அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 11
அபிநயாவின் வீட்டில் ராமசாமி கோபமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
ரகுநந்தன், அபிநயா இருவரும் மதிய வேளை விருந்து சாப்பாட்டை முடித்திருந்தினர்.
தோட்டத்தில், மாமரத்து நிழலில், சாய்வு நாற்காலில் அமர்ந்திருந்தான் ரகுநந்தன்.
புதுமாப்பிள்ளை என்று அவனை மிகவும் தொந்திரவு செய்யாமலும், அதே நேரத்தில் அவனை தனித்து விடாமலும் ஒரு சில வார்த்தைகள் பேசி கொண்டிருந்தனர் உற்றார் உறவினர்.
மரியாதையோடு அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான் ரகுநந்தன். ஆனால், அவன் சிந்தனைகளோ அபிநயவை சுற்றி வந்தது.
‘திருமணத்திற்கு முன் பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை. பேச வாய்ப்பும் கிடைக்கவில்லை. நேரமும் இல்லை. உடனே பேசி முடிந்த திருமணம். ‘
இத்தனை காரணங்கள் கற்பித்தாலும், பேச மனம் ஒப்பவில்லை என்பது தான் உண்மை என்று அவன் அறிவு சம்மட்டியாக அடித்தாலும், ‘இல்லை…‘ என்று அவன் மனம் ஜன்னல் வழியாக அபிநயாவை பார்த்து துள்ளாட்டம் போட்டது.
‘பிடிவாதக்காரி… அழுத்தக்காரி…‘ அவன் எண்ணிக் கொண்டிருக்க, மனமோ, ‘நல்லவ…‘ என்று அவள் பக்கம் சாய புன்னகைத்து கொண்டான்.
அவன் புன்னகையை ஜன்னல் வழியாக பார்த்த அபிநயா புருவங்கள் உயர்த்த அவன் புன்னகை இன்னும் விரிய மறுப்பாக தலை அசைத்தான்.
‘ஒரு பெண்ணை ஜன்னல் வழியாக பார்த்து இப்படி புன்னகைப்பேன்னு நினைக்கலையே.‘ என்று அவன் எண்ண, ‘அதுவும் தாலி கட்டி ஒரே நாளில்…‘ என்ற எண்ணமும் சேர்ந்து அவனை கேலி செய்ய, அவன் புன்னகை புரிந்து தன்னை மீட்டுக்கொண்டான்.
அவன் புன்னகையை பார்த்துக் கொண்டிருந்த அபிநயா, ‘தண்ணி எல்லாம் அடிச்சதை பார்த்து பயந்துட்டேன். ஆனால், இவுக அவ்வளவு மோசம் இல்லை. நல்லவக மாதிரி தான் தெரியுது.‘ அபிநயா அவனை பார்த்தபடி சிந்திக்க ஆரம்பித்தாள்.
‘அவுக குடும்பம் மேலையும் பாசமா இருக்காக. இங்கனையும் ஒத்து போறாக. நம்ம கேலி கிண்டலுக்கும் கோபம் வரலை.‘ என்று அவனை பற்றி உயர்வாக எண்ண, அவனை பார்த்தபடி அவள் முகத்தில் புன்னகை உதித்தது.
இப்பொழுது அவள் புன்னகையை கண்ட அவன், புருவம் உயர்த்த, அவன் கண்டுகொண்டதில் அவள் முகம் செவ்வானமாக சிவக்க தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் முக திருப்பம் கூட அவனுக்கு இனித்தது. அந்த உணர்வை புரிந்து கொள்ள தான் அவனுக்கு தெரியவில்லை.
இங்கு பார்வை பரிமாற்றம் அரங்கேறிக் கொண்டிருக்க, வடிவம்மாள் எந்தவித ஏற்பாடும் செய்யாமல் பசுபதியை கனல் கக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
பசுபதி கெஞ்சி பார்த்துவிட்டான். மிஞ்சியும் பார்த்துவிட்டான். எதுவும் எடுபடவில்லை.
‘அவ வரக்கூடாது. அதை சொல்லு.‘ உறுதியாக அமர்ந்திருந்தார் வடிவம்மாள்.
“ஆத்தா.” அவன் விளிக்க, “ஏலே! நானே கடுங்கோபத்தில் இருக்கேன். உன்னை ஒத்த மரமா பாக்க மனசு தவிக்குது. நீ ஆலமரம் போல் ஆட்சி செய்யணுமுன்னு என் மனசு தவியா தவிக்குதுலே!” வடிவம்மாள் எகிறினார்.
அப்பொழுது தான் பசுபதிக்கு அப்படியொரு எண்ணம் தோன்றியது.
“ஆத்தா! நீ சொல்லுத பொண்ணை நான் கட்டிக்கிறேன். சீரும் சிறப்புமா வாழுறேன். ஆனால், நீ இன்னைக்கு அம்முக்குட்டியை நல்லா இருக்கனுமுன்னு வாழ்த்து.” என்று கேட்டு கொண்டே சரேலென்று அவர் கால்களில் விழுந்தான் பசுபதி.
பதறிவிட்டார் வடிவம்மாள். “ஏலே! எழுந்திரு. இப்ப என்னத்துக்கு என் காலிலே விழுத? நான் நீ சொல்றதை செய்யறேன்.” மகன் காலில் விழுந்ததில் மெய் சிலிர்த்து கூறினார் வடிவம்மாள்.
தன் தாயின் சொல்லில் பசுபதி எழ, “ஏலே! நீ வேற பொண்ணை கல்யாணம் கட்டிபியா? நான் பொண்ணு பார்க்கலாமா?” அவர் தன் கண்களை சுருக்கி சந்தேகமாக கேட்டார்.
“கொஞ்சம் அவகாசம் குடு ஆத்தா. நிச்சயம் கல்யாணம் கட்டிக்கிறேன்.” உறுதியாக கூறினான் பசுபதி.
வடிவம்மாள் சிந்திக்க, “அம்முக்குட்டி வருவா. நாக்குக்கு சுவையா எதாவது ஏற்பாடு பண்ண சொல்லு.” தன் தாயை திசை திருப்பினான் பசுபதி.
“நீ, நிச்சயமா…” என்று வடிவம்மாள் மீண்டும் ஆரம்பிக்க, “பசுபதி பேச்சு மாற மாட்டான்.” என்று அவன் மீசையை முறுக்கி கொண்டு உறுதியாக கூற, வடிவம்மாள் வேலைக்காரர்களை வேலை ஏவ உள்ளே சென்றார் வடிவம்மாள்.
பல எதிர்ப்பை தாண்டியும், “பசுபதி வீட்டிற்கு செல்ல வேண்டும்.” என்று உறுதியாக கூறிவிட்டாள் அபிநயா.
ரகுநந்தன் அமைதியாக காரை செலுத்தி கொண்டிருந்தான். ‘மாமா, இவ்வளவு எதிர்த்தும் இவ சொல்ற இடத்துக்கு போய் தான் ஆகணுமா? என்ன அழுத்தம்? என்ன பிடிவாதம்?’ என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது.
“வாத்தியாரம்மா, அவசியம் போய் தான் ஆகணுமா? மாமா, போகவேண்டாமுன்னு சொல்லி தான் அனுப்பிச்சாங்க.” என்று கேட்டான் ரகுநந்தன்.
“போகணும். நான் வரேன்னு சொல்லிட்டேன் அத்தான் எதிர்பார்ப்பாக.” உறுதியாக வந்தது அவள் குரல்.
அபிநயா வழிகூற, ரகுநந்தன் பசுபதி வீட்டிற்கு சென்று அவர்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தினான்.
“வாங்க… வாங்க மாப்பிள்ளை.” அன்பாக அழைத்தான் பசுபதி.
அபிநயா சிரித்த முகமாக இறங்கினாள்.
“அம்முக்குட்டி வா…” என்று பசுபதி அழைக்க, ‘அம்முக்குட்டி!‘ அந்த அழைப்பில், ஒரு நொடி நின்று நடந்தான் ரகுநந்தன்.
“அத்தான், சொன்னபடி வந்துட்டேன்.” என்று அவள் துள்ளலோடு கூறினாள். பசுபதியும் வாஞ்சையோடு தலை அசைத்தான்.
“உள்ள வாங்க, உட்காருங்க.” என்று கூறியபடி ரகுநந்தனுக்கு நாற்காலியை இழுத்து போட்டான் பசுபதி.
முறுக்கிய மீசையோடு, கம்பீரமாக நின்ற பசுபதியை கண்களால் அளவிட்டான் ரகுநந்தன்.
‘தனக்கு மரியாதை கொடுத்தாலும், பசுபதியின் கம்பீரம் சற்றும் குறையவில்லை.‘ என்று மனதில் குறித்துக் கொண்டான் ரகுநந்தன்.
பசுபதியின் வீட்டில் கிராமிய மணம் கமழ்ந்தாலும், ஒவ்வொரு இமியும் அவன் செல்வ செழிப்பை ரகுநந்தனுக்கு பறைசாற்றியது.
ரகுநந்தனோடு, அபிநயாவும் வீட்டிற்குள் செல்ல படியேற அவள் சேலை தடுக்கி தடுமாறினாள். பசுபதி பதட்டப்படுவதற்குள், அவளை இடையோடு சேர்த்து அணைத்து கொண்டான் ரகுநந்தன்.
பிடிமானத்திற்கு தன் கணவன் மீது அவள் சாய்த்திருந்தாலும், அவன் தீண்டலில் அவளுள் வெட்கம் சூழ்ந்து கொண்டது.
அபிநயா சற்று தடுமாறினாள். அவள் தடுமாற்றத்தை அறியாதவனாக, புரியாதவனாக, “பார்த்து…” ரகுநந்தனின் குரல் அவள் காதில் கிசுகிசுத்தது.
அந்த நெருக்கத்தில் தடுமாறியவளாக, தலையை நிமிர்த்தாமல் அபிநயா தலை அசைத்து கொண்டாள்.
“தலையில் வேற அடி பட்டிருக்கு.” ரகுநந்தனின் குரல் அக்கறையை வெளிப்படுத்தியது.
அபிநயா, ‘ஒன்றுமில்லை…‘ என்பது போல், தலையை வலப்பக்கமும், இடப்பக்கமும் அசைத்து கொண்டாள்.
‘அவளுக்கு அடிபடவில்லை.‘ என்று உறுதி செய்துகொண்ட பிறகே, ரகுநந்தன் அவன் பிடிமானத்தை தளர்த்தி கொண்டான். அனைத்தையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தான் பசுபதி .
அவன் மனம் புதுமாப்பிள்ளையை அளவிட்டது. ‘மாப்பிள்ளை தன்னிலை இறங்காமல் அக்கறையா இருக்கார். காதலை முந்திக் கொண்டு வெளிப்படும் கரிசனம், அவர் நல்ல குணத்தை காட்டுது. அம்முக்குட்டி வாழ்க்கை நல்லாருக்கும்.‘ பசுபதி சந்தோஷமாக உணர்ந்தான்.
அதற்குள் வடிவம்மாளின் காலடி ஓசை கேட்க, அனைவரும் அவர் பக்கம் திரும்பினர்.
“வாங்க!” ஒற்றை வார்த்தையாக ரகுநந்தனை அழைத்தார் வடிவம்மாள்.
அவர் வாய்மொழி நிர்பந்தந்தத்தை காட்ட, அவர் உடல் மொழி, குரல் அனைத்தும் அவர்கள் வரவின் விருப்பமின்மையை காட்டியது. அந்த வாய்மொழி வரவேற்பு கூட, அபிநயாவுக்கு இல்லை.
அதை எல்லாம் அபிநயா கண்டு கொண்டது போல் இல்லை. “அத்தை, சௌக்கியமா?” என்று சிரித்த முகமாக கேட்டாள்.
“ம்… ம்… எல்லாம் சுவந்தான். உங்க அப்பன் எப்படி இருக்கான்?” என்று சுவரை பார்த்தபடி கேட்டார்.
‘கிராமத்து மனிதர்களை என்னவென்று சொல்ல. கோபம் இருந்தாலும், வெடுக்கென்று நலன் விசாரிக்கும் பரந்த மனம்.‘ என்று எண்ணி மௌனித்து கொண்டான் ரகுநந்தன்.
“உங்க தம்பி மேல அக்கறை இருந்தா நீங்களே அவுக கிட்ட கேட்க வேண்டியது தானே?” துடுக்காக பதில் கூறினாள் அபிநயா.
‘என்ன ஒரு திண்ணக்கம்மான பதில்.‘ என்று ரகுநந்தன் அவளை பார்க்க, “ஹா… ஹா… ஆத்தா, உனக்கு அம்முக்குட்டி தான் சரியான ஆளு.” என்று சிரித்தான் பசுபதி.
“புது மாப்பிள்ளை முன்னாடி என்ன கேலி பேச்சு. பலகாரம் வை.” என்று உள்ளே சென்று கொண்டே கூறினார் வடிவம்மாள்.
அபிநயா, அவரை தொடர்ந்து உள்ளே செல்ல, அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரகுநந்தன்.
“ஆத்தா அப்படி தான். அம்முக்குட்டி பேச்சு தான் இப்படி வெடுக்குன்னு இருக்கும். ஆனால், மனசு குழந்தை மாதிரி.” என்று ஆழமான குரலில் கூறினான் பசுபதி.
‘குழ்நதையின் பிடிவாதமும் உண்டு போல…‘ இலவசமாக ஓடியது ரகுநந்தனின் எண்ணம்.
மற்ற விஷயங்கள் பேசும் பொழுது இருக்கும் அழுத்தம், ‘அம்முக்குட்டி…’ என்ற அழைப்பின் பொது மட்டும் நெகிழ்ந்து மென்மை கொண்டு ஒலிப்பதை ரகுநந்தனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
பசுபதியின் பேச்சு பாசத்தை மட்டுமே வெளிப்படுத்த, ரகுநந்தனுக்கு அவன் கள்ளமில்லா அன்பு புரிந்தாலும், ‘ஏன் இவன் அபிநயாவை திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என்ற கேள்வி அவன் தவிர்க்க நினைத்தாலும் எழுந்தது.
வடிவம்மாள், சமையலறையில் அபிநயாவை வார்த்தைகளால் குத்தி குதறி கொண்டிருந்தார்.
‘இதற்கெல்லாம் அசருவேனா?’ என்பது போல் அழுத்தமாக நின்று கொண்டிருந்தாள் அபிநயா.
பசுபதி, ரகுநந்தனின் பேச்சு விவசாயம், அவர்கள் தொழிலை சுற்றி வந்தது.
ரகுநந்தனுக்கு பலகாரங்கள் பரிமாற பட, பசுபதியின் கண்கள் அபிநயாவை அளவிட்டு கொண்டிருந்தது. ‘ஆத்தா, எதுவும் வைதிருப்பாகளோ? அம்முக்குட்டியை வருத்தப்படுத்திருப்பாகளோ?’ என்ற சந்தேகத்தோடு அபிநயாவை நோட்டமிட, பசுபதியின் பார்வையையும், அபிநயாவின் உணர்ச்சி துடைத்த முகத்தையும் மனதில் நிறுத்தி கொண்டான் ரகுநந்தன்.
“அம்முக்குட்டி நீயும் சாப்பிடு.” என்று அவளை கவனித்தான் பசுபதி.
“உன் கல்யாணத்துக்கு நான் எதுவும் செய்யலை. என்ன வேணுமுன்னு கேளு. முறைப்படி நான் செய்யணும். அது உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கணும்.” என்று உணர்ந்து கூறினான் பசுபதி.
“சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க அத்தான். அது தான் எங்களுக்கு வேணும்.” என்று அபிநயா பட்டென்று கூறினாள்.
“ஆமா…தாமதம் பண்ண கூடாது.” என்று ரகுநந்தன் அபிநயாவின் கூற்றை ஆமோதிக்க, “தாமதம் என்ன தாமதம்? நாங்க பசுபதிக்கு தான் அபிநாயவை முடிக்கணுமுன்னு நினைச்சோம். எல்லாருக்கும் விருப்பம் தான். ஆனால்…” என்று முடிக்காமல் நிறுத்தினார்.
வடிவம்மாள் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் ஆற்றாமை வார்த்தைகளாக வெளிவந்துவிட்டது.
பசுபதி பதறிவிட்டான். ‘நான் எவ்வளவு கெஞ்சியும், வாக்கு கொடுத்தும் கெடுதியே கேடு.‘ என்பது போல் இருந்ததது அவன் பார்வை.
அபிநயா, ‘யாருக்கோ வந்த விதியோ?’ என்பது போல் அமர்ந்திருந்தாள்.
ஆனால், அவள் சிந்தனைகளோ, ‘எப்படியும், தெரிந்து தான் ஆகவேண்டும். நான் இல்லாத பொழுது, யார்யாரோ கட்டுக்கதை கட்டி இவுகளுக்கு போவதை விட, நான் சொல்லி தெரிந்து கொள்ளட்டும். நான் என் வாழ்க்கையை மன நிம்மதியோடு எந்தவித நெருடல் இல்லாமல் தொடங்க வேண்டும். என்ன ஏதுன்னு கேட்பாக? நடந்தது எனக்கு மட்டும் தானே தெரியும். நான் சொல்லிக்கிறேன்.‘ என்று எண்ணியபடி மௌனித்தாள் அபிநயா.
அங்கு பலத்த நிசப்தம் நிலவியது.
பொழுதுகள் விடியும்…