கரிசல் காட்டுப் பெண்ணே 12
மூன்று மாடியாக உயர்ந்து, பரந்து புதுவித பிரமாண்ட நேர்த்தியுடன் நின்றது அந்த கட்டிடம்.
இன்னும் முழுமையாக சிமெண்ட் பூச்சு வேலை முடியாமல் தெரிந்த போதும், அந்த சுற்று வட்டாரத்தில் இதுபோல பிரமாண்ட வீடு எதுவும் இல்லை என்று பார்ப்பவர்களை எல்லாம் வாய் பிளக்க செய்தது இந்த புது பெரியவீடு.
கட்டிடத்தின் உட்புறம் சிமெண்ட் பூச்சு வேலை நடந்துக் கொண்டிருக்க, மட்டம் சரிபார்த்த ஸ்ரீராம், “இது தான் நீங்க மட்டம் பார்க்கற அழகா, இங்க ஒழுங்கா சரிபண்ணுங்க ண்ணா, மறுபடியும் இதே மாதிரி தப்பு நடந்ததுனா நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்று தன் மேஸ்திரிகளை எச்சரித்தான்.
“நான் பாக்கும்போது சரியாதான இருந்துச்சு தம்பி” ரஜினி மேஸ்திரி அருகே வந்து சொல்ல,
“இப்ப மட்டும் எப்படி தப்பாச்சு அண்ணே? நீங்க நீட்ட மட்டம் மட்டும் பார்த்தா போதாது, குறுக்க மட்டமும் சரி பார்த்தா தான தப்பில்லாம வரும். ஒழுங்கா செயிங்க” என்று அறிவுறுத்தி விட்டு நகர்ந்தான்.
“இந்த வீடு முடியறத்துக்குள்ள, ஒருவழி ஆகிடுவோம் போல” என்று முணுமுணுத்தப்படி அந்த இடத்தை சரி செய்யலானார் அவர்.
வீட்டின் மேல் தளத்தில் வயரிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, வீட்டின் கீழ் தளத்தில் பிளம்பிங் வேலைகள் நடந்தேறிக் கொண்டிருந்தன.
அனைத்து இடங்களையும் சரிபார்த்தபடி கவனித்து வந்தவனின் கைப்பேசி தன் இறுப்பை உணர்த்தி சிணுங்கியது.
அதன் தொடுதிரையை இயக்கி காதில் ஒற்றி, “ஹலோ தருண், சொல்லுடா” என்றான் குரலில் உற்சாகம் தேக்கி.
“இங்க ஒரு இடம் விலைக்கு வந்திருக்கு ஸ்ரீ. நம்ம கம்பெனிக்கு அந்த இடம் அமைஞ்சா நல்லாயிருக்கும்”
“மெயின் ஏரியாவா? எங்க?”
இடத்தின் பெயரையும் அளவையும் சொன்னவன், “மெயின் ஏரியா இல்லன்னாலும் நமக்கு பெனிஃபிட் அதிகம் ரா, இந்த இடம் நமக்கு நல்லா வொர்க் ஆகும்னு தோணுது”
“நீ இவ்வளவு சொல்றனா கரெக்டா தான் இருக்கும். பட், அந்த இடத்துக்கு போட்டியும் அதிகமா இருக்கும் போலவே, என்ன பண்ணலாம்?”
“நேரடியா நம்மாள போட்டி போட முடியாது ஸ்ரீ. நம்ம ஃப்ரண்ஸ் கிட்ட அந்த லேண்ட் ஓனர் பத்தின ஃபுல் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண சொல்லி இருக்கேன். அது மூலமா ஏதாவது வழி கிடைக்குமான்னு பார்க்கணும்”
“ஓகே தருண், நானும் வரணும்னா சொல்லு கிளம்பி வரேன்”
“நீ இல்லாம எப்படி, உங்க வீட்டு வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வா ரா, நாங்கெல்லாம் வெயிட் பண்றோம்”
“எப்படியும் இன்னும் திரீ மன்த்ஸ் ஆகும்… சாரிடா, இப்ப நான் உங்ககூட இருக்கணும்”
“நமக்குள்ள என்ன ரா சாரி, உன் சுவிச்சுவேஷன் தான் எங்களுக்கு தெரியும் இல்ல, அதுவும் தனியா நின்னு முடிச்சு காட்டறேன்னு வீராப்பு பேசிட்டு போயிருக்க, நாங்க வந்து பார்க்க தான போறோம்” என்று சிரித்தபடி பேசி வைத்தான் தருண்.
ஸ்ரீராம் புன்னகையுடன் கைப்பேசியை அணைத்து விட்டு நிமிர, சீதாவும் சக்திவேலும் தூர சாலையில் நடந்து செல்வது கண்ணில் பட, மூன்றாம் மாடியில் இருந்து கீழிறங்கி வந்தான்.
“எங்குட்டு தம்பி இம்புட்டு அவசரமா ஓடுறீக?” அவன் வேகம் பார்த்து சித்தாள் ஒருவன் இடக்காக கேட்க,
“ஒரு சின்ன வேலை, சீக்கிரம் வந்திடுவேன். கொடுத்த வேலையை முடிக்கற வழியை பாருங்க” இவனும் அதிகாரமாக சொல்லிவிட்டு நிற்காமல் விரைந்தான்.
“போ க்கா, உன்னால இன்னைக்கு ஆட்டம் போச்சு எனக்கு” சக்திவேல் சுணங்கியபடியே அவளுடன் நடந்து வர,
“என்னால தனியா எப்படி போக முடியும்! உனக்கு அஞ்சு லாலிபாப் வாங்கி தாரேன், கூட வாடா” என்று கெஞ்சியபடி தம்பியை தாஜா செய்ய முயன்றாள் சீதா.
அதற்கும் முகம் சுருங்கியபடியே உடன் வந்த சக்திவேல், ஸ்ரீராம் வண்டியைப் பார்த்துக் கையசைத்து நிறுத்தினான். “எங்க போயிட்டு இருக்க ஸ்ரீராம்?” என்று.
“இதே கேள்விய உங்ககிட்ட கேட்க தான் டா வந்தேன். அக்காவும் தம்பியும் பொடி நடையா எங்க போயிட்டு இருக்கீங்க?” ஸ்ரீராம் எதிர் கேள்வி கேட்க,
“அப்ப நீ வெட்டியா தான் சுத்திகிட்டு இருக்க போல? அப்படியே எங்கள வனதுர்க்காம்மன் கோயில்ல இறக்கி விடேன்” என்று சக்திவேல் வண்டியின் பின்னால் தொற்றிக் கொண்டான்.
“சக்தி இறங்கு, இன்னும் ஆளுங்க வேலை விட்டிருக்க மாட்டாங்க, சின்னாவ தொந்தரவு பண்ணாம என்கூட நடந்து வா” சீதா தம்பியை கண்டிக்க, “போ க்கா, சைக்கிள்ல போகவே அரை மணிநேரம் ஆகும், இன்னிக்கு பாத்து அதுவும் பென்ச்சர், நாம நடந்து போயிட்டு வரத்துக்குள்ள பொழுது போயிடும்” அவளிடம் நீட்டிமுழக்கி சொன்னவன், “எங்களை கூட்டிட்டு போவ தான ஸ்ரீ?” என்று இவனிடம் குழைவாக கேட்டான்.
சிரித்து கொண்ட ஸ்ரீராம், “நான் இப்ப ஃப்ரீ தான் சீதா, உங்களை ட்ராப் பண்றேன் ஏறு” என்க, அவளும் தலையசைத்து அமர்ந்து கொள்ள, கோயிலை நோக்கி வண்டி பறந்தது.
சீதாவின் திருமண நிச்சயப்பேச்சு பேச்சோடு தள்ளி போனதால் தோஷ நிவர்த்தி பரிகாரமாக, வாரம் வாரம் வெள்ளிக்கிழமை தவறாமல் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு போடும் படி கணித்து சொல்லி இருந்தார் பெருங்குடி ஜோசியர். மரகதம் சொற்படி, வெள்ளி தோறும் சீதாவும் தவறாமல் விளக்கேற்றி வருகிறாள்.
வெள்ளிக்கிழமை காலையில் கல்லூரி போக வேண்டி இருப்பதால், மாலையில் ஊருக்கு புறமாக இருக்கும் வனதூர்கை கோவிலுக்கு வந்து தீபம் இடுவது சீதாவின் வழக்கமாகி இருந்தது. ஸ்ரீராமிற்கும் இது தெரியும் தான்.
ஊரைவிட்டு சற்று தள்ளி இருக்கும் கோவிலுக்கு இருவரும் மிதிவண்டியில் சென்று வருவதை இவனும் கவனித்து இருக்கிறான். அதனாலேயே இன்று நடந்து செல்பவர்களைப் பார்த்து விரைந்து வந்திருந்தான்.
“இவன் ஃபிரண்ஸோட கிரிக்கெட் விளையாட போறதுக்கு நேரமாகுதுன்னு தான் இப்படி துறுதுறுக்குறான் சின்னா” சீதா, சக்தியின் தலையை தட்டிவிட்டு ஸ்ரீராமிடம் சொல்ல,
“ஏதாவது ஒரு கோயில்ல தீபம் போட்டா போதாதா? ஊருக்கு வெளியே இருக்க துர்க்காம்மா கோயில்ல தான் போடணுமா? போ க்கா, நீங்களும் உங்க வேண்டுதலும்” சக்திவேல் அலுத்துக் கொள்ள, பத்து நிமிடங்களில் கோயிலை அடைந்து இருந்தனர்.
சுற்றி தோப்புகளும் மரங்களும் கரும்பு தோட்டங்களும் சூழ்ந்திருக்க, நடுவே ஆழ்ந்த அமைதியோடு அமைந்திருந்தது அந்த புராதான சுட்ட செங்கற்களான கோயில்.
சிறிதளவான கருவறை, அதை மூடியிருந்த சற்று அகலமான விமானம், நான்கு கற்தூண்கள் தாங்கிய முன் மண்டபம், எதிரே சிம்மவாகன சிலையும் அதன் முன்பு உயர்ந்த கொடிமரம் தனித்து நிற்க, பெரிய அளவிலான சூலமும் நட்டு வைக்கப்பட்டிருக்க, பெரிதாக ஆர்பாட்டம் இன்றி பறவைகளின் கீச்சு கீச்சு இசை பின்னனியில் விளங்கி இருந்தது அக்கோவில்.
“பரவாயில்ல கோயில் சுத்தமா தான் இருக்கு” என்றபடி ஸ்ரீராம் இறங்கி வர, “வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை காலையில பக்கத்தூரு சாமி ஒருத்தர் வந்து அம்மனுக்கு அபிஷேகம், பூஜையெல்லாம் செய்வாருன்னு அப்பா சொன்னாங்க” என்று பதில் தந்தபடி சீதா முன்னே நடந்தாள்.
சென்னிற பட்டுடுத்தி பூமாலைகள் அணிசெய்ய, சந்தன அலங்காரத்திலும் குங்கும பொட்டிலும் மணிவிளக்கு தீப ஒளியில் சாந்தமான ரூபத்தோடு கருவறையில் காட்சி தந்தாள் வனதுர்க்கை அம்மன்.
மூவரும் மனதார அம்மனை வணங்கி கொண்டனர். சீதா அர்ச்சனை கூடையில் இருந்து பூஜைக்கான பொருட்களை எடுத்து வைக்க, “நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா பாப்பு?” ஸ்ரீராம் கேட்க நிமிர்ந்தவள், “எலுமிச்சை பழம் தட்டி சாறுபிழிஞ்சு தரீயா சின்னா?” என்று மூன்று எலுமிச்சையை அவனிடம் கொடுத்து விட்டு அம்மனுக்கு பூமாலை சாற்றி அங்கிருந்த விக்கிரங்களுக்கும் பூக்களை வைக்கலானாள்.
கைகளில் எலுமிச்சையை உருட்டியபடி வெளியே வந்தவன், “சக்தி, இந்த பழத்தை எப்படி டா தட்டறது?” என்று விளங்காமல் கேட்டு வைக்க, அவனது கைப்பேசியை நோண்டி கொண்டிந்த சக்திவேல், “ஐயோ ஸ்ரீ, எம்புட்டு அறிவு உனக்கு?” என்று கிண்டல் செய்தவனை பெரியவன் முறைக்க, “பழத்தை கீழ வச்சு நசுக்கி ரெண்டா பிரிச்சு சாறு பிழிஞ்சு கோடு போதும், அதுக்கு முன்னாடி உன் மொபைல் பாஸ்வேர்டு சொல்லிட்டு போ” என்றான்.
“ரொம்ப தான் கொழுப்பு டா உனக்கு” என்று அவன் தலையை தட்டிவிட்டு, தன் கைப்பேசியில் கடவுச்சொல் இட்டு திறந்து அவனிடம் நீட்ட, அது அவர்களை தாண்டி, பறந்து மண் தரையில் விழுந்தது.
ஆண்கள் இருவரும் திரும்பி பார்க்க, எதிரே மூன்று முரடர்கள் நின்றிருந்தனர். அதில் முன்னே வந்தவன் தான் கையில் இருந்த நீள கம்பால் ஸ்ரீராமின் கைப்பேசியை தட்டி விட்டிருந்தான்.
“அறிவிருக்கா உங்களுக்கு தடிமாட்டு பயலுகளா, அதென்ன நீங்க வச்சிருக்க மாதிரி டப்பா மொபைல்னு நினச்சீங்களா? டச் மொபைல், ரிப்பேர் ஆகி இருந்துச்சு நீங்க தான் ஆயிரம் கணக்குல காசு எண்ணி வைக்கணும்” கைப்பேசி கீழே விழுந்த ஆத்திரத்தில் சக்திவேல் எகிர,
“ஏய் அரையணா, ரொம்ப எகிருன வகுந்துடுவேன் பார்த்துக்க, இங்க என்னடா பண்ணிட்டு இருக்கீக?” முன்னவன் அதிகாரமாக வினவினான்.
“கோயிலுக்கு எதுக்கு வருவாக சாமி கும்பிட தான்” சக்திவேல் நக்கலாக பதில் பேச,
அவர்கள் மூவரையும் சந்தேகமாக பார்த்திருந்த ஸ்ரீராம், “சக்தி, நீ அமைதியா இரு” என்று சின்னவனை அடக்கிவிட்டு,
“நாங்க கோயில்ல விளக்கேத்த வந்திருக்கோம், கொஞ்ச நேரத்தில போயிடுவோம்” என்று நிதானமாக பதில் சொன்னான்.
“நம்ப முடியலையேல, வாட்டமான இடம்னு பொண்ணு கிண்ணு கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிறீங்களாலே” பின்னொருவன் முன் வந்து வன்மமாக கேட்க,
“கோவில்ல வந்து கொச்சையா பேச வேணாம் சொல்லிட்டேன்” ஸ்ரீராம் எச்சரிக்க,
“சின்னா, சக்தி விளக்கு ஏத்தணும் சீக்கிரம் வாங்க…!” என்று குரல் கொடுத்தபடி வெளியே வந்த சீதா, அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து தாமதித்து நின்றாள்.
“அண்ணே அவ தான்” மூன்றாமவன் அவளைக் கைக்காட்டி அவளை நோக்கி செல்ல முற்பட, ஸ்ரீராமும் சக்தியும் அவர்களை தடுத்து குறுக்கே நின்றனர்.
“எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு” ஸ்ரீராம் அமர்த்தலாக சொல்ல,
“உன்கிட்ட பேச ஒண்ணுமில்ல, நாங்க வந்ததே அவகிட்ட பேச தான்” என்று எடக்காக பதில் தந்தவன், “என்ன புள்ள, இவன் மனசுல ஆசைய விதைச்சுபுட்டு நீ பாட்டுக்க கண்டுக்காம போறியாமே, இதெல்லாம் நியாயமில்ல புள்ள, உம்மேல உசுர சேத்து வச்சிருக்கான், இவனை பாத்து செய்” தன் பக்கம் இருந்த இளைஞனைக் காட்டி அவளிடம் குரல் உயர்த்தி பேசினான்.
“என்ன முத்தையா தகறாரு பண்ண ஆளுங்கள சேர்த்துட்டு வந்திருக்கியா? எனக்கு சின்ன வயசுலயே என் மாமாவ முடிவு பண்ணிட்டாங்கன்னு சொன்னேல்ல, உம் மரமண்டையல ஏறலையா?” சீதாவின் குரல் திடமாகவே அந்த இளைஞன் மீது சீறியது.
“முடிவு தானே பண்ணிருக்காவுவ, தாலி கட்டி பூடலையே, ம்முன்னு சொல்லு இங்கனையே முத்தையன தாலி கட்ட சொல்லுறேன்” மற்றொருவன் எடக்காக பேச,
“இஷ்டமில்லன்னு சொன்னா புரியாதா உங்களுக்கல்லாம், மரியாதை கெடும் முன்ன இங்கிருந்து போயிடுக” சீதா சிறிதும் அச்சமற்று கோபமாகவே எச்சரித்தாள்.
“ஏய், என்னயவிட உசந்த மவராசன் உனக்கு வேற எவன்டி வாய்ப்பான்? இங்கன இப்பவே உன்ன தூக்கிட்டு போய் எனக்கானவளா ஆக்கிகிறேன் பாருடி” என்று வீராவேசமாக முன்னேறியவனை தடுத்த ஸ்ரீராம், “அவதான் பிடிக்கலன்னு தெளிவா சொல்றா இல்ல, உன் வரட்டு வீரத்தை பொண்ணுகிட்ட காட்ட வெக்கமில்ல உனக்கு, பிரச்சனை பண்ணாம மரியாதையா கிளம்புங்க” அமர்த்தலாக எச்சரித்தான்.
“எங்களை இப்படி வம்புக்கு இழுத்தீங்கன்னு தெரிஞ்சது, எங்கூர் ஆளுங்க உங்கள நார்நார் கிழிச்சு போட்ருவாக பார்த்துக்க” சக்திவேல் அதட்டலாகவே குரல் கொடுக்க, அதில் முகம் சிவந்து எதிரில் நின்றவன் கொடுத்த அறையில் சக்திவேல் கீழே விழுந்திருந்தான்.
அடுத்த விநாடி ஸ்ரீராம் விட்ட உதையில் சக்தியை அறைந்தவன் “ஆ…” வென வலியில் மடங்கி விழ, மற்றொருவன், “ஏய்…” என்று ஸ்ரீராம் முகத்தில் குத்துவிட்டிருந்தான். அதில் கிறுகிறுத்த தலையைக் குலுக்கிக் கொண்டவன், தான் வாங்கியதை திருப்பி இரண்டு குத்துக்களாக அவன் முகத்தில் இறக்கி அவன் வயிற்றை கால்மூட்டால் தாக்கி உதைத்து கீழே தள்ளினான்.
சக்திவேல் எழுந்து வந்து தன்னை அடித்தவன் கண்களில் மண்ணை தூவி அவன் மேலேறி ஆவேசமாக மிதித்து குதித்தான். “என்னை அடிச்சிட்ட இல்ல நீ” என்று.
இந்த இடைவெளியில் முத்தையா, சீதாவை பிடித்து இழுக்க முயல, அவன் கையை தட்டி விட்டவள், அவனை தன் பலங்கொண்ட மட்டும் வேகமாக தூர நெக்கி தள்ள, அவன் பின்னோக்கி தூணில் பலமாக மோதி கொண்டான்.
அவளிடம் இந்த தாங்குதலை எதிர் பார்க்காதவன் தூணில் மோதிய வேகத்தில் அவன் பின்னந்தலை அடிப்பட்டு வலியெடுக்க, ஆத்திரமாக கையிலிருந்த கொம்பை அவளை நோக்கி வீசி தாக்க, அவள் வயிற்றில் அடிப்பட்டு சுருண்டு விழுந்தாள்.
அதை பார்த்து ஓடிவந்த ஸ்ரீராம் அவன் கையிலிருந்த கொம்பை தட்டிவிட்டு, அவன் மூக்கை நோக்கி நான்கு வேகக்குத்துகள் விட்டு உதைத்து தள்ளிவிட்டு சீதாவிடம் வந்தான். அவளை தூக்கி நிறுத்த முயல, “ரொம்ப வலிக்குது சின்னா…” சீதாவின் குரலும் உடலும் அவன் கைகளில் தோய்ந்தது.
அதேநேரத்தில் வெட்டருவால், வேல்கம்பு ஏந்தியபடி ஒரு கூட்டம் அவர்களை நோக்கி ஓடிவந்தது.
அதில் சங்கரனும் மாரியும் மற்றவர்களும் முன்னே வருவதை கவனித்த சக்திவேல், கீழே கிடந்த கம்பை எடுத்து, அங்கங்கே விழுந்து கிடந்த மூவறையும் கோபம் தீராமல் விளாசினான். “இனிமே என் அக்கா பக்கம் வருவீங்களா டா” என்று அரற்றியபடி.
விசயம் அறிந்து விரைந்தோடி வந்த சங்கரன் பார்வையில் பட்டது, கோயிலின் வெளியே மூவர் வலியில் முணங்கியபடி விழுந்து கிடக்க, வீங்கிய கன்னமும் வழியும் வேர்வையாக நின்றிருந்த சக்திவேலும், செம்மண் படிந்து கசங்கிய சட்டையோடு நின்ற ஸ்ரீராமும், அவன் கைகளில் தோய்ந்து கிடந்த சீதாவும் தான்.
பதறியவர் மகளின் அருகே ஓடிவந்து பார்க்க, “வயித்துல அடிப்பட்டிருக்கு மாமா, வலியில ரொம்ப துடிக்கிறா நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்” ஸ்ரீராம் அவரிடம் சொல்லிவிட்டு, அவளை இருகைகளில் ஏந்திக்கொண்டு வண்டியை நோக்கி விரைந்தான்.
சக்திவேலும் அவனுடன் ஓடிவர, “பாப்பு, வலி பொறுத்துட்டு உக்காரு, கொஞ்ச தூரம் தான் போயிடலாம்” என்று பைக்கை உயிர்பிக்க, சீதாவை அமர வைத்து அவளை பிடித்தபடி சக்திவேல் பின்னால் அமர்ந்து கொள்ள வேறெதை பற்றியும் யோசிக்காமல் ஸ்ரீராம் கிளம்பிவிட்டான்.
*********
ஊர் பஞ்சாயத்து கூடியிருந்தது. அந்த மூவரும் உடல் மொத்தம் காயங்களோடு கிழிப்பட்ட சட்டையோடு மரத்தில் கட்டப்பட்டு கிடந்தனர்.
முத்தையனின் பெற்றவர்கள் கண்ணீரோடு ஊர் சபை முன்பு கைக்கூப்பி மன்னிப்பு வேண்டி நின்றனர்.
“உங்க மகன், ஊருவிட்டு ஊருவந்து எங்க ஊரு பொண்ணை அடிச்சு போட்டிருக்கான். அவனை மன்னிச்சு விட சொல்றீகளா?” தலைவர் ஆவேசமாகவே கேட்க,
“புத்தி கெட்டு செஞ்சுபுட்டான், சேருவார் தோஷம் அவனை இங்க கொண்டு வந்து நிறுத்திடுச்சு, பெரிய மனசு பண்ணணும் ஐயா” அவனின் தந்தை மன்றாட,
“எங்க பொண்ணுமேல கைநீட்ற அளவு போயிருக்கானுக, அந்த குற்றத்துக்காக இந்த மூணு பேரையும் அவங்க சேர்ந்தவங்களையும் குடும்பத்தையும் சுத்துபட்டு எந்த ஊருலையும் சேர்க்க கூடாதுன்னு பஞ்சாயத்து ஒருமனதா முடிவெடுத்து இருக்கு… இது போக போலீசுக்கு தகவல் சொல்லியாச்சு, சட்டப்படி தண்டனையும் இவங்க அனுபவிக்கணும்” என்று தீர்ப்பு எழுதி அங்கிருந்த முக்கிய தலைகளிடம் கையெழுத்து பெறப்பட்டது.
சங்கரன், ஸ்ரீராம், சக்திவேல் பஞ்சாயத்து முடிந்து வீட்டுக்குள் வந்து அமர, மரகதம் மூவருக்கும் செம்பில் தண்ணீர் மோந்து வந்து தந்தார்.
“பஞ்சாயத்து என்னாச்சு மாமா?” மரகதம் கணவனை விசாரிக்க,
“மூணு பேரையும் போலிஸ்ல ஒப்படைச்சாச்சு, அவக குடும்பத்தை சேந்தவங்களையும் ஊரவிட்டு தள்ளி வச்சிட்டாங்க” என்க.
“ஆத்தா, உன் சந்நிதானத்துல விளக்கேத்த வந்த புள்ளைய இப்படி வலியில துடிக்க வச்சிருக்கானுங்களே, அவனுங்க கைகால் விளங்காம போக” மரகதம் மனம் பொறுக்காமல் புலம்பி கலங்கினார்.
“இப்ப, வலி பரவால்லையா சீதாம்மா?” என்று மகளிடம் சங்கரன் வாஞ்சையாக கேட்டார்.
சீதா கூடத்து சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள். வலி ஓரளவு குறைந்து இருந்தது அவளுக்கு. சற்று நேரம் முன்பு தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள்.
“இப்ப குறைஞ்சிருக்கு ப்பா” என்று சோர்வாக பதில் தந்தாள்.
“அந்த முத்தையா யாரு மாமா? நேத்து அவனுங்க வேணும்னே தான் எங்ககிட்ட சண்டைக்கு வந்தாங்க” ஸ்ரீராம் கேட்க,
“கொஞ்ச நாளைக்கு முன்ன சீதா மேல ஆசபட்டு பொண்ணு கேட்டு வந்தான் பா, நாந்தான், ‘என் மகளை எங்க அக்கா மகனுக்கு பேசி வச்சிருக்கறதா’ சொன்னேன். அப்பவே எகிருனான். நான் புத்தி சொல்லி அனுப்பி வச்சேன். அப்புறமும் சீதாவ பார்த்து பேசி இருக்கான். அப்பவும் மிரட்டி தான் அனுப்புனேன். கொஞ்ச நாள் தலைக்காட்டாம இருந்தான்…
இப்ப சீதா தனியா கோயிலுக்கு போறது தெரிஞ்சு பிரச்சனை பண்ண வந்திருக்கான். நேத்து நீ கூட போனதால பெரிசா பிரச்சனை ஆகல” சங்கரன் விளக்கமாக சொல்லி நிம்மதி பெருமூச்செறிந்தார்.
நேற்று மட்டும் அங்கு ஸ்ரீராம் துணைக்கு இல்லாமல் போயிருந்தால்! அதற்கு மேல் யோசிக்கவும் அச்சமாக இருந்தது அவர்களுக்கு.
“நான் இனிமே சிலம்பம் கத்துக்க போறேன் ப்பா” சக்திவேல் அழுத்தமாக சொல்ல, சங்கரன் சம்மதமாக தலையசைத்தார்.
“நம்ம முனுசாமிகிட்ட சொல்லி விடுறேன் நாளைக்கு காலங்காத்தால ஆத்தாண்ட போய் அவங்களோட பயிற்சி எடுத்துக்க”
“ஏன் ஆத்தாண்ட வரை போகணும்?” சக்தி குறுக்கே கேட்க,
“ஆத்து மணல்ல கொம்பு சுத்தி கீழ விழுந்தா கூட பெருசா அடிபடாது டா அதான்” விளக்கம் சொல்லிவிட்டு சங்கரன் எழுந்து சென்றார்.
அவர் சொன்னதற்கு சரியென்று தலையாட்டிய சின்னவன், “சும்மா சொல்ல கூடாது ஸ்ரீ, நீ கும்முனு கும்முனு விட்ட குத்துல அவனுங்க மூக்கு வாயெல்லாம் பேந்து ரத்தம் கொட்டுச்சு” என்று காற்றில் குத்துவது போல பாவனை செய்து, “பாக்க தான் அமுல்பேபி மாதிரி இருக்க, சண்டையெல்லாம் கலக்கற” என்று துள்ளலாக சிலாகித்தான்.
“அது பெருசா ஒண்ணும் இல்ல டா, காலேஜ்ல நான் பாக்ஸிங் ப்ராக்டீஸ் எடுத்து இருக்கேன் அதான்” என்று ஸ்ரீராம் சாதாரணமாக சொல்லி சக்திவேலின் தலையைக் கலைத்து விட,
“ஓ அதான் உன்னோட ரெண்டு குத்துக்கே அவனுங்க கீழ விழுந்து மண்ணை திண்ணாங்களா?” சக்திவேல் இன்னும் உற்சாகமாக பேசிக் கொண்டு போனான். இப்போது ஸ்ரீராமை இன்னும் அதிகமாக பிடித்தது அவனுக்கு.
ஸ்ரீராம், பாப்புவிடம் திரும்ப, நன்றியோடு சின்ன புன்னகை தந்தாள் அவள். அதிலும் வலியின் சோர்வு கலந்திருந்தது.
************
வருவாள்…