Alaikadal 17 a

மறுநாள் காலை சூரியன் அனைவரையும் எழுப்புவதற்காக மேலெழும்ப அதற்கு அவசியமேயின்றி இரவு முழுதும் தூங்காமல்… இல்லை இல்லை தூக்கம் வராமல் முழித்தே இருந்தனர் ஆரவமுதனும் பூங்குழலியும்.

நேற்று நடந்த சம்பவம் இருவரையும் சரிசமமாக பாதித்திருக்க மறக்க முயன்றும் முடியாமல் ஒருவித புழுக்கத்திலேயே இரவை ஓட்டியிருந்தனர்.

தன்னையறியாமல் தூங்கிய பூவேந்தன் விழித்து அரைகுறையாய் எழ, கையில் ஏதோ தட்டுப்பட்டது.

நன்றாய் முழித்து பார்த்ததில் அழகாய் கையில் சிரித்துக்கொண்டிருந்தது அவனின் செல்பேசி… ஆரவ் நேற்று நீட்டிய அதே செல்பேசி.

உடனடியாக பூமாவைத் தேடிச் செல்ல, தாயின் அறையில் உடற்பயிற்சியை செய்துக்கொண்டிருந்தவள் அவன் வந்ததும் அதை நிறுத்தி மூச்சுவாங்க அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“பூமா இது நீதான் வச்சியா?” கையில் இருந்த செல்பேசியை காட்டிக் கேட்க

“ஹ்ம்ம்…”

“இதை வச்சிக்கவா அப்போ?”

“ஹ்ம்ம்…”

“அண்ணா கூப்பிட்டா பேசவா?”

இதற்கு சற்று தாமதமாகதான் பதில் வந்தது அதுவும் ஹ்ம்ம்தான்.

“என் மேல கோபமா இருக்கியா?”

“இல்ல…”

அவளருகே மண்டியிட்டு அமர்ந்தவன், “அப்புறம் ஏன் இப்படி ஒத்த வார்த்தைல பதில் சொல்ற?” என்றதும்தான் மீண்டும் நத்தை ஓட்டுக்குள் செல்வதுபோல் பழைய குணம் தலைதூக்கியததை உணர்ந்தாள்.

மகிழ்ச்சியில் நன்றாக பேசுபவள் கோபமோ வருத்தமோ வந்தால் ஏழு வருட பழக்கமாய் ஒன்று அமைதியாகி விடுகிறாள் அல்லது வார்த்தைகளை சிதறடிக்கிறாள். சுருங்கச் சொன்னால் தன் உண்மையான குணத்திற்கும் ஏழு வருட மாற்றத்திற்க்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் பூங்குழலி.

பூங்குழலி, “சாரி…” என

“ஹேய் பூமா… எதுக்கு சாரிலாம் கேட்குற” என பதறிப்போனான் தம்பிக்காரன்.

“உன்னை ரொம்ப அடக்குறேனா… நேத்து கோவம்… அதான்” என்று விளக்கம் சொல்ல முயல்கையில்

“ஐயே அதெல்லாம் நேத்தே மறந்தாச்சு… அப்படியே அடக்குனாலும் என்னக்கா தப்பு? அதெல்லாம் நீ என் நல்லதுக்குதான சொல்லுவ… இல்லைன்னா உனக்கு பிடிக்கல அதனால சொல்லுவ. இதுக்கா மூஞ்ச தூக்கிவச்சிட்டு உக்காந்திருக்க? நீ அடக்குனாலும் நான் அடங்கிப்போவேன் பூமா… மை செல்ல பூமா” தாடையைப் பிடித்துக்கொஞ்ச பூங்குழலியின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

‘பார் பார் என்னமோ சொன்னியே என் தம்பியோட பாசத்தைப் பார்’ என்று ஆரவ்விடம் காட்டி பெருமை பீத்தவும் ஆசை வந்தது.

அதை ஒத்துக்கியவள், “டென்த் முடிஞ்சி என்ன படிக்குற குட்டா? லெவந்த்தா இல்ல டிப்ளமோவா?” ஏற்கனவே கேட்க நினைத்து மறந்ததை இப்போது மறக்காமல் கேட்க

பூவேந்தன், “என்னக்கா இப்படி கேட்டுட்ட… நான் லெவந்த் தான் ஏன்?”

“நேவி ஸ்கூல் கொச்சில இருக்கு… அதுல உனக்கு மார்க் வந்த பிறகு சீட் கேட்கணும் அதான்” என்றாள் யோசனையுடன்.

“கொச்சியா! இங்கேயே இருக்கேன்க்கா மலையாளம் நேக்கு தெரியாதல்லோ” என்று விளையாட்டாய் மறுக்க

“இங்க எங்க இருப்ப? ஹாஸ்டல்ல தானே. அதுக்கு அங்க வந்து இருக்கலாம். உன்னை பத்தி கவலைப்படாம நிம்மதியா இருப்பேன்” என்றாள் இப்போதே அங்கு சேர்த்த நிம்மதியில்.

அதை ஒத்துக்கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் ஒதுக்கி வைத்தான் வேந்தன்.

அடுத்தடுத்த நாட்களில் ஆரவ் பேசும் பொழுது பூவேந்தனும் பேசிவிட்டான். ஆனால் கவனமாக தமக்கையை குறித்த எந்த பேச்சையும் அங்கே எடுக்கவில்லை. அதே போல் தமக்கையிடம் ஆரவ்வை குறித்த பேச்சும் இல்லை. பூவேந்தன் அதில் தெளிவாக கரைகண்டிருந்தான்.

ஆனால் அவன் ஒன்றை அறியவில்லை. பூவேந்தனின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த செக்யூரிட்டி மூலம் இருவரைப் பற்றிய தகவல்கள் வந்துக்கொண்டேதான் இருந்தது ஆரவ்விற்கு.

நாட்கள் அதன் போக்கில் சண்டை சச்சரவின்றி செல்ல, ‘எப்படி அப்படியே போவோம் இதோ வந்துட்டோம்ல’ என்று மீண்டும் இருவரும் முட்டிக்கொள்ளும் நாள் விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.

**********************************

வேந்தனின் பிறந்தநாள் வேறு அடுத்த வாரம் வருவதால் அதற்கு என்று புதுத்துணி எடுக்க தமக்கையும் தம்பியும் அன்று துணிக்கடைக்கு வந்திருந்தனர்.

அங்கு இருந்த ஏராளமான சுடிதார், சல்வார், சோளி வகையறாக்களைக் கண்டு எதை எடுக்க என்று குழம்பிய குழலியோ வழக்கம்போல் டிசர்ட் பக்கம் தன் பார்வையை திருப்பினாள்.

பிங்க் வண்ணத்தில் வெள்ளை கோடுகள் போட்ட சட்டை மற்றும் வெள்ளை ஃபேண்ட் எடுத்தாள். ஏற்கனவே ஷாப்பிங் என்று ஊர் சுற்றி நிறையவே வாங்கியிருந்தனர் இருவரும்.

“பூமா மார்டன் ஆகிட்ட போல” என்ற தம்பியின் நக்கலை போடா என்று ஒதுக்கியவள் அடுத்ததாக மூன்றாம் மாடியில் இருக்கும் பூவேந்தனுக்கான ஆண்கள் பகுதிக்கு லிப்ட் ஏறினர்.

“இங்க பாரு இந்த ப்ளூ சர்ட் நல்லாருக்கா? நானும் வெள்ளை ஃபேண்ட் எடுக்கலாம் ஆனா செமத்தியா அழுக்காகும்” என்றான் தமக்கை போலவே எடுக்கும் ஆசையுடனும் அழுக்காகுமே என்ற கவலையுடனும்.

“பாத்துக்கலாம் குட்டா… கொஞ்ச நேரம் போட்டுக்கோ. கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடலாம்… இன்னொன்னு வாங்கு டார்க் கலர்… சினிமா பார்க்க போகணும்ல சோ. கொஞ்சம் நல்ல படமா செலக்ட் பண்ணுடா நானும் பாக்குற மாதிரி. பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு” என்று உற்சாகமாய் திட்டம் தீட்டினாள்.

ஆனால் அவர்களின் திட்டத்தை மட்டுமல்ல பூங்குழலியின் சந்தோஷத்தையும் மொத்தமாய் நீர்முலமாக்கவே கங்கணம் கட்டியிருந்தான் ஒருவன். சந்தேகமே இன்றி சாட்சாத் அவன் ஆரவ்வேதான்.

ஆண்கள் பகுதியில் இருவரும் பிசியாக இருக்கையில் உள்ளுணர்வு உந்த சுற்றும் முற்றும் பார்த்தாள் பூங்குழலி.

இவள் திரும்பியதும் ஒரு பத்தடி தூரத்திலிருந்து அத்தனை நேரம் இவளையே ஆர்வமாய் பார்த்திருந்த ஒருவன் சட்டென்று ஹங்கரில் மாட்டியிருந்த சட்டைக்குள் தலையைப் புதைக்க, அதற்கு முன்பே கவனித்துவிட்டாள் இவள்.

வந்த இடத்தில் பிரச்சினை வேண்டாம் என்றெண்ணி தம்பியை அழைத்து வேறு இடம் செல்ல, அங்கேயும் வந்துநின்றான் இம்முறை ஐந்தடி தூரத்தில்.

ஒருவன் எப்படி பார்க்கிறான் எங்கு பார்க்கிறான் என்று பொதுவாகவே பெண்களுக்கு எப்போதும் எச்சரிக்கை செய்யும் உள்ளுணர்வு. அவளின் கவனம் சுற்றுப்புறத்தில் கண்டிப்பாக இருக்கும்… இருக்கவேண்டும். அதுதானே அவள் கற்ற முதல் பாடம் பொய்யாகுமா என்ன?

என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் தண்ணீர் பருகுவதற்கான மெஷினும் அதற்கு அருகிலேயே கீழே செல்வதற்கான படிக்கட்டும் கண்ணில் பட தம்பியின் காதில் எதையோ கூறினாள் தமக்கை.

கோபத்தில் கொதித்து அவனோடு சண்டையிட சென்றவனின் கையை இறுக பற்றியவள், “சொதப்பாம சொன்னதைச் செய்” என்றாள் அழுத்தமாய்.

பின் அங்கிருக்கும் தண்ணீரைக் குடித்து படியில் இறங்க, இப்போது அவன் மூன்றடி இடைவெளியில் தொடர்ந்தான்.

தமக்கை சைகையாய் கையை உதறியதும் ஓடிவந்து தெரியாமல் மோதுவது போல் தமக்கை பின்னே செல்பவனை மோதினான் பூவேந்தன்.

அதை எதிர்பார்த்திருந்த பூங்குழலியோ தன்மேல் விழுந்து விடாதவாறு ஜாக்கிரதையாய் நகர்ந்துவிட, அடுத்த நிமிடம் படியில் இருந்த நீர் வழுக்கி தடதடவென ஒரு படி விடாமல் சென்று குழந்தைகளுக்கான பகுதியில் விழுந்தான் அவன்.

பின்னாலே ஓடியவந்த வேந்தனோ, “ஐயோ சாரிங்க சாரிங்க… தெரியாம இடிச்சிட்டேன்” என்றவாறு தூக்க, உதவிக்கு வந்த கடை ஊழியரிடம் படியில் தண்ணீர் கொட்டியிருப்பதாகக் கூறினான்.

“பரவால்ல பரவால்ல” என்றுவிட்ட விழுந்தவன் முழுதாய் அதிர்ச்சி நீங்காமலே இடுப்பை பிடித்தவாறு நொண்டிக்கொண்டு லிப்ட்டை நோக்கி சென்றான்.

அவன் சென்றதும் இளையவன், “நல்லவேளைக்கா மண்டை உடையல… ஊப்ஸ்” அடக்கி இருந்த மூச்சு காற்றை பலமாய் விட

பூங்குழலி, “அதான் நான் கீழே நின்னுட்டு இருக்கேன்ல. குப்புற விழுந்தா பிடிச்சிருப்பேன் ஆனா பயபுள்ள உஷாரு. டக்ன்னு உட்கார்ந்து வழுக்கிட்டு போயிட்டான் பாரேன்” பாவனையாய் பாராட்ட, அதில் அடக்க முடியாமல் கலகலவென சிரித்து ஹை ஃபை கொடுத்துக் கொண்டாடினர் இருவரும்.

அன்றைய இரவில் படுக்கையில் படுத்திருந்தாலும் இவர்களின் சேட்டையை நினைத்து நினைத்து சிரித்தான் ஆரவ்.

அப்போது ஏதோ ஒரு உணர்வு உந்த, மீண்டும் ஒருமுறை அன்று அவளின் வீட்டிற்கு சென்றிருந்தபோது நினைத்தது போல் சிரிப்பில் முக்குளித்திருந்த முகத்தைப் பார்த்தான்.

‘இந்த முகம்தான் என்னை பார்த்ததும் கடுகடுன்னு கடுகு மாதிரி வெடிக்குதாக்கும்’ என்றெண்ணிய ஆரவ்வோ விரிந்த புன்னகையுடன் அவனுக்காகக் காத்திருந்த ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவினான்.

அடுத்த நாள் எதேச்சையாக இவர்களின் பிறந்தநாள் பிளான்னை வேந்தனின் மூலம் அறிந்தவனோ, “உனக்கு முன்னாடியே சொல்லிருக்கணும்ல… எப்போதும் போல் சடன்னா சொல்ல நினைச்சி மறந்துட்டேன். அன்னைக்கு காலை ஒன்பது மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வா கார் அனுப்புறேன்” என்றதும்

“அண்ணா பூமா…” என்றான் சங்கடத்துடன். பின்னே அவளே ‘கொண்டாடி எத்தனை வருசம் ஆச்சு’ என்று யோசித்து யோசித்து திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாளே!

“இது இப்போ ஏற்பாடு பண்ணுனதில்லை ரொம்ப முன்னாடி உங்க அக்காவ பார்க்க போறதுக்கும் முன்னாடியே குடுக்க நினைச்சது… இப்போ தள்ளிப்போட முடியாது வேந்தா புரிஞ்சிக்கோ. வேணும்னா உன் அக்காவையும் கூட்டிட்டு வா” எளிதாய் தீர்வு சொல்வதாய் எண்ணி சொல்ல

“இல்ல நான் மட்டும்… இல்ல பூமாவ தனியா விட்டுட்டு வரமுடியாது” குழம்பித் தவித்தான் இளையவன்.

“நோ அவளுக்கும் தெரியணும். சோ கூட்டிட்டு வா… திட்டுனா பிறந்தநாள்ன்னு சொல்லி வாயை மூடச் சொல்லு. அண்ட் உனக்கு கோட் சூட் வழக்கமா வாங்குற இடத்துல சொல்லிருக்கேன் போய் வாங்கிக்கோ. அதை போட்டுட்டுதான் வரணும்… பை வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்” என்றுவிட்டு அலைபேசியை வைக்கச் செல்ல

அவசரமாய், “அண்ணா கார் வேண்டாம் நாங்களே வந்துடறோம்” என்று சம்மதித்தான். சொல்லிவிட்டானே ஒழிய இங்கோ இவனுக்கு பயந்து வந்தது.

தமக்கையிடம் முழுதாக சொல்லாமல், “பூமா… அண்ணா வழக்கமா நாங்க போன கடைக்குப்போய் என்னை சூட் வாங்க சொன்னாங்க வாங்கிட்டு வரவா?” என

“எதுக்கு?” என்றவள் பின் என்ன நினைத்தாளோ, “என்னோட பர்ஸ்ல காசு இருக்கும் எடுத்துட்டு போ. வேற ஏதாவது வேணும்னாலும் வாங்கிட்டு வா. இதான் லாஸ்ட் இனி அடுத்த வருசம்தான் துணிக்கடைக்கு போகனும் சொல்லிட்டேன்” என்றதோடு முடித்துக்கொள்ள, இப்போதைக்கு தப்பித்த உணர்வில் நல்லப்பிள்ளையாக தமக்கை சொன்னதை கேட்டு தலையாட்டினான்.

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களுக்கே தங்களுக்கான ஆடைகளை பிரத்யேகமாய் சொல்லிவைத்து வாங்கும் பிரபல துணிக்கடை அது. உள்ளே நுழைந்ததும் வழக்கமாக உதவி செய்பவர் வந்து இவனுக்கான உடையை கொடுக்க, அதை அணிந்து கண்ணாடியில் பார்த்தவனுக்கோ நொடியில் உயரமாய் வளர்ந்து கம்பீரமாய் காட்சியளிப்பது போல் இருந்தது.

அதைப் பாக் செய்யக் கூறி, ‘வேறு என்ன வாங்குவது? அக்கா கொடுத்த காசு இங்க பத்தாதே… அவளுக்கும் கிராண்ட்டா வாங்கணுமோ’ என்று பெண்கள் பகுதியில் சுத்திக்கொண்டிருக்க அது தெரிந்த அடுத்த நொடி ஆரவ் அவனிற்கு அழைத்தான்.

“என்ன வேந்தா… வாங்கிட்டு அங்கேயே சுத்துரியாம்? அதுவும் லேடீஸ் செக்ஷன் பக்கம் என்ன விசயம்” அதட்டாலான வார்த்தைகள் கொண்டு குறும்புடன் கேட்டான்.

“ஆஹா அதுக்குள்ள யார் இந்த எட்டப்பன் வேலை பார்த்ததுண்ணா… பூமாவையும் கூட்டிட்டு வர சொன்னீங்களே! எல்லாம் டிசர்ட் ஃபேண்ட்டா அள்ளி வச்சிருக்கா. அதான் அவளுக்கும் பார்ட்டிக்கு போடுற மாதிரி தேடுறேன்” வாய் அதன் வேலையைச் செய்ய கண்கள் உடைகளை அலசி ஆராய்ந்தது.

“பார்ட்டி வியர் எல்லாம் உங்க அக்கா போடுவாளா? போ போய் புடவைய எடுடா” என்றவனிடம்

“புடவை மட்டும் கட்டிருவாளா காலேஜ் போகும்போது கட்டுனது… சமையலே டச் விட்டுப்போச்சுன்னு சொல்லி என்ன என்னமோ சமைக்குறா நீங்க வேற” தன்னை மீறி தமக்கையை குறித்து வெகுநாள் கழித்து புலம்ப

“ஹாஹாஹா” என்ற ஆரவ்வின் சிரிப்பு சத்தம் ஃபோனையும் தாண்டிக் கேட்டது.

“சிரிக்காதீங்க ண்ணா… அவளை கூட்டிட்டே போய் வாங்கிக்குறேன். இங்க வேணாம்…” குறைந்தபட்ச விலைக்கே கையில் இருக்கும் காசைக் காட்டிலும் இருமடங்கு தேவைப்படுகிறதே.

“கைல காசு இருக்கா? எவ்ளோ இருக்கு?” அவனை அறிந்தவனாய் அதை விட பூங்குழலியை அறிந்தவனாய் கேட்க, பூவேந்தன் பதில் கூறியதும்

“ஹ்ம்ம் நான் சொல்றத கேளு… கைல இருக்குற காசைக் குடுத்து சாரி வாங்கிட்டு போ… மீதிய நான் பாத்துக்குறேன்” என்றுவிட

“ரெண்டு பேரும் சேர்ந்து என் தலைய உருட்டாம இருந்தா சரி” அங்கலாய்த்த பின்பே ஃபோனை வைத்தான் பூவேந்தன்.

தங்கத்தை உருக்கிய நிறத்தில் புடவையும் அதைத் தூக்கி காட்டும் கருப்பு நிறத்தில் ப்ளவுஸும் இருக்க, அதன் மேல் அலங்கரித்திருந்தது தங்க நிற பூக்கள். ஆக மொத்தம் பூங்குழலியின் கண்ணைப் பறித்துக்கொண்டிருந்தது தம்பி வாங்கி வந்த சேலை. சாரி வாங்கி வந்ததாக நினைத்துக்கொண்டிருந்த சேலை.

கையில் இருந்த வழுவழுப்பான சாட்டின் புடவையைவிட்டு கையெடுக்க முடியாமல் அதன் மென்மையை உள்ளங்கையில் அனுபவித்துக்கொண்டே, “டேய் குட்டா தொட்டு தடவ சூப்பரா இருக்குடா. ஆனா இந்த வழு வழுக்குறதை எப்படி கட்டுறது? உனக்கு என்ன வேணுமோ வாங்குன்னா எனக்கு வாங்கிட்டு வந்திருக்கியே” என்றாள் பூங்குழலி.

வேறு கேள்விகள் கேட்காததால் ஹப்பா என்று மூச்சை வெளியிட்ட இளையவனோ, “இது சூப்பரா இருக்கும்க்கா உனக்கு… கோவிலுக்கு டிசர்ட் போட்டுட்டு வருவியா? அதான் இது வாங்கிட்டு வந்தேன் கட்டிக்கோ பூமா” என்று சமாளித்தான்.

“இருந்தாலும் சுடிதார் வாங்கிட்டு வந்திருக்கலாம்… இதை வச்சிட்டு… சரிவிடு அன்னைக்கு மட்டும்தான் அதுவும் கொஞ்ச நேரம்தான் கட்டுவேன் அப்புறம் வீட்டுக்கு வந்துரனும்” பல கண்டிஷனுடன் ஒத்துக்கொண்டாள் பூங்குழலி.

அனைத்திற்கும் “சரிக்கா சரிக்கா” என்று பலமாக மண்டையை ஆட்டி ஒத்துக்கொண்டான் இளையவன்.

பிறந்தநாள் காலையும் அழகாய் விடிந்தது.

இரவே முதல் வாழ்த்து தமக்கையிடம் இருந்து வந்துவிட்டது. அடுத்து ஆரவ். அதன் பின் வரிசையாய் நண்பர்களின் வாழ்த்து என குவிய நன்றி கூறி தப்பித்து தூங்கியதே ஒரு மணிக்குதான்.

இருந்த சந்தோஷத்தில் தூக்கம் வராததால் மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் இருவரும் எழுந்து குளித்து முடித்து, பூஜை அறையில் தாய் தந்தையையும் இறைவனையும் ஒருசேர வணங்கி, மானசீகமாக அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றபின்பே காலை உணவை உண்டனர்.

ஒருவழியாய் சிரமமாக என்றாலும் அழகாய் மடிப்பெடுத்து புடவை கட்டிவிட்டாள் பெண். அடுத்து வீட்டிலிருக்கும் அணிமணிகளை ஏற்கனவே புரட்டி புடவைக்கு பொருத்தமாய் இருப்பவற்றை உடன்பிறப்பு இருவரும் தேடியெடுத்து வைத்திருந்தனர். அதைப் பார்க்கும் போதே ஆசை வர, ஒவ்வொன்றாய் அணிய ஆரம்பித்தாள் பூங்குழலி.

கழுத்தோடு ஒட்டிய பட்டையான அட்டிகை வெறுமையாய் இருந்த கழுத்தை ஒட்டி உறவாட, அதன் நடுவே சிறிதாக தொங்கிக்கொண்டிருக்கும் வெண்முத்தோ அங்கும் இங்கும் அவளின் அசைவிற்கேற்ப ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது.

காதில் தொங்கிய குடை ஜிமிக்கிகளோ கன்னத்தை உரச முயன்று வெற்றிகரமாக பின்வாங்கியது. இரு கைகளிலும் விருப்பமாய் மாட்டிக்கொண்ட மெலிதான ஆறு தங்க நிற ஃபான்சி வளையலோ குலுங்கி சன்னமாய் ஒலி எழுப்ப, அக்கைகளினால் நெற்றியில் நீளவாக்கில் மின்னும் ஒற்றை ஸ்டிக்கர் பொட்டை வைத்தாள்.

கடைசி கட்டமாக முடியை விரித்தும் பின்னியும் பார்த்தவள் சரிவரவில்லை என்றதும் தன் ஆஸ்தான கொண்டையை போட ஆரம்பித்தாள். ஆனால் இம்முறை இறுக்கமாக இல்லாமல் புடவைக்கு என்று பின்னங்கழுத்தை ஒட்டி கொண்டையிட அத்தனை நாளாய் பூவாய் மட்டும் இருந்தவள் இன்று தங்கத்தால் இழைத்த தங்கப்பூவாக ஜொலிஜொலித்தாள்.

தன் அழகில் தானே திருப்தி கொண்டு புன்னகையோடு தயாராகி வந்தவளைக் கண்டு, “வாவ் வாவ்… அழகா இருக்குற பூமா. பொறந்தநாள் யாருக்குன்னே சந்தேகமா இருக்கு போ… ஆனா இந்த கொண்டை” என்று மீண்டும் கலைக்க போனவனை, “லூசா தானே போட்ருக்கேன் விடுடா. இதுதான் இப்போதைய ஃபேஷன்… மவனே அவுத்துவிட்ட நான் வெளிய வரமாட்டேன்” என்றாள் அவசரமாய் அதிகாரமாய்.

“ஆ ஊன்னா இது ஒண்ணை சொல்லிரு ஃபேஷன்னாம் ஃபேஷன்னாம்” என்று பொறுமியவனை

“பெர்த்டே பேபி கோட் சூட்ன்னு கலக்குற போ… செம ஹண்ட்சம்மா ஆகிட்ட” என்று கொஞ்சி பேச்சை திசைத் திருப்பினாள் பூங்குழலி.

கோவிலில் அவன் பெயரில் அர்ச்சனை செய்து சாமியை தரிசித்தவர்கள் சிறிது நேரம் அமர்ந்த பின், “குட்டா வீட்டுக்கு போலாமா?” என்றவளிடம்

“அக்கா உனக்கு ஒரு சப்ரைஸ். இப்போ நாம இன்னொரு இடத்துக்கு போறோம்” உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே ஆர்வமாய் கூற

“எனக்கு சப்ரைஸா? எனக்கு எதுக்குடா சப்ரைஸ்?” புரியாமல் வினவினாள் பூங்குழலி.

“அது அப்படிதான் நாம போவோம் வாக்கா” அதற்கு மேல் அவளை பேசவிடாமல் சமாளித்து, ஆரவ் சொன்ன இடத்திற்கு காரை புக் செய்தான் பூவேந்தன்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…