Antha Maalai Pozhuthil – 5

அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 5

“என்ன மாப்பிள்ளை, இந்திரா விஷயம் எல்லாம் மாமா இருக்கும் பொழுது பேசினது தானே? இப்ப என்ன நீங்க மாத்தி பேசறிங்க. ” என்று சுரேஷ் குற்றம் சாட்டும் விதமாக கேட்க, ரகுநந்தனுக்கு புரை ஏறியது.

 

“மாமா, அவங்க கிழிச்ச கோட்டை நீங்க தாண்ட மாட்டீங்கன்னு சொன்னாங்களே? மாமா கொடுத்த வாக்கை நீங்க  காப்பாத்தலைனா எப்படி மாப்பிள்ளை?” என்று சுரேஷ் வரிசையாக அடுக்க, ரகு தன் தாயைக்  கேள்வியாகப் பார்த்தான்.

 

பவானியம்மாள் முதலில் தன் மகனைப் பார்த்து  மறுப்பாகத் தலை அசைக்க எத்தனித்து, தன் மகள் ரேவதியின் கண் ஜாடையில், ‘ஆம்…’ என்பது போல் தலை அசைத்தார்.

‘நான் வெளிநாட்டுக்குப் படிக்கக் கிளம்பும் பொழுது, அப்பா நல்லா தான் இருந்தாங்க. இடையில் தான் எதோ நடந்திருக்கு. அம்மா ஏன் ரேவதியின் கண் அசைவில் செயல்படுறாங்க? அம்மா, அக்காவுக்கு பயப்படுறாங்களா?’ என்ற எண்ணத்தோடு பதில் எதுவும் பேசாமல், சாப்பிட ஆரம்பித்தான் ரகுநந்தன்.

 

“என்ன மாப்பிள்ளை எதுமே சொல்லாம சாப்பிடுறீங்க?” என்று சுரேஷ் கேட்க, ‘இப்ப நான் பதில் சொல்லாதது  பிரச்சனையா ? இல்லை, சாப்பிடறது பிரச்சனையா?’ என்பது போல் பார்த்தான் ரகுநந்தன்.

 

ரேவதி, தன் கணவனைக் கண் பார்வையில் எச்சரிக்க, ‘பதில் தானே என்பது போல்…’ “நான் நாளைக்கி பிசினெஸ் பார்க்க வரேன் அத்தான்.” என்று ரகுநந்தன் கூற, சுரேஷ் அவனை கூர்மையாகப் பார்த்தான்.

 

“அம்மா… லேசா ஒரு தோசை மிளாகாய்போடி போட்டு.” என்று ரகுநந்தன் அங்கு எதுவும் நடவாது போல் கேட்க, “எத்தனை வயசு வரைக்கும், உனக்கு அம்மா…” என்று ரேவதி ஆரம்பிக்க, “ரேவதி…” என்று தன் மனைவியை அதட்டினான் சுரேஷ்.

 

“நாளைக்கி முடியாது மாப்பிள்ளை. நாளன்னைக்கு வாங்க. நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று சுரேஷ் கூற, ‘அத்தான் முன் போல் இல்லை. என்னிடம் இப்படி தெனாவட்டா பேச மாட்டாங்க. அப்பா போனதுக்கு அப்புறம், என்னை பார்த்தா தொக்கா போய்டுச்சா?’ என்ற எண்ணம் எழ, சுரேஷை ஆழமாகப் பார்த்தான் ரகுநந்தன்.

 

‘இவங்களை எடுத்தெறிந்து பேச எனக்கு எத்தனை நொடிகள் ஆகும்?’ அவன் தன் தாயைப் பார்த்தான். சமையல் அறையின் வாசலிருந்து அவர் கண்களில் தெரிஞ்ச இறைஞ்சுதல் பார்வை, அருகே அமர்ந்திருக்கும் கவின், எதிரே இருக்கும் , அவன் தமக்கையின் வாழ்க்கை என அனைத்தையும் மனதில் கொண்டு ஒரு நொடி நிதானித்தான்.

 

“ஒரு நாள்ல என்ன இருக்கு அத்தான். நாளான்னைக்கு வரேன்.” என்று சம்மதம் தெரிவித்து, அம்மா கொண்டு வந்த தோசையைக் கவினுக்கு வைக்கச் சொல்லிவிட்டு, எழுந்து  சென்றான் ரகுநந்தன்.

 

அவன் அறியவில்லை, அந்த  ஒரே நாளில்  மாலைப் பொழுதில்  அவன் வாழ்க்கை திசை மாறப்போகிறது என்று!

 

வல்லநாட்டில்,  மறுநாள் காலையில், பசுபதிக்கு எட்டிய செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோபம் தலைக்கு ஏறி, அவன் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். கோபம் அவன் மூளையை மழுங்கச் செய்தது. மனமும் மரத்து விட்டதோ? அவன் அறியவில்லை. ஆனால், அந்த மாலையில் அவன் செய்ய வேண்டியதைத் திட்டமிட்டான் பசுபதி.

 

சட்… சட்… சட்டென்று மழைத்துளி. பசுபதியின் மேல் விழ, பசுபதி தன்னை மீட்டுக்கொண்டான். தன் தலையைத் திருப்பி பார்த்தான்.

ஆரம்பித்த வேகத்தில் நின்று விட்டது மழைத்துளி. அவன் சிந்தனையை கலைக்கவே வந்திருக்கும் போலும்!

 

பசுபதியும் தன்னை மீட்டுக்கொண்டான்.

 

“ச்… ச்ச… கல்யாண மண்டபத்தில் இருந்துகிட்டு எதுக்கு தேவை இல்லாத சிந்தனை?” என்று முனங்கிக் கொண்டு அலைபேசியில் அபிநயாவை அழைத்தான் பசுபதி.

 

அந்த அலைபேசி அழைப்பில் தன்னை நினைவுகளிலிருந்து மீண்டு கொண்டாள் அபிநயா.

 

“அத்தான்….” என்று அபிநயா பேச, “நான் உன்கிட்ட சத்த பேசணும் அம்முக்குட்டி. பின்னாடி  தோட்டத்தில் இருக்கேன். விரசலா வா!” என்று பசுபதி உரிமையாக அழைத்தான்.

 

‘யாரவது பார்த்தா என்ன நினைப்பாக?’ என்ற கேள்வி அபிநயா மனதில் எழுந்தது. ‘ஆனால், அத்தான் கிட்ட பேசலைனா, அத்தான் கிளம்ப மாட்டாக. என்ன நினைப்புல வந்திருக்காகன்னு கேட்கணும். இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.’ என்ற எண்ணத்தோடு, “அத்தான், நான் இருக்கிற ரூமுக்கு வாங்க.” என்று கூறினாள் அபிநயா.

 

“உங்க அப்பன் பார்த்தா பிரச்சனை ஆகிரும். நீ வா!” என்று பசுபதி பிடிவாதமாகக் கூறினான்.

 

சில நொடி யோசனைக்குப் பின், அபிநயா பசுபதியைப் பார்க்க சென்றாள். அபிநயா, எங்கோ செல்வதைப் பார்த்த ரேவதி, தன் தம்பி அறைக்குச் சென்று, ரகுநந்தனை அழைத்தாள்.

 

தன் தமக்கையின் அழைப்பில், ரகுநந்தன் நிகழ்வுக்குத் திரும்பினான். ரகுநந்தனிடம், அபிநயா எங்கோ செல்வதை தெரிவித்துக் கொண்டிருக்க, அவன் அறையின் ஜன்னல் வழியாகப் பார்க்க, பசுபதி நின்று கொண்டிருப்பதும், அவன் அருகே அபிநயா செல்வதும் தெளிவாகத் தெரிந்தது.

 

ஆனால், அவர்கள் பேசுவதை ரகுநந்தனால் கேட்க முடியவில்லை.

 

தோட்டத்தில் பசுபதி எங்கோ, பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

 

“அத்தான்!” என்ற அபிநயாவின் அழைப்பில் பசுபதி திரும்பினான்.

பசுபதி, அபிநயாவை ஆழமாகப் பார்த்தான்.  ‘தைரியசாலி, நிமிர்வானவள் கண்டிப்பானவள். ஆனால், எந்த நேரமும் குறும்பு மின்னும் கண்களோடும், புன்னகையோடும் துள்ளிக் குதிக்கும் மான் குட்டி போல் சந்தோஷமாகவும், விளையாட்டுத் தனத்தோடும் இருப்பாளே? அதை அழித்து, முழுதாக மண்ணோடு மண்ணாகப் புதைத்தவன் நான் தானே?’ என்ற எண்ணத்தோடு அவன் கண்கள் கலங்கியது.

 

“இந்த அத்தான் கூப்பிட்டா, வர கூட யோசிக்குற? நான் அவ்வளவு மோசமானவனா?” என்று பசுபதியின் குரல் உடைய, “அத்தான்!” என்று விம்மினாள் அபிநயா.

 

“அம்முக்குட்டி… அழாத. என் அம்முக்குட்டி அழ மாட்டா. நீ அழக் கூடாது. கிளம்பு என்னோட.” என்று கூறினான் பசுபதி.

 

“அத்தான்!” அபிநயா கோபமாகக் கூற, “இந்த கல்யாணம் பிடிக்காமல் தானே அழற?” என்று பசுபதி கடினமாகக் கேட்டான்.

 

“அத்தான்… நான் அப்படி சொன்னேனா? உங்களுக்கு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணாம, நான் பண்ணிக்கறனேன்னு  குற்ற உணர்ச்சியில் அழறேன்.” என்று அபிநயா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

 

அபிநயாவின் முன் மண்டியிட்டான் பசுபதி. “என்னை மன்னிக்கக் கூடாதா?” என்று கை எடுத்துக் கும்பிட்டான்.

 

“அத்தான்… ” அழைத்துக் கொண்டு அவன் கைகளைத் தட்டிவிட்டாள்.

 

“எழுந்திருங்க…” அதிகாரமாகக் கூறினாள் அபிநயா.

 

“நீ மன்னிச்சிட்டேன் சொல்லு. என்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லு.” என்று பசுபதி பிடிவாதம் பிடிக்க, “நான் அன்னைக்கே  உங்களை மன்னிச்சிட்டேன் அத்தான். இல்லைனா உங்க கூட பேசிட்டு இருக்க மாட்டேன்.” என்று நிதானமாகக் கூறினாள் அபிநயா.

“உங்களை அத்தான்னு கூப்பிட்டும் இருக்க மாட்டேன்.” என்று அழுத்தமாக நிதானமாக வெளிவந்தன அபிநயாவின் வார்த்தைகள்.

 

“அப்புறம் என்ன பிரச்சனை? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.” பசுபதி கூற, “உங்க கிட்ட கேட்டுட்டு தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன் அத்தான். நீங்க வேண்டாமுன்னு சொன்னா, இப்ப கூட இந்த கல்யாணத்தை நிறுத்தறேன் அத்தான். ஆனால், அம்முக்குட்டி உங்களை ஒருநாளும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா.” அபிநயா தெளிவாகக் கூறினாள்.

 

“அன்னைக்கு நடந்தது பாத்திருக்குற மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா… உன் வாழ்க்கை…” என்று பசுபதி தடுமாற, “அப்பா… எல்லாத்தையும் மாப்பிள்ளை வீட்டில் சொன்னதாதான் சொன்னாங்க. அப்படியே இல்லைனாலும், அதை நான் பார்த்துக்கறேன்.” கறாராகக் கூறினாள் அபிநயா.

 

“என்னை மன்னிச்சி… நான் செய்ததை மன்னிச்சி…” என்று பசுபதி தடுமாற, “மன்னிக்கும் இதயத்தைக் கொடுத்த சாமி, மறக்கும் இதயத்தைக் கொடுக்கலை அத்தான்.” என்று அபிநயா, பசுபதியைப் பார்த்து குற்றம் சாட்டும் குரலில் கூறினாள்.

 

“என்னால், நீங்க செய்ததை ஒருநாளும் மறக்க முடியாது அத்தான்.” மறுப்பாகத் தலை அசைத்தாள் அபிநயா.

“எல்லா பெண்களும் மன்னிச்சி ஏத்துப்பாங்களோ? இல்லை மறந்து ஏத்துப்பாங்களோ? இல்லை இந்த சமுதாயத்துக்குப் பயந்து ஏத்துப்பாங்களோ? எனக்கு தெரியலை அத்தான். ஆனால், இந்த அபிநயாவால் முடியாது.” என்று பசுபதிக்குப் புரிய வைக்கும் நோக்கோடு கூறினாள் அபிநயா.

 

பசுபதி, அவளைப் பரிதாபமாகப் பார்க்க,  “நீங்க என் அத்தான். நான் உங்க அம்முக்குட்டி. அதில் எந்த மாற்றமுமில்லை. என் அத்தான் அப்படிங்கிற வார்த்தை உண்மைன்னா, நாளைக்கு என் கல்யாணத்துக்கு வந்து அட்சதை போடுங்க. அவ அத்தனுக்காக, காத்திருப்பா அம்முக்குட்டி.” என்று கூறி மடமடவென்று உள்ளே சென்றாள் அபிநயா.

 

மறுநாள் காலை முகூர்த்தம்.

 

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் ரகுநந்தன். சிவப்பு நிற பட்டு புடவையில், ஓவியமாக இருந்தாள் அபிநயா. இருவரின் தோற்றத்தை அதற்கு மேல் வருணிக்கத் தேவை இல்லை என்பதை போல் அவர்கள் இருவரின் எண்ணமும் எங்கோ குடிகொண்டிருந்தது.

 

ரகுநந்தனின் சிந்தனையோ, ‘இந்த கல்யாண வாழ்க்கை தேவையா? என்னோடு சேர்ந்து இன்னொரு பெண்ணும் கஷ்டப்படணுமா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தது.

 

அபிநயாவின் கண்களோ, பசுபதியைத் தேடிக் கொண்டு இருந்தது.

 

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று சத்தம் எழ, அபிநயாவின் கண்களில் அலைப்புறுதல் அதிகமாகியது. அனைவரின் அட்சதையும் அவள் மேல் விழ, தேடிய அவள் விழிகளுக்கு, பதிலாக ஓரமாக நின்று அட்சதையைத் தூவிக் கொண்டிருந்தான் பசுபதி.

 

அபிநயாவின் முகத்தில் சந்தோசம். பசுபதி தூவிய அட்சதையில் அவள் மனம் குளிர, அவள் முகத்தில் புன்னகை கீற்று. அதில் அபிநயாவின் முகம் இன்னும் ஒளிர, அவள் கழுத்தில் தாலி கட்டுகையில்  ரகுநந்தனின் கண்கள் அவனையும் அறியாமல்  அவளை ஏறிட்டுப் பார்த்தது.

 

கள்ளம் கபடம் இல்லாத அபிநயாவின் சிரிப்பில், ரகுநந்தனின் கண்கள் அவனை ஆழமாகப் பார்த்தது.

“மாப்பிளை… பொண்ணை பார்த்து போதும். தாலி கட்டுங்க.” என்று யாரோ கேலியாகக் கூற, ரகுநந்தன் நிதானத்திற்கு வந்து தாலியைக் கட்டினான்.

 

அதே நேரம், ‘ரகுநந்தன், இவள் கழுத்தில் தாலி கட்டிட்டா, என் கழுத்தில் இருக்கும் தாலிக்கு என்ன அர்த்தம்?’ என்ற கேள்வியோடு மணமக்களை பார்த்தபடி  தன் கழுத்தில் உள்ள மஞ்சள் கயிற்றை ஏளன புன்னகையோடு தடவினாள் இந்திரா.

 

பொழுதுகள் விடியும்…