும் ஏன் விட்டுட்டு போனான்னு கேட்கணும்” என்று திமிற என்னதான் வலிமையானவன் என்றாலும் பூவேந்தனை பிடித்து வைப்பது சவாலாகவே இருந்தது ஆரவ்விற்கு. ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கமாட்டான் கதையாகியது இங்கு.
சொல்வதை கவனிக்காமல் இன்னமும் திமிறிக்கொண்டிருந்த பூவேந்தன் மேல் கோபம் தலைக்கு ஏற அவனின் தோளைப்பிடித்து உலுக்கி, “எங்க இருக்கோம்ன்னு உனக்கு தெரியுதா? தெரியலையா? வாட் தி ஹெல் யூ ஆர் டூயிங் வேந்தா” என கர்ஜித்தான் ஆரவ்.
அது மூளையை சென்று அடைந்ததும் சற்றுமுன்பு சந்தோஷத்தில் கூத்தாடிய விழிகள் இப்போது வலியை பிரதிபலித்தது. திமிறலை அடக்கி தன்னைப்பிடித்திருந்த ஆரவ்விடம் இருந்து கையை உருவியவன் மீண்டும் முதலில் நின்றிருந்த இடத்திருக்கு சென்றான்.
பைனாகுலரை வைத்து ஏக்கத்தோடு பூங்குழலியை பின்தொடர்ந்தவனை நெருங்கிய ஆரவ் அவனின் தோளில் கைபோட சற்றுமுன்பு திட்டியதால் உண்டான கோபத்தில் அதைத் தட்டிவிட்டான்.
“பார்த்தியா… உன்னோட பூமா வந்த அடுத்தநொடி என்னை தள்ளிவிட்டுட்ட” என்று சீண்ட
அவன் வார்த்தையில் சுருக்கென்று காயப்பட்டவனோ, “அண்ணா…” என்ற விம்மலுடன் அவனை கட்டியணைத்து அழுதான் பூவேந்தன்.
“ஈசி ஈசி… நான் ஒன்னும் சொல்லலை. உங்கக்காவ இப்போ பார்க்க முடியாது லன்ச் டைம் அப்போதான் சாப்பிட வருவா…ங்கலாம். அப்போ போய் அடிச்சி என்னென்ன கேட்கணுமோ கேளு ஓகே… ஹாப்பி” அவளைக் கண்ட பின்பு ஒருமையில் விளிக்க ஒருமாதிரி இருக்க எப்போதும் ஒருமையிலே விளித்து பழகியதால் சற்று கடினப்பட்டே பன்மையில் கூறி சமாதானம் செய்தான்.
நல்லவேளை பத்திரிக்கையாளர்கள் இவர்களின் கீழ் தளத்தில் இருந்தனர் மேல்தளத்தில் இருந்திருந்தால் மலபாரை விட்டு இதை கவனித்து எழுதி தள்ளியிருப்பர். ஒருவழியாக இளையவனை சமாளித்த ஆரவ் பின் என்ன நினைத்தானோ விலகிச்சென்று அங்கே வெளியிலும் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
ஒரு ஒருமணிநேரம் கடந்திருக்கும் திடீரென பூவேந்தன் கத்தினான், “வாவ்… அண்ணா பூமா ஹெலிகாப்டர்ல ஏற போறா… இப்போ ஏறிட்டா” என்று ரன்னிங் கமெண்ட்ரி போல் கூவ
தன்னை மீறி எழுந்து சென்றான் ஆரவ். பைனாகுலரை வைத்து அவனும் பார்க்க அங்கே பூங்குழலி தனக்கான விமானத்தில் ஏறிக்கொண்டுதானிருந்தாள். ‘விமானம் வேற ஓட்டத்தெரியுமா? அப்போ மேடம் பெரிய ஆளுதான்’ என்றெண்ணிக்கொண்டான் ஆர்வ்.
ஐந்து இந்திய விமானம் அடுத்தடுத்து வரிசையாக நிற்க அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பறக்க வேண்டும் பின் மேலே சென்றதும் ஒரு விமானம் முன்னே செல்ல அதன் இரு பக்கத்திலும் இரு விமானங்கள் ‘V’ வடிவில் பறந்து வளைந்து சென்றது போல் வரிசையாக வரவும் வேண்டும்.
பூங்குழலிக்கு இரண்டாவது விமானம் கொடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் பைனாகுலரை கைப்பற்றிய வேந்தனோ அவள் ஏறி பறக்கும்வரை விடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
மேலே பறந்த விமானம், அதன் லாவகம், ஒரே சீராக செல்லும் வேகம், வடிவம் அனைத்தும் காண்போரின் கண்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது.
முதல் நாள் என்பதால் சற்று எளிதான பயிற்சிதான். அடுத்தடுத்த நாட்கள்தான் டெக்னாலஜியை பரஸ்பரம் பரிமாறுதல், ஆயுதம் பயன்படுத்துதல், வானில் இருந்து ஏணி மூலம் கீழே சிறிய படகு போன்ற கப்பலில் இறங்குதல் என்று சாகசங்கள் களைகட்டும்.
இருபது நிமிடங்கள் கழித்து விமானம் தரையிறங்க அடுத்த நாடு அந்த பயிற்சியை ஆரம்பித்தது. இவ்வாறு மூன்று நாடுகள் மாற்றி மாற்றி செய்வதால் அது முடியும்வரை அசையமுடியவில்லை பூங்குழலியால்.
மதிய உணவு உண்ணும் நேரமும் நெருங்க மற்றவர்களுக்கு முன் பாய்ந்து சென்றான் பூவேந்தன்.
விசாலமான உணவுக்கூடம் கிட்டதட்ட இன்று இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. நான்கு திசையின் நடுவிலும் நான்கு கதவுகள் இருக்க ஒரு பக்க கதவு வழியாக சுடசுட உணவு வகைகள் தீர தீர வந்துக்கொண்டே இருந்தது. அதற்கு எதிராக இருந்த வாசலை பூட்டியிருந்தனர்.
மீதமுள்ள இரண்டு எதிர் எதிர் வாயில்களில் ஒன்று முக்கிய விருந்தினர்களுக்கு என்றும் மற்றொன்று கப்பற்படை வீரர்களின் பயன்பாட்டிற்கு என்றும் ஒதுக்கியிருந்தனர்.
விரைவாக பூவேந்தன் அங்கு வந்துவிட ஆனால் தேடிவந்த அவனின் தமக்கையோ இன்னமும் வேலை முடிந்து வந்தபாடில்லை. பாதுகாப்பு அமைச்சர் வேறு ஆரவ்வுடன் பேசிக்கொண்டே உண்ண வெறுமனே நிற்கமுடியாது என்பதால் பூவேந்தனும் உண்டுமுடித்திருந்தான். பார்வை முழுவதும் வீரர்கள் நுழைந்துக்கொண்டிருந்த எதிர் வாசலில் மையம் கொண்டிருந்தது.
பின்மதிய நேரமாகிவிட அதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என்று தோன்றியது ஆரவ்விற்கு, “வேந்தா கம். நாம வெளிய போய் வெயிட் பண்ணலாம் இங்க வேண்டாம்” என
“அந்த வழியாதான் எல்லாரும் வராங்க. அங்க எப்படி போறதுண்ணா” என்றான் தவிப்புடன்.
“இதுக்கு எதிர்ப்புறம்தானே நாம நடந்துபோய் பார்க்கலாம் உள்ள இருந்து பார்க்குறதுக்கு வெளிய இருந்து பாரு தட்ஸ் ஆல்” என்றவாறு கிளம்ப
நடக்கும் வழியெல்லாம், “கடவுளே கடவுளே பூமாவை வரவச்சிரு ப்ளீஸ்” உள்ளம் உருகி நடுங்க கடவுளை துணைக்கழைத்தான் இளையவன். வேண்டுதல் உடனடியாக பலித்ததோ என்னவோ இவர்கள் வெளிவந்து எதிர்புற வாசலை நோக்கித் திரும்பியதும் பூங்குழலி வேகமாக இவர்களுக்கு முன்னே வாசலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தாள்.
அத்துணை நேரமும் மேலிருந்து பார்த்தவனுக்குத் தெரியாதா அது அவனின் பூமா என. இதயம் எம்பி வெளியே துடிக்க கால்கள் பின்னினாலும் தன்னால் முடிந்த அளவு அவளிடம் விரைவாக விரைந்தான்.
ஆனால் பின்னால் பழக்கமில்லாத சத்தம் கேட்டு நின்றாள் பூங்குழலி. அதற்குள் அவள் நிற்பாள் என்று எதிர்பார்க்காத பூவேந்தனோ அவளின் மீதே மோதிவிட கீழே விழாமல் இருக்கும் பொருட்டு பிடிமானத்திற்கு தமக்கையை அணைத்தான்.
நீண்ட நெடிய ஏழு வருடங்களுக்கு பின்னான ஸ்பரிசம் வேந்தனின் மனதை நெகிழ்த்த அவளின் முதுகிலே சாய்ந்து சிறுகுழந்தை போல் தேம்ப ஆரம்பித்தான். தன்னை யாரோ அணைத்ததும் அந்தத் தொடுகை மனதைச் சிலிர்க்கச்செய்தாலும் உடல் அன்றொருநாள் பின்னிருந்து அணைத்த அர்ஜூனை நினைவுபடுத்த… அன்னிச்சையாய் அணைத்தவனை உதறியவளின் கரம் பின்னிருந்த பூவேந்தனின் கன்னத்தை மின்னல் வேகத்தில் பதம் பார்க்கச் சென்றது.
பதம் பார்க்கச் சென்ற கரம் கன்னத்தில் இறங்கும் கடைசிநொடியில் அந்தரத்திலேயே நிற்க வலிமையான அக்கரத்தை தன் திடத்தினால் இறுக்கிப்பிடித்திருந்தான் ஆரவ்.
அலைகடல் ஆர்ப்பரிக்கும்…
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss