திருமணத்திற்கு முந்தின மாலை நேரம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், சிவபெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தார் ராமசுவாமி.
‘நெல்லையப்பா! நான் என் பெண் அபிநயாவை எல்லாரைப் போலவும் சாதாரணமா வளர்க்கலை.’ என்று ராமசுவாமி எண்ண, ‘எல்லா பெற்றோருக்கும் அவங்க பெண் உயர்வு தான்.’ என்று எண்ணியிருப்பாரோ அந்த நெல்லையப்பர். அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
‘எந்த சூழ்நிலையும் தைரியமா சமாளிக்கும் விதமாதேன் நான் என் பெண்ணை வளத்திருக்கேன். நியாயமும், நேர்மையும், கம்பீரமும் நிறைஞ்சவ எம் பொண்ணு. ஊரே மெச்சும்படி எம் பொண்ணு வாழனும்.’ என்று ஓர் தந்தையாக அவர் வேண்டிக்கொண்டார்.
கோவிலில் மணியோசை எழும்ப, அந்த சிவபெருமானே வந்து அருள்பாலித்தது போல் அவர் சந்தோசம் கொண்டார்.
‘என் பொண்ணுக்கு அந்த பசுபதி முரட்டுப் பையன் பொருத்தம் கிடையாது. ஆனால், நான் பார்த்த மாப்பிள்ளை குணத்தில் சொக்கத் தங்கம். பணக்கார வீட்டு பிள்ளை. கொஞ்சம் முன்ன, பின்ன இருந்தாலும், நான் விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் நல்ல மாதிரி தான் சொல்றாக. நான் பலரை எதிர்த்து இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிருக்கேன். என் மவ சந்தோசம் மட்டுந்தேன் எனக்கு முக்கியம். இந்த கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லமா நல்ல படியா நடக்கணும். என்னால் முடிஞ்சதை நான் என் பொண்ணுக்கு பாதுகாப்பா பண்ணிருக்கேன். நெல்லையப்பா! இனி எல்லாம் நீ விட்ட வழி.’ என்று வேண்டிக்கொண்டார் ராமசாமி.
தெய்வமும் மனிதனும் ஒன்று போல நினைத்து விட்டால்?
இறைவனின் கணக்கு தெரியாமல் ஒவ்வொருவரும் அவர்கள் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ இந்த கேள்வி அவன் மனதை பாரமாக அழுத்தியது.
‘வசதியாக தான் பிறந்தேன். வசதியாக தான் வளர்க்கப்பட்டேன். ஆனால், அதை நிம்மதியாக அனுபவிக்க மட்டும் எனக்கு கொடுத்து வைக்கவில்லையா?’ என்ற பாரம் அவனை இன்னும் இன்னும் அழுத்த, வேண்டாம் என்று நினைத்தாலும் ரகுநந்தனின் நினைவுகள் அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.
அபிநயா ஜன்னல் வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சில பேச்சுக்களை என்றும் எண்ணிப் பார்க்கக்கூடாது. அனைத்தையும் மறந்து விட வேண்டும்.’ என்று அவள் அறிவு எச்சரித்தலும், அவள் மனமோ கதறிக்கொண்டு பழைய நினைவுகளிலே உழன்றது. அத்தோடு அம்முக்குட்டி என்ற அழைப்பும் ஆசையாக! அவள் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
வானம் சற்று இருள் கவ்வ ஆரம்பித்தது.
அந்த இருளில் மண்டபத்தின் பின் பக்கம் அமர்ந்திருந்தான் பசுபதி.
‘என்னை மீறி இந்த திருமணம் நடந்திருமா? இல்லை, நான் மறுத்தா, அம்முக்குட்டி இந்த கல்யாணத்தை பன்னிப்பாளா?’ பசுபதியின் முகத்தில் மெல்லிய சிரிப்பு. அவன் வெண்பற்கள் அந்த இருளிலும் பளிச்சென்று புன்னகையை வெளிப்படுத்தியது. அந்த புன்னகையில் அன்பும், உரிமையும் வழிந்தோடியது.
அவன் எண்ண அலைகள், பின்னுக்குச் செல்ல செல்ல, அவன் முகத்தில் மலர்ச்சியும், உரிமையையும் குடி கொண்டது.
மூவரின் எண்ண அலைகளும் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தன.
சில ஆண்டுகளுக்கு முன்…
அபிநயா, சப்பாத்தி மாவை ஒத்த நிறம். பச்சை நிறத்தில்,காட்டான் புடவை அணிந்திருந்தாள். விகற்பமில்லாமல், அந்த புடவை அவளோடு பொருந்தி நின்றது.
தன் கைகளில் புத்தகத்தோடு , அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவள் தோழி, “பஸ் பையதேன் வரும் போல?” என்று சலிப்பாக கூற, “அப்படிதேன் தெரியுது.” என்று தன் உதட்டைப் பிதுக்கினாள் அபிநயா.
சில நிமிடங்களாக அவர்களை மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்த, இளைஞர்கள் இப்பொழுது இவர்கள் இருவரையும் பார்த்துக் கண்சிமிட்டினர்.
“அபிநயா… அங்க பாரேன். அவன் கண்ணு முழியே சரி இல்லையே.” அவள் காதில் கிசுகிசுத்தாள் அவள் தோழி.
“ம்… கண்டுக்காத.” என்று அபிநயா அசட்டையாகக் கூறினாள்.
தோழி தலை அசைக்க, “இந்த மாதிரி கண்டுக்காம விட்டாலே பாதி பிரச்சனை தன்னால சரியாகிரும்.” என்று அபிநயா கூற, அவள் தோழி தன் தலையை ஆமோதிப்பாக அசைத்தாள்.
அப்பொழுது, அந்த இளைஞர்கள் அபிநயாவை உரசிக்கொண்டு செல்ல, தன்னை தானே பாதுகாக்கும் பொருட்டு அவர்களை “பளார்…” என்று அறைந்தாள் அபிநயா.
அந்த இளைஞர்கள் இவர்களைத் தாக்க முற்பட, அபிநயா அவள் கை பையிலிருந்த பெப்பர் ஸ்பிரே, மிளகாய் தூள் எடுத்து வீச, அந்த இளைஞர்கள், “ஆ… ஊ…” என்று அலறினர்.
அந்த அரங்கமே கை தட்டியது. பசுபதி மேடை மேல் இருக்கும் அபிநயாவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கை தட்டும் ஓசைக்காகச் சற்று நேரம் பொறுத்துவிட்டு, “நாங்க அமைதியா இருந்தா பயந்து போறோமுன்னு அர்த்தமில்லை. பிரச்சனை வேண்டாமுன்னு அமைதியா இருக்கோமுன்னு அர்த்தம். அதே நேரத்தில், எங்களுக்குப் பிரச்சனை வந்தா, எங்களை எப்படி பாதுகாக்கணும்னு எங்களுக்கு தெரியும். பக்கத்தில் அரிவாள் இருந்தா எடுத்து வீசவும் தயங்கமாட்டோம்.” என்று அபிநயா வீராவேசமாகப் பேச, ‘அம்முக்குட்டி… வீசுவா… நிச்சயம் வீசிருவா.’ புன்னகையோடு எண்ணியபடி, மீசையை முறுக்கி கொண்டான் பசுபதி.
அதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூடி, அவர்களைக் கண்டிப்பது போல் காட்சி அமைந்திருந்து.
பெண்கள் பிரச்சனையை எப்படி அணுகுவது, அதை எப்படி எதிர்கொள்வது போன்ற கருத்துக்களைச் சொல்வது போல் அமைந்திருந்தது திருநெல்வேலி பி.எட். கல்லூரியில் அரங்கேறிக் கொண்டிருந்த அந்த நாடகம்.
அங்கு குழுமியிருந்த மாணவிகள் அனைவரும் வருங்கால ஆசிரியர்கள்.
மாணவிகள் மத்தியில் அபிநயாவின் நடிப்புக்கும், அவள் பேசிய விதத்திற்கும் அவளுக்குப் பாராட்டு குவிந்தது. விழா முடியும் வரை காத்திருந்து, அபிநயாவை எல்லோரும் பாராட்டுவதைப் பெருமையோடு பார்த்திருந்து விட்டு, அவளை அவன் ஜீப்பில் அழைத்துச் சென்றான் பசுபதி.
பசுபதி, ஜீப்பை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, எதிர் பக்கமாக உள்ளே ஒரு கார் வேகமாக நுழைந்தது. சட்டென்று இருவரும், சடேன் பிரேக் போட, “அத்தான்… பார்த்து எடுங்க.” என்று அபிநயா முகம் சுழித்தாள்.
ரகுநந்தன், இவர்களைக் கவனிக்கவில்லை. காருக்குள் இருந்து மன்னிப்பு கேட்கும் விதமாக கை உயர்த்தினான். பசுபதியும் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. இருவர் மேலும் தவறு இருந்ததால், பசுபதியும் கை அசைத்துவிட்டு விலகிச் சென்றான்.
ஜீப் வல்லநாடு நோக்கி பயணிக்க ஆரம்பித்தது
“என்ன ரெண்டு பேரும் கை அசைச்சிக்குறீக? தப்பு பண்ணாம வண்டி ஓட்டணும். அது என்ன தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்கறது? இடிச்சிருந்தா, தெரிஞ்சிருக்கும் சேதி…” என்று அபிநயா கடுகடுவென்று பொரிந்தாள்.
“அம்முக்குட்டி…” என்று பசுபதி அழைக்க, “அத்தான்… அப்படி கூப்பிடாதீக. இது காலேஜ்.” என்று சிணுங்கினாள்.
“காலேஜ்னா? நீ என் அம்முக்குட்டி இல்லைன்னு ஆகிருமா?” என்று அவன் கண்சிமிட்ட, அபிநயா அவனை முறைத்துப் பார்த்தாள்.
“எனக்கு நரை விழுந்தாலும், நீ கிழவியானலும் எனக்கு அம்முக்குட்டி தானே?” பசுபதி மீசை முறுக்க, “அட… போங்க அத்தான்.” செல்லமாகச் சிணுங்கினாள் அவள்.
“ஏன், இல்லையா?” என்று கேள்வியோடு அவன் மீசைக்குக் கீழே இருக்கும் உதடுகள் குறுநகையோடு துடிக்க, “அத்தான் பேச்சை மாத்தாதீக. வண்டியை பார்த்து ஓட்டுங்க. இடிச்சிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? இன்னைக்கு போல என்னைக்கும் இருக்குமா? எல்லா தப்புக்கு மன்னிப்பு தீர்வாகுமா?” என்று அபிநயா கறாராகக் கேட்க, “அம்முக்குட்டி… டீச்சர் ஆகிட்டு இருக்க… ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் பசுபதி.
“அத்தான்…” என்று அவள் மீண்டும் சிணுங்க, “அது சரி… இது என்ன தத்துவ நாடகம்? ஒரு காதல் நாடகம் போடக் கூடாதா?” என்று பசுபதி சோகமாகக் கேட்டான்.
“அத்தான்…” என்று கண்களை உருட்டி, கண்டிப்போடு அழைத்தாள் அபிநயா. “எங்க தீம் சமூக அக்கறை கொண்ட நாடகம். எங்க பார்த்தாலும், இந்த பாழா போன காதலைப் பத்தி தானே பேசுறாங்க. அதைப் போட ஆயிரம் பேர் இருக்காங்க. நல்ல விஷயத்தைச் சொல்லத்தேன் ஆள் இல்லை. அது தான் நான் சொன்னேன். பிரச்சினையை எப்படி கையாளனையுமுன்னு…” என்று அவள் ஓர் ஆசிரியை போல் பேச ஆரம்பித்தாள்.
“அம்முக்குட்டி… உன் பேச்சை கேட்டேன் அருமை! ஆனால், திரும்பக் கருத்தரங்கம் வேணாமே.” என்று கெஞ்சினான் பசுபதி.
“ஹ… ஹா…” என்று சிரிப்பது இப்பொழுது அவள் முறையாயிற்று.
“நான் மட்டுமில்லை. யாருமே அறிவுரை விரும்பறதில்லை அம்முக்குட்டி. இன்னைய லைப் ஸ்டைலில் மோட்டோ என்ன தெரியுமா?” என்று பசுபதி கேட்க, அபிநயா அவனை கேள்வியாக பார்த்தாள்.
“சிரிக்கும் பொழுது நீ அம்சமாத்தேன் இருக்க. ஆனால், சிரிக்காத.” என்று அவன் கூற, “ஏன் அத்தான்?” என்று அப்பாவியாகக் கேட்டாள் அபிநயா.
“ஏன்னா… நான் சீரியஸ் மேட்டர் சொல்ல போறேன்.” என்று பசுபதி கண்களை உருட்டினான்.
“யாரும் சீரியசா இருக்காங்களா அத்தான்?” என்று அவனைப் போலவே கண்களை உருட்டி, அவள் சிரியாமல் கேலிப்பேச, அவளைக் கடுப்பாகப் பார்த்தான் பசுபதி.
“குழந்தை புள்ளைக்கு பாடம் சொல்லிகொடுக்க போற சரி. அதுக்காக இப்படி, குழந்தை புள்ளை ஜோக் எல்லாம் சொல்லாத. நானா இருந்தா, சீரியஸை விடுத்து, என்ன மேட்டர்ன்னு கேட்ருப்பேன்.” என்று கண்களைச் சிமிட்டினான் பசுபதி.
“அத்தான்…” என்று அவள் கண்டிப்போடு அழைக்க, “சரி விடு! இதெல்லாம் உனக்கு புரியாது.. விஷயத்திற்கு வருவோம்.” என்று தீவிரமாகப் பேச ஆரம்பித்தான் பசுபதி.
“ஆத்தா, நம்ம கல்யாண விஷயம் தான் பேசிட்டு இருக்காக. நாந்தேன் உன் படிப்பு முடியட்டுமுன்னு சொல்லிருக்கேன்.” என்று பசுபதி கூற, “ஏன்? உங்க ஆத்தாவை, எங்க அப்பா கிட்ட பேச சொல்லுறது.” என்று அவள் கேலியாகக் கூறினாள்.
“அவுக என்னைக்கு சமாதானம் ஆகி…” என்று பசுபதி பெருமூச்சு விட, “ஏன் அத்தான்? நீங்க எங்க அப்பா கிட்ட பேச கூடாதா?” என்று அபிநயா கேட்க, “எங்க ஆத்தவை அவமான படுத்துற உங்க அப்பா கிட்ட என்ன பேசச்சொல்லுதய்யா?” என்று கேட்டான் பசுபதி.
“எங்க அப்பா…” என்று அபிநயா பேச ஆரம்பிக்க, “வக்கீல் வேலை வேணாமே…” என்று கண் ஓரத்தில் மெல்லிய சுருக்கத்தோடு அவன் கூற, அவன் கேலியில் வாயை மூடிக்கொண்டாள் அபிநயா.
“அத்தான்… இப்படி பேசியே என்னை சரிக்கட்டிருதீக. இப்படியே கல்யாணமும் நடக்காது.” என்று அவள் கூற, “எனக்கு என் அம்முக்குட்டி பத்தி தெரியாதா?” என்று பசுபதி வீராப்பாகக் கூறினான்.
‘என்ன தெரியும்’ என்று அவள் கேள்வியாக பார்க்க, “அம்முக்குட்டி… கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நியாயம், நேரம், தட்டுப்பாடு…” என்று பசுபதி அவளை வம்பிழுக்க, அபிநயா பெருமையாகத் தலை அசைத்துக்கொண்டாள்.
ஒரு நொடியில், அவன் பேச்சு திசை மாறவும், “அத்தான்…” என்று அவள் கைகளில் உள்ள புத்தகங்களால் அவனை மொத்மொத்தென்று அடித்தாள் அபிநயா.
அப்பொழுது பசுபதி ஓட்டி சென்ற ஜீப்பை ஒட்டி வேகமாக வந்தது ஒரு கார்.
“ரகு… அந்த ஜீப்பை பாரு அவங்க எவ்வளவு ஜாலியா போறாங்கன்னு.” என்று, அபிநயா பசுபதியை அடித்து கொண்டிருப்பதை பார்த்து காரில் ரகுநந்தன் அருகே அமர்ந்திருந்த பெண் கூற, ” இந்திரா! அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா இருப்பாங்க.” என்று சாலையைப் பார்த்தபடி கூறினான் ரகுநந்தன்.
“நானும் தான்…” என்று இந்திரா ஆரம்பிக்க, கார் கண்ணாடியை இறக்கினான் ரகுநந்தன்.
ரகுநந்தனின் கண்களில் சில்மிஷம் தெரிந்தது. ‘யார்…’ என்று யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. அந்த திருநெல்வேலி சாலையில், உற்ச்சாகமாக தலையை வெளியே நீட்டினான்.
“ப்ரோ… நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தானே?” என்று ஜீப்பை பார்த்து கேட்டுவிட்டு அதிவேகமாகக் காரை அவர்கள் முன்னே செலுத்தினான் ரகுநந்தன்.
பசுபதி, அபிநயா இருவரும் ரகுநந்தனை பார்க்கவில்லை. ஆனால், அவன் கேள்வி இவர்கள் செவிகளைத் தொட்டுச் சென்று இருவர் முகத்திலும், புன்முறுவலைத் தோற்றுவித்தது.
முன்னே சென்றுகொண்டிருந்த ரகுநந்தன் அடுத்து கேட்ட கேள்வியில், இந்திரா இவர்களை யோசனையாகத் திரும்பிப் பார்க்க, ரகுநந்தனோ தன் உதட்டை சுழித்து கேலியாக புன்னகைத்து சீட்டியடித்தபடி வண்டியைச் செலுத்தினான்.
பொழுதுகள் விடியும்…
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss